முடிவை மாற்று…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 23, 2022
பார்வையிட்டோர்: 4,328 
 

‘இருளைக் கிழித்துக்கொண்டு திடீரெனத் தோன்றிய வெளிச்சம் வியப்பை ஏற்படுத்தியது..’, இருந்தாலும் கண்டுகொள்ளாமல் எழுதிக் கொண்டே இருந்தான் அந்திவண்ணன்.

“மானிடா.. என்ன எழுதிக்கொண்டு இருக்கிறாய்…?”

“வேறென்ன.. கதை தான்..”

“இப்படி இரவு நேரத்தில் எழுதுகிறாயே.. உனக்கெல்லாம் பயமே இல்லையா?”

“இப்படி இரவு நேரத்தில் கதை எழுதும் ஒருவனிடம் பேச்சுக் கொடுத்து தடங்கல் செய்கிறாயே.. உனக்கு வெட்கமே இல்லையா?”

“ம்… வெட்கம்.. நான் யார் என்று என்னைப் பார்.. அப்புறம் பேசு..”

“கதை முடியும் கட்டத்தில் இருக்கும் போது.. இது என்ன அத்துமீறல்…? கொஞ்சம் முடித்துவிட்டு வருகிறேனே…!”

“ஐயோ.. அப்படி நீ முடித்து விடக்கூடாது என்று தானே நானே வந்திருக்கிறேன்….”

“சரி.. சொல்.. நீ யார்?”

“உன் கதையின் நாயகன் யார்?”

“நான் கேள்வி கேட்டால்.. நீ பதில் சொல்லாமல்.. நீயும் கேள்வி கேட்கிறாயே!”

“அது அப்படித்தான்.. சொல்.. உன் கதையின் நாயகன் யார்..?”

“விக்கிரமன்.. அதாவது விக்கிரமாதித்தன்…”

“ஓ.. இப்போது.. கதை முடியப்போகிறது என்றாயே… எப்படி முடிக்கப் போகிறாய்..?”

“எப்படி முடிப்பேன்… உலகிலுள்ள பூதங்களுக்கெல்லாம் கெடுதல் செய்து வருகிறான் விக்கிரமன்.. ஒவ்வொரு முறையும் பூதங்கள் அவனைக் கொல்ல வரும் போதெல்லாம்… எப்படியோ எதாவது சாகசம் செய்து தப்பிக் கொள்கிறான்.. முடிவில் எல்லா பூதங்களும் சதி செய்து அவனைக் கொல்வதாக முடிக்கப்போகிறேன்…”

“முடிவை மாற்று….”

“நான் தானே கதாசிரியர்.. அதைச்சொல்ல நீ யார்?”

“நான் யாரா..? நன்றாகப் பார்.. நான் தான் விக்கிரமன்.. உன் கதையின் நாயகன்..”

“நீ எப்படி இங்கே..?”

“எப்படியோ வந்தேன்.. அது தான் எனக்கு சாகசம் தெரியும் என எழுதியுள்ளாயே..! அதே போலொரு சாகசம் செய்து வந்தேன் என வைத்துக் கொள்ளேன்…. ஆனால் கதையில் எனைக் கொல்லாமல் விட்டுவிடேன்..”

“அது என் கதை.. இனி எப்படி மாற்ற முடியும்?’

“இது நியாயமில்லை..”

“யார் சொன்னாலும் மாற்ற முடியாது..”

“அந்த பூதங்களே சொன்னால்..?!?!?”

“நான் கதையில் சொன்ன பூதங்கள் எப்படி வெளியே வரும்?”

“என்ன கேள்வி இது.. கதையின் நாயகன், நானே உன் முன் நிற்கிறேன்.. இதில் பூதங்கள் வராதா என்ன..?!?!”

“கரிகரிகரி உரிஉரிஉரி சரிசரிசரி…. டகாம மகாம சகாம….. ட்ரிம் கரிம்.. ப்ரிம்… பூதங்களே வாருங்கள்….”, என விக்கிரமாதித்தன் கத்த அத்தனை பூதங்களும் அந்த அறையின் மேல் பாகத்தில் வந்து சேர்ந்தன…

அதிர்ச்சியடைந்தான் அந்திவண்ணன்…

“ஆம்.. கதாசிரியரே.. விக்கிரமனை நாங்கள் சதி செய்து கொல்வது போல் எழுதவேண்டாம்.. இவரை விட்டு விடுங்கள்.. வருங்காலத்தில்.. சிறுவர்கள் படிக்கப்போகும் “விக்கிரமாதித்தன் வேதாளம்” என்ற கதைகளுக்கு இவர் நாயகனாக இருக்கப்போகிறார்… அதில் நாங்கள் ஒரு கேள்வி கேட்க கடைசியில் பதில் சொல்லி ஒவ்வொரு முறையும் தப்பித்துக் கொள்வார்.. அந்தக் கதைகளெல்லாமே மிக மிக சுவாரஸ்யமாக இருக்கும்.. அதனை எழுதப் போகிறவரே நீர் தான்… அது தான்.. உங்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்… விட்டு விடுங்கள் விக்கிரமனை..”

பூதங்களின் சொல் கேட்டு ஆனந்தமடைந்தான் அந்திவண்ணன்.. அந்தக்கதை முடிவை மாற்றினான்.. வரும் காலத்தில் விக்கிரமாதித்தன் வேதாளம் கதைகளை எழுத சிந்திக்க ஆரம்பித்தான்…

– அக்டோபர் 2020

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *