ரகுபதி ராகவ

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 12, 2023
பார்வையிட்டோர்: 1,264 
 

(1980 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கோவில் மண்டபத்தில் கொஞ்சங் கொஞ்சமாக ஜனங் கள் வந்து குழுமத் துவங்கினர். கம்பியில் கட்டித் தொங்க விட்டிருந்த காஸ்லைட்டின் ஒளி கோயிலைச் சுற்றிக் கிடந்த பனிமூட்டத்தையும் இருளையும் மீறமுடியாமல், தூரத்தில் வந்துகொண்டிருப்பவர்களுக்கு, புகைக்குப் பின்னால் தெரியும் ஒளியாக மங்கித் தெரிந்தது.

குளிருக்கு அடக்கமாக எல்லோருமே போர்வைக் கண் காட்சியாக காணப்பட்டார்கள். சிவப்புக் கரையுடன் கூடிய கறுப்புப் போர்வை, பழைய காலத்து குங்குமக் கலர் உல்லன் கம்பிளி, சதுரக் கட்டம் போட்ட உள்ளூர் பெட்சீட்.

ஒரு மூலையில் போர்வையை தலைவரைக்கும் இழுத்து முக் காடு போட்டு முழங்காலைக் கட்டிக்கொண்டிருந்த தலைவர் எழும்பி “என்ன எல்லாம் வந்தாச்சா” என்றார்.

‘ஆமா! முக்கியமானவங்க எல்லாரும்தான் வந்துட் டாங்களே…நீங்க தொவங்குங்க” என்றது ஒரு குரல்.

எல்லாருடைய பார்வையும் படுகிறாப்போல ஒரு மத்திய இடத்தில்வந்து நின்றவாறு ‘ஆடிப்பூசை கும்பிடணும். நாளு நெருங்கிட்டுது எப்பிடி?” என்றார்.

கோயில் கமிட்டியைச் சேர்ந்த ராசமணி தலையை உயர்த்தி அவரைப் பார்த்தவாறு “அதான் வேலையெல்லாம் நடந்து கிட்டு இருக்கே’ என்றான். கமிட்டியைச் சேர்ந்த இன்னொரு வனான பழனி “இந்த வருசம் பிரமாதமா நடக்கும் பாருங்க” என்றான்.

தலைவர் அவர்களை வாத்ஸல்யத்தோடு பார்த்தவாறு “அதெல்லாம் மணி மணியாச் செய்வீங்க. யாரும் சொல்ல ணுமா? அதுக்கில்லே…” என்றவாறு கூட்டத்தைப் பார்த்து “முந்தியெல்லாம் ஒரே கட்சியா இருந்தோம். ஒண்ணாக கும் பிட்டோம். இப்ப ரெண்டு கட்சி …” என்றார்.

அந்தத் தோட்டத்தில் சம்பள உயர்வுக்காக வேலை நிறுத் தம் செய்து, போராட்டம் வெற்றி பெறாது என்று எண்ணி பாதியில் ‘கழன்று’ கொண்ட மிதவாதிகள் ஒருபாதியாகவும் கடைசிவரை போராட எண்ணி சக தொழிலாளர்கள் காலை வாரிவிட்டதால் ஏமாந்த தீவிரவாதிகள் இன்னொரு பாதியா கவும் தோட்டம் இரண்டுபட்டது.

அன்றிலிருந்து பிடித்தது ஈனியன்.

எல்லாவற்றிலும் ஏட்டிக்குப்போட்டி. “அவர்களைப்பத்தி நமக்கு என்ன? நாமபாட்டுக்கு வழக்கம்போல கும்பிட வேண் டியது தானே?” என்று யாரோ சொன்னார்கள்.

வாஸ்தவம். ஆனா நாம எப்ப கொடி ஏத்தம் வைக்க யோசிச்சிருக்கோமோ அன்னைக்குத்தான் அவங்களும் கொடி ஏத்தணுமாம். அதிலேருந்து அஞ்சு நாளைக்கு திருவிழா நடத் தணுமாம். ஓடர் வந்திருக்கு..

கூட்டம் சிலிர்த்தது.

யாரு அவுக, ஓடர் போட்டிருக்கிற பெரிய மனுசன்?” என்றான் ராசாமணி.

“வேறே எவனாவது சொல்லியிருந்தா ‘போடா’ன்னு சொல்லிட்டு வந்திருப்பேன். தொரைக்குச் சொல்லி அவரு கூப்பிட்டுவிட்டு சொல்லி இருக்காரு”

கூட்டத்தினர் கட்டுப்பாடு இல்லாமல் கலகலத்தனர்.

“மறுபடி கரச்சல் இழுக்கப் பார்க்கிறானுக”

“நாம முந்நூறு பேரு இருக்கோம். அவனுக இன்னைக் கெல்லாம் நூறு பேருகூட இல்லே… நாயப்படி நாமதானே முதல்லே கும்பிடணும்”

“நம்மளை பொம்புளைகன்னு நெனைச்சிருக்கானுகபோலே இருக்கு”

“பின்னே என்ன”

தலைவர் இரண்டு கைகளையும் உயர்த்திக் காட்டினார். கூட்டம் அமைதியடைந்தது.”ஆளுக்காளு ஒவ்வொண்ணு சொன்னா எப்பிடி? நிதானமா யோசிச்சு ஒருமுடிவு எடுங்க” என்றார்.

“ஒரே முடிவுதான்! நாம ஏற்பாடு செஞ்சிருக்கிறநாளிலே கொடி ஏத்தம் வச்சுடவேண்டியதுதான்”

வயது முதிர்ந்த ஒருவன் எழும்பி. “அதிலே ஒண்ணும் மறுபேச்சுக்கு எடமில்லே. நானும் ஒப்புக்கொள்றேன். ஆனா நாளைக்கி தலைவரு தொரைக்கிட்டே போயி எப்பிடிச் சொல் றது? ‘நாங்கதான் மொதல்லே சாமி கும்புடுவோம்’ அப்ப டின்னா ஏதோ நாமளே சண்டித்தனம் பண்றமாதிரி இல்லே?” என்றான்.

தலைவர் தலையை ஆட்டிக்கொண்டார். கூட்டம் மெளன மாக சிந்தித்தது. புதுக்கட்சி ஆள்பலம் இல்லாவிட்டாலும் தகர்த்த முடியாத விதத்தில் செயலாற்றுவதை அப்போது தான் அவர்களால் உணரமுடிந்தது.

“ஒரேயொரு வழிதான் இருக்கு’ என்றான் பழனி “நாம் நோட்டீசு அடிப்பமே, அதுலே ஒரு நோட்டீசைக் கொண்டுபோயி காட்டினா…”

“சரி, நோட்டீசு ரெடியா?”

“நாளைக்கு எத்தனை மணிக்கு ஒப்பீசுக்குப் போகணும்?’ “நாலு மணுக்கு”

“ரெண்டு மணிக்கு நோட்டீசைக் கொண்டாந்து ஓங்க கையிலே தந்துடறேன், போதுமா?”

***

மறுநாள் பழனி ஒருநாள் சம்பளத்தைத் தியாகம் செய்துவிட்டு முதல் பஸ்ஸில் டவுனுக்குச் சென்றான். வழக் கமாகச் செல்லும் பிரஸ், எனவே பழியாகக் கிடந்து ‘இர தோற்சவ விஞ்ஞாபனம்’ என்ற தலைப்புடன் கூடிய நோட் டீஸ் ஒன்றை அவசரமாகத் தயாரித்து அச்சுவாகனம் ஏற்றி ஐநூறு நோட்டீஸ்களுக்கு ‘ஓடர்’ கொடுத்துவிட்டு மை உல ராத பத்து நோட்டீஸ்களுடன் பஸ் ஏறினான்.

நான்கு மணிக்கு துரை கூப்பிட்டுவிட்டிருந்தார். செம் பட்டை நிற முடியும் பூனை விழிகளுமாய் அமர்ந்திருந்த அவரை நோக்கி ரொம்ப கிராமியமாக நான்கு விரல்களால் நெற்றியைத் தொட்டு “செலாம் தொரைகளே” என்றார் தலைவர்

“என்னா தல்வர்! கோவில் விசயம் எப்பிடி?” என்றார் துரை. தலைவர் வெகு பவ்யமாக விஞ்ஞாபன நோட்டீசை

மேசைமீதுவைத்தார். அதைப் பிரித்துப் பார்த்தார் துரை. மஞ்சள் நிற பேப்பரில் பச்சை எழுத்துக்கள் பளிச்சிட்டன. முகப்பில் கமான் வளைவாக வளைவாக காணப்பட்ட வேலைப்பாடும் இரண்டு பக்கமும் இருந்த பாவை விளக்கும் தவிர வேறு ஒன்றும் புரியவில்லை.

“இதி என்ன?” என்றார்.

“நோட்டீசு” என்றார் தலைவர். “நோட்டீசு எல்லாம் அடிச்சு முடிஞ்சு கொஞ்சம் தபால்லேயும் அனுப்பிட்டோம். மத்த ஏற்பாடுகளும் முடிஞ்சுது. இப்ப போயி திருவிழாவை தள்ளிப் போடுறதுன்னா எப்பிடிங்க” என்றார். துரை அமை தியாக பைப்’பை எடுத்து வாயில் பொருத்தி பற்ற வைத் தார். இதழ்க் கடையோரம் புகை குப் குப்பென வெளியேறி யது. மீண்டும் ‘பைப்’பை கையில் எடுத்து வைத்துக் கொண்டு ‘நல்லம் தல்வர்! நீ போ நான் யோசிச்சு சொல்றது” என்றார்.

ஆபீசுக்குக் கீழே வரிசையாக அடர்ந்திருந்த சப்பாத்திச் செடி வேலிக்கும் பின்னால் பழனி ராசாமணி ஆகியோர் மறை வாக நின்று கொண்டிருந்தனர். தலைவரைக் கண்டதும் “என்ன, காயா பழமா?” என்றான் ராசாமணி.

“அநேகமா பழம்தான்”

‘இழுத்தாப்’லே சொல்றீங்க…”

“இல்லே யோசிச்சு சொல்றேங்கிறான். ஆனா நோட்டீ சைப் பார்த்ததும் ஆளு விதிச்சுப்போனான். வேறே ஒண்ணும் சொல்ல ஏல்லே!”

“பார்த்தீங்களா நம்ம ஐடியாவை” என்று பழனி தன் காலில் தானே பூவைப் போட்டுக்கொண்டான்.

அடுத்தநாளே முடிவு தெரிந்துவிட்டது. பழைய கட்சி அவர்கள் வைத்திருந்த திகதியிலேயே திருவிழாவை நடத் தும்படியும், புதுக் கட்சியினர் உசிதம்போல் வேறொரு சம யத்தில் தங்கள் திருவிழாவை வைத்துக்கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தார் துரை.

வெற்றிப் பெருமிதத்தில் இருந்த பழைய கட்சியினரின் முகத்தில் கரி பூசியதுபோல ஒரு சம்பவம் நடைபெற்றது. கொடியேற்றத்துக்குச் சரியாக முதல்நாள் கோவிலிலிருந்த உற்சவ விக்ரகமும் பூஜை சாமான்களும் காணாமல் போய் விட்டன.

தோட்டம் அல்லோலகல்லோலப்பட்டது. பொலீஸ் வந் தது. துப்பறியும் நாய்கள் வந்தன. துப்புத்தான் துலங்க வில்லை.

கோவில் கமிட்டி அவசரமாக தலைவர் லயத்தில் கூடியது. “இது ஆறு முகம்பய வேலை…அவன்தான் இந்த மாதிரி ‘கோக்கு மாக்கு’ வேலையெல்லாம் செய்வான்” என்றான் பழனி.

“அதைத்தான் சொல்ல வந்தேன்” என்றார் தலைவர். “அவன் வீட்டிலே ராத்திரி ரொம்ப நேரம் பேச்சுக் குரல் கேட்டுச்சாம். பதி னொரு மணியைப்போல அவனும் இன்னொருத்தனும் வெளியே போனானுகளாம். அவன் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரன் சொனனான்” என்றார்.

“இப்ப என்ன செய்றது?”

“போலீசுலே புகார் பண்ணி இருக்குதுதானே? அவங்க என்ன சொல்றாங்கன்னு பாத்துக்கிட்டு மேலே யோசிப்பம்!”

அவருடைய இந்த பொறுமையும் அசமந்தமும் சிலருக்கு எரிச்சலையூட்டின. குறிப்பாக பழனி கொதித்துக்கொண்டிருந்தான். ஆறுமுகத்தை நேரில் சந்தித்து சூடாக இரண்டு வார்த்தை கேட்டுவிட்டு வந்தால் என்னஎன்று தோன்றியது. யாரிடமும் சொல்லாமல் ஆறுமுகத்தின் லயத்தை நோக்கி நடந்தான். வழியில் அவனது கூட்டாளி மாரப்பன் வீட்டில் கொஞ்சநேரம் நின்று அவனிடம் ஆலோசனை கேட்டான்.

“போய்க் கேக்கிறது என்ன? ஒதைச்சுக் கொல்லணும். வா போவோம். நானும் வர்றேன்” என்று இருவரும் நடந் தார்கள்.

ஆறுமுகம் லயத்தில்தான் இருந்தான். பழனி ரொம்பப் பொறுமையாகவே பேச்சை ஆரம்பித்தான். “இந்தாப்பாரு ஆறுமுகம், இது ஒன்னைத் தவிர வேறே யாரோட வேலையும் இல்லேங்கிறது எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு. மரியா தையா எல்லாத்தையும் திருப்பிக்குடுத்துடு இது சரியில்லே” என்றான்.

“எது சரி இல்லே…எதைத் திருப்பிக் கொடுக்கணும்?” என்றான் ஆறுமுகம்.

“எதையா? ஒண்ணுந் தெரியாதவன் மாதிரிக் கேட்கிறியே? கோயில் சாமான்களைத்தான்”

“போடா போடா! பெரிய துப்பறியும் சிங்கம் கண்டு பிடிச்சிட்டாரு. இன்னொரு வாட்டி இப்பிடி கேட்டுக்கிட்டு இங்கே வராதே”

“வந்தா…”

ஆறுமுகத்துக்கு நல்ல உடல்வாகு. பயில்வான் மாதிரி கரணை கரணையாக கையும் காலும். ஒரே பிடியில் இதுவரை யும் இரண்டு அறைகள் வைத்து வெளியேதள்ளுவதில் சிரமம் இருக்கவில்லை.

அவர்கள் இருவரையும் ஆறுமுகம் அடித்து விட்டான் என்பது பரவியதும் ஒரு பட்டாளமே கம்பும் கழியுமாக ஆறு முகத்தின் வீட்டை முற்றுகையிட்டது.

ஜனக்கூட்டமும் இரைச்சலும் நாய்களின் குரைப்புமாக லயத்து வாசலில் தூள்பறக்கிறது.

வந்தவர்களின் பழனியின் தம்பி ஒருவன் நல்ல இரும்புக் கழி ஒன்று கொண்டுவந்திருந்தான். ஆகவே இரண்டே அடி யில் ஆறுமுகம் தலைதூக்க முடியாமல் கீழே விழுந்தான்.

விழுந்தவன் பிறகு நிரந்தரமாகவே தலை தூக்கவில்லை.

பழனியின் தம்பி கொலைக் குற்றம் சாட்டப் பட்டு போலீஸ் வேனில் ஏறிக்கொண்டிருந்தபோது, கதறிக்கொண் டிருந்த தாயிடம் பழனி “தம்பி நல்லா பாடம் படிச்சுக் குடுத்திட்டான். நாங்க அண்ணன் தம்பி நாலு பேரு. ஒருத் தன் தூக்குக்கு போறதாலே ஒண்ணு கொறைஞ்சு போகாது நீ அழுவாதே ஆயா…” என்று ஆறுதல் கூறிக்கொண்டிருந்தான்.

– ஒரு கூடைக் கொழுந்து, முதற் பதிப்பு: ஏப்ரல் 1980, வைகறை பப்பிளிகேஷன்ஸ், இலங்கை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *