லஞ்சம் பொறுக்குதில்லையே !

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 1, 2013
பார்வையிட்டோர்: 6,993 
 

‘நிறுத்து ! நிறுத்து !”போலீஸ் காரர் கை காட்டினார், ஆட்டோவைப் பார்த்து, சென்னை கொரட்டூர் அருகே.

லிங்கம் தனது ஆட்டோவை நிறுத்தினான்.

“என்னய்யா! ரெட் சிக்னல் ஜம்ப் பண்றே! வண்டியை ஓரம் கட்டு”- போலீஸ் காரர் அதட்டினார்.

“அவசரம் சார், சாரி சார் ! “- லிங்கம்

“என்ன அப்படி அவசரம்? சவாரி வண்டியிலே இருக்கு, மீட்டர் வேறே போடாமே ஓட்டறே?. பெர்மிட், லைசன்ஸ் எடு.”

கூட இருந்த சக போலீஸ் காரர், காதோடு சொன்னார். “இது நம்ம எஸ் ஐ. ஆடோ சார்”

“யாரா இருந்தா என்ன? ஐநூறு கறக்கலாமென்று இருந்தேன். சரி, செலவுக்கு 100 கொடுத்துட்டு போகச்சொல்லு”

லிங்கம் நூறு ரூபா கொடுத்துவிட்டு வண்டியை எடுத்தான்.

“ச்சே! என்னமா புடுங்கறாங்க. இதெல்லாம் ஒரு புழைப்பு ! இந்த போலீஸ் காரங்க அட்டூழியம் தாங்கலே. இந்த நாடு எப்படி சார் உருப்படும்?” லிங்கம் அலுத்துக்கொண்டே வண்டியை ஓட்டினான்.

****

அண்ணா நகர் சிந்தாமணி நிறுத்தம். மணி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தான். மணியாகிவிட்டது. இன்று பார்த்து அவனது பைக் ரிப்பேர். அதிகாரி திட்டப் போகிறார்.

பஸ் எதுவும் காணோம். ஒரு ஆட்டோ வந்தது. மணி கை காட்டி நிறுத்தினான். “ஆட்டோ, புரசைவாக்கம் போகவேண்டும், வரியா?”

“நூறு ரூபா ஆகும் சார்” – ஆட்டோ ஓட்டுனர் லிங்கம்.

“என்னது! பகல் கொள்ளையாக இருக்கே! நாப்பது கூட ஆகாது. நூறா? மீட்டர் போடு.”

“சார், மீட்டர் கீட்டர் எதுவும் போட முடியாது. வரதுன்னா ஏறு, இல்லாகாட்டி என்னை விடு. வேறே சவாரி பாத்துக்கிறேன். பேஜாரு பண்ணாதே“

“டிரைவர், நான் யார் தெரியுமா? புகார் கொடுத்தா உன் பெர்மிட் காலி, நினைவிருக்கட்டும்”

“அதெல்லாம் நாங்க பாத்துக்குவோம். எங்களுக்கும் ஆளு இருக்கில்லே! இதோ பாரு சார், கொஞ்ச நேரம் பஸ் எதுவும் வராது. டிராபிக் ஜாம். சரி, எண்பது தரியா?”

மணி பொருமினான். “சரி, போலாம். போ. என்ன ஒரு அடாவடி ! என்னமா புடுங்கறீங்க. இதெல்லாம் ஒரு புழைப்பு ! இந்த ஆட்டோ காரங்க அட்டூழியம் தாங்கலே. இந்த நாடு எப்படி உருப்படும்?”

“சும்மா கம்முனு வா சார்!”

*****

மும்முரமாக அன்றைய தினசரி தாளில் மூழ்கியிருந்தான் அரசு இளநிலை எழுத்தர் மணி.

“சார்! மணி சார்!” – தனியார் மருத்துவ கல்லூரியின் உதவி நிர்வாக அதிகாரி வெங்கடேசன்.

“வாங்க வெங்கடேசன்! எப்படி இருக்கீங்க?”. தினசரியை மூடி வைத்தான்.

“நல்லா இருக்கேன் சார், என் பில்டிங் அப்ரூவல் விஷயம்..” இழுத்தார்.

“உங்க பேப்பர் இன்னும் கிளியர் ஆவலே வெங்கடேசன். பெரிய ஐயா ரொம்ப பிசி. எனக்கும் ரொம்ப வேலை. ஒரு வாரம் கழித்து வாங்களேன்”

“இல்லேங்க மணி சார், இத்தோட மூணு தடவை வந்துட்டேன். நாள் ஆக ஆக எனக்கு பிரச்சனை. கொஞ்சம் சீக்கிரம் உத்திரவு வாங்கி கொடுத்தால், நல்லாயிருக்கும். எவ்வளவு ஆகும்னு சொன்னா..” – தலையை சொறிந்தார் வெங்கடேசன்.

“சரி, பெர்மிட்க்காக ஒரு 7500 கவுண்டர்லே டிராப்ட் கட்டிடுங்க. அதிகாரி, அப்புறம் மற்ற ஆளுங்களை நான் சரிக் கட்டனும். ஒரு 15000/- கொடுங்க. எனக்கு தனியா 5000 போதும். சாயந்திரம் வீட்டாண்டை வரேன். அட்வான்ஸ் கொடுத்திட்டீங்கன்னா, மூணு நாளிலே காரியம் முடித்துடலாம்.” – மணி

“சரிங்க மணி சார், கொஞ்சம் சீக்கிரம் முடிச்சு கொடுங்க! உங்களைத்தான் மலை போல நம்பியிருக்கிறேன்”

“கட்டாயம். கவலைப் படாதீங்க. நான் பார்த்துக்கறேன்”- மணி

கல்லூரியின் நிர்வாக உதவி அதிகாரி வெங்கடேசன் அலுத்துக் கொண்டே வெளியே வந்தார்.

“சே ! என்ன ஒரு அடாவடியா, இழுத்தடிச்சி பணம் புடுங்கறாங்க. இதெல்லாம் ஒரு புழைப்பு ! இந்த அரசாங்க அதிகாரிங்க அட்டூழியம் தாங்கலே. இந்த நாடு எப்படி உருப்படும்?” – புழுங்கினார்.

****

தனது வேலையில் மூழ்கி இருந்தார் வெங்கடேசன். அலைபேசி அலறியது.

“வெங்கடேசன்! என் பொண்ணு கல்லூரி சீட் விஷயம் என்ன ஆச்சு?”- குமரேசன், அரசு மேம்பால காண்ட்ராக்டர்

“ ஓ! பண்ணிடலாமே! 50 லட்சம் ஆகும். என் கமிஷன் 5 எல்…கொடுத்தீங்கன்னா முடிச்சிடலாம். ”- இப்படி சொன்னார் வெங்கடேசன்.

“சரி சார், எப்படி கொடுக்கணும்னு சொல்லுங்க, செஞ்சுடலாம்” – போனை வைத்தார் குமரேசன்.

“சே ! என்ன ஒரு அடாவடியா, பணம் புடுங்கறாங்க. இத்தனைக்கும் இது ஒரு தனியார் கல்லூரி. கல்வியை இப்படி கேவலமா ஒரு வியாபாரமா மாத்திட்டாங்களே ! இந்த நாடு எப்படி உருப்படும்? இருக்கட்டும், சேத்து வெச்சு எடுத்துடலாம். மினிஸ்டர் தான் நம்ம பைக்குள்ளே இருக்காரே. ” . குமரேசனின் வியாபார மூளை அடுத்த செயலில் இறங்கியது.

****

“என்ன செல்வம், கல்லூரி சீட் எல்லாம் எப்படி போய்கிட்டிருக்கு?- , அமைச்சர்
அருணாசலம்.

“நல்லா போய்கிட்டிருக்கு ஐயா” செல்வம், கரஸ்பாண்டென்ட்- தனியார் மருத்துவ கல்லூரி

“சரி, எலெக்ஷன் வருது, ஒரு பத்து கோடி ஏற்பாடு பண்ணு”

“சரிங்க ஐயா, உங்க கல்லூரி, நீங்க சொல்றபடி செஞ்சுடுவோம்”

“சரி, எனக்கு இப்போ ஒரு மீட்டிங் இருக்கு, நான் போகணும், வரட்டா?. உனக்கு என்ன பிரச்சனை வந்தாலும், என் பேரை சொல்லு. நான் பாத்துக்கறேன்”

காரில் போகும் பொது, அமைச்சர் தனது காரியதரிசியிடம் சொன்னார். ” நம்ம மேம்பால காண்ட்ராக்டர் குமரேசன் கிட்டே எலெக்ஷன்காக இன்னும் ஒரு ஐந்து கோடி கேட்டு வாங்கு. அவருக்கு அடுத்த காண்ட்ராக்டும் கிடைக்க ஏற்பாடு பண்ணு” .

***

ஆளும் கட்சியின் முக்கிய பிரதிநிதிகளின் கூட்டம்.
————————————————

வரப்போகும் தேர்தல் பற்றி முடிவுகள் எடுக்க வேண்டும். அதற்கான மாநில பிரதிநிதிகள் கூட்டம். அமைச்சர் அருணாசலம் இந்த கூட்டத்தின் தலைவர். முடிவுகளை, தக்க படி மேலிடத்திற்கு சொல்ல வேண்டியது அவரது பணி.

“தேர்தல் வருது. நாம முக்கிய அறிக்கைகள் கொண்டு வரணும். மக்களைக் கவரும் விதமாக. இல்லாட்டி, நாம தோல்வியை தழுவ வேண்டி வரும்” – அமைச்சர்அருணாசலம். பயமுறுத்தியே காரியம் சாதிப்பதில் அவரை யாரும் மிஞ்ச முடியாது.

“ஐயா! நம்ம கட்சி பேரிலே இருக்கிற முக்கிய குற்றச்சாட்டு லஞ்சம். நம்ம ஆட்சியிலே லஞ்சம் தலை விரித்தாடுகிறதாம்”- ஒரு அசட்டு பிரதிநிதி மக்கள் எண்ணத்தை பகிர்ந்தார்.

“ஆமா! சொல்றவங்க எதிர்க் கட்சிக் காரங்க தானே! அவங்க ஆட்சியிலே மட்டும் என்ன வாழ்ந்தது? அவங்க பண்ணாததையா நாம் பண்ணிட்டோம்? லஞ்சத்துக்கு அவங்க தான் காரணம்னு ஜனங்க மத்தியிலே அடிச்சு சொல்லுங்க” – அமைச்சர் ஒரு போடு போட்டார்.

“நாம வேணா, இந்த லஞ்ச ஒழிப்புக்கு ஒரு புது சட்டம் கொண்டுவரலாமா?”- முத்து வேல் , கொஞ்சம் சிந்திக்கும் பிரதிநிதி.

“கொண்டுவந்துட்டு, நாம எல்லாரும் தலைலே துண்டு போட்டுக்கறதா?”- அதட்டினார் இன்னொரு மக்கள் பிரதிநிதி.

“சட்டம் போடுவோம்னு தானே சொன்னேன். அதை கடைப் பிடிக்கணும்னு எங்கே சொன்னேன்? நாம சொன்னாலும், அதை அரசு அதிகாரிங்க காத்தில் விட்டுடுவாங்க. ஒன்னும் கவலைப் படாதீங்க” சீறினார் முத்து வேல், ஐடியா கொடுத்தவர்.

“சும்மா இருங்க! நல்லதா ஒரு ஐடியா சொல்லுங்க”- அமைச்சர் குறுக்கிட்டார்.

“ஐயா! நாம இப்படி செய்யலாம்! பேசாம லஞ்சம் வாங்கறதும் குற்றம், கொடுக்கறதும் குற்றம்னு ஒரு ஆணை போட்டுடலாம்.”- முத்து வேல்

“போட்டா? என்ன உளர்றீங்க! என்ன காலையிலேயே, தண்ணி போட்டுட்டீங்களா ?”. நமட்டு சிரிப்போடு ஒரு மாவட்ட செயலாளர் கேட்டார். கொல்லென்று சிரிப்பு, அறையில்.

“என்ன முத்து வேல், இந்த மாதிரி சட்டம் எதுவும் இப்போ அமுலில் இல்லையா என்ன?” – அமைச்சருக்கு சந்தேகம்.

“ஐயா! பெயரளவில் இருக்கு. ஆனால், லஞ்சம் கொடுக்கறவனை பெரிய குற்றவாளியா யாரும் பாக்கறதில்லை. ஆனால், உண்மையில், லஞ்சத்தை அவன் தானே தூண்டுகிறான்?”

“சரியா சொன்னீங்க. அவன் கொடுக்கல்லேனா, எவனாலே வாங்க முடியும்?”

முத்து வேல் தொடர்ந்தார் : “லஞ்சம் கொடுக்கிறவன், தனது அவசியத்திற்காக, அவசரத்துக்காகத்தான் கொடுக்கிறான். அவனுக்கு ஆதாயம் இருக்கு. அதனாலே, லஞ்சம் கொடுக்கிறது குற்றம்னு சட்டம் போட்டால், கொடுக்க நினைக்கிறவன், தானும் மாட்டிப்போம்னு வாயைப் பொத்திகிட்டு இருந்துடுவான். திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி”

“அட! சபாஷ் முத்து வேல், உங்க ஐடியா நல்லா இருக்கே! மக்களுக்கு நல்லது பண்றா மாதிரி சட்டம் கொண்டு வந்த மாதிரி இருக்கு, நாமளும் மாட்டிக்காம இருக்க, இதிலே வழியும் இருக்கு. புகார் கொடுக்கரவனே இல்லைன்னா, குற்றம் எப்படி நிரூபிப்பாங்க ? தண்டனை ஏது? நான் இதை இப்பவே அமைச்சர் குழாம்லே எனது கருத்தா சொல்றேன். விவாதிக்கலாம். நீங்களும் என் கூட வாங்க முத்து வேல்.” – அமைச்சர் குஷியாகிவிட்டார்.

முத்து வேல் முகத்தில் புன்சிரிப்பு. அநேகமாக அவருக்கு தேர்தல் டிக்கெட் உறுதி.

“ஐயா! அனுமதி கொடுத்தால், இதை விட நல்லதா ஒரு சட்டம் கொண்டு வர வழி சொல்லவா?” – கூட்டத்திலிருந்து இன்னொரு குரல்.

குரலிட்டவர், புதுமைகள் புகுத்துபவர் என பெயரெடுத்த ‘இளஞ்சிங்கம் இமையவன்’. மதுரை பக்கத்திலிருந்து வந்திருக்கும் ஒரு மக்கள் பிரதிநிதி.

“சொல்லுங்க இமையவன்! கூட்டமே அதுக்குதானே கூட்டியிருக்கோம்?”- அமைச்சர் அனுமதி கொடுத்தார்.

இளஞ்சிங்கம் என்ன சொல்லப் போகிறார் என கேட்க மற்ற அங்கத்தினர் ஆவலோடு காத்திருந்தனர்.

“ஐயா! லஞ்சத்தை ஒழிக்க ஒரே வழி, லஞ்சம் கொடுப்பவனுக்கு தண்டனை கொடுப்பது தான். லஞ்சம் கொடுப்பது தான் குற்றம், வாங்குவது அல்ல என சட்டம் போட்டு விட்டால் என்ன? கொடுக்கிரவன்தானே தானே, லஞ்சம் வாங்க ஊக்குவிக்கிறான்? லஞ்சம் கொடுப்பவன் இல்லையென்றால், லஞ்சம் எவன் வாங்குவான், எப்படி வாங்குவான்?”- இளஞ்சிங்கம் இமைவயன்

“அட இது இன்னும் நல்லா இருக்கே. சிகரெட்டு பிடிக்கறது தான் குற்றம், சிகரெட்டு தயாரிக்கறதோ அல்லது விக்கறதோ இல்லைன்னு சொல்லறா மாதிரியா?”- அமைச்சர்

“ஆமாங்கய்யா! லஞ்சம் கொடுத்தால், குறைந்தது ஐந்து வருட கடுங்காவல் என சட்டம் போட்டு அறிக்கை விடலாம். தன்னால், லஞ்சம் ஒழிந்து விடும்”

“ரொம்ப பிரமாதம் இமையவன். உங்கள் கருத்து சட்டமாக வந்தால், மக்களுக்கு கட்டாயம் நன்மை பயக்கும். அது உறுதி. இதையும் என் கருத்தாக அமைச்சார் குழாம்லே சொல்றேன். நன்றி நண்பரே! உங்களை மாதிரி சிந்திக்கிறவர் தான் இந்த கட்சிக்கு தேவை. ”

****

இரண்டு மாதம் கழித்து :
———————–

ஆட்டோ ஓட்டுனர் லிங்கம், வழக்கம் போல, இடது பக்கம் போக கை காண்பித்து விட்டு, சிகப்பு விளக்கு சிக்னலை பாராமல், வலது பக்கம் திரும்பியபோது, எதிரில் வந்த லாரி மோதி, அந்த இடத்திலேயே மரணம் சம்பவித்தது.

அரசு மருத்துவமனை
——————–

“ஐயா! ஐயா! எப்பய்யா என் பையனை திருப்பி கொடுப்பீங்க?” – ஆட்டோ டிரைவர் லிங்கத்தின் அம்மா அரசு மருத்துவமனையில், இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தாள்.

“ம்.. நேரம் ஆகும். உன்னை பார்த்தா பாவமா இருக்கு. ஐநூறு கொடுத்ததா, சீக்கிரமே டெலிவரி ஆயிடும்”

“இந்தாங்க ஐயா! “ அழுதுகொண்டே அம்மா

“மறைச்சி கொடம்மா. யாரவது பார்த்தா, லஞ்சம் கொடுத்தேன்னு உன்னை ஜெயில்லே போட்டுடுவாங்க. சரியான அப்பாவியா இருக்கியே!”

கிழவி விழித்தாள்.

“இப்போ புது சட்டம் வந்துருக்கம்மா. தெரியாதா? அப்புறம், ஆசுபத்திரியிலே மத்தவங்க கிட்டேயும் கையெழுத்து வாங்கணும்! போய் அங்கே பாரு. ரூபா 2000 வரை செலவாகும். போலிசுக்கு மாமுல் வேறே கொடுக்கணும். யாருக்கும் தெரியாம, மாட்டிக்காம கொடு. புரிஞ்சிச்சா?“

“எதுக்கு மாமூல்?”- அரசு இயந்திரம் புரியாத அம்மா.

“எதுக்கா? பாடி வாணாவா?”

மூதாட்டி அழுது கொண்டே, பணம் அழுவதற்கு சென்றாள்.

“சே ! என்ன ஒரு அடாவடியா, பணம் புடுங்கறாங்க. இதெல்லாம் ஒரு புழைப்பு !” இப்படி நினைக்க அவளுக்கு தெரியவில்லை. அதற்கு அவளுக்கு நேரமும் இப்போது இல்லை.

**** இது ஒரு விழிப்புணர்வு கதை. இது தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவின் எல்லா மூலையிலும் இந்த கூத்து தினமும் நடக்கிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *