முடிவு எடுத்த அந்த நொடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 11, 2015
பார்வையிட்டோர்: 8,313 
 

காத்துக்கொண்டிருந்தாள் சில பல மணி நேரங்களாக.

காலையில் ஒளிப்பிழம்பாக இருந்த சூரியன் கமலா ஆரஞ்சுப்பழம் போல மெதுவாக கீழ் நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. இன்னும் கத்திரி ஆரம்பமாகவில்லை.அதற்குள் என்ன கச கசப்பு. காலையில் கஞ்சி முடமுடப்போடு விறைப்பாக இருந்த புடவை வியர்வையில் நனைந்து சுருங்கி கால் பக்கம் மேலே ஏறி இருந்தது. நூறு தடவைக்கு மேல் யோசித்து விட்டாள். ஆனால் முடிவு எடுக்க முடியவில்லை. டூ வீலர் வாங்கிடலாம்…வேண்டாம்.. யாராவது லேசாக இடித்தால் கூட உயிருக்கு உத்தரவாதமில்லை. கால் டாக்ஸி உபயோகிக்கலாம். வேண்டாம், வாங்கும் சம்பளம் அதிலேயே போய்விடும். கார் வாங்கலாம், வேண்டாம் நிறுத்துவது சிரமம், வீட்டிலும் சரி, ஆஃபீசிலும் சரி, ஷேர் ஆட்டோ..வேண்டாம். நிறைய நடக்க வேண்டியிருக்கும். இப்படி காரணங்கள் தேடித்தேடி தினமும் பஸ்ஸில் அவதிப்படுவது நிரந்திரமாகிவிட்டது.

யோசித்துப்பார்த்தாள். எது அவளை முடிவெடுக்க விடாமல் தடுத்தது?

ஒரு நாள் , பஸ் காலியாக வந்தது. அப்பாடி என்று பெருமூச்சு விட்டு டிக்கட் வாங்குவதற்குள் அடுத்த ஸ்டாப். தடதடவென்று பெரிய கும்பல்.

“போம்மா முன்னாடி இடம் இருக்குதில்ல..என்னமோ ஆணி அடிச்சாமாறி நின்னுக்கினு”…கண்டக்டர் எல்லோர் முன்னாலும் கத்தியது அவமானமாக இருந்த்து. இன்னும் டிக்கட் எடுக்கவில்லை என்று சொல்ல பயமாக இருக்க, முன்னால் நகர்ந்தாள்.

“டிக்கட்..டிக்கட்..யாரும்மா முன்னாடி கொடுத்தனுப்பும்மா..இந்த கும்பல்ல ஒவ்வொருத்தர் கிட்டே வந்து டிக்கட் கேட்க முடியும். வாங்கிட்டு முன்னே போக வேண்டியதுதானே, வந்துட்டாங்க..”

கடைசியில் எல்லார் முன்பும் அவள் மேல் குற்றம் சாட்டப்பட்டது.

அன்று முடிவெடுக்கவில்லை.

மற்றும் ஒரு நாள்….

பஸ் ஏகத்திற்க்கு நிறைந்திருந்த்து. ஃபுட்போர்டிலிருந்து ஒரு வழியாக மேலே ஏறினாள்.

“ஐய்ய! கண்ணு என்ன பின்னாடியா இருக்கு. இப்படி காலை முதிக்குற”. ஒரு கறிகாய் கூடைக்காரி கூடையால் இடித்தாள்.

”சாரி”

“இத ஒண்ணு கத்து வெச்சிக்கிட்டாங்க. படிச்சவங்க..இந்த சாரி பூரிய சொல்லிபுட்டா வலி குறஞ்சிடுமா? யாருக்கு வேணும் உன்னோட சாரி. செருப்புக்காலால நசுக்கிப்புட்டு அப்புறம் என்ன சாரி”

இதை மனசில் வைத்துக்கொண்டு இன்னொரு நாள் யார் காலையோ தவறுதலாக மிதித்த போது சாரி சொல்ல வந்ததைக் கட்டுப்படுத்திக்கொண்டாள். அவளின் தோள்களை மெல்ல கைகளால் தொட்டாள்.

“எம்மா காலை உடச்சுப்புட்டு மேல வேற வந்து விழறே..ஒரு சாரி சொல்ல மனசில்ல”

“ கறுப்பாயி, எப்படி முழி முழிக்குது பாரு..இன்னாடா கஸ்டம் குடுத்துட்டமேன்னு ஒரு மன்னிப்பு கேக்குதாபாரு..”

இப்போதும் தவறு அவள் மேல்தான்.

அன்றும் முடிவெடுக்க வில்லை.

பஸ் இன்னும் வந்தபாடில்லை. போய்ச் சேருவதற்க்ககு ஒரு மணி நேரம். அப்புறம் சமையல்…. கூட்டமாய் வந்தால் நிறுத்தாமல் போய்விடுகிறான். நிறுத்தினாலும் உட்கார இடம் கிடைப்பதில்லை.

அன்று அப்படித்தான். அவள் நின்று கொண்டிருந்த சீட் காலியாகியது. உட்கார்ந்துவிட்டாள். அடுத்த ஸ்டாப்பில் ஒரு மகளும் தாயும். மகளின் கையில் இரண்டு வயதுக்குழந்தை. உடனே எழுந்து அந்தத்தாயை அமரச்செய்தாள். குழந்தையைத்தாயிடம் கொடுத்துவிட்டு மகளும் இவளுக்குப்பக்கத்தில் நின்றுகொண்டிருந்தாள். இன்னும் இரண்டு ஸ்டாப்புக்குப்பிறகு இன்னொரு பக்கத்து சீட் காலியாகியது, இவள் உட்காரப்போனாள். அதற்க்குள் அந்த அம்மா தன் கையில் வைத்திருந்த குழந்தயை சீட்டில் வைத்துவிட்டு ..” டீ கலா! வா சீட் காலி இங்கே” என்று பெருங்குரல் எடுத்துக்கத்தினாள்.

ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைகாட்டு..இதுதான் போல!

அன்றும் முடிவெடுக்க வில்லை.

ஆயிற்று, பஸ் வந்தபாடில்லை, இப்படிநடந்ததை யோசித்து யோசித்தே சோர்ந்து போனாள். ஒரு ஆட்டோ பிடித்திருக்கலாமோ?
கூட்டம் நிரம்பி வழிய பஸ் ஒரு பக்கமாய் சாய்ந்து வந்தது. பஸ் கலாச்சாரப்படி யாரும் இறங்கவோ ஏறவோ வழி கொடுக்கவில்லை. இங்கேதான் ஏறும்பாதை, இறங்கும் பாதை எல்லாம் ஒரே போல் இருக்கின்றதே!

ஒரு வழியாக ஏறிவிட்டாள். டிக்கட் எடுத்து மடித்து கைக்கடிகாரத்தின் அடியில் சொருகிவைக்கும்போது பின்னால் ஒரு நீள பென்ச் சீட் கிடைத்துவிட்ட்து. காலை தரையிலிருந்து உச்சாணிக்கொம்பில் இருக்கும் முதல் படியில் வைக்கும்போது கேட்ட மளுக் சத்தம் இப்போது வலிக்க ஆரம்பித்தது.

அப்போதுதான் பார்த்தாள். ஒரு 70 வயது கண்ணீல் சோடா புட்டி அதன் வழியே பூதாகாரமாய் வெள்ளையோடிப்போன கண்களால் அந்த மூதாட்டி அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள். கூட்ட்த்தில் கம்பியைப்பிடிக்க முடியாமல் ஒரே ஆட்டம். ஏதோ கெஞ்சுவது போல இவளையே பார்த்த பார்வை.

கொஞ்சம் உட்கார இடம் கொடு என்று பார்க்கிறாளோ? ஆனால் எதுவும் கேட்கவில்லை. முன் சீட்டில் அமர்ந்திருந்த பெண்களைப் பார்த்தாள். அவர்களின் மேல் சாய்ந்தும் நிமிர்ந்தும்தான் அந்த மூதாட்டி நின்றுகொண்டிருந்தாள். பெண்களுக்கு இருவது வயதுதான் இருக்கும். பாய் ஃப்ரெண்ட் சொன்னது, கேட்ட்து தொட்டது..இது பற்றி மூச்சு விடாமல் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அதற்குப்பக்கத்திலும் இளம் வயதுப்பெண்கள்தான். யாரும் அந்த மூதாட்டிக்கு இடம் கொடுக்கவில்லை. இவளுக்கு கால் வலி முணுக்கென்றது. இது வரை மனித நேயம் பற்றிய பல நிகழ்ச்ச்கள் மனதில் தோன்றியது.

சே! உனக்கெதுக்கு வம்பு! வாங்கின அடி பத்தாதா?

அவள் மனது இறுகியது. அந்த மூதாட்டியின் பார்வையை அலட்சியப்படுத்தினாள்.

அப்போதுதான் அந்த நொடி வந்தது.

அந்த நொடியில் பஸ் ஒரு குலுக்கல் போட்டு முன்னே சென்று நின்றது.எல்லோரும் முன் நோக்கி நகர்ந்தனர். அந்தக்குழப்பத்தில் அரைகுறையாய் கம்பியைப்பிடித்தபடி நின்றிருந்த அந்த மூதாட்டி முதல் படியில் விழுந்து பின் ஸ்லோ மோஷனில் இரண்டாவது, கடைசி படிகளில் உருண்டு தரையில் மண்டையில் அடிபட விழுந்தாள்.ஒரு நூல் இழையாக ரத்தம் கோலம் போட்ட்து. திறந்திருந்த கண்கள் இன்னும் அவளையே பார்த்தன. சிறிதும் அடிபடாமல் சோடாபுட்டி கண்ணாடி நடு ரோடில் கிடந்த்து.கண்களில் உயிர் இல்லை.

ஆனாலும் கேள்வி கேட்டது..”இடம் கொடுத்திருக்கலாமே”.

இப்போதும் தவறு அவள் மேல் தான்.ஆனால் இதை யாரும் சொல்லவில்லை அந்த புரையோடிய கண்களைத் தவிர.

இனி பஸ்ஸில் ஏறப்போவதில்லை..அந்த நொடியில் கடைசியாக அவளுக்காக முடிவெடுக்கப்பட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *