மீண்டும் ஒரு ஆதாம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 29, 2018
பார்வையிட்டோர்: 7,804 
 

இறைவன் தனது சாயலில் மண்ணில் இருந்து உருவாக்கிய உருவத்தின் நாசியில் தனது மூச்சை ஊதியபோது மனிதன் உருப்பெற்றான். அந்த மனிதன் ஆதாம் எனப்பெயர் பெருகிறான்- வேதாகமம்.

**********************

வீதியில் காத்திருப்பது அவனுக்கு கடினமாக இருந்தது. நாற்பது வயது கடந்து விட்ட பின்பு, நல்ல நோக்கமிருந்தாலும், பெண்ணொருத்திக்காக கல்லூரி மாணவன்போல் நடந்துகொள்வது எப்படி…..? வாழ்வில் ஒரே ஒரு முறை மட்டும் சந்தித்த சீனத்து இளம் பெண்ணொருத்திக்காகக் காத்திருப்பது அந்தரமான குற்ற உணர்வைக் கொடுத்தது.

எவ்வளவு நேரம்தான் காத்திருப்பது….?

அவனது மனதில் ஒரு திகில் உணர்வு தொடராக நீண்டது.

என் சக்திக்கு அப்பாற்பட்ட வேலையில் தலையை கொடுத்துவிட்டேனோ…?

அந்தப் பெண் சாமர்த்தியமாக அந்த இடத்தை விட்டு வெளியே வந்தாலும் அவளது பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்துவது…?

அவளை பொலிசில் கையளிப்பதா – இல்லை மறைத்து வைத்து மீண்டும் சீனாவுக்கு அனுப்புவதா…?
இவை எல்லாம் எவ்வளவு பாரதூரமான விடயங்கள் என்பதை எண்ணாமல் வாக்குறுதி கொடுத்தது எவ்வளவு முட்டாள்தனம். வாயாலே சொல்லியதை ஏன் நிறைவேற்ற நினைக்கிறேன்….?

” இந்தக்காலத்தில் என்னைப்போல் ஒரு முட்டாள் இருக்கமாட்டான் “என்று அவன் தன்னைத்தானே நொந்து கொண்டான்.

தேவையற்ற இந்தப் பிரச்சினையில் தலைகொடுக்காமல் மற்றவர்கள்போல் ஞாயிறு விடுமுறை தினத்தில் வீட்டின் முன்பகுதியில் வளர்ந்திருந்த புல்லை வெட்டியோ இல்லை தோட்டத்தில் வளர்ந்திருத்த செடிகளை வெட்டி நிலத்தை பண்படுத்தியோ இருந்தால் மனைவியிடம் நல்ல பெயர் வாங்கியிருக்கலாம். ஒரு நாள் செய்யும் வேலையின் நன்மதிப்புடன் இரண்டு கிழமைகளை ஓட்டமுடியும். குறைந்தபட்சம் கால்பந்தாட்டத்தையோ அல்லது திரைப்படத்தையோ தொலைக்காட்சியில் பார்த்;திருந்தால் கொஞ்சம் திருப்தியாக இருக்கும். அதுவுமில்லாமல் குளிர்ந்த பியரை குடித்துவிட்டு மதியத்தில் குட்டித்தூக்கம் போட்டிருக்கமுடியும்;. வார விடுமுறையில் செய்யக்கூடிய ஆனால் செய்யத் தவிர்த்துவிட்ட சில விடயங்களை மனதில் நினைத்து தன்னை அலுத்துக்கொண்டான்.

அவனுக்கும், ஒரு முறை சந்தித்த அந்த சீனப்பெண்ணுக்கும் தவிர வேறு ஒருவருக்கும் தெரியாமல் இந்தக் காரியத்தில் இறங்கியது செய்த தப்புக்கு பொட்டுவைத்து அலங்காரம் செய்த காரியமோ…?

ஒருவிதத்தில் இந்த முயற்சி சர்க்கஸ்காரனது கரணம் தப்பினால் மரணம் என்பது போன்;ற நடவடிக்கை. நேரடியாக ஈடுபடாமல் பொலிசிடம் சொல்லியிருக்கலாம்.. அதை ஏன் செய்யவில்லை…?

கோழையாக நினைப்பதை தவிர்க்கவா…? அல்லது பட்ரி;க்கின் மேல் இருந்த நட்புணர்வா…?

இப்பொழுது வீதியில் இந்த இடத்தில் நிற்பதை யாராவது தெரிந்தவர்கள் பார்த்தால்… எதைச் சொல்லி சமாளிக்க முடியும்——?

—-

மெல்பனில் தென்பகுதியில் உள்ள பிரதான வீதியில் உள்ளே பிரிந்து செல்லும் சிறிய பாதையில் காலை பதினொரு மணிக்கு “கனவான்களுக்கு மட்டும் ” என சிறிய எழுத்தில் சிவப்பு மின்சாரக்குமிழ் தாவித்தாவி ஓடும் கதவிற்கு சிறிது தொலைவில் நின்று கொண்டு, அந்த மூடிய கதவையே பார்த்து தன்னை நொந்து கொண்டிருந்தான் இரஞ்சன்.

சித்திரை மாதத்து வெய்யில் அவனது உடலில் சிறு துகள்களை ஜிகினாப் பொடியாக உதிர்த்துக் கொண்டிருந்தது.. அப்போது வீசிய மெதுவான காற்று அந்தப் பொடிகளை அகற்றுவதுபோல் அகற்றி மீண்டும் அந்தத் துகள்கள் உடலில் படியவைத்து அவனைக் கனவுலகிற்கு அழைத்தது. இலையுதிர்காலத்து நீலமேகப்பரப்பில் வெண்பஞ்சுப்பொதிகள் மேற்குத்திசையில் மட்டும் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. மற்றய இடங்கள் நிர்மலமான தோறறத்தைக்கொடுத்தது. அவனுக்கு அருகில் நின்ற மேப்பிள் மரமொன்று தொடர்ச்சியாக சிவப்பு – மஞ்சள் கலந்த வண்ண இலைகளை சத்தமின்றி உதிர்த்து அங்கு நிலவிய அமைதியை மேலும் அதிகமாக்கியது. இவ்வளவு அமைதியாக ஒரு இடம் அதுவும் அந்த மெல்பேன் மாநகரத்தில்…?

அந்த வீதியின் இருமருங்கும் வீடுகள் இல்லை. விடுமுறை நாளானதால் மனித நடமாட்டமும் இல்லை. சிறிய தொழிற்சாலைகள் , இரும்பு பட்டறைகள் என்பன இருக்கும் அந்த இடம் ஒரு கைத்தொழில்பேட்டை.. அவனுக்கு எதிரில் இருந்த ரயர்; கடையில் பிறிஜ்ரோன் ரயரின் விளம்பரம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதற்கு இருபுறமும் சில இரும்பு பட்டறைகள் இருந்தன. இருநூறு மீட்டர் தூரத்தில் பிரதான வீதியில் வாகனங்கள் போய்க்கொண்டிருந்தன. ஆனால் எந்த வாகனங்களின் சத்தமும் அவனுக்குக் கேட்கவில்லை. அல்லது அந்த ஓசையை கேட்கும் மனநிலையில் அவன் இல்லை. மனிதர்களுக்கு தாங்கள் விரும்பியதை மட்டும் கேட்கும் தன்மை இருக்கிறது

வீதியை பார்த்தபடி தன்னை சுற்றிய அமைதியையும் அந்த இலையுதிர்காலத்து இலைகளின் உதிர்வை இரசித்தபடி, கனவுலகத்தில் சஞ்சரித்தபடி நின்றவன், தேவையில்லாத வேலையை விட்டு திரும்பிப்போவோமா என நினைத்து திரும்பினான்.. அப்படி திரும்பியவனது செவிப்புலனுக்கு நிலத்தில் உதிர்ந்த இலைகளில் பாதங்கள் படும்போது உருவாகும் சலசலப்;பு கேட்டது. இவ்வளவு நேரமும் போர்வையாக அவனைப் போர்த்திருந்த அமைதி குலைந்து. அந்த சீனத்து பெண்தான் பின்பகுதியால் வந்துவிட்டாளா என இடது பக்கம் திரும்பியபோது திடீரென முதுகில் வலது பக்கத்தில் கூர்மையான ஏதோ எரிதணலால் இரண்டு விலா எலும்புகளுக்கும் இடையே துளைபோட்டபடி உள்ளே சென்று அதே வேகத்தில் மீண்டும் வெளியே வந்தது போல் இருந்தது..

அவனது உடல் இயக்கம் இரவில் பவர்கட் வந்து சகல மின்சார சாதனங்களும் இயக்கத்தை நிறுத்துவதுபோல் உடனடியாக நின்ற உணர்வு தெரிந்தது. மிகுந்த வலியுடன் முனகியபடி திரும்பிப் பார்த்தபோது பச்சை கம்பளி முகமூடியணிந்து கருநிற ரீசேட்டும் நீல டெனிம் பாண்டும் வெள்ளை அடிடாஸ் பாதணியும் அணிந்த ஒருவனது இடுங்கிய கண்கள்; தெரிந்தன. அவை அறிமுகமற்றது.. இரண்டுபக்கமும் கூரான கத்தி வெயிலுக்கு ஒளிர்ந்தது. கத்தியில் இரத்தம் துளிகூட தெரியவில்லை. குத்திவிட்டு உதிரம் கத்தியில் படுவதற்கு முன்பாக வேகத்துடன் கத்தியை எடுத்திருப்பதால் இவன் தொழில் முறைக் கொலையாளி போல் தெரிகிறது. மீண்டும் அவனது கையில் கூர்மையான கத்தி உயர்ந்தபோது பாடசாலைக் காலத்து கராத்தே பழகி மஞ்சள் பட்டி எடுத்த நினைவுடன் குனிந்திருந்தபடியே வலது காலை எடுத்து அழுத்தமாக அந்த முகமூடியின் முகத்தில் உதைந்தான்;. அவனது உயரம் குறைவாக இருந்ததால் கழுத்துக்கு வைத்த குறிதவறி உதை நெற்றியில் பலமாக விழுந்தது. தாக்கியவன் இதை எதிர்பார்க்கவில்லை. நிலைகுலைந்து நிலத்தில் விழாமல் குனிந்து தரையில் இடது கையை ஊன்றியபடி வலது கையில் கத்தியை வைத்துக்கொண்டு விலகி அந்த ரயர் கடை நோக்கி ஓடிச் சென்றான்.

நெற்றியில் உதை விழுவதை அவன் எதிர்பார்க்காததால் வந்த விடயத்தை முடிக்காது தப்புவதில் அவனது கவனம் இருந்தது.

இரஞ்சன் அணிந்திருந்த வெள்ளை சேர்ட்டை காயத்திலிருந்து பெருகிய இரத்தம் வட்டமாக முதுகில் நனைத்து பின்பு நிலத்தை நோக்கி வலதுகால் வழியே வடிந்து கொண்டிருந்தது.

‘குத்திவிட்டான் குத்திவிட்டான்’ என ஆங்கிலத்தில் அலறியபடி நேராக பிரதான பாதையை நோக்கியோடி வந்து நடுத்தெருவில் அவன் விழுந்தான்.

அதற்கு மேல் கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை. சூரியன் அந்த மதியத்தில் அஸ்த்தமித்து கரிய இரவு உலகத்தை கவ்விக் கொண்டது. நிர்மலமான மேகம் அந்த வெண்பஞ்சு மேகங்கள் தீடீரென மறைந்துவிட்டன. அந்தகாரமான இருட்டு எங்கும் நிறைந்தது. எதுவும் கண்ணுக்கு தெரியாத போது செவிப்புலன் அதிகமாகியது. ஆரம்பத்தில் அன்ரனா வேலை செய்யாத தொலைகாட்சி பெட்டிபோல் இரைந்து சிறிது நேரத்தில் பல ஓசைகள் கேட்கத் தொடங்கியது. வேகமான வாகனங்கள் நிறுத்தும்போது பிரேக்குகள் உராயும் ஓசை அதைத் தொடர்ந்து நிறுத்தும் வாகனக்கதவுகள் கதவை மூடும் ஓசை என பல்வேறு ஓசைகள் தொடர்ந்து ஒலித்தது. பேச்சுக்குரல்கள் புரியாத பல மொழிகளில் கேட்;டது.

சில நிமிடத்தில் மெதுவாக ஓசைகள் அடங்கி அந்த இடம் அமைதியாகியது. உடல் இலேசாக மேலெழுந்து கனவுலகத்தில் வான்வெளியில் பறவை ஒன்றைப்போல் சிறகை அடித்து ஓசை எழுப்பாமல் பறப்பதுபோல் இருந்தது. ஈரமான மேக கூட்டத்தின் அணைப்பால் உடல் குளிர்வது போன்று இருந்தது. அந்த குளிரில் உடல் மரத்த போது ஆழ்மனம் விரிந்து கொண்டது.

என்னைக் குத்திய பச்சை முகமூடி மனிதன் யாராக இருந்தாலும் அதற்கு பின்பாக இருந்தது அன்று நடந்த சம்பவமே. குத்தியது யார் என்ற தெரியாவிட்டாலும் அதற்கு மூலகாரணம் எனது நண்பன், இல்லை மாஜி நண்பன் பட்ரிக் வொங் என்பது நிச்சயம்.;

நான் இறந்தால் யாருக்கு இந்த உண்மை தெரியவரும்…?

இனந்தெரியாத ஒருவரால் கொலை அல்லது மர்ம நபரால் கொலை என்ற தலைப்பில் பத்திரிகையில் செய்தி வந்தபின்பு சிலகாலம் விசாரணை செய்துவிட்டு – பொலிஸ் அந்த வழக்கின் கோப்பை மூடிவிடுவார்கள். விக்டோரியா மாநிலத்து கண்டுபிடிக்கப்படாத கொலைகளின் பட்டியலில் அடங்கிவிட்டால் குற்றவாளிகள் தப்பிவிடுவார்கள்.

யார் இந்த பட்ரிக் வொங்…?

எனக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு…?

இலங்கையில் இருந்து குடிபெயர்ந்த எனது குடும்பம், மலேசியாவில் இருந்து குடிவந்த சீன இனத்து பட்ரிக்கின் குடும்பத்தை, பத்து வருடங்கள் முன்பாக அவுஸ்;திரேலியாவில் மேற்கு கரையோரத்தில் அமைந்த சிறியநகரத்தில்; சந்தித்தது.; எங்கள் குடும்பத்தினரைத் தவிர அவனது குடும்பமே வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். மற்றவர்கள் வெள்ளை நிற அவுஸ்திரேலியர்கள். எனது மனைவியுடன் அவனது மனைவி சூசன் ஒன்றாக வைத்தியசாலையில் வேலைசெய்தார்கள். இதனால் அவர்கள் இடையே ஒரு சினேகிதம் உருவாகியது. இதைவிட எனது மகனும் பட்ரிக்கின் மகனும் ஒரே வகுப்பில் படித்ததுடன் நெருங்கிய நண்பர்களுமாகிவிட்டார்கள். பிள்ளைகள் ஒரே வகுப்பில் படித்தபோது ஏற்பட்ட நட்பினால் இரு குடும்பங்களும் ஒருவர் வீட்டிற்கு ஒருவர் சென்று உணவருந்துவது வரை உறவு வளர்ந்தது. பட்ரிக்கின் மனைவி உளவியல் மருத்துவர். பட்ரிக் மலேசியாவில் மருத்துவ மிசின்களை மார்கட்டிங் செய்யும் பிசினஸ்சில் வேலை செய்திருந்தாலும் அவுஸ்திரேலியாவில் அவனுக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்வது சமையல் செய்வது என குடும்ப பொறுப்புகளை சுமந்தான். நானும் இலங்கையில் வைத்தியராக இருந்தாலும் அவுஸ்திரேலியாவில் தேர்ச்சிபெறவில்லை. வேலை கிடைக்காததால் அவனைப்போல் குடும்ப வீட்டு வேலைகளை செய்துகொண்டு படித்தேன்.

வெளிநாடுகளில் இருந்து குடியேறிய நாங்கள் எதிர்கொண்ட சவால்கள் பொதுவாக இருந்ததால் பட்ரிக்கின் நட்பு இணைந்தது. அவனிடம் பெருமளவு பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற அவாவால் பல வியாபார விடயங்களைப்பற்றி எப்பொழுதும் பேசியபடி இருப்பான். வசதியாக இருந்த நீ ஏன் மலேசியாவை விட்டு வந்தாய்…? எனக்கேட்டபோது பிள்ளைகளின் கல்விக்காக என்பான். வேலையில்லாததிலும் பார்க்க மனைவியின் சம்பாத்தியத்தில் இருப்பது அவனுக்கு குறையாக இருந்தது.

அந்த நாள் என்னால் வாழ்நாளில் மறக்க முடியாதது. ஞாயிற்றுக்கிழமை. மாலைநேரத்தில் சிறிய விருந்திற்காக அவர்களை எங்கள் வீட்டிற்கு அழைத்திருந்தோம். எங்கள் வீட்டிற்கு உணவிற்கு வந்தபோது பட்ரிக்கின்; மனைவி சூசனை முதல்முறையாக சந்தித்தபோது கண்ணை எடுக்க முடியவில்லை. லொரியில் அடிபட்டு நசுங்கிய அலுமினிய பாத்திரம் போன்ற முகம் கொண்ட பட்ரிக் போன்றவனுக்கு இவ்வளவு அழகான தேவதை கிடைத்திருக்கிறாளா என்பது சிறிது பொறாமையாகவும் இருந்தது. பல முறை பார்க்க வைக்கும் அழகுத்தேவதை அவள்.

எனது மனைவியுடன் அவள் மேல்மாடியில் இருந்து பேசிவிட்டு வரும்போது எதேச்சையாக அவளை மாடிப்படிகளில் சந்தித்தேன். அவளுக்கு சாதாரணமாக ஹலோ என்றதும் அந்த மாடிப்படியின் கைப்பிடியில் பிடித்தபடி உடலின் முழுப்பாரத்தையும் என்னில் பதித்து முத்தமிட்டாள். அப்பொழுது உதட்டுடன் தனது பற்களையும் சேர்த்து கவ்விக்கொண்டாள். எனது உடலில் மலைப்பாம்பின் இறுக்கம் தெரிந்தது. ஒருகணம் என் சுவாசத்தை மறந்துவிட்டேன். உதட்டில் அந்த ஈரமான முத்தம் என்னை நிலை குலைய வைத்தது. அத்துடன் அவளது பற்கள்; கீழ் உதட்டில் உள்பகுதியில் அழுத்தமாக பதிந்தன. மெதுவாக அவளின் தோளில் கையை வைத்து அவளை விலத்தினேன்.

ஐரோப்பியர் வீட்டின் உள்ளே வரும்போது முத்தமிடுவார்கள். அதுவும் கன்னத்தில் மட்டும்தான். இவள் இப்படி உதட்டில் பல்லைப்பதித்து முத்தமிடுகிறாளே….?

நல்லவேளையாக மாடிக்கு செல்லும் படிகளில் அதிகம் வெளிச்சமில்லை. மேலும் மாடிப்படியின் திருப்பத்தில் அன்று எரியும் மின்குமிழ் தன் உபயோகத்தை நிறுத்தியிருந்தது நன்மைக்கே. பட்ரிக்கோ எனது மனைவியோ அந்த இடத்தைப் பார்க்கமுடியாது என்பது சுவாசத்தை இலகுவாக்கியது.

மெதுவாக உடல் அதிர்வு குறைந்தபின் குளியலறைக் கண்ணாடியில் உதட்டைப் பிரித்து பார்த்தபோது மெதுவான இரண்டு சிவந்த காயங்கள் தெரிந்தது. காயம் அவளை பலமாக தள்ளியதால் ஏற்பட்டிருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டு பட்ரிக்கை நேரடியாக பார்ப்பதை தவிர்த்தேன். அவளது முத்தம் தொடர்ச்சியாக இரவில் வந்து அவளை நினைவிலும் கனவிலும் கொண்டுவந்தாலும் நட்பும் பயமும் சேர்ந்து கொண்டதால் சூசனை சந்திப்பதை அன்றிலிருந்து தவிர்த்துக் கொண்டேன். என்னால் செய்யக்கூடியது அதுமட்டும்தானே?
சிலநாட்களிற்கு பின் பட்ரிக் ஒரு நாள் கேட்டான்.

‘உன்னை சூசன் முத்தமிட்டாளா….’

‘இல்லை’ என மறுத்தேன் சிரித்தபடி.

‘கவனமாக இரு. சூசன் வித்தியாசமான பெண்’ என்றான் பட்ரிக்.

இவன் தனது மனைவியை பற்றி இப்படிச்சொல்வது புதிராக இருந்தது. ஆனால் எப்படி மேலே விளக்கம் கேட்கமுடியும்…?

இதன் பின்பு நான் பரீட்சையில் தேர்வானதால் மெல்பனில் வேலை வந்தது.. அந்தச் சிறு நகரத்தை விட்டு விலகி குடும்பமாக மெல்பனுக்கு குடிவந்தோம்.

சில வருடங்களின் பின்பாக எனக்கு எதிர்பாராமல் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவன் பட்ரிக். குடும்ப சுகத்தை விசாரித்துவிட்டு ‘ஒரு புதிய கம்பனியின் சார்பாக நான் தாய்லாந்து போகிறேன் அங்கு எனது செலவில் உன்னால் வரமுடியுமா…?’ எனக்கேட்டான்.

வேறொருவரது பணத்தில் விடுமுறை எடுக்க யாருக்குத்தான் கசக்கும்….?

அவன் கூறிய நாட்கள் எனது வேலையில் ஈஸ்டர் விடுமுறை காலமானதால் மனைவியிடம் அனுமதி பெற்று அவனுடன் சென்றேன்.

பாங்கொக் சென்றதும் அவனது வேலை எது என்பது புரியத் தொடங்கியது.

தாய்லாந்திலிருந்து பெண்களை படிப்பதற்காக அவுஸ்திரேலியாவுக்கு எடுப்பது – பின்பு அவர்களை விபசார விடுதிகளில் வேலை செய்யவைத்து பணம் பண்ணுவது. இந்த வியாபாரத்தில் இவன் ஏஜென்டாக தொழில் செய்தான். இதைச் செய்வதற்காக அவனுக்கு இரண்டு இடத்திலிருந்து கமிஷன் கிடைக்கிறது. கல்வி நிலையங்கள்…. மற்றது பெண்கள் வேலை செய்யும் விபசாரவிடுதிகள்.;

இதைத் தெரிந்துகொண்டதும் ‘பட்ரிக் ஆளைவிடு… உனது விமானச் சீட்டுப்பணத்தை திருப்பி தருகிறேன்…. நான் திரும்பிப் போகிறேன்” என்றேன்.

‘ஏற்கனவே பாங்கொக்கில் தொழில் நடத்துபவர்களைத்தான் நான் எடுக்கிறேன். இவர்கள்;அதிக பணத்தை அவுஸ்திரேலியாவில் உழைத்தபின் விரைவில் இந்த வேலையில் இருந்து விடுமுறை எடுத்துவிடுவார்கள். இவர்களுக்கு நான் முன்னேறும் வழியை காட்டுகிறேன். என்னைப் பொறுத்தவரையில் நான் இவர்களுக்கு மார்கட்டிங் ஏஜென்ட்.’ என்றான்.

மலேசியாவின் மருத்துவ மிசின்களுக்கு, இப்பொழுது விபசாரம் நடதுவதற்கு என சொல்லி அவனை சீண்டினாலும் ஏற்கனவே ஹோட்டலில் முன்று நாட்கள் தங்குவதற்கு அறையும் அவனால் எடுக்கப்பட்;டதாலும் அவனது தர்க்கத்தில்; நியாயம் சிறிது இருந்ததால் பாங்கொக்கில் மூன்று நாட்கள் தங்கினேன்.; அவன் பாங்கொக்கின் கிளப்புகள் மசாஜ் செய்யும் இடங்களுக்குச் சென்று பெண்களை சந்தித்து விபரங்களை பெற்றபோது எந்த இடத்திலும் தனிப்பட்ட உறவுகளை அந்தப்பெண்களிடம் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்பது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. என்னையும் பாங்கொக்கை சுற்றிப் பார்த்துவிட்டுவா எனச்சொல்லி அந்த மூன்று நாளும் வெளியே சுற்றுலா அனுப்பிவைத்தான். புத்த கோயில் அரச அரண்மனை மிதக்கும் மார்கட் என அந்த மூன்று நாட்கள் நான் ஊர் சுற்றினேன்.

ஒருநாள் இரவு அவனது நடத்தையைப்பற்றி நான் பிரஸ்தாபித்தபோது ‘சூசனிலும் பார்க்க ஒரு அழகியை சந்தித்தால் சொல்லு’ என்றான். அவனது அந்த வார்த்தை ஓரிரு தடவை கோவலனாக விரும்பிய எனது சபலத்தைக் கொன்றுவிட்டது. கேவலமான தொழிலிலும் அவன் ஒரு அறத்தை கடைப்பிடித்தது எனக்குப் பிடித்தது.

மெல்பனுக்கு வந்தவுடன் அவனது தொடர்பைத் துண்டித்தேன். இருவருக்கும் அறிமுகமான ஒருவர் மூலம் அவன் இப்பொழுது மிகவும் வசதியாக மெல்பனில் செல்வந்தர்கள் வாழும் பகுதியில் வீடு வாங்கி வாழ்வதாக அறிந்து கொண்டேன்.

திடீரென ஒரு நாள் ஒரு உணவு விடுதிக்கு அழைத்து உபசரித்தான். தனது பிறீவ்கேசில் இருந்து உருவிய பெரிய அல்பத்தை விரித்து அதில் பல அழகான பெண்களின் படத்தைக் காட்டினான். பலவிதமான உடைகளில் கண்ணைக் கவரும் தோற்றத்துடன் பல ஆசிய நாட்டுப் பெண்கள் இருந்தார்கள்.

‘இது என்ன…?

‘இப்பொழுது நாங்கள் சொந்தமாக ஜென்ரில்மன்கிளப்பொன்று தொடங்கி இருக்கிறோம் அதற்கு உனக்கு எனது பிரத்தியேகமான அழைப்பிதழ் என்று சொல்லி நமது சமூகத்தில் பிள்ளைகளின் திருமண அழைப்பிதழ் தரும் பெற்றோர்கள்போல் மிகவும் பெருமிதம் பொங்கத் தந்தான்.

அந்த அழைப்பிதழில் இருந்த ஜிகினா துகள்கள் எனது விரல்களில் ஒட்டிக்கொண்டது.

பழைய நண்பன் என்னை அவனது புதிதாக திறக்கபட்ட கிளப்பிற்கு வரும்படி அழைக்கிறான். மனதில் சஞ்சலம் ஏற்பட்டது. மனதில் போவதற்கு முற்றாக ஒப்புதல் இல்லை

சிலவாரங்கள் கடந்தபோது மீண்டும் தொலைபேசியில் அழைத்தான்.

மறுக்க முடியாமல் அவனது ஜென்ரில்மன் கிளப்பிற்கு ஒரு சனிக்கிழமை சென்றேன். அந்த கிளப் மெல்பனின் தென்பகுதியில் ஒதுக்கமான பகுதியில் அமைந்திருந்தது. உள்ளே சென்றபோது மெதுவான இருள் கவிந்து மதுவின் நெடி பரவியிருந்தது. அதைவிட மென்மையான இசை ஒலித்தது.
மதுவினியோகம் நடக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலின் வரவேற்பு பகுதிபோல் தோற்றமளித்தது. அங்கு மதுஅருந்தும்போது இளம்பெண்கள் உங்களுடன் வந்து பேசுவார்கள் என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது.

நான் ஒரு பியரை வாங்கி மூலையில் உள்ள சோபாவில் அமர்ந்து குடித்துக் கொண்டிருக்கும்போது கல்லூரி மாணவிபோல் இருந்த சீனப்பெண்ணை பட்ரிக் அழைத்து வந்து அறிமுகப்படுத்தினான்.

பட்ரிக் மது அருந்துபவன் அல்ல எனவே ‘அனுபவி’ என சொல்லிவிட்டு சென்றான்.

பட்ரிக் விலகிச் சென்றதும் லின் என அறிமுகப்படுத்திய அந்தப் பெண்ணுடன் பேசமுடியவில்லை. தொடர்ந்து புன்னகைத்தாள். அவளுக்கு ஆங்கிலம் தெரியாது. எனக்கு சீன மொழி தெரியாது. சிரித்தபடி பியரை முடித்ததும் மது அருந்தும் இடத்தில் இருந்து இடப்பக்கத்தில் உள்ள சிறிய வாசலூடாக சிறிது இருளான பகுதியால் கையைப் பிடித்து அழைத்துச் சென்று ஒரு அறைக்குள் வந்தாள்.

அங்கு கட்டிலுடன் குளியலறை இருந்தது. சாதாரணமாக குளிக்க மட்டும் ஆற்றுக்கு செல்லும் ஒருவனை நீந்துவதற்கு தள்ளுவதற்கான விடயத்தை புரிந்து கொள்ளமுடிந்தது.

லின் தொடர்ந்து புன்னகைத்தபடி தனது மேல் ஆடையை மட்டும் விலக்கினாள். காமத்துக்காக வந்த ஆண்களுடன் பேசவேண்டிய தேவையில்லை என அவள் கருதியிருக்கவேண்டும். முன்பக்கத்தை காட்டியபடி நின்றவள் திரும்பியபோது அவளது தோளின் பின்புறத்தில் வட்டமான நகம் பதித்தது போன்ற நான்கு காயங்கள் இருந்தன. காயத்தை சுற்றிய வட்டமான லவண்டர் நிறம் குறைந்தது இரண்டு அல்லது மூன்று நாட்கள் முன்பாக ஏற்பட்டிருக்கவேண்டும். மருத்துவரான எனக்கு அவை முன்பற்களால்; ஏற்பட்டது எனப் புரிவதற்கு அதிக நேரம் எடுக்கவில்லை. அவளை மேலும் உடைகளை களையவேண்டாமென சைகை காட்டினேன்.

மிகவும் குறைந்த ஆங்கிலத்தில் அவள் பேசிய போது எனக்குப் புரிந்த விடயம்:-

லின் ஷங்காயில் இருந்து படிப்பதற்காக ஒரு கிழமை முன்பாக மேற்கு அவுஸ்திரேலியா வந்ததாகவும் நேற்றைய தினம் இங்கு வந்து சேர்ந்ததாகவும் சொன்னாள். இங்குள்ள பெண்கள் ஒரு நாளைக்கு பதினைந்து பேருடன் உடலுறவு கொள்வதாகவும் மூன்று மணி நேரம் மட்டும் தூங்குவதாகவும் அவ்வாறு தன்னால் செய்யமுடியாது என்றும் அழுதாள் அவளது உடலில் முக்கியமாக இடையின் கீழ் சிவந்த தடிப்புகளும் அவளது கூற்றின் உண்மையை உரைத்தன.

அவள்மேல் ஏற்பட்ட பரிதாபத்தால் நெஞ்சு கனத்தது.

அவளுக்கு உதவி செய்வதற்கு உறுதியெடுத்துக்கொண்டேன்.

‘உனக்கு நான் என்ன செய்யமுடியும்…?’

‘நான் தப்ப விரும்புகிறேன். அடுத்த ஞாயிற்றுக்கிழமை மதியமளவில்; எனக்கு உதவமுடியுமா…? அந்த நேரத்தில் வாடிக்கையாளர் குறைவு” என்றாள்.

‘முயற்சிக்கிறேன்’ என்றபோது அழுதபடி காலில் விழுந்தாள்.

இவ்வளவு காலமும் அடங்கியிருந்த மனிதமும் மூதாதையர் ஒருவரிடம் இருந்து வந்து எனது நிறமூர்த்தத்தில் ஒளிந்துகொண்டிருந்த வீரமும் ஒன்றாகி லின்னிடம் உதவி செய்வதாகச் சொல்லி ‘ஞாயிறு பதினொரு மணிக்கு வெளியே வா மிகுதியை பார்த்துக்கொள்வோம்’ என்றேன்

லின்னின் தப்புதல் விடயம் ஏதோ காரணத்தால் வெளிப்பட்டிருக்கவேண்டும். அதற்கு நான் உடந்தை என்பதால் என்னை பழி வாங்கியிருக்கிறான் பட்ரிக்.

—-

வேகமாக ஷைரனை ஒலித்தபடியே மற்றய வாகனங்களைப் புறந்தள்ளியபடி சென்ற அம்புலன்ஸ் வைத்தியசாலையின் வாசலில் நின்றதும் அங்கிருந்து ஸ்ரெச்சரில் தள்ளி ஒப்பரேஷன் தியேட்டருக்கு செல்வது தெரிந்தது.. ஏற்கனவே பொலிஸ் வந்து சேர்ந்தது

இப்பொழுது எனது ஒரே நோக்கம் ஆஸ்பத்திரியை விட்டு விலகி வேகமாக பட்ரிக்கின் வீடு செல்லவேண்டும்.;இந்த சம்பவத்தில் பட்றிக் தப்பி விடாமல் பொலிசில் பிடிபடுவது மட்டுமல்ல அவனது கேவலமான பெண்கடத்தல் தொழிலையே காட்டிக் கொடுக்கவேண்டும். அதன்மூலம் ஏராளமான இளம்பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்ற பொதுவான சிந்தனையும் நண்பன் என்று கூட பார்க்காமல் கொலைசெய்ய துணிந்த பட்ரிக்கை பழிவாங்கவேண்டும் என்ற உணர்வு பீறி எழுந்தது. எப்படி இந்த கிளப்பை நடத்துகிறான் என்ற சூட்சுமத்தை அறிந்து கொண்டால்த்தான் பல கேள்விகளுக்கு விடைகிடைக்கும் என்பதால் மெல்பனின் கிழக்குப் பகுதியில் இருந்த அவனது வீட்டை நோக்கி சென்றேன்.

‘முட்டாளாக நீ நடந்ததற்கு அவன் மட்டும் பொறுப்பல்ல. விபசாரவிடுதிக்குபோனது உனது தவறு

‘தவறுகளைப்பேச இது சந்தர்ப்பமில்லை’

‘உயிரே போகிற இந்தவேளையிலாவது பேசாது இனி எப்போது — பாங்கொக்கில் அவனது தொழில் என்னவென தெரிந்தபின் அவனுடன் நட்பை துண்டித்திருக்கவேண்டும். இல்லை ஜன்ரில்மன் கிளப் என்பதை புரிந்து அங்கு போகாமல் இருந்திருக்க வேண்டும். அதை விட லின் இழுத்தபோது ஏன் அவளைத் தொடர்ந்தாய்? சபலம்தானே. சரி எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டாலும் நீர் பெரிய மயிரே? ஏன் பொலிசில் சொல்லி விட்டு வீட்டில் இருந்திருக்க முடியாது…? ‘

‘தற்போது விடயத்தை துப்பறியவேண்டும். என்னை கொலைசெய்ய ஆள் அனுப்பியதற்கு பழிவாங்கவேண்டும். சட் அப் என்னைத் துளைத்தெடுக்காதே’

தவறுகளை சுட்டிக்காட்டிய மனச்சாட்சியிடம் சொல்லிவிட்டு கீழே பார்த்தபோது மெல்பனின் வீதிகளில் அதிகவாகனங்கள் என குறைப்படுபவர்கள் வான்வெளி எவ்வளவு நெருக்கடியானது என்பதை புரியாதவர்களே. எத்தனைபேரை இடித்தபடி முன்னேறவேண்டி உள்ளது. புவியில் இருப்பவரை விட இல்லாதவர்கள் பல மடங்கு என்பது எவ்வளவு உண்மை.

‘அப்பப்பா மேலே இப்படி இருக்கிறதே…?’

மதியத்தில் கீழே பாதைகள் ஓரளவு அமைதியாக இருந்தது.

ஏற்கனவே விலாசம் தெரிந்தபடியால் பட்ரிக்கின் வீட்டை அடையாளம் காணுவது இலகுவாக இருந்தது.
அதோ அந்த நீச்சல்குளத்துடன் உள்ள வீடு. மிகவும் அழகான புல்தரையும் தோட்டமும் இருந்தது. வாசலில் கருப்பும் வெள்ளையுமாக இரண்டு பென்ஸ்கார்கள் நின்றன.

வீட்டினுள் செல்வது பிரமாதமான விடயமாக இல்லை. கீழே ஒரு அறையில் ஏற்கனவே அறிமுகமான பட்ரிக்கின் மகள் லில்லி இருந்தாள். அவள் இப்பொழுது பல்கலைக்கழகத்தில் படிக்கிறாள். தாயைப்போல் அழகானவள். அவளிடம் மானசீகமான மன்னிப்பை காற்றில் பறவையின் இறகுபோல் உதிர்த்துவிட்டு மேல்மாடியில் சென்று பார்த்தேன். அங்கு ஐந்து அறைகள் எல்லாம் பூட்டியிருந்தது. அறைகளை ஒவ்வொன்றாக பார்த்தபோது எவருமில்லை.

எங்கும் பட்ரிக்கோ சூசனோ தென்படவில்லை

வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார்களா…?

படுக்கையறையின் கட்டிலின் பக்கத்தில் சிறிய அலுமாரியிருந்தது . அதன்மேல் கண்ணாடிச்சட்டம்போடப்பட்ட அவுஸ்திரேலிய கம்பனி சான்றிதழ்; இருந்தது. அதில் ஜென்ரில்மன் கிளப் —சூசன் வொங் தனி உரிமையாளர் என எழுதப்பட்டிருந்தது. அதற்குப் பக்கத்தில் இருந்த எலக்ரோனிக் போட்டோ அல்பம் பெண்களது விதம் விதமான படங்களுடன் கணத்துக்கு ஒருமுறை மாறிக்கொண்டிருந்தது.

கடைசியாக வந்த முகத்தை பார்த்தபோது அதில் சூசனும் எனக்கு அறிமுகமான வேறு ஒரு பெண்ணும்; நீச்சல் உடையில் மிகவும் நெருக்கமாக ஒருவரை ஒருவர் அணைத்தபடி இருந்தார்கள்.

சில நிமிட நேரத்தில் அந்தப் போட்டோ மீண்டும் வந்தபோது மூளையை கசக்கி பார்த்தபோது கடந்த கிழமை பார்த்த லின்னின் படமாக தெரிந்தது.

அந்த இடத்தில் உறைந்துவிட்டேன்

யாரோ வாசல் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

வெளியேறி மீண்டும் வைத்தியசாலைக்கு வந்தபோது வாசலில் இரண்டு பொலிசார் மனைவியையும் மகனையும் விசாரித்தபடி இருந்தனர்.

அவர்களை விலத்திக்கொண்டு அவசரமாக சேர்ஜரி தியேட்டர் உள்ளே சென்றபோது மூடியிருந்த தியேட்டரில் வைத்தியர்கள் கூட்டமாக ஆப்பரேசன் மேசையில் சரிவாக வைத்த உடலுக்கு பிராணவாயுவை கொடுத்தபடி நின்றார்கள். வலது முதுகில் பாண்டேஜ் இருந்தது. நெஞ்சின் நடுப்பகுதியில் பெரிய காயம் தைக்கப்பட்டிருந்தது. நெஞ்சை திறந்து ஆப்பரேசன் செய்திருக்கிறார்கள் எனத் தெரிந்தது.

‘இது மிகவும் அபூர்வமானது. ஆப்பரேசன் முடிந்து இவ்வளவு நேரமாகியும் ஏன் சுவாசம் வரவில்லை. இதயத்தின் வால்வுகளை மாற்றினாலே உடன் சுவாசிக்க தொடங்கிவிடுவார்களே. இது நுரையீரலின் ஒருபகுதியை எடுத்தது மடடுமே சுவாசத்தை ஏற்படுத்த மருந்தை ஏற்றுவோமா…? ‘

இன்னமும் இரத்தம் தோய்ந்த கையுறை அவரது கைகளில் இருந்தது. அவரே சேர்ஜனாக இருக்கவேண்டும்.

‘இல்லை கொஞ்சம் பொறுக்கலாம். இதயம் பலமாக துடிக்கிறது’ என்று விட்டு பலூன்போன்ற ஒன்றை அமத்தியபடி பதில்கொடுத்தார்.

அவர் மயக்கமருந்து கொடுப்பவர். இப்பொழுது செயற்கை சுவாசம் கொடுக்கிறார்

இனிமேல் தாமதித்தால் பட்ரிக்கையும் சூசனையும் பற்றிய விடயத்தை பொலிசில் சொல்லி அந்த அப்பாவி லின்னை காப்பாற்ற முடியாது போய்விடும். என்னையும் ஒப்பரேஷன் வெற்றி ஆனால் உயிர் பிரிந்து விட்டது எனச் சொல்லி முகத்தை மூடிவிடுவார்கள. மூக்கருகில் சென்று அந்த சுவாசிக்காத உடலின் நாசியோடு உள்ளே சென்றேன்.
களிமண்ணில் ஆதாமை உருவாக்கிய இறைவன் குனிந்து மூக்கில் ஊதி உயிர் கொடுத்த சம்பவம் அக்காலத்தில் மட்டுமா நடந்தது?

‘பேசன்ட் சுவாசம் இப்பொழுது தானாக நடக்கிறது இனிப் பயமில்லை’ என்று மயக்க மருந்தை கொடுக்கும் வைத்தியர் வாயில் இருந்த குளாயை இழுத்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *