முகமூடிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 6, 2013
பார்வையிட்டோர்: 9,818 
 

“தவறுகள் உணர்கிறோம்
உணர்ந்ததை மறைக்கிறோம்”

மிக மெல்லிய இசையில் அழகான வரிகளுடன் ஏற்ற குரலில் ஓடிக் கொண்டிருந்தது பாட்டு. மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் போல் தோன்றியதால் மொபைலில் கூகுள் சேர்ஜூக்குச் சென்று பாடலின் முதல் வரியை டைப் செய்து ‘டவுன்லோட்’ செய்து கொண்டேன். ஏதாவது செய்து கொண்டிருக்க வேண்டுமே எனத் தோன்றினால் ‘இசை கேட்டால் என்ன’ என்ற எண்ணம் வந்தால் கேட்கலாம் என்று தான்.அதனால் நான் ஒன்றும் முழுநேர பாட்டு ரசிகன் அல்ல.

என்னுடைய பொழுதுபோக்கு அதிகமாகக் கழிவதென்னவோ புத்தகங்களுடன் தான். ஆனால், ‘இது வரை நீ வாசித்த புத்தகங்களை பட்டியலிடு’ என யாராவது கேட்டு வைத்தால் சற்றுத்திணறி திக்குமுக்காடிப் பொய் விடுமளவில், நினைவில் வைத்துக்கொள்ள முடியாத ‘புத்தகங்களின் பெயரும், அதை விடக்கஷ்டமான எழுத்தாளர்களின் பெயரும்’. என்ன செய்வது, சாதாரண பெயர்களைக் கொண்ட புத்தகங்களையோ, நன்கு பரிச்சயமான பெயர்களைக்கொண்ட எழுத்தாளர்களையோ வாசிப்பதில் மனம் லயிப்பதில்லை. ‘ஏதாவது வித்தியாசமானதைச் செய்’ என்று வரிந்து கட்டிக்கொண்டு நின்று விடும். நல்லது தான் என்று சிலவேளை நினைத்திருந்தாலும் பல தடவைகளில் ‘திமிரு பிடித்தவன்’ ‘புரியாமல் பேசுபவன்’ என்று நல்ல பெயர் வாங்கியிருந்தேன். சமீப காலமாக ஒரு எழுத்தாளனின் வாசகனாகியிருந்தேன். அவரது எழுத்துக்களை தேடித்தேடி வாசித்துக் கொண்டிருப்பதால் என்னவோ எந்நேரமும் அவரது எழுத்தைப்பற்றியே நினைவு. நேற்றுக்கனவில் ஏதோவொரு விழாவில் குறித்த ஏதொவொரு எழுத்தாளனை தன் குறிப்பேடுகளைப் பார்த்து காரசாரமாகத் திட்டித்தீர்த்துக் கொண்டிருந்தார்.

ஆனால் நான் இங்கு சொல்ல வந்தது, என்னைப் பற்றியோ அல்லது என் வாசிப்பைப் பற்றியோ அல்லவே………….. ‘பின் எதற்காக இந்தப் பிதற்றல்’ என்று தோன்றுகின்றது. சரிதான் வீண் பிதற்றலே என் வாடிக்கையாகி விட்டது. ‘வாய் நீளம் தான்’ ‘உன் வாயைக் கொஞ்சம் மூட மாட்டியா’ என்றெல்லாம் எல்லோரும் கேட்கும் போது சிரித்து வைத்துவிட்டு இன்னும் பேச இருந்தால் பேசிவிடுவது தான் வழக்கம். அதுவே இயல்பாகவும் ஆகிவிட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் எதையாவது செய்து கொண்டிருக்கும் கேண்த்தனம் மிக்க ‘பெர்சனாலிட்டி’ – என்னைத்தான் சொல்கிறேன்.

பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு – கலைப்பிரிவு. இனிவரும் காலங்களில் கலைப்பிரிவுக்கு சேர்த்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையை அரைவாசியாக குறைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது கல்வி அமைச்சு. அதன் ஆரம்பம் தான் என்னவோ இம்முறை எழுதி முடித்த யுஷடு பரீட்சை வினாத்தாள்களெல்லாம் ‘கஷ்டமாயிருக்கிறது’ என்று நன்றாக படித்த மாணவர்களே கண்ணைக்கசக்குகிறார்களாம். நல்ல புள்ளிவிபரம். அரைவாசியாகக் குறைப்பதற்கென்றால் அதற்கு இன்னொரு காரணமும் இருக்கலாம். வேலைவாய்ப்பு குறைந்த பிரிவு என்றால் அது ‘கலை’ தானே. பாடசாலையில் ஒரு ஆசிரியர் சொல்லுவார், ‘இப்போ டீயு வெல்லாம் ஒரு ரூபாய்க்கு 4 கிடைக்கிறது’ என்று. இப்படியெல்லாம் அவமானப்படுவதை விட கல்விக்கல்லூரிக்கு சென்றிருக்கலாம். இரண்டு வருடத்தில் வேலை, சம்பளம், வாழ்வு. நாள் போகப்போக விலையுயர்ந்த பல்சர், சம்சுங் கலக்ஸி, கலக்கலான உடைகள், வேலை கிடைக்கும் பாடசாலையிலேயே ஒரு பெண்ணைப்பார்த்து காதலிப்பது (அவ்வாறு தானே பாடசாலையில் கணித பாட ஆசிரியரும், ஆங்கிலப்பாட ஆசிரியரும் ஏன்….. ஐஊவு பாட ஆசிரியர் கூட செய்து கொண்டார்கள்) அல்லது ‘மாஸ்டர் பொடியன்’ என்று கொழுத்த சீதனத்துடன் பெண் விற்கும் படலம் ஆரம்பித்து விடும்.

ஆனால் இந்த அரைத்த மாவையே அரைக்கும் வாழ்க்கை, சந்தை வியாபாரம் போல் ஏளனம் செய்யக் காத்திருப்பவர்களை எதிர்கொள்ள என் மனம் தயாரில்லை. என் இலக்கும், எதிர்பார்ப்பும், ஆற்றலும் தயார்படுத்தலும் வேறு திசையில் இருந்தது. அல்லது வேறு ஒன்றை நோக்கி அமைந்திருந்தது என்பதால் தான் பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுத்தேன். பெயரிலேயே இருக்கிறதே ‘பல கலைகளின் கழகம்’ என்று.

வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமைய வேண்டும் அல்லது மகிழ்ச்சிகரமானதாக மாற்றிக் கொள்ள வேண்டும். இதில் இரண்டாவதைத் தான் நான் செய்து கொண்டிருந்தேன். எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாதது போன்ற குறை மனதை எப்போதும் தாக்கியபடியே இருக்கும். ஏன், எதற்கு என்றெல்லாம் கேள்வி கேட்டு வைக்க முடியாதபடி அமைந்திருக்கும் என் நடவடிக்கைகள்.(இதைத்தான் ஏற்கனவே சொல்லி விட்டேனே……..)

இப்போது என் மனதை நிம்மதியடையச் செய்யாமல் உறுத்திக் கொண்டிருக்கும் விடயம் – என்னோடு ஒரே பாடசாலையில் படித்து ஒன்றாக பழகியவர்கள் பற்றியது. ஒன்றாக என்றால் ஒரே பாடசாலை தான் ஆனால் ஒரு வயது முன்னால் படித்தவர்கள். ஆனால் பாடசாலையில் அதுவெல்லாம் பெரிய விடயம் அல்லவே.

பல்கலைக்கழகத்திலும் அவர்களில் சிலர் எனக்கு முன்னால் படித்துக் கொண்டிருந்தார்கள். முதலாம் வருட மாணவனாக கொஞ்சம் பயத்துடன் நான் வந்தபோது ‘ஆறுதலாக இருப்பார்கள’; எண்ணயவர்களே ஏதோ ஒருவித புதினமான ஜந்துவை பார்ப்பதைப்போல என்னைப் பார்த்துக்கொண்டு நின்றது தான் என்னரல் மறக்க முடியாத மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாக இருந்தது.

‘ரப்பர் பாட்டா போட்டு வா’ என்பதும், ‘சேர்ட்டை அயர்ன் பண்ண வேண்டாம்’ என்பதும், ‘மட்டை பைலுடன் வா’ என்பதுமாக குட்டி ராஜ்யம் நடந்து கொண்டிருந்தது என் பல்கலைக்கழகத்தில்.

முதல் தோல்வி – மூக்கு உடைந்து விழுந்து நொருங்குவது போல இருந்தது. எதிர்பார்ப்பெல்லாம் வீணானது போல் காட்சி. என்னதான் அவற்றை மறக்க முயன்றாலும் இலகுவில் விட்டுவிடுமா என் மனம்……?

என் மன உணர்ச்சிகள் காபனீரொட்சைட் சகிதம் வெளிவந்து கொண்டே இருந்தது. வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு விட்டு வேண்டாததை வெளியேற்றி விடுவது தானே மனித இயல்பு. அது தானே சுவாசத்திலும் நடக்கிறது. ஒட்சிசனை லாவகமாக எடுத்துக் கொண்டு காபனீரொட்சைட்டை வெளியேற்றிக் கொண்டிருக்கிறோம். அதுபோல இந்த தேவையில்லாத எண்ணங்களையும் சிரமப்பட்டு வெளியேற்றி விட்டு நிம்மதியாய் இரு மனமே என்றால் எங்கே கேட்கிறது……. நன்றாக பழகியவர்கள் எப்படி இப்படி மாற இயலும், அதிலும் பெண்கள் – சே…….நினைக்கவே பிடிக்கவில்லை. ஏதாவது தேவையென்று வரும்போது என்னிடம் வலிந்து கொண்டு நின்றது மறந்து போய் விட்டதாக்கும். அவர்கள் மறந்து விட்டார்கள் என்பதற்காக நானும் அப்படி இருக்க முடியுமா அல்லது அப்படித்தான் இருக்க வேண்டுமா என்ன…………..

ஒரு முறை உயர்தர முதலாம் வருடத்தில் இருந்த போது ஆசிரியர் தினம் கொண்டாடுவதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்து, எல்லா ஆசிரியர்களிடமும் பேசி முடிவெடுத்த பின்னர், இரண்டாம் வருட மாணவர்கள் என்ற தோரணையில் மூக்கை நுழைத்து ஆட்சியதிகாரத்தை பறித்துக்கொண்ட போது அந்த விழாவில் ஒட்டுதல் இல்லாமல் அம்மா சுற்றித்திரிந்த நாட்களை நினைக்கிறேன். இதை எமக்கு பிரியமான எங்கள் வகுப்பாசிரியர் கவனித்து அவர்களின் நடவடிக்கையை கண்டித்த போது அவர்களாவே வந்து மன்னிப்பு கோரினார்கள் தான். அதுவும் காலில் விழுமளவில்………………….. அப்போது அவர்கள் மீதிருந்த தவறை அவர்கள் உணரவில்லை என்பது ஆசிரியர் தினத்துக்காக பிரின்ட் செய்யப்பட்ட புத்தகத்தில் எங்கள் பெயர் இடம்பெறவில்லை என நாங்கள் சண்டை செய்வதாகக்கூறி பழிக்குப்பழி வாங்கும் தோரனையில் நின்றபோது தெரிந்தது. ‘ஒரு வெளை அதற்காக இங்கே பலிவாங்குகிறார்களோ……..’ ஆனால் இங்கேதான் எழுதப்படாத சட்டம் ஒன்று நடைமுறையில் உள்ளதே……….

‘சீனியர்…….’ என்றால் நாங்களெல்லாம் அடிமை. ஏத்தனை சபித்தல், சாபம், கடும் வார்த்தைகளால் திட்டு வாங்குகிறார்கள்(மனதால் அல்லது தனிமையில்) அப்போதே முடிவெடுத்துக் கொண்டேன். சீனியர் பதவியை சுமக்கும் போது அப்பாவிகளிடம் திட்டு வாங்கக் கூடாதென்று.

பதவிதான் அது – பதவியில் இருப்பார்கள் தானே அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்கள். அப்படியென்றால் பதவி தான் அது. அதையெல்லாம் கடந்து இப்போது நான் தான் இரண்டாம் வருடமாயிற்றே. இருந்தாலும் அவற்றையெல்லாம் மறக்க முடியாது. இப்போது எங்களிடம் பேசினாலும் அந்த தோரனை மாறவில்லை. பழைய ஒட்டுதல் இல்லை. நான் ஒட்டவும் விரம்பவில்லை.

தவறாளிகள் நாங்கள் தான் என்பது போலத்தான் எங்கள் மீதான அவர்களது பாவனை இருக்கிறது. பரவாயில்லை, நான் அந்தத் தவறை உணரப்போவதுமில்லை. உணர்ந்தாலும் அதை வெளிக்காட்டப் போவதுமில்லை. ஆனால் உணர்வதற்கு என் தவறு என்ன இருக்கிறது…… ஒருவேளை இதையே அவர்களும் நினைத்திருக்கலாம் அல்லவா…… அவர்களின் கடமையைத்தான் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணம் இருக்கலாம் அல்லவா…..இருக்கலாம் தான்.

தான் செய்வத தான் சரி என்ற அனேகரின் எண்ணம் தான் தவறை உணர வைப்பதில்லை போலும். இப்படி எத்தனை பேரைச் சந்தித்தாயிற்று…….. அதுவெல்லாம் மனதின் ஓரங்களில் கறைபடியாத நினைவுகளாக இன்னும் தேங்கி நிங்கிறது……………….

பாடசாலையில் உயர்தர இரண்டாம வரடம் வந்த பிறகும் ஆசிரியர் தினத்தை கொண்டாட முடிவெடுத்தேன்…….. இங்கு பன்மையை சேர்க்க முடியாது. ஏனென்றால் அந்த முடிவை எடுத்தது நான் தான். நான் மட்டும் தான்………….

“வா பிரின்சிபெலிடம் போய் பேசி முடிவெடுப்போம்” என்று சலீமையும்,றமீசையும் கூப்பிட்டால் கேலி, கிண்டல், வீண்வாதம். போதாத குறைக்கு “தேவையில்லாத வேலைடா” என்று பெரும் அறிவுரை வேறு. ‘எப்போதும் ஒன்றாக இருப்பவர்களாயிற்றே என்று கேட்டு வைத்தால் இவர்களது பேச்சைப் பாருங்கள்’ இதை யாரிடமும் சொல்லவில்லை. எனக்குள் தான்.

மாணவத் தலைவர்களுக்கெல்லாம் ‘சீனியராக’ இருந்த சியாமிடம் விடயத்தைக்கூற அடுத்த சில வினாடிகளில் இருவரும் அதிபர் அறையில் அவருக்கு முன்னால் அமர்ந்திருந்தோம்.

அதிபர் அறையில் கண்ணாடி ஜன்னல்களுடாக வெளியே செல்பவர்கள் மீது நோட்டம் விட்டுக் கொண்டே அதிபரிடம் பேசத் தொடங்கினோம்.(இதில் முக்கியம் – அவ்வளவு எளிதில் எந்த மாணவர்களுக்கும் கிடைக்காத வாய்ப்பு எங்களுக்கு கிடைத்ததையும் ஒய்யாரமாக ‘அதிபரிடம்’ பேசிக் கொண்டிருப்பதையும் மற்றவர்கள் பார்க்கிறார்களா என்பது தான், பார்க்கத் தானே?!) எல்லா திட்டங்களையும் சில நாட்களாக மனதுக்குள்ளேயே போட்டு வைத்திருந்ததால் அதிபரின் கேள்விகளுக்கெல்லாம் ‘எப்போது கேட்பார்’ எனக் காத்திருந்தது போல பதிலளித்து, அனுமதி பெற்று வெற்றிச்சிரிப்புடன்(!) வெளிவந்தோம்(அல்லது வந்தேன்)

இன்னும் ஆசிரியர் தினம் எதிர்வர இரண்டு, மூன்று வாரங்களே இருந்த படியினால் மிக அவசரமாக கூட்டம் கூடி அவசரமாக காசு வசூலித்து, அவசரமாக வேலைகளைத் துவங்கினோம்.

அவசரம்……………… அவசரம்…………………….அவசரம்……………………

அதனால் முக்கிய சில வேலைகளை எல்லோரிடமும் கலந்தாலோசித்து செயற்படும் வாய்ப்புக்களும் அமையவில்லை, சந்தர்ப்பங்களும் அமையவில்லை. அங்கே தான் ஆரம்பித்தது பிரச்சினை………..

“எதையும் எங்களிடம் சொல்லவில்லை, எதிலும் எங்களை ஈடுபடுத்தவில்லை” என்று பிரச்சினையை ஆரம்பித்தார்கள். றமீஸ_ம் சலீமும் நியாயமான வாதம் தான் என்று நஹ்தியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.

‘என்னால் என்ன செய்ய முஎயும்’ என்று அவர்கள் நினைத்திருக்கலாம். என்னால் செய்ய முடிந்தது – மனம் உடைந்து போகவும், மொத்தமாக நண்பர்கள் வெறுத்துப் போகவும்……………..

நான் முதலிலேயே கேட்கும் போது கேலி செய்ததால், அவர்களுக்கு இதில் ஆர்வமில்லை என்று நினைத்தது என் தவறா……. அலட்சியமும் உதாசீனமும் அரங்கேறியது என்னால் தானா…………? அவர்களல்லவா அதை ஆரம்பித்து வைத்தார்கள்…….. அப்போது நான் முடித்து வைத்தேனா….. இல்லை…… அவர்கள் தான் முழுக்க முழுக்க அதைச் செய்தார்கள்…… பின் எதனால் என்னை நிற்க வைத்து கேள்வி கேட்டார்கள்…… பின்னாட்களில் எதிலும் கலந்து கொள்ளாமலும், மாணவத் தலைவன் பதவியையும் வேண்டா வெறுப்பாகதுறந்து விட்டு ஒதுங்கிக் கொள்ளவேண்டும் என்பதற்காகவா……….

அவர்களோடு பழகிய காலங்களை என் வாழ் நாட்களிலேயே வீணாக கழித்த மணித்தியாலங்கள் என்று என்னை நினைக்கச் செய்தது தான் அவர்களது வெற்றியா……………..

ஆனால் நாடகள் செல்லச் செல்ல சலீமை மட்டும் ஏனோதானோவென்று ஏற்றுக் கொண்டது. என் பகிடிகளை வரவேற்கவும் சிரிக்கவும் எனக்கு அவன் தேவைப்பட்டிருக்க வேண்டும் அல்லது அவன் பகிடிகளை வரவேற்கவும் சிரிக்கவும் அவனுக்கு நான் தேவைப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் றமிஸ_டன் அவனால் சிரிக்க முடிவதில்லை. ‘தனக்குத்தான் எல்லாம் தெரியும்’ என்ற நினைப்பில் இருக்கும் அவன் ‘படிப்பு படிப்பு’ என்று பாடசாலைக் காலத்தை வீணடித்தான்,கூடவே சலீமையும் வற்புறுத்தலுடன் சேர்த்துக் கொண்டான்.(கேட்டால் அது தான் பிரன்சிப்பாம்)

இதற்கெல்லாம் நான் என்ன செய்ய முடியும்…… ஆனால் கடைசி நாள் வரை அவர்கள் அவர்களுடைய தவறை உணரவில்லை. ‘பெயார்வல்’ தினத்தன்று தான் நான் றமீஸ_டன் பேசினேன். அப்போது அவன் என்னிடம் ஏதோ பேச எத்தனித்தான். ஆனால் பேசவில்லை. அன்று அவனை பேசாமல் தடுத்தது எதுவென்று தெரியவில்லை………………………..

“தவறுகள் உணர்கிறோம்

உணர்ந்ததை மறைக்கிறோம்”

தொலைபேசி பாடியது.(அந்த பாடலைத்தான் ரிங்டோனாக போட்டிருந்தேன் என்று சொல்ல மறந்து விட்டேன்) சியாம் தான் போன் செய்திருந்தான்………. ‘நாளை யுனிவர்சிட்டி வருகிறாயா’ எனக்கேட்டான். போக விருப்பமில்லைதான்…… ஆனால் போகத்தான் வேண்டும். பல மகிழ்ச்சி கலந்த புன்னகை வீசும் முகங்களை தரிசிப்பது போல் சில வரண்ட முகங்களையும் எதிர்கொள்ளத் தான் வேண்டும்…….. இதில் யாரைக்குற்றம் சொல்ல முடியும், எல்லோர் அனுபவத்திலும் இது நிகழ்கிறது. ஆனால் எல்லோரும் அதற்கெதிராக நிற்பதில்லை…… ஏதோ கடமையை செய்வது போல அவ்வப்போது சில முகமூடிகளை அணிந்து கொள்கிறார்கள்….. ஆனால் என்னால் மட்டும் ஏன் அவ்வாற இருக்கமுடிவதில்லை………… பதிலில்லை…………..

மனம் அமைதியடைகிறது…………….. மீண்டும் பாடல் நாக்கில் தொற்றிக்கொண்டது……..ஸ்ருதி சேராமல் முணுமுணுத்துக் கொண்டு வானத்தை வெறித்தபடி நிற்கிறேன்……………….

“தவறுகள் உணர்கிறோம்……….

உணர்ந்ததை மறைக்கிறோம்…….”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *