உயிர்காக்கும் உதவிகள்…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 4, 2022
பார்வையிட்டோர்: 8,246 
 

”குருவே எனக்கு ஒரு பிரச்சனை” என்று தன் முன் வந்து நின்ற பெண்ணைப் பார்த்தார் குரு.

“என்ன பிரச்சனை?”

“என் கணவருக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. எல்லோரிடமும் இரக்கப்பட்டு உதவிகள் செய்கிறார். அதனால் என்ன பலன் என்று எனக்குப் புரியவில்லை” என்றாள்.

குருவுக்கு அவளின் பிரச்சனை புரிந்தது. அவளுக்கு ஒரு சம்பவத்தை சொல்ல துவங்கினார்.

‘இது ஒரு பனி மலையில் நடந்த சம்பவம். இரண்டு நண்பர்கள் பனி மலையில் ஒரு கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமத்துக்கு சென்றுக் கொண்டிருந்தார்கள். அன்று குளிர் மிகக் கடுமையாக ரத்தத்தை உறைய செய்வதாக இருந்தது. அப்போது திடிரென்று காற்று அசுரத்தனமாய் வீசியது. நண்பர்கள் இருவரும் நடுங்கிவிட்டனர். அவர்களிடமிருந்த போர்வை அந்தக் குளிருக்கு போதவில்லை.

வேகமாக நடந்துக் கொண்டிருந்தபோது பாதையில் ஒருவன் விழுந்துக் கிடந்தான். பாதி உயிரில் கிடந்தவனைப் பார்த்ததும் நண்பர்கள் நின்றார்கள். ஒருவன் அவனை தூக்கிக் கொண்டு போய் கிராமத்தில் சேர்க்க விரும்பினான். மற்றொருவன் அதை விரும்பவில்லை.

‘அவனை தூக்கிக் கொண்டு போனால் நம்மால் வேகமாக நடக்க இயலாது. பனிக்காற்று வேறு வேகமாக அடிக்கிறது. இந்தக் குளிரில் நாம் விரைத்தே செத்துவிடுவோம்’ என்றான்.

ஆனால் மற்றவனுக்கு அப்படியே விட்டுவிட்டு வர மனதில்லை. அவனைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். வேகமாக நடக்க இயல்வில்லை. சிரமப்பட்டு நடந்தான். அடுத்தவனுக்கு இது பிடிக்கவில்லை. ‘நீ மெதுவா வா, நான் போகிறேன்’ என்று விடுவிடு என்று நடக்க துவங்கினான்.

இவன் தட்டுத் தடுமாறி கீழே கிடந்தவனையும் சுமந்துக் கொண்டு நடந்தான். கிராமத்து எல்லைக்கு வந்துவிட்டான். அங்கே பாதையில் ஒருவன் சுருண்டு விழுந்து கிடந்தான். யாரென்று பார்த்தால் இவனை விட்டு வேகமாக வந்த நண்பன். அவன் மூச்சு நின்று போயிருந்தது. அதீத குளிரால் இறந்திருந்தான்.

அதற்குள் கிராமத்து மக்கள் கூடிவிட்டனர். குளிரில் அவன் இறக்க, இவர்கள் இருவரும் பிழைத்தது எப்படி என்று ஆச்சர்யப்பட்டார்கள். உடனே ஊர் பெரியவர், “கீழே கிடந்தவனை சுமந்ததால் இருவர் உடல் சூடும் சேர்ந்து குளிரை போக்கடித்துவிட்டது’ என்று அவர்கள் வியப்புக்கு பதில் சொன்னார்.

இந்த சம்பவத்தைக் கேட்டதும் வந்தப் பெண்ணுக்கு உணமை புரிந்தது.

அப்போது குரு அவளுக்கு சொன்ன WINமொழி: ஒருவருக்கொருவர் செய்யும் உதவிகள் நிச்சயம் உயிர்காக்கும்.

– வெளியான ஆண்டு: 2011 (நன்றி: http://ranjan360.blogspot.com)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *