கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 30, 2022
பார்வையிட்டோர்: 2,290 
 

நிரஞ்சன் நியாய விலைக்கடை முன் வரிசையில் நின்றிருந்தான். கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து நிரந்தர வருமானமும், சேமிப்பும் இல்லாமல் வேறு வகையேதுமின்றி வாழ முடியாதவர்களுக்கு உதவிடும் வகையில் அரசு உதவி பணம் கொடுப்பதை வாங்கவே கூட்டம் கூடியிருந்தது.

சிலர் முககவசம் அணிந்திருந்தனர்,சிலர் அணியாமலும் நின்றிருந்தனர். அந்தக்கூட்டத்திலேயே நிரஞ்சன் வித்யாசமாக,அதாவது விலையுயர்ந்த ஆடை அணிந்து காரிலும்,வீட்டிலும் குளிர்சாதனம் பயன்படுத்தியதால் முகம் மற்றவர்களைப்போல் வியர்வை வடிந்து வாடிப்போய் இல்லாமல் பொழிவுடன் இருந்தது. ஐபோனில் நண்பனிடம் பேசுவது,வாட்ஸ் அப் பார்ப்பதுமாக அடிக்கடி சிரித்துக்கொண்டிருந்தான்.

வயதான பாட்டி ஒருவர் கிழிந்த சேலையுடன்,நடுத்தரப்பெண் கலர்போன சுடிதாருடன்,குழந்தையை கையிலெடுத்தபடி வாடிய முகத்துடன் ஒரு பெண்,கிழிந்த வேட்டியும்,பனியனும்,துண்டுமாக ஒரு பெரியவரென கொரோனா கால பாதிப்புக்காக அரசு கொடுக்கும் உதவித்தொகையைப்பெறும் வகையில் அதற்குண்டான டோக்கன் வாங்க நின்றிருந்தனர்.

“தம்பி உங்களைப்பார்த்தா பணக்கார ஊட்டு புள்ளையாட்ட இருக்கு? நீங்கெல்லாம் இப்படி வரிசைல ஏன் நிக்கறீங்க? எங்களுக்குத்தான் கொரோனா ஊரடங்கால வேலையில்ல. இல்லேன்னா இங்க நிக்கத்தேவையில்ல. ம், எல்லாம் விதி. இருந்தாலும் கவருமெண்ட்டு பணம் கொடுக்கறது சந்தோசம். எப்படியோ பணக்காரனாகாட்டியும் சோத்துக்கு இருந்தா வாழ்ந்திடலாம். எனக்கும் வயிசு எம்பதாச்சு. நடக்கமுடியாத ஒரு பையன கொடுத்துட்டு எம் பொண்ணு போய் சேர்ந்துட்டா. அந்தபையன காப்பாத்த காட்டு வேலைக்கு போறேன். தெனம் முன்னூறு கூலி கெடைக்குது. இப்ப அதுவுமில்ல. இந்த பணம் கெடச்சா சட்டில அரிசி வேகும்”என்ற பெரியவரின் பேச்சைக்கேட்க தூக்கிவாரிப்போட்டது நிரஞ்சனுக்கு.

‘மாதம் லட்சங்களில் வருமானம் பெறும் நாம் அரசு இலவச நிதியை பெறுவது சரியா?உணவுக்கே வழியில்லாதவர்கள் பெறுவது சரியா?’ அவனது மனசாட்சி அந்த வரிசையை விட்டு ‘போ,போ’ என்றது.

வீட்டிலிருந்து மனைவி செல்போனில் அழைத்து”இன்னும் என்னங்க பண்ணறீங்க…?பக்கத்து பங்களா பத்மாக்க உங்களுக்கு பின்னாடி வந்து டோக்கன் வாங்கீட்டாங்க. உங்க பழக்கத்த பயன்படுத்தி,உங்க பதவிய சொல்லி, உடனே வாங்க முடியாதா…? எதுக்குமே லாயக்கில்லை…” என கூறி போனை துண்டித்து விட்டது நிரஞ்சனுக்கு அவள் மீது ஆத்திரமும்,கோபமும் கொள்ள வைத்தது.

உடன் நின்றிருந்த நண்பன் “என்னடா பதட்டமா இருக்கே? என்னாச்சு?” என கேட்க, “ஆமா பதட்டம் தான்,கோபம் தான்,என் மனைவி மேல மட்டுமில்ல,எம்மேலயும் கோபம்தான். ஏன்? உன் மேலயும் கோபம்தான். வாழ வசதியிருந்தும்,கைநிறைய சம்பளம் வாங்கிட்டு இந்த ஏழைகளுக்கு அரசாங்கம் கொடுக்கிற உதவித்தொகைய வாங்க நிற்க்கிற எல்லார் மேலயும் எனக்கு கோபம் தான்….” என்றான் படபடப்புடன்.

“இத பாருங்க,இந்த கொரோனா ஊரடங்கு காரணமாக உதவிய அரசு,குடும்ப அட்டை வச்சிருக்கிற எல்லாருக்கும் பணம் கொடுத்தாலும், நம்மப்போல வேற வருமானம்,வசதி உள்ளவங்க வாங்காம விட்டாத்தான் எந்த வசதியுமே இல்லாத வேலை இல்லாத, வறுமை கோட்டுக்கு கீழே இருக்கிற, ஏழைகளுக்கு இன்னொரு முறை அரசால் இலவசமா பொருட்களை வழங்க முடியும்.பணமும் கொடுக்க முடியும். நம்மப்போல உள்ளவங்களும் வாங்கினா அரசுக்கு பற்றாக்குறை ஏற்படும். அதை சரி செய்ய டாஸ்மாக் திறக்கத்தான் செய்வாங்க. வருமானம் வந்தால் தானே இலவசங்களும்,நலத்திட்டங்களும் செயல்படுத்த முடியும்” என்று நிரஞ்சன் கூறிய போது அனைவரும் கைதட்டி அவனது பேச்சை வரவேற்றனர்.

“வருமான வசதி உள்ளவங்க,விடுமுறை நாட்களிலும் வேலை செய்யாமலேயே அரசு சம்பளம் வாங்கறவங்க,தொழில் செய்து சம்பாறிக்கிறவங்க,வட்டிக்கு பணம் கொடுக்கறவங்க எல்லாரும் வரிசையை விட்டு வாங்க போகலாம்”என நிரஞ்சன் சொன்னதும் பாதி வரிசை காலியானது. உண்மையாகவே ஏழைகளாக வாழும் நிலையில் வரிசையில் நின்றவர்கள் அனைவரும் நிரஞ்சனை பார்த்து கைகூப்பி வணங்கினர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *