வக்கிரம்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 29, 2013
பார்வையிட்டோர்: 17,610 
 

“சந்தத் தோப்புக்கு எப்படிப் போவணும்?” என்று கேட்பவர்களுக்கு ஒரு சின்னப்பிள்ளைக் கூட வழி காட்டிவிடும். ஊருக்குக் கிழக்கே தள்ளி இருக்கிறது அது. புதுசாகப் பார்க்கிற வெளியூர்க்காரன் “ஆயிரம் மாடுகள் கொண்டாந்து கட்டலாம் போலிருக்குதே” என்று மூக்கில் விரல் வைத்துவிடுவான். அவ்வளவு விஸ்தாரம். அவ்வளவு மரங்கள் தோப்பைச் சுற்றிச் சின்னச் சின்ன ஒற்றையடிப் பாதைகள் நீள்கின்றன. ஒரு பாதை சின்னபாபு சமுத்திரம் ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் போகிறது. பாண்டிச்சேரிக்குக் கூட குறுக்குப்பாதை ஓடுகிறது. நிலா உச்சியில் இருக்கும் போது மாடுகளை ஓட்டிக் கொண்டு கிளம்பினால் விடிய விடிய பாண்டிச்சேரிக்குப் போய்ச் சேரமுடியும். தோப்பின் முகம் சாலையைப் பார்த்தபடி இருக்கிறது. தோப்பின் இடதுகைப் பக்கத்தில் ஆறாம் நெம்பர் சாராயக்கடை.

காலையிலேயே கடை திறக்கப்பட்டு விடும். கடையில் இருக்கும் டேப்ரிக்கார்டரில்
‘போனால் போகட்டும் போடா’ பாட்டு பாடும். சுலபமாக மனசில் விரக்தியை விதைக்கும் வரிகளும் இசையும் காற்றில் கரைந்தெழும். அதற்கு இசைவாகத் தலையாட்டித் தன் ரசனையைத் தெரிவித்தபடி சாலையோரம் சிலர் உட்கார்ந்திருப்பார்கள். வேட்டிகளை உயர்த்தி முக்காடு போட்டிருக்கும் கோலம் காணத் தவறாத சித்திரம். அவர்களின் வாய்களில் சுருட்டுகள் புகையும். ஏழரை மணிக்கெல்லாம் ஒற்றையடிப் பாதையில் இருந்து மாடுகள் வரத்தொடங்கும். மாட்டுக் கொம்புகளில் கட்டிய சலங்கைக் கொத்தின் சத்தம் மரங்களில் மோதி எதிரொலிக்கும். எட்டு எட்டரைக்கெல்லாம் நிறைய மாடுகள் குவிந்துவிடும். அதைத் தவிர ஆடுகள், கோழிகள், குஞ்சுகள், கலவையான அவற்றில் அவற்றின் சத்தத்தில் சந்தை கலகலக்கும். வைக்கோற் சுருணைகளும் புல்கட்டுகளும் வண்டிகளிலும் டிரக்குகளிலும் வந்து நிற்கும். சந்தையின் முதல் விற்பனைப் பண்டம். கட்டுகள் கைமாறி மாடுகளின் முன் விழுந்ததும் அவை தின்று இளைப்பாறும். துண்டு போட்ட தரகர்கள் புகுந்து புகுந்து வருவார்கள்.

மெல்ல மெல்ல குலுங்கி வரும் பெட்டி வண்டிகளில் வியாபாரப் பொருள்கள் வந்து குவிகின்றன. ஒவ்வொரு மரத்தடியும் ஒவ்வொரு கடையாகி விடுகிறது. தற்காலிகமாய்க் கொம்பு ஊன்றிச் சாக்குப்படுதா கட்டிப் பந்தல்கள் தயாராகின்றன. அவற்றிற்குள் கூடைகள், மூட்டைகள், தட்டுகள், அரிசி, பருப்பு, உப்பு, புளி, மிளகாய், பழக்குலைகள் ஏற்றிய வண்டியுடன் வந்தவன் ஏலத்திற்கு அழைக்கும் குரல்கள் எழுகின்றன. “வந்துட்டாண்டி வளவனூர்க்காரன் குடி கெடுக்கிறதுக்கு” சில்லறை வியாபாரப் பெண்களின் செல்ல முணுமுணுப்புகள் ஆரவாரத்தில் கரைந்த இடம் தெரியாது போகின்றன. கீரைகள், தயிர், பனஞ்சாறு சுமந்த கூடைக்காரப் பெண்கள் ஒற்றையடிப் பாதைகளில் வந்து சேர்கிறார்கள். மரங்களில் மார்புகளில் செதுக்கப்பட்ட கட்சி சின்னங்களை அதன் அபிமானிகள் தொட்டுத் தொட்டுப் பூரிக்கிறார்கள். எளிய பேச்சாகத் தொடங்கும் அவர்களின் விவாதங்கள் கிண்டலின் எல்லையைத் தாண்டித் தாண்டி நீள்கின்றன. என்ன குரல்வளம்! என்ன ஞாபகசக்தி! எத்தனையோ நுணுக்கமான புள்ளி விவரங்கள்! பல பழைய சம்பவங்கள் அனைத்தும் பெருமிதம் தொனிக்கச் சுலபமாக உதிர்கின்றன. ஒளிரும் அவர்களின் விழிகளில் பக்தியின் வெளிச்சம் மின்னுகிறது.

அலிகளின் கோஷ்டி தாமதமாக வந்து சேர்கிறது. பல நிறங்களில் அவர்கள் புடவை கட்டி இருக்கிறார்கள். சுத்தமாக மழித்த முகங்கள் ; காதுகளில் தொங்கும் முத்துகள் ; முறையாய் வகிடெடுத்துப் பின்னப்பட்ட கூந்தல். அச்சு அசல் பெண்களைப் போலவே வருகிறார்கள். தடித்த முரட்டுத்தனத்துடன் இறங்கும் இடுப்புகள் மட்டும் பால் பற்றிய சந்தேகத்தை எழுப்புகின்றன. அவர்கள் வரும் போதே அவர்களைச் சுற்றி கூட்டம் சேர்ந்து கொண்டிருக்கிறது. இளைஞர்கள், சிறுவர்கள், மாடுவிற்க வந்த சம்சாரிகள் எட்டிப் பார்க்கிறார்கள். வியாபாரிகளின் முகங்களும்கூட அங்கங்கே தெரிகின்றன. சகலரின் கவனங்களையும் அந்த அலிகள் ஈர்த்தபடி இருக்கிறார்கள். ஒயிலாக நடந்துவரும் அவர்கள் நடை ; கிளுகிளுக்க வைக்கிற அவர்கள் கும்மிப் பாட்டு ; தம்மேல் விழும் கிண்டல்களுக்கு அவர்கள் கொடுக்கிற இடம். ஈக்கூட்டம் போல ஜனங்கள் அவர்களை மொய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆள் கூட்டத்தைப் பற்றி கவலையே இன்றி அவர்கள் நிதானமாக வருகிறார்கள். வழக்கமாய் அவர்கள் உட்காரும் மேடையை நெருங்கும்போது எங்கோ ஒரு விசில் சத்தம் எழுகிறது. உடனே பத்து நூறு விசில் சத்தம். முகத்தில் படரும் நாணத்தை அவர்கள் மறைத்துக் கொள்கிறார்கள். ஒருத்தி மட்டும் முந்தானையால் முகத்தை ஒத்தி எடுக்கிறாள். மேடையில் வட்டமாய்ச் சேர்ந்து கண்களாலேயே ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள். பின்னலை முதுகுப்பக்கம் விசிறிவிட்டு முந்தானையை இழுத்துச் செருகித் தயாராகிறார்கள். வயசில் மூத்தவளாய்த் தெரிந்த ஒருத்தி பாட்டின் முதல் வரியை ஆரம்பிக்கிறாள். உடனே ஆட்டம தொடங்குகிறது. கருத்த பாதங்கள் அளவாக எழுந்து துள்ளுகின்றன. சலங்கைச் சத்தத்தின் தாளம் பொருத்தமாக ஒலிக்கிறது. அதே கணம் அவர்கள் கைகள் மின்னலாய் உயர்ந்து கும்மி அடிக்கின்றன. ஒருவரி பாட்டு. ஒரு பாதம் எடுப்பு. தாளம், கும்மி. இயக்கம் மெல்ல மெல்லச் சீராக உயர்கிறது. அவர்களின் ஒவ்வொரு அசைவையையும் இளைஞர்கள் உன்னிப்பாய்க் கவனித்து ரசிக்கிறார்கள். கைதட்டி உற்சாகப் படுத்துகிறார்கள். இரண்டாம் சுற்று ஆட்டத்தில் சுதி சேந்துவிட்டது. மேடையிலிருந்து சமுக்காளத்தை நோக்கிச் சில்லறைகளை விசிறுகிறார்கள் ஆண்கள்.

ராகங்களை மாற்றி மாற்றிப் புதுப் பாடல்களைப் பாடுகிறார்கள் அவர்கள். அதற்குத் தகுந்த மாதிரி ஆட்டங்களும் அசைவுகளும் மாறுகின்றன. சுழன்று சுழன்று மேடையில் அவர்கள் வரும் போதெல்லாம் ஆரவாரம் உயர்கிறது. அவர்களுக்குச் சிறகு முளைத்து வானத்தில் பறந்தபடி மிதப்பது போல இருக்கிறது. அந்த இளைஞர்களின் உற்சாகக் குரலுக்கு ஏற்றபடி ஆட்டத்தின் வேகம் ஏறுகிறது. பாதங்களைச் சுழற்றிச் சுழற்றி அவர்களைக் கிறங்க அடிக்கிறார்கள். புளியமர மேடையில் எழுந்த ஆரவாரம் சந்தைத் தோப்பையே கலக்குகிறது. மூலையில் இருக்கிறவர்கள் கூட ஒருமுறை வந்து பார்த்துவிட்டுச் செல்லத் துடிக்கிறார்கள்.
மோர்க்காரகக் கிழவிகளும் பனஞ்சாறு விற்கும் பெண்களும் தோப்புக்குள் புகுந்து வருகிறார்கள். சூடேறும் வெயிலில் அலைகிறவர்கள் இவர்களிடம் வாங்கிக் குடிக்கிறார்கள். அங்கங்கே கூடைகளை இறக்கி விற்றுவிட்டு மீண்டும் தூக்கிக் கொள்கிறார்கள். கூடை சுமந்த இடுப்பின் வடு வெயிலில் மின்னுகிறது. அலைச்சலில் புறங்கழுத்தில் வேர்வை வழிகிறது. நடந்தவாக்கில் முந்தானையைச் சுற்றித் துடைத்துக் கொள்கிறார்கள். எந்த மாடு எந்தப்பக்கம் திரும்பும் என்று கணிக்க முடியவில்லை. அக்கம் பக்கம் பார்த்து நடக்க வேண்டி இருக்கிறது.
மேடையில் விழுந்த சில்லறைகளை யெல்லாம் ஒருத்தி குனிந்து எடுத்துக் கொள்கிறாள். பிறகு அங்கிருந்த கடைகளைப் பார்த்து நடக்கிறார்கள். பின்னாலேயே சிலர் பைத்தியம் பிடித்த மாதிரி தொடர்ந்து செல்கிறார்கள். வெறி முற்றிய வேகம். சுயநினைவே இல்லை. செலுத்தப்பட்டவர்கள் போல அவர்கள் பின்னாலேயே செல்லுகிறார்கள். “என்னா மொதலாளி, சௌக்கியமா?” என்ற கடைக்காரர்களிடம் அவர்கள் அபிநயிக்கும் போது இளைஞர்களும் திரும்பிச் சொல்லிச் சந்தோஷப் படுகிறார்கள். “கண்டுக்கவே மாட்டாங்கறியே மொதாலாளி” என்று அவர்கள் உதட்டைச் சுழித்துத் தோளைக் குலக்கும் போது ஓவென்று கூவுகிறார்கள். சில்லறைகளோடு அவர்கள் அடுத்த கடையை நோக்கி நடக்கும் போது பின்பக்க வளைவுகளில் சொக்கிப் போகிறார்கள்.

“அந்த ஆட்டத்தைப் பாருடா மச்சான். என்னமா குலுக்கறா” என்கிறான் கூட்டத்தில் ஒருவன். அவனுக்கு இருபத்தைந்து வயதிருக்கும். லுங்கியைத் தொடை வரைக்கும் உயர்த்திக் கட்டி இருக்கிறான். கருத்த முடிச்சுருளின் அடர்த்தியில் அவன் விரல்கள் அடிக்கடி தஞ்சம் புகுகின்றன. அவனுடைய பார்வை அவர்கள் மீதே பதிந்திருக்கின்றன. கண்களில் நெறி துள்ளுகிறது.

“ஆட்டத்தைப் பாக்காத மாமா. ஆளப் பாரு” பக்கத்தில் வந்தவன் சொல்கிறான்.
அவன் வாய் பிளந்திருக்கிறது.

“பொண்ணாப் பொறந்ததுக்குக் கூட இவ்வளோஅழகு இல்ல. ஆண்டவன் இதுங்களுக்குப் போய் அள்ளிக் குடுத்திருக்கான் பாரு.”

அவன் விரல்களிடையே சுருட்டு புகைந்து கொண்டிருக்கிறது. லேசான சாராய வீச்சம். அவன் வார்த்தைகளை அனைவரும் உடனே ஒத்துக் கொள்கிறார்கள். சுற்றி இருக்கிறவர்கள் ஓவென்று சிரிக்கிறார்கள். அங்கங்கே போய்க்கொண்டு இருக்கிறவர்கள் ஒருகணம் திரும்பிப் பார்த்துவிட்டுப் போகிறார்கள்.

ஒரு திருப்பத்தில் மோர் விற்றுக் கொண்டிருந்த கிழவியை நிறுத்தி அவர்கள் மோர் வாங்குகிறார்கள். அங்கேயே மரவேர்களில் இளைப்பாறுகிற மாதிரி உட்கார்ந்து மோர்த் தம்ளர்களில் இருந்து மெல்ல மெல்ல உறிஞ்சுகிறார்கள். அவர்கள் எதிரில் கிழவியும் உட்கார்ந்து சுருக்குப்பையைத் திறந்து வெற்றிலை பாக்கு மடிக்கிறாள். கும்பலில் ஒருத்தி ஆர்வமாய் எழுந்து வந்து பையை இழுக்கிறாள். “அடி எஞ்சக்களாத்தி… காசு குடுத்து வாங்க மாட்டியா?” என்று செல்லமாய்க் கோபிக்கிறாள் கிழவி. “என்ன ஆயா, ஒரு வாயி சுண்ணாம்புக்கு கூடவா பொறாம போய்ட்டன் நானு” என்று செல்லமாய்க் கிழவியின் கன்னத்தில் இடிக்கிறாள். அந்தக் கிழவி சிரித்தபடி பையை நீட்டுகிறாள். ஒருத்தியைத் தொடர்ந்து எல்லோரும் வெற்றிலை போடுகிறார்கள்.

“இவ்ளோ பேரு இருக்கம், அந்தக் கிழவிகிட்ட போய் கொஞ்சறாளுங்க பார்றா” என்று லுங்கிக்காரன் அலுத்துக் கொள்கிறான். “கெழவி குடுத்து வச்சதுடா” என்று ஒரு மீசைக்காரன் அங்காலய்த்துக் கொள்கிறான். தொடர்ந்து ஒரு சிரிப்பலை எழுந்து ஓய்கிறது.
வெற்றிலைச் சக்கையைத் துப்பிவிட்டு அவர்கள் அந்த வேர் மீதே தம் சௌகரியப்படி உட்கார்ந்திருக்கிறார்கள். சற்றே தள்ளி அந்தக் கூட்டமும் உட்கார்ந்து விடுகிறது. பீடிகளைப் பற்ற வைத்துக் கொள்கிறார்கள். எவனாவது எழுந்திருக்க முயலும் போது அவன் தோளைப் பிடித்து அழுத்தி உட்கார வைத்து விடுகிறான் பின் பக்கத்தில் இருப்பவன்.

சிறிது நேர ஆசுவாசத்துக்குப்பின் மீண்டும் அவர்கள் புறப்படுகிறார்கள். சூரியன் உச்சிக்கு வந்து விடுகிறது. சோர்வை மறைத்துச் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். எல்லாக் கடைகளிலும் நாலு கும்மி அடித்து இரண்டுவரி பாடியதுமே சில்லறை விழுகிறது. “இன்னா ரெண்டு வாரமா ஆளயே காணமே. ஒரேயடியா போய்ட்டிங்களோன்னு நெனைச்சிட்டேன்.” “எதுக்கு இந்த ஆட்டம், வா வந்து உக்காரு சாயங்கலாமா இருபது ரூப குடுத்துர்றன்” ஆர்வத்தில் கடைக்காரர்கள் பேச்சில் இளைஞர்களும் கலந்து கொள்கிறார்கள்.
மீண்டும் மேடைக்கே திரும்பி வந்து உட்கார்கிறார்கள் அலிகள். தொடர்ந்து அந்த லுங்கிக்காரன் கூட்டம் சிறிது தூரம் தள்ளி நிற்கிறது. அவன் சொன்னதையெல்லாம் செய்ய இரண்டு இளைஞர்கள் வலதும் இடதுமாக நின்றிருக்கிறார்கள். ஒருவன் ஓடிப்போய் மீன் துண்டுகளைச் சுடச்சுட வாங்கி வந்து கொடுக்கிறான். நடுமுள்ளைப் பதமாக விலக்கி அப்படியே மென்று துடைத்துக் கசக்கி எறிகிறான். அவன் பார்வை அவர்கள் மீதே பதிந்து கிடக்கிறது. அவன் மெதுவாக அவர்கள் அருகே நடந்து செல்கிறான். “டேய்… டேய்” என்று தடுக்கிற கூட்டாளிகளை அவன் பொருட்படுத்தவில்லை. நிதானமாய் அவர்களில் இளையவளிடம் சென்று டவுசர் பையில் இருந்து இருபது ரூபாய்த் தாளை எடுத்து நீட்டி ஆடுமாறு சொல்கிறான். அவர்களுக்குப் பணத்தைப் பார்த்ததும் உற்சாகம் கிளம்புகிறது. எழுந்து வட்டமிட்டுக் கும்மி அடிக்கிறார்கள். கூடவே லுங்கிக்காரனும் கூட்டாளிகளும் கைத்தட்டி ஆரவாரம் செய்கிறார்கள்.

மோர் விற்று முடித்த கிழவிகளும் பெண்களும் அந்த மரத்தடிப் பக்கம் நிழலுக்கு
ஒதுங்கி நிற்கிறார்கள். அவர்களும் அந்த ஆட்டத்தைப் பார்க்கத் தொடங்குகிறார்கள். என்னமோ, அவர்களுக்கு நெஞ்சு அடைக்கிறது. முகத்தைச் சுளித்துக் கொள்கிறார்கள்.

“அண்ணே, ஆளு ‘ரோஜா’ மாதிரி இல்ல?”

உடனே சிரிப்பு.

“அந்த இடுப்பப் பாருங்கடா முட்டாளுங்களா. அந்த வெட்டுக்கு என் ஆஸ்தியயே எழுதி வச்சிருவேன்.”

மீண்டும் சிரிப்பு.

“அண்ணே, எனக்கொரு சந்தேகம். இதுங்களாம் வயசுக்கு வருமா?” என்ற அப்பாவித்தனமாய்க் கேட்டுவிட்டுக் கண்சிமிட்டுகிறான் ஒருவன். உடனே கைதட்டல். எக்களிப்பு. அடிவயிற்றிலிருந்து அடக்கமுடியாத சிரிப்பு எழுகிறது. உற்சாகத்தோடு மெல்ல மெல்ல அவர்களை நோக்கி முன்னேறுகிறார்கள். ஆடிக் கொண்டிருந்தவர்களின் முகம் போன போக்கு சரியில்லை. நின்று விடுகிறார்கள். அவர்கள் முகங்களில் முதன் முறையாகக் கலவரம் படிகிறது. அடிபட்ட வேதனை தெரிகிறது.

“இன்னா நிறுத்திட்ட இருபது ரூபாய்க்கு இதுதான் ஆட்டமா. இந்தா இன்னோர் இருபது.”
கூட்டாளிகளைப் பார்த்துக் கண்சிமிட்டுகிறான் லுங்கிக்காரன். அவர்கள் காசைத் தொடவில்லை. பின்வாங்குகிறார்கள்.

“இருபது பத்தாதா அம்பது ஓணுமா?

மீண்டும் கண்சிமிட்டல். சிரிப்பு.

அவர்கள் பின்வாங்கப் பின்வாங்க அந்த லுங்கிக்காரன் முன்னேறுகிறான். “நூறு தரட்டா… எரநூறு தரட்டா…” என்று பிதற்றுகிறான். பிறகு உடலைக் குலுக்கிக் கொண்டே “எங்கிட்ட இந்த வேலையெல்லாம் நடக்காது. காசு குடுக்கரன்ல. ஒழுங்கா ஆடு. ஆடினாதான் விடுவன்” என்கிறான். தொடர்ந்து “இந்த லுங்கிக்காரன் இளிச்சவாயன்னு நெனச்சிட்டயா. அதான் நடக்காது” என்கிறான். “அட வெக்கமா, வயசுக்கு வந்திட்டாயா?” என்று சீண்டுகிறான். அவனுடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் கும்பல் ஓவென்று இரைச்சலை எழுப்புகிறது. தனது தலைவனின் செய்கையைக் கைத்தட்டி வரவேற்கிறது. விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது.

“இதெல்லாம் நல்ல இல்லிங்க, விட்டுருங்க” என்று அனைவரும் கூடி அவனைத் தடுக்கிறார்கள். அவர்கள் பின்னால் ஒதுங்கிய இளையவளின் கண்கள் கலங்குகின்றன.

“என்னடி நல்லா இல்லா… ம்… என்னடி நல்லா இல்ல?” என்று லுங்கிக்காரன் கேட்கிறான்.

“நோட்ட வாங்கிச் சொருவிக்கும் போது வலிக்கலியா? ஆடுன்னு சொன்னா மட்டும் வலிக்குதா?” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கத்துகிறான். “அட ஆடுங்கடின்னா சும்மா அலட்டிக்களிங்களே” என்று சட்டென இளையவளின் நெஞ்சைத் தொட்டு அழுத்திப் பணத்தைச் செருகுகிறான். கைதட்டலும் விசிலும் உச்சத்தை அடைகிறது.

திடீரென மோர்க்காரக்கிழவி மேடையில் ஏறுகிறாள்.

“இன்னாடா… சங்கமாங்கி… ஆடுன்னா ஆடறதுக்கு நீ வச்ச ஆளாடா அவுங்க” என்று அவள் குரல் உயர்கிறது. லுங்கிக்காரன் இந்தத் தாக்குதலைச் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. “மார்ல கைவச்சிப் பேசற அளவுக்கு ஆயிடுச்சா… என் சாண்டா குடிச்சவனே, போடா போய் ஒங்காத்தா மார்ல கைவச்சி ஆடச் சொல்லுடா இல்லன்னா ஒங்கக்கா மார்ல கைவச்சி ஆடச் சொல்லு” என்று கைநீட்டிச் சொல்கிறாள். “என்னமோ ரெண்டுங்கெட்டானுங்க நாலு ஆட்டம் அடி ரெண்டு காசு சம்பாரிக்க வந்தா திமிராடா காட்டற திமிரு” என்கிறாள். உடனே அங்கங்கே நின்றிருந்த பெண்களும் சேர்ந்து கொள்கிறார்கள்.

“இவன் எப்பவும் இப்படித்தான் ஆயா… எந்தப் பொண்னைப் பார்த்தாலும் மாரயே மொரச்சிப் பார்ப்பான்…”

“இதுவே கண்டதுக்குப் பொறந்த நாயி. இதுவந்து மத்தவங்கள எளக்காரம் பண்ணுது.”

“நம்ம ராமாயிக்கு ஒடம்பு சரியில்லன்னு அவ பொண்ணு வந்தாளே. அன்னிக்கு அவ
இடுப்புல கிள்ளினது கூட இந்த பேமானிதான் ஆயா.”

“அவளாவது அறியா பொண்ணுடி. நம்ம பண்டாரம் பொண்டாட்டிக்கு என்ன வயசாவது. அவளப்போயி வரியான்னு கூப்பிடறாம்மா இந்த தேவடியா மொவன்.” “கண்ணைக் காட்டி காச நீட்னா வந்து மல்லாந்துடு வாங்கன்னு நெனப்பு இவனுக்கு. பெரிய மன்மதக் குஞ்சு பாரு.” கும்பல் கலையத் தொடங்குகிறது. கிழவியை அவர்கள் நன்றியுடன் பார்க்கிறார்கள். லுங்கிக்காரனும் அவனது கூட்டாளிகளும் ஆறாம் நெம்பர் கடைப்பக்கம் நடக்கத் தொடங்குகிறார்கள். டேப்ரிக்கார்டர் பாட்டுச்சத்தம் காற்றில் கரைகிறது.

Print Friendly, PDF & Email

2 thoughts on “வக்கிரம்

  1. மிக அருமையான யதார்த்த நடை…நிகழ்வுகளை கண் முன் கொண்டுவருகிறது….👏👏

  2. நல்ல கருத்து ….எளிய நடை …ரசித்து படித்தேன் …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *