மெமரி கார்ட்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 4, 2013
பார்வையிட்டோர்: 7,366 
 

விமல் ஸ்போர்ட்ஸ் என்றால் அந்த ஊரில் உள்ள இளைஞர்களுக்கு அத்துப்படி. அங்கு எல்லா வகையான விளையாட்டுப் பொருட்களும் கிடைக்கும். இரண்டு கிரிக்கெட் பேட்டும், ஐந்து டென்னிஸ் பந்துகளும் வாங்குவதற்கு அந்த கடைக்குச் சென்றனர் திலீப்பும், கிரியும்.

“கிரிக்கெட் பேட், டென்னிஸ் பால் வேணும்” என்று அந்த கடையில் வேலை பார்ப்பவரிடம் சொன்னான் திலீப். “எந்த ரேட்ல வேணும் தம்பி?” என்றார் அந்த கடைக்காரர். “ஒரு முன்னூறு, நானூறு ரேஞ்சுல காமிங்க அண்ணா” என்றான் திலீப்.

கடைக்காரர் இவர்களிடம் ஒரு ஏழு, எட்டு கிரிக்கெட் பேட்களைக் காட்டினார். திலீப் ஒவ்வொரு பேட்டையும் எடுத்து, எடை மற்றும் அகலத்தையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான்.

“அண்ணா, அப்படியே டென்னிஸ் பாலையும் காமிங்க. ஒரு அஞ்சு பால் வேணும்” என்றான் கிரி. “உனக்குப் பின்னாடி இருக்கற டப்பாவுல டென்னிஸ் பால் இருக்குது பாரு. எல்லா கம்பெனி பாலும் இருக்கு” என்றார் அந்த கடைக்காரர். கிரியும் அந்த டென்னிஸ் பந்துகளை எடுத்து சரிபார்த்துக் கொண்டிருந்தான்.

“கிரி, இந்த ரெண்டு பேட் எடுத்துக்கலாம். நீ அஞ்சு டென்னிஸ் பால் எடுத்துக்கோ” என்றான் திலீப். “எடுத்தாச்சுடா. நீ பில் போட்டு வாங்கு. நம்ம பசங்க நம்மள நம்ப மாட்டானுங்க” என்றான் கிரி. மொத்தம் தொள்ளாயிரம் ரூபாய் ஆகியிருந்தது. வாங்கிய பொருட்களை எல்லாம் ஒரு கிட் பேக்கில் வைத்து, அதற்கான காசைக் கொடுத்து, ரசீதை வாங்கிக்கொண்டு வந்தான் திலீப்.

வீட்டுக்குத் திரும்பும் வழியில் கிரி, “திலீப், இங்க பாருடா” என்று சொல்லி, பேண்ட் பாக்கெட்டில் ஒளித்து வைத்திருந்த ஒரு டென்னிஸ் பந்தை எடுத்துக் காண்பித்தான். “டேய், என்னடா இது? எல்லா டென்னிஸ் பாலும் கிட் பேக்குல தான் இருக்கு. இது எங்கயிருந்து வந்தது? சுட்டுட்டியா?” என்று கேட்டான் திலீப்.
அதற்கு கிரி, “ஆமாம் டா, டென்னிஸ் பால் எவ்ளோ அதிகமான விலையில விக்கறாங்க. அதான் ஒன்னு சுட்டுட்டேன்” என்று தன் செயலை நியாயப்படுத்துபவனாகச் சொன்னான்.

“இப்படியே கடையில இருந்து சுடற எல்லாத்துக்கும் ஒரு சாக்கு சொல்லிட்டே இரு. ஒரு நாள் யார்கிட்டயாவது வசமா மாட்டப்போற. அப்போ தான் உனக்கு புத்தி வரும்” என்றான் திலீப். “அதெல்லாம் வர்றப்போ பாத்துக்கலாம். நீ டென்ஷனாகாத” என்றான் கிரி.

மாலை விளையாடி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தான் கிரி. அவனுடைய அம்மா, “கிரி, உன் காலேஜ் ஃப்ரெண்ட் சிவா வந்திருந்தான். உங்க ஜூனியர்ஸ்க்கு நீங்க ஏதோ பார்ட்டி கொடுக்கறீங்களாமே. அதுக்கு உன்னோட டிஜிட்டல் கேமரா வேணும்னு கேட்டான். நாளைக்கு உன்ன காலேஜுக்கு எடுத்துட்டு வரச் சொன்னான்” என்றார்.

அவசர அவசரமாக அவனுடைய கேமராவைத் தேடிக் கண்டுபிடித்து, அது சரியாக வேலை செய்கிறதா என்று பார்த்தான் கிரி. கேமராவை ஆன் செய்ததும், அதனுள் பொருத்தப்பட்டிருந்த மெமரி கார்டில் இடம் இல்லை என்று காட்டியது. “அம்மா, மெமரி கார்ட்ல ஸ்பேஸ் இல்ல. நான் போய் வேற மெமரி கார்ட் வாங்கிட்டு வர்றேன்” என்று சொல்லி வெளியே வந்தான்.

சற்று தொலைவில் ஒரு எலக்டிரானிக்ஸ் கடை இருந்தது. அங்கு போய் 8 GB மெமரி கார்ட் வேண்டுமென்று கேட்டான் கிரி. கடைக்காரரும் அவருக்குப் பின்னால் இருந்த ஷோக்கேஸில் இருந்து மெமரி கார்ட்களை எடுத்து மேஜையில் வைத்தார்.

மேஜையில் இருந்தவை எல்லாம் உயர்தர மெமரி கார்டுகள். ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் கிரி. அந்த குவியலுக்கு அடியில் ஒரே ஒரு மெமரி கார்ட் மட்டும் அட்டை இல்லாமல் அப்படியே இருந்ததை அவன் கவனித்தான்.

அதை அப்படியே கடைக்காரருக்குத் தெரியாமல் கைக்குள் அடக்கி வைத்துக்கொண்டு மற்ற கார்டுகளை பார்ப்பது போல் ஒவ்வொரு கார்டாக எடுத்து பார்த்துக்கொண்டிருந்தான். மெமரி கார்டின் குறைந்தபட்ச விலை என்ன என்பதை மட்டும் கேட்டுக்கொண்டு, பிறகு வந்து வாங்கிக்கொள்வதாக சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

வீட்டுக்கு வந்து அவனுடைய டிஜிட்டல் கேமராவை எடுத்து அதனுள் இந்த மெமரி கார்டைப் பொருத்தி, கேமராவை ஆன் செய்தான் கிரி. அந்த மெமரி கார்டில் 8 GB காலியாக இருப்பதாக காட்டியது கேமரா. காசு செலவு செய்யாமல் ஒரு மெமரி கார்ட் கிடைத்துவிட்டது என்று சந்தோஷப்பட்டான்.

கேமரா சரியாக வேலை செய்கிறதா என்பதை சோதிக்க, சில புகைப்படங்களை எடுக்கு முடிவு செய்தான். அதற்காக, தன் வீட்டுக்குப் பின்புறம் இருக்கும் தோட்டத்திற்குச் சென்றான்.

தோட்டத்தில் சுற்றிமுற்றிப் பார்த்தான். எதை படம் பிடிப்பது என்பது தெரியவில்லை அவனுக்கு. அப்போது, சுவர் ஓரத்தில் இருந்த ரோஜா செடியில் ஒரு அழகிய சிவப்பு நிற ரோஜா பூத்திருப்பதைப் பார்த்தான். அதை படம் பிடித்துப் பார்ப்போம் என்று எண்ணி அந்தச் செடிக்கு அருகில் சென்றான்.
கேமராவை கண்ணுக்கு அருகே வைத்து அந்த ரோஜாப்பூவை ஃபோக்கஸ் செய்து ஒரு க்ளிக் செய்தான். உடனே அந்த படம் எப்படி வந்திருக்கிறது என்று பார்ப்பதற்கு கேமராவில் உள்ள டிஸ்ப்ளே பட்டனை அழுத்தினான். இவன் எடுத்த அந்த ரோஜாப்பூவின் படம் ஸ்கிரீனில் வந்தது. நேரில் பார்ப்பது போல இருந்தது அந்தப் படத்தைப் பார்த்தால். அவ்வளவு தத்ரூபமாக வந்திருந்தது அந்த புகைப்படம்.

கேமரா இன்னும் நன்றாகத்தான் இருக்கிறது, மெமரி கார்டும் ஒழுங்காகத்தான் இருக்கிறது என்று நினைத்து சந்தோஷப்பட்டு வீட்டுக்குள் செல்ல திரும்பினான் கிரி. ஆனால் ஏதோ நடந்ததைப் போல ஒரு நொடி நின்றுவிட்டு, மீண்டும் அந்த ரோஜாச் செடியைப் பார்த்தான். தூக்கிவாரிப்போட்டது அவனுக்கு.

அவன் புகைப்படம் எடுத்த அந்த ரோஜாப்பூ இப்போது அந்த செடியில் இல்லை. கீழே எங்காவது விழுந்திருக்கிறதா என்று தேடினான். கீழே எங்கும் இல்லை. சற்றே மிரண்டு போனான். கேமராவில் அந்தப் புகைப்படம் இன்னும் இருக்கிறதா என்று மீண்டும் ஒரு முறை பார்த்தான். அதில் அந்தப் புகைப்படம் அப்படியே இருந்தது.

அந்த ரோஜாப்பூவுக்கு என்னானது என்று புரியவில்லை. என்ன செய்வது என்று கிரிக்கு தெரியவில்லை. கேமராவில் உள்ள பட்டன்களை ஒவ்வொன்றாக அழுத்திப்பார்ப்பதும், அந்த செடியைப் பார்ப்பதுமாக இருந்தான்.

கேமராவில் உள்ள பிரிண்ட் பட்டனை அழுத்தி அந்த ரோஜாச்செடியைப் பார்த்தான். என்ன ஆச்சர்யம்! அந்த ரோஜாப்பூ, முன்பிருந்த இடத்தில் இப்போது மீண்டும் தோன்றியது. எதுவும் நடக்காதது போலவே முன்பு எப்படி இருந்ததோ, அதே மாதிரி இப்போது இருந்தது அந்த ரோஜாப்பூ. நம்பமுடியவில்லை அவனால்.

இன்னும் கொஞ்சம் பரிசோதித்துப் பார்ப்போம் என்று இப்போது அந்த செடியில் உள்ள வேறு ஒரு ரோஜாப்பூவை படம் எடுத்தான். அந்த பூவும் செடியிலிருந்து மறைந்தது. இப்போது அந்த கேமராவில் அந்த படத்தைப் பார்த்து, கேமராவில் உள்ள டெலீட் பட்டனை அழுத்தினான். அந்தப் படம் அழிந்தது. மெமரி கார்டிலிருந்து மட்டுமல்ல, அந்த செடியிலிருந்தும் கூட. திகைத்துப் போனான்.
மீண்டும் அந்த எலக்டிரானிக்ஸ் கடைக்குச் சென்று, குறைந்த விலையில் ஒரு மெமரி கார்ட் வாங்கினான். ஏற்கனவே இருந்த அந்த மெமரி கார்டை கேமராவில் இருந்து எடுத்துவிட்டு, இப்போது அவன் வாங்கி வந்திருந்த அந்த புதிய மெமரி கார்டைப் பொருத்தி, கேமராவை ஆன் செய்தான்.

மீண்டும் அதே ரோஜாப்பூவை படம் எடுத்தான். ஆனால் அந்த செடிக்கும், பூவுக்கும் ஒன்றும் ஆகவில்லை. பூ, செடியில் அப்படியே இருந்தது. அவன் முதலில் எடுத்துவந்த அந்த மெமரி கார்டுக்குத்தான் ஒரு விதமான சக்தி இருக்கிறது என்பது புரிந்தது அவனுக்கு. மிகப்பெரிய வரம் கிடைத்தது போல இருந்தது அவனுக்கு.

அன்று முதல் அவனுடைய நடத்தை மாறியது. திமிர் பிடித்தவனாக, எதையும் பெரிதும் பொருட்படுத்தாதவனாக மாறினான். ஒருவித கர்வம் தோன்றியது அவனுக்குள். அந்த மெமரி கார்டின் சக்திக்கு அடிமையானான். அதுவே அவனை இயக்கத் தொடங்கியது.

கல்லூரியில் தன்னைப் பகைத்துக்கொண்டவர்களை எல்லாம் வரிசையாக இந்த மெமரி கார்ட் பொருத்தப்பட்ட கேமராவில் படம் பிடித்து, அந்த படங்களை அழிக்க ஆரம்பித்தான்.

இதனால் அந்த கல்லூரியில் காணாமல் போனோர் எண்ணிக்கை அதிகரித்தது. அவர்களை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. உயிரோடு இருந்தால்கூட அவர்கள் கண்டுபிடிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஒரு வேளை செத்திருந்தாலும், சடலங்கள் கிடைக்கப்படலாம். ஆனால் இருந்த சுவடே தெரியாமல் மறைந்து, அழிந்து போனவர்களை எப்படி கண்டுபிடிக்க முடியும்.

அன்று ஒரு நாள். கல்லூரியில் அவர்களுடைய வகுப்பறையில் உட்கார்ந்திருந்தனர் சிவா, கிரி மற்றும் திலீப். அப்போது கிரியின் மொபைல் ஃபோனுக்கு அவனுடைய கேர்ள்ஃப்ரெண்டிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது. மொபைல் ஃபோனை எடுத்துக்கொண்டு வகுப்பறையை விட்டு வெளியே சென்று பேசிக்கொண்டிருந்தான்.

அப்போது திலீப் சிவாவிடம், “டேய் சிவா, என்ன ஒரு ஃபோட்டோ எடுடா. ஃபேஸ்புக்ல ப்ரொஃபைல் அப்டேட் பண்ணணும்” என்றான். அதற்கு சிவா, “கேமரா எங்கடா இருக்கு. மொபைல் ஃபோன்ல இருக்கற கேமரா தான் இருக்கு. அதுல எடுக்கட்டுமா?” என்றான்.

“கிரி பேக்ல ஒரு கேமரா இருக்கும் பாரு. அதுல எடு” என்றான் திலீப். கிரியின் பேக்கிலிருந்து அவனுடைய கேமராவை எடுத்து திலீப்பை படம்பிடிக்க கேமராவில் பட்டனை அழுத்தும்போது சரியாக அந்த நேரத்தில் கிரி உள்ளே வந்தான்.

“டேய் சிவா, என்னடா பண்ற? கேமராவ எடுக்காதடா” என்று கத்திக்கொண்டு கிரி உள்ளே ஓடி வருவதற்குள் கிளிக் செய்திருந்தான் சிவா. “ஏண்டா கிரி டென்ஷன் ஆகற. ஒரே ஒரு ஃபோட்டோ தான எடுத்தேன். அதுக்குப்போய் கத்தற” என்று சொல்லியபடியே தான் எடுத்த புகைப்படத்தைக் கேமராவில் பார்த்தான்.

அடுத்த நொடி, “ச்சே, க்ளியராவே வரல ஃபோட்டோ” என்று சொல்லி அந்த படத்தை அழித்தான் சிவா. பூமியிலுருந்து அழிந்துபோனான் திலீப். ஓவென்று அழ ஆரம்பித்தான் கிரி. நடந்ததையெல்லாம் சிவாவிடம் சொன்னான். கிரியிடம் ஏதேதோ சத்தம் போட்டுவிட்டு, கண்ணீரைத் துடைத்துக்கொண்டே அந்த இடத்தை விட்டு வெளியே சென்றான் சிவா.

“இவ்ளோ பெரிய கொலைகாரனா நீ” என்று சிவா சொன்ன அந்த ஒரு வார்த்தை, கிரியை கிழிப்பது போல் இருந்தது. தன்னிடம் இருக்கும் அந்த மெமரி கார்ட், வரம் அல்ல, சாபம் என்பது புரிந்தது அவனுக்கு.

அந்த மெமரி கார்டை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்று நினைத்து நெருப்பில் போட்டுப் பார்த்தான். ஆனால் அந்த மெமரி கார்டுக்கு ஏதும் ஆகவில்லை. அதை கீழே வைத்து, சுத்தியலால் அடி அடி என்று அடித்துப்பார்த்தான். அந்த மெமரி கார்டுக்கு எந்தவொரு சேதமும் ஆகவில்லை.
மெமரி கார்டை தூக்கி எறிந்தால், வேறு யார் கைக்காவது போய்விடும், அதுவும் கெடுதல்தான் என்று முடிவு செய்து, அதை தன்னிடமே பத்திரமாக, யார் கைக்குமே போகாதவாறு வைத்துக்கொள்வது என்று நினைத்தான். அந்த கார்டை ஒரு கவரில் போட்டு, வீட்டிலுள்ள தன் அறையில், தன்னுடைய பழைய துணிகள் வைத்துள்ள கப்போர்டின் மூலையில் வைத்தான்.

தொலைந்தது அந்த மெமரி கார்ட் என்று சற்றே நிம்மதியடைந்தாலும், இத்தனை கொலைகளை செய்திருந்ததால் அவனால் முழுமனதுடன் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியவில்லை. மன நிம்மதி தேடி கோவில் கோவிலாக போக ஆரம்பித்தான்.

அப்படி ஒரு நாள், கிரி கோவில் போயிருக்கும் நேரம். அவனுடைய வீட்டில் வேலை பார்க்கும் ராமு, தன் மகனுடன் அவன் வீட்டுக்கு வந்திருந்தான். “அம்மா, உங்க பையனோட பழைய துணிமணி தர்றேன்னு சொன்னீங்களே. அதான் வந்தேன்” என்று கிரியின் அம்மாவிடம் சொன்னான் ராமு.

“கொஞ்சம் இரு ராமு. நான் போய் கிரியோட ரூம்ல இருந்து எடுத்துட்டு வர்றேன்” என்று சொல்லி, கிரியின் அறைக்குள் சென்றார் அவனுடைய அம்மா. ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு கிரியின் அறையில் இருக்கும் கப்போர்டில் இருந்த பழைய துணிகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக அள்ளிக்கொண்டு வந்தார்.

“இந்தா ராமு. இது எல்லாமே கிரியோட பழைய துணிதான். எல்லாத்தையும் எடுத்துக்கோ” என்று சொல்லி வீட்டுக்கூடத்தில இருந்த ஒரு நாற்காலியில் வைத்தார் கிரியின் அம்மா. ராமு அந்த துணிகளை எல்லாம் எடுத்துத் தான் கொண்டு வந்த பையில் எடுத்து வைத்தான். அந்த பழைய துணிகளுக்கு நடுவில் இருந்த அந்த மெமரி கார்டின் பயணம் கொஞ்சம் இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *