யார் பைத்தியம்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 23, 2022
பார்வையிட்டோர்: 4,072 
 

முதல்வர் அருளானந்தம் தன வழக்கமான சுற்றுக்களை முடித்துக்கொண்டு திரும்பவும் அறைக்குள் நுழையுமுன் கல்லூரி வளாகத்தை இன்னொருமுறை பெருமையுடன் பார்வையிட்டார். பெருமைப்படுவதற்கு அவருக்கு எல்லாக் காரணங்களும் இருந்தன. அவருடைய பத்து வருட தலைமைப் பொறுப்பில் ஏ.சி.எம். கல்லூரி அதற்கு முன்பு எப்பொழுதும் காணாத ஒரு வளர்ச்சியை அடைந்திருந்தது. இந்தியா டுடே, எஜுகேஷன் வேர்ல்ட் மதிப்பீடுகளில், கலைக் கல்லூரிகளில் மாநிலத்தில் முதல் இடம், நாட்டில் முதல் பத்து இடங்களில் ஒன்று என்ற தரவரிசையைக் கடந்த மூன்று வருடங்களாகத் தக்க வைத்துக்கொண்டிருந்தது. இன்னும் இரண்டு வருடங்களில் தனது நேரடி மேற்பார்வையில் பத்து கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஏ.சி.எம். அலம்னை ஆடிடோரியத்தில் பாரதப் பிரதமர் தலைமையில் நூற்றாண்டு விழா கொண்டாடிக்கொண்டிருப்பார் அருளானந்தம். அந்தப் பத்து கோடி ரூபாயையும் பழைய மாணவர்களிடம் நன்கொடையாக வசூல்செய்து மண்டபத்தை விரிவுரைத் திரையரங்கமாகவே கட்டி அனைவரையும் வியக்க வைத்தவர் அவர். அவரைப் போன்ற முதல்வரை ஏ.சி.எம். கல்லூரி இதுவரை பார்த்ததில்லை, இனிமேலும் பார்க்கப்போவதில்லை.

கல்லூரி வளாகத்தின் தெற்குக் கோடியில் இருந்த அலம்னை மண்டபத்தின் பிரம்மாண்டமான தோற்றத்தை மனக்கண்ணால் பார்த்துப் பூரித்துக்கொண்டே தன் அறைக்குள் நுழையத் திரும்பினார் அருளானந்தம். அப்போது டயமண்ட் வெள்ளையில் போர்ட் எண்டேவர் கார் ஒன்று வாகனங்கள் நிறுத்தும் இடத்தைத் தாண்டி, மூலிகைப் பூங்கா சாலையில் வழுக்கி, நிர்வாக அலுவலகம் எதிரில் வந்து நின்றது. அதிலிருந்து பால் வெள்ளை நிறத்தில் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் மிடுக்குடன் இறங்கினார். அருளானந்தம் மணிக்கட்டைப் பார்த்தார். பத்து ஐம்பது. ‘பதினோரு மணிக்கு எனக்கு யாரிடமும் அப்பாய்ண்ட்மென்ட் இல்லையே, ஆள் யாராக இருக்கும்?’ என்று தன்னையே கேட்டுக்கொண்டு உள்ளே நுழைந்தார்.

முதல் வகுப்பு முடிந்ததை அறிவிக்கும் மணி அடித்தது. வெள்ளைத்தோல் மனிதர் படியேறி கம்பீரமாக நடைக்கூடத்தில் நுழைந்தார். ஆறடி உயரம். விளையாட்டு வீரர் மாதிரியான உடம்பு. குறுந்தாடி. பார்த்தமாத்திரத்திலேயே மதிப்பு கொடுக்கும்படியான முகபாவம். நடைக்கூடத்தில் அடுத்த வகுப்புக்கு விரைந்துகொண்டிருக்கும் பேராசிரியர்கள் மரியாதையுடன் ஒதுங்கி அவருக்கு வழிவிட்டனர். அவர் கல்லூரி முதல்வரின் அலுவலகத்தில் நுழைந்தவுடன் பிரின்சிபலைத் தவிர வேறு எவரையும் மதிக்காத முரடன் என்று பெயர் வாங்கிய அட்டெண்டர் ஏசுபாதம் விறைத்து நின்று அவருக்கு சல்யூட் அடித்தான். அவர் முதல்வரைப் பார்க்கவேண்டும் என்று ஆங்கிலத்தில் சொன்னதும் விரைந்து உள்ளே சென்று முதல்வரின் அனுமதி வாங்கி சுழல்கதவைத் திறந்து பவ்யமாக நின்றான்.

‘என் பெயர் சத்யசீலன். நான் கலிபோர்னியா பல்கலைக் கழகம் பெர்க்லி வளாகத்தில் படைப்பெழுத்துப் பேராசிரியராக இருந்திருக்கிறேன்.’ அறிவார்ந்த காற்றும் அமெரிக்க உச்சரிப்பும் சேர்ந்து வீசியது. சொக்கிப்போனார் அருளானந்தம்.

அருளானந்தமும் கலிபோர்னியாவை நன்கு அறிந்தவர்தான். ஐந்து வருடம் சான்பிரான்சிஸ்கோவிலும் லாசேன்ஜிசிலும் இருந்தவர். லயோலா மேரிமௌன்ட் பல்கலைக்கழகத்தில் படித்து ஆங்கில இலக்கியத்திலும் கல்வி நிர்வாகத்திலும் பட்டங்கள் வாங்கியவர். அமெரிக்கக் கல்வி முறையில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர். சத்யசீலனிடம் பேசுவதற்கு அவருக்கு நிறைய இருந்தது. அவர் வருகை நற்றாமரைக்கயத்தில் நல்லன்னம் சேர்ந்தால்போல் அல்லவா ஆகிவிட்டது!

அரைமணி நேர அமெரிக்க வாழ்க்கை குறித்த உரையாடலுக்குப் பிறகு நடைமுறை வாழ்க்கைக்குத் திரும்பி வந்தனர் இருவரும். தன் வருகைக்கான காரணத்தை விளக்கினார் சத்யசீலன். அவர் அமெரிக்காவில் படித்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படைப்பிலக்கியப் பேராசியராக பத்து வருடங்கள் பணி புரிந்திருக்கிறார். இப்போது இந்தியாவுக்குத் திரும்பி வந்துவிட்டார். ‘இதுதான் என் சொந்த ஊர். இனிமேல் இங்குதான் இருப்பதாக உத்தேசம்,’ என்று முடித்தார்.

அருளானந்தம் அவர் பேசுவதை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார். சத்யசீலன் ஒரு கவர்ச்சியான பேச்சாளர். சிக்கலான விஷயங்களைப் பற்றிப் பேசும்போதுகூட அவரிடமிருந்து தங்குதடையின்றி வார்த்தைகள் வந்தன. எங்கு நிறுத்தவேண்டுமோ அங்கு நிறுத்தி, எங்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமோ அங்கு கொடுத்து, ஆழ்ந்த பார்வையுடன், முகமலர்ச்சியுடன் அவர் பேசும்போது அதைக் கேட்காமல் இருப்பது கடினம். ‘என்ன ஒரு வலிந்து ஈர்க்கின்ற பேச்சாளர்!’ என்று வியந்தார் அருளானந்தம். மனிதர்களை எடைபோடுவதில் நிகரற்றவர் என்று பெயர் வாங்கியவர் அவர்.

‘சோ, தட்ஸ் வாட் பிரிங்ஸ் மி ஹியர். நீங்கள் இந்த வருடம் இளங்கலை நிலையில் படைப்பெழுத்து என்ற பாடப்பிரிவை அறிமுகம் செய்யப்போவதாகக் கேள்விப்பட்டேன்…’

‘உண்மைதான். யு.ஜி.சி.யின் அனுமதியைப் பெற்றுவிட்டேன். இன்னும் ஒரு மாதத்தில் சேர்க்கையும் முடிந்துவிடும். துறைக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்க ஒரு பேராசிரியரைத் தேடிக்கொண்டிருந்தேன். ஆண்டவரே அனுப்பியது போல் நீங்கள் வந்திருக்கிறீர்கள்.’

‘உங்கள் புரிதலுக்கு மிக்க மகிழ்ச்சி. நான் வேறெதுவும் சொல்லவேண்டியதில்லை என்று நினைக்கிறேன். ‘

‘அவசியமில்லை. உங்கள் நியமனத்தை அழைக்கப்பட்ட நியமனமாகச் செய்கிறேன். ஆனால், சில விதிமுறைகள் தவிர்க்க முடியாதவை.’

‘ஐ நோ. விண்ணப்பம், நேர்காணல்…’

‘இல்லை, இல்லை, நேர்காணல் இல்லை,’ என்று அவசரமாகக் குறுக்கிட்டார் அருளானந்தம். ‘இது அழைக்கப்பட்ட நியமனம். ஆனால், தேர்வுக்குழுவுடன் ஒரு சின்ன உரையாடல். ஹோப் யு டோன்ட் மைண்ட்?’

‘நாட் அட் ஆல்.’ கண்யமான மற்றொரு புன்சிரிப்பு உதிர்ந்தது. ‘உரையாடலை இன்றே வைத்துக்கொள்ள முடியுமா? இன்று இரவு நான் கல்கத்தா போகிறேன்; ஒரு வாரத்துக்கு அங்கு ஒரு படைப்பெழுத்துப் பட்டறை.’

அருளானந்தம் யோசனை செய்தார். ஒரு வாரத்தில் இந்த மனிதர் வேறு எதாவது நியமன அழைப்பை ஒப்புக்கொண்டுவிட்டால்? தேர்வுக்குழுவை இன்று மதியமே கூட்டிவிடவேண்டியதுதான். குழு அங்கத்தினர் எல்லோரும் இங்கேயே இருக்கிறார்கள். பல்கலைக்கழகப் பதிவாளரிடம் சொல்லி ஒரு பொருள் நிபுணரை வரவழைக்க வேண்டும், அவ்வளவுதானே? கடிகாரத்தைப் பார்த்தார். மணி பன்னிரண்டு.

‘உரையாடலை இரண்டு மணிக்கு வைத்துக்கொள்ளலாமா?’

‘ஷ்யூர்.’

இரண்டு மணிக்கு உரையாடல் தொடங்கியது. தேர்வுக்குழு அங்கத்தினர் அனைவரும் ஒரு பயம் கலந்த மரியாதையுடன் சத்யசீலனை வரவேற்றனர். அவருடைய சுயவிவரக் குறிப்பைப் பார்த்ததும் அருளானந்தத்தின் கண்கள் விரிந்தன. அன்று காலை சத்யசீலன் தன்னை மிகவும் அடக்கமாக அறிமுகம் செய்துகொண்டிருந்தார். அவர் புகழ்பெற்ற ஓர் அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் மட்டும் அல்ல; பரிசு பெற்ற எழுத்தாளரும்கூட. நான்கு நாவல்களும் மூன்று சிறுகதைத் தொகுப்புகளும் வெளியிட்டிருப்பவர். நாவல்களில் ஒன்று என்.பி.சி.சி. பரிசு பெற்ற படைப்பிலக்கியம்.

ஒருமணி நேர உரையாடலுக்குப்பின் காகிதங்களில் கையெழுத்திட்டு அங்கத்தினர் விடைபெற்றனர். நியமன உத்தரவைப் பெற்றுக்கொண்டு சத்யசீலனும் கிளம்பினார். முதல்வர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். கர்த்தருக்கு அன்று யோகம்: இரண்டு தடவை அவர் அருளானந்தத்தால் நினைக்கப்பட்டார்!

சத்தியசீலன் போய் ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்காது, குருமூர்த்தி உள்ளே நுழைந்தார். அவர் கல்லூரியின் முகவர். சென்னையிலிருந்து அப்போதுதான் திரும்பி வந்திருந்தார்.

‘விமானம் வழக்கம்போல ஒரு மணி நேரம் தாமதம். அருள், நான் ஏன் நேராக இங்கு வந்தேன் தெரியுமா?’

‘சொல், தெரிந்துகொள்கிறேன்,’ என்று வேண்டாவெறுப்பாகச் சொன்னார் அருளானந்தம். அவர்கள் இருவருக்கும் வயது வித்யாசம் அதிகம் இருந்தாலும் ஒருவரையொருவர் பெயர் சொல்லிக் கூப்பிடும் மேல்நாட்டுக் கலாச்சாரத்தில் வளர்ந்தவர்கள்.

‘என் எதிரில் அந்தப் பைத்தியம் காரில் போவதைப் பார்த்தேன். விரைந்து இங்கு வந்தேன். அதை விரட்டிவிட்டாயல்லவா?’

‘பைத்தியம், விரட்டிவிட்டேன் – என்ன சொல்கிறாய், குரு?’

‘சத்யசீலனைச் சொல்கிறேன்.’

‘பேராசிரியர் சத்யசீலனையா?’

‘பே–ரா–சிரியர்! மை செய்ன்டட் ஆண்ட்! அருள், நீ ஒன்றும் தவறு செய்துவிடவில்லையே?’

‘நீ என்ன சொல்கிறாய்?’

‘லுக், இது இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த கதை. ஏ.சி.எம். மதுரையில் நான் உதவி முதல்வராக இருந்தபோது சத்யசீலன் அங்கு இலக்கிய மாணவன். பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளை. தந்தை இந்தியர், தாய் அமெரிக்கர். நல்ல வளர்ப்புமுறை. குழந்தைகளுக்குப் பயிற்சி கொடுத்து வளர்ப்பதற்கு செவிலித்தாய் கூட அமெரிக்காவிலிருந்து வந்தவள். ஆனால், பி.எ. இரண்டாம் வருடத்திலேயே சத்யசீலனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டது. மருத்துவ சிகிச்சைக்காக மாதக் கணக்கில் கல்லூரி வராமல் இருந்தான். பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அதோடு அவன் கல்லூரி படிப்புக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. பிறகு என்னை பிரான்சுக்கும் அமெரிக்காவுக்கும் அனுப்பினார்கள். பத்து வருடம் கழித்து நான் மதுரைக்குத் திரும்புகிறேன் – ஏ.சி.எம்.மின் முதல்வராக. சத்யசீலனை மறுபடியும் சந்திக்கிறேன் – கல்லூரிக்கு வெளியில்…’

என்ன சொல்வது என்று சில வினாடிகள் யோசித்து, பிறகு தொடர்ந்தார். ‘முற்றிப் போயிருந்தது – மனநோய் மட்டும் அல்ல, அறிவாற்றலும் கூட. அவனது அறிவித் திறனையும் பேச்சுத் திறமையும் என்னுடைய நீண்ட அறிவுசார் வாழ்க்கையில் வெகு சிலரிடமே கண்டிருக்கிறேன், அருள். இது எப்படி சாத்தியம் என்பது என் அறிவுக்கு எட்டாத விஷயம். ஹாம்லெட் சொல்வதுதான் ஞாபகத்துக்கு வருகிறது: ‘உன் தத்துவத்தில் கனவு காணமுடியாத பல விஷயங்கள் விண்ணிலும் மண்ணிலும் இருக்கின்றன, ஹொரேஷியோ.’

‘அப்படியானால் கலிபோர்னியா?’ அவருடைய குரலிலேயே காய்ச்சல் இருந்தது.

‘அது எப்படி, எங்கிருந்து வந்ததோ எனக்குத் தெரியாது. ஆனால் சத்யசீலன் அவன் வாழ்க்கையில் இந்தியாவைத் தாண்டி எங்கும் சென்றதில்லை. அவன் இளங்கலை பட்டம்கூட வாங்காத ஓர் அறிவு ஜீவி.’

அருளானந்தரின் முகம் வெளிறிப்போயிருந்தது. ‘குரு, நான் ஒரு மன்னிக்கமுடியாத காரியம் செய்திருக்கிறேன். சத்யசீலனைப் பேராசிரியராக நியமனம் செய்து, நியமன ஆணையைக்கூட அவன் கையில் கொடுத்துவிட்டேன்.’

குருமூர்த்தி அவரைப் பரிதாபத்துடன் பார்த்தார். ‘அருள், நான் ஒன்று சொல்லட்டுமா? இது ஒரு வழக்கு ஆய்வு – கேஸ் ஸ்டடி. மருத்துவரீதியாக மனஆரோக்கியமற்ற ஒருவன் மன ஆரோக்கியம் நிறைந்த ஒருவனைப் பைத்தியமாக அடித்த கதை. எனக்குத் தெரிந்து மூன்று கல்லூரி முதல்வர்களுக்கு இது நிகழ்ந்திருக்கிறது. அது இருக்கட்டும், நீ ரொம்ப கண்டிப்பான ஆளாயிற்றே, அவன் சான்றிதழ்களைப் பார்க்கவேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா?’

‘குரு, நான் செய்தது அழைக்கப்பட்ட நியமனம். இன்வைட்டட் அப்பாயின்ட்மென்டில் நாம் சான்றிதழ்களைப் பார்ப்பதில்லை அல்லவா? குறைந்த பட்சம் கூகுல் தேடலாவது செய்திருக்கலாம். அதுகூட தோன்றவில்லை. ஒன்றரை மணி நேரம் அவன் பேச்சில் மயங்கியல்லவா கிடந்தேன்!’

குருமூர்த்தி புரிதலுடன் தலையாட்டினார். ‘உன் நிலைமையில் நானும் அதைத்தான் செய்திருப்பேன்.’

‘சரி, இப்போது நான் என்ன செய்வது?’

‘ஒன்றும் செய்யவேண்டாம். பித்தம் இப்போதாவது தெளிந்ததே! இந்த கர்வபங்கமும் ஒருவிதத்தில் நல்லதற்குத்தான். ஏ.சி.எம்.மைப் பொறுத்தவரை சத்யசீலனின் லட்சியம் நிறைவேறிவிட்டது; இனிமேல் இங்கு வரமாட்டான். மற்ற மூன்று கல்லூரிகளிலும் அதுதான் நடந்தது.’

‘அவன் ஏன் வரவில்லை என்று இங்கு யாரவது கேட்டால்?’

‘அது ஒரு பிரச்னையேயில்லை. சத்யசீலன் வேறு ஒரு பெரிய அழைப்பை ஏற்றுக்கொண்டுவிட்டான் என்று சொல்லிவிடலாம். நம்மையெல்லாம் பைத்தியமாக ஆக்கிவிட்டுப் போய்விட்டான் என்றா சொல்ல முடியும்? எப்படியும் இனிமேல் அவன் பெங்களூர் பக்கம் திரும்பப் போவதில்லை. இப்போது எங்கே போகிறான் – கல்கத்தாவா? அங்கு யாராவது பல்கலைக் கழகத் துணைவேந்தரைப் பைத்தியமாக்கிவிட்டு மதுரை திரும்புவான். “பைத்தியம்” என்பதே மறுவரையறை செய்யப்படவேண்டிய ஒரு கருத்து என்று நமக்கு உணர்த்திவிட்டான் சத்யசீலன். நீர் என்ன சொல்கிறீர், முதல்வர் அருளானந்தம் அவர்களே?’

அவர் ஒன்றும் சொல்லும்படியான நிலைமையில் இல்லை.

– சொல்வனம், மார்ச் 14, 2021

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *