கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 22, 2022
பார்வையிட்டோர்: 1,859 
 

(1986 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வீதிவலம் சுற்றி வந்த சுவாமி கோயில் வாசலில் தரித்து நின்றது. பக்திசிரத்தையோடு பஞ்சாராத்தியைக் காட்டிய குருக்களின் கண்களில் துளிர்த்து விட்ட நீர் அந்த மாலைப்பொழுதில் முத்தாக மிளிர்ந்தது.

‘அம்மனுக்கு அரோஹரா!’

சிதறு தேங்காய்கள் நொருங்க, கிராமப்பிரதட்சணத்துக்காக அம்பாள் ஊர்வலம் புறப்பட்டு விட்டாள்.

ஊர்வலத்தின் முன்னணியில், தீவட்டி, மேளம், நாயனக்காரருக்கு முன்னால், தர்மகர்த்தா ஏகாம்பரம்பிள்ளை, நெற்றியில் பொட்டுங் குறியுமாக நிமிர்ந்து போய்க்கொண்டிருந்தார். அவரின் வலக்கை விரல்கள், நரை தட்டிவிட்ட அகன்ற மீசையை அடிக்கடி வருடி விட்டுக்கொண்டன. பெருமிதம் பிறந்து விடும் வேளைகளில் அப்படிச் செய்வது அவரின் பழக்க தோஷம்.

தெரு நிறைந்த சனக்கூட்டம், வீடுகள்தோறும் பூரணகும்பங்கள் நீண்ட காலத்துக்குப் பின், ஊருலா வரகின்ற அம்மனைத் தரிசித்து அருள்பெறும் ஆவலில் அந்த ஊர் காத்துக் கிடந்தது.

சனம் விலகி வழிவிட, ஊர்வலம் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. சுவாமிக்கு முன்னால் ஜெகந்நாதக் குருக்கள் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தார். இடுப்பில் பஞ்சகச்சம் வைத்துக் கட்டிய வேஷ்டி, அதன் மீது சாயம் போன மஞ்சள் பட்டு சிறிது பருத்த மாநிற உடம்பு, மேற்புறம் மழித்த அகன்ற நெற்றி, அதில் துலாம்பரமாக மின்னும் வெண்ணீ ற்றுக் குறிகள், நடுவிலே சந்தன குங்கும திலகம், கண்களில் சாந்தம், கழுத்திலே கௌரிசங்கம், மார்பிலே திரளான பூனூல், கையில் கற்பூரத் தட்டு பார்ப்பவர்கள் தங்களையறியாமலே கைகளை உயர்த்திக் குவிக்க வைக்கின்ற அந்தணப் பொலிவு.

அர்ச்சனைத் தட்டுகள்! அர்ச்சனைத் தட்டுகள்…அர்ச்சனைத் தட்டுகள்!

அவற்றின் மீது பச்சை மஞ்சள் நீல நிற நோட்டுகள் சில்லறைகள் இப்போதுதான் மீசை அரும்பத் தொடங்கியுள்ள ஏகாம்பரம்பிள்ளையின் ஏக புதல்வன் இடுப்புச் சால்வையை வரிந்து கட்டிக்கொண்டு, கழுத்தில் துவழும் சங்கிலியை அடிக்கடி ஒதுக்கியபடி, தட்டுகளிலுள்ள காசைப் பத்திரமாக எடுத்து, இடுப்புப் பையில் இலாவகமாகச் சொருகிக்கொண்டபின், தேங்காய்களை உடைத்து, அர்ச்சனைத் தட்டுகளைச் சுறுசுறுப்பாகச் குருக்களிடம் நீட்டிக்கொண்டேயிருந்தான்.

அட்சர சுத்தமாக அம்பாளின் திருநாமங்களை உச்சரித்து, ஜெகநாதக்குருக்கள் தீபாராதனை நடத்தியபடியிருந்தார்.

படலைக்குப்படலை சுவாமி தரித்து நின்று பக்தர்களின் காணிக்கைகளை ஏற்று ஆறுதலாக ஊர்வலம் ஊர்ந்து கொண்டிருந்தது.

‘கலீர்…கலீர்…கலீர்’ ஏகாம்பரம்பிள்ளையால் ஏற்பாடு செய்யப்பெற்றிருந்த உண்டியல் குலுக்குவோர் ஊர்வலத்துக்கு முன்னால் வெகுதூரம் சென்றுவிட்டனர்.

ஊருக்குள் உள்ள ஒரே அம்மன் கோயிலின் திருப்பணி நிதிக்காக உலா புறப்பட்டிருக்கின்ற அம்பாளுக்கு அள்ளிக் கொடுக்க அந்த மக்கள் முன்னின்றனர்.

இருட்டுகின்ற பொழுதில், ஊர்வலம் இன்னும் அரைக்கட்டை தூரத்தைக்கூட தாண்டவில்லை. அதற்கிடையில் உண்டியற் குடங்கள் ஆறும் நிறைந்து விட்டன! ஏகப்புதல்வனின் இடுப்பும் கனத்தது.

இலுப்பையடிச் சந்தியில் வைத்து, வலதுபக்க ஒழுங்கையால் சுவாமி திரும்புகிறவேளை, ஊர்வலத்துக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த ட்றக்ராரில் ஏகாம்பரம் ஏறிக்கொண்டு விட்டார். அவருக்குக் கால்கள் வலியெடுத்துவிட்டன. பெட்டியில் சாய்ந்து நீட்டி உட்கார்ந்து கொண்டார், உண்டியற் குடங்களும் ட்றக்ரரில் ஏறிக்கொண்டன. மகனும் ட்றக்ரருக்கு வந்து மடிக்கனத்தை இறக்கிவிட்டுச் சென்றான்.

‘க…லீ…வீ…ர்’… புதிதாகக் குலுக்கலுக்கு விட்ட வெற்றுக் குடங்கள் பெருஞ்சத்தம் எழுப்பின.

நாயனக்காரர் தமக்குத் தெரிந்த நவீன சினிமாப்பாடல்களின் மெட்டுகளை இசைத்துக் கொண்டிருந்தார். ஊர்வலம் தரித்துத் தரித்து, ஊர்ந்து கொண்டிருந்தது.

கிராமத்தின் தென்மேற்கு எல்லையிலுள்ள பெரியதம்பிரான் கோயிலை அடைவதற்கு முன்னரே நேரம் நள்ளிரவையும் தாண்டி விட்டது. நாதஸ்வரத்தின் கீச்சுக்குரல் தவிலின் சுருதியற்ற ஒலி, ஊர் நாய்களின் ஊளை ஆலாபனை இவற்றிடையேயும் புதிய புதிய உண்டியற் குடங்கள் பல மூன்று நான்கு தடவைகளுக்கு மேல் வெளியே வந்து பெருங்குரலில் ஒலித்து ஓய்ந்து விட்டன. பையனும் அப்பாவைப் பார்க்கப் பலதடவை ட்றக்ரருக்குப் போய் வந்து விட்டான்.

பெரியதம்பிரான் கோயில் முன் மண்டபத்தில் அம்பாளை இறக்கி வைத்து, இரு சுவாமிகளுக்கும் தீபாராதனை முடிந்தபின் சிரமபரிகாரம் எடுத்துக் கொள்வதற்காக எல்லோரும் புறப்பட்டு விட்டனர். குருக்கள், மேளம், இரண்டொரு எடுபிடி ஆட்களைத் தவிர எல்லோரும் சென்று விட்டார்கள்.

மகனை இருக்கச் செய்து விட்டு, ட்றக்ரரிலிருந்து இறங்கிக் கொண்ட ஏகாம்பரம்பிள்ளை, நிதானமில்லாத நடையோடு நேராகக் குருக்களிடம் வந்தவர் சாஷ்டாங்கமாக அவரின் காலடியில் வீழ்ந்து விட்டார்.

‘அம்மாளாச்சிக்கு அடுத்த படியாய், குருக்கள் தான் என்ரை தெய்வம்….. குருக்களாலை எங்கடை சனங்கள் அம்மளாச்சிக்கு அள்ளிக் குடுத்தினம்… வாற நாளுக்கே திருப்பணியை ஆரம்பிக்கவேணும்… ஓம் சொல்லிப் போட்டன் எங்கடை குருக்கள் என்ரை கண் கண்ட தெய்வம்’ ஏகாம்பரத்தாரின் கால்கள் எழுந்து நிற்கமுடியாமல் தள்ளாடின.

குருக்களுக்கு குடலைக் குமட்டிக் கொண்டு வந்தது.

எல்லாம் காலையிலே பேசலாம்…… இப்ப போய் ஒய்வெடுத்துக் கொள்ளுங்கோ’ ஏகாம்பரத்தாருக்குக் ‘கலை’ ஏறுகிற வேளைகளில் பேச்சைத் துண்டித்து அனுப்புவது குருக்களின் வழக்கம்.

ட்ரக்ரர் உறுமிக் கொண்டு புறப்பட்டுச் சென்று விட்டது.

பெரிய தம்பிரான் கோயில் மண்டபத்தில் தங்கிவிட்டவர்கள் குறட்டைவிட்டு நல்ல தூக்கம், ஜெகந்நாதக் குருக்களுக்கு மட்டும் நித்திரை வரவேயில்லை. கால் உழைவு கண்ட போதிலும், மனம் உறங்காமல் ஆறுதலாக அசை போட்டு அசை போட்டு…..

முப்பது ஆண்டுகளுக்கு முன், அரைக்காசும் வாங்காமல் அத்தை பெண் காமாட்சியின் கழுத்தில் மஞ்சள் கயிற்றால் மூன்று முடிச்சைப் போட்டு முடித்தவுடன், சொந்தக் காலில் நிற்க வேண்டுமென்ற எண்ணத்தில், அவளையும் கூட்டிக் கொண்டு சொந்த ஊர் விட்டு இந்த ஊருக்கு வந்து, அந்த அம்மன் கோயிலில் அர்ச்சகராக ஜெகந்நாதசர்மா மணியைத் தூக்கியவர். அப்போது அந்தக் கோயில் அடக்கமானதாக அழகாகத்தானிருந்தது. இரண்டு வேளைப் பூசை; சம்பளம் என்று எதுவுமில்லை.

கோயில் பரம்பரைத் தர்மகர்த்தா சபாபதிப்பிள்ளை கோயிற்பக்கம் தலைகாட்டுவதேயில்லை. கோயிலுக்கென இருந்த நில புலங்களையெல்லாம் விற்று, ஆசைநாயகிக்கு வீடு கட்டிக் கொண்டதால், ஊரில் செல்லாக்காசாகி விட்டவர். அம்மனாச்சு ஐயராச்சு என எல்லாப் பொறுப்பையும் அர்ச்சகர் தலையில் சுமத்தி விட்டு, அயலூர் ஆசை நாயகி வீட்டில் அவர் அடை கிடந்தார்.

ஊருக்குப் புதிதாக வந்த ஜெகந்நாத சர்மா, தமது சாதுரியத்தாலும், நல்நடத்தையாலும், நயமான பேச்சாலும், நாணயத்தாலும் அம்மன் கோயிலில் எதுவித குறைவுக்கும் இடம் வைக்காமல் கோயில் நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டார். இளைஞர் எனினும் சர்மாவிடமிருந்த ஒழுக்கம், படிப்பு ஞானம், பத்திசிரத்தையுடன் கோயிற் கிரியைகளை நடத்தும் பாங்கு, காலக்கிரமம் தவறாமல் பூசையை நடத்தும் ஒழுங்கு, இனிய சுபாவம் எல்லோரையும் கவர்ந்து நல்லபிமானத்தை ஏற்படுத்தி விட்டன.

ஒரு வருஷத்துக்குள் அவருக்கு அம்பிகையும் பிறந்து விட்டாள்.

குழந்தையின் கனிவான குறுகுறுத்த கண்களும், சிரிக்கும் போது குழிவிழும் கன்னங்களும், மொழுமொழுத்த சிவந்த கை கால்களும், பட்டைப் போன்ற மேனியும் அம்பிகையின் எழுந்தருளி விக்கிரத்தை அவர் நினைவுக்குக் கொண்டு வர தன் செல்வக் குழந்தைக்கு அம்பிகை என்றே நாமகரணஞ் செய்து விட்டார்.

குருப் பட்டத்துக்குரிய வேத சாஸ்திர அறிவு, கிரியா ஞானம், ஒழுக்கம் முதலியவை அவரிடம் நிறைந்திருந்ததால், ஒரு சுபநாளில் ஆச்சாரியாபிஷேகம் செய்யப்பட்டு ஜெகந்நாத சர்மா குருக்களுமாகி விட்டார்.

வெள்ளி, செவ்வாய் அம்மன் சந்நிதியில் விசேஷ அபிஷேகங்கள் பூஜைகள், அர்ச்சனைகள், ஊர் திரண்டு வந்து கொண்டிருந்தது.

கோயிலைத் துப்புரவாக்கி, வீதிகளைச் சுத்தஞ் செய்து, ஆலயத்தைச் செப்பஞ் செய்து, வேண்டிய போது சுவர்களுக்கு வெள்ளையடிப்பித்து, அருளுடன் அழகும் பொலியுமிடமாக ஆலயத்தைக் கவனித்து வந்தார் குருக்கள். நித்திய நைமித்தியங்களுக்கு குறையேற்படாமல், சாந்தமும் சாந்நித்தியமும் அங்கு கொழுவிருந்தன.

ஆடிப்பூரத்துக்கு முதல் பத்து நாட்களும் அம்பிகைக்கு அலங்கார உற்சவம்; அதற்கு வேண்டிய உபயகாரர்களைக் கண்டு பிடித்துச் சிறப்பாகச் செய்து முடித்து விடுவார் குருக்கள், அவர் பொறுப்பேற்று ஆறு வருஷங்கள் எல்லாம் ஒழுங்காகத்தான் நடைபெற்றன.

யாழ்ப்பாண ரவுணுக்குப் போன சபாபதிப்பிள்ளை குடி வெறியில் றோட்டைக் கடக்க… லொறி மோதி, அவர் செத்துவிட..

பார் …. பரம்பரைத் தர்மகர்த்தா என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டு, ஆலய பரிபாலனஞ் செய்ய வந்த ஏகாம்பரம் பிள்ளை, சபாபதிப்பிள்ளையின் செத்துப்போன தமையனாரின் மகன். ஊரிலுள்ள கள்ளுக் கொட்டில்களின் முன்னால் முன்பு விழுந்து புரண்டு கிடந்தவர், உரிமைக் கோயிலைப் பராமரிக்க வேண்டுமென்ற

ஞானம் உந்த, ஏகாம்பரம்பிள்ளை திடீரென விழித்து எழுந்து வந்து விட்டார்.

நெடிய தோற்றம், நெஞ்சு மயிர்கூட மறையக் கூடிய கறுவல் உடம்பு, கழுத்தில் தொங்கும் மைனர் சங்கிலி, அகன்ற அடத்தியான மீசை, எல்லாம் அறிந்தது போல எடுத்தெறிந்து பேசும் சுபாவம், இலேசான சாராயவாடை ஏகாம்பரத்தாரின் முதற் சந்திப்பே குருக்களுக்கு அருவருப்பையூட்டியது.

‘குருக்கள், இதுவரை நாளும் குஞ்சியப்பர் உயிரோடை இருந்ததாலை நாங்கள் கோயில் விசயத்தில் தலையிடவில்லை. இனி நான் சிறப்பாக நடத்தப் போறன்… நீங்கள் பூசையை மட்டும் கவனித்தால் போதும், கோயில் நிர்வாகமெல்லாம் இனி நான் பார்த்துக் கொள்ளுவன்’ அர்ச்சனைத் தட்டுகளை ஏந்திய வண்ணம் திரளாகக் குவியும் அடியார்களின் தொகை ஏகாம்பரம் பிள்ளையின் மனதில் சபலத்தை எழுப்ப, அவர் திட்டவட்டமாகச் சொல்லி விட்டார். ‘ஆர் செய்தாலென்ன… அம்பாளின் விஷயம் சிறப்பாக நடக்க வேண்டும் என்றது என் ஆசை – அதைச் செய்வதற்கு முதலாளி முன் வந்திருப்பதையிட்டு எனக்குச் சந்தோசம் தான்’ கோயிலின் வருவாயை எடுத்துக் கோயிலுக்கே செலவழித்து,. அந்தத் திருப்தியில் மனம் குளிர்ந்து வரும் குருக்களுக்கு கொஞ்சமும் சஞ்சலம் ஏற்படவில்லை.

புதிய நடைமுறைகளை அடுத்த வாரமே ஏகாம்பரம் விளம்பரப் பலகையில் பெரிய எழுத்தில் அறிவித்து விட்டார்.

அர்ச்சனைக்கு ரிக்கட்….. அபிஷேகத்துக்கு ரிக்ட் நேர்த்தியை நிறைவேற்ற ரிக்கட்…….

கோயிலில் சகலதும் ரிக்கட் மயமாகி விட்டன. அக்கோயிலின் வருமானம் அனைத்தையும் தமது தனிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஏகாம்பரம் வழி சமைத்துக் கொண்டார்.

சுவாமி நைவேத்தியத்துக்கு மாசம் 15 படி அரிசி விளக்குக்கு 6 போத்தல் எண்ணெய், கர்ப்பூரம், குருக்களுக்குச் சம்பளம் 45 ரூபா.

குருக்களும் சரி, கும்பிடுபவர்களும் சரி, இப்படி ஒரு நடைமுறையை எள்ளத்தனையும் எதிர்பார்க்கவேயில்லை!

ஜெகந்நாதக் குருக்களுக்கு மனம் மிகச் சலித்து விட்டது, மக்களின் அன்பினால் அரவணைக்கப்பட்டு, மனங்குளிர அம்பிகையைக் குறைவெதுவுமின்றி ஆராதித்துக் கொண்டிருந்த அவர், ஒரே நாளில் மாசச் சம்பளம் வாங்கும் கூலியாள் நிலைக்கு மாற்றப்பட்டதை உணர்ந்த போது அவர் மனம் கூனிக் குறுகிச் சலித்து விட்டது.

அந்த ஊரை விட்டு வெளியேறிவிடலாமா என்ற எண்ணம் குருக்களின் மனசில் தலை தூக்கியபோது, புது இடங்களில் எப்படிச் சமாளிப்பது என்ற அவருக்குரிய இயல்பான அச்சமும் தலை தூக்கியது. இத்தனை காலமும் அன்பையும் மதிப்பையும் பொழிந்த ஊர் மக்கள், முக்காலமும் திருமேனி தீண்டி அர்ச்சித்து தாம் ஆராதித்த அம்பாள், இவற்றை விட்டு விட்டுப் போக முடியாமலிருப்பது போல அவர் தவித்தார் –

‘எல்லாம் அம்பிகை விட்ட வழி’ என்ற மனச் சமாதானத்துடன் அவர் பல்லைக் கடித்துக் கொண்டு வாழப் பழகி விட்டார்.

ஊரில் எப்போதாவது தொற்றுநோய் வந்தால், நேர்த்திக்கடன் நிறைவேற்றுபவர்களையும், நூல் கட்ட வருபவர்களையும் தவிர; வழமைபோல வெள்ளி செவ்வாயில் கூட்டமேயில்லை. புதிய நிர்வாகத்தின் கெடுபிடிகளால் பக்தர்கள் தொகையின் வரவு குறைந்து விட்டது. உபயகாரர்கள் ஒதுங்கிக் கொண்டு விட்டதால், ஆடிப் பூரத் திருவிழா பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு விட்டது. பன்னிரண்டு வருடங்களுக்கொருதடவை நடைபெற்றாக வேண்டிய பாலஸ்தாபன கும்பாபிஷேகத்தைக் கூட இத்தடவை புதிய பரிபாலகரால் நடத்த முடியவில்லை .

அஷ்டபந்தனம் அகன்று விட்டதால் ஆட்டங்காணும் மூல மூர்த்தி; கிலமடைந்த கருவறை; சிதைவுற்ற விமானம்; வெடிப்புக்கண்ட சுவர்களினூடாக தலை நீட்டிச் சடைத்த செடிகள்; சலாகைகள் உக்கி ஓடுகள் விழத் துவங்கி விட்ட அர்த்த மண்டபமும் மகாமண்டபமும்; ஆகாசம் தெரியும் வசந்த மண்டபம்; காட்டுத் தடியின் துணையோடு நொண்டியாக நிற்கும் கண்டாமணி….

இருபது வருஷமாக கோயிற் கட்டிடத்தில், பகலிற் கூடச் சுதந்திரமாகப் பறந்து திரியும் வௌவால்களைக் கூட விரட்டியடிக்க வக்கின்றி, வகை தெரியாது, ஏகாம்பரத்தார் ஏகாங்கியாக நின்றார்.

இந்த வருஷம் பிறந்த அன்று, கோடிப் பட்டுடுத்திக் கோயிலுக்கு வந்த ஏகாம்பரத்தாரிடம் குருக்கள் மனந் திறந்து சொல்லி பொட்டார்.

கோயிலுக்கு இப்ப வருமானமே நிண்டுபோச்சு…. இருந்த காணியும் பூமியையும் தேவடியாளுக்குக் குத்துக் குஞ்சியப்பர் பசியாறிப் போட்டுக் கண்ணை மூடியிட்டார். நான் பிள்ளை குட்டிக்காரன். குமரையும் வீட்டுக்கை வைச்சுக் கொண்டு தவிக்கிறன். தனிய நான் என்ன செய்கிறது குருக்கள்…” கையைக் கட்டிக் கொண்டு, கூனிக் குறுகியபடி தன் இயலாமையை ஏகாம்பரத்தார் வெளியிட்டார்.

‘ஊர்ச் சனங்களை கூப்பிட்டு ஒரு திருப்பணிச் சபையை அமைத்து, பொறுப்பை ஒப்படைத்தால் சனங்கள் ஒத்து உழைப்பினம் முதலாளி’ – குருக்கள் சொன்ன நடைமுறை சாத்தியமான யோசனையைக் கேட்டு ஏகாம்பரத்தார் பதறிப் போய் விட்டார்.

திருப்பணிச் சபை வாழையடி வாழையாக வரும் தன் பரம்பரைத் தர்மகர்த்தாப் பதவியை வெட்டி விழுத்தி விடக் கூடிய வாளாகத் தோன்றியது. அச்சம் அவரைத் திடுக்கிட வைத்தது.

‘இல்லைக் குருக்கள். அது வேண்டாம்! மினைக்கெட்ட வேலை. வேறை வழி இருக்கு. வாற வைகாசி விசாகத்துக்கு அம்மனை ஊர்வலமாக ஊரெல்லாம் கொண்டு போவம்…. ஊர்ச் சனங்களுக்கு உங்களிலை நல்ல மதிப்பு….. வீடுவீடாய் நீங்கள் போய்ச் சொன்னால், அம்மாளாச்சிக்கு அள்ளித் தருவினம். கெதியாகத் திருப்பணியைச் செய்யலாம்’ அம்பிகை சந்நிதியைப் பழைய கோலத்துக்கு விரைவாகக் கொண்டுவர வேண்டுமென அல்லும் பகலும் துடித்துக் கொண்டிருந்த குருக்களுக்கு ஏகாம்பரம் சொன்ன அந்த யோசனை சரிபோலவும் பட்டது.

சித்திரை மாசத்து கொளுத்தும் வெய்யில் முழுவதையும் தலையில் ஏற்று, ஒரு தெருவும் விடாமல், குருக்கள் அந்த ஊரெல்லாம் சுற்றிச் சுழன்று வந்துவிட்டார். ஊண் உறக்கமற்ற அலைச்சல். குருக்களின் முயற்சிக்கு தோள் கொடுக்கத் தயாராக அந்த ஊர் நிமிர்ந்து நின்றது!

குருக்களுக்கு இன்னும் நித்திரை வரவில்லை.

உண்டியற் செம்புகளின் ‘கலீர் ! கலீர் !’ ஒலி. ….. அர்ச்சனைத் தட்டுகளில் பச்சை, மஞ்சள், நீல நிற நோட்டுக்கள்…. ‘அம்பிகை! நீ ஒரே நாளில் மகாலட்சுமி ஆகிவிட்டாய்’

குருக்களின் உள்ளம் ஆனந்தத்தால் கசிந்துருகியது.

இடிந்த அம்மன் கோயில் கட்டிடம், புதிய நெடுமாடக் கோபுரமாக உயர்ந்து நிமிர்ந்து கம்பீரமாக நிற்பதான இனிய காட்சியில் இலயித்திருந்த அவரின் சிந்தனையை விடியற் கோழிகளின் கோரஸ்’ கூவல்கூடக் கலைக்க முடியவில்லை!

***

மஞ்சள் வெய்யில் வெளுப்பேறுவதற்கு முன்னரே பெரிய தம்பிரான் கோயிலை விட்டுப் புறப்பட்ட அம்பிகைக்கு பகல் முழுவதும் குதூகல வரவேற்புகள். மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதி. அதில் சாதிக்கொரு வீதி. அதனால் அம்மன் தங்கிச் செல்ல ஆங்காங்கே அலங்காரப் பந்தல்கள், தாக சாந்திக்கான தண்ணீர்ப் பந்தல்கள், அர்ச்சனைகள், காணிக்கைகள், – போட்டி போட்டுக் கொண்டு பகலெல்லாம் அமர்க்களப்படுத்தி விட்டார்கள்! தனது யதாஸ்தானத்துக்கு அம்மன் வந்த சேரும் போது இரவு பத்தாகிவிட்டது. ஏகாம்பரம்பிள்ளையின் ட்றக்ரர் சுவாமிக்குப் பின்னால் நிழல் போலத் தொடர்ந்து ஊர்ந்து வந்தது !

வசந்த மண்டபப் பூசை முடிய, எல்லோரும் விபூதி பிரசாதம் வாங்கிக் கொண்டு புறப்படும் போது ஏகாம்பரம்பிள்ளை மடியிலிருந்து உருவியெடுத்து ஐம்பது ரூபா நோட்டொன்றை வெற்றிலை மீது வைத்து, குருக்களிடம் கொடுத்துக் கும்பிட்டார்.

“மேளகாரனுக்கு 1000, உண்டியல் குலுக்கினவங்களுக்கு 1500; தீவட்டி பிடித்தவனுக்கு 200; ஐயர் தட்சணை 50;” மனப் புத்தகத்தில், அந்தக் கணத்தில், டக்கென்று கணக்கு எழுதிக் கொண்டார் ஏகாம்பரம்.

குரு தட்சணையைப் பெற்றுக் கொண்ட குருக்கள். அதை விரித்துக் கூடப் பார்க்காமல், ஏகாம்பரம்பிள்ளையின் நெற்றியில் விபூதியைத் தரித்து அவரை ஆசீர்வதித்து அந்தப் பணத்தை அப்படியே அவர் கையில் திருப்பிக் கொடுத்தார்.

‘அம்பாள் திருப்பணிக்கு இது என் காணிக்கை’ புன்னகையோடு குருக்களின் வாயிலிருந்து வந்த சொற்கள், ஏகாம்பரத்தாரைக் கூனிக்குறுக வைத்துவிட்டன.

கோயிலைப் பூட்டி கொத்துச் சாவியை எடுத்துக் கொண்டு மாற்றியுடுத்திருந்த நான்குமுழு வேஷ்டியை ஒரு தடவை உதறிக் கட்டிக்கொண்ட குருக்கள், கையில் இரண்டு மூடி தேங்காயும், ஒரு வாழைப்பழச் சீப்புடனும் வீடு நோக்கி நிமிர்ந்து நடந்து கொண்டிருந்தார். அந்தக் கம்பீர நடையில் எடுத்துக் கொண்ட பணியைச் சிறப்பாக நடத்திக் கொடுத்த திருப்தி நிறைந்திருந்தது.

***

ஆனி பிறந்து விட்டது. அமாவாசை வந்து நாலுநாளாகியும் விட்டது. இன்னமும் ஏகாம்பரத்தார் குருக்களிடம் இன்றும் கதைக்கவில்லை. இடையில் இரண்டொரு தடவை கோயிற் பக்கம் எட்டிப் பார்த்தவர். விபூதி பிரசாதத்துக்குக் கூட காத்து நிற்காமல் நழுவிக் கொண்டு விட்டார். இந்தச் சுக்கில பட்சத்து ஒரு சுபநாளில் பாலஸ்தாபனம் செய்து, திருப்பணி வேலையைத் துவங்க வேண்டும் என ஜெகந்நாதக் குருக்களின் மனம் அங்கலாய்த்துக் கொண்டிருந்தது.

அன்று மதிய போசனத்தை முடித்துக் கொண்டு, மடத்தின் வெளித் திண்ணையில் துண்டை விரித்துச் சரிந்து படுத்திருந்தார்; முற்றத்து வேப்பமரத்தின் காற்று இதமாக இருந்தது; குருக்களின் உடலில் சமீப நாட்களாக ஒரு தளர்ச்சி, வெய்யிலைக் கண்டால் கண்கள் இருண்டு வருவது போன்ற உணர்ச்சி, மத்தியானத்தில் அவரையறியாமலேயே ஒரு குட்டித் தூக்கம் வந்து விடுகிறது.

‘குருக்களையா ! குருக்களையா!’ குரலைக் கேட்டுக் திடீரென விழித்த குருக்களின் கண்கள், எதிர் திண்ணையைச் சவுக்கத்தால் உதறித் துடைத்துவிட்டு உட்காரும் ஏகாம்பரம் பிள்ளையைக் கண்டன.

குருக்களுக்கு உற்சாகமாக இருந்தது. வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தார்.

‘உங்களிடம் நானே வரவேணும் என யோசிச்சுக் கொண்டிருந்தேன். அம்பாளே இங்கு உங்களை அனுப்பி விட்டாள். இந்த சுக்கில பக்ஷத்திலே நிறைய சுபநாள் இருக்கு…… பாலஸ்தாபனத்துக்கு முகூர்த்தத்தை வைத்து, திருப்பணியைத் துவங்குவம் முதலாளி’ உடற் தளர்ச்சியையும் மறந்து உற்சாகம் கொண்டு விட்டார் குருக்கள்.’

ஏகாம்பரத்தாரின் வலது கை ஆட்காட்டி விரலை நரைத்த மீசையைத் தடவிவிட்டுக் கொண்டது.

ஒரு நல்ல விசயமாகத்தான் வந்தனான் குருக்களையா. காதோடு காதாய் இருக்கட்டும். என்ரை பெடிச்சிக்கு ஒரு நல்ல சம்மதம் பொருந்தியிருக்கு, திடீரென வந்தது, திறமான சாதகப் பொருத்தம். பெடியன் கனடாவிலை எஞ்சினியர், ஆள் கரவெட்டிப் பக்கம். லீவிலை வந்திருக்கிறாராம்; அடுத்தகிழமை போகவேணுமாம் நாளை இரவுக்குத் தாலி கட்டை வைச்சிருக்கு, உங்களிட்டைச் சொல்லிப் போட்டுப் போக வந்தனான் ஏகாம்பரத்தார் சொன்னவை குருக்களுக்குப் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

”குழந்தை ரெம்பச் சின்னவளாச்சே ! அதுக்கிடையிலை அவசரமாய் கலியாணம் பார்த்துட்டியளே’ சென்ற ஆண்டு அவளின் பூப்பு நீராட்டலுக்குப் போய் புண்ணியா வாசனம் செய்துவிட்டு வந்தது, குருக்களுக்கு நேற்றுப் போல இருந்தது.

சமைந்த குமரை இன்னும் ஏன் வீட்டுக்கை வைச்சிருப்பான், பெடியனுக்கும் அவளைப் பிடிச்சிருக்கு சாதகமும் வெகு பொருத்தம். இந்தப் பாரத்தை இறக்கிவிட்டால், என்ரை அம்மாளாச்சியின்ரை வாசலிலை இருபத்திநாலு மணி நேரமும் கிடந்து திருப்பணி வேலையைக் கவனிக்க எனக்கு வலு வசதியாயிருக்கு மெல்லே’ குருக்களின் ஆச்சரியத்துக்குக் கொக்கி போட்டுத் திருகி மடக்கி விட்டார் ஏகாம்பரம்.

‘நீங்கள் சொல்லுறதும் நியாயம்தான். குழந்தைக்கு ஒரு குறையும் வர அம்பாள் விடமாட்டா. குழந்தை குடியும் குடித்தனமுமாக வாழுவாள். நீங்க போய் கலியாண ஏற்பாடுகளைக் கவனியுங்கோ முதலாளி, நான் நேரத்துக்கு வந்துடுறன்.’

ஏகாம்பரத்தாரை வழி அனுப்பி வைத்துவிட்டு, உள்ளே தண்ணீர் குடிக்கச் சென்றபோது குருக்களின் கண்கள் –

அவரின் பெண் அம்பிகை, அடுப்படி விறாந்ததைச் சுவரில் சாய்ந்தபடி கிழந்த பிடவை யொன்றுக்குத் தையல் ஊசியால் பொருத்துப் போடுவதிலீடுபட்டிருப்பதைக் காணத் தவறவில்லை. ஒட்டிப்போன கன்னங்கள் ஏக்கமும் ஏமாற்றமும் நிறைந்த விழிகள், நெற்றி வகிட்டில் இலேசாக எட்டிப் பார்க்கும் இளநரை. குருக்களின் கண்கள் பனித்து விட்டன.

‘அம்பாள் அவளுக்கும் ஒரு வழிகாட்டுவாள் அவருக்குத் தெரிந்த வழமையான சமாதானத்துடன் திரும்பி வந்து திண்ணையில் சரிந்து கொண்டார்.

கலியாணம் முடிந்து மாப்பிள்ளை பெண்ணைக் கூட்டிக் கொண்டு குடும்பத்தோடு கொழும்புக்குச் சென்ற ஏகாம்பரத்தார் ஊர் திரும்பிவர இரு கிழமைகளாகி விட்டன.

அதற்கிடையில், பெண்களின் குசுகுசுப்பாகத் துவங்கி, ஆண்களின் முணுமுணுப்பாக மாறிய அச்செய்தி, குருக்களின் காதில் விழுந்ததும் அவர் பதறித் துடிதுடித்துப் போனார்.

‘கோயிலுக்கெனச் சேர்ந்த காசைத்தான் ஏகாம்பரத்தார் சீதனமாகக் கொடுத்து மகளுக்கு மாப்பிள்ளை பிடித்தவர் – திரும்பும் திசையெல்லாம், குருக்களின் காதில் ஊர் ஒரே குரலில் ஒலித்தது.

‘அம்பிகையே! இப்படியும் ஒரு ஏமாற்றோ?’ குருக்களின் உள்ளம் விம்மி வெதும்பியது.

‘உந்தக் குடிகாறனை நம்பி ஒருசதமும் குடுத்திருக்க மாட்டம், குருக்களையா முன்னுக்கு நிண்டதாலை திருப்பணிக்கு நம்பிக் குடுத்தம்’ ஊர் மக்களின் குரலில் அம்பிகையின் கைத்திரி-சூலத்தின் கூர்மையிருப்பதை உணர்ந்த குருக்கள் பயந்து விதிர் விதிர்த்துப் போய் விட்டார்.

அம்பாளின் பீடத்தில் தமது தலை ஒங்கி மோதி, உடைத்து இந்த அபசாரத்தைப் போக்க வேண்டும், உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தணிக்க முடியாத வேகம் அவருள்ளத்தைக் குடைந்தது.

ஏகாம்பரத்தாரைக் கேட்டே விடுவது என்ற திடமான முடிவுக்கு அவர் வந்து விட்டார்.

மாலைப் பூசையை முடித்துவிட்டு வெளியில் வர, வாசலில் ஏகாம்பரத்தார் வெள்ளை வேட்டியுடன் விழுந்தெழும்பி, பக்தி சிரத்தையாக அம்மனைக் கும்பிட்ட படி நின்றார்.

அண்டாவில் அபிஷேகத்துக்கென அடியார்களால் பக்தி சிரத்தையுடன் நிறைக்கப்பட்ட பாலில் கள்ளத்தனமாக விழுந்து வயிறு புடைக்கக் குடித்துப் புரண்டு அதில் குளித்தெழுந்து காணும்போது ஏற்படுகிற அசூசையும் ஆத்திரமும் போல அவரைக் கண்டதும் குருக்களுக்குப் பிறந்தது.

குருக்களையா ! வாற வெள்ளிக்கிழமை அம்மனுக்கு ஒரு அபிஷேகம், அதோடு என்ரை மகள், மகன், மருமகன் பேரில் தனித்தனியாக 1008 அர்ச்சனையும் செய்ய வேணும்’ ஏகாம்பரத்தாரின் குரலில் ஒரு தனி மிடுக்கிருந்தது.

ஊர்ச்சனங்கள் சொன்னதின் உண்மையை அவரிடமே கேட்டறிந்து கொள்வதற்கான வார்த்தைகளை நிதானமாகப் பொறுக்கி மனத்தராசில் நிறை போட்ட வண்ணம் குருக்கள் கேட்டார்.

‘மகளுக்கு கலியாணம் முடிஞ்சுது. மகனுக்கு என்ன விஷேசம்?’

‘ஒருத்தருக்கும் தெரியவேண்டாம் குருக்களையா… கொழும்புக்குப் போன இடத்திலை ஒரு ஏஜென்சியைப் பிடிச்சு, அவனைச் சவுதிக்கு அனுப்பிப் போட்டன். வேலையும் கிடைச்சுட்டுதாம், நேற்றுக் கேபிள் அடிச்சிருக்கிறான். இப்போதான் அம்மாளாச்சி கண்ணைத் திறந்திட்டா”. –

குருக்களின் மனக்குண்டத்தில் நீறு பூத்திருந்த அக்கினி சுவாலித்து மூளத் துவங்கி விட்டது.

‘அம்மன் மட்டுமல்ல, ஊரும் கண்ணைத் திறந்தபடிதான் இருக்கு… கோயிற் திருப்பணிக் கெண்டு சேர்ந்த காசையெல்லாம் உங்கடை சொந்தத் தேவைக்குச் செலவழித்து விட்டதாக ஊரே கேட்கிறது. இந்த ஏமாற்று மோசடி பொல்லாத பாவம்’ மனதைக் குடைந்து கொண்டிருந்த தர்ம நியாயத்தை தர்மாவேசத்தோடு குருக்கள் சொன்னர் :

‘ஊர்ச் சனங்கள் புத்தியில்லாத விசருகள், இப்ப ஆனானப்பட்ட பெரிய கோயில்களையே ஆமிக்காறன்கள் குண்டு போட்டு இடிக்கின்றான்கள். இந்த நேரத்திலை என்னெண்டு புதுக்கட்டிடம் கட்டுறது? சும்மா கிடக்கிற காசுதானே எண்டு குமரைக் கரைசேர்த்தன். பெடியனையும் வெளிநாட்டுக்கு உத்தியோகத்துக்கு அனுப்பினன். ஊர்க்காரருக்கும் உமக்கும் அது கண்ணுக்கை குத்துது; இது என்ரை பரம்பரைக் கோயில், அதுக்குச் சேர்ந்த காசை செலவழிக்கிறதும் விடுகிறதும் என்ரை இஷ்டம். என்ரை மகன் உழைத்தனுப்புகிற காசிலை ஆறுதலாக இந்தக் கோயிலைக் கட்டுவன்…. இதைக் கேட்க ஆருக்கும் உரிமையில்லை .’

எரியும் குண்டத்தில் ஏகாம்பரத்தார் போத்தலுடன் சரித்து ஆகுதி யாக்கி விட்ட நெய், சீற்றங் கொண்ட அக்கினியைச் சுவாலித்தெழும் பெருந் தழலாக மாற்றி விட்டது.

‘அடப்பாவி! அம்மன் பெயரைச் சொல்லிச் சேர்ந்த பணம் அவ்வளவையும் கூசாமல் அபகரித்தது பெரிய தெய்வத்துரோகம் | உன் சந்ததி வாழாது. உன்ரை தேவைக்குக் காசு சேகரிக்க ஊர் மக்கள் முன் என்னைப் பலிக் கடாவாகப் பாவித்து, அம்மன் பெயரையும் விற்று விட்டியே’ குணமென்னும் குன்றேறி நின்ற குருக்களின் உடம்பு பதறி நடுங்கியது. கோயிற் கட்டிடமே அதிர்ந்து சரிவது போல இருந்தது. நிற்கமுடியாமல் குருக்கள் உட்கார்ந்து விட்டார்.

‘பேய் ஐயர்… பினாத்தாதையும்… பிழைப்புக்காக வந்த பிராமணிக்குத்தான் பெரிய முனிவர் எண்ட நினைப்பு ஏமாற்று, துரோகம், சாபம்…. இதையெல்லாம் கேட்க உமக்கு உரிமையில்லை. இப்பவே திறப்பைத் தந்து விட்டு ஊரைவிட்டே நீர் ஓடினாலும் சரி, புது ஐயரைக் கொண்டு வந்து வைக்க எனக்கு வழி தெரியும்’ ஏகாம்பரத்தார் பத்திரகாளியாகிச் சன்னதம் கொண்டு விட்டார் !

ஜெகந்நாதக் குருக்கள் திக்கித்துப் போய்விட்டார்!

இடி இடித்து, அந்தக் கட்டடம் தகர்ந்து பொல பொலவென அவர் தலையில் உதிர்ந்து….. அச்சிதைபாடுகளில் அவர் சிக்கிப் புதையுண்டு, மூச்சுவிட முடியாமல்….

‘அம்பிகே!’ குருக்களின் நெஞ்சுக் கூட்டுக்குள்ளிருந்து அந்தக் கேவல் வெளிவர முடியாமல் துடித்தது.

அம்பாளின் கர்ப்பக்கிரக விளக்குத்திரி ஊடுபத்திக் கருகிக் கொண்டிருந்தது.

– மல்லிகை இதழ் 200 – 1986, மல்லிகைச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூன் 2002, மல்லிகை பந்தல் வெளியீடு, கொழும்பு.

– சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *