மலைப்பாதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 2, 2023
பார்வையிட்டோர்: 1,304 
 

மலை உச்சியில் அமைந்திருக்கும் ஒரு நகருக்கு செல்லும் மலைப் பாதையில் ஒரு இடத்தில் மலையை சுற்றி வரும் பாதையை அதன் அருகில் இருக்கும் ஊரின் வழியாக குறுக்கு பாதை போட்டால் மலையை சுற்றி செல்லும் தொல்லை இருக்காது, தூரமும் குறையும், எரிபொருளும் மிச்சமாகும் என்று முடிவு செய்த “சாலை போக்குவரத்து துறை” அந்த குறுக்கு பாதை போடும் இடத்தை அளப்பதற்கு அவர்கள் துறையை சேர்ந்த சில அதிகாரிகளை அனுப்பி வைத்தது.

அந்த இடம் மிகவும் கொந்தளிப்பாக காணப்பட்டது, ஊர் மக்கள் சில பேர் அந்த இட்த்தை அளக்க வந்த அதிகாரிகளை சுற்றிக்கொள்ள பதில் சொல்ல முடியாமல் திணறிப்போனார்கள் அதிகாரிகள். அவர்கள் என்ன செய்ய முடியும்? அரசாங்கம் அந்த வழியாக பாதை போட்டால் மக்களுக்கு பயன் இருக்கும் என்று முடிவு செய்து அந்த இடத்தை அளப்பதற்கு இவர்களை அனுப்பி உள்ளது. இவர்கள் இந்த இடத்தை அளப்பதை பார்த்து யாரோ ஒருவர் ஊரில் சொல்ல ஊர் மக்களும் அங்கு வந்து விட்டார்கள்.

அதிகாரிகள் எவ்வளவோ சொல்லி பார்த்தார்கள், இங்கிருக்கும் இடத்தை அகலப்படுத்தி சுற்றி சென்று கொண்டிருக்கும் பாதை யோடு இணைத்து விட்டால் வாகனங்கள் இதன் வழியாக செல்லும். இப்பொழுது போய் சேரும் நேரத்தை விட பத்து நிமிடம் குறைவாக போய் சேர்ந்து விடலாம், அது மட்டுமல்ல அந்த பாதை மிகவும் மேடாக இருப்பதால் எரிபொருள் செலவும் அதிகமாக பிடிக்கிறது. இப்பொழுது அளந்து கொண்டிருக்கும் இந்த பாதை வழியாக சென்றால் எரிபொருளும் மிச்சம், கால நேரமும் மிச்சம். ஆனால் என்ன செய்வது? அளக்க விடமாட்டேனென்று அடம் பிடிக்கிறார்களே. இதற்கும் இந்த இடம் அரசாங்கத்திற்கு சொந்தமான ஏதோ ஒரு துறையை சேர்ந்த இடம்தான். இதை இவர்களிடம் எப்படி சொன்னாலும் ஏதோ அவர்கள் இடத்தை பிடுங்கி எடுத்துக்கொள்வது போல கூச்சல் போட்டு மிரட்டுகிறார்கள்.

திரும்பி வந்த அதிகாரிகள் தங்களது மேல் அதிகாரியிடம் நடந்ததை சொல்லுகிறார்கள். அவர் அவர்கள் சொல்வதை ஆழமாக கேட்டுக்கொள்கிறார். அவர்கள் சொல்லி முடித்தவுடன் சார் பேசாம போலீஸ் உதவியை கேட்டுடலாமா? பார்க்கலாம் சொல்லி விட்டு அவர்களை அனுப்பி வைக்கிறார்.

சிறிது நேரம் யோசித்தவர் போனை எடுத்து தனது நண்பரும் போலீஸ் அதிகாரியுமான அருணை அழைத்து பேசுகிறார். பத்து நிமிடத்தில் அருண் அங்கு வர இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். வன்முறை மட்டும் வேண்டாம், அந்த ஊர் மக்கள் தானாக அந்த இடத்தை விட்டு தரும்படி செய்ய முடியுமா? என்று கேட்கிறார். ஆனால் போலீஸ் அதிகாரத்தை காட்டாமல் முடியுமா? இதை கேட்டவுடன் அருண் சற்று சிந்தித்து இன்னும் இரண்டு வாரத்தில் ஏற்பாடு செய்வதாக சொல்லி செல்கிறார்.

இரண்டு நாள் போயிருக்கும், இவர்கள் அளந்த இடத்தில் ஒரு பெரிய லாரி வந்து நிற்க அதில் இருந்து ஆட்கள் மள மளவென இறங்குகிறார்கள். ஊர் மக்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள். பின்னால் போலீஸ் பாதுகாப்புடன் விலையுயர்ந்த ஒரு கார் வந்து நிற்க அதிலிருந்து ஒரு பெரிய மனிதர் இறங்குகிறார். இந்த இடத்தை தான் விலைக்கு வாங்கி விட்டதாகவும், இங்கு ஒரு பெரிய ஓட்டல் ஒன்றை நிர்மாணிக்க போவதாகவும் சொல்கிறார்.

அந்த ஊர் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பல பேருக்கு இந்த இடம் அரசாங்கத்திற்கு சொந்தம் என்று தெரியும், இருந்தாலும், வந்திருக்கும் ஆள் ஏதோ மேலிடத்தின் செல்வாக்கில் வந்திருக்கலாம், இப்பொழுது எதுவும் பேசக்கூடாது என்று மெளனமாய் இருக்கிறார்கள். ஊர் மக்கள் இவர்களிடம் என்ன்ங்க இங்க நடக்குது? என்று கேட்டார்கள். கொஞ்சம் பொறுங்கள், இப்பொழுது எதுவும் பேச வேண்டாம், அவர்கள் டாகுமெண்ட்சோட வந்துருக்காங்க, போலீஸ் வேற பாதுகாப்பு கொடுக்குது, அதனால கொஞ்சம் வெயிட் பண்ணலாம். நழுவுகிறார்கள். உண்மையில் அந்த பெரிய ஆள் எந்த கட்சியின் பாதுகாப்பில் இந்த வேலையை தொடங்குகிறார் என்று புரியாததால் ஒதுங்கிக்கொள்கிறார்கள் நாளை விசாரித்தால் போகிறது.

தினந்தோறும் அவர்கள் செய்யும் அலப்பரை தாங்க முடியாமல் இருக்கிறது. இரவும் பகலும் விளக்கை போட்டு வேலை செய்கிறேன் என்று அந்த ஊர்க்காரர்களை தூங்க விடாமல், வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு வாரம் பொறுத்து பார்த்த ஊர் மக்கள் ஒரு விண்ணப்பத்தை எடுத்துக்கொண்டு அரசாங்க அலுவலகத்தை அடைந்து விண்ணப்பத்தை கொடுத்தார்கள், இந்த இடம் எங்களுக்கு தெரிந்து அரசாங்கத்திற்கு சொந்தமான இடம், இதை எப்படி இந்த பெரிய மனிதனுக்கு விற்க முடியும்? அப்படியானால், ஏதோ தப்பு நடந்திருக்கிறது. தயவு செய்து விசாரிக்கவும்.

அவர்கள் நாங்கள் என்ன செய்ய முடியும்? அவர்கள் சென்னையில் இருந்து அனுமதி வாங்கி வந்திருக்கிறார்கள், வேண்டுமானால் ஒன்று செய்யுங்கள், போலீஸ் அதிகாரியிடம் அந்த இடத்தை வாங்கியுள்ளவர் மேல் புகாராக ஒரு பெட்டிசனாக கொடுங்கள்.

புகாரை வாங்கி பார்த்த காவல் அதிகாரி சுற்றி நின்றவர்களை பார்த்து இப்ப என்ன செய்யலாம்? என்ற அவர்களையே கேட்டார். அந்த இடம் தனியார் இடமில்லை அவர் எப்படி அங்கு ஓட்டல் கட்ட முடியும்?

அவர் சிரித்து இதெல்லாம் மேலிடத்து சமாச்சாரம், நாம ஒண்ணும் பண்ண முடியாது, ஒண்ணு பண்ணலாம், இந்த இடத்துல, ஹைவேஸ்காரங்க ரோடு போடணும்னு கேட்டதா கேள்வி பட்டேன். நீங்க எல்லோரூம் அந்த இடத்துல ரோடு வந்தா எங்களுக்கு சீக்கிரம் அடுத்த ஊருக்கு போக வசதி கிடைக்கும்னு ஒரு அப்ளிகேஷனை எழுதிகிட்டு அந்த டிபார்ட்மெண்ட்ல கொண்டு போய் கொடுங்க. அவங்க ஏதாச்சும் செய்வாங்க.

அடுத்த வாரம் அந்த இடம் சுத்தமாக்கப்பட்டு ரோடு போடும் வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தது. சாலை போடும் பணிகளை பார்த்து கொண்டிருந்த ஹைவேஸ் அதிகாரி, காவல் துறை அதிகாரி அருணுக்கு நன்றி கூறிக்கொண்டிருந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *