மிச்சம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 27, 2014
பார்வையிட்டோர்: 7,627 
 

காலை நேரம்.‘டவுன் பஸ்’லிருந்து இறங்கி வந்த குமாரைப் பார்த்த நண்பன் முத்துசாமி “ என்ன குமாரு உன் டூ வீலர் என்னாச்சு?….டவுன் பஸ்ஸில் வருகிறாய்?..”

“ தினசரி பெட்ரோல் விலை ஏறிட்டே போகுது!….டூ வீலரில் வந்தா குறைந்தது ஐம்பது ரூபா ஆகுது!….’டவுன் பஸ்’னா பத்து ரூபாயோடு போயிடும்!….”

“ அடேயப்பா!….நிறைய மிச்சம் பிடிச்சு பழகிட்டே!…” என்று நண்பர் முத்துசாமி சிரித்துக் கொண்டே போய் விட்டார்.

ஆபிஸில் தன் செக்சனில் நுழைந்த குமாரைப் பார்த்து, “என்னடா…குமார்!…..உன்னோட பேண்ட் சர்ட் சரியா அயர்ன் பண்ணவே இல்லை போலிருக்கு!..” நண்பன் மகேஷ் கேட்டான்.

“ஆமாண்டா!…இப்பவெல்லாம் அயர்ன் பண்ணறதுக்கு ஒரு செட்டிற்கு பத்து ரூபா கேட்கறாங்க!….அதனாலே இப்பவெல்லாம் நானே அயர்ன் பண்ணிக்கிறேன்!…”

“எதெதில் மிச்சம் பிடிக்கிறது என்பதில் வர வர உனக்கு விவஸ்தையே இல்லேடா!..” என்று நண்பன் மகேஷ் வருத்தப் பட்டான்.

மத்தியான சாப்பாட்டு வேளை. வீட்டு சாப்பாடு கொண்டு வராத நண்பர்கள் அண்ணபூர்ணா, ஆர்யாஸ் என்று தேடிக் கொண்டு போனார்கள்.

தெரு மூலையில் ஒரு ஆல்டோ கார். அதன் பக்கதில் நான்கு ஐந்து பேர் ஸ்டூல்களில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். குமார் கூட அங்கே உட்கார்ந்து சாப்பிட்டு வருவதைப் பார்த்த அவனுடைய நண்பர் கதிரவன் “ என்ன குமார்! அந்த சாப்பாடெல்லாம் நல்ல சுகாதாரமா இருக்காது! எதற்கடா..கூலிக்காரன் மாதிரி தெருவில் உட்கார்ந்து சாப்பிடறே?….”

“ வர வர ஹோட்டல் சாப்பாட்டுக்கு எழுபது ரூபா கேட்கிறாங்க!…இங்கே வெறும் பதினைந்து ரூபாயில் அந்த வேலை முடிஞ்சிட்டது!….” என்று சொல்லி விட்டுச் சிரித்தான் குமார்.

“ போடா!… பைத்தியகாரா…இதில் எல்லாம் மிச்சம் பிடித்து…என்னடா சாதிக்கப்போறே?..”.

குமார் நல்ல அரசுப் பணியில் இருக்கிறான். கூடவே கொஞ்சம் இதர வருமானமும் உண்டு. எதற்குத்தான் இப்படி எல்லாவற்றிலும் மிச்சம் பிடிக்க அலைகிறானோ? என்று நண்பர் கதிரவன் சலித்துக் கொண்டே போனார்.

மாலை ஏழு மணி.

“ குமார்!…. வேறு என்னடா சொல்லட்டும்?….”

“நேற்று நாம சாப்பிட்ட சிக்னேச்சர் விஸ்கியே ஒரு ‘ப்புல்’ சொல்லடா!..”

“டேய்!…அது கொஞ்சம் வெலை ஜாஸ்தியடா!…”

“என்னடா…பெரிய வெலை?…..வாழ்க்கையை நல்லா அனுபவிக்க வேண்டுமடா!…இதில் எல்லாமா மிச்சம் பிடிப்பாங்க…போய் வாங்கிட்டு வாடா!…” என்று சொன்ன குமார், தன் பார் நண்பனிடம் ஒரு ஐநூறு ரூபாய் தாளை எடுத்து அலட்சியமாக மேசை மேல் வீசி எறிந்தான். .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *