ஓடு மீன் ஓட….

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 6,769 
 

அடர்ந்திறங்கும் பனியில் யாவும் உறைந்து கிடக்கின்றன உருவழிந்து. விரைத்து மொன்னையாய் நிற்கும் கம்பங்களின் உச்சியிலிருந்து கிளம்பும் விளக்கொளி பனியில் நமுத்து பாதியிலேயே விழுகிறது நிழல்போல கறுத்து. ஆங்காரமாய் வீசும் காற்றில் குளிரின் கடுமை கூடி விஷமெனக் கடுக்கிறது.

கதகதக்கும் குளிராடைகளுக்குள் தூந்திரபிரதேசவாசிகளைப் போல் பதுங்கி, நிறைந்து மலிகிறது கூட்டம். சொந்த ஊருன்னு சுத்தி சுத்தி வந்தா ஒரு கவளச் சோறு வந்துடுமா என்று வித்தாரம் பேசி இங்கே வந்தேறியவர்கள் ஊர் பார்க்க ஓடுகிறார்கள். அப்பன், ஆத்தாள், உடன் பிறந்தாரை வசக்கி வயக்காட்டில் பூட்டிவிட்டு, படிப்பை துருப்புச்சீட்டாக்கி பட்டணம் புகுந்தவர்கள். இவர்கள் ஓடியோடி பார்த்துவருவது ஊர்தானென்றால் ஊர் என்பது என்னவென்ற கேள்வி எழுகிறது.

இங்கே வந்து இத்தனைக் காலமான பின்னும் சொந்த ஊர் மண் கொஞ்சூண்டு உள்ளங்காலில் ஒட்டியிருக்கும் போல. இல்லையானால், குளிக்கப்போன இடத்தில் மறந்து வைத்துவிட்டு வந்திருந்த நகை பற்றி பாதிவழியில் ஞாபகம் வந்தவர்களைப்போல இப்பிடி ஓடமாட்டார்களே. தாளிடையில் வைத்த மயிலிழை, குட்டி போட்டிருக்குமாவென்று தினமும் தூக்கத்திலேயே துழாவும் வசுக்குட்டியின் ஞாபகம் வருகிறது. தூங்குடா செல்லம்…அப்பன் தோ… இப்ப வந்துடறேன்…என்று காற்றிலேயே தட்டிக் கொடுக்கிறான் முருகேசன். கசிந்த ஈரம் மீசையில் படிகிறது திவலையாய்.

மின்னாம்பூச்சியாட்டம் சன்ன ஒளிகிளர்த்தி வந்தடையும் பஸ்கள் கூட்டத்தால் திணறி புகை கக்கி நகர்கின்றன. இதுமாதிரியான விசேஷ நாட்களின் முந்தியும் பிந்தியும் கூடுதல் ஏற்பாடுகள் தேவை. ஒவ்வொரு வண்டி கிளம்பும் போதும் ஆரவாரமும் கூச்சலும் வசவும் அலைபோல எழுந்து வலையாகி சுருட்டியது ஜனத்தை.

நைட்ஷிப்ட் முடித்தவர்களும் ஊருக்கு கிளம்பி வந்து குவிகிறார்கள். வேலையின் அலுப்பு ஊர்பற்றிய நினைவுகளில் அமிழ்ந்து விட்டிருந்தது. பஞ்சம் பிழைக்க பரதேசம் போவதாட்டம் குழந்தைகள், கிழடுகிண்டுகள் மூட்டை முடிச்சுகளோடு பின்னும் பெருத்தக் கூட்டத்தால் இருமலும் பொருமலுமாய் நிறைந்திருந்தது பஸ் நிலையம்.

குழந்தைகளின் பாடு பாவமாயிருந்தது. உறவாளிகளின் சகவாசம் முறிக்கும் முயற்சியாக பொம்மைகளை ரகசியமாய் அணைத்தப்படி தூங்கி விழுகின்றன. சனியனே, முழிச்சிக்கோ…பஸ்சுல தூங்கவே…என்று உலுக்கி சிடுசிடுக்கின்றனர் பெற்றவர்கள். கலைந்த கனவில், அநாதையாய் விடப்பட்ட தேவதைகளையும் பதினேழு கால் கொண்ட சாதுப்பூச்சியையும் நினைத்து கலங்குகின்றன சிலதுகள். நடுநிசியின் வினோதரூபத்தில் பரவசமுற்று கேள்வியெழுப்பும் குழந்தைகளுக்கு பொறுமையற்று பதில் கூறினர். கேள்விகள் சிக்கலாகி வலுக்கும்போதுகளில், சும்மா தொணதொணக்காதே என்று சலித்துக்கொண்டனர். கேள்விகளும் கனவுகளும் தம் பிள்ளைகளை நடைமுறை உலகிற்கு பொறுத்தமில்லாதவர்களாக ஆக்கிவிடுமோ என்ற பயம் பெருகி குரல் நடுங்கியது. சிணுங்கும் குழந்தைகளை மெல்லிய குரலில் மிரட்டவும், நாலு சாத்து சாத்தினாத்தான் சரிப்படுவே என்று கையோங்கவும் அவர்கள் தயங்கவேயில்லை.

குளிர்தாளாது வெடவெடக்கும் வயோதிகர்களை வாய்விட்டு கடியவும் அவர்கள் அதிகாரம் கொண்டோராயிருந்தனர். சற்றும் தேவைப்படாத சுமையோடு ஓடித் தொலைக்க வேண்டியுள்ளதே என்று பீறிய வெறுப்பிலும் தகிப்பிலும், வூட்லயே மொடங்கிக் கெடக்காம வயசான காலத்துல நமக்கு பாரமா…என்று காதுபடவே முனகினர்.

இப்படி பண்டிகை, விசேஷம்னு ஊர் போறப்பவாவது சொந்த பந்தங்களை பாத்துட்டு பொறந்து வளந்த மண்ணுலயே பொட்டுனு போயிடமாட்டமா… என்று பெரியவர்கள் ஒவ்வொரு முறையும் முயன்று தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள். சம்பாதிக்கும் பிள்ளைகளை நம்பி வேர்களை அறுத்துக் கொண்டு முண்டம்போல வந்துவிட்டமைக்காக அவர்களது உட்கண்கள் ஓயாது அழுதவண்ணமுள்ளன. கிராமத்திலிருந்து வந்தவர்களின் பாடுதான் திண்டாட்டமாதிவிட்டது.

பரந்தவெளியில் புழங்கிய வாழ்க்கையை, ரத்தம் சுண்டிய முதுங்காலத்தில் நாலு சுவற்றுக்குள் ஒடுக்கும் நகரத்தை நரகமென்றுணர்ந்து மருண்டனர். டவுன்னா அப்படித்தான் என்று எத்தனை சமாதானம் சொல்லிக்கொண்டாலும், சாப்பாட்டிலிருந்து ஜலவாதி வரை சகலமும் வீட்டுக்குள்ளேயே என்பது ஒவ்வாமல், சாப்பிடும் போதெல்லாம் குமட்டுகிறது. மூப்பினால் அஜீரணம் என்கின்றனர் வாலிபங்களும் வைத்தியர்களும்.

உயிரினொரு பாகம் ஊரிலேயே தங்கிவிட்டதான தவிப்பு பிடித்தாட்டியது பெரியவர்களை. ஊரம்பலத்திலும் கோயிலடியிலும் கூடி கலகலக்கும் கொண்டாட்டமெல்லாம் கனவுபோல் மெல்லியப் படலமாகி, கண்மேல் படர்ந்து கரைகிறது நீராக.

ஊரென்றால் பொழுதுபோக எத்தனையோ மார்க்கமுண்டு. வயலடிக்கு மடைதிருப்புவது, விழுந்த நெற்றுகளை பொறுக்குவது, கிணத்தோர வாய்க்காலில் திமிர்த்து வளரும் காஞ்சிரம் பூண்டுகளை பிடுங்குவது, கட்டாந்தரையை சுத்தம் பண்ணுவது என்று வேலைகள் பலதுமிருக்கு. எதுவுமில்லாத போது கோயிலடிக்குப் போனால் அங்கே நாள் பத்தாது. பயலுகள் ஆடுபுலி ஆட்டம், தாயம், அஞ்சாங்கரம், கோலி என்று ஆடாத ஆட்டமில்லை. வெயிலமரும் நேரங்களில் சின்னது பெரிசென்று கணக்கில்லாமல் கரம்பக்காடுகளை திமிலோகமாக்கிவிடுவார்கள். சில்லோடு வைத்து நொண்டியாடுவது, பாண்டியாட்டம், பல்லாங்குழி என்று பொண்டுகளுக்கும் ஆட்டத்துக்கு பஞ்சமில்லை. இங்கே நகரத்தில் என்ன இருக்கிறது… வெறிக்க வெறிக்க கட்டிடங்களைப் பார்த்து சோர்ந்துவிடும் கண்கள் தூக்கத்தில் விழு கின்றன.

குருவிகள் பழத்தை தின்றுவிட்டு விதைகளை வீசிவிட்டுப் போகின்றன. சடக்கென முளைவிட்டு கணப்போதில் செடி திமுதிமுவென்று வளர்ந்து தோள்மீறுகிறது. தழைத்த செடி பூமி முழுக்க கிளைபரப்பி பெரீய்ய மரமாகிப் படர்கிறது. ஊர்க்குழந்தைகள் அத்தனையும் ஆளுக்கொரு கிளையேறி தூரியாடுகிறார்கள். குரங்காட்டம், ஒளியாமட்டம், தொடுவாட்டம் என்று விளையாட்டாய் கழிகிறது வாழ்க்கை. சூரிய வெளிச்சம் பரவாதபடிக்கு பச்சைக்குடையாய் நிழல் பாவிய மரத்தடியில் கண்ணயர்ந்து கிடக்கிறார்கள் பெரியவர்கள். கெட்டவாடை போல் எங்கிருந்தோ வரும் சதியாளர்கள் அடிமரத்தில் குறிவைத்து கோடாலி வீசுகிறார்கள். பதறியெழும் பெரியவர்கள் மரம் மேலே விழுமென முதலில் ஓட நினைத்தாலும், மரமில்லாத ஊர் எப்படியிருக்குமென்ற பயத்தில் கோடாலியால் இவர்களையும் மரத்தையும் ஒருசேர வெட்டிச் சாய்க்கிறார்கள்.

இப்படியான கனாக்களிலிருந்து அரண்டெழுந்த பின்பு தூக்கம் வருவதில்லை. ஊரின் பசுமையில் கிளர்ந்தலறும் மனசு இங்கே வீட்டுக்குள் வளரும் தொட்டிச்செடிகளை தழுவி அடங்குகிறது. பெற்றத்தாயை கொன்றுவிட்ட குற்றவுணர்வில் யாரோ ஒரு சவலைக்கு கஞ்சியூத்துவதை தர்மம் என்று நினைத்து திருப்திகொள்ளும் நகரமிது. காடுகளை அழித்து வீடு கட்டியவர்கள், பின்பு தவறுக்கு பரிகாரம்போல வீட்டுக்குள் ஏதேனும் ஒரு சாண் செடி வளர்த்து சமாதானம் கொள்கின்றனர். செடியும் கொடியும் வேர் பரப்பவியலாத இந்த கான்கிரீட் தளங்களில் எப்படி பச்சை வரும்… மண்ணிருந்தால் தானே உயிர் வளரும்…

இங்கே யாரும் யாரோடும் கூடுவதில்லை. யாரும் யாரையும் நெருங்கிவிடாதபடி மாயக்கூண்டுகளை மாட்டிக் கொண்டுள்ளனர். எதிர்வீட்டான் முகத்தை சரியாக அடையாளம் காண தெரிந்து வைத்திருப்பவன் உலக விசயமறிந்தவனுக்கு ஒப்பானவன். எப்போதும் சிறைபோல் மூடிக்கிடக்கும் கதவுகளுக்குப் பின்னால், இக்கணத்தில் உயிரோடிருப்பதன்றி இவர்களுக்குள் ஒப்புமையான அம்சம் யாதென்றுமில்லை. வீட்டினுள்ளும், குடும்பமாய் வாழாமல் ஒரு கூரையின் கீழ் குடியிருப்பவர்களாக மாறிவருகின்றனர் என்ற உண்மையின் அச்சத்தை யாரோடும் பகிரமுடியாமல் தொண்டை வலிக்க வலிக்க விழுங்கிக் கொள்கிறார்கள். தப்பித்தவறி இங்கே உயிர்போனால் தூக்கிப்போக நாலுபேருக்கு எங்கே போவான் பிள்ளை என்கிற பயத்திலேயே சாவு தள்ளிப் போகிறது பெரியவர்களுக்கு.

திறந்தவெளியின் அலாதியை ரசிக்கவோ, மொட்டை மாடியேறி நட்சத்திரம் பறிக்கவோ பேரக்குழந்தைகள் கூப்பிடுவதேயில்லை. மழைப்பொழுதுகளில் கூட அவர்கள் வெளியே வருவதில்லை. கப்பலோடாத தெருவெள்ளம் வீணே சாக்கடையில் வீழ்ந்து அழிகிறது.

பள்ளிக்கூடம், வீடு, விடுமுறை நாட்களில் கம்ப்யூட்டர், கராத்தே பயிற்சி வகுப்புகள், டியூசன் என மாற்றி மாற்றி ஏதேனுமொரு கதவின் பின்னே அடைபட்டுக் கிடக்குமாறு தமது பேரக் குழந்தைகள் சபிக்கப்பட்டவர்களாயிருப்பது கண்டு பெருகும் துயரத்தை ஆற்றுப்படுத்தும் வழியறியாது அரற்றினர். எஞ்சியப் பொழுதுகளில், கொடிய சர்ப்பத்தின் விஷம்சொட்டும் நா போல நீண்டு உள்ளிறங்கும் கறுத்த ஒயரில் வழியும் வண்ணமயமான மகுடியோசைக்கு மயங்கிக் கிடக்கிறார்கள். பால்யத்திலிருந்து கோர்த்து வைத்த அனந்தக்கோடி கதைகளை பேரர்களுக்கு சொல்ல முடியாமல் தாம்பலத்தோடு கடைவாயில் அடக்கியபடி, தாத்தா பாட்டிகளும் கண்ணவிந்து கிடக்கிறார்கள் அந்த டி.வி பெட்டி முன்பு.

இன்னும் சில வயசாளிகளுக்கு வேறுமாதிரியான உளைச்சலிருந்தது. நகரத்தின் புறத்தே ஒடுங்கிய நண்டு வலைகளில் வாடகைக்கிருந்த நிலைமாறி இன்று சொந்தவீடும், வீட்டின் எவ்விடத்தும் நிரம்பிக் கிடக்கும் நவீனச் சாதனங்களும் பொருட்களும் தம்பிள்ளைக்கு எப்படி சொந்தமாயின என்ற சந்தேகம் பிராண்டுகிறது சதாவும். வருமானம் மீறிய வசதிக்கும் ஆடம்பரத்திற்கும் பின்னே சூதும் களவும் விபச்சாரமும் உண்டாவென விசாரித்தறியும் துணிச்சல் வயதோடு சேர்ந்து உலர்ந்துவிட்டிருந்தது. நட்சத்திர விடுதிகளின் மங்கிய வெளிச்சத்தில், பிரகாசமான தமது மேனியை யாருக்கோ திறந்து காட்டிவிட்டு, மனசை மூடிக்கொண்டு இருளைப்போல் வந்துவிழுகிற இளம் பெண்களின் சோகம் எங்கும் கவ்விக் கிடக்கிறது. ஆண்பிள்ளைகளில் சிலர் ‘உழைப்பால் உயர்ந்த உத்தமர்’ என்ற அடைமொழி சூழ, நாகரீக கிளப்புகளில் உரையாற்றி, மனைவியை எதிர்கொள்ளும் யோக்யதையிழந்து நடுநிசியில் வீடடைகிறார்கள் வேசியைப் போல. மறுபடியும் குமட்டுகிறது பெரியவர்களுக்கு. இங்கிதம் தெரியாமல் இப்படியா வாந்தியெடுத்து அசிங்கம் பண்ணுவது என்று திட்டுவார்களே என்ற பயத்தில் அதையும் விழுங்கிக் கொள்கிறார்கள்.

பஸ்சில் இடம் பிடிப்பதானது, தமது ஆண்மைக்கு விடப்பட்ட மாபெரும் சவாலென அங்குமிங்கும் புஜம்தட்டி அலைந்தனர் ஆண்கள். நானில்லாது உன்னால் ஊர் போய்ச்சேர முடியாதென மனைவிக்கு இப்போது உணர்த்துவதன் மூலம் வேறுபல வகைகளிலும் தனது அவசியத்தை அவள்மீது நிலைநிறுத்த முடியுமென ஒவ்வொருவரும் அந்தரங்கமாய் நம்பினர். இதன் பொருட்டு அவர்கள் நானாவித சாகசங்களுக்கும் பயிற்சி எடுத்தோர் போல் தயாராகிக் கொண்டிருந்தனர். வேட்டுச் சத்தத்திற்காக காதுவிடைக்க காத்திருக்கும் பந்தய மிருகம் போல் உடலெங்கும் கண் கொண்டு துடித்துக் கிடந்தனர் பஸ்சுக்காக.

இடம் பிடிக்கமுடியாத அவமானத்தில் குலைந்தவர்கள், ”இந்த இம்சையில மாட்ட வேணாம்னுதான் ரெண்டு நாள் முன்னாடியே புள்ளைங்களோட கிளம்புடின்னேன். கேட்டாத் தான…” என்று தத்தம் மனைவியைப் பார்த்து பல்லைக் கடித்தனர். பெண்கள் அதற்கொன்றும் செவிமடுப்பதாயில்லை.

அவர்கள் போனவாட்டி ஊருக்குப் போய்வந்ததிலிருந்து இன்றுவரை தவணையிலும் தள்ளுபடியிலும் வாங்கிய துணிமணிகள், நகைகள், பண்ட பாத்திரங்களை சுமந்து கொண்டிருக்கிறார்கள் மனசிலும் உடம்பிலும். ஊரில் கொண்டு போய் காட்டி, ‘ஆஹா ஓஹோ’ என நாலுவார்த்தை சொல்லக் கேட்டால்தான் அந்த பாரம் குறையும். பார்த்த சினிமாக்கள்-சீரியல்கள், புதிதாய் கற்ற கோலம், சமையல் குறிப்பு, ஒயர் பின்னல் டிசைன், புருசன் பண்ணிய சேட்டை, பிள்ளைகள் கற்ற ரைம்ஸ், சிறுவாட்டில் வாங்கிய மூக்குத்தி, கட்டுகிற சீட்டுகள், ஓடிப்போன சீட்டுக் கம்பனியானிடம் ஏமாறாமல் தப்பிய சாமர்த்தியம் என்று ஆதியோடந்தமாய் சொல்லப்படவேண்டிய செய்திகளை அவர்கள் மௌனமாய் தொகுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தளவுக்கு கோர்வையாய் திட்டமிட்டுச் சென்றதாலும், சில விசயங்கள் ஊரிலிருந்து திரும்பிய பிறகு தான் ஞாபகம் வருகிறது. மறவாமல் இருக்க முந்தானையிலும் கொசுவத்திலும் சிலபல முடிச்சு போட்டு வைத்தாலும், எந்த சேதிக்கு எந்த முடிச்சு என்ற குழப்பம் சூழ்ந்ததில் பனியை மீறி வியர்த்தது.

பனியின் மூர்க்கத்தில் நேரம் இறுகி மெதுவாய் கரைகிறது. போலிசுக்கு பயந்தமாதிரி பாவ்லா செய்தபடி லைட்டுகளை அணைத்துவிட்டு, காடாவிளக்கின் புகையூடே டீக்கடையில் வியாபாரம் சுறுசுறுவென்று நடக்கிறது. அவ்வப்போது டீயும் சிகரெட்டும் பாராக்காரருக்கு போய்க்கொண்டிருக்கிறது கப்பம் போல. பால் கால்பங்கு பச்சைத்தண்ணி முக்கால் பங்கென ஓடும் டீ குடிக்க ஈயென மொய்க்கிறது கூட்டம். குளிரை விரட்ட நெருப்பை விழுங்கவும் சிலர் சித்தமாயிருந்தனர். எத்தனை டீ தான் குடிப்பதென்று சலிப்பாயிருந்தது முருகேசனுக்கு. அனைத்து வைத்திருந்த துண்டு சிகரெட்டை பற்றவைத்துக் கொண்டான். நாறியது.

வண்டி கிடைக்காத ஏமாற்றம், தூக்கமின்மை, அலைச்சல் எல்லாம் கூடி எல்லோரின் முகத்திலும் கடுமையேறிக் கொண்டிருந்தது. ஒருவர் முகத்திலும் சினேகபாவமில்லை. இறுக்கமானதொரு மனநிலை எங்கும் பரவியிருந்தது. சிரிப்பது கூட தனது பிடிநிலையை தளர்த்தி இளக்கிவிடுமோவென அஞ்சினர்.

இதே முகங்களைத்தான் ரேசன்கடையிலும், நேர்முகத்தேர்வுகளிலும் தெருக்குழாயடியிலும் திரையரங்கத்தின் நீண்டவரிசையிலும் பார்த்திருக்கிறான் முருகேசன். எங்கும் எங்கும் இந்த முகங்களே. எல்லோருக்குமான இடங்கள் ஏனில்லை என்று நெற்றி சுருக்கி யோசிக்காத முகங்கள். இருக்கும் சொற்பத்தில் தனக்கொரு இடத்தை உறுதியாக்குவது மட்டுமே இலக்காகி விட்டது அவர்களுக்கு. போட்டியின் தருணங்களில், ஏதோவொரு மாயாவினோதத்தால் எல்லோரும் செத்துப்போய் தான்மட்டுமே மிஞ்சியிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்குமென ஆசை கொண்டலைகிறார்கள். அது நிராசையென அறிய நேர்கிற உண்மையின் கணத்தில், சட்டதிட்டங்களை புறந்தள்ளி குறுக்குவழிகளில் ஓடிப்போய் இலக்கடைகின்றனர். குறுக்கு வழியில் செல்லும் சூட்சும நுட்பங்களறியாதவரும் இயலாதவரும், விரும்பாதவரும் கூடி நேர்வழியே நித்தியப்பாதை என்று தத்துவம் பிதற்றி வரிசையில் நின்று வயோதிகமடையாமலே மாண்டு போகின்றனர் மனசளவில்.

கூட்டத்தினூடே கைவரிசை காட்டிய ஜேப்படித்திருடன் ஒருவனைப் பிடித்து வெளுத்து வாங்கினார்கள். யார் யார் மீதிருந்த கோபமோ அவன் மீது இறங்கியது. பெருத்த தொந்தியின் மூலமாக குற்றங்களை குறைத்துவிட முடியுமென்று நம்பிக்கை கொண்ட போலீஸ் ஒருவர், சினிமாவில் கடைசி சீன் வசனமேதும் பேசாமல் அவனை இழுத்துப் போனார்.

இம்மாதிரியான விசேஷ நாட்களில் திருடர்களுக்கு கொண்டாட்டம். கச்சிதமாய் கன்னமிடுவதும் கத்திரிபோடுவதுமாய் கனஜோராய் தொழில் நடக்கும். சாதாரணமாகவே, சனிக்கிழமை ஷிப்டு முடித்து ஊருக்குப் போய் திங்கள் காலை திரும்புவதற்குள் அனேக வீடுகளின் பூட்டு பிளந்து தொங்கும். தீபாவளி, பொங்கல், கோடைவிடுமுறைக் காலங்களில் கேட்கவே வேண்டாம். முக்கால் வாசிப்பேர் ஊருக்கு கிளம்பிவிட, வீடுகள் அனாதையாகிவிடும். இது போதாதா திருடர்களுக்கு? ஊருக்குள் நடமாட்டம் முற்றாக ஒழிந்துவிடும். உறக்கக் காலத்தை துல்லியமாய் அளந்து காரியத்தில் இறங்குகின்றனர்.

வெளியூர் போவோர் வீட்டைப் பூட்டி சாவியை தங்களிடம் ஒப்படைத்துவிட்டு போகுமாறு சினிமா தியேட்டரில் சிலைடு போட்டு உபாயம் சொன்னது காவல்துறை. மக்கள் கமுக்கமாய் சிரித்துக் கொள்வார்கள். திருட்டுகள் மிக நுட்பமாகவும் நூதனமாகவும் நடக்கின்றன.

முன்பெல்லாம் நிறைய ஒண்டிக்கட்டைகள். இப்போது நிலைமை மாறிவிட்டது. புதிதாக தொழிலாளர் யாரும் வருவதில்லை. இருப்பவர்கள் தான் காலி பண்ணி போய்க்கொண்டிருக்கிறார்கள். நகரம், வெளியேறுவதற்கான ஒருவழிப்பாதையை மட்டும் திறந்துவைத்துவிட்டு மற்றெல்லாவற்றையும் மூடிக்கொண்டது. வெளியூர் கிளம்புவதென்றால் வீட்டில் படுக்க வைக்க ஆள் கிடைப்பது பெரும்பாடாகிவிட்டது. எதற்கிந்த வம்பென்று எங்கும் கிளம்பாதவர்களுக்கு அவரவர் வீட்டை பத்திரமாய் பார்த்துக் கொள்வதே ஏழு பூதங்களின் வேலையாக கனக்கிறது.

தொழிற்பேட்டையாக்கும் பொருட்டு இங்கிருந்த பூர்வமக்களின் நிலம் சாரமற்ற விலைக்கு பிடுங்கியெடுக்கப்பட்டது. சுற்றுப்புற கிராமங்களின் நிலம் பண்ணை வீடுகளாகவும், வீட்டுமனைகளாகவும் இழிந்து அழிந்தது. வாழ்வின் ஆதாரமாயிருந்த நிலம் கைவிட்டுப் போன பிறகு அவர்களின் வம்சாவழிகளில் சிலர்தான் வேறுவழியின்றி திருடுகிறார்கள் என்றொரு குற்றச்சாட்டு நிலவுகிறது. நிறைய கம்பெனிகள் மூடப்பட்டு விட்ட நிலையில், ஊர் திரும்பமுடியாத அயலூர்க்காரர்களே வேறு வழியின்றி இத்தகைய துர்க்காரியங்களை நிகழ்த்துவதாகவும் குற்றச்சாட்டுண்டு. நகரத்தில் தொடர்ந்து பெருகிவரும் வழிப்பறி, வன்முறை, விபச்சாரம், போதைப்பொருட்கள், மோசடிகளுக்கும் கூட இப்படியான காரணங்கள் கூறப்படுகிறது. உள்ளூர்க்காரரோ அசலூராரோ, கஷ்டப்பட்டாவது கண்ணியமாய் வாழ முயலும் எத்தனையோ பேரை முருகேசன் அறிவான். இதுவரை தற்கொலை செய்துகொண்ட ஆறேழு குடும்பங்களை, இதன்பொருட்டு இன்னும் வாழ்வதாகவே அவன் கருதுகிறான்.

கடைசி வண்டியிலிருந்து கிளம்பிய கரும்புகையில் கூட்டம் காணாமல் போயிருந்தது. அந்தவண்டி ஊரையே சுருட்டிக்கொண்டு சூன்யத்தை நிறைத்துவிட்டுப் போனதுபோலிருந்தது. மிச்சம் சொச்சமாய் ஓரம்சாரம் ஒதுங்கியிருந்த கொஞ்சம்பேர் வேறு மார்க்கங்களில் செல்ல காத்திருப்பவர்கள்.

கூட்டம் ஒழிந்த பஸ் ஸ்டான்டைப் பார்க்க பார்க்க கூட்டத்தின் மீதிருந்த வெறுப்பு மெல்ல மெல்ல தணிந்து அனுதாபம் விரவியது முருகேசனுக்குள். இப்படி அடைத்துக் கொண்டு ஏறியவர்கள் எவ்வளவு தூரம் இடிபாட்டில் சிக்கியவர்களாய் பயணம் செய்ய முடியும்…? அந்தக் குழந்தைகள்… பெரியவர்கள்… சீக்காளிகள்… இரக்கமும் பெருந்தன்மையும் யார் மீதும் பொழிய யாரும் தயாரில்லாத நிலையில் எல்லோருமே வெறும் டிக்கெடுகளாக போய்க்கொண்டிருக்கின்றனர்.

தானும் ஊர் போய்ச் சேரவேண்டியவன் என்ற நினைவு வந்ததும் வெடுக்கென எழுந்து கொண்டான் பெஞ்சிலிருந்து. மணி இரண்டரை. இங்கிருந்து ஆறுமணி நேரப் பயணம்.

பார்வதி காத்திருப்பாள். சருகு விழும் சத்தத்தைக் கூட உன்னிப்பாக கவனித்து கேட்பாள் காலடியோசையா என்று. விடிய விடிய நடையாய் நடந்தாவது புருசன் வந்து சேர்ந்துவிடுவானென்று அவளுக்கு தெரியும். வசுக்குட்டிக்கும் ராமுவுக்கும் எடுப்பான நிறத்தில் துணி எடுக்கணும். நோம்பி நாளில் பிள்ளைகள் அக்கம்பக்கம் பார்த்து ஏமாறக்கூடாது. அந்த ஏக்கம் கடைசிவரை கண்ணோரம் தங்கிவிடும். பெற்றவர்களின் கஷ்டம் பிள்ளைகளை பீடித்துவிட்டால் அதுகள் குன்றிவிடும். பார்வதிக்கு வெள்ளையும் கத்திரிப்பூ நிறமும் கலந்த புடவை அழகாயிருக்கும். நைந்த பழசை உடுத்திக்கொண்டு பஞ்சையாய் நிற்பாளா நல்ல நாளில்…?

சட்டென்று ஞாபகம் வந்தவனாய் கக்கத்திலிருந்த பையை தொட்டுப் பார்த்துக் கொண்டான். எந்தப் பூட்டையும் எளிதில் திறக்கும் சாதூர்யமறிந்த அவனது தளவாடங்கள் ஓசையெழுப்பாது செல்லமாய் உள்ளிருந்தன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *