ஒரு தெய்வத்தின் சாவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 9, 2023
பார்வையிட்டோர்: 2,035 
 

(1974ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உலகுக்குக் கீதையையும், குறளையும் தத்துவ அறிவையும், நாகரிகத்தையும் வழங்கிய இந்தியாவின், அதன் பீகார் மாநிலத்தில் நடந்து கொண்டிருக்கிறேன். வெப்பத்தின் கொடுமை உடலில் வியர்வை அரும்புவதற்குள் அதனை ஆவியாக்கி விடுகிறது. நெருப்புக் காற்றில் புழுதி பறக்கிறது. மனித முகங்களில் அவலமும், தென்படும் பொருட்களில் செம்புழுதியும் அப்பிக் கொண்டிருக்கின்றன. உயிர்கள் படும் துன்பம் என் நெஞ்சை மிதித்துத் துவைத்து விடுவதால் வெப்பத்தின் வேகம் எனக்குக் கொடுமையாகப் படவில்லை.

நான் ஒரு பத்திரிகைச் செய்தியாளன். கடல் கடந்த என் தாயகத்துக்குச் செய்திகள் அனுப்பும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். ஆமாம்! செய்திகள்தான். பசியிலும், பட்டினியிலும், நோயிலும் இன்னும் இருக்கின்ற எல்லாத் துன்பங்களில் ஒவ்வொரு நாளும் மடிந்து கொண்டிருக்கும் மனித உயிர்களின் துயரச் சம்பவங்கள் வசதி உள்ள மக்களுக்கு வெறும் செய்திகள்தாமே.

நிலவில் மனிதனின் ஆட்சி தொடங்கியதைச் செய்தியாக்கிய நான் நிலத்தில் மனிதனின் வீழ்ச்சியையும், அவலத்தையும் செய்தியாக்கிக் கொண்டிருக்கிறேன்.

குபீரென எழும்பும் புழுதிக் காற்றினூடே நான் நடந்து கொண்டிருக்கிறேன். என் கண்களை மறைத்திருக்கும் கருப்புக் கண்ணாடியில் படிந்துவிட்ட புழுதியைத் துடைத்து விடுவதற்குக் அவகாசமில்லை. என் கண்கள் அதை மறைத்துள்ள அனைத்தையும் ஊடுருவிப் பார்க்கின்றன.

நீண்ட பெரிய கூடாரங்கள். பஞ்ச அகதிகளை, அவர்களின் அவதிகளை ஒருமிக்கக் காணுவதற்காக அமைக்கப்பட்ட முகாம்கள் அவை முகாமை நெருங்கிப் பார்க்கிறேன். என் “செய்திக் கண்கள்” காட்சிகளைத் துழாவுகின்றன.

அரை ஆடையில் பெரியவர்களும், ஆடையே அணியாத வருங்காலப் பெரியவர்களும் தங்கள் முன் நீண்டு நெளிந்து கிடக்கும் சாலையைப் பஞ்சடைந்த கண்களால் ஊடுருவிப் பார்க்கின்றனர்.

நானும் அந்த மனிதக் கூடுகளின் நடுவில் கலந்து நின்று கொள்கிறேன். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் திக்கை நானும் வெறித்துப் பார்க்கிறேன். நிவாரணப் படையினர் உணவு கொண்டு வருகிறார்களாம். அந்த ‘தெய்வப்’ படையினரின் வருகைக்குத்தான் அவர்கள் ஆவலாகக் காத்திருக்கிறார்கள் என்று பிறகுதான் புரிகிறது. நீண்ட நேரம் எதிர்பார்த்தும் அவர்கள் வராததால் சலித்துப் போய், வெறுத்துப் போய் சிலர் முகாமில் போய்த் தொப்பென விழுகிறார்கள்.

நீண்ட நேரம் எதையோ எண்ணிக்கொண்டு முகாமின் நிழலில் ஒதுங்கி நிற்கிறேன். செல்வர்கள், போர்கள், அறிவியல், ஆண்டவன் இப்படி எல்லாவற்றையும் தாண்டி வருகிறேன். முற்றாக இவ்வுலகம் அழிந்து போனால் என்ன என்று எண்ணி முடிக்கும் போது கடமையுணர்வு நெஞ்சைப் பக்கென அழுத்துகிறது. மெதுவாக நகர்கிறேன்.

முகாமைச் சுற்றிலும் என் கண்கள் தாவித்தாவிச் செல்கின்றன. என் பார்வையில் என்னென்னவோ சிக்குகின்றன. பசுமையே அற்றுப்போன மரங்கள். செடிகள், எல்லாத் தாவரங்களுமே மட்டைகளாகக் காட்சியளிக்கின்றன. நாய்களும், வேறு சில பிராணிகளும் ஆங்காங்கே சிறிய சிறிய நிழல்களில் ஒதுங்கிக் கிடக்கின்றன. நெருங்கிப் பார்த்தால் சில செத்தது போல் சாகாமலும் சில சாகாதது போல் செத்தும் கிடக்கின்றன. மனிதர்களும் அப்படித்தானோ? நெருங்கிப் பார்க்க அஞ்சுகிறேன்.

காலியான பாத்திரங்களும் மூட்டை முடிச்சுகளும் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. என் அகக் கண்ணும் புறக் கண்ணும் தொடர்ந்து தழாவுகின்றன. கிடைப்பவற்றில் சிலவற்றை என் நினைவேட்டில் பதிந்துகொள்கிறேன். சில காட்சிகளை ‘குளோசப்’பில் படமாக்க முகாமை நெருங்குகிறேன். சகிக்க முடியாத வாடைகள் என் மூக்கை அடைத்துவிட முயல்கின்றன.

முகாமுக்குள் இருந்து வரும் கொடிய நாற்றத்தைத் தாண்டிச் செல்ல வெளிக்காற்றும் அஞ்சி நிற்கிறது.

அப்போது…..

கண்களுக்கு மேல் கைகளைப் பொருத்தித் தூரத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவன் திடீரென ஏதோ கூவுகிறான். நான் அப்பக்கம் திரும்புவதற்குள் ஒரு பெரிய கூட்டமே முகாமின் முன் கூடிவிடுகிறது. நடக்க முடியாமல் கிடந்தவர்கள் கூட பாய்ந்துப் பறந்து செல்கின்றனர். உயிருள்ள பிணங்கள் சில மூட்டை முடிச்சுகளுக்கு நடுவில் முனகிக் கொண்டிருக்கின்றன. முகாமின் முன் குழுமியிருக்கின்றவர்களை ஒவ்வொருவராகப் பார்த்துக் கொண்டு வருகிறேன். ஆளுக்கொரு பாத்திரம் கையில். ஆனந்தக் கூத்து விழியில். ஆம், அடுத்த வேளையைப் பற்றி யோசிக்காத வரையில் இந்த வேளைக்குக் கிடைக்கும் உணவு ஆனந்தத்தைக் கொண்டு வராதா என்ன?

உணவு கொண்டு வரும் நிவாரணப் படையினர் வரும் லாரியின் முகம் புழுதியினூடே மங்கலாகத் தெரிகிறது. அதுவரை என்னைச் சுற்றிக்கொண்டிருந்த சிறுவர்கள் கூட்டம் பெரியவர்களின் கூட்டத்தின் இடைவெளியில் புகுந்து கரைகிறது. நான் என் ‘காமிராவை’ த் தயார் செய்து கொள்கிறேன்.

அந்த லாரி நெருங்கி வருகிறது. ஆவல் தெறிக்கும் விழிகளோடு, பசியின் வெறியோடு அதனை வரவேற்கக் காத்திருக்கின்றனர் எல்லோரும். நான், ஒரு வேளை உணவுக்கு ஓட்டைப் பத்திரங்களை ஏந்திக்கொண்டு போராடும் ஆண்டவனின் பிள்ளைகளை, அந்தக் காட்சியை வண்ணப்படமாக எடுக்கக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

ஐயோ! ஏன் அந்த லாரி நிற்கவில்லை!? உணவுக்கு நின்று கொண்டிருந்தவர்களின் முகங்களைப் புழுதியால் மறைத்து விட்டு அந்த லாரி பறந்து செல்கிறது. அண்மையிலுள்ள மற்றொரு முகாமுக்கு உணவு கொண்டு செல்கிறது போலும்.

வாயில் வந்தபடி திட்டிக் கொண்டு அந்தக் கூட்டம் கூடாரத்துள் போய்ச் சாய்கிறது. எனக்கும் ஏமாற்றந்தான். அவர்களின் துன்பம்…..சே, என் நெஞ்சக் கண் ஈரமாகின்றது. அவர்களைத் தொட்டுத் தேறுதல் சொல்ல உள்ளம் பரபரக்கிறது. ஆனால் கைகள் அஞ்சுகின்றன. அவர்கள் என்னைத் தொட்டுவிடக் கூடாதென்று கூட அஞ்சுகிறேன். கன்னங்கரேலென்ற அந்தக் கோவணங்கள்! எனக்குக் குமட்டுகிறது.

மெதுவாக அந்தக் கும்பலிலிருந்து என்னைக் “கழுவி” கொண்டு, நழுவிக் கொண்டு வெளியேறுகிறேன். அந்தச் சிறுவர்கள் தூவென என் பக்கம் உமிழ்ந்து விட்டு ஓடுகின்றனர்.

அவர்கள் தின்பதற்கு நான் எதுவும் கொடுக்க வில்லையாம். உடை மட்டும் துரைபோல் உடுத்தியிருந்து என்ன செய்ய!

கூடாரத்தின் அடுத்த வாசலை நெருங்குகிறேன். மூக்கை ‘லபக்’ கென அழுத்திக் கொள்கிறேன். இரண்டு மூன்று ‘நடக்கின்ற பிணங்கள்’ சேர்ந்து ஒரு நடக்காத பிணத்தைச் சுமந்து கொண்டு வருகின்றன. நான் சற்றுத் தொலைவில் ஒதுங்கி நின்று பார்க்கிறேன். அவர்கள் பக்கத்தில் இருந்த கொட்டகையில் கொண்டு போய் அந்தப் பிணத்தைப் போடுகிறார்கள். பிணத்திற்கு உரியோர் அழுகிறார்களா என்று பார்க்கிறேன். அழுகுரல் கேட்கவில்லை. பிணக் கொட்டகையில் குவிந்து விடும் பிணங்களை நிவாரணப் படையினர் மொத்தமாக அள்ளிக்கொண்டு போய் ஊருக்கு வெளியே புதைப்பார்களாம். அதையும் நான் பார்க்க விரும்புகிறேன். இதயமற்ற செய்தியாளன், ஆனால் இதயமுள்ள மனிதன் நான்.

கடந்த சில நாட்களில் கல்லாகிப் போன நெஞ்சோடு திரும்பி நடக்கிறேன். என்னை அறியாமல் என் உள்ளம் எங்கெங்கோ நழுவி ஓடுகிறது. கொட்டிவைக்க இடமில்லாமல் விளைந்த பயிரைக் கடலில் கொண்டுபோய்க் கொட்டுகிறது ஒரு நாடு. உண்டு கொழுத்ததால் உண்டான நோய்க்கு மருந்து தேடிக்

காலமெல்லாம் அலைகின்றனர் பலர். அவர்கள் நடுவில் இந்தப் பாவ மூட்டைகள், என் நெஞ்சம் கரகரக்கிறது. ‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்’ என்றாரே ஒரு கவிஞர், அவர் இந்தக் கூட்டத்தைப் பார்த்தால்….

என் கால்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அப்போது…

என் சிந்தனைத் திரையைக் கீறிக் கிழித்தது ஒரு குரல். என்னை அறியாமலேயே முகாமிற்குள் எட்டிப் பார்க்கிறேன். என் கண்கள் அந்தக் குரலுக்குரிய உயிரைத் தேடும் போது….. நெளிந்து கொண்டிருக்கும் மனிதக் கூடுகள் என் நெஞ்சை நெருடுகின்றன.

முக்கல், முனகல், புரியாத மொழிகளானாலும் வேதனையின் கனம் தாங்காமல் தடுமாறி விழுகின்ற வார்த்தைகள் எனக்குப் புரிகின்றன. கணவனைத் தேற்றும் மனைவி, மனைவியைத் தேற்றும் கணவன். பெற்ற பிள்ளைகளின் ஒட்டிய வயிற்றைக் காணப் பொறாத பெற்றோர். இவர்களுக்கிடையில் பாடுபட்டுச் சேர்த்த பணம் பசிக்குதவாததால் அவற்றைக் கிழித்தெறிகிறான் ஒருவன்.

அப்போது….

அதே குரல், சற்று முன் என் சிந்தனையைத் தடுத்து நிறுத்திய அதே அழுகுரல். ஒரு மூலையில் ஒண்டியாக உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு தாயின் மடியிலிருந்து அந்தக் குரல் மீண்டும் ஒலிக்கிறது. அந்தக் கைக்குழந்தையின் தொண்டை கம்மிப் போயிருக்க வேண்டும். தாயும் கேவுகிறாள். பாலுக்காக அக்குழந்தை தாயின் மார்பகத்தைப் பற்றி இழுக்கிறது. பாலூட்டத் தான் அவள் ஆண்களுக்கு அப்பால் போய் அமர்ந்திருக்கிறாள். ஆனால் ஈரப்பசையே அற்றுப்போன அந்த உடலில் எவ்வாறு பாலூறும்? அவள் குழந்தையைத் தேற்றுகிறாள். அழுகுரலோடு ஆராரோ பாடுகிறாள். எதையெதையோ வேடிக்கை காட்டுகிறாள். ஆனால், அக்குழந்தை ஏமாற மறுக்கிறது. அது மீண்டும் மீண்டும் பாலுக்காக அதைப் பற்றி இழுக்கிறது. தாய் தடுக்கிறாள். தன் தலையில் பட்பட்டென அறைந்து கொள்கிறாள். வானத்தைப் பார்த்துக் கூவி அழுகிறாள். குழந்தை தன் ஆற்றலையெல்லாம் ஒன்று திரட்டி வீறிடுகிறது. அவள் ஆத்திரத்துடன் பால்காம்பை அதன் வாயில் திணிக்கிறாள்.

துடிக்கின்ற இதயத்தை அழுத்திப் பிடித்தவாறு அவளறியாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் நான்.

குழந்தை மீண்டும் வீறிடுகிறது. ஆவலோடு சூப்பிய அந்தச் சின்ன உதடுகள் நனைந்துகூட இருக்காது. தாய் மீண்டும் தன் தலையில் அடித்துக் கொள்கிறாள். மாற்றி மாற்றி இரண்டு புறங்களாலும் பாலைப் புகட்ட முயலுகிறாள். குழந்தையின் வாய் இன்னும் நனையவே இல்லை.

உணவு கொண்டுவரும் லாரிக்காக எல்லாரும் வாசலைப் பார்த்தபடி இருக்கின்றனர்.

நான் மீண்டும் அந்தத் தாயையும் சேயையும் பார்க்கிறேன். குழந்தை தொடர்ந்து அழுகிறது. தாய் என்னென்னமோ செய்கிறாள். பேசுகிறாள். அழுகிறாள். தாயின் கண்ணீரில் குழந்தையின் முகம் நனைகிறது. ஆனால் குழந்தைக்கு வேண்டியது பால். அது கத்துகிறது. தாய் குமுறி எழுகிறாள். தன் ஒற்றைக் குழந்தையைக் கீழே கிடத்திவிட்டு ஒரு மூலைக்கு ஓடுகிறாள். வெறி பிடித்தவள் போல் மூட்டை முடுச்சுகளை அவிழ்த்துப் பீறாய்கிறாள்; அலறுகிறாள்; தேடுகிறாள்; கிடைத்தது. ஆம், அவள் தேடியது கிடைத்தது.

வெற்றி மகிழ்ச்சி விழியில் தீப்பொறியெனப் பறக்கிறது. அக்காட்சியைப் பார்க்க என் கண்கள் நடுங்குகின்றன. ஓவெனக் கதற வாயைத் திறக்க முயல்கிறேன். நாக்கு அசைய மறுத்து எங்கோ போய் ஒட்டிக் கொண்டுவிட்டது. அவளைத் தடுக்க யாராவது முயல்கிறார்களா என்று அங்குமிங்கும் பார்க்கிறேன்.

அதற்குள் அவள்……

ஹரே ராம் என அண்ணாந்து முழங்குகிறாள். அடுத்த நொடி தேடி எடுத்த கத்தியினால் தன் மார்பங்களில் ஒன்றை அறுத்து எறிகிறாள். “ஆவென” அலறுகிறேன் நான். கண்ணை மூடி மறு நொடி திறக்கிறேன். அவள் மறுபுற மார்பகத்தையும் அறுத்தபடிக் கீழே சாய்கிறாள். பாலுக்குக் கதறிய குழந்தை அவள் அணைப்பில் அமைதியாகக் கிடக்கிறது. அந்தத் தாய் ஏதேதோ முனகுகிறாள். சில நிமிடம்… அவள் உடலின் அசைவும் அடங்குகிறது. சிலர் அவளை நெருங்கி வருகின்றனர். கவிழ்ந்து கிடந்த அவளை ஒருத்தி புரட்டுகிறாள். சலனமற்ற முகத்தோடு சலனமற்ற முகத்தோடு இடமும் வலமும் பார்க்கிறாள்.

அவர்கள் இறந்துவிட்டார்கள்.

போன வாரம்தான் அவள் கணவன் போய்ச் சேர்ந்தானாம், அவனுக்குப் பின் அங்கு அவளுக்கு வேறெந்த உறவும் இருந்ததில்லையாம். அவரவர் வயிற்றுக்கு ஈரம் தேடிக் கொண்டிருந்த அந்த மனிதப் பிராணிகள் அவர்களின் மரணத்தைத் தடுப்பதை அவசியமாகக் கருதவில்லை போலும்!

ஆயிரமாயிரம் பட்டினிப் பிணங்களோடு அந்த இருவரின் உடல்களையும் கொண்டு சேர்க்கிறார்கள் அவர்கள். மறுகணம் உணவு லாரியை எதிர்பார்த்து நிற்கிறார்கள். இத்தனைக்கும் பிறகு என்னையும் என் கண்களையும் நம்ப முடியாமல் நான் என் நினைவுக்கு மீள்கிறேன். கடமை நினைவுக்கு வருகிறது.

அன்றைய காட்சிகளைச் செய்தியாக்கி அனுப்புவதற்கு என் இருப்பிடத்தை அடைகிறேன். மனித உணர்வுகள் தேய்ந்துபோன கூட்டத்தின் நடுவில் பசிக்குப் பாலூட்ட உதவாத மார்பகங்களை அறுத்தெறிந்து உயிர் துறந்த ஒரு தாயின் சாவை “ஒரு தெய்வத்தின் சாவு” என்று எழுதுகிறேன். தொடர்ந்து நெஞ்சுக்குள் அழுகிறேன்.

– தமிழ் நேசன் 1974, ‘கோணல் ஆறு’ தொகுப்பின் மறுபதிப்பு

– கம்பி மேல் நடக்கிறார்கள், முதற் பதிப்பு: 2006,சிவா எண்டர்பிரைஸ், கோலாலம்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *