முனைப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 16,285 
 

அழைப்பிதழைப் புரட்டி நிகழ்ச்சி நிரலைப் பார்த்துக் கொண்டிருந்தவன் மாநாட்டுக்குச் செல்வதா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தான். காரியத்தில் ஒன்றுமில்லாமல் சடங்கு போல வெறும் மாநாடாக நடத்திக் கொண்டிருப்பதிலோ, வேண்டுதல் மாதிரி சும்மா அதற்குப் போய் வந்து கொண்டிருப்பதிலோ என் பயன் என்பது இவனுக்குக் கேள்வியாயிருந்தது. என்றாலும் நண்பர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க போய் வருவது என்று முடிவு செய்து கொண்டான்.

சுற்றிலும் மரங்கள் அடர்ந்த மைதானத்தின் நடுவில் திருமணக் கூடம் போல் அமைந்திருந்த அரங்கில் மாநாடு ஏற்பாடு செய்திருந்தார்கள். முகப்பிலேயே “தமிழ் இன உணர்வாளர்களே வருக! வருக!” என்கிற பதாகை வரவேற்க எங்கு பார்த்தாலும் தமிழ் உரிமை சார்ந்த முழக்கங்கள் கோரிக்கைகள்.

அறிமுகப்பட்ட முகங்களைப் பார்த்து வணக்கம் சொல்லி புன்முறுவல் பூத்து நலன் விசாரிக்க, எழுச்சிப் பாடல்களுடன் தொடங்கிய மாநாடு, வழக்கமான வரவேற்புரை, சிறப்புரை, தலைமையுரைக்குப் பின் கருத்தரங்க நிகழ்சசிகளால் களை கட்டி கரவொலிகளால் அரங்கை அதிர வைத்துக் கொண்டிருந்தது.

நண்பகல் இடைவேளை அறிவிப்பிற்குப் பின் மாநாட்டுப் பந்தலியே வழங்கப்பட்ட உணவுப் பொட்டலங்களை நண்பர்களுடன் வாங்கி வைத்துப் பிரித்து மரத்தடியில் அமர்ந்தவன் சாப்பிட்டபடியே உரையாடிக் கொண்டிருந்தான்.

“அதே பேச்சாளர்கள் அதே பேச்சு, இப்படி மாநாடகவே நடத்திக்கனு இருந்தா எப்பதான் இதுக்கு விடிவுகாலமோ…” என்றார் ஒரு நண்பர்.

“நம்மகிட்ட என்னா செயல் திட்டம் இருக்கு அத நடைமுறைப்படுத்த, அது இல்லாதவரைக்கும் சும்மா வாயாலியே பேசிக்னு இருக்க வேண்டியதுதான்” என்றான் இவன்.

“செயல்திட்டம் அப்புறம் இருக்கட்டும், மொதல்ல இந்த நிகழ்ச்சில கலந்துக்னு பேசறவங்க மாநாட்டுக்கு வந்து இருக்கறவங்கல்லாம் அவங்கவங்க கொழந்தைகள தமிழ் வழில படிக்க வச்சா போதும் தமிழ் தானா வளர்ந்துடும்” என்றார் இன்னொரு நண்பர்.

“நல்லா சொன்னீங்க. இவ்வளோ பேரு எங்கெங்கியோ இருந்து எவ்வளவோ செலவு பண்ணிக்னுவர்றம். வந்து புதுசா என்னா தெரிஞ்சிக்னு போறம். ஊருக்குப் போய் புதுசா என்னா செய்யப் போறம். எல்லாம் பழையகதைதான்” என்றார் முதலில் ஆரம்பித்தவர்.

“அதுக்காகவா மாநாட்டுக்கு வர்ரம். வந்தா எல்லாரையும் ஒருசேர சந்திக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு. அதத் தாண்டி வேற என்ன..?” என்றான் இவன்.

ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன் முதன் முதலாக தமிழ் மொழி சார்ந்த பல கருத்துக்களை இவன் அறிய நேர்ந்தபோது அதன் நியாயம் இவனை மிகவும் கவர்ந்தது. இவ்வளவு காலம் இதை அறியாமல் போயிருந்து விட்டோமே, எப்படியெல்லாமோ வாழ்ந்துவிட்டோமே என்று அதற்காக வருத்தப்பட்டான். என்றாலும் சரி போனது போகட்டும் இனியாவது இதுபடியே நடந்துகொள்வோம் இது படியே வாழ்வோம் என்று முடிவு செய்து கொண்டான்.

ஆனால் முடிவு செய்யும்போது தெரியாத சங்கடம் அதை நடைமுறைப்படுத்தும் போதுதான் தெரந்தது. எல்லோரும் ஒரு விதமாய் இருக்க தான் மட்டும் வேறு விதமாய் இருப்பது போல் தோன்றியது. பேசுவதில் உள்ள சிரமம் ஒரு புறம் இருக்க மற்றவர்களுக்கு அதைப் புரிய வைப்பதில் உள்ள சிரமம் கூடுதலாக இருந்தது.

முதல் அனுபவம் இவனுக்கு நன்றாகவே ஞாபகத்தில் இருந்தது. சென்னை தியாகராயர் நகரிலிருந்து பாரிமுனை செல்லும் பேருந்து ஏறியவன் தன் கொள்கையை நடைமுறைப்படுத்து முகமாக முத்திய தொடர் வண்டி நிலையம் ஒண்ணு என்றான். நெரிசலில் பயணச்சீட்டுத் தந்து வந்து கொண்டிருந்த நடத்துநர் ‘கள்’ளென்று ‘எங்க’ என்றார். இவன் சுற்று முற்றும் பார்த்து திருதருவென்று விழித்து, மேற்கொண்டு நடத்துனரின் பொறுமையைச் சோதிக்க விரும்பாமலோ அல்லது அதற்கான மனத்திண்மை இல்லாமலோ லேசாய் முகம் சுருக்கி ‘சென்ட்ரல் ஒண்ணு’ என்றான்.

முதல் முயற்சியே இப்படித் தோல்வியில் முடிந்தது இவனுக்கு சோர்வைத் தந்தாலும் இதற்கெல்லாம் தயங்கி ஏற்றுக் கொண்ட கொள்கையை விட்டு விடக் கூடாது என்று முடிவு செய்து கொண்டான். என்றாலும் ஒவ்வொரு முறையும் பேருந்தில் பயணம் செய்ய நேரும் போதெல்லாம் போக வேண்டிய இடத்தைத் தமிழிலேயே சொல்லிக் கேட்பதா இல்லை ஆங்கிலத்திலேயே கேட்டு விடுவதா என்பது கேள்வியாய் இருக்கும். இரண்டில் எதைச் சொன்னாலும் ஒன்றாயிருக்கும் இடங்கள் பற்றிப் பிரச்சினையில்லை. ஆனால் தமிழில் ஒருபெயரும் ஆங்கிலத்தில் ஒரு பெயருமாயிருக்கிற இடங்கள் பற்றி வரும்போது தான் பிரச்சினை என்பதால் எதில் கேட்பது என்று மனதுக்குள் போராடுவான். தமிழில் கேட்பதிலுள்ள சங்கடங்களை உத்தேசித்து பேசாமல் ஆங்கிலத்திலேயே கேட்டுவிடலாமா என்றும் சபலம் தட்டும். கொள்கை இடிக்க, என்னவானாலும் சரி தமிழிலேயே கேட்பது என்று உறுதி எடுத்துக் கொண்டு நடத்துநருக்கு எந்த சந்தேகமும் எழாத வகைக்கு முதல் கேட்பிலேயே தெள்ளத் தெளிவாய்ப் புரியும் வகையில் போகவேண்டிய இடத்தைத் திருத்தமாகச் சொல்வான்.

சில நடத்துநர்கள் ஒரு விநாடி நிதானித்துப் புரிந்து கொண்டு சீட்டைக் கிழித்துத் தந்து விட்டுப் போய் விடுவார்கள். சிலர் முகத்தைச் சுளித்து மறுபடியும் ‘எங்க’ என்பார்கள். இவன் உறுதி தளரக் கூடாது என்பதற்காக முதலில் சொன்னதையே மறுபடியும் கூடுதல் அழுத்தத்தோடு சொல்வான். நடத்துனர் சற்று நிதானித்து ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு சம்பந்தப்பட்ட இடத்திற்கு உரிய பெயரை ஆங்கிலத்தில் சொல்லி ‘அங்கேயா’ என்று கேட்பார். இவன் தலையை மட்டும் ஆட்டி ‘ஆமா’ என்பான்.

எப்போதாவது தானியில் ஏற நேர்ந்தாலும் இதே சிக்கல்தான். தெரிந்த இடமானால் தானிக்காரர் அவராகவே உரிய இடத்துக்குக் கெண்டு போய் விட்டு விடுவார். புதிய இடம் என்று வந்தால் இவன் பின்னால் அமர்ந்து வழிகாட்டிச் செல்வான். இவன் இடது புறம் என்றால் தானிக்காரர் வலது புறம் திரும்புவார். வலது புறம் என்றால் இடது புறம் திரும்புவார். கேட்டால் ‘நீங்கதான சார் சொன்னீங்க’ என்பார். பிறகு அவருக்கு ‘இடது, வலது’ பற்றி ‘பீச்சக் கை’, ‘சோத்துக் கை’யில் தொடங்கி ‘லைஃப்ட் ரைட்டை’ அதோடு பொருத்தி விளக்கம் தந்து வகுப்பு எடுத்துக் கொண்டே போய் இறங்க வேண்டும். அடுத்து வேறு ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் அவரே தான் கிடைப்பார் என்பதற்கும் எந்த உத்திரவாதமுமில்லை. அடுத்தமுறை வேறு ஒருவர். அப்புறம் அவருக்கும் வகுப்பு என்று தானிக்காரர்களுக்கான கொள்கைப் பரப்புரை தொடரும்.

வானங்களில் செல்ல நேரும் போதுதான் இந்தப் பிரச்சினை என்றால், நடந்து செல்லும் போதாவது கொள்கைப் பிடிப்போடு நடந்து கொள்ள முடிகிறதா என்றால் அதுவும் இல்லை. யாரையாவது வழி கேட்டாலோ, யாருக்காவது வழி சொல்ல நேர்ந்தாலோ இதே பிரச்சினைதான். ஒருமுறை நாடகம் ஒன்றைப் பார்ப்பதற்காக அண்ணா நகர் மேற்கிலிருந்து வர நேர்ந்த போது எழும்பூர் அருங்காட்சியகம் போக எந்தப் பேருந்து என்று இவன் பலபேரைக் கேட்டும் எல்லோரும் புரியாத மாதிரித் தலையாட்ட கடைசியில் ‘எக்மோர் ம்யூசியம்’ என்று கேட்டுத் தெரிந்துகொண்டு வந்து சேர்ந்தது. அப்புறம் திருவல்லிக்கேணியில் ‘மீர்சாஹிப் சந்து எந்தப் பக்கம்’ என்று கேட்டவருக்கு இவன் ‘இப்படியே நேராபோனா ஒரு பேருந்து நிறுத்தம் வரும். அங்கிருந்து எடது பக்கமாகவே பார்த்துக்னு போனா ஒரு பெரிய மருத்துவமனை தெரியும். அதைத் தாண்டி கொஞ்சதூரம் போனா ஒரு வணிக வளாகம் வரும். அதுக்கு நேர்எதிர்த்தாற்போல இருக்கற தெருவுல நடந்தா வலது பக்கம் ஒரு அடுமனை. அதுவும் பக்கத்துல இருக்கிற சந்துதான் மீர்சாஹிப் சந்து’ என்று சொல்ல, ஏதோ வேற்று கிரகத்து மனிதனைப் பார்த்து மாதிரிப் இவனைப் பார்த்து விட்டுச் சென்றார்.

தொலைபேசி எண்களைத் தெரிவிக்கும் போதும் இதே சிக்கல் தான். புதிய எண்களை அறிய நேரும்போது கவனமாக அதைத் தமிழில் சொல்லிப் பதிய வைத்துக்கொள்ள முடிகிறது. என்றாலும் ஏற்கெனவே மனதில் பதிந்து வைத்திருக்கும் பழைய எண்களை யாராவது கேட்டால் அதை ஆங்கிலத்தில் நினைவு கூர்ந்தே தமிழ்ப்படுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது. டுஃபோர் த்ரி சிக்ஸ், இருவத்தி நாலு முப்பத்தாறு, செவன்ஃபல் நைன் எயிட் எழுபத்தஞ்சி தொண்ணூத்தெட்டு இப்படி.

அமைப்புத் தோழர்கள் தூரத்து நண்பர்கள் முன்பின் அறிமுகமில்லாததவர்களிடம் எப்படியோ தொலைகிறது என்று பேசிக் கொள்கையை நிலைநாட்டி விடுகிறோம் என்றால் வீட்டில் வாயைத் திறக்கவே கூச்சமாக இருக்கிறது. தொடக்கத்திலிருந்தே இப்படி இருந்து விட்டிருந்தால் பிரச்சினையில்லை. இவ்வளவு காலம் ஒரு மாதிரி பேசிவிட்ட இப்போது போய் எல்லாவற்றையும் மாற்றிக்கொள்வது என்றால் மாற்றிக் கொள்வதில் நமக்குத் தயக்கம் இருப்பது ஒருபுறம், மாற்றினால் பையன் என்ன ஒரு தினுசாகப் பேசுகிறானே என்று நினைப்பார்களோ என்கிற சங்கடம் மறுபுறம், எதையுமே பேச விடாமல் அல்லவா தடுக்கிறது. அம்மாவிடம் போய் ‘அம்மா சிற்றுண்டி கொண்டு வா’ என்றோ ‘இந்த மாதத்தொலைபேசி கட்டணச் சீட்டு வந்ததா’ என்றோ எப்படிப் பேசுவது இதனாலேயே வெளியில் நிகழ்த்தும் கொள்கைப் பரப்பலை வீட்டுக்குள் நிகழ்த்த முடியாமல் வாயிற் படியிலேயே அதற்கு வேலி கட்ட வேண்டியதாகி விடுகிறது.

இப்படிப்பட்ட சங்கடங்கள் நேரும்போது, தன் சொந்த மொழியில் பேசவே எவனாவது கூச்சப்படுவானா, தன் தாய்மொழியில் பேசுவதையே, தன் தாய்மொழியில் பேசுவதையே எவனாவது கேலியாக நினைப்பானா, உலகில் வேறு எந்த மொழியிலாவது இப்படி ஒரு நிலை இருக்குமா என்று கேட்டுக் கொள்வான். இங்குமட்டும் ஏன் இந்த அவலம்? இதற்கெல்லாம் யார் காரணம் எது காரணம் என்று யோசிப்பான். முந்தைய தலைமுறை மீது இவனுக்கு கோபம் வரும். சிறு குழந்தையிலிருந்தே இப்படிப் பேசவைத்துப் பழக்கிவிட்டிருந்தால் எந்தப் பிரச்சனையுமில்லை. உரிய காலத்தில் உரியதைச் சொல்லிப் பயிற்றுவிக்காமல் அப்போதெல்லாம் துங்கிக் கிடந்துவிட்டு இப்போது வந்து இதைப் பற்றிப் பேசினால்.. பேசுவது என்ன அவ்வளவு எளிதாகவா இருக்கிறது. இயல்பாய் வரும் பழைய மொழியைத் தவிர்த்து ஒவ்வொன்றையும் நினைத்து நினைத்துப் பார்த்து அதுஅதற்கும் உரிய தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடித்துப் பேசுவது என்றால், கொஞ்சம் எச்சரிக்கைக் குறைவாய் இருந்தாலும் பழைய சொல்தானே முந்தித் துருத்திக் கொண்டு வருகிறது. ஐந்தில் வளைக்காமல் ஐம்பதில் வளைக்கும் முயற்சியாக அல்லவா இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவரது இல்லத்துக்குச் சென்றது இவன் நினைவுக்கு வந்தது. அறுபது வயதை நெருங்குபவர். ஒரு முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு சமீபம் ஏழெட்டு ஆண்டுகளாகத் தமிழ் தமிழினம் என்பதில் ஈடுபாடு கொண்டு அதற்காகக் குரல் கொடுத்து வருபவர்.
நண்பரோடு உரையாடிக் கொண்டிருக்கும்போதே அவரது பேரக்குழந்தை வந்து அவரது மடியில் உரசியது. சுமார் ஒண்ணரை வயது இருக்கும்.

குழந்தையைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்ட அவர் ‘மாமாவுக்கு வணக்கம் சொல்லு’ என்றார்.

புதிய முகம் என்பதால் சற்று நேரம் உற்றுப் பார்த்து பின் இரண்டு கைகளையும் பின்னி ‘ம்ணக்ம்’ என்று மழலையில் மொழிந்தது குழந்தை. நண்பரது முகத்தில் ஒரே பூரிப்பு. தான் பழக்கி வைத்த பிராணிகள் சொன்னதைச் செய்யும் போது பழக்கியவர் முகத்தில் ஒரு பெருமிதம் பொங்குமே அதைப் போல.

இவனுக்கும் மகிழ்ச்சிதான் பரவால்ல. எல்லார் வீட்லியும் மாமாவுக்கு சூட்மார்னிங் சொல்லுன்னு தான் பழக்கப்படுத்தி வச்சிருப்பாங்க. நீங்க வணக்கம் சொல்லிப் பழக்கி வச்சிருக்கீங்க என்றான்.

‘ஆனா இதுமட்டும் தான் தமிழ். மற்றதெல்லாம் இன்னும் ஆங்கிலம் தான்’ என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் அவர்.

‘என்ன’ என்றான். ‘பாருங்க’ என்று அவர் பக்கத்தில் குறுமேசையில் கிடந்த செய்தித்தாளைக் காட்டிக் குழந்தையிடம் “இது என்னா பா’ என்றார். குழந்தை “பேப்ப” என்றது. “அது” “டி.வி”, “அதோ அது” லேடியோ”, இது “அலோ” தொலைபேசுவது போல காதருகில்கையை வைத்துக்காட்டியது “அதோ தெரியுமே அது” “லேய்ட்” “தோ மேல சுத்துதே அது” “பேன்”.

இப்படி பல, பொருள் பார்த்து பெயர் சொல்லல்களுக்குப் பிறகு வேறு சில வினாக்கள் ”அதோ தெரியுதே அது என்னப்பா” “லோடு” “ரோடுல என்னப்பா வரும்” “லாலி”, “அப்பறம்” “பச்சு”, “பஸ்ஸுல என்னப்பா குடுப்பாங்க” “டிக்க” “வானத்துல பறக்குமே அது” “ஏபளேன்”, “தாத்தா கூட சாயங்காலத்துல என்ன போவீங்க” “வாக்கி”, “மாமா கூட கடைக்கி போலுங்க “சேக்கிள்”, “பல்லு எதால தொலைக்குவ” “புச்சு’, “என்னா போட்டு வெளக்குவ” “பேஸ்ட்”.

இவன் பொறுமையிழக்க அவரே குறுக்கிட்டு சொன்னார் நம்ப – குடும்பங்கள்லேயே இப்பிடி இருக்குதுன்னா அப்பறம் மத்த சாதாரணக் குடும்பத்து கொழந்தைங்களப் பத்தி சொல்லவே வேண்டியதில்லை என்றார்.
இவன் ஏன் அப்பிடி என்றான்.

‘என்ன செய்யறது, நான் ஒருத்தன் மட்டும் தமிழ்ல சொல்லிக்குடுத்துட்டா போதுமா, ஊட்டுல இருக்கற மத்தவங்களும் அதுவும் ஒத்துழைப்பா இருக்க வேணாமா, அவங்க ஒண்ணாச் சொல்லி நான் ஒண்ணச்சொன்னா கொழந்தைக்கு என்ன புரியும். கொழப்பம்தான் வரும்.’

‘ஏன் ரெண்டையும் சொல்லிக் குடுக்கறது’ என்றான்.

‘குடுக்கலாம், அதுக்கு இன்னும் வயசு போதாது. வளரட்டும் அப்பறமா பாத்துக்கலாம்னு உட்டுட்டேன்’ என்றார்.

அதை இவன் நண்பர்களிடம் சொல்லி மொதல்ல நம்பளப்போல உள்ளவங்க நம்ப வீட்ல தமிழ்ல பேசணும், கொழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கணும். அப்படி இல்லாம நம்ப தோழர்களே இன்னம் ‘கமிட்டி, கன்சல்ட், டிஸ்கஷன், டிபேட், ட்ரையின், டிக்கட், ரிசர்வேஷன், கோட்டான்னு பேசின்னு இருந்தா அப்பறம் தமிழ் எங்கிருந்து வளரும். இப்ப கூட நாம்ப எழுந்துவரும் போது நான் நாற்காலியில் உட்காந்துக்னு இருக்கேன். ஒரு தோழர் கடந்துபோறார். அவர் கால் எம்மேல பட்டுடுச்சி சாரி தோழர்ன்னு தான் சொல்லிட்டுப் போறார். ஏன் “மன்னிக்கவும் தோழர்’ சொல்றது இப்படி சொல்றதுக்கு மொதல்ல ஒரு மாதிரியாத்தான் இருக்கும். பழகிட்டா சரியாப் போவுது. ஏன் முன்ன ‘தாங்க்ஸ்’ சொன்னவங்க இப்ப ‘நன்றி’ சொல்லல. இப்ப நன்றி சகஜமாயிடலியா அதுமாதிரித்தான் இதுவும் என்றான் இவன்.

எல்லோரும் சாப்பிட்டு முடித்து இலையை மடித்து விரல்களை அதிலேயே துடைத்துக் கை கழுவ குழாய் பக்கம் நோக்கித் திரும்ப அப்பகுதியில் கூட்டாயிருப்பதைப் பார்த்து ஒரு நண்பர் சொன்னார். ‘இருங்க தோழர் நான் போய் வாட்டர் பாட்டல்ல தண்ணி புடிச்சின்னு வந்துடறேன். இப்பிடியே கழுவிக்கலாம்’ என்றார்.

“பார்த்தீங்களா ‘வாட்டர் பாட்டல்’ என்றான் இவன். ‘தண்ணி பாட்டல்’ னு சொல்றது.”

‘தண்ணி பாட்டல்னா வேறு அர்த்தம் வரும் தோழர்’ என்றார் ஒருவர்.

‘எல்லாம் பழக்கம்தான்’ என்றார் மற்றொருவர்.

“வாட்டருக்கு தண்ணீன்ட்டீங்க, பாட்டலுக்கு..”

“பாட்டலுக்கு புட்டி, குப்பி, சீசான்னு பலது இருக்கு. நாம்ப ‘தண்ணீர் புட்டின்னு’ சொல்லலாம்” என்றான்.

‘நல்லாத்தான் இருக்குது பழக்கப்படுத்திக்னா சரியாயிடும்…”

“சரி வாட்டர் பாட்டிலுக்கு இப்பிடி சொல்லிடறம். மினரல் வாட்டருக்கு என்ன சொல்லுவீங்க” என்றார் நண்பர்.
“மணி நீர்னு சொல்லலாம் மணின்னா தமிழ்ல அருமையான சிறந்த, உயர்வானன்னு பல பொருள் இருக்குது. தண்ணியில் தூய்மை கருதி அதை மணின்னு சொல்லலாம். அது உடன்பாடா இல்லன்ன நேரடியாவே கனிம நீர்ன்னு சொல்லிடலாம். கனிமம்னா மினரல்தான்”

“ஆனா அதுக்காக எலலாத்தியும் வலுக்கட்டாயமா தமிழ்ப்படுத்தி செயற்கையா பண்டிதத் தமிழா பேசனம்னு நான் சொல்லல. முடிஞ்சத ஏற்கெனவே தமிழ்ல அறிமுகமாயி பழக்கப்பட்டு வந்ததையாவது பேசலாமில்லியா அதத்தான் சொல்றேன்” என்றான்.

‘ஆனா எதப் பேசனாலும் உட்டுக்கு வெளியேதான் வச்சிக்கணம். ஊட்டுல போய் இந்த மாதிரியெல்லம் பேசனா நம்பள மெண்டல்ன்னுதான் நெனைப்பாங்க”

“அப்ப ஊருக்குத் தான் தமிழ் ஊட்டுக்கு இல்லண்றீங்களா” என்றான் இவன்.

“உங்களுக்கு இன்னும் மேரேஜ் ஆவல தோழர் அதனால தைரியமா பேசறீங்க” என்றார் நண்பர்.

“பாத்தீங்களா. பழையபடியே மேரேஜ். ஏன் திருமணம்னு வரமாட்டன்னுது.”

“பழக்கம் தான்”

‘இந்தப் பழக்கத்தத்தான் மாத்தனம்ன்றேன்’ என்றான்.

‘சரி, இந்த வாதத்த உடுங்க. புக்ஸ்டாலுக்கா ஒரு ரவுண்ட் போய்ட்டு வருவம். புது புஸ்தகம் எதுனா வந்திருக்குதா பாப்பம் என்றார்” நண்பர்.

இவன் நண்பரைப் பார்த்து முறைத்தான்.

நண்பர் சிரித்து “என்னா புக்ஸ் டாலா..” என்றார்.

“ஏன் நூற்கூடம், நூல் அரங்குன்னு சொல்றது எதுவுமில்லைன்னா சாதாரணமா புத்தகக் கடைன்னு சொல்லிட்டுப் போறது”

இப்பிடியெல்லாம் பார்த்தா வாயையே தெறக்க முடியாது தோழர் என்றார் அவர். இவன் ஏதோ பதில் சொல்ல எல்லோரும் பேசிக் கொண்டே நூற்கூடத்தை அடைந்தார்கள்.

“மொதல்ல முன்னோடிகளா இருக்கிறவங்க அவங்கவங்க ஊட்ல அவங்கவங்க கொழந்தைகளுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கணும் அதுங்கள தமிழ்ல படிக்க வக்கணம். அத உட்டுட்டு ஊர்ல இருக்கறவங்க ஊட்டு கொழந்தைங்களுக்குத்தான் தமிழ். தன் உட்டுப் புள்ளைங்களுக்கு மட்டும் கான்வெட்டுன்னா தமிழ் எங்க உருப்படும்” என்றார் நண்பர்.

“எல்லோரும் அப்படியிருக்காங்கன்னு சொல்ல முடியாது தோழர். சிலபேர் அப்படியிருக்கறாங்க கன்றதுக்காக எல்லாரையும் கொற சொல்ல முடியாது”

“அதுகூட அவங்க என்னா காரணம் சொல்றாங்க தமிழ் வழில படிக்க வைக்க நல்லதரமான பள்ளிக்கூடம் இல்ல. அதனாலதான் நாங்க ஆங்கில வழிப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்ப வேண்டியதா இருக்குதுன்றாங்க”

“இதெல்லாம் சும்மா ஒரு சாக்கு தோழர் எல்லாரும் இப்பிடிப் பேச ஆரம்பிச்சா அப்பறம் இதுக்கு எப்பத்தான் விமோசனம்”

“நல்ல தரமான பள்ளிக் கூடங்கள் பெருகணும்”

“தானா எப்படிப் பெருகும். நாமதான் அதப்பெருக வக்யணம்.”

“பள்ளிக்கூடங்கள் பெருகனா மட்டும் போதாது தோழர். ஊட்டுல இருக்கறவங்க மனோபாவமும் மாறணம். இவரு தமிழ்ப் பற்றாளரா இருப்பாரு. ஊட்டுலு இருக்கறவங்க இவர ஓரங்கட்டி வச்சிட்டு அவங்க வேலையப் பாப்பாங்க. கேட்டா நீங்க உருப்படாமப் போனது போதும் புள்ளைங்களையாவது உருப்பட உடுங்கன்னு அவரை வாயடைப்பாங்க. இப்பிடி இருந்தா அப்பறம் தமிழ் எப்பிடி உருப்படும்.”

“இதனாலதான் பல குடும்பங்கள்ள இவரு பெரிய தமிழ்ப் பற்றாளரா இருப்பாரு, இவரு புள்ளைங்க பேரப்புள்ளைங்கள்லாம் கான்வென்ட்ல படிக்கும், கேட்டா குடும்பச் சூழல்ன்னுவாரு. குடும்பத்துலியே செல்வாக்கு செலுத்த முடியாதவரு அப்புறம் சமூகத்துல எப்பிடி செல்வாக்கு செலுத்த முடியும்”

“சிலபேர் குடும்ப சூழல் சிக்கலாத்தான் இருக்கும் தோழர். அதுக்காக ஊட்ட திருத்த முடியாதவர் ஊரத்திருத்த முடியாதுன்ற வாதத்த வைக்க முடியாது. அவரால மத்தவங்க திருந்தலாம் இல்லியா?”

“எதாருந்தாலும் மொதல்ல தமிழன் அவங்கவங்க ஊட்டுல தமிழ் பேசற துணிச்சலோட இருக்கணம். தமிழன் கூச்சப்படாம ஊட்டுல தமிழ் பேசி குடும்பத்தாரையும் எப்ப அப்படி பேச வக்யறானோ அப்பதான் தமிழ் உருப்படும்.”

“நல்ல சொன்னீங்க” என்றார் இன்னொரு நண்பர்.

உணவு இடைவேளை முடிந்து பிற்பகல் கவியரங்கம், பொது அரங்கம், நடக்க இருப்பதையும் முன்னதாக காலை நிகழ்ச்சிகள் தொடங்க இருப்பதாகவும் ஒலி பெருக்கியில் தெரிவித்த அறிவிப்பு ஆங்காங்கே வெளியே நின்று கொண்டிருக்கும் தோழர்களை அரங்கிற்குள் வந்து அமருமாறு கேட்டுக்கொண்டிருந்தது.

“சரி போய் உக்காருவம் தோழர்” என்றான் இவன்.

எல்லோரும் உள்ளே சென்று ஏற்கெனவே அமர்ந்திருந்த இடத்தை நெருங்கினர். இவர்கள் அமர்ந்திருந்த இருக்கைக்குப் பக்கமாக தூரத்து நண்பர் ஒருவரைக் காண இவன் அவரை நெருங்கினான். நண்பர் இடைநிலை ஆசிரியர். தமிழ்ப் பற்றாளர். துணைவியாரும் அப்பிடியே. இலக்கிய இளம்கலைப் பட்டம் முடித்துப் பணி வாய்ப்பைத் தேடிக் கொண்டிருப்பவர். ஆசிரியர் மற்றவர்கள் மாதிரி இல்லாமல் வீட்டிலும் தமிழ் பேசினார். எப்போதாவது அவர் இல்லம் போனால் அவர் துணைவியாரும் தமிழ் பேசுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும். நமக்கும் இப்படியே வாய்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொள்வான். அல்லது இதுபோன்றவராகத்தான் பார்த்து முடிக்க வேண்டும் என்று நினைப்பான். முதல் வகுப்புப் படிக்கும் ஒரே பையனுடன் குடும்பத்தோடு வந்திருந்தார்.

இவன் அவரை நெருங்கி “வணக்கம் தோழர்” என்றான்.

சட்டென்று திரும்பிய அவர் பதிலுக்கு வணக்கம் வைத்து “வாங்க வாங்க எப்ப வந்தீங்க” என்று வரவேற்க துணைவியாரும் பையனும் வணக்கம் வைத்து “வாங்க” என்றனர்.

இவன் தான் வந்த விவரத்தைச் சொல்லி “நீங்க எப்ப வந்திங்க, முற்பகல் உங்களப் பாக்கலியே” என்றான்.

“நிகழ்ச்சி தொடங்கும் போதே வந்துட்டேன் தோழா., முன்பக்கமா உட்கார்ந்திருந்தேன். ஒலி பெருக்கிப் பெட்டி ஒரே இரைச்சல் அதனாலதான் கொஞ்சம் தள்ளி உக்காரலாமேன்னு இங்க வந்துட்டம்” என்றார்.

“உணவெல்லாம் முடிச்சிட்டீங்களா” என்றார். அவரது துணைவியார்

“முடிச்சிட்டம். நீங்க” என்றான். இவன்

“கையோட கொண்டாந்திருந்தோம்” என்றார் அவர்.

இவன் அவரை அறியாத நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து அவரது தமிழ் ஆர்வத்தைப் பற்றியும் சொல்ல, நண்பர் கூச்சத்தோடு புன்முறுவல் பூத்துக்கொண்டிருந்தார்.

கலைநிகழ்ச்சிகள் தொடங்க இருப்பதற்கான அறிவிப்புகள் வர இவன் அமர்ந்திருந்த இருக்கைப் பக்கமாகத் திரும்பினான். அங்கு அடையாளத்துக்காக துண்டால் சுற்றி மடித்து வைத்துவிட்டுச் சென்றிருந்த நாளேட்டைக் காணாமல் துண்டு மட்டும் இருக்க சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்த இவனை, நண்பர் “என்னா தோழர் தேடறீங்க” என்றார்.

இவன் தன்னுணர்வின்றியே இயல்பாக “ஒண்ணுமில்யே இங்க பேப்பர் வச்சிருந்தேன் காணம்” என்றான்.

அதற்கு ஆசிரியரின் முதல் வகுப்புப் படிக்கும் மகன் அருகில் அமர்ந்திருந்த யாரையோ கையைக் காட்டி இவனிடம் சொன்னான் “செய்தித்தாளா. அதோ அவர் எடுத்து வச்சி படிச்சிக்னு இருக்கறார் பாருங்க.”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *