முகம் தெரியா மனுசி

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 22, 2021
பார்வையிட்டோர்: 6,507 
 

தண்டோராக்காரன், தான் செல்வதற்கு, அந்த குக்கிராம குடிசை மண்டிக்கு தகுதியில்லை என்று கருதியதுபோல், ஊருக்கு புறம்பாக உள்ள மயானத்தில் நின்று நெளித்தபடி, டும் டும் ஒலிகளோடு, திருவாங்கூர் சமஸ்தான அரச அறிவிப்பை வெளியிட்டான்.

“ஸ்ரீ உத்திரம் திருநாள் மகாராஜா திருமனஸ் அவர்கள், ஸ்ரீ பத்மநாபதாச வஞ்சிபால மார்த்தாண்ட வர்மா குலசேகர கிரீடபதி, மன்னை சுல்தான் மகாராஜா, ராஜ்ய பாக்கியோதைய ராமராஜா பகதூர்ஷம் ஷெர்ஜங் மகராஜா, சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத் தேர்விழாவை தரிசிக்க நாளை மறுநாள் வந்து, ரெண்டு நாள் தாமசிக்கிறார்”.

இதை முன்னிட்டு சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால், ஊழியக்கார இளப்ப சாதிகள், விருத்திக்காரர்கள், அத்தனைபேரும் காணிக்கை, கைப்பொருளோடு வந்து சுசீந்திரம் கச்சேரிக்கு 96அடி தள்ளி நிற்கும்படி ஆக்ஞை இடப்படுகிறார்கள். மகாராஜாவின் வருகைக்கு முன்னதாக நிலவரியான புருசங்தாரம், வாரிசு வரியான அடியறா, வீட்டு வரியான குப்பகாழ்ச்சா மற்றும் பனைவரி, பனையேறும் ஏணிக்கான ஏணிக்காணம், பனை நாருக்கான தலைக்காணம், தலைவரி, முலைவரி, மீசைவரி, தாலிவரி, தாவரவரிகள் போன்ற அத்தனை வரிகளையும் செலுத்திவிட வேண்டும். அதோடு சாதீய அனுஷ்டானங்களை கடைபிடிக்காத தாழ்ந்த சாதியினரைப் பற்றி மேல் அதிகாரிகளுக்கு, பார்த்தவர்கள், கேட்டவர்கள், விசாரிப்பு மூலம் தெரிந்தவர்கள் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும். இவற்றை மீறும் பட்சத்தில், இந்த தகவல்களை சொல்லாதவர்களுக்கும் சிரச்சேதம் உட்பட எந்தவி தமான தண்டனையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.”

திருவாங்கூர் சமஸ்தான மன்னரைப் பற்றிய அலங்கார வார்த்தைகளுக்கு உச்ச சத்தமாய் முரசொலித்தும், ஒவ்வொரு அறிவிப்புக்கும் மூன்று தடவை டும் போட்டும், இறுதியில் டமர… டகர… டக்கா என்று பீதியை ஏற்படுத்தும் அதிகார தாளத்தோடு அடிக்கப்பட்ட தமுக்குச் சத்தம் அந்த குக்கிராமத்திற்குள் அசரீரி குரலாய் ஒக்கலித்தது.

ஆறடி உயரமுள்ள அய்ம்பது, அறுபது பனையோலை குடிசைகள் எதிர் எதிராய், வரிசை வரிசையாய் இருந்தன. இந்த வரிசைகளுக்குப் பின்னால் மேலும் அடுக்கடுக்கான குடிசை வரிசைகள், ஊராய்க காட்டின. ஒவ்வொரு குடிசையின் மண் சுவரும், இன்னொரு குடிசையின் சுவராயிற்று. இந்த இருபக்க குடிசை வரிசைக்கும் இடையே சுயம்பாக ஒரு குறுகிய தெரு ஏற்பட்டது.

இந்தக் குடிசை வரிசைகளுக்கு மேல்பக்கம் உள்ள திட்டில் முக்கோண வடிவத்தில் சுண்ணாம்பு பூச்சு இற்றுப் போய் செம்மண் சுவராக நின்ற கள்ளிமாடன் பீடத்திற்கு முன்னால் வம்படி, வழக்கடியாய் பேசிக்கொண்டிருந்த அத்தனை ஆண்களும், பீதியோடு குரல் வந்த திக்கை எட்டிப் பார்த்தார்கள். அவர்கள் தத்தம் வரிபாக்கியை நினைத்தும், ஊழியம் செய்ய வேண்டிய கட்டாயம் குறித்தும், கலங்கிப்போய் ஒருவர் முகத்தை ஒருவர் ஆறுதலாக பார்த்துக் கொண்டார்கள். அப்போது தோள்வரை நீண்ட காதுகளில் அவர்கள் போட்டிருந்த ஈயக்குண்டலங்கள், அவர்களது பீதியை வெளிகாட்டுவதுபோல் மேலும், கீழுமாய் ஆடின. காதுகளை ஆட்டுவித்தன.

ஊழியம் என்றால் கூலி இல்லாத ஓசி வேலைகள். முகாமிடும் மன்னரின் யானைகளுக்கு தென்னை ஓலைகளை வெட்டி, கட்டுக் கட்டாக சுமந்து செல்ல வேண்டும். குதிரைகளுக்கு, கொள்ளு கொண்டு போக வேண்டும். ஆங்காங்கே உள்ள நதி சுருங்கிய காயல்கள் எனப்படும் குளங்களை தூர்வார வேண்டும். மன்னரின் பரிவாரங்களுக்கு தேங்காய்கள், நுங்குகள், பனங்கிழங்குகள், பயிர் வகைகள் முதலியவற்றை காணிக்கையாக்க வேண்டும். உப்பளங்களில் இருந்து உப்பு மூட்டைகளை சுமந்துபோக வேண்டும்.

ஊட்டுப்புரை எனப்படும் சத்திரங்களுக்கு விறகு வெட்டிக் கொடுக்க வேண்டும். குடியான்கள், வண்டி வாகனங்களையும், உழவு மாடுகளையும் அதிகார கச்சேரியில் ஒப்படைக்க வேண்டும்.

இப்படி இளப்ப சாதிகளுக்காக விதிக்கப்பட்ட 120 ஊழியங்களில் பாதியையாவது மகாராஜாவின் வருகையின்போது செய்தாக வேண்டும். இல்லையென்றால் சிரச்சேதம்தான். ஆனாலும் இவர்களுக்கு கூலி கிடையாது. கூலி கிடக்கட்டும். குடிப்பதற்கு கூழ் கூட கிடைக்காது. ஊட்டுப் புரைகளில் வீசியெறியப்படுகிற எச்சில் சோறு கூட கிட்டாது. காரணம், அந்தப்பக்கம் இவர்கள் போகமுடியாது. ஆனாலும், ஊழியம் செய்ய சுணங்கினால் சவுக்கடி… வரிகட்ட தாமதித்தால் குனித்து வைக்கப்பட்டு முதுகுமேல் கல்லேற்றப்படும். இந்த ஊழியத்திலிருந்து நோயாளிகளும், வயோதிகர்களும் கூட தப்பிக்க முடியாது.

எனவே, தோள்வரை தொங்கிய செவ்வக வடிவமான காதுகளில், மாட்டப்பட்ட ஈயக்குண்டலங்களோடும், முட்டிக்கால்களுக்கு கீழே போகாத முண்டுகளோடும், பிடரியை மறைக்கும் குடுமிகளோடும் தோன்றிய ஆடவர்கள், சொல்லாமல் கொள்ளாமல் ஓடினார்கள். “சுடலமாடா காப்பாத்து, கள்ளிமாடா காப்பாத்து” என்று அலறியடித்து ஓடினார்கள். மனைவி, மக்கள் இல்லாதவர்கள் ஒளிந்து கொள்ளவும், குடும்பஸ்தர்கள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தப்பித்துக் கொள்வதற்காகவும் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

இந்த ஓட்டத்தினால் அந்த பனையோலை குடிசைப்பகுதி, காலடி தமுக்காக ஓலமிட்டபோது

அந்தத் தெருவில் ஆங்காங்கே பேசிக்கொண்டும், திருவுரலில் கேழ்வரகு அரைத்துக் கொண்டும், உரலில் சோளத்தைலக்கையால் இடித்துக் கொண்டும், ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே வேலையாற்றிய பெண்கள், பணிக்கருவிகளை கைவிட்டு விட்டு, ஒன்று திரண்டார்கள். இந்தப் பெண்களின் இடுப்புக்கு கீழே, முழங்கால்களுக்கு சிறிது இரக்கமாய் ஒற்றைச் சேலை முண்டுகள்… இடுப்புக்கு மேலேயோ முழு நிர்வாணம்.

தொள்ளைக் காதுகளில் மட்டும் ஆண்களைப் போல் ஈயக் குண்டலங்கள். மற்றபடி திறந்தவெளி மார்புக்காரிகள்… மார்பகங்கள், வயதுக்கேற்ப மாங்கனியாய் பெருத்தும், பாவக்காயாய் சிறுத்தும், சுரைக்கூடாய் சுண்டியும் கிடந்தன.

நேற்றுவரை, இந்த மார்பகங்களை, கை, கால்களைப் போல் வெறுமனே ஒரு உறுப்பாக பார்த்துப் பழகிய இந்தப் பெண்கள், அந்த தெற்குப்பக்க குடிசை வரிசையில் மேற்கோர எல்லையாய் நிற்கும் பனையோலை வீட்டின் முன்னால், அவ்வப்போது வெளிப்பட்ட ரவிக்கைகாரியைப் பார்த்து லேசாய் சிறுமைப்பட்டார்கள். ஓரளவு, பொறாமைப் பட்டார்கள். அவள் ரவிக்கையை மானசீகமாக கழட்டி இடுப்புக்கு மேல் மாட்டிப் பார்த்தார்கள். மேல்சாதி பெண்கள் கூட, இவளை மாதிரி ரவிக்கை போடாமல் மார்பகங்களில் கச்சை கட்டியிருப்பார்கள். சிலசமயம் தோள்சீலையை (மாராப்பு) முதுகுமுழுக்கக இறுகச் சுற்றி, இடுப்பில் இன்னொரு சுற்றாய் சுற்றி சொருகிக் கொள்வார்கள். ஆனால், இவளோ தோள்களின் இருபக்கமும் டக்கு, டக்கான துணிப் பூக்களோடு மார்பகத்திற்கும் கீழே போன அந்த சட்டைக்கு மேலே, வரிவரியாய் சுற்றிய கண்டாங்கி சேலையோடு நிற்கிறாள். கேட்டால், ரவிக்கை என்கிறாள். ‘எங்கள் ஊர் பழக்கம்’ என்கிறாள். ‘நீங்களும் போட்டுக்கணும்’ என்கிறாள். ஒருத்திக்கு தாலியை விட இதுதான் முக்கியம் என்கிறாள். இவளோடு சேருவது எலியும், தவளையும் கூட்டுச் சேர்ந்த கதைதான்…

அந்த தண்டோராவிற்கு முன்பு வரை, அந்த ரவிக்கைக்ார இளம்பெண்ணை சுபதேவதையாய் அதிசயத்துப் பார்த்த பெண்கள் இப்போது கோபம், கோபமாய் பார்த்தார்கள். பயத்தால் ஏற்பட்ட கோபம். ‘சரியான சிமிட்டாக்காரி, இவள் இப்படி போட்டு இருக்கிறத ஏமான்க கிட்ட சொல்லாட்டா, நம்மபாடு கிறிச்சானுக்கு மறிச்சானாயிடும். அவள்கிட்ட இப்பவே போயி, மேல்சட்டையை கழட்டி, தோள்சீலையை தூக்கி எறியச் செய்யணும். இல்லாட்டா, நம்ம தலைமுடிக்குள்ள உலக்கைய உட்டு அதுல தல முடிய சுத்தோ சுத்துன்னு சுத்தி, குனிய வச்சி முதுகுல பாறாங்கல்ல ஏத்துவாங்க.

சாதிப்பழக்கத்துக்கு தகாதபடி உடுப்புப் போட்ட இவளும் ஒரு பொம்பளையா? இந்த ஊருக்கே பெரிய அவமானம். இவள விடப்படாது.

அந்த முண்டுச் சேலைப் பெண்கள், ரவிக்கைப் பெண்ணை நெருங்கியபோது, அவள் ஒரு சிறட்டையில் கரிக்கட்டைகளைப் போட்டு, கண்ணாடி சீசாவில் இருந்து சீமை எண்ணெயை லேசாய் ஊற்றி தீப்பற்ற வைத்து, தீமுட்டிக் குழலால் ஊதினாள். துளைகள் இல்லாத புல்லாங்குழல் போன்ற அந்த பித்தளை குழலில், அவளது ஊதோசையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப கரிக்கட்டைகள், நீரு பூத்த நெருப்பாகி, செந்தணலாகி, தீயாகி பின்னர் ஜோதியாய் நர்த்தனமிட்டது.

அந்தப் பெண்கள் அவள் ஊதி முடிக்கட்டும் என்று காத்திருந்தார்கள். அவள் நிமிர்ந்தபோது, ஏனோ பேசமுடியவில்லை. அவள் கண்களின் அழுத்தமும், தொய்வில்லாத பட்டறைச் சட்டம் போன்ற உடம்பும், அழகுக்கு அழகு சேர்க்கும் ரவிக்கையும், கம்பீரப்படுத்தும் முந்தானையும், சிவப்பழகிற்கு அறைகூவல் விடுக்கும் கருப்பழகும், அவர்கள் நாக்குகளை கட்டிப் போட்டன.

இதற்குள் குடிசை வீட்டுக்குள் இருந்து பதநீர் பானையை தூக்கிக் கொண்டு வந்த மாமியார் பூமாரி, வீட்டு முற்றத்தில் முக்கோணமாய் பதிக்கப்பட்ட கல்லடுப்பிற்கு மேல், பானையை வைத்தாள். அந்த அடுப்பின் அடிவாரத்திற்குள் ஏற்கெனவே திணிக்கப்பட்ட கீறிப்போட்ட பனைமட்டைகளையும், சுள்ளி விறகுகளையும், சேர்த்துப் பிடித்து அடுப்புக்குள்ளயே ஒரு தட்டு தட்டினாள், பிறகு ரவிக்கைகார மருமகளிடமிருந்து, பாதிக்கருகிப்போன சிறட்டையோடு நெருப்பு துண்டங்களை வாங்கி அடுப்புக்குள் போட்டு, தீமூட்டிக் குழலால் ஊதினாள். நெருப்புப் பற்றியதும், தொடைகளில் கை, கால்களை ஊன்றி எழுந்து, அந்தப் பெண்களை ஏறிட்டுப் பார்த்தாள். மருமகள் அருகேயுள்ள மாட்டுத் தொழுவத்தில் கட்டப்பட்ட மூன்று மாடுகளுக்கும், ஒரு கன்று குட்டிக்கும் வைக்கோலை சமச்சீராய் வைத்தாள். பிறகு கருஞ்சிவப்பான கன்றுக் குட்டியின் முதுகை தடவிவிட்டாள். அந்த குட்டி முதுகை பம்மவைத்து, அவள் முகத்தை முகர்ந்தபோது, இடம்தெரியா ஊரில் இடறிவிழுந்த துக்கத்தை மறந்தாள்.

அந்தப் பெண்களுக்கு, எடுத்த எடுப்பிலேயே ரவிக்கைகாரியை விமர்சிக்க மனமில்லை . “நீ கேளு… நீயே கேளு…” என்பது மாதிரி ஒவ்வொருத்தியும் மற்றவள்களின் முகத்தைப் பார்த்தபோது, ஒரு நடுத்தர வயதுப் பெண், பூமாரிக் கிழவியிடம் பீடிகை போட்டாள்.

“பனவிள… விடிலில பயனி காய்க்காம, இங்க எதுக்காவ காய்க்க சித்தி?”

“ஒன் காது செவிடா? தமுக்குச் சத்தம் கேக்கல? விளயில பயினி காய்ச்சா, சிறட்ட கூட மிஞ்சாது. யான போன கரும்புத் தோட்டமாவது கொஞ்சம் நஞ்சம் ஒப்பேரும், ஆனா, மவராசா பரிவாரப் பயலுக போன இடத்தல புல்லு கூட முளைக்காதே.”

கன்றுக்குட்டியின் முதுகை தடவிவிட்டபடியே மாமியார் சொல்வதை அதிசயமாய் கேட்பதுபோல் முகத்தை அண்ணாந்து வைத்த ரவிக்கைக்காரி, அந்தப் பெண்களின் அம்மண மார்பகங்களை, அறுவெறுப்பாகவும், பின்னர் அனுதாபமாகவும் பார்த்து, முகஞ் சுழித்தபோது, ஒரு முன்கோபிப்பெண் முரட்டுத்தனமாக கிழவியைச் சீண்டினாள்.

“தண்டோராச் சத்தம் வயசான ஒனக்கு கேக்கும்போது, எங்களுக்கு கேக்காதா? சாதி அனுஷ்டானத்த விட்டோமுன்னா மாறு கால் மாறு கை வாங்கிடுவாவ… பேசாம உன் மருமவள எங்கள மாதிரி மேல்துளி இல்லாம நிக்கச் சொல்லு. கச்சேரியில போயி நாங்களே சொல்லும்படியா வச்சிப்புடாத..”

ரவிக்கைக்காரி, அவர்களை சுட்டெரித்துப் பார்த்தபொழுது, பூமாரி கிழவி மன்றாடினாள்.

‘காலங்காலமா இந்தமாதிரி சட்ட போட்டிருக்காளாம்… இப்படி போடுறது அவ ஊரு பழக்கமாம். உங்கச் சீலைய களைஞ்சா எப்படி ஒங்களுக்கு இருக்குமோ, அப்படி மேல்சட்டைய கழுட்டுனா, அவளுக்கு இருக்குமாம். அத கழட்டுறதுக்கு கூச்சப்படுறா. இந்த சட்டம்பி பய… அதான் என் மவன்… இவளை எப்படியோ மசக்கி கூட்டி வந்துட்டான். ரெண்டு நாளிக்கு விட்டுப் புடிச்சா சரியாயிடும். என்ன செய்யுறது… ரோஷக்காரியா இருக்கா’

“நம்ம சாதி பொம்பளயளுக்கு ரோஷம் கூடாது. ஆச்சி”

“ஏன் கூடாது? அப்படின்னா சீலையையும் அவுத்து போடுங்கழா”

“இதபாரு ஆச்சி வயசானவன்னு பாவம் பாக்கோம். இல்லாட்டா கச்சேரிக்குப் போக அதிக நேரம் ஆகாது. வேணுமுன்னா ஒண்ணு செய். மவராசா வரும்போது, மேல்சாதி பொண்ணுங்கள சீவி சிங்காரிச்சு கொப்பு, சரடு, தலைசுத்தி, தண்டை , சதங்கை , வளையல், காப்பு, காசுமாலை, கண்டிமாலை போட்டு மாடத்துல நிறுத்தி, மவராசா பார்வையில படவச்சி… அவரு, அவளுவள கூடாரத்துல அனுபவச்சிட்டு இருபது கோட்ட விதபாட்ட அம்மச்சி கோணமா கொடுக்கிறது மாதிரி, மேல்சாதிக்காரி மாதிரியே தெரியுற ஒன் மருமவள அலங்காரம் பண்ணி , மவராசா வர வழிப்பக்கம் நிறுத்து. இவளையும் தூக்கிட்டுப் போவாரு… இருபத்தோருக் கோட்ட விதபாட்டையும் தருவாரு. பேசுறா பாரு பேச்சு.”

பூமாரி, பத்ரகாளியானாள். இப்படி அவள் கோவப்பட்டு அந்தப் பெண்கள் பார்த்தது இல்லை.

“நாக்க அறுத்துப்புடுவேன்… என்ன பேச்சுடி பேசுற..? எந்த சாதியையும் ஒன்ன மாதிரி மட்டமா நினையாத. நான் சின்னப்புள்ளையா இருக்கும்போது, இவருக்கு முந்துன மவராசா இந்தப் பக்கம் வந்தாரு. ஒரு பொண்ணோட ஆறடி நீள தலமுடிய பாத்துட்டு மயங்கிப் போனாரு. சேவகர்கள கூப்பிட்டு அந்தப் பொண்ண கண்டுபிடிக்கச் சொன்னாரு. அவங்களும் கண்டுபுடிச்சு அந்தப் பெண்ணுக்கு பல்லக்கு, நகை, நட்டு கொண்டுவந்து மகராசாகிட்ட வரச் சொன்னாங்க. ஆனால் அந்த மவராசி… அவள் செத்தும் தெய்வமா நிக்க… தங்கரளிக் கொட்டைய அரச்சிக் குடிச்சி தன்னையே கொன்னுகிட்டா. இதுமாதிரிதான் என் மருமவளும்… வந்த வழிய பாத்து போங்கடி. இப்பல்லாம் பல இடத்துல நம்மோட பெண்டுக மேல்சட்டைப் போட்டு லாந்துறாளுவ. இவளும் இப்படி செய்யறதுல என்ன தப்பு..? நீங்க இவள மாதிரி செய்யாம இருக்க தான் தப்பு

“சரி எங்களயும் ஒரு வழி பண்ண பாக்கே. ஒன்பாடு… ஒன் மருமவ பாடு… சர்க்கார் பாடு…”

“அப்படி நாம விடமுடியுமா? காரியக்கார ஆளுக வந்தா நம்ம முதுகுலயும் கல்லேறுமே… கண்ணால கண்டத சொல்லணுமுன்னு தமுக்குக்காரன் சொல்லிட்டுப் போயிருக்கானே”

ரவிக்கைக்காரி, அந்தப் பெண்களைச் சீறிப் பார்த்தபோது, ஒருத்தி, இன்னொருத்தியின் இடுப்பில் கிள்ள, அவள் மற்றவளின் தோளைக் கிள்ள அது தொடர்கிள்ளல்களாக, அத்தனை பெண்களும் கிழக்கு பக்கமாய் எக்கிப் பார்த்துவிட்டு, அங்குமிங்குமாய் சிதறி ஓடினார்கள்.

அங்கிருந்து, பத்து. பதினைந்து ஏவலாட்கள் புடைசூழ வந்த வலிய கணக்கெழுத்து வேலப்பனும், மணியம் கச்சேரி தாணுலி ங்கமும் தங்கள் பக்கமாய் ஓடிவந்த பெண்களை சவுக்காலும், பிரம்பாலும் ‘விளையாட்டாக’ விளாசினார்கள். உடம்பை புடைக்கவைக்கும் வினையான விளையாட்டு. அந்தப் பெண்களும் வலியைப் பொறுத்துக் கொண்டு, ஏதோ மகத்தான பட்டம் ஒன்றை பெற்றதுபோல் வலியச் சிரித்துக் கொண்டே ஓடினார்கள்.

இதற்குள் பூமாரி உஷாரானாள். ரவிக்கைக்கார மருமகளை ஆறடி உயர வீட்டின் மூன்றடி வாசலுக்குள் கூனிக்குறுக்கி திணித்துவிட்டு, பனைமட்டக் கதவைச் சாத்தினாள். பதநீர் பானையைப் பதம் பார்ப்பதுபோல், பாசாங்கு போட்டாள். நிறைபானை பதநீர், கொதித்து கொதித்து, சுண்டிச் சுண்டி கூப்பனியாகி பானையின் கால்பகுதி வரை சுருங்கியது.

திடீரென்று ‘ஏய்’ என்ற சொல்லோடு காலில் பிரம்படியும், முதுகில் சவுக்கடியும் பெற்ற பூமாரி ஏறிட்டு பார்த்தாள். உடனடியாய் எழுந்தாள். இடது கைகைய மார்பில் குறுக்காய் மடித்து, வலது கையை கொண்டு வாயில் பாதியை மூடியபடியே ஏமானே ஏமானே அடியேன் என்ன செய்யணும்” என்று அரற்றினாள்.

வலிய கணக்கெழுத்தும், மணியக்காரரும், பட்டு வேட்டியும், ஜரிகை தலைப்பாகையும், வைரக்கடுக்கனும், பச்சைக்கல் டோலக்கும், மார்பில் வைரப் பதக்கமும், வலது கையில் தங்கத்தாலான வீர காண்டாமணியும், தோளில் பட்டு நேரியலுமாய், மீசைகளை முறுக்கியபடியே, கிழவியிடம் பேசுவது தங்கள் தகுதிக்கு குறைவு என்பதுபோல் சிறிது விலகி நின்றார்கள். வெப்பமற்ற, இதமான காற்று அடித்த அந்த வேளையிலும், அவர்களுக்கு இரண்டுபேர் குடைபிடித்துக் கொண்டிருந்தார்கள். பூமாரி நெடுஞ்சாண் கிடையாக அவர்கள் கால்களில் விழுந்தாள். ‘எந்தத் தப்பு செய்திருந்தாலும் என்னை காலால இடறி கையால உதறிப்போடுங்க சாமிகளா’ என்று ஒலமிட்டாள்.

இதற்குள் வலிய கணக்கெழுத்து, பனையோலைச் சுவடிகளில் ஒன்றை எடுத்து, ஏவலாள் ஒருவனிடம் கிசுகிசுத்தார். அந்த ஏவலாளி, பூமாரியிடம் எதிர்ப்பாளியாய் கேட்டான்.

“ஏய் கிழவி! நீ குப்பாச்சா கட்டல. பனையிரை கட்டல, ஏணிப்பாணம் கொடுக்கல. ஒன் மனசுல என்ன ழா நினைச்சுகிட்டே?”

“ஏமானே! இன்னைக்கு கருப்பெட்டி வித்துட்டா வரிக்காசு முழுசும் சேர்ந்துரும். நாளிக்கு அதிகார கச்சேரியில் வந்து கட்டிடுவேன் ஏமானே”

“ஒன் புருஷன் இசக்கிமாடன ஊழியம் செய்ய வரச்சொல்லு. கிழட்டுப்பய எங்கழா போயிட்டான்?”

“வந்துருவாவு. ஏமானே… திங்கள் சந்தையில ஒரு கன்னிப்பேய ஒட்டுறதுக்கு போயிருக்காவ’… வந்தவுடனே ஊழியத்துக்கு அனுப்பி வைக்கேன். சர்க்காருக்கு ஊழியமுன்னா சந்தோஷமா செய்யற மனுஷன்.”

வலிய கணக்கெழுத்தும், மணியம் கச்சேரியும் திருப்தியாக தலையாட்டியபடியே புறப்பட்டபோது, ஏவலாளிகளின் வலுவான ஒருவன் அருகேயுள்ள மாட்டுத் தொழுவத்திற்கு சென்று பூவரசு முளைகளில் கட்டப்பட்ட மூன்று மாடுகளின் வால்களை தூக்கிப் பிடித்து கீழே பார்த்துவிட்டு, அங்கிருந்தபடியே, தனது கண்டுபிடிப்பை பிரகடனப்படுத்தி, ஏமான்களின் கால்களுக்கு நங்கூரம் பாய்ச்சினான்.

“எசமானரே! இந்த கள்ளச்செறுக்கி… பசுமாடு வச்சிருக்கா. ஈனசாதிக, பசுமாடு வளக்கப்படாதுன்னு தெரிஞ்சும், இந்த கிழட்டு முண்ட நல்ல பசுவா… காராமணி பசுவா வச்சிருக்கா பாருங்க.”

மணியம் கச்சேரிக்கும், வலிய கணக்கிற்கும் கண்கள் சிவந்தன. பற்கள் கடித்தன. கிழவி பசுமாடு வளர்க்கிறாள் என்பதைவிட, அவள், தங்களை முட்டாளாக்கி விட்டாள் என்கிற கோபம். போதாக்குறைக்கு தங்களை இவர்கள் புத்திசாலிகளாய் நினைத்துக் கொண்டதால் அவர்களின் கோபம் முட்டாள் தனமாகவும், முரட்டுத் தனமாகவும் வெளிப்பட்டது.

மணியம் கச்சேரியின் கண்ணசைப்பில், வலிய கணக்கெழுத்தின் கையசைப்பில், நான்கு ஏவலாட்கள் அந்த பசுமாட்டையும், அதை வளர்த்ததற்கு பிராயச்சித்தமாக (அபராதமாக) இரண்டு மாடுகளையும், ஒரு கன்றுக்குட்டியையும் இழுத்துக் கொண்டு வெளியே வந்தார்கள். முட்டப்போன மாடுகளை சவுக்கால் வழிப்படுத்தினார்கள். பின்னர் அதே சவுக்கை வைத்துக் கொண்டு, வலியக் கணக்கெழுத்தின் கண்சிமிட்டலில், ஒரு ஏவலாளி, பூமாரி கிழவியின் உடம்பிற்கு ரத்தக்கோடுகளைப் போட்டான் இன்னொருத்தன் கணுக்கணுவாய் புடைத்திருந்த பிரம்பால் அவள் தலையை குத்தினான். இடுப்பை இடித்தான். பூமாரி சுருண்டு வீழ்ந்தாள். அம்மா என்று அழப்போனவளின் வாயில் ஒரு குத்துக் குத்திய பிரம்பு, ரத்தச் சிதறல்களோடு வெளிப்பட்டது. பூமாரி, உருண்டு சுருண்டு கிடந்தபோது

எதிர்ப்பக்க குடிசையின் பனம்பலகை கதவு வாசலை பிய்த்துக் கொண்டு மல்லாக்க விழுந்தது. ரவிக்கைக்காரி ஆங்காரியாய் வெளிப்பட்டாள். வேகவேகமாய் நடந்து, கீழே கிடந்த மாமியார் பக்கமாய் குனிந்தபோது, ஒரு ஏவலாளியின் பிரம்பு அவள் கழுத்தை நிமிட்டி நிற்க வைத்தது. மாமியார் முக்கி முனங்கி, எழுந்திருக்க முற்பட்டதால், அவளுக்கு ஆபத்தில்லை என்று மருமகளுக்கு துக்கக்குறைவு ஏற்பட்டது.

அந்த அதிகார ஆசாமிகள் அத்தனைபேரும், அவளைப் பார்த்து ஆச்சரியப்பட்டபோது, வலியக்கணக்கெழுத்து, தன் தகுதியை உதறிவிட்டு அவளிடம் நேரிடையாக கேட்டார். ஒருவேளை மேல்சாதிப் பெண், என்ன காராணத்தாலோ அங்கு வந்திருக்கலாமோ என்ற சந்தேகம். கேட்டார்.

“நீ என்ன சாதியிழா?” “கீழ கிடக்காவளே எங்க மாமியார்… அவங்க சாதிதான்.”

‘அப்படியா சேதி… ரவிக்கை, தோள்சீலை போடுற அளவுக்கு ஈனச்சாதியான உனக்கு அவ்வளவு திமிரு உண்டாயிட்டா? நீ இந்தப் பக்கத்துக்காரி மாதிரி தெரியல… உன் பூர்வோத்திரத்த ஒண்ணு பாக்கியில்லாமச் சொல்லணும். அப்போதான் நீ உயிரோட இருக்க முடியுமா, முடியாதான்னு நாங்க யோசிக்க முடியும்..”

ரவிக்கைக்காரி, தலைக்குமேல் வெள்ளம்போன விரக்தியில் உயிருக்குமேல் ஒன்றும் இல்லை என்ற உறுதியில் நிதானமாக, அழுத்தமாக ஏமானே என்று எந்த இடத்திலும் சொல்லாமல் அவர்களுக்கு இணையாகப் பேசுவதுபோல் பேசப் போனாள். அதற்குள், எழுந்து எழுந்து விழுந்த மாமியாரை கைத் தாங்கலாய், தூக்கி நிறுத்திவிட்டு, மணியத்தையும், வலியக்கணக்கையும், மாறி மாறிப் பார்த்தபடியே, தண்ணீர் கொட்டுவதுபோல் ஒப்பித்தாள்.

”எனக்கு திருநெல்வேலி சீமங்க. என்னோட அத்தமகன் அசல் வல்லரக்கன். குடிகாரன்… சூதாடி… பொம்பளக் கள்ளன், சண்டியன். இப்படிப்பட்டவன் முறைமாப்பிளையா இருந்தாலும், அவன கட்டிக்க எனக்கு இஷ்டமில்ல. எங்க அய்யாவும் முடியாதுன்னு சொல்லிட்டாரு. ஆனா போனவாரம், நான் வயக்காட்டுல கத்தரிச் செடிக்கு களை எடுக்கையில, அவன் என் பின்புறமா வந்து, கழுத்த நிமித்தி, மஞ்த்துண்டு கட்டுன கயித்த வலுகட்டாயமா என் கழுத்துல கள்ளத்தாலியா கட்டுனான். நான் அவனை ஒரே தள்ளா தள்ளிப் போட்டுட்டு, கழுத்துல விழுந்த கயிற கழட்டி மூணுதடவ தலயச்சுத்தி, காறித்துப்பி, அவன் மூஞ்சில எறிஞ்சுட்டு வீட்டுக்கு ஓடியாந்தேன். ஆனா, ஊரும், உலகமும் கள்ளத்தாலியோ, நல்லதாலியோ, அத கட்டுனவனுக்குத்தான், நான் வாக்கப்படணுமுன்னு சொன்னாவ. அய்யாவும் ஊருக்கு பயந்து சம்மதிச்சுட்டாரு. இதனால, தாம்பரபரணி கரையில ஒரு புளியமரத்துல தூக்குப்போடப் போனேன். அப்போ என்னை தற்செயலாய் பார்த்த இவியளோட மவன், தடுத்தாரு. எங்கப்பக்கத்து பிள்ளவாள் வக்கில் அய்யாவுக்கு குதிரை வண்டி ஒட்டுனவரு. ஏற்கெனவே அவருக்கும் எனக்கும் தொடாத, கெடாத பழக்கம். என் கதைய கேட்டுட்டு…. நெல்லையப்பர் கோயிலுக்கு முன்னால, கழுத்துல தாலிய போட்டு, இங்கு கூட்டிக் கிட்டு வந்துட்டாரு.”

அவள் சொல்வதை ஏனோதானோவாய் கேட்டுக் கொண்டிருந்த, ஏவளாளிகளின் ஒருவன், தனது ஏமானர்களை உசுப்பி விட்டான்.

“இந்த கிழவி சரியான மஞ்ச கடஞ்சா மகனப் பத்தியோ, மருமவள பத்தியோ மூச்சு வுடல. இவள கச்சேரிக்கு தூக்கிட்டுப் போகணும். அப்பதான் அந்தப் பய வந்து தலவரி கட்டுவான். பனையோலையில், அவன் செத்துட்டான்னு கிழவி பொய்சொல்லி யிருக்கா. அவன நோகடிக்கணும். இவள சாகடிக்கணும். சரி அது அப்புறம் சங்கதி. உன் புருசன எங்கழா”

“வடக்கன்குளம் வரைக்கும் போயிருக்காவ”

வலிய கணக்கப்பிள்ளை பற்களை கடித்தபோது, மணியம் கச்சேரி அவளை மயக்கமாக ரசித்து மானசீகமாகப் பார்த்தார். கட்டான கட்டழகு… பேசமா அடிமையா வச்சுக்கலாம். இப்போதைய சந்தை நிலவரப்படி ஒரு அடிமையோட விலை ஒன்பது ரூபா. பூமாரி கிழவிக்கு மூணு ரூபா கொடுத்தா போதும். அவளுக்கும், வரிபாக்கிய தீத்தாப்போல இருக்கும். நமக்கும் ஒரு வப்பாட்டி அடிமை கிடைச்சாப் போல இருக்கும். இதமாக கேட்டார்.

“உன் பேரு என்னழா?”

“ராசம்மா”

“நீ பேருக்கு ஏத்தபடிதான் இருக்கே. ஆனாலும், இளப்பசாதிக இந்த மாதிரி பேரெல்லாம் வெக்கப்படாது. பேசாம நீசம்மான்னு வச்சுக்க”

மணியக்காரர் பல்லிளித்துப் பேசுவது, வலிய கணக்கிற்குப் பிடிக்கவில்லை. ஏவலாளிகளுக்கு உத்தரவிட்டார்.

“இவளோட மேல்சட்டையையும், தோள் சீலையையும் அவுத்துப் போடுங்கடா… சேலையில பாதியை கிழிச்சி எறியுங்கடா..”

அந்த ஏவலாளிகள், கரங்களை கூர்கத்திகள் ஆக்கியதுபோல் கைகளை நீட்டி, கம்புகள் போல் விறைக்க வைத்து, அவளை கண்போட்டுப் பார்த்தபடியே நெருங்க நெருங்க, அவள், ஒதுங்கி ஒதுங்கி பின்புறமாய் நடந்து ஏமான்களைப் பார்த்து, குரல் உயர்த்தி முறையிட்டாள்.

‘வேண்டாங்கய்யா… ஒங்களுக்கு கோடிப்புண்ணியம் அய்யா. ஒருநாள் ஒரு பொழுது கொடுங்கய்யா… நான் அவிய வந்ததும் சொல்லிட்டு, கண்காணாத இடமா பார்த்து ஒடிப்போறேய்யா”

“ஏல தீவட்டி தடியன்களா, நான் சொன்னது உங்க காதுல ஏறல. அவள அம்மணமாக்குங்கடா”

“வேண்டாங்கய்யா… ஆடுகளுக்கும், மாடுகளுக்கும் கூட, ‘அது’ மறவாத்தான் இருக்குது. மனுசங்களுக்கு அப்படித்தானய்யா இருக்கணும்? ஒங்க பெண்டு பிள்ளைகள இப்படி செய்தா நீங்க பொறுப்பியளா?”

‘படுகளத்துள ஒப்பாரிய கேட்கப்படாதுடா… இவா… இந்த பக்கத்த நாற வக்க வந்தவ. எளப்ப சாதிகள தூண்டி விடுறவ… இவள… முளையிலேயே கிள்ளி எறியணும். அவள அம்மணமாக்குங்கடா’

ஏவலாளிகள், துச்சாதனர்களாய் ஆனார்கள். ஒருவன் ராசம்மாவின் கரங்களை பின்புறமாக வளைத்து பிடித்துக் கொள்ள, இன்னொருத்தன் அவள் தலையை பக்கவாட்டில் சாய்த்துப் பிடித்தான். மூன்றாமவன், அவள் முந்தானையை இறக்கினான். நான்காவது ஆசாமி அவள் ரவிக்கையின் முன் பக்கம் ஆணிபோன்ற விரல்களை உள்ளேவிட்டு இழுத்து கிழித்தான். மற்றொருவன் பின்பக்கமாக கையை விட்டு ரவிக்கையை இரண்டாக்கினான்.

இதற்கிடையே கீழே சுருண்டு கிடந்த பூமாரி, தரையில் நெஞ்சாண்கிடையாய் குப்புறப்படுத்து ஒவ்வொருவர் காலாய், பிடித்து பிடித்துக் கெஞ்சினாள். இதை வன்முறையாக நினைத்தோ என்னமோ ஏவலாளிகளில் இருவர், அவள் கழுத்தை செருப்புக் கால்களால் மிதிமிதியென்று மிதித்தார்கள். அவள் விறைத்துப் போவது வரைக்கும் கழுத்திலிருந்து கால்களை எடுக்கவில்லை. இதற்குள் ஒற்றைத் துணி பெண்கள் அருகே ஓடிவந்தும், ஓடிய வேகத்திலேயே திரும்பி ஓடியும் ‘எய்யரோ… எம்மோ …’ என்று மாரடித்தார்கள். வலிய கணக்கு, எதுவுமே நடக்காததுபோல், தொலைநோக்காய் பார்த்தார்.

ராசம்மா, விறைத்துக் கிடந்த மாமியாரைப் பார்த்தாள். வெறித்துப் பார்த்தாள், வெறியோடுப் பார்த்தாள், அப்படிப் பார்க்கப் பார்க்க, அவளுக்கு அழுகை வரவில்லை. மாறாக கண்ணீர் சிந்தவேண்டிய கண்கள் வீரியப்பட்டன. கந்தல்கோலமான ரவிக்கை, அவள் உடம்பை இரும்புச் சுருள் கம்பியாய் முறுக்கேற்றின. அத்தை மகனை எப்படி உலுக்கிப் போட்டாளோ, அப்படி தன்னைப் பற்றியவர்களை ஒரு உலுக்கு உலுக்கி நிலைகுலைய வைத்தாள். அந்த இடைவேளையில், கீழே குனிந்து கொதித்துக் கொண்டிருந்த கூப்பனிப் பானையை கைச் சூட்டோடு எடுத்தபடியே, மேலே நிமிர்ந்து நிமிர்ந்து ஆவேசியானாள்.

அந்தப் பானைக் கழுத்தை லேசாய் சாய்த்து, ஒவ்வொரு ஏவலாளியின் முகத்திலும் பானையை குலுக்கிக் குலுக்கி ஊத்தினாள். அத்தனை ஏவலாளிகளும், அரண்டு மிரண்டு கூக்குரலிட்டு அங்கும் இங்குமாய் ஓடியபோது, கூப்பனி மண்டிக் கிடந்த பானையை, தலைக்கு மேல் கொண்டுபோய் இரட்டைத்தலை உருவங்களாய் நின்ற வலியக்கணக்கின் மீதும், மணியக் கச்சேரியின் மீதும் குறிபார்த்து ஊற்றிவிட்டு, அந்தப் பானையை அவர்கள் முகங்களில் வீசி அடித்தாள். அவர்கள் தலையில் கூப்பனி திரண்டு கண்களுக்குள் நீர்வீழ்ச்சியாக விழுந்து கொண்டிருந்தது. அந்த அதிகாரிகளும், ஏவல் பூதங்களாக வந்தவர்களும், வெட்கத்தைவிட்டு “அய்யோ.. அம்மா….” என்று கதறினார்கள். வலிபொறுக்க முடியாமல் அங்குமிங்குமாய் துள்ளினார்கள். அதே சமயம் ‘அவளைப் பிடிங்க பிடிங்க’ என்று ஓலமிட்டார்கள். ஓலமிட்ட வாய்க்குள் கூப்பனி கூழ் ஊடுருவி, நாக்குகளை சுட்டெரித்ததுதான் மிச்சம்.

ராசம்மா, மேற்கோர தொழுவத்தை ஊடுருவி, இன்னொரு குடிசை வரிசையின் இடுக்கு வழியாக ஓடி, ஒரு எருக்குழியைத் தாண்டி, ஒரு வீட்டின் செறுவையைத் தாண்டினாள். அப்போது ‘பிடிங்க பிடிங்க’ என்ற சத்தம், அடுத்த பக்கத்து அடுக்கு குடிசை வரிசையிலும் எதிரொலித்தது. நடந்ததை நேரில் பார்த்த பெண்கள் ராசாத்தியை பிடிப்பதுபோல் பாவலா செய்து, சீக்கிரமாக போகும்படி கண்ணசைத்தார்கள்.

ஊருக்கு வெளியே வந்து குதிகால் பாய்ச்சலில் ஓடி, காலங்காலமாய் ஓடிக்கொண்டிருக்கும் பழையாற்றுக்குள் ராசம்மா இறங்கினாள். வடக்கு மலையில் உற்பத்தியாகி, நாஞ்சில் நாடு முழுக்க, கிழக்கு கடல்நோக்கி நெடுநீளமாக பாயும் அந்த ஆறு, அவள் முட்டிக்கால்கள் வரை வியாபித்து அவளைச் சில்லிடச் செய்தது. ராசாத்தி சிறிது நிதானித்தாள். கரிகாலனின் காவிரி கல்லணையைப் போல் எந்தக் காலத்திலோ வலுவாக கட்டப்பட்ட அந்த ஆற்றின் கல்பாலத்தின் அடிவாரத் தூண்கள் ஒன்றில் அப்படியே சாய்ந்து, ஆசுவாசப் படுத்திக் கொண்டாள். சாலைப்பக்கம், ஈட்டியும், வேல்கம்புமாய் ஆட்கள் ஓடிவருவது கண்ணுக்கு தெரியவில்லை என்றாலும், காதுக்குக் கேட்டது.

ராசம்மா, நதியோர தாழை மடல்களுக்குள் தவழ்ந்து, தவழ்ந்து, நாணற்செடிகளின் நடுவே பாய்ந்து, ஓணான் செடி குவியல்களுக்குள் உட்புகுந்து, பூணிக்குருவிகளும், வால்குருவிகளும் பயந்து பறக்க, காட்டுப்பூனைகள் மரங்களுக்குள் தாவ, பத்து, பன்னிரெண்டு மைல் தூரம் ஆமையாகவும், முயலாகவும், அணில் பாய்ச்சலாகவும், நகர்ந்தும், தவழ்ந்தும், தாவியும் போய்க் கொண்டிருந்தவள், களைப்பு மேலிட்டு மூச்சு முட்டியபோது ஓரிடத்தில் கரையேறினாள்.

எங்கே போவது என்று புரியாமல், அவள் மலங்க மலங்க விழித்தாள். இயல்பான உயிர்ப் பயம், அவளை நான்கு பக்கமும் திரும்ப வைத்தது. தற்செயலாக, அந்த பக்கமாக வந்தவர்களைப் பார்த்து, பயத்தை பயமுறுத்தலாக்குவதுபோல், கைகளையே ஆயுதங்களாய் வளைத்து, பற்களை வெளிப்படுத்தி, முள் மரமாய் நின்றாள்.

காரணமும் புரியவில்லை , காரியமும் தெரியவில்லை , மயக்கமா, கிறக்கமா, மரணமா, அப்போதைய பிறப்பா… ஆடி அடங்கிய வாழ்வா, அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை . உயிர் நிற்க, உடல் போன நிலைமை… உடல் இயங்க உயிர் போன கொடூரம்.

அவள், சிறிது சிறிதாக ஓரளவு சுயத்திற்கு வந்தாள்.

எல்லாம் பொய்யாய் பழங்கதையாய் போய்விட்ட ஆத்திரம். இந்த நிலைக்கு காரணமான அத்தை மகனை, ராத்திரியோடு ராத்திரியாய் போய் ஒரே வெட்டாய் வெட்ட வேண்டும் என்ற வேகம். அதே சமயம், திசை அறியாத சோகம்.

எந்த திசையும் விளங்காமல், எதிர் திசையில், அவள் நடந்தாள். திக்கற்ற நடை… கால்களே மூளையை ஆட்டி வைக்கும் கட்டாயம். இதயம், வேகவேகமாய் அடித்தடித்தே நிற்கப்போவது போன்ற தோரணை.

ராசம்மாவை, அவள் கால்கள், கோட்டாறு சந்தைப் பக்கமாக இழுத்துக் கொண்டு வந்தன. அந்த சந்தைக்குள் நடந்த அடிதடிகள் அவளை நின்ற இடத்திலேயே நிற்க வைத்தன. அந்த குடிசைப் பக்கம், கிறிஸ்தவ பெண்கள் தோள்சீலைப் போட உரிமைக் கேட்டு போராடிவருவதாக புராணக் கதைபோல் கேள்விப்பட்டது, அவள் நினைவுக்கு வந்து, அவளை பாதி உயிர்ப்பித்தது. அந்தச் சண்டைச் சந்தையைப் பார்க்க வைத்தது.

வெள்ளையும், சொள்ளையுமான மனிதர்கள் ஒரு பக்கமும், தோள்சீலை பெண்களோடு நின்ற அழுக்குத் துணிக்காரர்கள் இன்னொருப் பக்கமுமாய் அணிவகுத்து ஒருவரையொருவர் அடித்துக் கொள்கிறார்கள். கல்லெறியும், சொல்லெறியும் ஒருங்கே நடைபெறுகின்றன. அதே சமயம், அழுக்கு வேட்டிகளுக்கு பக்கபலமாக, தலையின் வலது பக்க முன்பகுதியில் குடுமி முடிந்த நம்பூதிரிகளும், இன்னும் சில வெள்ளைச் சொள்ளை மனிதர்களும், கிறிஸ்துவ பாதிரியார்களும் எதிர்த்தரப்பிடம் கோபங்கோபமாய் பேசுகிறார்கள். அவர்களை பின்னால் தள்ளி விடுகிறார்கள். ஆனாலும் –

சந்தைக்குள் இருந்த கட்டைவண்டிகள் உடைக்கப் படுகின்றன. கட்டிடங்கள் எரிக்கப்படுகின்றன. தானியங்கள் புகைகின்றன. ஆடுகள் அலறுகின்றன. மாடுகள் அலைமோது கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக –

கரங்களின் மணிக்கட்டுகள் வரை நீண்டு, கழுத்து வரை உயர்ந்து, இடுப்பு வரை வியாபித்த குப்பாயச் சட்டையையும், தோளில் ஒரு துண்டு சேலையுமாய் உரிமையை – நிலைநாட்டும் வகையில் அணிந்துக் கொண்டு திரண்டிருந்த கீழ்சாதி பெண்களில் பலர் மல்லாந்தும், குப்புறவும் தள்ளப்படுகிறார்கள். குப்பாயங்கள் கிழிக்கப்படுகின்றன. தோள்சீலை உறியப்படுகிறது. இடுப்பில் கட்டிய சேலைகள் அவிழ்க்கப்படுகின்றன. நிர்வாணமாய் ஆக்கப்பட்ட பெண்கள், இடுப்புக்கு கீழே இரண்டு கைகளையும் வைத்து பொத்திக் கொண்டு குய்யோ, முறையோ என்று கூப்பாடு போடுகிறார்கள். “ஏசுவே.. ஏசுவே” என்ற ஏகப்பட்ட அலறல்கள். “முத்தாரம்மா, முத்தாரம்மா’ என்ற சின்னச் சின்ன முனங்கல்கள். வண்டுகள் போல் ரீங்கரிக்கும் அவர்களின் வழக்கமான சத்தம், குண்டுகளின் கோரச்சத்தமாய் குரலிடுகிறது.

இந்தப் பின்னணியில் வெள்ளையும், சொள்ளையுமான ஒரு தடியன், குப்பாயம் போட்ட ஒரு இளம் பெண்ணை இருபக்கமும் கைகளை விரித்துப்போட்டு துரத்துகிறான். அவள் அலறியடித்து அவனை திரும்பித் திரும்பி பார்த்தபடியே ஓடி ஓடி, ஒரு திருப்பத்தில் இடறி விழுகிறாள். ராசம்மா நிற்கும் இடத்திலிருந்து பத்தடி தொலைவில் அப்படியே கிடக்கிறாள். துரத்திவந்தவன் அவள் வயிற்றில் உட்கார்ந்து கொண்டு, மார்புக்கும் குப்பாய இடைவெளிக்கும் இடையில் இரண்டு கைகளையும் ஊடுருவ விடுகிறான். அந்தப் பெண் ஓலமிட சக்தியற்று முடங்கிக் கிடக்கிறாள். நடக்கப்போவதை எதிர்பார்த்து, கண்களை, கைகளால் மூடிக் கொள்கிறாள்.

யந்திரமயமாய் நின்ற ராசம்மா மனிதமயமாகிறாள். கீழே குனிகிறாள். அவளுக்கென்றே தரையில் ஒரு கூர்மையான பாறாங்கல் காத்துக்கிடக்கிறது. அதைத் தூக்கிக் கொண்டு குப்பாய துச்சாதனனை நோக்கி “ஏலேய்.. “என்று கத்தியபடியே, ஒரே பாய்ச்சலாய் பாய்ந்து, அவனை அந்தப் பெண்ணின் காலடிக்கு பின்புறமாய், தலையில் ரத்தம் சொட்டச் சொட்ட வீழ்த்துகிறாள். தோளில் சாய்ந்த குப்பாயப் பெண்ணை தூக்கி நிறுத்தி அணைத்தபடியே அடிதடிச் சந்தையை நோக்கி அடிமேல் அடிபோட்டு நடக்கிறாள். அந்தப் பெண்ணை நடத்தி நடத்தி –

அங்கே நடைபெற்ற எளிய பெண்களின் தோள்சீலை உரிமைப் போரில், முகம்தெரியா மனுசியாய் ராசம்மா சங்கமிக்கிறாள்.

பி.கு : அந்தக் காலத்தில், திருவாங்கூர் சமஸ்தானத்தில் பெண்களின் மேலாடை தோள்சீலை என்று அழைக்கப்பட்டது.

– சமுத்திரக் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர், 2001, ஏகலைவன் பதிப்பகம், சென்னை – 600 041

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *