ராஜாராம் ஷெட்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 5, 2020
பார்வையிட்டோர்: 4,897 
 

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு இரண்டு வாசல்கள் உண்டு. கிழக்குப் பார்த்த வாயிலில் உயர்ந்த இரும்பு கேட். அதன் நீட்சி இரட்டை வரிசையில் உள்ள கல் மண்டபமும், அதில் உள்ள கடைகளும்.

ஆண்டாள் கோவிலுக்குத் தென்புறம் உள்ள இரும்பு கேட், காலையில் திறக்கப்பட்ட உடனே வெளியே வெளிச்சத்தில் தெரிவது தெற்கு மாட வீதி. ஸ்வாமி புறப்பாட்டின் போது, ஆண்டாள்–ரெங்கமன்னார் முதலில் கால் பதிப்பது அந்த தெற்கு மாட வீதியில் தான். தென்புற வாயிலில் இருந்து பார்த்தால், நேர், எதிராகத் தெரிவது சிறிய நடைபாதைச் சந்து. மூக்கை நன்றாக அடைத்துக் கொண்டு இந்தக் குறுகிய சந்தைக்கடந்து விட்டால், அதை விட்டு வெளியேறியதும் உடனே தெரிவது அகன்ற தெற்கு ரத வீதி. அவ்வீதிக்கு கச்சேரி ரோடு என்றும் பெயர் உண்டு.

மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட நீதிமன்ற வளாகம் இன்னமும் அப்படியே உள்ளது. இந்தத் தகவல்கள் யாவும் நமக்கு அநாவசியம். மேற்படி கச்சேரி ரோட்டில், யாருடைய விட்டையாவது அடையாளம் காட்ட வேண்டுமென்றால், உடனே எங்கள் ஊர்க்காரர்கள் சொல்வது,

‘கச்சேரி ரோட்டுல அந்த ராஜாராம் ஷெட் இருக்குல்ல. அதுக்கு ஒரு நாலு வீடு மேற்க தள்ளிப் போனா வக்கீல் சுந்தரேசன் ஆபீஸ் வரும். அதுக்கடுத்து இருக்கு, நீங்க சொல்ற இந்த வீடு’

என்று தான் அடையாளம் சொல்வதுண்டு.

இப்படி ஊரில், ஒரு வீதியில், முக்கிய நில அடையாளமாக மாறிப்போன ‘ராஜாராம் ஷெட்’ எனப்பட்ட இந்த ஸ்தலம், உண்மையில் ஒரு வசிப்பிடம் அல்ல. பெரிய, பிரம்மாண்டமான ஆறு கல் தூண்கள், கோவில் மண்டப பாணியில், முகப்பில் தென்பட, அதனுள்ளே ஒரு பெரிய நாலு கால் தீர்த்தவாரி மண்டபம். இடது மூலையில் ஒரு சின்ன அறை. அதன் வெளியே ஒரு தகரக் கொட்டகை. கட்டில், நாற்காலிகள் போடப்பட்டு உள்ள ஒய்வு எடுக்கும் இடம். பின்புறத்தில் அகண்ட, ரொம்பப் பெரிய மண்டபம். பின்புறத்தில் இன்னொரு பெரிய தகரக் கொட்டகை. எங்கு பார்த்தாலும், எப்போது பார்த்தாலும் ரிப்பேர் செய்யப்படுவதற்காக நிறுத்தப்பட்டிருக்கும் குடல் திறந்த, வாய் பிளந்த, முகம் இழந்த, பிருஷ்டம் இழந்த பஸ்கள். பஸ் ரிப்பேர் செய்யும் சாதனங்கள், டயருக்கு காற்றடிக்கும் மின் மோட்டார், ஆக்ஸில் அச்சுக்கள், கடப்பாரை உபகரணங்கள். புகையும், தூசியும், கருப்பு ஆயில், க்ரீஸ் படிந்து மக்கி, மங்கிப் போன அதன் தூண்கள், சுவர்கள்.

எந்நேரமும் எரியும் டியூப்லைட் வெளிச்சத்தின் கீழ் ஓயாது, ஒழியாது ‘டங், டங்’ கென்று சுத்தியல், டிங்கரிங் சாதனங்களால் எழுப்பப்படும் காதைச் செவிடாக்கும் ஒலி. உருட்டப்படும் பஸ் டயர்கள். உப்பியிருக்கும்படி காற்றடிக்கப்படும் அதன் டியூப்கள், க்ரீஸ், மோட்டார் ஆயில் மற்றும் இஞ்சின் அழுக்கு படிந்த கருப்பான காக்கி உடைப் பணியாளர்கள். உள்ளே வருவதும், வெளியே போவதுமான காலியான பயணிகள் பேருந்துகள். அதை உர், உர்ரென்று ஒட்டிப் பார்க்கும் மெக்கானிக்குகள் கூட்டம், தேநீரும், பீடியும், புகையிலை, சிகரெட்டும் புழங்கும் பெரும் யந்திரசாலை.

இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கம் போலவே ஓயாது, ஒழியாது இயந்திர இயக்கத்தில் ஓடிக்கொண்டிருக்கும் உழைப்பவர் உலகம் ராஜாராம் ஷெட்.

ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் என்றும், அதைப் ‘பரிசுத்தமாய் ஆசரிப்பாயாக’ என்றும் கட்டளையிட்ட தேவன், அதற்கு ஒரே ஒரு விதிவிலக்கு, ராஜாராம் ஷெட் என்றும் சொல்லியிருக்கிறார். அவரே ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று பஸ் ஸ்டாண்டு அருகில் உள்ள பரிசுத்த தோமா தேவாலயத்தில், பக்தர்களின் காலை ஆராதனையின் துதியைக் கேட்டுக் கொண்டிருந்த போது, என்ன நினைத்தாரோ தெரியவில்லை; தேவாலயத்தின் மூலையில் இருந்த பலிபீடத்தை விட்டுச் சட்டென்று கீழே இறங்கினார். ராஜாஜி தெரு, கீழ ரத வீதி எல்லாம் கடந்து, தெற்கு ரத வீதிக்கு ஒரு முறை வந்து பார்த்தார். அங்கே ராஜாராம் ஷெட்டில் உள்ள காக்கிச் சீருடைப்பணியாளர்கள், ஸ்பானர், சுத்தியல், நட்டு, போல்டு சகிதம் கருமமே கண்ணாயினராய் ஒரு லாரியின் இரும்பு அச்சைப் பொருந்திக் கொண்டிருந்தனர். சம்பட்டி அடி விண்ணைப் பிளந்தது. இதைக் கண்ணுற்ற தேவன் காக்கிச் சீருடைப் பணியாளர்களை நோக்கி, அக்கினி நட்சத்திர அனல் பார்வை ஒன்றை வீசினார். அவரது கோபம் அவருக்கு ரத்தக் கொதிப்பை அதிகப்படுத்தியிருக்க வேண்டும். அவரது நாசியிலிருந்து வெப்பம் அனலாய்ப் புறப்பட்டது.

‘ஏ, பாவிகளே! அற்ப மனுஷரே! இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. இந்நாள் என்னுடைய நாள். இந்நாளில் நீங்கள் என் தேவாலயத்திற்கு வந்திருந்து, காலை ஆராதனையில் அடியேனை துதித்து, எம்மைச் சேவிக்காமல் போனதற்குக் காரணம் என்ன? உடனே பிரதியுத்தரம் தருவீர்!’ என்றார்.

ராஜாராம் ஷெட்டின் பணியாளர்களின் தலைவன் (அவனுக்குத் தான் சட்டை முழுக்க க்ரீஸ் அழுக்குத்தீற்றல்) உடனடியாக தேவனை நோக்கி, தான் அமர்ந்திருந்த ஜீப் டயர் ஆசனத்தை விட்டு எழுந்திருக்காமலே,

‘யோவ், இந்த லாரி நேத்திக்கு நத்தம்பட்டி பக்கத்துல, ரோட்டுல போகும் போது, அதனோட ஆக்ஸில் முறிஞ்சு போச்சு. அதை உடனடியா வெல்டிங் போட்டு, சரி செஞ்சு, மீண்டும் இந்த லாரிய ரெண்டு நாளைக்குள்ள ஓட்டியாகணும்னு எங்க மொதலாளி அய்யா உத்தரவு. இந்த லாரி, நம்ம சண்முகம் டிரான்ஸ்போர்ட் கம்பெனியோடது. அது பெரிய கம்பெனியில்லா. அதனால உடனடியா, வெல்டு ரிப்பேர் செஞ்சு தந்தா, சாப்பாடும், அத்தோட டபுள் சம்பளமும் தர்றதா மொதலாளி சொன்னாரு. டபுள் சம்பளங்கற போது, அதை விட்டுற முடியுமா? அதனாலத்தான், ராத்திரி பதினோரு மணியில இருந்து, ஓயாம வேலை செஞ்சுக்கிட்டு இருக்கோம். நாளைக்குக் காலையில அநேகமா வண்டி ரெடியாயிடும். நீரு என்னடான்னா, ஞாயிற்றுக்கிழமை, தேவாலயம், ஆராதனைன்னு கதை சொல்லிக்கிட்டு இருக்கிரு! டபுள் சம்பளம் யாரு தருவாவே! நீரு தருவீரா?’ என்று உடனே பதில் தந்தான் பீட்டர் சகாயராஜ்.

இந்தப் பதிலைக் கேட்ட சர்வ வல்லமையுள்ள தேவன் அதற்கு மேலும் அங்கு இருக்கப் பிடிக்காமல், உடனே மேல ரத வீதி வழியாய் ஓடிப்போய், செட்டியக்குடி, ஆத்துக்கடை திடல் வழியாகப் போய் பஸ் ஸ்டாண்டு கடந்து, மீண்டும் தேவாலயத்திற்குள்ளே நுழைந்து விட்டதாகவும், அதற்குப்பின்னர், அவர் தேவாலயம் விட்டு வெளியேறவே இல்லை என்றும் அது பற்றிச் சபை போதகர் ஜான் யாக்கோபு மிக்க விசனப்பட்டதாகவும் சொன்னார்கள்.

ராஜாராம் ஷெட்டைப் பொறுத்தவரை, அது உழைப்பவர் உலகம். காலண்டர், அங்கே தொங்கும் பழைய காலத்து பிரிட்டிஷ் தயாரிப்பு சுவர்க்கடிகாரம், அதன் தூண்களில் நீண்டு, சாயும், சூரிய வெளிச்சம் காட்டும் நாளின் பொழுதுகள், இவை யாவும் அங்குள்ள பணியாளர்களை கிஞ்சிற்றும் பாதிக்காது. எட்டு மணி நேரம் மட்டும் உழைப்பு என்ற தொழிலாளர் நலச்சட்டம் முற்றிலும் செயலிழந்து தோற்றுப் போன இடம் ராஜாராம் ஷெட். ஆறு கால் தூண் மண்டபம் வீதியைப் பார்த்தபடி ‘பஹோ’வென்று திறந்து கிடந்தது. அதற்குக் கதவுகள் கிடையாது. அங்கு உள்ள பாறாங்கல் போல கனமான இரும்பு, எஃகு உபகரணங்கள் திருடப்பட்டதாக சரித்திரமே இல்லை. ஊர் மக்கள் கூட அங்கு உள்ளே பிரவேசிக்க எண்ணியதே இல்லை.

வருஷா வருஷம், ஆடி மாதம் ஆண்டாள் உற்சவம் நடைபெறும் காலத்தில், ஒரு நாள் ஆண்டாள்–ரெங்கமன்னார் இருவரும் சப்பரத்தில் வந்து மேற்படி ராஜாராம் ஷெட்டில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தின் நிழலில் அமர்ந்து இளைப்பாருவர். அங்கு பின்தொடரும் அந்தணர் குழு பிரபந்தப் பாடல்களை இசைக்கும். தொடர்ந்து திருத்துழாயும், குங்குமம், மலர்கள் பிரசாதமும் பக்தர்களுக்கு விநியோகம். அந்த ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் மட்டும், ஊர் மக்கள் மண்டபத்திற்குள் ஜாக்கிரதையாய் கால் வைக்க வேண்டும். இல்லையெனில் தரையிலோ, சுவற்றிலோ அப்பியிருக்கும் க்ரீஸ் அழுக்கு, உடையிலும் பற்றிக் கொள்ளும்.

அந்தணர் குழுவின் துதிப்பாடல்கள் முடிந்தவுடன், ஆண்டாள் – ரெங்கமன்னார் சப்பரம் ராஜாராம் ஷெட்டை விட்டு வெளியேறும். அத்துடன், மணிமண்டபத்தின் ஆன்மீகத் தொடர்பு அற்றுப்போகும். பிறகு லௌகீகம் மட்டுமே. ‘டட்டாங் ட்டாங்’ கென்று உளி, சுத்தியல் அடியின் ஒலி வீதியை நிரப்பும்.

ஷெட்டில் எத்தனை பேர் பணி புரிந்தார்கள் என கணக்கு வழக்கெல்லாம் யாருக்கும் தெரியாது. ‘வந்தால் வரவில் வைப்பதும், இல்லாது போனால் விடுப்பு’ என்று தான் எடுத்துக் கொள்ளப்படும். எல்லாப் பணியாளர்களும் அட்டைக்கரியாய் அழுக்கில் குளித்திருப்பார்கள். அவர்களது சரும நிறமே கருப்பா, அல்லது க்ரீஸ், இஞ்சின் ஆயில் பட்டதால் தோலின் நிறம் ‘மையாய், மரகதமாய்’ மாறியதோ என ஒருவருக்கும் புரியாது.

கல் மண்டபத்திற்கு நேர் எதிரே, வடக்கே, கச்சேரி ரோட்டின் குறுக்கே கடந்தால் தெரிவது மோட்டார் முனியாண்டி கோயில். யந்திர மோட்டாருக்கும், முனியாண்டி சாமிக்கும் என்ன தொடர்பு என்று ஊரார் யாரும் பகுத்தறிவுக் கேள்விகள் கேட்பதில்லை. ராஜாராம் ஷெட்டில் பணி செய்யும் மெக்கானிக்குகள் வருடந்தவறாமல் ஆயுத பூஜை கொண்டாடுவது வழக்கம். அப்படிக் கொண்டாடிய ஒரு சந்தர்ப்பத்தில், தெரு முனையில் கிடந்த செவ்வகக் கல் ஒன்றை எடுத்து, மஞ்சள் வைத்து, குங்குமம் அப்பி, ஒரு கதம்ப மாலையைப் போட்டு விட்டு, ஒரு முழுத் தேங்காயை எடுத்து அதன் முன்னே வடல் போட்டு விட்டுப் போக, அதைத் தொடர்ந்து அடுத்த வருடமும் அதே கல்லுக்கு பல தேங்காய்கள் உடைக்கப்பட்டன.

பிறகு, விளக்கு மாடம் வந்தது. தினசரி மாலை வேளையில் ஒரு மெக்கானிக் அங்கு வந்து விளக்கில் எண்ணை ஊற்றி, சாமி கும்பிட்டு விட்டு, டயர் டியூப்புக்கு வல்கனைசிங் செய்யத் தொடங்கினார். இதைப் பார்த்த சக மெக்கானிக்குகளும், சூடம், சாம்பிராணி ஏற்றி, வாழைப்பழம் கொண்டு வந்து வைத்ததும், அங்கே முனியாண்டி சாந்நித்யம் கொண்டார். ஷெட்டில் உள்ள எல்லாரும் முனியாண்டி சாமியைக் கும்பிட ஆரம்பிக்க, அதைப் பார்த்த சந்தைப் பேட்டை வேதக் கோவிலைச் சேர்ந்த தானியேல் சகாயராஜ், மற்றும் பீட்டர் தேவ அன்பு போன்றோரும் ஏசு ஸ்வாமி பெரியவரா அல்லது தங்கள் ஒர்க்‌ ஷாப் ஷெட் எதிரே உள்ள முனியாண்டி சாமி பெரியவரா என்ற தத்துவார்த்த தர்க்கத்தில் இறங்கி, பிறகு கண்ணால் காணப்படாத பரலோக தேவனை விசுவாசிப்பதை விட, கண்ணெதிரே உள்ள முனியாண்டி சாமியே வல்லமையான தெய்வம் என்றும், பிரத்தியட்ச பிரமாணம் என்றும் உணர்ந்து, அந்த முனியாண்டி சாமிக்கே சகல படையல்களையும் போட ஆரம்பித்து, சாமியின் மகிமையையும், தேஜஸ்ஸையும் மேலும் ஒரு மடங்கு உயர்த்தினர்.

ஒரு பழைய பஸ் பாடியை டிங்கரிங் செய்த போது, கழண்டு விழுந்த நீண்ட தகரத்தகடு ஒன்றை எடுத்து அதை அரை வட்டமாக வளைந்து, அதன் மேலே சாமியின் பேர் எழுதி தூண் நட நினைத்த போது, ராஜாராம் ஷெட்டின் ஒரே எதேச்சதிகாரியான மேனேஜர் சுந்தரம் நயினார், அந்த முனியாண்டி சாமி, மோட்டார் யந்திரங்களைக் காப்பாற்றி, எல்லா விபத்துக்களுக்கும், நாச மோசங்களுக்கும் நீங்கலாக்கி ரட்சிக்கும் சத்தியமான தெய்வம் என்பதாலும், மோட்டார் மெக்கானிக்குகளின் காவல் தெய்வம் அவரே என்பதாலும், அந்த இரும்பு தேவனுக்கு ‘மோட்டார் முனியாண்டி’ எனப் புதிய நாமகரணம் சூட்டினார். ஒரு சுபயோக சுப தினத்தில், ஒரு சிமிண்ட் மேடையின் மேல் கொலு வீற்றிருக்க வைக்கப்பட்ட அந்தச் சாமி அன்று முதல் ‘அருள்மிகு ஶ்ரீ மோட்டார் முனியாண்டி சாமி’ என்ற புதிய பெயருடன் ராஜாராம் ஷெட் பணியாளர்களுக்கு மட்டும், யந்திர அருளும், தொழில்நுட்ப அறிவும் தந்து காவல் தெய்வமானார். ஆயுத பூஜை படையல் சகிதம் மெக்கானிக்குகளால் வணங்கப்பட்டார்.

மோட்டார் முனியாண்டிக்கு ஒரு சிக்கல், அவரது அன்னியோன்யமான மெக்கானிக் பக்தர்கள் ரூபத்தில் வந்தது. கல் மண்டபத்தில், சில சமயங்களில் இட நெருக்கடி ஏற்பட்டு, பழைய பஸ், லாரி வண்டிகள் ரிப்பேர் செய்யப்படுவதற்காக இடம் தேடப்பட்ட போது, ஷெட்டிற்கு நேர் எதிரே வேப்ப மர நிழலில் இருந்த காலியான, விஸ்தாரமான இடம் தான் மிகத் தோதுப்பட்டதாகத் தெரிந்தது. அங்கேயே பஸ். லாரிகளை நிறுத்தி ரிப்பேர் செய்யுமாறு மேனேஜர் சுந்தரம் நயினார் உத்தரவிடவே,

அன்றிலிருந்து மோட்டார் முனியாண்டிக்கு பிடித்தது நிரந்தரத் தலைவலி.

காலை முதல் இரவு வரை, இரவு முதல் காலை வரை, இடையறாது வந்த இயந்திர வெல்டிங் சத்தம், டிங்கரிங் மற்றும் பழைய பாகங்களை உடைத்து மாற்றும் சத்தம், பணியாளர்களின் வசவு, கூப்பாடு, கெட்ட வார்த்தைப் பொழிவுகள் என ஓயாது, ஒழியாது எழுந்த பேரரவத்தால் மோட்டார் முனியாண்டி சாமி, காது சவ்வு கிழிந்து, செவிட்டு முனியாண்டி சாமியாகப் போனது சோகக் கதை.

இப்படியாக, ராஜாராம் ஷெட், அந்தக் கல் மண்டபம், அதற்கு நேர் எதிரே உள்ள வேப்ப மர நிழலில் இருந்த மோட்டார் முனியாண்டி கோவில், இந்த மூன்றுக்கும் இடையே இருந்த ஒரு முக்கோண உறவு, பலப்பல வருஷங்களாய்த் தொடர்ந்து, கால சந்தியில், சூரியனுக்குக் கீழே, காலப் பெருவெள்ளத்தின் ஒரு சிறு துளியில் பன்னெடும் ஆண்டுகளாய் இந்த முக்கோண உறவின் ஸ்தூல மற்றும் சூட்சுமத் தன்மைகள் கூட எந்தப் பார்வையாளனுக்கும் எந்த வித மாற்றத்தையும் கண்ணில் தோற்றுவிக்காததற்கு காரணம் என்ன?

பிரபஞ்சத்தின் அணுத் தத்துவம், நொடிக்கு நொடி உலகம் மாறிக் கொண்டிருக்கிறது என்று ஒரு பௌதீகக் கோட்பாட்டை முன் வைத்தாலும், இந்த ராஜாராம் ஷெட் விஷயத்தில் எந்த விஞ்ஞான விதிகளும் அதற்குப் பொருந்தாது. காலமே பனிக்கட்டி போல் உறைந்து போய், தேக்கமுற்று நின்ற இடம் அது தான்.

சிக்கல் வெடித்தது எப்போது என்றால், ராஜாராம் ஷெட்டின் டிரஸ்டி ராமானுஜம் செட்டி, கோதண்டராம ராஜாவிடம் மண்டபத்தைக் காலி செய்யச் சொல்லி வாய்மொழி வேண்டுகோள் விடுத்த போது தான். பண பலமும், அதிகார பலமும், முரண்டு பிடிக்கும் குணமும் கொண்ட கோதண்டராம ராஜா இடத்தைக் காலி செய்ய மறுக்க, பத்து நாட்களில் அவர் அலுவலகத்திற்கு ஒரு வக்கீல் நோட்டிஸ் பதிவுத்தபாலில் அனுப்பப்பட்டது. கோதண்டராம ராஜா அந்த வக்கீல் நோட்டிஸை எடுத்துத் தன் முக வேர்வையைத் துடைத்துக் கொண்டார். பிறகு, தன் ஆஸ்தான வழக்கறிஞர் ப்ளீடர் சுதர்ஸனத்தை அணுகி, மேற்படி வக்கீல் நோட்டிஸைக் கொடுத்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டினார். நெற்றியில் பளிச்சென்று ஒளிரும் மூன்று கோடுகள் உடைய திருமண்ணும், காதில் கடுக்கனும் அணிந்த செம்பொன் நிறத் தோல் பளபளத்த ப்ளீடர் சுதர்ஸனம் அந்த வக்கீல் நோட்டிஸை நிதானமாகப் படித்துப் பார்த்துவிட்டு,

– ‘ராஜா! நல்லாக் கேட்டுக்கோங்கோ! நீங்க இப்ப வாடகை கொடுத்து நடத்திண்டு வர்ற பஸ் ரிப்பேர் ஷெட்டை ஒரு மாசத்துல காலி பண்ணித்தரச் சொல்லி உங்க கட்டிடத்து ஓனர் லாயர் நோட்டிஸ் அனுப்பிச்சுருக்கா. நீங்க என்ன பண்ணப்போறேள்?’

– ‘சாமி! என்ன சாமி செய்யறது? எனக்கே ஒண்ணும் அடைபடல. இப்போதைக்கு காலி பண்ண முடியாது. மலை மலையா இரும்புச் சாமானை வாங்கிக் குவிச்சுட்டேன். இப்ப ஷெட்டைக் காலி பண்ணினா, இதே மாதிரி வேற இடம் ஊருக்குள்ளே அகப்படாது. அதனால நீங்களாப் பாத்து உங்க படிப்புக்கு ஏத்த மாதிரி, ஒரு சரியான பதில் கொடுத்துடுங்க!’ என்றார் கோதண்டராம ராஜா.

– ‘அவ்வளவு தானே! நீங்க ஏன் கவலைப்படறேள்? நானாச்சு. விட்டுடுவனா? அந்த வைத்தியநாதன் யாரு? அவன் எனக்கு ஒரு சுண்டைக்காய் மாதிரி. ரிப்ளை நோட்டிஸ்ல நான் கொடுக்கற கொடுப்புல அவன் தண்ணி கக்கப் பொறான் பாருங்க!’ என்றார் ப்ளீடர் சுதர்ஸனம்.

முழு நூறு ரூபாய்த் தாள்கள் மூன்று பெற்றுக் கொண்ட சுதர்ஸனம், அன்றிரவே உட்கார்ந்து, தான் அது வரை படித்திருந்த எல்லா பிரிட்டிஷ் ஆங்கில வாக்கியங்களையும், சொலவடைகளையும் பயன்படுத்தி, ஐந்து பக்கங்களில் சுடச்சுட ஒரு பதில் நோட்டிஸ் தயார் செய்து, மறுநாளே அதை டைப் செய்து, பதிவுத்தபாலில் அரு.வைத்தியநாதனுக்கு அனுப்பி வைக்க, அந்தப் பதில் நோட்டிஸை படித்துப் பார்த்த வைத்தியநாதனுக்கு நெற்றி நரம்பு யாவும் கோபத்தில் துடித்தது.

– ‘அந்த நாமக்கார ப்ளீடர் சுதர்ஸனம், எங்கிட்டயே வேலையைக் காட்டிட்டானா? வரட்டும். கோர்ட்டுல அந்தாள வெச்சுக்கறேன்’ என்று மனதில் கறுவியபடி சென்னைக்குத் தொடர்பு கொண்டார்.

சென்னையில் வைர வியாபாரம் செய்யும் கலகலவல்ல ராமானுஜம் செட்டி தான் அந்த ராஜாராம் ஷெட் இருக்கும் கல் மண்டபத்தின் நிர்வாகக் காரியதரிசி. ராமானுஜம் செட்டி, வைர வியாபாரம் செய்யும் கோமுட்டிச் செட்டி என்னும் வைசியப் பிரிவைச் சேர்ந்த வீர வைணவர். அவர் உடனடியாக தனது டிரஸ்ட் வழக்கறிஞரான அரு. வைத்தியநாதனுக்கு கடுதாசி எழுதி,

‘ஸ்வாமி! தாங்கள் இவ்விஷயத்தில் என்ன செய்ய சித்தமாய் இருக்கிறீர்களோ, அவ்வண்ணமே செய்து கொள்ளவும். கோமுட்டி செட்டி டிரஸ்ட்டுக்கு நான் நிர்வாக காரியஸ்தன் என்பது உண்மையே. ஆனாலும், எங்கள் வகையறா ஆட்களின் ஆஸ்தி, பூஸ்தி யாவற்றுக்கும் பல வருஷங்களாகவே நீங்கள் தானே ரட்சகர்!

ஆகவே, நீங்கள் இந்த ராஜாராம் ஷெட் விஷயத்தில் கோர்ட்டில் வியாஜ்யம் நடத்தித் தான் தீர்வு காண முடியும் என்றால், அவ்வண்ணமே செய்து கொள்ளுமாறு தேவரீரைப் பணிந்து பிரார்த்தித்துக் கொள்ளுகிறேன். எமக்கு மெட்ராஸ் பட்டினத்தில் வைர வியாபாரம் நடப்பதால், இந்த வியாஜ்யம் நடத்த நேர அவகாசம் கிடையாது. ஆதலால், எங்கள் தூரத்து உறவினரும், மேற்படி கோமுட்டிச் செட்டி டிரஸ்டின் மற்றொரு உறுப்பினருமான கலகலவல்ல கண்ணபிரான் செட்டியை மேற்படி வழக்கில் எமது பவர் ஏஜெண்டாக நியமித்து மேற்படி வழக்கை தேவரீரே நடத்திக் கொள்ளுமாறும், வியாஜ்யம் நடத்த ஏற்படும் சகல சிலவுகளையும் பைசா விடாமல் கணக்கு எழுதி, ரசீதுகளை கண்ணபிரான் செட்டியிடம் கொடுத்து, உங்களுக்குச் சேர வேண்டிய ப்ளீடர் ஃபீஸ் உள்ளிட்ட கோர்ட் செலவுத் தொகைகளையும், குமாஸ்தா, டவாலி, மஸால்ஜி, ஆமீனா ஆகியோருக்குச் சேர வேண்டிய மாமூல், இனாம்களையும் வசூலித்துக் கொள்ள வேண்டுமாயும் ஸ்வாமியிடம் பணிந்து வேண்டிக்கொள்கிறோம்.

ஸ்வாமியின் வீட்டில் உள்ளோர் சேம நல லாபங்களையும் அடியேன் விசாரித்ததாகச் சொல்லவும்.

தாஸன்,

இவண்,

எஞ்ஞான்றும் எந்தெய்வம் ஶ்ரீமந்நாராயணன் அடிமை,

தாஸன் கலகலவல்ல ராமானுஜம் செட்டி.’

கடிதத்தைப் படித்த அரு.வைத்தியநாதன், ராஜாராம் ஷெட் சம்பந்தப்பட்ட ஆவணங்களைத் தயார் செய்து பத்து நாட்களுக்குள், ஶ்ரீவில்லிபுத்தூர் முன்சீப் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ததும், எதிர்த்தரப்பான கோதண்டராம ராஜாவுக்கு, நீதிமன்ற சம்மன் சார்பு செய்யப்பட்டது. அவர் அதைக் கொண்டு போய், ப்ளீடர் சுதர்ஸனத்திடம் கொடுக்க, ப்ளீடரோ எகத்தாளமாய் ஒரு சிரிப்பு சிரித்து விட்டு,

– ‘சரி, வேலைய ஆரம்பிச்சுர வேண்டியது தான் ராஜா. நாளை முதல் கச்சேரி களை கட்டும். நேர்ல வந்து நீங்களே பாத்துக்கோங்க!’ என்று சொல்லி விட்டு, தன்னுடைய தலகாணி சைஸ் சி.பி.சி. புத்தகத்துக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டார்.

கச்சேரி ரோட்டில் உள்ள திருமலை நாயக்கர் மஹாலின் உள்ளே உள்ள முன்சீப் கோர்ட்டில் வியாஜ்யம் ஆரம்பமானது.

அதன் மைய ஹாலில் உள்ள குதிரை லாடம் போன்ற வடிவத்தில் இருக்கும் பெரிய சைஸ் டேபிளின் எதிரெதிர் முனைகளில், ஜட்ஜின் டெய்ஸீக்கு நேர் கீழே உட்கார்ந்திருந்த சுதர்ஸனமும், அரு. வைத்தியநாதனும் சிவில் வழக்குகளில் இரண்டு சாம்ராட் சக்கரவர்த்திகள். இருவரும் ஒருவரையொருவர் பார்த்து முகமன் சொல்லிக் கொண்ட பின், ஒரு மெல்லிய புன்முறுவலுடன், ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அதற்கு என்ன அர்த்தம் என்று அவர்கள் இருவருக்கும் மட்டுமே தெரியும்.

தாவா வியாஜ்யம் தொடங்கியது. அரு.வைத்தியநாதன் தாக்கல் செய்த பிராதுக்கு, எதிர் வாதுரை தாக்கல் செய்ய பல வாய்தாக்கள் வாங்கினார் ப்ளீடர் சுதர்ஸனம். பிறகு ஒரு வழியாய், எல்.சி. (Last Chance) என்று கோர்ட்டார் உத்தரவிட்ட பிறகு, ஒரு நாள், எதிர் வழக்குரை ஒரு வழியாய் தாக்கலானது. வழக்கு விசாரணை என்று குறிப்பிடப்பட்டு, அதற்கு நான்கு தேதிகள் கழிந்த பின்னர், ப்ளீடர் சுதர்ஸனம் தனது ஆபீஸ் குமாஸ்தாவை அனுப்பி வைக்க, அந்தப் பழம் தின்று கொட்டை போட்ட குமாஸ்தாவோ, கோர்ட் ஹெட் கிளார்க்கை ஒரு நாள் காலை, ராஜநாயகம் பிள்ளை ஹோட்டலில் டிபன் சாப்பிடும் சாக்கில் சரி பண்ணி, ஹெட் கிளார்க்கின் காபி, டிபன் செலவை குமாஸ்தாவே கொடுத்து, அத்துடன் ஹெட் கிளார்க்கின் குடும்பத்திற்கும் பெரிய டிபன் பார்சல் வாங்கிக் கொடுத்து, இருபது ரூபாயை எடுத்து சிரித்துக் கொண்டே ஹெட் கிளார்க்கின் உள்ளங்கையில் அழுத்த, அதைப் புரிந்து கொண்ட அவரோ,

‘உங்களுக்கு கோர்ட்ல என்ன காரியம் ஆகணுன்னு மட்டும் சொல்லுங்க சார்!’ என்று பல்லவியைப் பாட ஆரம்பிக்க, சுதாரித்துக் கொண்ட வக்கீல் குமாஸ்தா,

– ‘சார், இந்த ஓ.எஸ். இருநூத்து நாப்பத்து நாலுக்கு அறுபத்து மூன்று கேஸ் கொஞ்சம் சிக்கலான கேஸ். அதைக் கொஞ்சம் டிரையல் ஓப்பன் பண்ணாம ஒரு இழுப்பு இழுத்து விட்டீங்கன்னா, அதுவே போதும்’ என்று பல்லவியைத் தொடர, ஹெட் கிளார்க் புரிந்து கொண்டு, ஒரு சிட்டிகை நயம் ரத்தினம் பட்டணம் பொடியை எடுத்து மூக்கில் உறிஞ்சியபடி, ஒரு நீண்ட இழுப்பு இழுத்தார். அதன் பின் விளைவு என்ன என்று ஒரு சில வாரங்களில் தெரிந்தது.

ராஜாராம் ஷெட் வழக்கின் கேஸ் கட்டு மொத்தமும் வரிசையில் கட்டக் கடைசிக்குத் தள்ளப்பட்டது. காலையில் வழக்கு எண்ணைச் சொல்லி, சூட் கிளார்க் வாதி, பிரதிவாதிகள் பேர் சொல்லி அழைக்கும் படலம் முடிவதற்குள் மதியம் பன்னிரண்டரை மணி ஆகிவிடும். கரண்ட் போய் விடும். அரண்மனை போன்ற கோர்ட் வளாகம் இருளில் மூழ்கி விடும். மூன்று அடுக்கு உடை அணிந்த நீதிபதி வெப்பத்தில் புழுங்கி வியர்ப்பார். கோர்ட் டவாலி அவருக்கு பனை ஓலை விசிறியால் விசிறி விடுவான். அதற்கு மேலும் பொறுக்க மாட்டாமல், முன்சீப் மற்ற கேஸ்களை எல்லாம் வாய்தாப் போடும்படி சூட் கிளார்க்கிடம் சொல்லி விட்டு, ‘மதியச் சாப்பாட்டுக்குப் பின்பு வழக்கு விசாரணைகள்’ என்று சொல்லி விட்டு மேடையை விட்டிறங்கி சேம்பருக்குப் போய் விடுவார்.

இப்படியே ஒவ்வொரு முறையும் வாய்தா தேதியில், ராஜாராம் ஷெட் கேஸ் பண்டல் எடுக்கப்படாமலேயே வாய்தா போடப்பட்டு, எட்டு மாதங்கள் அதிலேயே ஓடிவிட்டது.

அதற்கு அடுத்த ஏப்ரல் மாதத்தில் முன்சீப் மாற்றலாகி, சிவகங்கை கோர்ட்டுக்குப் போய் விட்டார். புதிதாகப் பணியேற்ற நாகர்கோவில் முன்சீப் ரொஸாரியோ கிளாடிஸ்டன் பதவியேற்றதுமே குடலிறக்க ஆப்பரேஷனுக்காக மருத்துவ விடுப்பு போட்டு விட்டு சொந்த ஊரான நாகர்கோவிலுக்குப் போய் விட, அவருக்குப் பதிலாக அவரது இடத்தையும் சேர்த்து கூடுதல் பொறுப்பு என்று பார்த்து வந்த மாஜிஸ்திரேட்டு, அதிகப் பணிச்சுமையைப் பார்த்து விட்டு, பயந்து போய், ஒவ்வொரு நாளும் சிவில் கட்டுக்களை எல்லாம் எடுத்து ரெண்டு மாதம், ரெண்டு மாதம் என்று வாய்தா தேதி போட, மேலும் ஆறு மாதம் ஓடியது.

மருத்துவ விடுப்பில் போன நாகர்கோவில் முன்சீப் ரொஸாரியோ கிளாடிஸ்டன் பணிக்குத் திரும்பியதும், பழைய வழக்குகளை எல்லாம் எடுத்து பைசல் செய்ய வேண்டும் என ஹெட் கிளார்க்கிடம் உத்தரவிட்டார். ஆனால், மாயா ஜால, மந்திர ஜால, இந்திர ஜால வித்தைகளைக் கற்றுத் தேர்ந்த ஹெட் கிளார்க், மேற்படி ‘ராஜாராம் ஷெட்’ வழக்கின் மொத்தக் கேஸ் கட்டும் பிற கட்டுகளுடன் கலந்து காணாமல் போய் விட்டதால், அதைத் தேடி எடுக்க அவகாசம் கேட்டு, முன்சீப்பிடம் பணிந்து வேண்டிக் கொண்டார். கர்த்தராகிய ஏசு கிறிஸ்துவையே பகைத்துக் கொண்டாலும், ஹெட் கிளார்க்கைப் பகைத்துக் கொள்ள மாட்டேன் என்ற கொள்கை உறுதி கொண்டவர் முன்சீப் ரொஸாரியோ கிளாடிஸ்டன். (ஏனெனில், கோர்ட் எழுத்தர்களின் பராக்கிரமம் அப்படி!)

‘ஒண்ணும் அவசரமில்லை. நிதானமா தேடி எடுங்க. எங்காவது மற்ற கட்டுக்களோட கலந்து இருக்கும். ஆனா, நீங்க கண்டிப்பா அதைத் தேடி எடுத்துத் தரணும்’ என்று கண்டிப்புடன் உத்தரவிட்டார் முன்சீப்.

பிற்பாடு ஒரு நாள், கேஸ் கட்டு, ஹெட் கிளார்க்கினால் ‘தேடி’ எடுக்கப்பட்டு வழக்கு டிரையல் ஸிஸ்ட்டில் போடப்பட்டது. (கேஸ் கட்டை ஒளித்து வைத்ததே ஹெட் கிளார்க் தானே!)

ப்ளீடர் சுதர்ஸனம், மேற்படி வழக்கில் வாதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிராதுடன் உள்ள ஆவணங்கள், அசல் ஆவணங்கள் அல்ல. அவை யாவும், சார்பதிவாளர் அலுவலக நகல்கள் என்பதால் வழக்கு விசாரணை நடத்துவது சரியல்ல, முறையல்ல, நீதியல்ல, நியாயமல்ல என்று ஒரு சீராய்வு மனுவைத் தயார் செய்து, அதை மயிலாப்பூர் வக்கீல் சிவில் புலி ஶ்ரீநிவாஸாச்சாரியார் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, ஶ்ரீவில்லிபுத்தூர் கீழமை நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குக்கு இடைக்காலத் தடை வாங்கினார்.

மூன்று முடிச்சு போடுவது திருமாங்கல்யத்தில். அது வாழ்நாளெல்லாம் தொடரும். சிவில் வழக்கில் இரண்டு முடிச்சுக்கள் போட்டாலே அவிழ்ப்பது வெகு சிரமம். சீராய்வு மனுவைத் தாக்கல் செய்து, அந்த உத்தரவின் நகலைக் காட்டி, ப்ளீடர் சுதர்ஸனம் திறந்த நீதிமன்றத்தில் பலர் முன்னிலையில் அதைப் பகிரங்கமாக வாசித்துக் காட்ட, நீதிமன்றமே ‘ஆ’ வென்று வாய் பிறந்தது.

பத்து மாதங்கள் கழிந்த பின்னால், ஒரு வழியாக வழக்கிற்குத் தேவையான அசல் ஆவணங்கள் கலகலவல்ல ராமனுஜம் செட்டியாரால் தேடி எடுக்கப்பட்டு, ஒரு ஆள் மூலமாகக் கொண்டு வந்து தரப்பட்டு, பிறகு அதை வைத்து உயர்நீதிமன்ற ‘ஸ்டே தடை உத்தரவை விலக்க வைத்து, அந்த உத்தரவைக் கொண்டு வந்து ஶ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் அரு. வைத்தியநாதன், முன்சீப் முன்னால் கொண்டு வந்து படிக்கலாம் என்று வாய்தா தேதிக்கு முன்பாக தயாரான போது, ரொஸாரியோ கிளாடிஸ்டன் பதவி உயர்வில் வேலூருக்கு சார்பு நீதிபதியாகப் போய் விட, மீண்டும் ஶ்ரீவில்லிபுத்தூர் முன்சீப் நீதிமன்றம், முன்சீப்பே இல்லாமல், நொண்டியடித்தபடியே நடந்து கொண்டிருந்தது.

ஒரு வழியாக, பிற்பாடு, வழக்கு விசாரணை துவங்கியதும், சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்வதில் ப்ளீடர் சுதர்ஸனம் சகல விதமான ஜவ்வு மிட்டாய் உத்திகளையும் பின்பற்றி, வாய்தா வாங்கி, வாய்தா வாங்கி, வாதி தரப்பு சாட்சிகளை நீதிமன்றத்துக்கு மாதக்கணக்கில் வரவழைத்து அவர்களைக் கலங்கடித்தார்.

பிரதிவாதி தரப்பில் கோதண்டராம ராஜாவை முதல் விசாரணை செய்ய அவரைப் பெட்டி ஏற்றவே நான்கு மாதம் செலவழித்து வாய்தாவில் ஓட்டினார் சகலகலா வல்லவரான சுதர்ஸனம்.

முதல் விசாரணையும், சாட்சிகளிடம் குறுக்கு விசாரணையும் முடிந்த நிலையில், சாட்சி விசாரணையை முடித்துக் கொள்வதாகச் சொன்ன சுதர்ஸனம், சில நாட்களிலேயே மீண்டும் சாட்சிகளை மறு விசாரணை செய்ய வேண்டும் என மனு ஒன்றைத் தாக்கல் செய்து வைத்தார்.

வாதி தரப்பு சாட்சிகளோ சோர்ந்து இளைத்துப் போனார்கள். விசாரணை எல்லாம் முடிந்தவுடன், வாய்மொழி வாதுரைகளை வழங்க மேலும் வாய்தாக்கள் வாங்கி, வழக்கை மலையாள ரப்பர் போல இழுத்த சுதர்ஸனம், ஏகப்பட்ட இடைநிலை மனுக்களை தாக்கல் செய்ய, கோட்டில் உள்ள ‘ராஜாராம் ஷெட் கேஸ் கட்டு பத்து மாதப் பிள்ளைத்தாய்ச்சிக்காரி வயிறு உப்பியது போல, ஏகப்பட்ட காகிதங்களோடு பெருத்து விட்டது. ஒவ்வொரு வாய்தாவிலும் அந்தக் கேஸ் கட்டை எடுத்து நீதிபதியின் மேஜை மேல் சூட் கிளார்க் வைக்க, அதன் முக்கால் அடி உயரத்தையும், அரைத் துலாம் அளவுக்கு உள்ள அதன் எடை பருமனையும் பார்த்த சிவில் முன்சீப், கண்ணை மூடிக் கொண்டு இரண்டிரண்டு மாதங்களாக வாய்தா போட்டார். வழக்கின் வாதுரைகளை சமர்ப்பிக்க வாதி தரப்பும், பிரதிவாதி தரப்பும் மாறி மாறி கால அவகாசம் கேட்கவே, அது மேலும் மேலும் நீண்டு கொண்டே போனது.

ஒரு ஏப்ரல் மாதம் இறுதியில் ‘ராஜாராம் ஷெட்’ வழக்கு வாய்தாவுக்கு வர, உடனே தன் நாற்காலியில் இருந்து எழுந்து ப்ளீடர் சுதர்ஸனம்,

– ‘யுவர் ஆனர், இந்த வழக்கை மே மாதம் கோடை விடுமுறைக்குப் பின்பு எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். கோர்ட்டாரவர்களுக்கு எனது கோடை விடுமுறை நல்வாழ்த்துக்கள்! ‘என்று தன் வாய்மொழியாலேயே பூங்கொத்துக்கள் தந்து வாழ்த்த, உச்சி குளிர்ந்த முன்சீப்,

– ‘ஓகே, மிஸ்டர் சுதர்ஸனம்! தங்கள் விருப்பப்படியே!’ என்ற சொல்லி ரொம்ப சௌகரியமாக மூன்று மாதங்களுக்கு கேஸைத் தள்ளி வைத்து விட்டு கர்நாடகாவில் உள்ள தன் உறவினரைப் பார்க்கப் போய் விட்டார்…

மேற்படி வழக்கின், இறுதித் தீர்ப்பில், தெற்கு ரத வீதி கல் மண்டபம், சென்னை கலகலவல்ல கோமுட்டி செட்டி டிரஸ்டுக்கே ஏகமாய்ப் பாத்தியப்பட்டதென்று முன்சீப் நீதிமன்றம் விளம்புகை செய்தும், அதில் வாடகைதாரராகக் குடியிருக்கும் ‘ராஜாராம் ஷெட்’ கோதண்டராம ராஜா, தீர்ப்புக் கண்ட முப்பது நாளில் ஷெட்டை காலி செய்து வழக்கின் பவர் ஏஜெண்ட் கண்ணபிரான் செட்டி வசம் ஒப்புவிக்க வேண்டும் என்று உத்தரவு தரப்பட்டது.

வழக்கின் முடிவை எதிர்த்து, சுதர்ஸனம் மேல் முறையீட்டுக்கு சார்பு நீதிமன்றத்தில் அப்பீல் தாக்கல் செய்தார். முன்சீப் கோர்ட்டில் விளையாடிய சகல வாய்தா விளையாட்டுக்களையும் விளையாடி, நாலரை வருஷம் ஓட்டினார். நீதிபதிகள் மாறி, கிளார்க்குகள் மாறி, ஆபீஸ் குமாஸ்தாக்கள் மாறி, சிலர் பணி மூப்பு அடைந்து, ஓய்வு பெற்ற நிலையில், ராமானுஜம் செட்டிக்குச் சாதகமாக அப்பீல் தீர்ப்பும் வந்தது.

இரண்டாம் மேல்முறையீடு, உயர்நீதிமன்றத்தில் என்பதால், கேஸ் கட்டையும், சார்பு உயர்நீதிமன்ற தீர்ப்பாணை நகலையும் எடுத்துக் கொண்டு, சென்னைக்கு ரயிலேறிய சுதர்ஸனம், மயிலாப்பூர் வக்கீல் சிவில் புலி ஶ்ரீநிவாஸாசாரியாரிடம் கேஸ் கட்டையும் பணத்தையும் கொடுத்து விட்டு,

– ‘இந்த கேஸ் முடியவே முடியக்கூடாது. நீங்க என்ன பண்ணணுமோ, அதைப் பண்ணிருங்கோ’ என்று வேண்டுகோள் ஒன்றைப் பணிந்து வைக்க,

– ‘நீ ஒண்ணும் கவலைப்படாத சுதர்ஸனம். இந்தக் கேஸ் கட்டு மெட்ராஸை விட்டுத் தாண்டாது. அதுக்கு நான் கேரண்டி. அப்படி இந்தக் கேஸ் மெட்ராஸ் ஹைகோர்ட்டைத் தாண்டினா, இனிமே நான் கோட்டு, கவுன் போட மாட்டேன். போதுமா?’

என்று வீராவேச சபதம் எடுத்த சிவில் புலி, மகாபாரதத்தில் கிருஷ்ணன் கௌரவர்களிடம் ஆடிய சகல சூது, வாதுகளையும் ஆடி, மெட்ராஸ் உயர்நீதிமன்றத்திலேயே ‘ராஜாராம் ஷெட்’ கேஸ் கட்டை உறங்க வைத்து,

‘பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு…’

என்று வாய்தாப் பாட்டு பாடினார்…

ஒரு நாள் பிற்பகல், ஶ்ரீவில்லிபுத்தூரில் பங்குனி வெய்யில் கொளுத்திக் கொண்டிருந்த போது, கச்சேரி ரோட்டில் உள்ள தன் ஆபீசில் சட்டையைக் கழட்டிப் போட்டு விட்டு, வெற்று உடம்புடன் ஒரு ஓலை விசிறியால் விசிறிக் கொண்டு பெருமூச்சு விட்டபடி, அரு.வைத்தியநாதன் வாசல் கதவைப் பார்த்தபடி உட்கார்ந்திருக்க, தந்தி அலுவலகப் பணியாள் வந்து ரொம்ப பவ்யமாக ஒரு தந்தியைக் கொண்டு வந்து கொடுக்க, அதில், ராமானுஜம் செட்டி மாரடைப்பால் இறைவனடி சேர்ந்ததாகத் தகவல் வந்திருந்தது. திடுக்கிட்டுப் போன வைத்தியநாகன் உடனடியாய் ரயில் பிடித்து, சென்னைக்குப் போய் மரியாதை நிமித்தமாய் அவரது குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்து விட்டு ஊர் திரும்பினார்.

ப்ளீடர் சுதர்ஸனம், தனக்கு வயது முதிர்ந்து விட்ட காரணத்தால், பிள்ளை கல்யாண சுந்தரத்தை தன்னுடைய இடத்தில் நிலை நாட்டி விட்டு, தான் அமர்ந்து கேஸ் கட்டுகளைப் படித்த அதே விக்டோரியா காலத்து ரோஸ்வுட் நாற்காலி, அதே சி.பி.சி. சிவில் புரோஸீஜர் கோடு புத்தகம், அதே எம்.எல்.ஜே. ஜர்னல்கள், கனத்த லெதர் பைண்டு புத்தகங்கள், மர அலமாரிகள், தரையில் நிற்கும் நீண்ட கழுத்து கொண்ட ராலிஃபேன், தலை நரைத்த நோஞ்சான் குமாஸ்தா, எடுப்பு ஆள் பையன், மற்றும் அதே மூங்கில் தடுக்கு போடப்பட்ட திண்ணை உள்ள ஆபீஸ், இராஜபாளையம் ராஜுக்கள் கொண்டு வந்த தந்த சிவில் கேஸ் கட்டுக்கள், மைக்கூடு, பார்க்கர் பேனா, இவை யாவற்றையும் தனது ஏக புத்திரன் திருவளர்ச்செல்வன் சிரஞ்சீவி கல்யாண சுந்தரத்துக்கு தத்தம் செய்து அர்ப்பணித்து விட்டு, தான் வழக்கறிஞர் தொழிலில் இருந்து ரிட்டையரானதை சென்னை பார் கவுன்சிலுக்கு ஒரு லெட்டர் எழுதித் தெரிவித்து விட்டு, ஶ்ரீவில்லிபுத்தூர் நாடகசாலைத் தெருவில் உள்ள தன் பெரிய, பழைய காலத்து இரும்பு கிர்டர்கள் வைத்துக் கட்டிய அரண்மனை வீட்டின் கூடத்தில் உள்ள சாய்வு நாற்காலியில் ஓரேயடியாகச் சாய்ந்து விட்டார்…

சிவில் வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு கலி காலத்தையும், ஒரு ஊழிக் காலத்தையும், கடந்து, அதன் இறுதித் தீர்ப்பு வந்த போது, ஒன்பது வருடங்கள் கடந்து சென்று விட்டிருந்தன. மேல்முறையீட்டு வழக்கின் உத்திரவு கோமுட்டி செட்டி டிரஸ்டுக்குச் சாதகமாய் வந்த போது, அந்தத் தகவல் தபால் மூலமாய் ஶ்ரீவில்லிபுத்தூருக்குப் போய்ச் சேர்ந்த போது, அரு.வைத்தியநாதனுக்கு அவரது புத்திரன் ஶ்ரீதர் வருஷ தெவசம் செய்து கொண்டிருந்தான்.

மேல்முறையீட்டுத் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்த பிரதிவாதி தரப்பு வக்கீல் கல்யாண சுந்தரம், தனக்கென்று அந்த சீராய்வு மனுவை நடத்தித் தர புதிய வக்கீல் ஒருத்தரை மதராஸ் பட்டணத்திலேயே தேடிக் கொள்ள வேண்டியதாயிற்று. காரணம், பழைய ஹைகோர்ட் வக்கீல் சிவில் புலி ஶ்ரீநிவாஸாசாரியார், அந்த வழக்கின் சீராய்வு மனுவை தாக்கல் செய்ய வக்காலத்தில் கையெழுத்துப் போடுவதற்கு உயிரோடு இல்லாததே காரணம். சீராய்வு மனு தாக்கல் செய்த கையோடு ஶ்ரீவில்லிபுத்தூருக்குத் திரும்பி வந்த கல்யாண சுந்தரம், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, நரம்பு மண்டலக் கோளாறினால் படுத்த படுக்கையாகிப் போனது ரொம்ப சோகமான விஷயம்.

அதை விட சோகம், சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், இன்னும் ஒரு மூணு நாலு வருஷம் ராஜாராம் ஷெட்டில் தொழிலை ஓட்டலாம் என்ற இறுமாப்பில் கோதண்டராம ராஜா, ஒரு ஞாயித்துக்கிழமை அன்று, தன் சகாக்களுடன் இராஜபாளையம் அருகே மேற்கு மலைச்சாரலில் ஒரு தென்னந்தோப்பில் அமர்ந்து, சோம பானம், சுரா பானம் போன்ற உற்சாக பானங்களை தன் வயிற்றில் இடங்கொள்ளாமல் போகுமட்டும் ஊற்றிக் கொள்ள, கொஞ்ச நேரத்தில் ‘அய்யோ இடது மார் வலிக்கிறதே’ என்று நெஞ்சைப் பிடித்துக் கொள்ள, அவர் ஆஸ்பத்திரிக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட, ஆஸ்பத்திரியில் அவரது உடலைப் பரிசோதித்த டாக்டர்,

‘ஸாரி! அவர் இறந்து போய் ஒரு மணி நேரம் ஆச்சே!’ என்று ரிப்போர்ட் வழங்க, கோதண்டராம ராஜாவுக்கு பதினாறாம் நாள் காரியங்கள் முடிந்த நிலையில், அவரது ஸ்தானத்திற்கு வாரிசாய் வந்தார் அவரது மகன் மாசிலாமணி ராஜா.

சிவில் வழக்கு நடந்துவது என்றால் வாய்தா வாங்குவது. வாய்தா வாங்குவது என்றால் சாக்குப்போக்கு சொல்வது. சாக்குப்போக்கு சொல்வது என்றால், காரணங்களைக் கண்டுபிடிப்பது. சிவில் வழக்கில் காரணங்களைக் கண்டறிபவர் நல்ல வக்கீல், இதைச் செய்பவரே திறமையான வழக்கறிஞர். அவரே தொழிலில் வெற்றி கண்டவர் ஆவார்.

சீராய்வு மனுவில் தீர்ப்பு வந்த பிறகு, எஸ்.எல்.பி. எனப்படும் சிறப்பு அனுமதி பெற்று, ‘ராஜாராம் ஷெட்’ கேஸ் கட்டு ரயிலில் டெல்லிக்குப் பயணமானது.

சுந்தீப்தோ பந்தோபாத்யாபா என்ற வாயிலேயே நுழையாத பெயர் கொண்ட மூத்த வழக்கறிஞர் அப்பீலில் ஆஜரானார். டெல்லியில் சில மாதங்களில் குளிர் அதிகமாகும். குளிர் காலத்தில் பனி உறையும். மக்கள் யாவரும் வீட்டை விட்டு வெளியேறாமல், வீட்டைப் பூட்டி விட்டு, உள்ளேயே கிடந்து உறங்க ஆரம்பித்து விடுவார்கள். பனிக்காலத்தில் உறங்க ஆரம்பித்த ‘ராஜாராம் ஷெட்’ கேஸ் அப்பீல் கட்டு நிரந்தரமாய்த் தூங்கிப் போய் விட்டது. நாள் கணக்கில், மாதக்கணக்கில் என்று இல்லாமல் கீழே உள்ள நீதிமன்றங்களில் பயணித்து வந்த காரணத்தால், அசதியாக, வருடக்கணக்கில் உறங்கி விட்டது அந்தக் கேஸ் கட்டு.

பிறகு ஒரு நல்ல சுபயோக தினத்தில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நல்ல மனோநிலையில் இருந்தபோது, சுந்தீப்தோ பந்தோபாத்யாயா, இந்த ‘ராஜாராம் ஷெட்’ கேஸ் பற்றி விவாதிக்க ஆரம்பிக்க, வழக்கின் ஆதியில் இருந்து வந்த பூர்வோத்திரங்களை விசாரித்த ப்ரானேஷ் சக்ரபோர்த்தி என்னும் அந்த நீதிபதி சிரித்துக் கொண்டே,

I think nothing survives in this case, (‘இவ்வழக்கில் எதுவுமே உயிரோடு இல்லை என நான் எண்ணுகிறேன்’) என்று திறந்த நீதிமன்றத்தில் கிண்டலான விமர்சனத்தை முன் வைக்க, அதைக் கேட்ட உச்சநீதிமன்றமே குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க, சிரிப்போடு சிரிப்பாக, வழக்கில் கோமுட்டி செட்டி டிரஸ்டுக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கி, அப்பீல் மனுவை ரத்து செய்து உத்தரவிட, அந்தத் தீர்ப்பு தில்லிக்கு நேர் கீழே தென் மூலையில் உள்ள ஶ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள முன்சீப் நீதிமன்றத்தை வந்து எட்டுவதற்கே ஆறு மாத காலம் பிடித்தது.

ராஜாராம் ஷெட் வழக்கின் பூர்வீகக் கதை, அதன் சாரம் என்று எதையுமே அவ்வூரில் நினைவில் வைத்துக் கொள்ளாதபடிக்கு நினைவுத்தடங்களிலும் முழு முற்றாய் அழிந்து போன தாவா வழக்கு மங்களம் பாடப்பட்டு, முடிவுக்கு வந்தது என்ற விஷயம் மாசிலாமணி ராஜாவுக்கும், அவரது பணிமனையின் காக்கிச் சீருடைப் பணியாளர்களிடமும் சொல்லப்பட்டது.

– ‘ராசா, இப்ப நாம என்ன பண்ணுறது? கோர்ட் உத்தரவை எடுத்துக்கிட்டு யாராவது இங்க வருவாங்களே!’ என்றார் தலைமை மெக்கானிக்.

– ‘வந்தா நாம பாத்துக்குவோம். கவலை வேண்டாம். நீங்க பாட்டுக்கு ஒர்க்‌ ஷாப் வேலைய விடாம ஓட்டிக்கிட்டே இருங்க!’ என்று தலைமை மெக்கானிக்கைத் தேற்றினார் மாசிலாமணி ராஜா.

ஒன்றரை மாதங்களுக்குப் பின்னர், ஒரு நாள் காலை, அந்த ராஜாராம் ஷெட்டுக்கு கோர்ட் அமீனா, குமாஸ்தாக்கள் மற்றும் இரண்டு வக்கீல்கள் வந்தார்கள். வந்தவர்களை தடபுடலாக வரவேற்று உபசரித்த மாசிலாமணி ராஜா, சுப்ரீம் கோர்ட் உத்திரவின்படி நிறைவேறுதல் மனு தயார் செய்யப்பட்டிருப்பதைப் படித்துப் பார்த்தார். வாசகங்கள் தெளிவாக இருந்தன.

‘சார், ஒரு பத்து நாள் மட்டும் டயம் கொடுங்க. இங்க ஏகப்பட்ட சாமான் இருக்கு. இதையெல்லாம் எடுத்து அப்புறப்படுத்தவே ஒரு வாரமாகும். நாங்களே வேற எங்கயாவது போயிடுறோம். அல்லது இராஜபாளையத்தில் எங்க பெரிய பஸ் டிப்போ இருக்கு. அங்க கொண்டு போயி இந்த சாமான்களை எல்லாம் தட்டிர்றோம். கொஞ்சம் பொறுத்துக்கோங்க’ என்று கால அவகாசம் கேட்டார் மாசிலாமணி ராஜா. உடன் இருந்த மெக்கானிக்குகள் திடுக்கிட்டு வாய் பேசாது நின்றனர்.

வாதியின் வக்கீல் அதை எற்றுக் கொள்ளவே, பத்து நாட்களுக்குள் ராஜாராம் ஷெட்டில் உள்ள சாமான்கள் அகற்றப்பட வேண்டும் என்றதோடு, அதை மேற்பார்வை பார்க்கும் பொறுப்பு வக்கீல் குமாஸ்தாவுக்குத் தரப்பட்டது.

பத்து நாட்களுக்குள் ஷெட்டில் இருந்த மலை போன்ற சாமான் குவியல் எங்கு போனதென்றே தெரியவில்லை. கனமான எஃகினால் ஆன கொட்டுவான், தட்டுவான், உலோக உபகரணங்கள் யாவும் இராஜபாளையத்துக்கு லாரியில் கொண்டு போகப்பட்டன.

நாற்பது அடி நீளத்தில் உள்ள ஷெட்டின் திறந்த வாயிலில் கனமான இரும்புத் தூண்கள் நடப்பட்டு, இரும்புக் கதவுகளால் மூடப்பட்டன. ஒரு பெரிய சைஸ் மஞ்சள் பூட்டு அதன் முகப்பில், கதவு நாதாங்கியிலிருந்து தொங்கியது. அந்த ராஜாராம் ஷெட்டில் பணி செய்த மெக்கானிக்குகள் ஒருவரைக் கூட வேலையை விட்டு விரட்டாமல், எல்லாரையும் தனது இராஜபாளையம் பஸ் டிப்போவுக்கு மாற்றம் செய்து, அவர்களது குடும்பங்களைக் காப்பாற்றினார் மாசிலாமணி ராஜா.

தொழுது வணங்கிட யாரும் இன்றி மோட்டார் முனியாண்டி சாமி, மழையிலும் வெய்யிலிலும் காய்ந்து கொண்டிருந்தார். அவருக்கு மாலை நேரத்தில் நெய் ஊற்றி விளக்குப் போட ஆள் இல்லை.

ரொம்ப மாதங்களுக்குப் பின்னர், பூஞ்சாரல் மழை பெய்து கொண்டிருந்த ஒரு மாலை வேளையில், வெளிநாட்டுக் கார் ஒன்று ராஜாராம் ஷெட் வாசலில் நின்றது. அதிலிருந்து இறங்கிய நால்வர், பளபளவென டாலடித்த சில்க் ஜிப்பா அணிந்திருந்தனர். அவர்கள் காதுகளில் வைடூரிய கடுக்கன்கள் டாலடித்தன. கழுத்தில் தேர் வடம் கனத்தில் தங்கச் சங்கிலி புரண்டது. உடலெங்கும் செல்வத்தின் அறிகுறி தான்.

கல் மண்டபத்தின் முகப்பைப் பார்த்த அவர்களில் ஒருவர்

– ‘வாப்பா, வந்து கதவைத் திறப்பா’ என சத்தமிட்டார்.

– ‘அய்யா, இதோ வர்றேங்க!’

காரிலிருந்து ஒரு பணியாள் ஓடி வந்து, இரும்புக் கதவின் பூட்டைச சாவி போட்டுத் திறந்து அதன் கதவுகளை அகலத் திறந்தான். கதவு வழியே மண்டபத்திற்குள் பிரவேசித்த அவர்கள் மொத்த மண்டபத்தின் விஸ்தீரணத்தையும் பார்வையிட்டனர். பின்னர் வெளியே வந்தனர்.

அவர்களில் ஒருவன்,

– ‘இந்தக் கல் மண்டபத்துக்காகவா நாப்பது வருஷம் கேஸ் நடந்துச்சு? ஒரு வெவஸ்தை வேணாம். வெட்டி வேலையத்தான் நம்ம தாத்தா பல வருஷமா செஞ்சுக்கிட்டு இருந்திருக்காரு’ என்றான்.

– ‘ஆமா, இன்னிக்கு இந்த இடத்து மதிப்பு எவ்வளவாம்?’

– ‘அண்ணா, இந்த மண்டபத்தின் மனை இடம் மட்டும் ஆறரைக் கோடி ரூபாயாம். புதுக்கோர்ட்டு, காலேஜ், யுனிவர்சிட்டி எல்லாம் இந்த ஊருக்கு வந்த பெறகு, மனை விலை எல்லாம் கூடிப் போச்சாம். அதனால, இது இன்ன விலை போகும்னு வீடு புரோக்கர் ஒருத்தர் காலைல எங்கிட்ட வந்து பேசினாரு’

– ‘ஆனா, இது நம்ம ஜாதியோட டிரஸ்ட் சொத்துப்பா. ஒருத்தரும் இதை விக்கவோ, கை வைக்கவோ முடியாது’.

– ‘ஆனா, நம்ம தாத்தா இதுக்குன்னு ஒரு பெரும் போராட்டம் நடத்தியிருக்காரு. கோர்ட் கேஸ்னா சும்மாவா பின்ன?’

பேசிக்கொண்டே அந்தப் பளபளத்த காரில் ஏறியவர்கள், தெற்கு ரத வீதி முனையில் திரும்பி, கீழ ரத வீதி வழியாக நகரை விட்டு வெளியேறினர். அவர்கள், அதற்குப் பிறகு, அந்த ராஜாராம் ஷெட் மண்டபத்திற்கு வரவே இல்லை.

பகல் முழுக்க மயான நிசப்தத்தில் இருக்கும் அந்த ஷெட்டில், இரவு நேரங்களில் இரும்பு அடிக்கும் சப்தம் கேட்கும் பிரமை ஏற்படுவதாக எதிரே மோட்டார் முனியாண்டி கோவிலை ஒட்டி சலூன் கடை வைத்திருக்கும் செல்வம், தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் அடிக்கடி கூறிக் கொள்வதுண்டு.

ஆசிரியர் குறிப்பு: 2014 -ம் ஆண்டு, யாம், வெளியிட்ட சிறுகதைத்தொகுதியில், இந்தச்சிறுகதை இடம் பெற்றது. இந்த நூலுக்கு தமிழக அரசின், தமிழ் வளர்ச்சித்துறை நிதி வழங்கியது. நீள, அகலம் என்ற வரையறைக்கு உட்படாது, எடுத்துக்கொண்ட பொருண்மையை விவரிக்க வேண்டியிருந்ததால், பருவ இதழ்கள், இலக்கிய சஞ்சிகைகளால், இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தமிழக அரசின் தயவில் வெளி வந்த புத்தகம் என்பது இந்தச்சிறுகதை, மற்றும் இதன் தொகுதிக்கு ஒரு அடையாளம் தந்திருக்குமோ ?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *