என் மாதாந்திர ஓய்வூதியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 24, 2021
பார்வையிட்டோர்: 4,543 
 

அமெரிக்கா லாஸ் ஏஞ்சலஸ் 2009ஆம் ஆண்டின் தொழிலதிபருக்கான விருது வழங்கும் விழா. தேவமனோகர் பணக்காரத் தோரணையில் கம்பீரமாக மேடையில் அமர்ந்திருக்கிறார். அருகில் ஜனாதிபதி மற்றும் பல பிரமுகர்கள் அரங்கமைப்பும் விருது விழா ஒழுங்கமைப்பும் மனக்கண்ணுக்கெட்டா வண்ணம் மச்சமாக இருந்தது. எது எப்படி இருப்பினும் தேவமனோகருக்கு இது வாழ்வின் உச்சாணியில் நிற்கும் ஓர் இன்ப அனுபவமே.

சேர்… இந்தாங்கோ , நோட்டீஸ் சேர்… சேர்… நோட்டீஸ் எங்கட பள்ளிக்கூட வருடாந்த விளையாட்டுப் போட்டி வாற சனிக்கிழமை. அதான் பிறின்சிப்பல் இதை உங்களிட்ட – குடுக்கச் சொன்னவர். குசேலன் நீட்டிய நோட்டீசை உணர்வு மேலீட்டால் பெற்றுக் கொண்டவர் வாஞ்சிநாதர். வயது 63. ரிட்டயர் ரீச்சர். வாழ்வின் அடி மட்டத்திலிருந்து தன் விடாமுயற்சியால் முன்னுக்கு வந்து ஊரில் நன்மதிப்புள்ள உதாரண புருஷனாக வலம் வரும் கல்விமான். நோட்டீசைப் பார்த்தவருக்கு பள்ளிக்கூடத்தின் படிகள் மனத்தில் ஏற மனக் கூடத்தில் வகுப்பறை வடிவங்கள், நண்பர்கள் பிம்பங்களாக, சம்பவங்கள், சரம் போல தொடர நீர்த்துளிகள் விழித்திரை விளிம்பில் விழ அவரும் பழைய நினைவில் விழுந்தார்.

நீயும் வா தேவா, எதிர்காலம் நல்லாயிருக்கும்.

இல்ல இல்ல மச்சான். நான் உதுக்க வரேல்ல. ஏனோ மனது உதுல நாடேல்ல. நீ கம்பஸ் போ மச்சான். நான் பக்கத்தில இல்ல எண்டு றிவேட் அடிக்கிறேல்ல. கொனஸ்சோட பாஸ் பண்ண வேணும். நான் பக்கத்து ரியூட்டறியில் கிளாஸ் குடுத்து, என்ர கல்வியை, அதிலை இன்னும் வளர்க்க வேணும். நீ ஒண்டுக்கும் யோசிக்காமல் போ மச்சான். தேவன் ஏனோ பிடிவாதமாக கம்பஸ் வர மறுத்தான்.

எனக்கு கம்பஸ்தான் கனவு, உலகு எல்லாமே. வீட்டிலும் எல்லாரும் கம்பஸ் போகச் சொல்ல நான் கம்பஸ்சில் பயணிக்க, தேவன் ரியூட்டரியில மாஸ்ரராக கால்பதித்தான். ஒரு வருடம் ஓடியது. மதில் எங்கும் வண்ணக்கலரில் வர்த்தகம் பிரபல ஆசிரியர் எஸ்.தேவா எனச் சுவரொட்டிகள். நான் கம்பஸ் கட்டு பெஞ்சில் குந்தியிருக்க தேவன் சந்திக்குச் சந்தி பேசப்பட்டான். நானும் பாராட்டலாம் எனச் சென்ற போது அவனே ஒரு ரியூட்டரியை எடுத்து நடத்துவதாகச் சொன்னான். கிளிநொச்சி, உருத்திரபுரம், கனகபுரம், முல்லை என அவனின் பெயரில் ரியூட்டரிகள் முளைத்தன. மூன்று வருடங்கள் முழுதாய் ஓடிவிட வன்னி எங்கும் தேவனின் ரியூட் டரிகள் தான். நான் ஸ்பெசல் செய்வதாக முடிவு செய்து மீண்டும் 1 வருடம் கம்பஸ்சில் காலம் கடத்தினேன்.

வினோத உடைப் போட்டியில் சிறார்கள் தங்கள் திறமைகளை அலங்காரத்தாலும், அசைவுகளாலும், ஆற்றல்மிகு பேச்சாலும் வெளிப்படுத்தினர். நானும் அதில் நடுவராக இருந்து முடிவு எடுக்க முடியாமல் திண்டாடினேன். திண்டாட்டமே என் சுபாவமா, இல்லை இல்லை. ஒவ்வொருவரிலும் ஒவ்வொரு திறமை. இருந்தாலும் சனங்களின் ஏகோபித்த தெரிவாக ஒருவர் மட்டுமே தெரிவாகும் போது தெரிவானவர் மிகமிகத் திறமைசாலி என்பது நிரூபணம்தானே. விளையாட்டுப் போட்டி முடிந்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. என்னையும் பரிசில் கொடுக்க அழைத்தார்கள். என்னை அறிமுகப்படுத்தும்போது எனது கல்வி, சுபாவம், பண்பு, அன்பு, சேவை எல்லாவற்றையும் முதன்மைப்படுத்தி என்னை ஒரு முன்மாதிரியாக, வழிகாட்டியாக, ஞானியாக, பள்ளி மாணவர்களுக்குச் சொன்னார்கள். உண்மையில் நான் ஒருவகை ஞானிதான்.

எனது சம்பளத்தில் மனைவியையும், மூன்று பிள்ளைகளையும் வாழவைத்து பிள்ளைகளை சமூகத்தில் அந்தஸ்துள்ளவர்களாக உருவாக்கி காலூன்ற வைப்பது என்பது எவ்வளவு கஸ்டம். முதுசம் எண்டும், சீதனம் எண்டும் ஒண்டும் இல்லாமல் ரியூசன் கொடுக்காமல் வேறு எந்த வழியிலும் பொருள் தேடாமல் ஓர் ஆசிரியராக வாழ முடியுமா! நான் வாழ்ந்தேன். ஞானியாகத்தான் வாழ்ந்தேன். என் சுகம், ஆசை, ஆரவாரம், எல்லாவற்றையும் என் குடும்பத்துக்காக தியாகம் செய்து இன்று அவர்களை ஒருவரும் குறைகுற்றம் சொல்லாவண்ணம் நல்ல ஒரு வாழ்வை அமைத்துக் கொடுத்திருக்கிறேன்.

சேர், இன்னும் 1/2 மணி நேரம் புரோக்கிறாம கொஞ்சம் இழுத்தால் தொழிலதிபர் தேவாவும் இதில் கலந்து கொள்ளுவாராம். அவற்றை வைக்கிள் முருகண்டி தாண்டீட்டுதாம், அவர்தானே இந்த மூன்று மாடிக் கட்டடமும் சயன்ஸ்லாப்பும் கட்டித் தந்தவர். அதான் சொல்லுறன. ஓம்…… ஓம்…. சரி, சரி ஆற்றையாவது ஸ்பீச் ஒண்ட வைச்சு சமாளிப்போம். சேர் அப்படி எண்டால் நம்மட வாஞ்சிநாதன் மாஸ்டர் நல்லாப் பேசுவார் அவரைப் பேசச் சொல்லுறன்…ஓம்…ஓம்…சரி, இப்போது எங்கள் பாடசாலை முன்னை நாள் ஆசிரியரும் சிறந்த ஆசானுமாகிய திருவாளர் வாஞ்சிநாதன் அவர்கள் சிறப்புரை ஆற்றுவார்கள்…

நான் எழுந்து சென்று ஒலி வாங்கி முன்நின்று பேச ஆரம்பித்து 10 நிமிடம் சென்றிருக்கும்…!!! சர்…சர்…சர்…ஒன்றன் பின் ஒன்றாக ஏழு வாகனங்கள் கார், பிக்கப், இன்ரகூலர் என்று பல வண்டிகள் மைதானத்திற்கருகில் வந்து தரித்து நிற்க, பலரும் பல தினுசான உடையில் இறங்கிவர, கறுப்பு கூலிங் கிளாசும், ஆட்டுத்தாடியும் ஆல்டிமேட் அஜித் பாணியில் எனது தேவன் இறங்கிவர அனைவரும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். விளையாட்டு மைதானத்தில் கூடியிருந்த வீர, வீராங்கனைகள், மாணவர்கள். பெற்றோர்கள் பிரமுகர்கள் என அனைவர் கவனமும் என் தேவன்பால் செல்ல நான் பேச முடியாமல் திண்டாட, ஒருவர் என்னிடம் வந்து, சேர் அவர் வந்திட்டார், இனிப் பேசினது காணும் என்று மன்றாட என் பேச்சு இடை நடுவில் நின்றே போச்சு……

கைகுலுக்கலும், சுகம் விசாரிப்புடனும் தேவன் மேடைக்கு வர நான் மேடையில் இருந்து இறங்கவும் சரியாக இருந்தது. என்னைக் கண்டவன் விழிகள் கறுப்புக் கண்ணாடியின் பின் விழித்துக் கொண்டன, ஆரத்தழுவி தன் அன்பை வெளிக்காட்டிக் கொண்டான். சபையோர் எல்லோரும் குளுக்கோஸ் உண்ட உற்சாகத்தில்…!

தேவன் புத்தகசாலை, தேவன் கபே, தேவன் பிறஸ், தேவன் காட்வெயர், தேவன் சிற்றி…தேவன் தேவன் தேவன் இப்படிப் படிப்படியாக ஆரம்பித்து சகல துறைகளிலும் முன்னணியாகி அவன் வளர்ச்சி இந்த ஒரு வருடத்தில் இலங்கையின் வர்த்தகத் துறையில் அவன் ஒரு தூண் ஆகிவிட்டான். நான் படிப்பு முடித்து பட்டம் பெற்று அரச உத்தியோகத்திற்கு முன்னோடியாக வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தில் வேளைக்கே இணைந்து கொண்டேன். இடையிடை நானும் அவனும் சந்தித்துக் கொள்வோம். அவன் என் மீது வைத்த அன்பும், மரியாதையும் என்றுமே மாறவில்லை . அவன் என் வழியில் குறுக்கிடவுமில்லை . நான் அவன் பாதையில் தடை போடவுமில்லை . இருவருமே எமது இலட்சியக் கனவுக்காக உழைத்தோம். போராட்டங்கள், மறியல்கள், உண்ணா விரதங்களின் பின் எனக்கும் இன்னும் நாலாயிரம் பேருக்கும் அரச பாடசாலைகளில் ஆசிரிய நியமனம் கிடைத்தது. நான் திருகோணமலை சாஹிராக் கல்லூரியில் இணைந்து பணியாற்றினேன். அறிந்தவுடன் நிறைய பரிசுப் பொருட்களுடன் வீட்டுக்கு வந்து வாழ்த்தினான். அவன் தொழில் விவரம் விசாரித்தபோது தனது நிறுவனங்களிலும், தொழிற் சாலைகளிலும் நாலாயிரம் பேருக்கு மேல் வேலை செய்கிறார்கள் எனக் கூறினான். அவனும் அரசாங்கம் ஏதும் நடத்திறானோ என மனதுக்குள் நான் வினோதமாக எண்ணிக்கொண்டேன். பின்பு திருமணத்திற்கு வந்தான், பிள்ளைகளின் பிறந்த நாளுக்கு வந்தான். தொடர்புகள் தொடர்கதையாக நீண்ட எதிர்பார்ப்புடன் காலம் ஓடியது. அவனும் மந்திரி ஒருவரின் மகளை மணம் முடித்து இரு குழந்தைகளுடன் இன்பமாய் வாழ்கிறான்.

யூலை 83டன் நான் எமது ஊர்ப் பள்ளிக்கூடத்தில் இணைந்து கொண்டேன். ஊரில் என்னை தெரியாதவர்கள் யாருமே இல்லை . அந்தளவுக்கு எனது கல்வியும், பணியும், சேவையும் விளங்கியது. தேவனை உலகே அறியும் அந்தளவுக்கு அவன் பொருளாதாரத்தின் உச்சத்தில் உயர்ந்து நிற்கிறான். இருவரின் கல்வியும், அறிவும், ஆற்றலும் ஒரே மாதிரியாக இருந்தாலும் தெரிவும், சந்தர்ப்பமும், சூழ்நிலையும் வேறாகியபோது நான் எங்கே! அவன் எங்கே!

இப்பொழுது சர்வதேச தொழிலதிபரும், சமூகத் தொண்டனும், எமது பாடசாலை முன்னாள் மாணவருமான பிரபல தொழிலதிபர் திருவாளர் சுப்ரா தேவமனோகர் அவர்கள் ஒருசில நிமிடங்கள் உரையாற்றுவார்கள்…… தேவன் தன் பழைய பள்ளிக்கூட வாழ்வைப் பற்றிப் பேசினான். வரிக்குவரி என் தோழமையையும், அன்பையும் நான் பாடசாலைக்கு ஆற்றிய சேவையையும் குறிப்பிட்டு என்னைப் புகழ்ந்தான். அரங்கம் அவன் பேச்சை அமைதியாக செவிமடுத்தது. எல்லோரும் அவன் வளர்ச்சியைக் கண்டு திகைத்தனர். அவன் என்னைப் புகழ்ந்து பாராட்டுகிறான் என்றால் அவன் என்னை விட பெரியவனா? அல்லது எல்லோருள்ளும் நான் பெரியவனா? பெரியவர், சிறியவர் அறிவிலா! அந்தஸ்திலா? நான் வாழ்வாதாரத்திற்கான கல்வியைப் பலருக்கு ஊட்டினேன். அவன் தன் தொழிற்சாலைகள் மூலம் பலரின் வாழ்வை அல்லவா ஓட்டிக் கொண்டிருக்கிறான். நிச்சயமாக அவன்தான் பெரியவன். நான் அவன் தோழன் என்பதில் பெருமைப்பட்டுக் கொள்கிறேன். இந்த விழாவுக்கும், பரிசுப் பொருட்களுக்குமான செலவை தான் பொறுப்பேற்கிறேன் என்றும், விரைவில் 20 கணனிகளையும் அதற்கான கட்டடத்தையும் அமைத்துத் தருவதாகவும் பேச்சின் இடையே சொன்னார். ஆம்….. ஆம்……. சொன்னார் என்பதே சரி. என்னதான் நண்பன் என்றாலும் பலர் முன்னிலையில் அவரின் அந்தஸ்துக்கு ஏற்றவாறு நான் நடக்க வேண்டும் அல்லவா! பேச்சு முடிந்ததும் என்னருகில் வந்து அமர்ந்து பழைய நினைவுகளையும், புதிய வளர்ச்சிகளையும் பகிர்ந்து கொண்டார். மனைவி டிசைனிங் செய்யிறா, மூத்தவன்ர பேரில் 3 கப்பல் ஓடுது, மற்றவன் ‘சுக்கிரன்’ என்ற பேரில் இன்சூரன்ஸ் கம்பனி நடத்திறான். ஆ…. ஆ… அப்பிடியே! என்ர மகளை அவுஸ்திரேலியாவில முடிச்சுக் கொடுத்திட்டன். மூத்தவன் கச்சேரியில் ஒடிட்டர், இளையவன் சமுர்த்தியில் வேலை செய்யிறான், என்னை மரியாதையாக வாஞ்சிநாத ஜயா என உயர்த்திக் கதைக்க முற்பட நான் தடுத்தேன்.

என்ன தேவா இது புதுப் பழக்கம்…!

இல்ல…இல்ல..இந்த வேட்டியும் நஷனலும், நரைத்த பஞ்சு முடியையும் பண்பையும் பார்த்தவுடன் உன்னோடு பழைய மாதிரிக் கதைக்க முடியேல்ல மச்சான்…!

நீ மச்சான் என்றாயே அது ஒன்றே போதுமடா தேவா…

வார்த்தைகள் ஒருமையில் உறவாட உணர்வுகள் சங்கமித்து நீண்டு கொண்டன.

அது சரி, என்னடாப்பா உன்ர கண் ஒருமாதிரி இருக்கு?

இப்பத்தான் ஒப்பரேசன் செய்தனான், இந்த மேடை லைட் வெளிச்சத்தில் அது கலங்குதடாப்பா.

இந்தா இதைப் போடு என்று உரிமையுடன் தான் அணிந்திருந்த கூலிங்கிளாசை என்னிடம் தந்தான்.

மிகப் பெறுமதியோ? எவ்வளவு?

இது இஞ்ச எண்டால 12,500 ரூபாவரும். கலிபோனியாவில வாங்கியது. என்னட்ட இப்பிடி 10, 15 இருக்கு. நீ வைத்திரு…

வாங்கி அணிந்து கொண்டேன். உலகையே சற்று மறைத்தது. விலைகூடிய கண்ணாடியா அல்லது வீரியம் குன்றிய என் பார்வையா? என் உள்ளத்தில் பெரும் தடுமாற்றம். எனது மாதாந்த பென்ஷன் 12,500 ரூபா. நண்பன் வேளா வேளைக்கு அணியும் கண்ணாடியும் அப்படியா? எனக்கு பென்சன்தான் கண்ணாக வாழ்வுக்கு இப்போ வழிகாட்டுகிறது. தேவனுக்கு என்றால் என் பென்சன் பெறுமதிக்கு சமனான ஒரு கூலிங்கிளாஸ் ஒரு அழகிற்காக, அந்தஸ்திற்காக அவசியம் வேண்டியிராத ஒன்றாக அமைந்திருக்கிறதே.

– என் மாதாந்திர ஓய்வூதியம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2012, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *