வியாபார வெற்றி ரகசியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 13, 2022
பார்வையிட்டோர்: 3,896 
 

‘கடன் அன்பை முறிக்கும்!’

‘கடன் கேட்காதீர்!’

‘இன்று ரொக்கம் நாளை கடன்!’

இப்படியெல்லாம் போர்டு மாட்டிக்கொண்டு நிறைய மளிகைக் கடைகளும், பல சரக்குக் கடைகளும் இருந்தன அந்தத் தெருவில்.

அதே தெருவில் புதிதாக ஒரு மளிகைக் கடை துவங்கினர் எம் பி ஏ பட்டதாரி அமலன். அந்தக் கடையில் மற்றக் கடைகளில் தொங்கியது போல போர்டு இல்லை. மாறாக

வாடிக்கையாளர் என்பவர் நமது வளாகத்தில்
ஒரு அதி முக்கிய வருகையாளர்,
அவர் நம்மைச் சார்ந்து இல்லை.
நாம்தான் அவரைச் சார்ந்து இருக்கிறோம்.
அவர் நம் பணிக்கு இடையூறு அல்ல;
நமது பணியின் குறிக்கோளே அவர்தான்.
அவர் நமது வணிகத்தின் வெளி ஆள் அல்ல
மாறாக நமது வணிகத்தின் ஒரு பகுதியே அவர்.
நாம் அவருக்குச் சேவை செய்வதன் மூலம்
சலுகை ஏதும் செய்வதில்லை.
அவருக்குச் சேவை செய்ய ஒரு வாய்ப்பு தருவதன் மூலம்
அவர்தான் நமக்குச் சலுகை செய்கிறார்.
-தேசத் தந்தை மகாத்மா காந்தி

என்ற மகாத்மா காந்தியின் வரிகளை அனைவரும் பார்க்கும் வண்ணம் பெரிய அளவில் ‘ஃப்ளக்ஸ் போர்டு’ வைத்திருந்தார்.

தொடக்கத்தில் சுமாராக ஓடிய அமலன் மளிகையில், போகப் போக வியாபாரம் களை கட்டியது. அதுவும் பண்டிகை, நாள் கிழமை என்றால் தேர் கூட்டம், திருவிழாக் கூட்டம்தான்.

மற்ற கடைக்காரர்கள் ‘ஈ’ ஓட்டிக்கொண்டிருக்க அமலன் கடை மட்டும் ‘தேன் ஈ’யைப் போலச் சுறு சுறுப்பாய் இயங்கிக் கொண்டிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!

தங்கள் கஸ்டமர்களும் அவசர அவசரமாக அமலன் கடையின் வாடிக்கயாளராய் இணைவதற்கு என்ன காரணம் என்பதை அறிய முற்பட்டார்கள் மற்ற மளிகை, மற்றும் பல சரக்குக் கடைகளின் உரிமையாளர்கள்.

“அமலன் கடைல கூட்டம் அலைமோதக் காரணம்…அங்கே கடன் தர்றாங்களாம். அதான்…!”

“கடனுக்கு தர்றாருல்ல…கூடிய சீக்கரம் தலைல துண்டு போட்டுக்குவாரு.”

“நம்ம ஜனங்களை நம்பி கடனா கொடுக்கறாரு..? கடனை தள்ளுபடி பண்ணச் சொல்லி ஒரு நாள் போராடுவாங்க பாரு…!”

“கொடுத்ததைக் கேட்டால் அடுத்தது பகை’னு சொல்வாங்க.. அமலன் ஒரு நாள் கடனை திருப்பிக் கேட்கும்போது எல்லாரும் பிச்சிக்கிட்டுப்; போன வேகத்துலயே நம்ம கடைக்குத் திரும்பிடுவாங்க…”

“….”

இப்படி வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற பேச்சு கடை முதலாளிகள் மத்தியில் பரவி வந்ததை உணர்ந்தார் அமலன்.

கடன் தருவதும், பெறுவதும் ஏதோ ஒரு பாவச் செயல் போல் புறம் பேசிக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தைக் கண்டு எள்ளி நகையாடினார் அமலன்.

தன் பட்டறிவின் குறையை ‘எம் பி எ’ படிப்பறிவின் உதவியால் களைய முற்பட்டார். அதற்காக மூளையைக் கசக்கிப் பிழிந்தார். ஒரு முடிவுக்கு வந்தார்.

அமலன் தன் வாடிக்கயாளர்களின் சமூக, பொருளாதார நிலையை ரகசியமாகத் ஆய்ந்து அறிந்தார். பிறகு அவர்களின் பொருளாதாரப் பின்னணிக்கு ஏற்ப கடன் உச்ச வரம்பை நிர்ணயித்தார்.

தனித்தனியாக ஒவ்வொரு வாடிக்கயாளர்களிடமும் “கடனை திருப்பித் தந்தால்தான் நான் சரக்கு இறக்க முடியும். முடிந்த வரை சீக்கிரம் கொடுங்க! மொத்தமாக் கொடுக்க வசதியில்லேன்னா நாலு தவணை ஐந்து தவணைல தாங்க…! இத்தத் தொகைக்கு மேலே கடன் கேட்காதீங்க..!” என்றெல்லாம் அன்பாகவும் பெருந்தன்மை யுடனும் கேட்டுக்கொண்டார்.

அடுத்தவர் பணத்துக்கோ பொருளுக்கோ ஆசைப் படக்கூடாது என்கிற கலாச்சாரத்தில் குழந்தைப் பருவம் முதலே ஊறிய ஏழை மக்களுக்கு அமலனின் இந்தச் சொற்கள் தேனாக இனித்தன.

பொருட்கள் தரமாகவும், வாடிக்கையாளர் சேவை திருப்தியாகவும், தவணை முறையில் திருப்பும் அளவுக்கு கடன் உதவியும் கிடைப்பதால் பல வாடிக்கையாளர்கள் கண்ணியமாக நடந்து கொண்டார்கள்.

‘ஒவ்வொரு வாடிக்கையாளரும் நம் சொத்து’ என்ற மகாத்மா காந்தியின் வாக்கை மிகவும் நேசிக்கும் அமலன் ஒரு சில சுயநலமிக்க தன் வாடிக்கையாளர்களையும் தன் வசம் இழுக்கவேண்டும் என்பதில் மிகவும் விழிப்பாக இருந்தார்.

தன் கடையைத் தாண்டி எந்த வாடிக்கயாளர் போனாலும் அவர்களை தன்னிடம் அழைத்து வர ஒருவரை ரகசியமாக நியமித்திருந்தார் அமலன்.

அமலன் மளிகைக் கடையைத் தாண்டிப் போன மங்கம்மாவை கடை ஆள் ஓடிப்போய் “ முதலாளி வரச்சொன்னாங்க!” என்று அழைத்தான்.

‘எமனுக்கே அஞ்சாத நெஞ்சம், கடன் கொடுத்தவனைக் கண்டால் அஞ்சும்’ என்று சும்மாவா சொன்னார்கள்.

‘அய்யோ ! முதலாளி கண்ல மாட்டிட்டோமே..?’ என்று அஞ்சினாலும், ஒரு மாதிரி சங்கடப் பட்டுக்கொண்டே சென்றாள் மங்கம்மா…”

“மளிகை வாங்கத்தானே போறீங்க..?”

“ம்…!”

கையிலே சுருட்டி வைத்திருத் பணத்தைப் பார்த்து, “கைல பணம் இருக்கு போல; ஏம்மா ! நம்ம கடை மளிகைக் கடனை எப்போ அடைக்கப்போறீங்க?” – அவர் குரலில் அதிகாரமோ ஆணவமோ இல்லை; மாறாக அன்பும் அக்கரையும் இருந்தது.

“அடுத்த வாரம் தந்துடுறேன் அண்ணே!.”

“சந்தோஷம். அடுத்த வாரம் தாங்க. அது வரைக்கும் வேற கடைல காசு கொடுத்து மளிகை வாங்கறதை நம்ம கடைல காசு கொடுத்து வாங்க வேண்டியதுதானே..!?”

அமலன் சொன்னதில் இருந்த நியாயம் உணர்ந்த மங்கம்மா “….” அமைதியாக நின்றாள்..

“கடனுக்கு அமலன் கடை, காசுக்கு அடுத்த கடை’னு இல்லாம கஸ்டமர் கஷ்டத்தை தன் கஷ்டமாக எண்ணி, நம்பிக்கையாக, கடனுக்கு மளிகை தர்ற கடைலதான் காசு கொடுத்தும் வாங்கணும்னு உறுதி எடுத்துக்கோங்க!” – முதலாளியின் குரலில் வருத்தம் தொனித்தது.

அடுத்த கணமே “அம்மாவுக்கு என்ன மளிகை வேணுமோ போடு.” என்று சந்தோஷமாகக் குரல் கொடுத்தார் முதலாளி.

தன் தவறை உணர்ந்தது மங்கம்மா மட்டுமோ, பண்டிகைக்காக மளிகை வாங்க வந்த வாடிக்கையாளர் கூட்டம் மட்டுமல்ல…! மங்கம்மா உட்பட பிற வாடிக்கயாளர்கள் மூலம் செய்தி அறிந்த மற்ற மற்ற வாடிக்கையாளர்களும்தான்.

வெறும் அனுபவத்தோடும் பட்டறிவோடும் மட்டுமின்றி ‘எம் பி ஏ’ என்ற படிப்பறிவையும் இணைத்துச் செய்யும் வியாபாரச் சேவையின் மூலம்; அமலனுக்குக் கிடைக்கும் வியாபார வெற்றியின் ரகசியத்தை அறிய பல வழிகளிலும் முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள் மற்ற வியாபாரிகள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *