வாழப் பிறந்தவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 1,484 
 

(1952 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஏ, குழந்தே” என்று இரைந்தான் இருளப்பன்.

“என்னப்பா?” என்று கேட்டுக் கொண்டே வந்தாள் கேதாரி.

“ரொம்ப நாளா உன்னை ஒண்ணு கேக்கணும் கேக்கணும்னு எனக்கு எண்ணம்…”

“கேளேன்”

“உன்னைப் பத்தி ஊரிலே நாலு பேரு நாலு விதமாப் பேசிக்கிட்டு இருக்காங்களே அதெல்லாம் நெசந்தானா?”

“என்ன பேசிக்கிட்டு இருக்காங்க?”

“ஊரிலே இருக்கிற பயல்களை யெல்லாம் நீ பார்க்கிறயாம், பார்த்துச் சிரிக்கிற யாம், கூடிப் பேசறியாம் – இப்படியெல்லாம் பேசிக்கிட்டு இருக்காங்களேம்மா, இதெல்லாம் நெசமான்னு கேக்கறேன்?”

கேதாரி களுக்கென்று சிரித்தாள்.

“என்னாம்மா! நான் கேக்கறேன்? ஏன் சிரிக்கிறே? பொகையிலை பிரிச்சாப் போச்சு, பொம்பிளை சிரிச்சாப் போச்சுன்னு பெரியவங்க சொல்லுவாங்க. இப்படியெல்லாம் சிரிக்கக் கூடாது, அம்மா இதெல்லாம் நமக்கு அடுக்காது. காலம் இப்படியே போய்க்கிட்டு இருக்கும்னா நீ நினைக்கிறே9….உ.ம்…நமக்கும் நல்ல காலம் வரும். அப்போ நமக்கும் நாலு காசு கிடைக்கும். கடவுளும் கண்ணைத் திறந்து பாப்பாரு…”

“அப்படின்னா, இப்போ கடவுள் கண்ணை மூடிக்கிட்டு இருக்காரா, அப்பா?”

“ஐயோ! அப்படியெல்லாம் கடவுளைக் கேலி செய்யாதே, அம்மா கன்னத்திலே போட்டுக்கோ….கடவுள் கண் திறந்து பார்த்தா நமக்குக் கட்டாயம் நல்ல காலம் வரும். அப்போகண்ணுக்கழகாநான் ஒரு பையனைப் பார்த்து உனக்குக் கண்ணாலம் பண்ணி வைக்கிறேன்…”

“அந்தப் பையனை நான் பார்க்க வேண்டாமா, அப்பா? அவன் என் கண்ணுக்கு அழகாயிருக்க வேண்டாமா, அப்பா?”

“ஐயோ! உன்னை யாரு பார்க்கவேணாம்னு சொன்னா? நல்லாப் பாரு! பார்த்து உன் மனசுக்குப் பிடிச்சா நீ அவனைக் கண்ணாலம் பண்ணிக்கோ அது வரைக்கும் இந்த மாதிரிப் பேச்செல்லாம் என் காதிலே விழாம நீ பார்த்துக் கிட்டா நல்லது. உனக்கு இந்தக் கிழவன் வேணும்னா அப்படிச் செய், இல்லேன்னா உன் இஷ்டம்”

“இன்னொரு தடவை அப்படிச் சொல்லாதே அப்பா என்மனசு மட்டும் சரியாயிருந்தா, யாரு என்னா சொன்னா என்னாப்பா ஆடு மாடு மாதிரி அல்ப ஆசைக்காக நான் உன்னை விட்டுவிடுவேனா, அப்பா?” என்று சொல்லிக் கொண்டு கிழவனைக் கட்டி அணைத்துக் கொண்டாள் கேதாரி.

***

இருளப்பனின் ஏக புத்திரி கேதாரி. இருந்தாலும் அவள் செல்லப் பெண்ணாய் வளர முடியவில்லை. அது மட்டுமா? தாயற்ற அவளால் வயதுவந்த பிறகும்கூடப் படுதாமுறையைக் கைக்கொள்ள முடியவில்லை. எப்படி முடியும் இருளப்பனுடைய உழைப்பின் மதிப்பு மாதம் பதினைந்து ரூபாய்க்கு மேல் ஏறவேயில்லை. என்னதான் சிக்கனத்தைக் கடைப்பிடித்தாலும் இரண்டு ஜீவன்களுக்கு அந்த வருமானம் போதுமா? எனவே, கேதாரியும் அறுவடை காலத்தின்போது வயல் வேலைகளில் கலந்து கொள்வாள். அப்படி வயிற்றுப் பிழைப்புக்குப் போகும்போது வரும் வம்புதான் மேற்சொன்ன ஊராரின் பேச்சு!

அந்த ஊரில் தோட்ட வேலை செய்வதில் இருளப்பன் பேர் போனவன். அவனுடைய வேலைத் திறமையைப் பற்றி மெச்சிப் பேசாதவர்களே அங்கு கிடையாது. ஆனாலும் அந்தத் திறமை அவனை வாழவைக்கவில்லை; வேறொருவனைத் தான் வாழ வைத்தது. காரணம், வறுமைதான். இல்லை யென்றால் அவன் ஏன் தன்னுடைய வேலைத் திறமையை இன்னொருவனிடம் மாதம் பதினைந்து ரூபாய் வாடகைக்கு விட்டிருக்கப் போகிறான்?

அப்படித்தான் வாடகைக்கு விட்டிருந்தானே, அதற்குரிய அந்தஸ்தாவது அவனுக்குக் கிடைத்தா? அதுவும் இல்லை, வெறும் வேலைக்காரனாகவும் கூலிக்காரனாகவும் இருந்ததைவிட அவனுக்கு வேறொரு அந்தஸ்தும் கிடைக்கவில்லை. இதற்குக் காரணம் எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனாலும் அதை இங்கே சொல்லிவிடத்தான் வேண்டும். அதாவது இருளப்பனிடம் பணம் இல்லை. இருந்திருந்தால் அவனிடம் வேலைத் திறமைகூட இருந்திருக்க வேண்டாம். அது இல்லாமலே அவன் எஜமானாக ஆகியிருக்கலாம். அப்படித் தானே இந்தப் பாழாய்ப் போன உலகம் இன்று வரை இயங்கிக் கொண்டிருக்கிறது?

***

எல்லோரையும்விட அந்த ஊரில் முத்தண்ண முதலியார்தான் பெரிய பணக்காரர். அது மட்டுமல்ல. பெரிய பண்ணைக்காரரும் கூட. ஏராளமான நிலபுலன்கள், தோட்டம் துரவுகள் எல்லாம் அவருக்குச் சொந்தமாகயிருந்தன. அவருடைய தென்னந்தோப்பு ஒன்றில்தான் இருளப்பன் வேலை செய்து வந்தான்.

வேனிற் காலத்தில் தோப்புக்கு நீர் பாய்ச்ச நேரும். அந்தக் காலத்தில் ஏற்றம் இறைப்பதற்காகத் தினசரி மூன்று ஆட்களைக் கூலிக்குப் பிடித்துக் கொண்டு வருவான் இருளப்பன். அங்கே கூலிக்கு ஆள் பிடிப்பது அவ்வளவு சிரமமான காரியம் அல்ல. எட்டணாக் காசை வீசி யெறிந்தால் எத்தனையோ ஏழைகள். பட்டாணிக் கடலையைக் கண்ட குரங்குக் கூட்டம் போல் பாய்ந்து வருவார்கள். பாதரட்சை மாதிரி அவர்களை அவசியம் இருக்கும்போது உபயோகித்துக் கொண்டு அவசியமில்லாத போது தள்ளிவிடலாம். அவர்கள் ஏன் எப்பொழுதும் அந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது மிகவும் ஆச்சரியமான விஷயம். ஆசையை அடக்கும் விஷயத்தில் அவர்கள் வேதாந்திகளைக்கூடத் தோற்கடித்து விடுவார்கள். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் குறுக்கும் நெடுக்குமாக எட்டடி இடம் வாழ்வதற்கு – எண்சாண் உடம்புக்கு எட்டடி இடமே போதுமென்பது அவர்கள் சித்தாந்தமோ, என்னமோ அப்புறம் ஒரு பெண்டாட்டி வருஷத்துக்கு ஒரு பிள்ளை வீதம் அவள் பெற்றுப் போட வேண்டியது. உயிர் பிழைப்பது அந்தக் குழந்தைகளின் ஆயுள் காலத்தைப் பொறுத்தது. அவற்றைப் பற்றிப் பெற்றோருக்குக் கவலையில்லை. அவர்களுடைய கவலை யெல்லாம் அன்றைய உணவுக்கு வழி என்னவென்பதே. அதற்கேதான் பொழுது சரியாயிருக்கிறதே!

இத்தனை துன்பத்தோடுதான் வாழ்கிறார்களே, இவர்களுக்குச் செத்துப் போகவாவது ஆசை இருக்கிறதா என்றால் அதுவும் கிடையாது. வேறு எந்த ஆசைக்கும் அவர்களை ஆளாக்காத ஆண்டவன் இந்த ஒர் ஆசைக்காவது அவர்களை ஆளாக்கியிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்? அவர்களுடைய உழைப்பைக் கொண்டு தனி மனிதன் ஏகபோகத்துடன் வாழ முடியாமற் போகலாமல்லவா? மாரிக்காலம் வந்தால் இவர்கள் படும் பாடு திண்டாட்டம். ஆனால் இருளப்பனின் பாடு கொண்டாட்டம். ஏனெனில் அந்தக் காலத்தில் தன்னுடைய தள்ளாத வயதில் மண் வெட்டியை எடுத்துக் கொண்டு மரத்துக்கு மரம் குனிந்து தண்ணிர் மாற்றும் வேலை அவனுக்கு இருக்காது. தோட்டத்தைக் காவல் காப்பது, வேலியை ஆடு மாடு மேயாமல் பார்த்துக் கொள்வது, உதிர்ந்த ஒலைகளை முடைந்து போடுவது இவற்றோடு அவனுடைய தினசரி வேலைகள் முடிந்து விடும். எல்லாவற்றுக்கும் சம்பளம் மாதம் பதினைந்து ரூபாய்தான். எப்பொழுதுதாவது வேலைகளில் மட்டும் மாறுதல் ஏற்பட்டாலும் ஏற்படுமே தவிர, சம்பளத்தில் மட்டும் மாறுதல் என்ற பேச்சுக்கே இடம் இருப்பதில்லை!

இந்த நிலைமையில் கேதாரியின் கல்யாண விஷயமாக இருளப்பன் கடவுளைத்தான் நம்பியிருந்தான். இன்று நேற்று அல்ல; எத்தனையோ நாட்களாக. அந்த நம்பிக்கை இப்போது தளர்ந்து விட்டது. காரணம் ஊராரின் பேச்சுத்தான்.

கடைசியில் கடவுளை நம்பின மாதிரி எஜமானையும் கொஞ்சம் நம்பித்தான் பார்ப்போமே என்று அவனுக்குத் தோன்றிற்று.

ஒருநாள் தோப்பைப் பார்வையிட வந்த எஜமானை நெருங்கினான்.

“சாமி ஒரு சேதிங்க”

“என்னடா சேதி?”

“நம்ம கேதாரி யில்லே…?”

“ஆமாம், இருக்கா”

“அவளுக்கு வயசாயிடுச்சு….”

“ஆமாம்; ஆயிடுச்சு”

“கண்ணாலம் பண்ணனுமில்லே…”

“ஆமாம்; பண்ணனும்”

“ஐயாமாரு மனம் வச்சி ஏதாச்சும் கொஞ்சம் பணம் கொடுத்தா….”

“பணம் என்னத்துக்கு?”

“கண்ணாலம் பண்ணத்தான்”

இதைக் கேட்டதும் எஜமான் என்ன எண்ணினாரோ என்னமோ, அவருக்குச் சிரிப்பு வந்து விட்டது. “கேதாரிக்குக் கல்யாணம் செய்யப் பணம் எதற்குடா?” என்று கேட்டார்.

“என்ன சாமி அப்படிச் சொல்.நீங்க? கண்ணாலம்னா பணம் இல்லாம ஆயிடுங்களா? பாக்கு வெற்றிலை வழங்க வேண்டாமா? பழம் பலகாரம் வாங்க வேண்டாமா? பந்தி போஜனம் போட வேண்டாமா….?”

“நிறுத்துடா, போதும்! இதெல்லாம் ஒன்றும் உனக்கு வேண்டாம். பேசாமல் நான் சொல்வதைக் கேள். கேதாரியின் கல்யாண விஷயத்தைப் பற்றி உனக்குக் கவலையே வேண்டாம்…”

இப்படிச் சொன்னதும் இருளப்பனுக்கு உச்சி குளிர்ந்து விட்டது. “அப்படிச் சொல்லுங்கோ, எசமான் அந்தக் கவலையை நீங்களே ஏத்துக்கிறதுன்னா இந்த ஏழைக்கு என்ன குறையுங்க?” என்று சொல்லிவிட்டு அவன் பல்லை இளித்தான். முதலியார் மேலும் சொன்னார்:”அந்தக் கவலை உனக்கு வேண்டாம்; எனக்கும் வேண்டாம். கேதாரிக்கே இருந்துவிட்டுப் போகட்டும். ஊரிலே இருக்கிற பயல்களை யெல்லாம் காக்காயா வந்து தூக்கிக் கொண்டு போய்விட்டது? அவள் இஷ்டப்பட்ட எவனையாவது ஒருத்தனைத் தேடிப் பிடித்துக் கொள்கிறாள்”

ஏமாற்றமடைந்த இருளப்பனுக்குக் கோபம் கோபமாக வந்தது. ஆனால் தனிப்பட்ட முறையில் ஏழையின் கோபம் அவனுடைய வாழ்வைத்தானே கெடுக்கும்? ஆகவே, ‘தம் மகளாயிருந்தா எசமான் அப்படிச் சொல்லுவாரா?’ என்று தனக்குள் எண்ணிக் கொண்டு, பேசாமலிருந்து விட்டான்.

இனி என்ன? இதுவே அவனுடைய இடைவிடாத வேதனையாகிவிட்டது.

***

இந்த வேலையின் காரணமாக, நாளடைவில் இருளப்பனின் மனம் அடியோடு மாறிவிட்டது. எஜமான் மீது அவன் வைத்திருந்த விசுவாசம் இருந்த இடம் தெரியாமல் பறந்துவிட்டது. அதுவரை இருளப்பனுக்குத் தன்னுடைய சொந்த தோப்பாகவே தோன்றி வந்த அந்தத் தென்னந் தோப்பு, இப்போது யாரோ ஒருவருடையதாகத் தோன்றிற்று. இத்தனை நாளும் தோப்பின் முழுப் பலனையும் எஜமானே அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையுடன் உழைத்து வந்த அவன், இப்போது நாம் ஏன் அப்படி உழைக்க வேண்டும்? என்று எண்ணத் தலைப்பட்டு விட்டான் – எப்படியோ நாளைக் கடத்த வேண்டியது; மாதம் பிறந்தால் சம்பளத்தை வாங்கிக் கொள்ள வேண்டியது…அவ்வளவுதானே?

இந்தத் தீர்மானத்துக்கு வந்த அவன், இன்னொரு தீர்மானத்துக்கும் வந்து விட்டான். அதாவது எந்த விஷயத்துக்கும் பிறரை நம்பக்கூடாது; தன்னைத் தானே நம்ப வேண்டும் என்பதாக!

அவ்வளவுதான், நாளடைவில் அவனுடைய தீர்மானங்கள் நடைமுறைக்கு வர ஆரம்பித்துவிட்டன.

இடைவேளையில் இருளப்பன் தென்னங்கீற்றில் படுத்துச்சற்று இளைப்பாறுவது வழக்கம். அப்பொழுது யாராவது வழிப்போக்கர்கள் வேலியை ஆடோ, மாடோ மேய்வதாக எச்சரித்து விட்டால் உடனே எழுந்து அவற்றை விரட்ட விழுந்தடித்துக் கொண்டு ஒடுவான். அப்பொழுதெல்லாம் தூக்கத்தைவிடக் கடமைதான் அவனுக்குப் பெரிதாய்த் தோன்றும். இப்பொழுது அப்படியில்லை கடமையைவிடத்துக்கம்தான் பெரிதாய்த் தோன்றிற்று.

‘தென்னை மரத்தில் எவனோஏறித் தேங்காயைத் திருடுகிறான்’ என்று யார்தான் எவ்வளவு உச்சஸ்தாயியில் இப்பொழுது கூச்சல் போடட்டுமே! ஊஹூம், இருளப்பன் அதை காதில் போட்டுக் கொள்வதே கிடையாது. என்ன முழுகிப் போச்சு? எவனோ இரண்டு தேங்காயைத் திருடிக்கொண்டு போனால் தான் என்ன? என்று பெருந்தன்மையோடு பேசாமல் இருந்து விடுவான்.

***

ஒரு நாள் வழக்கம் போல் உதிர்ந்த ஒலைகளை முடைந்து கொண்டிருந்த போது இருளப்பனுக்கு ஒரு விசித்திரமான ஞானோதயம் உண்டாயிற்று – அடடா இந்த ஒலைகளை யெல்லாம் முடைந்து நம்முடைய வீட்டில் கொண்டு வந்து சேர்க்கும்படி எஜமான் முதலில் நமக்குக் கட்டளை யிட்டாரா? இல்லையே! நாமேதானே இந்த வேலையைத் தலைமேல் போட்டுக் கொண்டு ஒலை நூற்றுக்கு நாலைந்து ரூபாய் என்று விற்றுக் கொடுத்தோம்? உலர்ந்த மட்டை, பாளை, பன்னாடை இவற்றையெல்லாம் கூடச் சேகரித்து எடுத்துக் கொண்டு போய் அவர் வீட்டு அடுப்பை எரிக்க உதவினோம். அவற்றைக் கொண்டு நம் வீட்டு அடுப்பையாவது எரித்தோமா? அப்படி எரிப்பது துரோகம் என்று கருதினோமே. அதற்கெல்லாம் பலன் இதுதானா? என்னுடைய ஒரே ஒரு பெண்ணை எவனோடாவது ஒடிப்போகச் சொல்வதுதானா? அட கடவுளே!

போனதெல்லாம் போகட்டும். இனிமேல் அப்படியெல்லாம் செய்யக் கூடாது. உலர்ந்த மட்டை மண்ணாங்கட்டியை எல்லாம் எஜமானுக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டு போய் நம் வீட்டு அடுப்பை எரிக்க உபயோகித்துக் கொள்ள வேண்டும் – கட்டை வாங்கும் காசாவது மிச்சமாகாதா? அப்புறம் இந்த உதிர்ந்த ஒலைகளை யெல்லாம் சேர்த்துக் கட்டி சுருட்டி வைத்திருந்து வேலியின் எந்த மூலையிலாவது ஓர் இரகசிய வழியைச் செய்து அந்த வழியண்டை தினசரி பொழுது சாய்ந்ததும் கேதாரியை வந்து ஒலைக் கட்டைத் தூக்கி வைத்து நம் வீட்டுக்குக் கொண்டு போகச் சொல்ல வேண்டும்.

இப்படியாகக் கொஞ்சங் கொஞ்சமாய்க் கொண்டு போய்ச் சேர்த்தால்தான்மாதத்தில் நூறு ஒலையாவது சேர்ந்து விடாதா? சமயம் நேரும்போதெல்லாம் அவற்றை முடைந்து போட்டு வைத்தால் யாராவது வந்து வாங்கிக் கொண்டு போகிறார்கள்

அந்தப் பணத்தைக் கொண்டே அடுத்த தை மாதத்துக்குள் கேதாரிக்குக் கல்யாணம் செய்து வைத்து விடலாம் போலிருக்கிறதே! நல்ல யோசனைதான்; ஆனால் எஜமானுக்குத் தெரிந்தால்?

எப்படித் தெரிந்து விடும் நான்தானே காவற்காரன்? வேலைக்காரன் நினைத்தால் எஜமானை ஏமாற்ற முடியாதா என்ன? பேருக்கு ஒன்றிரண்டு ஒலைகளைக் கொண்டு போய் அவருடைய வீட்டில் சேர்ப்பது “இவ்வளவுதானா?” என்று கேட்டால், “ஆமாம் சாமி!” என்கிறது. அதற்கு மேலும் கேட்டால் சாக்குத்தானா சொல்ல முடியாது? “காற்றடிச்சாத்தானே?” என்கிறது ஒருநாள்; “சாப்பிடப் போயிருந்தேன்; யாரோ எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க!” என்கிறது இன்னொரு நாள். இப்படியே எஜமானை ஏமாற்றி வந்தால் போகிறது!

***

இம்மாதிரி முடிவுக்கு இருளப்பன் வந்த மறு மாதம் மண்ணையும் பொன்னையும் மணியையும் மறந்து, முத்தண்ண முதலியார் மறு உலகத்திற்குப் பிரயாணமாகி விட்டார். அப்பாவின் ஸ்தானத்தை அவருடைய ஏகபுத்திரன் தீனதயாளன் அலங்கரித்தான்.

சுபாவத்தில் பெயருக்கு நேர் விரோதமாயிருப்பது தான் உலக இயல்பு. அந்த இயல்புக்குத் தீனதயாளன் மாறுபட்டிருந்தது ஆச்சரியமான விஷயமே!

இதற்குக் காரணம் அவனுடைய அப்பாவைப் போல் அவன் தன்னைப் பற்றி மட்டும் சிந்திக்காமல் பிறரைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தான்!

பிறந்த வேளை, தலையெழுத்து, கர்ம பலன், விதி என்றெல்லாம் ஏழைகளை ஏய்க்கும் பணக்காரர்களைக் கண்டால் தீனதயாளனுக்குப் பிடிக்காது. எடுத்ததற்கெல்லாம் காரணம் கடவுள் தான் என்று கூறுபவர்களைக் கண்டாலும் அப்படித்தான்!

பணம் படைத்த மகானுபாவர்கள் கடவுளையும் கர்ம பலனையும் கொஞ்சம் மறந்துவிட்டு, தங்கள் சொந்த முயற்சியினாலேயே ஏழை மக்களின் துயரத்தை ஒருவாறு நீக்கலாம் என்பது அவனுடைய திடமான நம்பிக்கை.

இத்தகைய லட்சிய புருஷனின் கண்ணில் தான் ஒரு நாள் கேதாரி பட்டு விட்டாள். அதுவும் எந்த நிலையிலே அவனுடைய தோப்பின் ஒலையைத் திருடிக் கொண்டு போகையிலே!

“ஓஹோ – இப்படி எத்தனை நாளா?”

கேதாரி திடுக்கிட்டு நின்றாள். ஒரு நிமிஷம் அவளுடைய உடம்பு நடுங்கி ஓய்ந்தது. மறு நிமிஷம் ஏதோ எண்ணித் துணிந்தவளாய், தலைமீதிருந்த ஒலைக் கட்டை இறக்கிக் கீழே வைத்தாள். இடுப்பின்மீது ஒரு கையை ஊன்றிக் கொண்டு எஜமானை நோக்கி, உங்க அப்பா என்னை எவனையாச்சும் இழுத்துக்கிட்டுப் போகச் சொல்லி எத்தனை நாளோச்சோ, அத்தனைநாளா!” என்றாள்.

தீனதயாளனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவன் ஒருவாறு சமாளித்துக் கொண்டு “அதற்கு…..” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தான்.

“…நான் இந்த ஒலையை இழுத்துக்கிட்டுப் போறேன்” என்றாள் கேதாரி.

தீனதயாளனுக்கு ஒன்றும் புரியவில்லை. என்றாலும் “இது நியாயமா?’ என்று கேட்டு வைத்தான்.

“நியாயமில்லைதான்! ஆனா ஊரிலே உழைக்கிறவங்களுக்கு ஒரு நியாயமாயும், அவங்க உழைப்பிலே வயிறு வளர்க்கிறவர்களுக்கு இன்னொரு நியாயமாயுமிருக்குதே, அதுக்கு நாங்க என்ன பண்ணுவது? அவங்களைப் போல நாங்களும் கொஞ்சம் வாழனுமில்லே” “அதற்குத்தான் நாங்கள் மாதா மாதம் சம்பளம் கொடுக்கிறோமே?”

“நல்லாச் சொன்னீங்க; சம்பளம் நாங்கள் வாழறதுக்கா….ஹும்…!” என்று சொல்லி, அவள் கடகடவென்று நகைத்தாள்.

அந்தச் சிரிப்பு தீனதயாளனின் உடம்பை என்னவோ செய்தது. அவன் விழித்தான்.

கேதாரி மேலும் சொன்னாள்:

“என்னமோ, உங்களுக்கு உழைக்க எங்களுக்கு உசிரு இருக்க வேணுமில்லே? அதுக்காக சம்பளம் கொடுக்கிறீங்க நாங்க வாழவா சம்பளம் கொடுக்கிறீங்க? அப்படிக் கொடுக்கிறதுன்னா நாங்கள் ஏன் இப்படித் திருடறோம்?”

“திருடி யாராவது மானத்தோடு வாழ முடியுமா?”

“எவனையாச்சும் இழுத்துக்கிட்டுப் போய் யாராச்சும் மானத்தோடு காலந்தள்ள முடியுமா?”

“சரியாப் போச்சு நாளையிலிருந்து அந்தத் தோப்புக்கு வேறு ஆளைத்தான் காவலாகப் போட வேண்டும் போலிருக்கிறதே!”

“வேறே ஆளைக் காவலாப் போட்டா மட்டும் போதுமா, சாமி! அவங்க மேலே உங்களுக்குக் கொஞ்சம் அன்பும் இருக்கட்டும். அப்போது தான் அவங்க உங்களுக்கு நாய் மாதிரி உழைச்சிக்கிட்டு இருப்பாங்க! நாங்ககூட முன்னெல்லாம் அப்படித்தானே உழைச்சிக்கிட்டு இருந்தோம்? இப்போ உங்க அப்பாவாலேதானே இந்த வழிக்கு வந்தோம்?”

இதைக் கேட்ட தீனதயாளனுக்கு என்ன தோன்றிற்றோ என்னமோ, “பலே! நீ கெட்டிக்காரிதான் போ!” என்று ஒலைக்கட்டைத் தூக்கி மீண்டும் அவள் தலைமேல் வைத்தான்.

“எங்கே போவது?’ என்று கேட்டாள்.

“உன்னுடைய அப்பாவிடம். நான் அன்பு வைத்தால் நீ இந்த ஒலைக்கட்டுடன் எங்கே போவாயோ அங்கே போ!” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே போய் விட்டான் தீனதயாளன்.

கேதாரியும் குறிப்பறிந்து ஒலைக்கட்டைக் கொண்டு போய் எஜமான் வீட்டில் சேர்த்துவிட்டு வந்தாள்.

***

அன்றிரவு தீனதயாளனுக்கு தூக்கமே பிடிக்கவில்லை. அவனுடைய சிந்தனை யெல்லாம் அன்று மாலை தனக்கும் கேதாரிக்குமிடையே நடந்த சம்பாஷணையைப் பற்றியதாகவே இருந்தது. இருளப்பனின் மனமாற்றத்துக்குக் காரணம் என்னவென்பதை அவன் ஒருவாறு ஊகித்து உணர்ந்து கொண்டான். அதை மாற்றுவதற்குத் தான் என்ன செய்ய வேண்டும்? அதற்கு ஏதாவது வழி உண்டா?

சிறிது நேரம் சிந்தித்துப் பார்த்தான். கடைசியில் ஒரு முடிவுக்கும் வந்து விட்டான்.

“ஆமாம் அப்படித் தான் செய்யவேண்டும். அதற்குக் குறுக்கே கடவுளும் நிற்கமாட்டார்; கர்மபலனும் நிற்காது” என்று தனக்குத் தானே அவன் சொல்லிக் கொண்டான்.

அதே மாதிரி, கேதாரியின் பேச்சைக் கேட்ட இருளப்பனுக்கும் அன்றிரவு தூக்கமே பிடிக்கவில்லை. எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி அவன் இப்படியும் அப்படியுமாகப் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான்.

இவர்களுக்காக இரவு காத்திருக்குமா என்ன? அது போயே போய்விட்டது. பொழுதும் புலர்ந்துவிட்டது. இருளப்பன் விடிந்ததும் விடியாததுமாக விழுந்தடித்துக் கொண்டு எஜமான் வீட்டுக்கு ஓடி வந்தான்.

“சாமி, தெண்டங்க!” என்று எஜமானுக்கு முன்னால் நெடுமரம் போல் விழுந்து எழுந்து நின்றான். “ஏழையை மன்னிச்சுடுங்கோ” என்று கண்ணிரும் கம்பலையுடன் வேண்டிக் கொண்டே மடியை அவிழ்த்தான். அதிலிருந்து இருபத்தைந்து ரூபாயை எடுத்து எஜமான் வீட்டுத் திண்ணையின் மேல் வைத்து, “என் மவ கண்ணாலத்துக்காக உங்க ஒலையைத் திருடி நான் இதுவரை சேர்த்து வச்சிருந்த தொகை இவ்வளவு தானுங்க” என்றான்.

யார், யாரை மன்னிப்பது? திருடியவன் இருளப்பன் தான். ஆனால் அவனைத் திருடத் தூண்டியவர் யார்? – சந்தேகமென்ன? நம்முடைய அப்பாதான்! – இப்படி எண்ணிக் கொண்டே தீனதயாளன் அந்த ரூபாயை எடுத்து மீண்டும் இருளப்பன் மடியில் போட்டான். உள்ளே சென்று இன்னும் இருபத்தைந்து ரூபாயை எடுத்து வந்து அவன் மடியில் வைத்தான்.

“என்ன இருளா கேதாரியின் கல்யாணத்துக்கு இவ்வளவு ரூபாய் போதுமா?” “என்ன எசமான், கேலி பண்றீங்க…”

“இல்லை இருளா! நிஜமாகத்தான் கேட்கிறேன்”

இப்பொழுதும் இருளப்பனால் நம்ப முடியவில்லை. “போதும் எஜமான்…” என்று இழுத்துக் கொண்டே சொல்லி வைத்தான்.

“சரி போ இனிமேல் நீயும் உன்னைச் சேர்ந்தவர்களும் திருடாமலிருப்பதற்கும் என்னையும் என்னைச் சேர்ந்தவர்களையும் எந்த விதத்திலும் வஞ்சிக்காமலிருப்பதற்கும் நான் ஒரு திட்டம் போட்டிருக்கிறேன். அதையும் இப்போதே கேட்டுக் கொண்டு போ! நீ வேலை பார்க்கும் அந்தத் தென்னந் தோப்பு இனி எனக்கு மட்டும் சொந்தமல்ல; உனக்கும் சொந்தம். அதில் வரும் வரும்படியில் எனக்குள்ள பங்கு உனக்கும் உண்டு. இந்தத் திட்டம் உனக்கு மட்டுமல்ல; உன்னுடன் சேர்ந்த மற்ற தோட்டந்துரவுகளில் வேலை பார்க்கும் எல்லோருக்கும்”

இப்படிச் சொல்லும் போது தீனதயாளனின் உள்ளத்தில் அன்பு வெள்ளம் கரைபுரண்டது. அதைக் கேட்ட இருளப்பனின் உள்ளத்தில் ஆனந்த வெள்ளம் பெருக்கெடுத்தது.

“எசமான்!…. எசமான்” என்று நாத்தழுதழுக்கக் கூறிக்கொண்டே இரு கரங்களையும் நீட்டிய வண்ணம் எஜமானை நெருங்கினான்.

அடுத்த நிமிஷம் அவனுடைய நீட்டிய கரங்களின் நடுவிலே தீனதயாளன் விழுந்துவிட்டான்

அன்பின் ஆனந்தத்தில் தங்களை மறந்த அவர்களின் முன்னால், தீண்டாமை அரக்கன் கூடத் தலைகாட்டவில்லை.

“…எசமான் இத்தனை நாளும் நான் சாகப் பிறந்தவன்னு நெனைச்சிருந்தேன் எசமான்….” என்று ஏதோ சொல்ல வாயெடுத்த இருளப்பன், மேலே சொல்ல முடியாமல் திணறினான்.

“ஆமாம், இருளா இனி நீ சாகப் பிறந்தவன் அல்ல, வாழப் பிறந்தவன்” என்று அவன் சொல்ல வந்ததைப் பூர்த்தி செய்தான் தீனதயாளன்.

– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.
– முல்லைக் கொடியாள், மூன்றாம் பதிப்பு: 1952, ஸ்டார் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *