கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 25, 2023
பார்வையிட்டோர்: 1,869 
 

(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சாயங்கால வேளைகளில் தினம் தவறாமல் நல்ல ஜலம் எடுப்பதற்காக இடுப்பில் குடத்துடன் அந்தப் பெண் எங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள கிணற்றுக்கு வருவாள். ஊரில் பல சௌகர்யங்கள் இருந்தும் ஜல சௌகர்யம் குறைவாகவே இருந்தது. பெரும்பாலான கிணறுகளில் ஜலம் நன்றாகவே இருக்காது. எல்லோரும் அந்தக் கிணற்றுக்குத்தான் குடி தண்ணீருக்காகப் போயாக வேண்டும். அவள் ஊருக்குப் புதிதாக இருந்தாள். ஆனால் நெடுநாள் பழகி நடுவில் பிரிந்து போய்விட்ட உறவினர் யாருடைய முகத்தையோ அது எனக்கு நினைவூட்டியது. அவளோடு நான் பேசாவிட்டாலும், ஏதோ ஒருவித அன்பு அவளிடம் எனக்கு ஏற்பட்டிருந்தது.

‘கல்கல்’ என்று அவள் கால்களில் சதங்கை கட்டிய கொலுசுகள் ஒலிக்க வருவதைப் பார்ப்பதற்காகத் தினம் தெருவில் போய் நிற்பேன். இந்தக் காலத்துப் பெண்களில் அநேகர் கொலுசுகள் அணிவதில்லை. அது. நாகரிகமில்லை. இருந்தாலும் எனக்கு என்னவோ அவை அழகாகத்தான் இருந்தன. கொடி போன்ற தேகமும், அழகிய உருண்டை முகமும், அதில் குவிந்து மருட்சியைக் காட்டும் நீண்ட விழிகளும், அமர்ந்த நடையும் எல்லாமாகச் சேர்ந்து அவள் அழகியாக இருந்தாள். இயற்கை அவளுக்கு வைத்திருந்த ஒரே குறை தலையில் கூந்தலைக் குறைவாக அளித்திருந்தது தான். ஆனால் அதையும் அவள் சாதுர்யமாக வளைத்துக் கட்டி, அழகு படுத்தி இருந்தாள்.

கிணற்றங்கரையிலும், ஆற்றங்கரையிலும் தான், கிராமாந்திரப் பெண்கள் கூடுவது வழக்கம். வீட்டு வேலைகள் கணவன்-மனைவி சண்டை, மாமியார் படுத்துவது, ஊரைப் பற்றி அக்கப்போர் எல்லாவற்றையும் கொட்டி அளப்பார்கள். அவ்விதமே, கோடி வீட்டு ராதை என்னிடம் கேட்டாள்.

“ஏன் மாமி, அந்தப்பெண் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று.

“தெரியாதே அம்மா! யாராவது ஊருக்குப் புதிதாகக் குடி வந்திருப்பார்கள்’ என்றேன்.

“ஆமாம், குடிதான் வந்திருக்கிறார்கள். ஆனால், வீட்டில் அவளைத்தவிர வேறு யாரையும் காணோமே?” என்றாள்.

“நீ கவனித்திருக்க மாட்டாய். காலையில் வீட்டுக்கார் ஆபீஸுக்குப் போய் விட்டிருப்பார். சிறுசுகள் போலிருக்கிறது. புதிதாகக் கலியாணமாகித் தனிக்குடித்தனம் ஆரம்பித்திருக்கலாம்” என்றேன்.

“அது என்னவோ மாமி. வீட்டில் அவளோடு யாருமே இல்லையென்று தான் பின்கட்டில் அவள் வீட்டில் இருக்கும் மாமி சொன்னாள். காலையில் சமைத்துச் சாப்பிட்டு விட்டு “டிரஸ்’ செய்து கொண்டு எங்கோ போகிறாள். சாயந்திரம் வருகிறாள். மறுபடி மாலை ஏழு மணிக்கு ‘டிரஸ்’ செய்து கொண்டு எங்கோ போகிறாள். இரவு நேரம் கழித்து வருகிறாள். நாள் தவறாமல் யார் யாரோ வந்து பேசிவிட்டுப் போகிறார்கள். சிறு பெண். இப்படியெல்லாம் இருக்கலாமா?” என்றாள் ராதை.

எனக்கும் கொஞ்சம் யோசனையாகத்தான் இருந்தது. அதற்கேற்றார்ப்போல் என் கணவரும் முதல் நாள் தான் என்னைக் கேட்டார். “ஊருக்கு யார் யாரோ புதிதாக வந்திருக்கிறார்கள். ரொம்ப ரொம்ப நாகரிகமானவர்கள், அழகானவர்கள் எல்லாம் வந்திருக்கிறார்களே நீ -பார்த்தாயா ?”

“நான் பார்த்தேனோ இல்லையோ. நீங்கள் கவனித்தீர்கள் இல்லையா?” என்று சற்றுக் கடுமையாகக் கேட்டேன் அவரை. பிறகு எனக்கே நான் கேட்டது தவறு தோன்றியது. நாம் தினம் தவறாமல் அவள் ஜலம் எடுக்க வரும் போது ஓடிப்போய்த் தெருவில் நின்று யார்க்கிறோமே, அதைப்போல் இவரும் ரயிலில் பார்த்திருப்பார். அவள் தான் வேளை தவறாமல் ஊர் சுற்றுகிறாளே என்று நினைத்துக் கொண்டேன். பாவம்! தாயார் தகப்பனார் யாருமில்லை போல் இருக்கிறது. எங்கோ வாத்தியார் வேலையோ, நர்ஸ் வேலையோ ஏதாவது இருக்கும். ஆனால் யார் யாரோ வந்து எதற்காக இவளைப் பார்க்கிறார்கள்?

ராதையுடன் கிணற்றங்கரையில் பேசி விட்டு, வீட்டுக்கு வந்தவுடன் என் கணவர் வாயிற்படியில் நின்றிருந்தார்.

“உன்னைப் போலப் பெண் தானே அவளும். அவளையே பார்த்துக்கொண்டு வாயைப் பிளந்துகொண்டு நிற்கிறாயே” என்றார் அவர்.

“இருங்கள். அவள் போட்டுக் கொண்டிருந்த ரவிக்கை ரொம்ப நன்றாக இருந் தது. பார்த்துக்கொண்டிருந்தேன். நீங்கள் மட்டும் பார்ப்பது நன்றாக இருக்கிறதா?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தேன்.

“ஒரு புது விஷயம் சொல்லப் போகிறேன் உனக்கு. அவள் · சினிமாவில் நடிப்பவளாம். புருஷனை தள்ளி வைத்துவிட்டு வந்துவிட்டாளாம்” என்றார்.

“கிணற்றங்கரை வம்பை விட ஆபீஸ் வம்பு அபாரமாக இருக்கிறதே” என்றேன் நான்.

***

அஞ்சுகம் – அது தான் அவன் பெயர் – நாள் தவறாமல் ஜலம் எடுத்துக் கொண்டு போவாள். அவளுடன் பேச வேண்டுமென்று எனக்கு ஆசையாக இருந்தது. ஏனெனில், அவளுடன் கிணற்றங்கரையில் கூடும் பெண்கள் யாருமே பேசவில்லை. அவள் வந்தவுடன் எல்லோரும் ஏதோ அசுத்தத்தைக் கண்ட மாதிரி விலகிப்போய் நிற்பார்கள். ஒருத்தி முகத்தை ஒருத்தி பார்த்துக் கொள்வாள். புன்சிரிப்பு சிரித்துக் கொள்வார்கள். அவள் அங்கிருந்து போகிற வரைக்கும் நயன பாஷையிலேயே பேசிக்கொள்வார்கள். அவள் போனவுடன் “பார்த்தாயா, அவளும் அவள் புடவையும்!” என்று ஒருத்தி ஆரம்பிப்பாள்.

“இந்தப் பஞ்சகாலத்தில் எங்க வீட்டுக்காரருக்கும் தான் சம்பளம் இருநூறு வருகிறது. பளிச்சென்று ஒரு சில்க் புடவை வாங்கிக்கொள்ள முடிகிறதா? பத்து தேதிக்குள் பணப்பை காலி ஆகி விடுகிறதே. இவளுக்கு மட்டும் வேளைக்கு ஒரு புடவை, வேளைக்கு ஒரு அலங்காரம் என்று செய்து கொள்ளப் பணம்?” என்று அம்புஜம் ராதையைக் கேட்பாள்.

“போடி! மானங் கெட்ட பிழைப்பு பிழைக்கிறவளுக்கு இதெல்லாம் கிடைக்காமல் என்ன? என்ன வேண்டியிருக்கோ?”

ராதை தலை பின்னிக்கொண்டு நான் பார்த்ததில்லை. பகவான் நல்ல சௌந்தர்யத்தை அவளுக்குக் கொடுத்திருந்தும், அவளுக்கு அதைக்கவனிக்கவே அவகாசமில்லை. வீட்டில் இரண்டு குழந்தைகள், கணவன். வேறு யாரும் இல்லை இருந்த. போதிலும், அவளுக்கு அலங்காரம் செய்து கொள்ளக்கூட அவகாசம் இல்லை என்று என்னிடம் சொல்லிக்கொள்வாள். வீட்டுக்காரர் ஆசையுடன் வாங்கி வந்த பூவைப் பாத்திரத்துக்குள் போட்டு மூடி வாடி வதங்க வைக்கும் சுபாவமுடையவள். “ஐயையோ ! நேற்று ராத்திரி பூ வாங்கி வந்தார். காலையில் வைத்துக் கொள்ளலாம் என்று வைத்திருந்தேன். வேலைத் தொந்திரவில் மறந்துவிட்டது” என்று சொல்லிப் பூவை எடுத்து என் எதிரில் தூர எறிவாள். கணவனின் அன்பை அறிந்து நடந்து கொள்ளப் பாவம், அவளுக்குத் தெரியாது. அஞ்சுகத்தின் அலங்காரத்தை அவள் வெறுத்த தில் ஆச்சரியமில்லை.

2

அஞ்சுகம் வழக்கம் போல் ஜலமெடுக்க வந்தாள். அன்று கிணற்றங்கரையில் பெண்கள் கூட்டம் அதிகமில்லை. அஞ்சுகம் ஜலத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினாள். தயங்கித் தயங்கி நான் நிற்பதைக் கவனித்து கொண்டுக் போக ஆரம்பித்தாள்.

“வாயேன் அம்மா!” என்று நானும் தயங்கிக்கொண்டே கூப்பிட்டேன்.

அவளும் நானுமாகச் சென்று உள்ளே ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டோம்.

“இந்த ஊருக்கு வந்த நாளாய் என்னுடன் யாருமே பேசவில்லை அம்மா!” என்றாள் என்னிடம். அவள் குரலில் வருத்தம் தொனித்தது.

“அப்படியா? பேசாமல் என்ன? பேசுவார்கள். எல்லாம் நாளடைவில் சகஜமாகப் பழகுவார்கள்” என்று அவள் மனம் ஆறுதலடையும் வண்ணம் சொல்லி வைத்தேன்.

ராதையும் அம்புஜமும் அவளைப் பற்றி அடுக்கும் சொற்களைப் பாவம், அவளிடம் வர்ணிப்பானேன்? இவ்வளவு வெறுப்பு ஏற்படும்படி அஞ்சுகத்தினிடம் என்ன தான் கெட்ட குணம் இருக்கப் போகிறது? அவள் வரலாற்றையும் தான் கேட்டு வைப்போமே என்றும் தோன்றியது. இருந்தாலும் என்ன நினைத்துக் கொள்வாளோ என்று பேசாமல் இருந்து விட்டேன்.

“நான் போய் வருகிறேன் அம்மா. பொழுது போகாவிட்டால் உங்கள் வீட்டிற்கு வருகிறேன். நீங்களும் எல்லோரையும் போல என்னை ஒதுக்கி வைத்து விடாதீர்கள்!” என்று கூறிவிட்டு அவள் புறப்பட்டுச் சென்றாள்.

அஞ்சுகம் எங்கள் வீட்டிற்கு வந்து விட்டுப் போனது ஊரில் எல்லோருக்கும் தெரிந்து விட்டது!

“உனக்கென்னடியம்மா குறைவு! நல்ல ஆளாகப் பார்த்துத்தான் சிநேகம் பிடித்திருக்கிறாய்” என்று அம்புஜம் பரிகாசம் செய்தாள்.

“இனிமேல் உன் பெண்ணுக்கு அவளைக் கொண்டே நாட்டியம் சொல்லிக் கொடுப்பாய்!” என்றும் கூறினாள்.

“அப்படித்தான் இருக் கட்டுமே’ என்று நானும் விட்டுக் கொடுக்காமல் அவளிடம் கூறினேன்.

அஞ்சுகம் அநேகமாக ஒவ்வொரு மாலையும் வருவாள். சிறிது நேரம் என்னிடம் பேசிக்கொண்டிருந்து விட்டுப் போவாள். அவள் வாங்கிக்கொண்ட புடவைகள், நகைகள் எல்லாவற்றையும் கொண்டு வந்து காண்பிப்பாள். பெண் கிரிஜாவுக்கு ரிப்பன்கள் வாங்கி வருவாள். இதையெல்லாம் அவளுக்கு எப்படிக் கிடைக்கின்றன? யார் வாங்கிக் கொடுக்கிறார்கள்? ஒரு தினமாவது அவள் ஏன் தன் கணவனைப் பற்றியோ, கூடப் பிறந்தவர்களைப் பற்றியோ, நம்மி டம் பேசவில்லை என்றெல்லாம் சந்தேகங்கள் என் மனதில் எழுவதுண்டு. ஆனால் சந்தோஷமாக வாழ்க்கை நடத் துகிறாள் என்று மட்டும் எனக்குத் தெரிந்தது. மற்ற விஷயங்களை நாம் கிளறிக் கேட்பானேன் என்று பேசாமல் இருந்து விட்டேன். வழக்கம்போல் அவள் அன்று வந்ததும் என்னுடன் கலகலவென்று பேசவில்லை.

“என்ன அஞ்சுகம்! பேசாமல் யோசனை செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டேன் நான்.

அவள் மளமளவென்று கண்ணீர்ப் பெருக்கினாள். எனக்கும் வருத்தமாக இருந்தது. அவளாகவே சிறிது நேரம் கழித்து “இந்த ஊர் எனக்குப் பிடிக்கவில்லை” என்றாள்.

“ஏன்?” என்றேன் நான்.

“என்னைக் கண்டால் உங்கள் ஊர்க்காரர்களுக்கு இளப்பமாக இருக்கிறது!” என்றாள்.

“என்ன நடந்தது சொல்லேன்” என்று அவளை வற்புறுத்திக் கேட்டேன். அவள் கண்களிலிருந்து நீர் பெருகியதேயொழிய பதில் ஒன்றும் வரவில்லை.

என் மனம் அவளுக்காக வருந்தியது. “சமூகம் முன்னேற வேண்டும் என்று தான் எல்லோரும் ஆசைப்படுகிறோம். இளம்பெண் ஒருத்தி துணை இல்லாமல் அவள் பிழைப்புக்கு ஏதோ தொழில் செய்துகொண்டிருந்தால் அதை ஏன் தவறுதலாக நாம் நினைக்க வேண்டும்? அவள் நடிகையாகத்தான் இருக்கட்டுமே. அவளுக்கும் விருப்பு, வெறுப்பு உண்டல்லவா? அவள் மட்டும் சமூகத்தில் மானமாக வாழ உரிமையில்லையா?” என்று எண்ண்மிட்டேன்.

நானும் அஞ்சுகமும் ஒருவரோடொருவர் பேசாமல் வெகுநேரம் உட்கார்ந்திருந்தோம்.

3

அவள் என்னிடம் தன் குறையைச் சொல்லி அழுத பிறகு ஒருவாரம் வரைக்கும் அவளை நான் பார்க்கவில்லை. திடீரென்று ஒரு தினம் மாலை பெட்டி படுக்கையுடன் என் வீட்டுக்குள் நுழைந்தாள்.

“என்ன அஞ்சுகம்! இந்தப் பக்கமே காணோமே?” என்றேன்.

“வாராமல் என்ன அம்மா! வேறு ஒரு ஊரில் இடம் பார்த்தேன். இனி மேல் இந்த ஊரில் நான் இருக்கக் கூடாது அம்மா. உங்கள் ஊர்க்காரர்கள் என்னை அடித்துத் துரத்தினாலும் பரவாயில்லை. ஆனால் …”

அவள் மறுபடியும் தேம்பித் தேம்பி அழுதாள்.

“போகிறது ! நீ ஒன்றும் சொல்ல வேண்டாம். அடிக்கடி வந்துவிட்டுப் போ” என்றேன்.

அதற்குப் பிறகு வாரம் ஒரு முறை இருட்டிய பிறகு வருவாள். எங்கள் ஊரை வெளிச்சத்தில் பார்ப்பதற்கே அவள் பயந்ததாகத் தோன்றியது! கொஞ்சகாலம் அந்த ஊரில் அவள் வாழ்க்கை நிம்மதியாகத் தான் இருந்திருக்கவேண்டும். ஏனெனில் அவள் வந்துபோகும் பொழுதெல்லாம் சந்தோஷமாகத் தான் இருந்தாள். எங்கள் வீட்டுக்கு அவள் வருவதைப் பற்றி ஊரில் பலவிதமாக விவாதம் நடந்தது. பிறகு அதுவும் ஓய்ந்து விட்டது. ஒரே விஷயத்தைப் பற்றிப் பேசிப்பேசி எல்லோரும் களைத்து விட்டார்கள்.

பழையபடி ஒரு தினம் அவள் முகத்தில் வருத்தம் தோன்றியது.

“என் நிழல் என்னை விடமாட்டேன் என்கிறதே அம்மா. அங்கேயும் என்னை விரட்டி அடிக்கிறார்களே” என்றாள் என்னிடம். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. “நல்ல உலகமம்மா இது” என்று நினைத்துக் கொண்டேன். அஞ்சுகத்தை அதற்குப் பிறகு நான் ஆறு ஏழு மாதங்கள் வரை பார்க்கவில்லை. அநேகமாக அவளை நான் மறந்துகூடப் போய் விட்டேன். கிரிஜா மட்டும் அடிக்கடி, “ஏன் அம்மா அந்த மாமி வருவதில்லை இப்போ?” என்று கேட்பாள்.

அஞ்சுகத்தைப் பார்த்து ஏழெட்டு மாதங்கள் கழித்து ஒரு தினம் குழந்தைக்குத் துணி வாங்க சென்னைக்குப் புறப்பட்டேன். அடக்கமே உருவாக அஞ்சுகம் பெண்கள் வண்டியில் மூலையில் உட்கார்ந்திருந்தாள்.

“என்னடீயம்மா, சௌக்கியமாக இருக்கிறாயா?” என்று கேட்டேன்.

“இருக்கிறேன் அம்மா” என்றாள்

அவள். அவளுடைய ஆடை அலங்கார மெல்லாம் எங்கோ போய்விட்டது. சாதாரண மில் புடவை ஒன்றைக் கட்டியிருந்தாள்!

“என்ன இது அஞ்சுகம், இப்படி மாறி விட்டாய்?” என்றேன்.

அவள் லேசாகச் சிரித்துவிட்டு “இப்படி இருந்தால்தான் நான் மானமாக சமூகத்தில் வாழமுடியும் அம்மா. என் வயிற்றுப் பிழைப்புக்காக நான் சினிமாவில் நடித்தால் அதற்காக, என்னை படாதபாடெல்லாம் படுத்தி வைத்திருக்கிறார்களே. நல்ல புடவையும், நகையும் போட்டுக் கொண்டால் அவர்களுக்குக் கண் பொறுக்கவில்லையே. இப்போது நான் இருக்கும் ஊரில் என்னை அங்கே தாழ்வு படுத்தவும் இல்லை. எதற்கு இந்த வீண் அலங்கார மெல்லாம்?” என்றாள் அஞ்சுகம்.

“அதுதான் சரி, அஞ்சுகம்! அஞ்சுகம்! துணை இல்லாத ஸ்திரீக்கு வீண் பகட்டெல்லாம் எதற்கு?” என்றேன் நான்.

அதற்குள் அவள் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்து விடவே, ஒரு புன் சிரிப்புடன் நான் சொல்வதை ஆமோதித்தபடி கீழே இறங்கிச் சென்றாள்.

– அசோகா இதழில் 1948-இல் வந்த கதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *