மரவள்ளிக் கிழங்கு

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 11,886 
 

மலாய் மூலம் : எ. சமாட் இஸ்மாயில் (மார்ச் 1947)
மொழிபெயர்ப்பாளர் : எம். பிரபு

இந்தக் காலத்தில் எல்லோருக்கும் மரவள்ளிக் கிழங்கின் மீது ஒரு தனி பாசம்தான். எங்கே பார்த்தாலும் இதே பேச்சுதான். அடுப்பறையில், டிரெமில் (trem), கல்யாண விருந்தில்- மரவள்ளி, மரவள்ளி, மரவள்ளி- கனவிலும் மரவள்ளிக் கிழங்குதான்.

ஒருநாள் நானும் என் தோழனும் ஒரு தோழியும் மரவள்ளிக் கிழங்குகளை தேடிப் போனோம். கெய்லாங் செராயில் உள்ள ஒரு மலாய் தோட்டக்காரர் வீட்டிற்குச் சென்றோம். அன்று சரியான வெயில். நாங்கள் மூவரும் வியர்வையால் நனைந்து விட்டோம். பரவாயில்லை எங்கள் கூடை நிறைந்தால் போதும்.

அங்கிருந்த ஒரு குமாஸ்தாவிடம் நாங்கள் கிழங்கு வாங்க வந்த விசயத்தைக் கூறினோம். அவர் கிழங்கு தீர்ந்து விட்டன, வேண்டு மென்றால் அருகில் உள்ள சிறு தோட்டக்காரரை சந்தியுங்கள் என்று கூறினார். அவர் பெயர் வாக் அலி. ஜாவா காரர்.

நாங்கள் மூவரும் அன்று மிகவும் அழகாகவே உடுத்தியிருந்தோம். என்னவானாலும் சரி, நாங்கள் கொண்டு வந்த கூடை நிறைந்தால் போதும், அங்குள்ள மரவள்ளி மரங்களை எண்ணாமல் நிறைய பிடுங்க வேண்டும்.

அந்த தோட்டத்தில் வெயில் கொளுத்தினாலும் காற்று சற்று இதமாகவே வீசியது. அங்குள்ள சூழல் மிகவும் பசுமையாக காட்சியளித்தது. வரிசையாக வீற்றிருக்கும் அந்த மரவள்ளிச் செடிகள் படர்ந்திருக்கும் ‘கார்பெட்’ போன்று எங்களை வரவேற்றுக் கொண்டிருந்தன. ஆனால் ஆங்காங்கே சிறு சிறு புள்ளிகளாக தெரிந்தன, அங்குள்ள மக்களின் குடிசைகள்.

சேறு, சகதி, அழுக்கான கால்வாய், பாலமாக விளங்கிய தென்னை மரம் எங்கள் மினுக்கும் காலணிகளை பாதிக்கவில்லை. முற்களும், ஒடிந்த மரக்கிளைகளும் எங்கள் புதிய, சுத்தமான காற்சட்டை களை பதம் பார்த்தாலும் பரவாயில்லை. என்ன செய்வது, எங்களது நோக்கம் எப்படியாவது அந்த தோட்டக்கார ‘வாக்’கை சந்தித்ததாக வேண்டும் இல்லையேல் எங்களது கூடை நிறைவாகாது.

நீண்ட நேரம் நடந்தாகி விட்டது. இதுவரையில் எந்த மனிதரையும் சந்திக்க வில்லை. மீண்டும் நடையைத் தொடர்ந்தோம். அப்பாடா ஒரு தோட்டக்காரர் மண் வெட்டியால் மண்ணை கொத்தி பாத்தியை சரி செய்து கொண்டிருந்தார். அங்கு சிறுவர்கள் சிலர் கால்வாயில் நீச்சலடித்துக் கொண்டிருக்கும் வாத்துகளை பாது காத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் எங்களை கண்டு அதிசயிக்கவில்லை. எங்களைப் போன்று நிறைய பேர் அழகாக பட்டணத்திலிருந்து மரவள்ளிக் கிழங்கு வாங்க இங்கு வந்திருக்கக் கூடும்.

ஒரு கால் பார்த்தால், நாங்கள் மூவரும் சட்ட விரோதமாக அவர்கள் தோட்டத்தில் நுழைந்து விட்டோமோ என்று தோன்றுகிறது. எங்களது தோற்றத்திற்கும் இந்த இடத்திற்கும் துளியும் சம்பந்தமில்லாமல் இருந்தது. சேற்றில் கால்கள் பதிந்தன. தென்னை மர பாலத்தில் ஏறி நடந்தது. என்ன செய்வது எல்லாம் மரவள்ளிக் கிழங்குக்காக.

சிறிது நேரத்திற்குப் பிறகு நாங்கள் வாக் அலியின் குடிசையை சென்றடைந்தோம். நாங்கள் தப்பாக எண்ணி விட்டோம். அந்த தோட்டக்காரர் வாக் எங்களை அன்பாக வரவேற்றார்.

“வாருங்கள்… வாருங்கள் என்ன விசயம்” மிகவும் ஆயாசமாய் கேட்டார்.

“ஒன்றுமில்லை… மரவள்ளிக்கிழங்கை தேடி வந்தோம்”.

“மரவள்ளிக்கிழங்கா!”

அவர் மரவள்ளிக்கிழங்கு என்று சொல்லும் போது ஏதோ ஒரு படம் பார்க்கச் செல்வது போன்று கூறினார். எங்களுக்கு மரவள்ளிக் கிழங்கை உச்சரிக்கவே பயமாய் இருந்தது. எங்கே கிழங்கு கிடைக்காமல் போய் விடுமோ என்று.

வாக் அந்த உச்சி வெயிலில் மண்ணை கொத்திக் கொண்டிருந்தார். அவருடைய சட்டை இல்லாத உடம்பு வியர்த்துக் கொட்டியது, சேறும் சகதியுமாய் அழுக்காகக் காட்சியளித்தார்.

நாங்கள் அவருடன் சலாம் செய்து கொண் டோம். அவருடைய கை சேறாக இருந்த போதிலும் எங்களது கைகள் தான் அழுக்காகத் தோன்றியது. அவர் மிகவும் சந்தோசமாய் எங்களை அவருடைய குடிசைக்கு அழைத்துச் சென்றார்.

” உள்ளே வாருங்கள்!” நாங்கள் காலணிகளை கழற்றி விட்டு உள்ளே சென்றோம்.

” என் மனைவி வீட்டில் இல்லை. அவள் காலை யிலேயே அவளுடைய வாத்தை தேடப் போய்விட்டாள். வாத்து காணாமல் போய் இரண்டு நாட்களாகி விட்டன” என்று கூறியவாறே அவருடைய குடிசைக்குள் எங்களை அழைத்துச் சென்றார்.

குடிசைக்குள் சென்றதும் சும்மா இராமல், நாற்காலி மேசைகளை சுத்தம் செய்து அடுக்கினார். எங்களை உட்காரச் சொன்னார். நாங்களும் வெட்கப்பட்டுக் கொண்டு இருக்கைகளில் அமர்ந்தோம்.

சத்தம் போட்டு தன் பையனை அழைத்தார். வாக்கின் பையன் ஓடோடி வந்தான்.

“போய் அம்மாவை கூட்டிக் கொண்டு வா. விருந்தாளி வந்திருக்கிறார்கள் என்று சொல்”.

அந்தப் பையனும் அவசரமாய் வெளியேறினான். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தப் பையன் தன் தாயாரோடு வந்தான். அந்தம்மா மூச்சு வாங்க. கையில் குழந்தையோடு வந்தார்.

நாங்கள் எழுந்து நின்றோம். எங்கள் தோழி வாக்கின் மனைவியின் கையை பிடித்து சலாம் செய்தாள். வாக்கின் மனைவியும் மிகவும் அந்நியோன்னியமாக பழகினார். எங்களை வெட்கப் படவேண்டாமென்று கூறினார்.

அடுப்பறையில் மணம் வீசியது. எங்களுக்கு மரவள்ளிக் கிழங்கு அவித்துத் தர ஏற்பாடு செய்கிறார்கள் என அறிந்து கொண்டேன்.

எங்களை நன் முறையில் அந்தக் கணவனும் மனைவியும் கவனித்துக் கொண்டார்கள். அவர்களின் சிரித்த முகமும் பேச்சும் எங்களை வெட்கத்திலிருந்து வெளிக்கொணர்ந்தது. நாங்களும் அவர்களுடன் சேர்ந்து சந்தோசமாய் உரையாடினோம்.

பேசிக் கொண்டிருக்கும் போதே நான் தரையில் அப்படியே சாய்ந்து கொண்டேன். பிறகு பக்கத்தில் மூடியிருந்த ஜன்னலை திறந்து விட்டேன். வெளியில் எல்லாம் பச்சை பசேலென்று படர்ந்து தெரிந்தன. சாலையை கூட பார்க்க முடியாமல் அடர்த்தியாக இருந்தது. கெய்லாங்கில் போகும் வாகனங்களின் சத்தம் அறவே கேட்கவில்லை. காற்று வீசும் சலசலப் போசைதான் கேட்டது. வாக், நான் படுக்க பாயும்தலையணையும் கொண்டு வந்து கொடுத்தார். நான் என் சொந்த வீடு போல செயலில் காட்டியதை கண்டு மிகவும் குதூகலம் அடைந்திருப்பார் போலும்.

என் தோழி அடுப்பறையில் வாக்கின் மனைவி யுடன் உரையாடிக் கொண்டிருந்தாள். என் நண்பனோ வாக்கின் பையனுடன் ஏதோ விளையாடிக் கொண்டி ருந்தான்.

வரக் கோப்பியும் கூடவே கை கழுவும் தட்டும் வந்தது. வாக் அலி சிறிது நேரம் உள்ளே சென்று சுட்ட மரவள்ளிக் கிழங்குகளை கொண்டு வந்தார். எங்களை சாப்பிடச் சொன்னார்.

நாங்களும் ஆளுக்கு கொஞ்சம் எடுத்துக் கொண்டோம்.

“சுட்ட மீன் போன்று உள்ளது, வாக்” என்றேன் நான்.

“நல்ல சுவை” என் நண்பன் கூறி னான். வாக்கின் மனைவி அந்த சிறு கைக் குழந்தையுடன் எங்களுடன் உட்கார்ந்தார்.

நாங்கள் அந்தக் குழுந்தையை சீண் டிப் பார்த்தோம். குழந்தை பயப்பட வில்லை.

” குழந்தை மிகவும் சமத்து. மரவள்ளிக் கிழங்கு ‘மோடல்’ என்று கூறியவாறே மரவள்ளிக் கிழங்கை வாயில் போட்டு மென்றேன்.

வாக் வாய் விட்டு சிரித்தார்.

“Ford V-8 மோடல் இல்லையே, வாக்!” என் நண்பன் குறுக்கிட்டான்.

எல்லாரும் சிரித்தோம். வரக் கோப்பி குடித்தோம். மரவள்ளிக் கிழங்கை கிள்ளி கிள்ளி நான் மீண்டும் பாயில் படுத்துக் கொண்டேன். என் கண்கள் இந்த இதமான தென்றலில் மயக்கம் தந்தது.

என் நண்பர்கள் இருவரும் குடிசைக்கு வெளியே சென்று விட்டனர். அவர்களின் குரல்கள் மிகவும் சன்னமாய் கேட்டது, அதில் சிரிப்பொலியும் அடங்கும்.

பிறகு மண் கொத்தும் சத்தம் கேட்டது. அவர்கள் மண் கொத்த பழகிக் கொள்கிறார்கள் போலும், இடை-இடையே கேலியும் கிண்டலும் வேறு. முன்பு மண் வெட்டி பிடிக்கத் தெரியாத நண்பனைப் பார்த்து தோழி கேலி செய்கிறார். நண்பனோ தன் மூதாதையர் தோட்டம் வைத்திருந்தவர்கள் என்றும், தான் பட்டணத்தில் வளர்ந்ததால் மண்வெட்டியை பிடிக்க இயலவில்லை என்றும் பிடிவாதமாய் கூறினார்.

சற்று நேரத்திற்கெல்லாம் அவர்களின் உரையாடல்களை நான் செவிமடுக்கவில்லை, நான் உறங்கி விட்டேன்.

நான் கால் மணி நேரம் உறங்கியிருப்பேன் போலும், காரணம் தான் விழித்த போது என் நண்பர்கள் தங்களின் சட்டை கை பகுதிகளை மடக்கி, மிகவும் கடினமாய் உழைத்து வந்தது போன்று தோன்றினார்கள்.

நாங்கள் கொண்டு வந்த கூடைகள் நிரம்பி விட்டன. மரவள்ளிக் கிழங்குகளும் அதன் இலைகளும் கூட. கொஞ்சம் வாழைப் பழங்களும் கோழி முட்டைகளும் வேறு ஆங்காங்கு கூடை ஓரங்களில் தென்பட்டன.

நாங்கள் உரையாடல்களை தொடர்ந்தோம். மேலும் சில பேர் வந்தனர். வாக் குடும்பம் அவர்களைக் கண்டவுடன் பல வருடம் பழகியவர்கள் போல் உபசரித்தனர்.

என் தோழிக்கு இங்கிருந்து புறப்பட மனம் இல்லையாம். அவள் தன் துணிமணிகளை கொண்டு வந்து இந்த குடிசையில் இரண்டு மாத காலம் தங்க முடிவு செய்து விட்டாள். தினமும் காலையும் மாலையும் மண்ணை கொத்தப் போகிறாளாம். மரவள்ளிக் கிழங்கு பைத்தியமாகி விட்டாள் போலும். அவள் நிஜமாகவே தோட்டக்காரியாகப் போகிறாளாம்.

எங்களது கூடைகள் எல்லாம் மரவள்ளிக் கிழங்குகள். இன்னும் இவை இரண்டு நாட்களுக்குப் போதுமானது. நாங்களும் எங்களுக்கு வீடு செல்ல நேரம் வந்து விட்டதை உணர்ந்தோம். வாக்கும் அவர்களது பிள்ளை குட்டிகளும் இன்னும் மதிய உணவு சாப்பிடாததால், மேலும் இங்கு இருப்பது நல்லதல்ல என்று பட்டது.

நாங்கள் எல்லோரும் ஆளாளுக்கு நன்றி செலுத்தினோம்.

“உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு வந்து, போங்கள்” வாக்கும் அவரது மனைவியும் எங்களுடன் சலாம் செய்து கொண்டே சொன்னார்கள்.

நாங்கள் ஐந்து வெள்ளி நோட்டை அவருடைய பெரிய பையனிடம் நீட்டினோம்.

வாக் அலி பலமாக சிரித்தார். சந்தோசத்திலா இல்லை மூன்று கூடை நிறைய மரவள்ளிக் கிழங்குகளுக்கும், வாழைப் பழங்களுக்கும் முட்டைகளுக்கும் ஐந்து வெள்ளி கொடுத்ததற்கு கேலியாக சிரித்தாரா தெரியவில்லை.

“எதற்காக காசு கொடுக்கிறீர்கள்?” வாக்கின் மனைவி கேட்டார்.

“பரவாயில்லை. சிரமப்பட்டு எங்களை உபசரித்தீர்கள்” என்றேன் நான்.

வாக்கின் பையன் அந்த பச்சை நிற நோட்டை பிடித்தபடி வெளியே ஓடினான். அந்த நோட்டை மேலே தூக்கி வீசி வீசி பிடித்தான். பலமாக காற்று வீசியதால் அந்த பச்சை நோட்டு அருகில் இருந்த கால்வாயில் விழுந்தது. அவன் அதை எடுத்து ஈரத்துடன் கொண்டு வந்து தன் தந்தையிடம் ஒப்படைத்தான்.

“அப்பா, வெள்ளி நனைந்து விட்டது பாருங்கள், பிறகு செல்லாது” பையன் கவலையுடன் தந்தையிடம் முறையிட்டான்.

“நனைந்தால் பரவாயில்லை, பிறகு காய்ந்து விடும்”

ஆனால் பையனோ வாக்கின் ஆறுதலை ஏற்றுக் கொள்ளாமல் அழுதான். எங்களுக்கோ தர்மசங்கடமாகி விட்டது. அவனுக்கு ஆறுதல் சொன்னோம்.

வாக் அலி மீண்டும் பலமாக சிரித்தார்.

“இதோ பாருங்கள்” வாக் எங்கள் நிறைந்த கூடைகளை சுட்டிக் காட்டினார்.

“இந்த நனைந்த தாள் இன்னும் செல்லும்… ஆனால் இந்த கூடைகளில் உள்ளதை தோற்கடிக்க முடியாது. இதில்தான் நிறைய கனம்… இந்த தாளில் இல்லை” வாக் தனது சத்தமான குரலில் சிரித்துக் கொண்டே சொன்னார்.

நாங்கள் மூவரும் வாக்கின் குடும்பத்தை விட்டுச் சென்றோம். அந்தப் பையன் மட்டும் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“வா, அப்பா அதை காய வைக்கிறேன்” என்ற வாக் அலி, பையனிடமிருந்த ஐந்து வெள்ளி நோட்டை எடுத்தார்.

அவர் சொன்னது உண்மைதான்… அதனால் எல்லோரும் மரவெள்ளிக் கிழங்கு செடியை நிறைய நடுங்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *