வெள்ளையானை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 22, 2022
பார்வையிட்டோர்: 1,871 
 

(1998 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“இது ஒரு முழுப்புரட்சி, மச்சான்” என்றான் வக்கும்பர சிரித்துக் கொண்டு. ஆங்கிலத்தில்தான் அவன் பேசினான்.

“எது?” நல்ல சிவம் கேட்டான்.

“இந்தத் தோணிப்போட்டி தான், இது ஒரு முழுப்புரட்சி.”

நல்ல சிவமும் சிரித்தான். ஆனால் அதேசமயம் அதில் மட்டும் அவனது கவனம் இருந்ததாகத் தெரியவில்லை. ஆற்றின் இடதுகரையில் தண்ணீரற்றுக் காய்ந்து கிடந்த மணல் வெளியோரமாய்க் கல்லின்மேல் காலைத் தூக்கிவைத்த வண்ணம் சவர்க்காரம் போட்டுக் கொண்டிருந்த அந்தச் சிங்களப் பெண்ணின் மீதும் நல்ல சிவத்தின் கவனம் சமமாக இருந்தது. காய்ந்த மணலின் பளிங்கு நிறத்தில் கால்கள்……….

“இந்தத் தோணிப் போட்டிக்குப் பின்னால் ஒரு பெரிய, பொருளாதார, அரசியல், சமூக வரலாறே மறைந்துகிடக்கிறது, மச்சான்” என்றான் வக்கும்பர. முன்பைவிட இந்தமுறை கொஞ்சம் உரக்கச் சிரித்துக்கொண்டு. தன்னுடைய கண்டு பிடிப்பிலும் வியாக்கியானத்திலும் தானே சந்தோஷப்படுவது போலிருந்தது அந்தச் சிரிப்பு. சிரித்துக்கொண்டே அவன் கேட்டான் : இல்லையா, மச்சான்?”

நல்லசிவம் வக்கும்பர பக்கம் திரும்பினான். வக்கும்பர அவனது நெருங்கிய நண்பன். ஓர் ‘முதிர்ந்த’ ட்ரொட்ஸ்கியைட். ஆனால் அதுதான் அவர்களுக்கிடையேயிருந்த ஒற்றுமைக்கு மட்டுமல்ல சர்ச்சைகளுக்குங்கூட காரணமாக விருந்தது. நல்லசிவத்துக்கு அந்தளவுக்கு “முதிர்ச்சி” இல்லை. அத்துடன் அதை அவன் முதிர்ச்சியாகக் காண்பதுமில்லை. அவனைப்பொறுத்தவரையில் அதற்கென்று தனியாக ஓர் பெயர் இருந்தது. “பற்று : ஆனால் அதற்காக அவர்களுக்கிடையேயிருந்த அடிப்படை ஒற்றுமையை அவர்கள் உணராமலில்லை. குறைந்தது கிழமைக்கொருக்காலாவது நல்ல சிவத்தை தேடிவர வக்கும்பர தவறுவதில்லை. கிழமைக்கு ஒருக்காலாவது பாருக்கும் போய்விட்டுவந்து அந்த ஆற்றிலும் அவர்கள் குளிக்கத் தவறுவதில்லை.

நல்லசிவம் வக்கும்பர பக்கம் திரும்பியபோது வக்கும்பரவின் தோற்றம் அவனுக்கு ஓர் நடிகனையே ஞாபகப்படுத்திற்று. கட்டையாக வெட்டப்பட்ட தலைமயிரிலும் சின்ன ஆட்டுத்தாடியிலும் நீர்த்திவலைகள் பனித்துளிகள் போல் மின்னிக் கொண்டிருந்தன. நல்ல சிவத்தைவிட வாட்டசாட்டமான இளம் உடம்பு. அவனைவிட வக்கும்பர அழகாகத்தான் இருந்தான். ஆனால் முற்றாகத் தன்னை அர்ப்பணித்த ஒரு முதிர்ந்த ட்ரொட்ஸ்கியைட்டுக்கு அந்த அழகு கொஞ்சம் கூடித்தான் போய்விட்டது அப்படித்தான் பகிடியாக அவன் அடிக்கடி சொல்லிக்கொள்வான். கட்சிக்கும் அழகுக்கும் சம்பந்தமில்லை என்பது அவனுக்குத் தெரியாமலில்லை. அது பகிடி.

“இல்லையா மச்சான்?” வக்கும்பர திரும்பவும் கேட்டான். “அங்கு பார் அவன் சும்மா உட்கார்ந்திருக்கிறான். ஆள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டான்.”

நல்லசிவம் வக்கும்பர காட்டிய பக்கமாகத் திரும்பினான். இடது கரையிலுள்ள அதே மணல் வெளியில் சிகரட் புகைத்துக்கொண்டு பழைய தோணிக்காரன் உட்கார்ந்திருந்தான். குளிக்க வந்த பெண்கள் குறுக்குக் கட்டுகளுடன் அவனோடு கதைத்துச் சிரித்துக்கொண்டு நின்றார்கள், சிங்களப் பெண்கள். சிரிப்பதற்கும் கதைப்பதற்கும் அவர்களுக்கு யாரும் தடை போட்டிருந்ததாகத் தெரியவில்லை. அவர்களோடு பகிடிக்கதை பேசுவதுதான் தன்னுடைய ஒரே ஒரு தொழிலும் பொழுது போக்கும்போல் பழைய தோணிக்காரன் கவலையற்றுக் கதைத்துச் சிரித்துக்கொண்டிருந்தான். இறுக்கி மடித்துக்கட்டிய சாரத்தோடு முறுக்கு விழுந்த தோள்களும் கால்களும் தெரிய அந்தப் பெண்களின் மத்தியில் ஓர் ஆணழகனாய் அவன் உட்கார்ந்திருந்தவிதம் நிச்சயமாக அவனைத் தோற்கடிக்கப் பட்டவனாகக் காட்டவில்லை.

“அவன்தான் பழைய தோணிக்காரன் ” என்று ஓர் விமர்சகனைப்போல் விளக்கப்படுத்தினான் வக்கும்பர.” ஆற்றைக்கடக்க ஓர் ஆளுக்கு ஐந்து சதமாக ஏகபோக உரிமையோடு உழைத்தவன். இப்போ சும்மா இருக்கிறான்.”

நல்லசிவத்துக்கும் அது ஏற்கனவே தெரிந்த விசயந்தான். தலையை ஒருக்கால் தண்ணீருக்குள் ஆழ்த்திவிட்டு எழுந்த அவன் திரும்பவும் கல்லுப்பக்கம் கண்களைத் திருப்பினான். பழைய கல்லழகி இப்போ அடுத்த காலுக்குச் சவர்க்காரம் பூசிக்கொண்டு நின்றாள். மின்வெட்டும் வேகத்தில் நல்ல சிவத்தைப் பார்த்துவிட்டு அவள் தலையைக் குனித்துக்கொண்டாலும் நல்லசிவம் அதைக் கவனிக்கவே செய்தான். தன்னை அவன் அவதானிக்கிறானா என்று நிச்சயப்படுத்தும் ஓர் கண்ணோட்டம். ஆனால் அதற்காக அவளது நிலை குலையவில்லை. மாறாக அவன் பார்க்கிறான் என்பதற்காகவே தன் நிலையைக் குலைக்காமல் அந்தப் பளிங்குக் கம்பத்திலும் எப்படியோ அழுக்கைக் கண்டுபிடிக்க முயன்றாள்.

நல்லசிவம் தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டான்.

அது என்னவகை ஆசையாகத்தான் இருந்தாலும் அதற்கும் துணிச்சல் வேண்டாமா? ஒருவிதத்தில் நாளாந்த வெளிவேட நடைமுறை வாழ்க்கைக்கு எதிராக அதுவும் ஒரு புரட்சிதானே? ஆனால் வக்கும்பரயின் வர்க்க மனோவியல் பார்வையில் அதற்கு இடமிருந்ததா? இருந்தால் அது எந்த வர்க்கத்தைச் சார்ந்தது?

ஆனால் நல்லசிவத்தால் அந்தவகை விசாரணையில் அதிக நேரம் ஒன்றி நிற்க முடியவில்லை. திடீரென்று கல்லழகிக்குப் பின்னால் சற்றுத் தொலைவில் மணல் வெளியின் முடிவில் ஆற்றின் ஆழமான அடிப்பகுதியில் அதுவரை அவனது அக்கறைக்குள் அகப்படாமல் குளித்துக்கொண்டிருந்த ஓர் கறுத்தயானை பிளிறிக்கொண்டு எழுந்தவிதம் நல்லசிவத்தைத் திடுக்கிட வைத்துவிட்டது.

அவனைப் பொறுத்தவரையில் அதுவோர் எதிர்பாராத காட்சி.

“வக்கே, பார்த்தாயா அதை?” என்றான் நல்லசிவம் அருகில் நின்ற வக்கும்பரையைப் பார்த்து அவசரமாக.

ஆனால் வக்கும்பர பார்க்கவில்லை. அவன் அப்போது தான் தோணிக்காரனைப்பற்றிய வர்ணனையை நிறுத்திவிட்டு தண்ணீருக்குள் தலையை ஆழ்த்தி ஆழ்த்தி முழுகிக்கொண்டிருந்தான்.

அங்குமிங்கும் தலையை ஆட்டிய வண்ணம் யானை நீரை விட்டு வெளியே வரமுயன்றது. ஒருவேளை அதற்கு மதம் பிடித்துவிட்டதோ? நல்லசிவம் திகைத்துப்போய் பார்த்துக் கொண்டு நின்றான். காரணந் தெரியாத ஓர் பயத்தால் அவன் நெஞ்சு படபடவென்று இடித்துக்கொண்டிருந்தது. கல்லழகியின் கால்கள் இப்போ தெரியவில்லை. அவற்றுக்குப் பதிலாக உயர்ந்து எழுந்த யானையின் துதிக்கைதான் பயங்கரமாகத் தெரிந்தது.

“வக்கே!” என்றான் நல்ல சிவம் திரும்பவும் அதே அவசரம் கலந்த தொனி.

ஆனால் வக்கும்புரவுக்கு அது கேட்கவில்லை. அவன் இன்னும் தலையை ஆழ்த்தி ஆழ்த்தி முழுகிக்கொண்டே இருந்தான்.

“மடையன்!”

நல்லசிவம் தன்பாட்டில் திட்டிக்கொண்டான். இந்த நேரத்திலா அவன் தன்னை மறந்து முழுகிக்கொண்டிருக்க வேண்டும்? நல்ல சிவத்துக்கு ஏதாவது ஓர் துணைவேண்டும் போலிருந்தது அப்போது.

ஆனால் நல்ல சிவத்துக்கு தவிப்பு அதிக நேரம் நிற்கவில்லை. அவன் வக்கும்பரையைத் திட்டிக்கொண்டிருந்த அதே வேளையில் அதுவரை எங்கோ போயிருந்த யானைப்பாகன் கத்திக்கொண்டு ஓடிவந்தான். கையில் அங்குசத்தோடு அவன் ஓடிவந்த காட்சி அந்த நேரத்தில் கூட மிக அழகாகத்தான் இருந்தது. ஆனால் அங்குசத்தை அவன் பாவிக்கவில்லை, “மாத்தா!” “மாத்தா!” என்று ஏதோ மந்திரம் கத்துவது போல் அவன் கத்தினான். அதன் சக்திக்குள் முற்றாகக் கட்டுண்டது போல் அடுத்தகணம் யானை அடங்கிவிட்டது. எழுந்த யானை அங்குமிங்கும் அசைந்து விட்டுத் திரும்பவும் நீருக்குள்ளேயே படுக்கத் தொடங்கியது.

நல்லசிவத்தால் அதை நம்பமுடியவில்லை. அவனுக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. அதற்குத்தானா அவன் அவ்வளவுதூரம் பயந்தான்? ஆனால் அதேசமயம் நெஞ்சுக்குள்ளே ஏதோ ஒன்று கெம்பி எழுந்துவிட்டு அடங்கிக் கொண்டிருந்ததை அவன் உணராமலில்லை.

எழுந்து பிளிறிய யானை தலையும் மேல் வயிறும் மட்டுமே தெரியக்கூடியதாக நீருக்குள் அமுங்கிக் கிடந்தது. ஓர் பென்னம் பெரிய கரும் பாறை அதிலிருந்து பார்வையைத் திருப்பிய நல்லசிவத்துக்கு அப்போது தான் அதற்கும் அப்பால், வெகுதொலைவில் அடுத்தகரையில் இன்னோர் யானை குளித்துக் கொண்டு நின்றது தெரியவந்தது. மேகத்தால் மறைக்கப்படாமல் அந்தப்பக்கம் விழுந்த சூரிய ஒளியில் நீரில் நனைந்த அதன் உடல் மினுங்கித் தெரிந்த காட்சி திடீரென்று பார்த்தபோது ஒர் அபூர்வக்காட்சியாகவே தெரிந்தது.

வெள்ளையானை!

திடீரென்று பளிச்சிட்ட அந்த நினைவு நல்லசிவத்துக்கு இனந்தெரியாத பல நினைவுகளைக் கிளறிக்கொண்டு வந்தது ஓர் புல்லரிக்கும் உணர்வு. அவன் பேசாபல் பார்த்துக்கொண்டே நின்றான்.

“என்ன அப்படிப் பார்க்கிறாய்? சைக்கோவா?”

நீரைவிட்டு எழுந்து நின்ற வக்கும்பரதான் கேட்டான்.

திடீரென்று நிலைகுலைந்து போன நல்லசிவம் வேறு வழியின்றிச் சிரித்தான். கல்லழகி இப்போ முதுகைக்காட்டிக்கொண்டு திரும்பி நின்றாள். இன்னொருத்தி அவளுக்கு முதுகு தேய்த்துக்கொண்டு நின்றாள். அதை எப்படிச் சைக்கோ பண்ணுவது?

“இல்லை, அந்த யானையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் நல்லசிவம்.

வக்கும்பரவும் அந்தப்பக்கம் பார்த்தான். ஆனால் அதில் அவனுக்கு அக்கறை விழுந்ததாகத் தெரியவில்லை.

நல்லசிவத்தைக்குத் தான் கண்ட எல்லாவற்றையும் சொல்லவேண்டும் போலிருந்தது. ஆனால் சொல்லவில்லை. சொன்னால் அவற்றில் அக்கறைப்படக்கூடியவன் போல் வக்கும்பர தெரியவில்லை.

“பார், மச்சான், எல்லாரும் இவனுடைய தோணியில்தான் ஏறுகிறார்கள்” என்றான் வக்கும்பா. சிறிது நேரம் அப்படியே பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு யானையைப் பற்றி அவன் அக்கறைப்பட்டது அவ்வளவுந்தான்.

அடுத்தகரையிலிருந்து வந்த புதியதோணி அவர்களைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. நடுவே பலகைகளைப் போட்டு இரண்டு தோணிகளை ஒன்றாகப் பிணைத்த தெப்பம் அது. நான்கைந்து பேர்கள் நடுவே நின்றுகொண்டிருந்தார்கள். கடையால் பக்கமாக புதிய தோணிக்காரன் தாங்கிக் கொண்டு நின்றான். தீக்குச்சி போல் மெலிந்த உடம்பு; கண்கள் குழிவிழுந்திருந்தன. அவர்களைத் தாண்டிப் போகும்போது அவன் தோணியிலிருந்தவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தது தெளிவாகக் கேட்டது.

“அவனுக்கு வேலை கஞ்சா அடித்துக்கொண்டு சதா அதிலிருந்து ஊத்தை போடுவதுதான்”.

அடுத்த கரையிலிருந்த பழைய தோணிக்காரனைப்பற்றித்தான் அவன் அப்படிச் சொல்லிக்கொண்டு போனான். சிங்களத்தில் “ஊத்தை” என்றால் தமிழில் “சுழட்டல்” என்பதைப்போல. வக்கும்பர குறிப்பிட்ட “சைக்கோ”. பழைய தோணிக்காரன் இன்னும் அதே கோலத்தில் வேறு சில புதிய பெண்களுடன் கதைத்துக் கொண்டிருந்தான். தோணிக்காரன் புதிய தோணிக்காரன் அதைப்பார்த்துப் பொறாமைப்படுபவன் போல்தான் நல்லசிவத்துக்குப்பட்டது. ஒரு வேளை தோணிப் போட்டிக்கு அதுவும் ஓர் காரணமோ?

“புரட்சிக்குப்பின் பிரச்சாரம் நடத்துகிறாராக்கும்?” என்றான் நல்லசிவம் கிண்டலாக வக்கும்பரயைப் பார்த்து.

வக்கும்பரக்கு அதிலிருந்த கிண்டல் தெரியவில்லை. நல்ல சிவமும் தன்னுடைய வியாக்கியானத்துக்கேற்பவே கதைக்கிறான் என்ற சந்தோசத்தில் சிரித்துக்கொண்டு அதை இன்னும் அவன் விரித்தான். “ஆமாம், agit – prop”

“கடதாசிப்புலி!” நல்லசிவம் சொல்லிவிட்டு உரக்கச் சிரித்தான்.

வக்கும் பரவும் சிரித்தான். ஆனால் அதிகநேரம் அவனால் அப்படிச் சிரிக்க முடியவில்லை. அப்போதுதான் அதிலிருந்த கிண்டல் அவனுக்கும் தெரிந்திருக்க வேண்டும். திடீரென்று சுண்டிப்போய்விட்ட முகத்துடன் அவன் தன்னை விளக்க முயன்றான்.

“இல்லை மச்சான், பகிடியல்ல. இது ஒரு முழுப் புரட்சி ஏழெட்டு வருடங்களாக அவன் சம்பாதித்தவன். ஒருநாள் இவன் அக்கரைக்கு விறகு கொண்டுபோக முயலும்போது அதை ஏற்றிச்செல்ல அவன் மறுத்துவிட்டான். அவ்வளவுந்தான். அடுத்தநாள் இவன் போட்டியாகத் தானும் ஒரு தோணியைப்போட்டுவிட்டான். அதற்குப்பிறகு எல்லாரும் இவன் பக்கந்தான் காரணந்தெரியுமா? அவன் யூ. என். பீ. ஆதரவாளன், உயர்ந்தசாதி, பணக்காரன். இவன் எஸ். எல். எஸ். பி. ஆதரவாளன், தாழ்ந்த சாதி, சாதாரண வறிய பேர்வழி. அடுத்த கரையிலுள்ளவர்கள் எல்லாரும் இவனைப்போல்தான். அதுதான் காரணம். அதனால் தான் இதை ஓர் முழுப்புரட்சி என்றேன்”

“அது எனக்குத் தெரியாமலில்லை, வக்கே” நல்லசிவம் சிரித்துக்கொண்டு பதிலளித்தான். “எனக்கும் அது தெரியும். ஆனால் நான் சொல்வது வேறு. அவன் மட்டுந்தான் கஞ்சா குடிப்பதில்லை. இவனுந்தான் அபினும் கஞ்சாவும் அடிக்கிறவன். அதோடு அவன் ஊத்தை போடுகிறான் என்று இவனுக்குப் பொறாமைபோல் தெரிகிறது. அவன் தோணி ஒட்டுவதுபோல் இவனும் தோணி ஓட்டுகிறான். அவன் கஞ்சா குடிப்பதுபோல் இவனும் கஞ்சா குடிக்கிறான். ஆனால் அவன் ஊத்தை போடுவது இவனால் முடியவில்லை. அதனால் பொறாமை

“இவன் அபின் எடுக்கிறவன்?”

வக்கும்பர ஆச்சரியத்தோடு கேட்டான். அவனால் அதை நம்பமுடியவில்லை.

“ஓ இவனுந்தான்.” என்றான் நல்லசிவம் அழுத்தமாக. “நான் பார்த்திருக்கிறேன். இல்லாவிட்டால் இந்தளவு நோஞ்சல் பேர்வழியால் நாள் முழுதும் போட்டியாகத் தோணி தாங்க முடியுமா?”

வக்கும்பர அதை ஏற்றுக்கொள்ள விரும்பியதாகத் தெரியவில்லை. நான் அதை நம்பவில்லை, மச்சான்” என்று சொல்லிவிட்டு அவன் மௌனமாகிவிட்டான். புதிய தோணிக்காரனைப்பற்றிக் குறைகூறுவது அவனுக்குப் பிடிக்க வில்லைப் போலப்பட்டது.

நல்லசிவம் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. புதிய தோணிக்காரன் அபின், கஞ்சா, குடிப்பதை அவன் நேரிலேயே பார்த்திருக்கிறான். பிறகென்ன? தொடர்ந்து அதைப்பற்றிக் கதைக்க விரும்பாமல் நல்லசிவம் தண்ணீருக்குள் ஆழ்ந்து விட்டுத் தலைநிமிர்த்தினான். அவன் கவலைப் படுவதற்கு அதை விடச் சுவையான காட்சி வேறு இருந்தது.

கல்லடியில் பழைய கல்லழகியைக் காணவில்லை. வேறு ஒருத்திதான் அழுக்குத் துணியைத் துவைத்துக்கொண்டிருந்தாள். பின்னால் அசைவற்று கல்லுப் பாறைபோல் அமுங்கிப் போய்த் தெரிந்தது பழைய கறுத்த யானை. தூரத்து வெள்ளை யானைமட்டும் முன்பைவிட இன்னும் அழகாய்த் துதிக்கையை மேலே உயர்த்தி நீரை அள்ளித் தெளித்து விளையாடிக்கொண்டிருந்தது. மறைக்கப்படாத சூரிய ஒளியில் அவை வெள்ளித்துளிகளாய் மினுங்கித் தெரிந்தன. வெள்ளை யானை ! நல்ல சிவத்தின் உடல் திரும்பவும் புல்லரித்தது.

“நீ ஒரு பெரிய சைக்கோ, மச்சான்.” என்றான் வக்கே திடீரென்று தன் மௌனத்தைக் குலைத்துக்கொண்டு.

நல்லசிவம் திடுக்கிட்டுப்போய்த் திரும்பினான். நீர்த்திவலைகள் மொட்டுவிட்டிருந்த அரும்புத் தாடியுடன் வக்கும்பர வேண்டுமென்றே அவனை வம்புக்கு இழுப்பவன்போல் சாடினான். “நீ ஒரு சைக்கோ, மச்சான். சைக்கோ மன்னன்!”

நல்லசிவம் சிரித்தான். வக்கும்பரயின் மனநிலை பளிங்காக அவனுக்குத் தெரிவது போலிருந்தது.

“என்ன, உன் தோணிக்காரனைக் குறைகூறிவிட்டேன் என்று உனக்குக் கோபமாக்கும், அப்படித்தானே?”

“இல்லை, இப்போதான் உன்னை எனக்குத் தெரிகிறது. பழைய தோணிக்காரனைப்போல் நீயும் ஒரு சைக்கோ மன்னன். அதுதான் நீயும் அவன் பக்கம்.”

நல்லசிவத்துக்குச் சிரிப்பாக வந்தது. அது ஒரு அர்த்த மற்ற சுலோகம். வக்கும்பரேயைத் திருப்திப்படுத்தவும் அவனது ஆத்திரத்தைத் தீர்ப்பதற்கும் அது உதவாமலில்லை .

“வக்கே, நீங்கள் எதையும் வடிவாகப் பார்ப்பதில்லை என்றான் நல்லசிவம் சிரித்துக்கொண்டு. “அதுதான் உங்களின் குறையும் இயலாமையும்”.

ஆனால் வக்கும்பர விட்டுக்கொடுக்கவில்லை.

“சரி நீ பார்க்கிறதைச் சொல்லுபார்க்கலாம்?” என்று அவன் எதிர்க்கேள்வி போட்டான். “பெண்களைப் பார்த்துக்கொண்டு யானையைப் பார்க்கிறாயாம்! வெறும் பொய்யும் புழுகும்! வேறு என்ன? எங்கே சொல்லு பார்க்கலாம், பார்க்கிறதை?”

“சொல்லிப்பிரயோசனமில்லை” என்றான் நல்லசிவம் சிறிது நேரம் யோசித்துவிட்டு. “சொன்னால் நீங்கள் இப்போ நம்பமாட்டீர்கள். ஆனால் நாங்கள் செய்யப்போகிறோம், நிச்சயமாகச் செய்யப்போகிறோம்”.

“என்னத்தைச் செய்யப்போகிறீர்கள்?”

வக்கே சிரித்துக்கொண்டு கேட்டான்.

“அந்தப் பழைய தோணிக்காரனைப்போல் அப்படியிருந்து சைக்கோவா?”

“அவனை விடு ஒருபக்கம். நான் சொல்வது வேறு. நாம் செய்யப்போகிறோம், நிச்சயமாகச் செய்யப்போகிறோம்” என்று தூரத்தே நின்ற வெள்ளையானையைப் பார்த்தவாறே ஏதோ ஒரு புதுச்சக்தியால் ஆட்கொள்ளப்பட்டவன் போல் நல்லசிவம் கத்தினான்.

வக்கும்பர தொடர்ந்து சிரித்தான். ஆனால் இந்தமுறை அந்தச் சிரிப்பில் அவனுக்கே நம்பிக்கையிருக்கவில்லை. நல்ல சிவத்தின் கண்கள் கக்கிய ஒளியையும் குரல் எழுப்பிய நம்பிக்கைத் தொனியையும் அதுவரை அவன் பார்த்ததேயில்லை.

– சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *