கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2022
பார்வையிட்டோர்: 1,762 
 

(2003 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மணிக்கூட்டு மணி ஒலி தூள்கிளப்பியது. காலை நான்கு மணிக்கே | * கண்களைக் கசக்கிக் கொண்டு, கைகளைக் குவித்தபடி, இறைவனை நினைத்தபடி பாயில் தியானத்தில் அமர்ந்தார். அம்மா.

நான்கு மணிதானே ஒரு மணித்தியாலம் இன்னும் நன்றாகத் தூங்கலாம் என்று மறுபுறம் புரண்டு படுத்தேன் நான். கௌரி விரதகாலம். நான்கு முப்பது, மணியில் இருந்தே அம்மா உஷாராகி விட்டார். பக்திப் பாடல் கசற்றைப் போட்டுவிட்டார். –

பெரிய பாடசாலையில் ஆசிரியையாய் இருப்பதனால் வேலைகளுக்கிடையே பாட ஆயத்தம் செய்வதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். பம்பரம் போல் அம்மா சுழன்று வந்தா.

சமையல், குளிப்பு, படிப்பு, வணக்கம், குடும்ப அங்கத்தவர்களை, வழிநடத்துதல் இத்தியாதி இத்தியாதி….

எல்லாம் செய்து என்னத்தக் கண்டோம் எனும் எண்ணம் அம்மாவின் முகத்தில் எப்போதாவது வந்ததா என எனக்குத் தெரியாது. ஒரு வேளை எங்களிடம் காட்டிக் கொள்ளக் கூடாத அனுபவத்தை அவர் அடைந்து விட்டாரோ?

எண்ணி, முப்பது நாள் கிடக்கிறது இழவு பிடித்த ஓ.எல் இற்கு. கணிப்பீடு கணிப்பீடு என்று எல்லோரும் கத்துகிறார்கள். ஏ.எல் இற்கு மூன்று சீ போதும் தானே, இதுக்கேன் விழுந்து விழுந்து படிக்க என்று எனக்குள் நான் நினைத்தாலும். அம்மாவுக்காக கொஞ்சமாவது ஐந்து மணிக்கு எழும்பிப் படிக்கத்தானே வேணும்.

விரதகாலம் என்ற படியால் கொஞ்சம் தூசி துப்பரவு கூடத்தான். அம்மாட நச்சரிப்பால ஒவ்வொரு நாளும் சொக்ஸ் கழுவுற வேலை. கொஞ்சம் அலுப்புத்தான.

அம்மா நல்லெண்ணை பூசி, தட்டில் ஊற்றிய ‘தோசையின் மணம் என்னைச் சரியா ஐந்து மணிக்கு எழுப்பிவிட்டது. சட்னியும் சம்பலும் அரைத்து முடிய நானும் வெளிக்கிடச் சரியா இருக்கும் என மனதில் நினைத்துக் கொண்டு பல்துலக்க போனேன்!

அப்பாவின் மோட்டார் சைக்கிளும் திருத்தப் போட்டது எடுக்கல்ல. அம்மா இன்று நடந்து தான் போவா. நடந்து போவது அம்மாவுக்கு விருப்பம். ஆனால் இன்றைக்கு என்று திடீர் மழை வேறு.

பாடசாலைக்கு காலை ஏழு ஐம்பதிற்குப்பிறகு செல்வது அம்மாவுக்குப் விருப்பமில்லை. அன்று சற்று வேகமாக அம்மாவின் செயற்பாடு இருந்தது. வெள்ளிக்கிழமையானபடியால் பூக்கள் சேகரித்துக் கொடுப்பது எனதுபணி.

புத்தகங்கள் ஒரு கையில், பூக்கூடை ஒரு கையில் கொண்டு, அம்மா மிகவும் நிதானமாகச் சாறியினை ஒதுக்கியபடி வீதியில் நடந்தார்.

வீதியெங்கும் நாய்களின் கழிவுகள். என்ன செய்வது கண்களை மூடிக் கொண்டு இறைவனைத் தியானிக்கலாம். ஆனால் கண்றாவிகளைக் கண்களைத்திறந்து கொண்டல்லவா பார்க்கவேண்டும். இந்தக் கிராமத்தவர்களுக்கு ஒருநல்ல நாகரிகம் எப்போதுமே வராதோ என அம்மா நிச்சயம் நினைத்திருப்பார்.

வகுப்பறைச் சுத்தம் மேற்பார்வை செய்வதற்கு அம்மா சென்றபோது மாணவர்கள் மூக்கைப் பொத்திக்கொண்டு நின்றது சந்தேகத்தைக் கொடுத்தது. ரீச்சர் ரீச்சர் புறா செத்து அழுகிய மணம் வருகுது ரீச்சர் என்றார்கள் அவர்கள்.

வெள்ளிகாலை, விரதநேரம், வீதியின் நாய்க்கழிவுகள் இன்னும் மனதை அரிக்கின்றது. இது ‘வேறு செய்தி என அம்மா நினைத்திருக்கவேண்டும் கண்கள் பனித்தன.

அம்மா அறைக்கதவைச் சற்று தள்ளினா. அங்கே மனிதக்கழிவுகளின் கோலம். பாடசாலையில் செயற்பாட்டுப் பாடத்தில் போட்டிக்காகப் போட்ட கோலங்கள் போல ஞாலம் காட்டியது அந்த அறை.

அம்மா வகுப்பறையைக் கழுவிச் சுத்தம் செய்ய ஆயத்தமானார்.

பக்கத்து வகுப்பு மாணவர்கள் இருவர் சற்று அமைதியாக ஆனால் ஆக்ரோசமாக விவாதித்தார்கள். அம்மாவிற்குத் தண்ணீர் போத்தல் கொடுக்கச் சென்ற நான். நித்திய கல்யாணி மரச்செடியின் ஓரத்தில் நின்று காதைத்தீட்டிக் கொண்டேன்.

குளித்து முழுகி கொண்டையிலே பூச்சரமிட்டு தெய்வம் போல வந்த அந்த வகுப்பு ரீச்சரை நீ இப்படித் தண்டித்திருக்கக் கூடாது. என ஒருவன் சொன்னான். நான் ரீச்சரையா தண்டித்தேன் அந்த வகுப்பைத்தான் தண்டித்தேன். என்றான் மற்றவன். அவன் அதோடு மட்டும் நிறுத்தவில்லை. போன வாரம் வெள்ளியன்று பி.பி.சி செய்தி கேட்டாயா? இந்தியாவில் பண்ணையார் ஒருவரை எதிர்த்துக கதைத்ததற்கு கூலியாளுக்கு மனிதக்கழிவை ஊட்டியே விட்டனர் தெரியுமா! உனக்கு .

நமக்கேன் இந்தியாக்கதை நம்மட பள்ளிக் கதையைக் கதைப்பம். என்றான் மற்றவன்.

என்னை அந்தவகுப்புச் சனியன் வஞ்சித்து விட்டாள். உனக்குத் தெரியாதா? அதுமட்டுமல்ல, இவங்க ஒரு புதிய சட்டம் போட்டாங்களாம். தெரியுமா? தங்கட வகுப்பு பெண்களை வேறவகுப்புப் ஆண்கள் நண்பிகளாகக் கொள்ளக்கூடாதாம். கதைக்கக் கூடாதாம். சொக்லட் கொடுக்கக் கூடாதாம். வாழ்த்து அனுப்பக் கூடாதாம்.

இது என்ன வகுப்பு வாதம், அதற்காகத்தான் அந்த வகுப்பை, நான் வஞ்சித்தேன். இப்போது விளங்குகிறதா உனக்கு என்றான் அவன்.

டேய் இவன் என்னடா இவன் இது எல்லாம் நிலையானதா? சும்மா வாடா என்று சொல்லியபடி அவனை இவன் இழுத்துக் கொண்டு திரும்பியவன் என்னைக் கண்டுவிட்டான். என்றாலும் சுதாகரித்துக் கொண்டான்.

அம்மா அதிபரிடம் குறுகிய லீவு கேட்கப்போனா. தன்னுடைய மகனைப்பற்றி பக்கத்து வகுப்பு மாணவர்கள் சிலர் முறைப்பாடு செய்வதை கேட்டு அதிர்ந்து போனா.

அவர் குறுகிய நேர லீவு கேட்கவில்லை மகனுடைய பாடசாலை விடுகை பத்திரத்திற்காக விண்ணப்பம் செய்ய வந்ததாக கூறிக் கொண்டு தலைகுனிந்து வந்தா.

அதிபர் காரியாலய வாசலில் இரு கண்ணீர்த்துகள் விழுந்து சிதறின.. அவைகூட சூரிய வெளிச்சத்தில் அரியங்களாயின.

– மறைமுகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஏப்ரல் 2003, கலாச்சாரப் பேரவை பிரதேச செயலகம், வாழைச்சேனை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *