முக்கோண கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 5, 2015
பார்வையிட்டோர்: 6,996 
 

எல்லாருக்கும் பிடித்த அதே போல எல்லாருக்கும் பிடிக்காத ஒரு படைப்பாளியை இப்போதும் பின் தொடருகிறேன்……… இப்போது அவன் குடியிருக்கும் 6வது மாடியின் பால்கனியில் நின்று கொண்டும் அவ்வப்போது உள்ளே போவதும்.. வெளியே வருவதுமாக ஒரு சிறுகதையின் தொடர்ச்சி போல ஒரு பக்க கதையின் முடிவாகத் தெரிகிறான்…. நானும் பக்கத்துக்கு மாடி குடியிருப்பில் அதே 6வது மாடியில் அவனுக்கு எதிரே இருக்கும் வீட்டில் பால்கனியில் நின்றுதான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்…

நான் தொடர்ந்து கொண்டேயிருக்கிறேன்…. அவனும் கூட….

நான் சைதன்யா…. நீண்ட வருடங்களாக மிகப் பெரிய வாசகி…. நல்ல படைப்புகள் யாரிடமிருந்து வந்தாலும்… வாசித்து விடுவேன்.. பிடித்திருந்தால் பாராட்டியும் விடுவேன்… படைப்பாளிகளில் எழுதுபவர்கள் கொஞ்சம் கொம்பு முளைத்தவர்கள் போலவே இருப்பதுதான் எனது இந்த எழுதும் எண்ணத்துக்கு அடித்தளம்….மிகப் பெரிய கம்பீரமாக அது என்னை வசீகரித்து ஆட்கொள்கிறது… ‘எத்தனை நாளைக்குத்தான் படித்துக் கொண்டே இருப்பது..? எழுதித்தான் பார்ப்போமே’ என்ற எண்ணத்துக்குள் வேர் விட்டு வளர்ந்து காட்டு மரமாய் நின்ற அந்த எழுத்தாளனைப் பார்த்த பின், படித்த பின் தோன்றியது……..

ஒரு, வேளை நகர்வுகளின் துவக்கத்தின் மாயைக்குள் மயங்கிச் சரிவது போல, அவனால் எப்படி எழுத முடிகிறது…? என்று மிகப் பெரிய கண்ணியை என் மனமெங்கும் புதைத்து வைத்துக் கொண்டு யோசித்த ஒரு நாளில்தான் அவனின் எழுத்து எப்படி பிடிக்கிறது என்றும், ஏன் நாமும் எழுதக் கூடாது என்றும் யோசித்தேன்..

அவனின் இறுமாப்புக்குள் இருக்கும் கனத்த மௌனமாக ஒரு கசிதலின் வாசத்தை நுகர ஆசைப் பட்டேன்…அவன் ஒரு எழுத்து பிசாசு என்று எல்லாரும் கூறுவார்கள்…ஹி இஸ் அன் அன்பீட்டபில் இடியட்…. பட்… இன்டலிஜென்ஸ் ஆப் எரா….. ஒரே கதை…. அதுவும் அவனைப் பற்றியக் கதை…. அதன் பிறகு எழுத்து பிசாசு பட்டம் எனக்கு வந்தடைய வேண்டும்.. என் ஒரே கதையில் அவன் திக்கு முக்காட வேண்டும்…. அதன் பிறகு அவன் எழுத யோசிக்க வேண்டும்… அவனின் 100 கதைகளை என் ஒரு கதை அடித்து வீழ்த்த வேண்டும்… அந்த ஒரு கதை, அவன் கதையாக இருக்க வேண்டும்…. அதற்குதான் அவனுக்கு தெரியாமல் அவனைப் பின் தொடருகிறேன்.. ஒரு கதையை எப்படி கருவாக்கி வளர்த்து அவன் பிரசவிக்கிறான் என்பதை மறைந்திருந்து பார்த்து பார்த்து எழுதப் போகிறேன்… என் எழுத்துக்களில் அவன் எப்படியும் இருக்கலாம். அது அவனின் வாழ்க்கை…அவனை மிகவும் பிடித்த அதே சமயத்தில் பிடிக்காத இடத்திலும் அவனே இருப்பதுதான் அவனின் எழுத்துக்களின் சூட்சுமமான கடவுளின் ரூபம்… அல்லது சூத்திர சாத்தானின் வேதம்…

காற்றுள்ள போதும் தூற்றிக் கொள்ளும் அவனின் எழுத்துக்கள் காற்றே இல்லாத போதும் தூற்றிக் கொள்ளப் படுவதில்தான் நான் மூர்ச்சையாகி ஒரு பக்கத்துக்குள் மீண்டும் மீண்டும் அவனைத் தேடுகிறேன்.. இன்னும் சொல்லப் போனால் .**** அவனைக் காதலிக்கிறேன்…ஒரே ஒரு வாய்ப்பு கிடைத்தால் அவனை கொன்று எரித்து அந்த சாம்பலை என் நிர்வாண உடல் எங்கும் பூசிக் கொண்டு ஒரு பைத்தியகாரியைப் போல அவனின் புத்தகங்களை சுமந்து சென்று விற்பேன்…. அதே வாய்ப்பு மறுமுறை கிடைத்தால் அவனைக் கட்டிக் கொண்டு அவனைப் போலவே பல குழந்தைகள் பெற்று போட்டு அவனை எழுத விடாமல் தடுப்பேன்…. டேமிட்…. தி கிரேட் ரைட்டர்… பட் சாத்தான்…..

இப்போது அவன் உள் அறைக்குள் யாரிடமோ பேசிக் கொண்டே போவது போல போகிறான்… எனக்கு தெரியும் .. அவனுடன் யாருமே இல்லை… ஆனாலும் பேசுகிறான்……. எனக்கு சட்டென உடல் நடுங்கியது.. அவன் தன் நடையை நளினமாக ஒரு பெண்ணைப் போல மாற்றிக் கொண்டிருந்தான்…ஒரு பெண் போல நடந்து நடந்து ஏதோ சமிக்கை செய்து கொள்வது போல தோன்றியது…. அடர்ந்த வனமென ஒரு மனதை திறந்து கொண்டு அவனின் ஆத்மா அந்த அறையின் ஒவ்வொரு அடி காலடியிலும் நிலைகளற்ற வண்ணங்களை குழப்பி குழப்பி விசிறிக் கொண்டேயிருக்க ஒரு பெண் குரலில் அழுது தீர்த்துக் கொண்டிருந்தான்…… அவனை அவனே கட்டிக் கொண்டான்… இதோ 10 நிமிடங்கள் கழிந்து விட்டன..

அவன் மல்லாக்க படுத்துக் கொண்டு சுடும் வெப்பத்தை உடலில் வாங்கிக் கொண்டு ஒரு குந்திதேவியின் காதலைப் போல ஜன்னல்கள் வழியாக உள்ளே வரும் சூரியனை வியந்து கொண்டே கிடந்தான்…. நான் இன்னும் பலமாக என் அறையின் ஜன்னல் மறைவின் பின்னே மறைந்து கொண்டேன்.. என் மூளை மடிப்பெங்கும் அடுக்கடுக்காய்… கீறல் விழுந்த இசைத் தட்டு போல அவனின் செய்கைகள் ஒரு வித பயத்தை கசிய செய்து கொண்டேயிருந்தன…அவன் எழுந்தமர்ந்து கொண்டு எதையோ எழுதத் தொடங்கினான்….கதையாகத்தான் இருக்கும்.. அனுபவங்களை அள்ளி கொட்டுகிறான் போல……. அவனின் முகம் இருட்டுக்குள் நூறு சூரியனைப் போல பிரகாசித்தது… சட்டையைக் கிழித்துக் கொண்டான்… முகம் பொத்தி அழுதான்… தேம்பி தேம்பி அழுதான்….. அத்தனை கண்ணீரை எங்கு வைத்திருந்தான் என்று தெரியாத அளவுக்கு, உருண்டு அவன் முன்னால் ஓடிய அவனின் கண்களை, ஓடி ஓடி….. ‘சடக்….. சடக்’- என்று ஒவ்வொரு கண்ணையும் காலால் அழுத்தி உடைத்தான்… ஒவ்வொரு கண் உடைந்து கூழாகும் போதும் அவனின் அழுகை ஆழமாய் அந்த வீடே அதிரும்படி தெறித்தது…

என்ன நினைந்தானோ என்னவோ தப்பித்து உருண்டு கொண்ட கண்களை எடுத்து கண்களுக்குள் பொருத்திக் கொண்டு வேக வேகமாய் பைக்குள் வைத்திருந்த வேறொரு சட்டையை மாற்றிக் கொண்டு கிழிந்த சட்டையை அங்கிருந்த ஒரு ஹேங்கரில் மாட்டி வைத்து விட்டு குளியலறைக்குள் வேக வேகமாக நுழைந்தான்…

நசுக்கப்பட்ட கண்கள் என்பது எனது கற்பனை… அது கண்களாகவே இருப்பதுதான் அவனின் கற்பனையும் கூட…. அவன் கடந்த பிறகு அவன் மிதித்த இடத்தில் கூழாகிக் கிடந்தன பூரான்கள்…….என் பூதக் கண்ணாடி தெளிவாகக் காட்டியது….

இப்போது அவன் அவனின் அறைக்குள் திரும்ப வந்தான்……… திறந்திருந்த ஜன்னலை கொஞ்சம் ஓரமாக சாத்துவது போல வைத்துக் கொண்டு கூர்ந்து கவனித்தேன்… முதுகில் யாரையோ அம்பாரி சுமப்பது போல தனியாக முட்டி போட்டுக் கொண்டு,” யானை… யானை… யானை… யானை…” என்று சொல்லிக் கொண்டே ஊர்ந்தான்…. யானை என்பதாகத்தான் அவன் உதடு அசைந்தது…..நானும் அப்படியே எடுத்துக் கொண்டேன்…… அவன் ஒரு போதும் இந்த ஜன்னலை மட்டும் அடைப்பதே இல்லை……அவன் இப்போது நிர்வாணமாய் அறைக்குள் சுற்றினான், ஒரு குழந்தையைப் போல….. அவனின் குதூகலம் அவனின் நிர்வாணத்தில் ஒளிந்து கிடந்தது போல அத்தனை மகிழ்ச்சி அவன் உடலில்… இப்போது நானும் நிர்வாணமாய் எழுதிக் கொண்டே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தேன்…

என் மனமெங்கும்.. ஓடிய கதையில் அவன் இந்த முறை வெற்றி பெறவே கூடாது.. என் முதல் கதை… கடைசி கதையாகக் கூட இருக்கலாம்… ஆனால் வரலாற்றில் இடம் பெற வேண்டும்… வெறி பிடித்த மனதோடு எழுதிக் கொண்டிருந்தேன்….. அவனின் பிற வேஷங்கள்… நேற்றைய அவனின் சாலை நடமாட்டம்… …. சாலை ஓரத்தில் இருந்த பெஞ்சில் அமர்ந்து போகிறவர் வருபவரின் அங்கங்களை கவனித்த விதம்…. அவர்களின் பேச்சைக் கூர்ந்து உள் வாங்கிய தொனி.. அவ்வப்போது எடுத்துக் கொண்ட குறிப்புகள்….. ஒரு கிழவியின் மார்பை அவன் நோக்கிய விதம், எல்லாமே அவனை ஒரு பைத்திய காரனைப் போலவேதான் எனக்கு காட்டியது…..ஒரு பைத்தியக்காரியைப் போல அவனை எழுதிக் கொண்டிருந்தேன்…

ஏதோ புதிய முயற்சியை இப்போது எழுதிக் கொண்டிருக்கும் கதையில் கொண்டு வரப் போகிறான் என்பதற்கான சூட்சுமக் குறியீடாகத்தான் இத்தனை வித்தியாசமான செயல்பாடுகள் கொண்ட நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை புரிய முடிந்தது… அந்தக் கரு கிடைத்து விட்டால் இந்த முறை அவனைத் தள்ளி விட்டு விட்டு இந்த சைதன்யா விருது வாங்கி விடுவாள்….. அவன் யோசிக்க வேண்டும்…. தன் கதையை எழுதி ஒருத்தி தன்னை சிதைத்து விட்டாளே என்று மனதுக்குள் அழுக வேண்டும்…..அந்த அழுகையின் ஆங்காரத்தில் என்னை சேர வேண்டும்…. இன்னும் சொல்லப் போனால் என்னை வன்புணர்ச்சி செய்ய வேண்டும்….அந்த குற்ற உணர்ச்சியில் அவன் எழுதுவதையே விட்டு விட வேண்டும்…. எனக்கு கணவனாக, காதலனாக நான் மட்டுமே ரசிக்க கூடிய ஒரு கவிதையாக அவன் என்னோடு கூடவே இருக்க வேண்டும்…..

‘விடாத சைதன்யா.. எழுது…எழுது….’- என்று என் மனதுக்குள் ஒளிந்து கொண்டிருந்த பிசாசு தன் நீண்ட பேனாவைக் கொண்டு என்னை அடித்து சித்ரவதை செய்தது…. நான் சிரித்துக் கொண்டே எழுதினேன்… என் எழுத்துக்களில் அவன் நினைவின்றிக் கிடந்தான்.. அவனின் தனிமை சுவரில் கிழிந்து தொங்கும் அவனின் முடிவற்ற வரிகள் ஒரு நீண்ட பெருமூச்சோடு என்னில் ஊர்ந்து கொண்டே கட்டில் உடைக்க காத்திருந்ததை என் அறைக்குள் ஒரு மாய வெளியில் ஒளிந்து கொண்டு கவனித்தேன்……

அவன் அறைக்குள் மாயமாகி காணாமலும் போகிறான்.. நானும் அப்படியே போகிறேன்… அவன் அறை முழுக்க நிறைந்து கனக்கிறான்.. நானும் அப்படியே கனக்கிறேன்…திடும்மென தன் கையை பிளேடால் அறுத்துக் கொண்டு சற்று நேரம் ஜன்னலில் அமர்ந்த வண்ணம் தன் குருதியை கீழ் நோக்கி சொட்ட விடுகிறான்….நானும் அப்படியே விடுகிறேன்…. கணம் ஒன்றில் நான் அவனாகவே மாறி விடுகிறேன்.. கடந்த 5 நாட்களாக அவனைப் பின் தொடர்ந்து அவனைப் போலவே உடை அணிந்து, அவன் போகும் இடமெல்லாம் போய் வந்து, அவனைப் போலவே எல்லா பைத்தியகாரத்தனத்தையும் செய்து கொண்டே கவனித்துக் கொண்டிருக்கிறேன்… சரி… அவனை கவனித்து அவனைப் பற்றி எழுத வேண்டும் என்பதுதான் என் நோக்கம்.. ஆனால் நான் ஏன் அவனைப் போலவே நடந்து கொள்கிறேன்…என்பதுதான் எனக்கும் புரியாத கேள்வியாக இருக்கிறது….

இரவெல்லாம் விழித்துக் கிடக்கும் அவன் கண்களில் காலையில் நான்கு நட்சத்திரங்கள் உதிர்ந்து கிடக்கின்றன…. நான்கில் இரண்டை நான் களவாடிக் கொள்கிறேன்….சுவற்றில் கரித் துண்டைக் கொண்டு கிறுக்குகிறான் சிறு பிள்ளையைப் போல……தொட்டில் கட்டிக் கொண்டு அதில் படுத்துக் கொண்டு அங்கும் இங்கும் அலை பாய்ந்தான்.. எனக்கு தலையே சுற்றியது… என்ன மாதிரி ஆள் இவன்.. வீட்டில் இப்படி கிறுக்குத்தனங்களில் ஊறிய இவனா அப்படி கதைகளை எழுதித் தள்ளுகிறான்….நினைக்க நினைக்க மனதுக்குள் வாந்தி வரும் உணர்வோடு தலை சுற்றியது.. நான் தொட்டிலை விட்டு கீழே சரிந்தேன்… என்னால் தொட்டிலில் அமர்ந்தபடி கர கரவென சுத்த முடியவில்லை…. என் அறை சுவரெங்கும் அவன் பெயரை கிறுக்கிக் கொண்டிருந்தேன்…….

அவன் படைப்புகளின் கூர் நோக்கில் நான் வீதியற்ற நிழல்களின் வடிவத்தை படித்துக் கொண்டே திருப்பும் பக்கங்களில் எல்லாம் அவனே நிறைந்து கிடப்பது தர்க்க ரீதியில் வெட்கம் சார்ந்த எனது பெண்மையை கிளருகிறது…. கனவும் மாயமும் அப்பிக் கொண்ட எல்லா நேரங்களையும் அவனே காயப் போடுகிறான்.. அவன் எழுதும் வரிகளில் அடிக் கோடிட்டுக் கொண்டே நிரம்புதில் நான் மை அற்ற வெற்றிடம் நிரப்புகிறேன்…. நிரம்பி நிரம்பி நிரப்பும் பெண்மைக்குள் நிறைந்து வழியும் காதலும் காமும்… கை கோர்த்த பயணங்களின் நீரூற்று போல பொல்லாத சாரலின் துள்ளுகின்ற மார்புகளோடு அவனையும் அவன் எழுத்துக்களையும் பின் தொடருகிறேன் எப்போதும் …

எல்லாருக்கும் பிடித்த அதே போல எல்லாருக்கும் பிடிக்காத ஒரு படைப்பாளியை இப்போதும் பின் தொடருகிறேன்…….. இப்போது அவள் குடியிருக்கும் 6வது மாடியின் பால்கனியில் நின்று கொண்டும் அவ்வப்போது உள்ளே போவதும்.. வெளியே வருவதுமாக ஒரு சிறுகதையின் தொடர்ச்சி போல ஒரு பக்க கதையின் முடிவாகத் தெரிகிறாள்…. நானும் பக்கத்துக்கு மாடி குடியிருப்பில் அதே 6வது மாடியில் அவளுக்கு எதிரே இருக்கும் வீட்டில் பால்கனியில் நின்றுதான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்…

நான் தொடர்ந்து கொண்டேயிருக்கிறேன்…. அவளும் கூட….

நான் அபிமன்யு…. நீண்ட வருடங்களாக மிகப் பெரிய வாசகன்…. நல்ல படைப்புகள் யாரிடமிருந்து வந்தாலும்… வாசித்து விடுவேன்.. பிடித்திருந்தால் பாராட்டியும் விடுவேன்… படைப்பாளிகளில் எழுதுபவர்கள் கொஞ்சம் கொம்பு முளைத்தவர்கள் போலவே இருப்பதுதான் எனது இந்த எழுதும் எண்ணத்துக்கு அடித்தளம்….மிகப் பெரிய கம்பீரமாக அது என்னை வசீகரித்து ஆட்கொள்கிறது… ‘எத்தனை நாளைக்குத்தான் படித்துக் கொண்டே இருப்பது..? எழுதித்தான் பார்ப்போமே’ என்ற எண்ணத்துக்குள் வேர் விட்டு வளர்ந்து காட்டு மரமாய் நின்ற அந்த எழுத்தாளினியைப் பார்த்த பின், படித்த பின் தோன்றியது……..

ஒரு, வேளை நகர்வுகளின் துவக்கத்தின் மாயைக்குள் மயங்கிச் சரிவது போல, அவளால் எப்படி எழுத முடிகிறது…? என்று மிகப் பெரிய கண்ணியை என் மனமெங்கும் புதைத்து வைத்துக் கொண்டு யோசித்த ஒரு நாளில்தான் அவளின் எழுத்து எப்படி பிடிக்கிறது என்றும், ஏன் நாமும் எழுதக் கூடாது என்றும் யோசித்தேன்..

அவளின் இறுமாப்புக்குள் இருக்கும் கனத்த மௌனமாக ஒரு கசிதலின் வாசத்தை நுகர ஆசைப் பட்டேன்…அவள் ஒரு எழுத்து பிசாசு என்று எல்லாரும் கூறுவார்கள்…ஷி இஸ் அன் அன்பீட்டபில் இடியட்…. பட்… இன்டலிஜென்ஸ் ஆப் எரா….. ஒரே கதை…. அதுவும் அவளைப் பற்றியக் கதை…. அதன் பிறகு எழுத்து பிசாசு பட்டம் எனக்கு வந்தடைய வேண்டும்.. என் ஒரே கதையில் அவள் திக்கு முக்காட வேண்டும்…. அதன் பிறகு அவள் எழுத யோசிக்க வேண்டும்… அவளின் 100 கதைகளை என் ஒரு கதை அடித்து வீழ்த்த வேண்டும்… அந்த ஒரு கதை, அவள் கதையாக இருக்க வேண்டும்…. அதற்குத்தான் அவளுக்கு தெரியாமல் அவளைப் பின் தொடருகிறேன்.. ஒரு கதையை எப்படி கருவாக்கி வளர்த்து அவன் பிரசவிக்கிறாள் என்பதை மறைந்திருந்து பார்த்து பார்த்து எழுதப் போகிறேன்… என் எழுத்துக்களில் அவள் எப்படியும் இருக்கலாம். அது அவளின் வாழ்க்கை…அவளை மிகவும் பிடித்த அதே சமயத்தில் பிடிக்காத இடத்திலும் அவளே இருப்பதுதான் அவளின் எழுத்துக்களின் சூட்சுமமான கடவுளின் ரூபம்… அல்லது சூத்திர சாத்தானின் வேதம்…

காற்றுள்ள போதும் தூற்றிக் கொள்ளும் அவளின் எழுத்துக்கள் காற்றே இல்லாத போதும் தூற்றிக் கொள்ளப் படுவதில்தான் நான் மூர்ச்சையாகி ஒரு பக்கத்துக்குள் மீண்டும் மீண்டும் அவளைத் தேடுகிறேன்.. இன்னும் சொல்லப் போனால் .**** அவளைக் காதலிக்கிறேன்…ஒரே ஒரு வாய்ப்பு கிடைத்தால் அவளைக் கொன்று எரித்து அந்த சாம்பலை என் நிர்வாண உடல் எங்கும் பூசிக் கொண்டு ஒரு பைத்தியகாரனைப் போல அவளின் புத்தகங்களை சுமந்து சென்று விற்பேன்…. அதே வாய்ப்பு மறுமுறை கிடைத்தால் அவளைக் கட்டிக் கொண்டு அவளைப் போலவே பல குழந்தைகள் பெற்றுக் கொண்டு அவளை எழுத விடாமல் தடுப்பேன்…. டேமிட்…. தி கிரேட் ரைட்டர்… பட் சாத்தான்…..

இப்போது அவள் உள் அறைக்குள் யாரிடமோ பேசிக் கொண்டே போவது போல போகிறாள்… எனக்கு தெரியும் .. அவளுடன் யாருமே இல்லை… ஆனாலும் பேசுகிறாள்……. எனக்கு சட்டென உடல் நடுங்கியது.. அவள் தன் நடையை கம்பீரமான ஒரு ஆணைப் போல மாற்றிக் கொண்டிருந்தாள்…ஒரு ஆண் போல நடந்து நடந்து ஏதோ சமிக்கை செய்து கொள்வது போல தோன்றியது…. அடர்ந்த வனமென ஒரு மனதை திறந்து கொண்டு அவளின் ஆத்மா அந்த அறையின் ஒவ்வொரு அடி காலடியிலும் நிலைகளற்ற வண்ணங்களை குழப்பி குழப்பி விசிறிக் கொண்டேயிருக்க ஒரு ஆண் குரலில் அழுது தீர்த்துக் கொண்டிருந்தாள்…… அவளை அவளே கட்டிக் கொண்டாள்… இதோ 10 நிமிடங்கள் கழிந்து விட்டன..

அவள் மல்லாக்க படுத்துக் கொண்டு சுடும் வெப்பத்தை உடலில் வாங்கிக் கொண்டு ஒரு குந்திதேவியின் காதலைப் போல ஜன்னல்கள் வழியாக உள்ளே வரும் சூரியனை வியந்து கொண்டே கிடந்தாள்…. நான் இன்னும் பலமாக என் அறையின் ஜன்னல் மறைவின் பின்னே மறைந்து கொண்டேன்.. என் மூளை மடிப்பெங்கும் அடுக்கடுக்காய்… கீறல் விழுந்த இசைத் தட்டு போல அவளின் செய்கைகள் ஒரு வித பயத்தை கசிய செய்து கொண்டேயிருந்தன…அவள் எழுந்தமர்ந்து கொண்டு எதையோ எழுதத் தொடங்கினான்….கதையாகத்தான் இருக்கும்.. அனுபவங்களை அள்ளி கொட்டுகிறாள் போல……. அவளின் முகம் இருட்டுக்குள் நூறு சூரியனைப் போல பிரகாசித்தது… சட்டையை கிழித்துக் கொண்டாள்… முகம் பொத்தி அழுதாள்… தேம்பி தேம்பி அழுதாள்….. அத்தனை கண்ணீரை எங்கு வைத்திருந்தாள் என்று தெரியாத அளவுக்கு, உருண்டு அவள் முன்னால் ஓடிய அவளின் கண்களை, ஓடி ஓடி….. ‘சடக்….. சடக்’- என்று ஒவ்வொரு கண்ணையும் காலால் அழுத்தி உடைத்தாள்… ஒவ்வொரு கண் உடைந்து கூழாகும் போதும் அவளின் அழுகை ஆழமாய் அந்த வீடே அதிரும்படி தெறித்தது…

என்ன நினைந்தாளோ என்னவோ தப்பித்து உருண்டு கொண்ட கண்களை எடுத்து கண்களுக்குள் பொருத்திக் கொண்டு வேக வேகமாய் பைக்குள் வைத்திருந்த வேறொரு சட்டையை மாற்றிக் கொண்டு கிழிந்த சட்டையை அங்கிருந்த ஒரு ஹேங்கரில் மாட்டி வைத்து விட்டு குளியலறைக்குள் வேக வேகமாக நுழைந்தாள்…

நசுக்கப்பட்ட கண்கள் என்பது எனது கற்பனை… அது கண்களாகவே இருப்பதுதான் அவளின் கற்பனையும் கூட…. அவள் கடந்த பிறகு அவள் மிதித்த இடத்தில் கூழாகிக் கிடந்தன பூரான்கள்…….என் பூதக் கண்ணாடி தெளிவாகக் காட்டியது….

இப்போது அவள் அவளின் அறைக்குள் திரும்ப வந்தாள்……… திறந்திருந்த ஜன்னலை கொஞ்சம் ஓரமாக சாத்துவது போல வைத்துக் கொண்டு கூர்ந்து கவனித்தேன்… முதுகில் யாரையோ அம்பாரி சுமப்பது போல தனியாக முட்டி போட்டுக் கொண்டு,” யானை… யானை… யானை… யானை…” என்று சொல்லிக் கொண்டே ஊர்ந்தாள்…. யானை என்பதாகத்தான் அவள் உதடு அசைந்தது…..நானும் அப்படியே எடுத்துக் கொண்டேன்…… அவள் ஒரு போதும் இந்த ஜன்னலை மட்டும் அடைப்பதே இல்லை……அவள் இப்போது நிர்வாணமாய் அறைக்குள் சுற்றினாள், ஒரு குழந்தையைப் போல….. அவளின் குதூகலம் அவளின் நிர்வாணத்தில் ஒளிந்து கிடந்தது போல அத்தனை மகிழ்ச்சி அவள் உடலில்… இப்போது நானும் நிர்வாணமாய் எழுதிக் கொண்டே அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்…

என் மனமெங்கும்.. ஓடிய கதையில் அவள் இந்த முறை வெற்றி பெறவே கூடாது.. என் முதல் கதை… கடைசி கதையாகக் கூட இருக்கலாம்… ஆனால் வரலாற்றில் இடம் பெற வேண்டும்… வெறி பிடித்த மனதோடு எழுதிக் கொண்டிருந்தேன்….. அவளின் பிற வேஷங்கள்… நேற்றைய அவளின் சாலை நடமாட்டம்… …. சாலை ஓரத்தில் இருந்த பெஞ்சில் அமர்ந்து போகிறவர் வருபவரின் அங்கங்களை கவனித்த விதம்…. அவர்களின் பேச்சைக் கூர்ந்து உள் வாங்கிய தொனி.. அவ்வப்போது எடுத்துக் கொண்ட குறிப்புகள்….. ஒரு கிழவனின் மார்பை அவள் நோக்கிய விதம், எல்லாமே அவளை ஒரு பைத்திய காரியைப் போலவேதான் எனக்கு காட்டியது…..ஒரு பைத்தியக்காரனைப் போல அவளை எழுதிக் கொண்டிருந்தேன்…

ஏதோ புதிய முயற்சியை இப்போது எழுதிக் கொண்டிருக்கும் கதையில் கொண்டு வரப் போகிறாள் என்பதற்கான சூட்சுமக் குறியீடாகத்தான் இத்தனை வித்தியாசமான செயல்பாடுகள் கொண்ட நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள் என்பதை புரிய முடிந்தது… அந்தக் கரு கிடைத்து விட்டால் இந்த முறை அவளைத் தள்ளி விட்டு விட்டு இந்த அபிமன்யு விருது வாங்கி விடுவான்….. அவள் யோசிக்க வேண்டும்…. தன் கதையை எழுதி ஒருத்தன் தன்னை சிதைத்து விட்டானே என்று மனதுக்குள் அழுக வேண்டும்…..அந்த அழுகையின் ஆங்காரத்தில் என்னை சேர வேண்டும்…. இன்னும் சொல்லப் போனால் என்னை வன்புணர்ச்சி செய்ய வேண்டும்….அந்த குற்ற உணர்ச்சியில் அவள் எழுதுவதையே விட்டு விட வேண்டும்…. எனக்கு மனைவியாக, காதலியாக நான் மட்டுமே ரசிக்க கூடிய ஒரு கவிதையாக அவள் என்னோடு கூடவே இருக்க வேண்டும்…..

‘விடாத அபிமன்யு.. எழுது…எழுது….’- என்று என் மனதுக்குள் ஒளிந்து கொண்டிருந்த பிசாசு தன் நீண்ட பேனாவைக் கொண்டு என்னை அடித்து சித்ரவதை செய்தது…. நான் சிரித்துக் கொண்டே எழுதினேன்… என் எழுத்துக்களில் அவள் நினைவின்றிக் கிடந்தாள்.. அவளின் தனிமை சுவரில் கிழிந்து தொங்கும் அவளின் முடிவற்ற வரிகள் ஒரு நீண்ட பெருமூச்சோடு என்னில் ஊர்ந்து கொண்டே கட்டில் உடைக்க காத்திருந்ததை என் அறைக்குள் ஒரு மாய வெளியில் ஒளிந்து கொண்டு கவனித்தேன்……

அவள் அறைக்குள் மாயமாகி காணாமலும் போகிறாள்.. நானும் அப்படியே போகிறேன்… அவள் அறை முழுக்க நிறைந்து கனக்கிறாள்.. நானும் அப்படியே கனக்கிறேன்…திடும்மென தன் கையை பிளேடால் அறுத்துக் கொண்டு சற்று நேரம் ஜன்னலில் அமர்ந்த வண்ணம் தன் குருதியை கீழ் நோக்கி சொட்ட விடுகிறாள்….நானும் அப்படியே விடுகிறேன்…. கணம் ஒன்றில் நான் அவளாகவே மாறி விடுகிறேன்.. கடந்த 5 நாட்களாக அவளைப் பின் தொடர்ந்து அவளைப் போலவே உடை அணிந்து, அவள் போகும் இடமெல்லாம் போய் வந்து, அவளைப் போலவே எல்லா பைத்தியகாரத்தனத்தையும் செய்து கொண்டே கவனித்துக் கொண்டிருக்கிறேன்… சரி… அவளை கவனித்து அவளைப் பற்றி எழுத வேண்டும் என்பதுதான் என் நோக்கம்.. ஆனால் நான் ஏன் அவளைப் போலவே நடந்து கொள்கிறேன்…என்பதுதான் எனக்கும் புரியாத கேள்வியாக இருக்கிறது….

இரவெல்லாம் விழித்துக் கிடக்கும் அவள் கண்களில் காலையில் நான்கு நட்சத்திரங்கள் உதிர்ந்து கிடக்கின்றன…. நான்கில் இரண்டை நான் களவாடிக் கொள்கிறேன்….சுவற்றில் கரித் துண்டைக் கொண்டு கிறுக்குகிறாள் சிறு பிள்ளையைப் போல……தொட்டில் கட்டிக் கொண்டு அதில் படுத்துக் கொண்டு அங்கும் இங்கும் அலை பாய்ந்தாள்.. எனக்கு தலையே சுற்றியது… என்ன மாதிரி பெண் இவள்.. வீட்டில் இப்படி கிறுக்குத்தனங்களில் ஊறிய இவளா அப்படி கதைகளை எழுதித் தள்ளுகிறாள்….நினைக்க நினைக்க மனதுக்குள் வாந்தி வரும் உணர்வோடு தலை சுற்றியது.. நான் தொட்டிலை விட்டு கீழே சரிந்தேன்… என்னால் தொட்டிலில் அமர்ந்தபடி கர கரவென சுத்த முடியவில்லை…. என் அறை சுவரெங்கும் அவள் பெயரை கிறுக்கிக் கொண்டிருந்தேன்…….

அவள் படைப்புகளின் கூர் நோக்கில் நான் வீதியற்ற நிழல்களின் வடிவத்தை படித்துக் கொண்டே திருப்பும் பக்கங்களில் எல்லாம் அவளே நிறைந்து கிடப்பது தர்க்க ரீதியில் வேகம் சார்ந்த எனது ஆண்மையை கிளருகிறது…. கனவும் மாயமும் அப்பிக் கொண்ட எல்லா நேரங்களையும் அவளே காயப் போடுகிறாள்.. அவள் எழுதும் வரிகளில் அடிக் கோடிட்டுக் கொண்டே நிரம்புதில் நான் மை அற்ற வெற்றிடம் நிரப்புகிறேன்…. நிரம்பி நிரம்பி நிரப்பும் ஆண்மைக்குள் நிறைந்து வழியும் காதலும் காமும்… கை கோர்த்த பயணங்களின் நீரூற்று போல பொல்லாத சாரலின் துள்ளுகின்ற மார்புகளோடு அவளையும் அவள் எழுத்துக்களையும் பின் தொடருகிறேன் எப்போதும் …

எல்லாருக்கும் பிடித்த அதே போல எல்லாருக்கும் பிடிக்காத ஒரு படைப்பாளியை இப்போதும் பின் தொடருகிறேன்……… இப்போது அவன் குடியிருக்கும் 6வது மாடியின் பால்கனியில் நின்று கொண்டும் அவ்வப்போது உள்ளே போவதும்.. வெளியே வருவதுமாக ஒரு சிறுகதையின் தொடர்ச்சி போல ஒரு பக்க கதையின் முடிவாகத் தெரிகிறான்…. நானும் பக்கத்துக்கு மாடி குடியிருப்பில் அதே 6வது மாடியில் அவனுக்கு எதிரே இருக்கும் வீட்டில் பால்கனியில் நின்றுதான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *