இந்த முகம் எந்த முகம்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 29, 2019
பார்வையிட்டோர்: 7,807 
 

அந்த முகம் எந்த முகமென்பது உண்மையிலேயே எனக்கு நினைவில் இல்லை. சில நாட்களுக்கு முன்னர் ஒருநாள் அவர் என்னைக் காண வந்திருந்தார். அப்போது நான் எனது புத்தகக் கடையின் பின் அறையில் சில கடமைகளில் ஈடுபட்டிருந்தேன். மதியம் பன்னிரண்டு மணியிருக்கும்.. கடையிற் பணி புரிபவர் என்னிடம் வந்து அவரது வருகையைப்பற்றிக் கூறினார்.

“யாரோ உங்களைத் தேடி வந்திருக்கிறார்..”

“யாரது..?”

“தெரியாது.. காலையிலும் வந்து தேடியிட்டுப் போனார்..”

நான் எழுந்து வெளியே வரவில்லை.

அவரது வருகை ஏதாவது அலுவல் காரணமாக இருந்தால்.. அவருடன் கதைத்துச் செலவிடப்போகும் நேரம், எனது வேலைகளைத் தடை செய்யக்கூடும் என நினைத்தேன். இது மனதுள்ளே சற்று எரிச்சலையும் தந்தது. இதனால் முன்னே வந்திருப்பவர் யாரென்று எழுந்து பார்க்கவேண்டுமென்ற ஆர்வம் ஏற்படாமலிருந்தது.

“கொஞ்சம் இருக்கச் சொல்லுங்க..!” எனக் கூறிவிட்டு எனது வேலைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டேன்.

சற்று நேரத்தில் பணியாளர் திரும்பவும் வந்தார்.

“அவர் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்..” அதாவது காத்துக்கொண்டிருக்கிறார் எனும் தொனியில்.. பணியாளர் என்மேல் சற்று சினப்பட்டதுபோலுமிருந்தது. அதாவது பணியாளுக்கும் எனது அலட்சியம் பொறுக்கவில்லைப்போலிருந்தது.

எழுந்து வெளியே எட்டிப் பார்த்தேன். கடை வாசலில் அவர் நின்றிருந்தார். தலையில் குல்லா (தொப்பி) அணிந்திருந்தார். வயதானவர். என்னைக் கண்டதும் முகம் மலர்ந்து (அப்படி நினைத்துக் கொண்டேன்) வாய் நிறைய சிரிப்பை வெளிக்காட்டினார்.

ஏற்கனவே நான் வெளியேறி வராமலிருந்தமைக்கு ஓர் உட் காரணமுமிருந்தது. இப்படித்தான் யார் யாராவது அவ்வப்போது வந்து ஏதோ ஏதாவது காரணங்களைக் கூறி ஏதாவது உதவி கேட்பார்கள். ஏதாவது என்ன.. அவர்கள் மேற்கொள்ளப்போகும் ஏதாவது காரியங்களுக்காக அவர்களுக்குப் பணத் தேவை ஏற்பட்டிருக்கும்!

அவரை எங்கோ பார்த்த ஞாபகம் போலிருந்தது. ஆனால் நினைவுக்கு வரவில்லை. பதிலுக்கு நானும் சிரித்தேன்.

எனினும் உடனே அவருக்கு அண்மையாகப் போகவில்லை. அவர் யாரென்று ஊகித்து அறிவதற்கு சற்று கால அவகாசம் தேவைப்பட்டது.

“நில்லுங்க வாறன்..” எனக் கைச் சைகையில் காட்டிவிட்டு சில அலுவல்களில் ஈடுபட்டேன். அப்படி அலுவல்கள் செய்வதுபோல பாசாங்கு செய்தேன் என்பதுதான் உண்மை! வந்தவர் யாராக இருக்குமென நினைவுகளை மீட்டுப் பார்க்கத் தொடங்கினேன்.

அவரை முன்னர் எங்காவது எப்போதாவது கண்டிருக்கிறேனா… அல்லது அது எனது மனப் பிரமையா என்று தோன்றியது. அவரைப்போல இன்னொருவரைக் கண்டிருக்கலாம். குல்லா அணிந்த, வயதான, மழிக்கப்படாத முகத் தோற்றத்துடன் அன்றாடம் பலரைக் காண்கிறேன். முன்பின் அறிமுகமில்லாத ஒருவராயிருந்தால் எதற்காக வந்திருப்பாரோ..?

அவரது யாசிக்கும் கண்கள், அவர் ஏதோ தேவை கருதி வந்திருப்பார் என்றுதான் கூறின. சற்று நேரத்தைக் கடத்தினேன். ‘கடைக்’கண்ணால் கடை வாசலில் நிற்பவரை நோட்டம் விட்டவாறே கடையிற் பணி புரிபவர்களுக்கு “இதைச் செய்..!” “அதைச் செய்..!” எனக் கட்டளைகள் இட்டுக்கொண்டிருந்தேன். அதாவது நான் படு பிஸியாக இருக்கிறேனாம் என அவருக்குக் காட்டும் முயற்சி! அவர் என்னையே ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

அவர் எனது தந்தையாரின் கூட்டாளியாக இருப்பாரோ என்ற சந்தேகம் தோன்றியது. எனது தந்தை அண்மையிற்தான் காலமானார். யுத்த நிலைமைகள் காரணமாக இலங்கையின் வட கிழக்கிலிருந்து மக்கள் திக்குத் திக்காக இடம் பெயர்ந்து பல வருடங்கள் ஆச்சு. தங்களது நெஞ்சுக்கு நெருக்கமானவர்கள்… நண்பர்கள்.. உறவினர்களது மரணச் செய்திகள்கூட காலம் கடந்துதான் அவர்களைச் சென்றடைகிறது. எனது தந்தையார் இறந்த பிறகு பல நாட்களான பின்னரும், துக்கம் விசாரிக்க என ஒருசிலர் வந்து போயிருக்கிறார்கள். இவரும் அப்படிப்பட்ட ஒருவராயிருக்குமோ.?

புத்தளம் கற்பிட்டி வீதியில், நுரைச்சோலைக்கு அண்மையாக உள்ள இடம்பெயர்ந்தோர் முகாமொன்றில் எனது தந்தையாரின் நண்பர் ஒருவர் அவரது குடும்பத்துடன் இருக்கிறார். ‘மரைக்காயர்’ என்றுதான் தந்தையார் அவரைக் குறிப்பிட்டுக் கூறியிருந்தார். மரிக்கார் எனும் பெயர் அப்படி மருவியிருக்கலாம். முன்னர் ஒரு தடைவை அவரை முகாமிற் சென்று பார்த்திருக்கிறேன். அப்போது யாழ்ப்பாணத்திலிருந்து எனது தந்தை மரைக்காயர் தங்கியிருந்த முகாம் பற்றிய விபரங்களை அனுப்பியிருந்தார். தனது தள்ளாத வயதிலும் அந்த விபரங்களை எப்படித் தேடிக் கண்டுபிடித்திருப்பார் என வியப்பாயிருந்தது.

“அவனை ஒருக்கால் போய்ப் பார்த்து, கையில கொஞ்சக் காசு குடு..! பாவம்.. கஷ்டப்பட்டுப்போனான்..” என எழுதியிருந்தார். அவரது கண்ணீர்த் துளிகள் கடிதத்தில் விழுந்திருந்தன. அப்போது மரைக்காயரைப் போய்ப் பார்த்துக் காசு கொடுத்துவிட்டு வந்தது நினைவில் வந்தது. மரைக்காயர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவரென்பதும், கருவாட்டு வியாபாரம் செய்து நல்ல நிலைமையில் இருந்தவரென்பதும் அப்போது அவருடனான சம்பாஷனையிலிருந்து தெரிந்திருந்தேன். எனினும் ஒரே ஒரு தடைவை மட்டும் அவரைப் பார்த்திருந்ததால் அவரது முகம் சரியாக ஞாபகத்தில் இல்லை.

இவர் அவராக இருக்குமோ?

அவரது சாயல் போலத்தான் தெரிகிறது.. சரியாக நினைவிற்குக் கொண்டுவர முடியவில்லை.

“என்ன கடுமையான வேலையா..?” அவரும் பொறுமையிழக்கும் கட்டத்துக்கு வந்துவிட்டார்போலிருந்தது.

இதற்கு மேலும் நேரத்தைக் கடத்துவது சரியல்ல எனும் எண்ணம் ஏற்பட, அவருக்குக் கிட்டப் போனேன். அவருக்குப் பக்கத்திற் போய் நின்றேன். அவரது முகத்தைப் பார்த்தேன். வியர்வைத் துளிகள் அவரது முகமெங்கும் விரவியிருந்தது. வியர்வையில் சேர்ட் நனைந்திருந்தது. சேர்ட் பட்டன்களை முக்காலும் முழுவதுமாகத் திறந்துவிட்டிருந்தார்.

“நான் காத்தாலையே வந்திட்டன்.. இங்க வந்து பாத்தால் நீங்க இல்ல..! பொறகு ஒங்கட வீட்டுப் பக்கம் போனன்.. புள்ளக உள்ளுக்க வெளையாடிக்கொண்டிருந்தாங்க.. கூப்பிட்டுக் கேட்டன்.. அப்பா இல்ல எண்டாங்க..!”

அவரது முகத்தைப் பல கோணங்களில் விடுத்து விடுத்துப் பார்த்தேன்.

இந்த முகம் எந்த முகம்?

“சரியான வெயில் கொழுத்துது.. நோம்பு வேற.. புழுக்கம் ஒரு பக்கம் மனுசனைக் கொல்லுது.. காத்தால வந்த நேரம் தொட்டு ஒங்கட வீட்டுக்கும் கடைக்குமாக ரெண்டு மூண்டு தடவ நடந்து திரிஞ்சன்.. களைச்சுப்போனன்..”

அவர் தானாகவே உள் வந்து கதிரையில் அமர்ந்து கொண்டார். சற்று விலகி அவருக்கு இடம் கொடுத்து, பின்னர் அவர் பக்கத்தில் வந்தேன்.

அவர் சோர்ந்துபோயிருந்தார். எனக்குக் கவலையாயிருந்தது. எனது தந்தையை ஒத்த வயசானவர்.. என்ன கஷ்டமோ? ஒருவேளை எனது தந்தையாரின் அந்தக் கூட்டாளிதானோ என்ற சந்தேகமும் இன்னுமிருந்தது. நோன்புப் பெருநாளுக்கு இன்னும் சில தினங்கள்தானிருந்தன. ஏதாவது பண உதவி கேட்க வந்திருப்பாரோ என்னவோ..! அல்லது வேறு எதற்காக இவர் என்னைத் தேடி வந்து அலையவேண்டும்?

“எனக்கு ஓரிடத்திலயிருந்து வரவேண்டிய காசு கொஞ்சம் கிடைச்சுது.. இருபத்தையாயிரம் ரூபா.. அதில ஐயாயிரத்தை எடுத்துக்கொண்டு மிச்சத்தைக் கொண்டு வந்தன்..”

“காசு கொண்டு வந்தீங்களா..! ஏன்?”

“உங்களுக்குத் தரவேண்டிய காச… தராமல் விட்டுரலாமா..”

இவர் ஆள் மாறி, கடை மாறி வந்துவிட்டாரோ என்று தோன்றியது.

“என்ன யோசன..? நாந்தான் சுருட்டு சாவல்.. மறந்திட்டீங்களா..?”

அந்தக் கணத்தில் ‘பளிச்’சென அவர் நினைவுக்கு வந்தார்.

அவரது பெயர் சாகுல் ஹமீது. சுருட்டுடனும் புகையுடனும் அடிக்கடி தோன்றுவதால் சுருட்டு சாவல் என்ற பெயரிற்தான் அறியப்பட்டிருந்தார். சுமார் ஏழெட்டு வருடங்களின் முன்னர் தொழிலொன்றின் தேவைக்காக ஓர் இடம் குத்தகைக்கு எடுப்பதற்காகத் தேடினேன். ஒரு புரோகர் மூலம் அவரது இடம் பேசப்பட்டது. அறுபத்தையாயிரம் ரூபா முற் பணமும் கொடுத்தேன். அதற்கு எழுத்து மூலமான ரசீதோ, கடிதமோ எதுவுமே பெற்றுக்கொள்ளவில்லை. இரண்டொரு நாட்களிலேயே அந்த இடம் சம்பந்தமாக சிக்கல் தோன்றியது. அந்த இடத்தை இன்னொரு பகுதி சொந்தம் கொண்டாடிக்கொண்டு வந்தது. அது பற்றி அவரிடம் விசாரித்ததில்… மற்றப் பகுதியினருக்குத் தொழில் செய்வதற்காக பத்து வருடங்களளவில் அவர்களுக்குக் குத்தகைக்குக் கொடுத்திருந்தாராம். பின்னர் அவர்கள் விட்டு விலக மறுக்கிறார்களென்றும் அதனால் கோர்ட்டில் முறைப்பாடு செய்து வழக்கு நடப்பதாகவும் கூறினார். இதை ஏற்கனவே எனக்குக் கூறியிருக்காமல் ஏன் ‘சுத்துமாத்து’ செய்தார் எனக் கேட்டால்.. இடம் எப்படியும் தனது கைக்கு வந்துவிடும் எனக் கூறினார். இந்த இழுபறி நிலை காரணமாக நான் விலகிக் கொண்டேன். ஆனால் கொடுத்த பணத்தைத் திரும்பப் பெறுவது கஷ்டமாயிருந்தது.

அவர் பல பிள்ளைகளைக் கொண்ட குடும்பஸ்த்தர். கஷ்ட நிலையிலிருந்தார். நான் கொடுத்த பணமும் ஏதோ கடனை அடைக்கப் பயன்பட்டதாம். கேட்டுப் பலனில்லை. விட்டுவிட்டேன். நான் இருக்குமிடத்திலிருந்து அவ்வளவு தூரம் அவரது வீடு தேடிப் போனாலும் பலனிராது என்பதால் போகாமலே விட்டுவிட்டேன். அவரது தொடர்பும் இல்லாமற்போயிருந்தது. இவர் அவர்தானா என்று நம்பமுடியாமலிருந்தது.

அவரது தோற்றத்தையே சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். ஏழெட்டு வருடங்களில் இப்படி மட்டுக்கட்ட முடியாத அளவிற்கு முதுமை வந்து அடித்துப் போட்டுவிட்டுப் போய்விடுமா என்று தோன்றியது. அல்லது கஷ்ட நிலைமைதான் இந்தமாதிரி அவரது கோலத்தை உருக்குலைத்திருக்குமோ?

கடைசியாக அப்போது அவரிடம் கூறிவிட்டு வந்தது நினைவில் வந்தது.. “காசுக்காக இங்க தேடி வரமாட்டன்.. வரவும் விருப்பமில்ல.. திருப்பித் தரவேணுமென்று உண்மையான எண்ணமிருந்தால் கொண்டுவந்து தாங்கோ..”

இப்போது அவர் வந்திருக்கிறார்!

மடியிலிருந்த பணத்தை மிகப் பக்குவமாக எடுத்து, நடுங்கும் கைகளால் ஒவ்வொரு தாள்களாக எண்ணிப் பார்த்து என்னிடம் தந்தார்.

“எண்ணிப் பாருங்க..!”

“மிச்சக் காசையும்.. வசதிப்படேய்க்க கொண்டுவந்து தருவன்.. கொற நெனைக்கவேணாம்.. என்ன செய்யிற..? முழுசாத் தாறதுக்கு விருப்பம்தான்.. கஷ்டமாயிருக்கு..!”

இப்போது அவரது முகத்தைப் பார்க்கச் சங்கடமாயிருந்தது.. வியப்பாயுமிருந்தது.. எண்ணித்தான் பார்க்கிறேன்!

இந்த முகம் எந்த முகம்?

– மல்லிகை – ஜனவரி 2004

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *