கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 12,121 
 

ஒரு கையில் சூட்கேசும், மறு கையில் கிஃப்ட் பார்சலுமாக, சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இறங்கினேன். எனது தோழிக்கு நாளை ராசிபுரத்தில் திருமணம். அதற்காகத்தான் போய்க்கொண்டு இருக்கிறேன்.

புதிய பேருந்து நிலையம் செல்லும் டவுன் பஸ் வர, அதில் ஏறிக் கொண்டேன். கூடவே ஏறிய இளைஞன் தெரிந்த முகம்தான்.

சற்று முன், ஒரு கடையில் நான் தலைவலி மாத்திரை வாங்க, மீதி ஐம்பது பைசா சில்லரை இல்லை என்று ஒரு சாக்லெட்டை என் கையில் திணித்தார் கடைக்காரர். அந்த இளைஞனுக்கும் மீதி ஐம்பது பைசா தரவேண்டும்போல… அவனி டமும் அவர் சாக்லெட்டை நீட்ட, தீர்மானமாக அதை மறுத்து ஐம்பது பைசாவே வேண்டும் என்று விடாப் பிடியாகக் கேட்டு வாங்கினான் இவன்.

கண்டக்டரிடம், ‘‘பஸ் ஸ்டாண்ட் ஒண்ணு!’’ என நான் ஐந்து ரூபாயை நீட்ட, நாலரை ரூபாய்க்கான டிக்கெட் டைக் கிழித்துக் கொடுத்துவிட்டு, ‘‘எட்டணா இல்லை மேடம்!’’ என்றார்.

இளைஞனும் ஐந்து ரூபாய் நீட்ட, அவனுக்கும் அதே பதில்!

‘‘இல்லைன்னா எப்படி?’’ என்றான் இளைஞன் வேகமாக.

‘‘தம்பி! இருந்த சில்லறையை எல்லாருக்கும் குடுத்துட்டேன். பாருங்க, எல்லாம் அஞ்சும் பத்துமாதான் இருக்கு’’ என்று தனது பையைத் திறந்து காட்டினார் கண்டக்டர்.

‘‘சரி, ஏர்றவங்க யாராவது சில்லறை கொடுத்தா மறக்காம குடுங்க!’’

‘‘தந்துடறேன் தம்பி! உங்க அம்பது பைசாவை வெச்சுக்கிட்டு நான் மாடி வீடா கட்டப் போறேன்?’’ என்று கடுப்பாகச் சொல்லிவிட்டு நகர்ந்தார் கண்டக்டர்.

இப்போது அந்த இளைஞனைக் கண்டு எனக்கே எரிச்சல் ஏற்பட்டது. பார்ப்பதற்கு மிகவும் நாகரிகமாக இருக்கிறான்… ஐம்பது பைசாவுக்குப் போய் கொஞ்சமும் வெட்கமின்றி இப்படி அற்பத்தனமாய் நடந்து கொள்கிறானே என்று தோன்றியது.

பேருந்து நின்றது. இறங்கினேன். கண்டக்டர் இறங்க, அந்த இளைஞனும் தனது ஐம்பது பைசாவைக் கேட்டு அவருடன் இறங்கினான். அவர் சலிப்பாக, அருகில் உள்ள பெட்டிக் கடைக்குச் சென்று சில்லறை மாற்றி, ‘‘இந்தா உன் அம்பது பைசா!’’ என்று அவனிடம் எரிச்சலுடன் கொடுத்தார். எனக்கும்தான் அவர் மீதி தரவேண்டும். கேட்கலாமா என நினைத்தேன். ஆனால், கூச்சமாக இருந்தது.

ராசிபுரம் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தேன். வண்டி புறப்பட்டது.

‘‘ராசிபுரம் ஒண்ணு’’ என இருபது ரூபாயை எடுத்துக் கண்டக்டரிடம் நீட்டினேன்.

‘‘எட்டணா இருந்தா கொடும்மா… பத்து ரூபாயா தர்றேன்’’ என்றார்.

நான் பர்ஸில் தேடிப் பார்த்தேன். இல்லை.

‘‘இல்லைங்க!’’ என்றேன்.

‘‘இல்லையா… சில்லறை இல்லாம எதுக்கும்மா வண்டியில ஏர்ற? கண்டக்டர் இளிச்சவாயன் இருப்பான். அவன்கிட்ட மாத்திக்கலாம்னா…’’ என்று ஓங்கிய குரலில் அவர் சொல்ல, அனைவரின் கவனமும் என் பக்கம் திரும்பியது. அவமானமாக உணர்ந்தேன்.

‘‘ஸாரிங்க!’’

‘‘என்ன ஸாரி… உனக்கு மீதி ஒன்பது ரூபா ஐம்பது காசு தர நான் எங்க போறது? எட்டணா இருந்தா தா! இல்லேன்னா டிக்கெட்டைத் திருப்பிக் கொடுத்துட்டு, இறங்கி வேற வண்டியில வா!’’ என்று கண்டக்டர் விசிலை ஊத, எனக்கு அழுகையே வரும் போலிருந்தது. குனிந்த தலையுடன் எழுந்திருக்க முற்பட்டபோதுதான்…

‘‘கண்டக்டர்… இந்தாங்க ஐம்பது பைசா. அவங்களுக்கு டிக்கெட் கொடுங்க!’’ என்ற குரல் கேட்டது.

நிமிர்ந்து பார்த்தேன். சாட்சாத் அதே இளைஞன்தான்.

எனக்குச் சுரீரென்றது. தேவைப்படு கிற இடத்தில், ஐம்பது பைசாகூட ஐம்பது லட்சத்துக்குச் சமம்தான்; அது அல்பம் அல்ல என்பது புரிய, அந்த இளைஞனைப் பற்றிக் கேவலமாக எண்ணியதற்கு அவனிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன்.

– ஜனவரி 2006

Print Friendly, PDF & Email

1 thought on “ஐம்பது பைசா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *