மனிதன் இருக்கிறான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 10, 2022
பார்வையிட்டோர்: 4,148 
 

(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பிற்பகலில்தான் அந்த அலுவல் கட்டளைக் கடிதம் கிடைத்தது. அந்தியில் இல்லம் திரும்பியதும் உமாவிடம் கெர்டுத்தேன். அவள் மகிழ்ந்து போனாள். ” இப்பொழு தாவது வந்ததே, அம்மட்டில் மகிழ்ச்சிதான்” என்று கூறிய துடன் நிறுத்தாமல் அன்புவெறியில்-என் கன்னத்தில் ஓர் “இச்சும்” பதித்தாள். நல்லவேளை, என் மகன் அன்புமலர் அதைப் பார்க்கவில்லை .

உமா எனக்களித்த இதழ் முத்திரையின் ஈரம்கூட மறையவில்லை. அதற்குள் அவள் தன் தாயாருக்கும் உற வினர்களுக்கும் இந்தத் தகவலைச் சொல்லத் தொலை பேசியைப் பாடாய்ப்படுத்தினாள் .

எனது முதல் கட்டப் பதவி உயர்வைத் தாங்கிக் கொண்டிருந்த அந்தக் கடிதம் இன்னும் என் கையில்தான் படபடத்துக் கொண்டிருந்தது. எனக்கு ஒரு பதற்றமோ அளவற்ற மகிழ்ச்சியோ, இல்லை. எப்படி ஏற்படும்? இது என்ன எதிர்பாராமல் கிடைத்த புதையலா? அல்லது எதிர் பார்த்துக் கிடைத்த தங்கக் குவியலா? இரண்டுமே இல்லை.

எனக்கு உறுதியாகக் கிடைக்கப்போவதில்லை என்றாகி விட்ட நிலையில், காலங்கடந்து ஆமை வேகத்தில் வந்துள்ள பதவி உயர்வைக் கண்டு ஆனந்தப்பட என்ன இருக்கிறது? நட்டமில்லை என்று பெருமூச்சு. அவ்வளவுதான்.

பதவியின் பளுதாங்மால் அந்தக் கடிதம்கூட மடங்கிப் போய் என் மனநிலையைப் போல் தொங்கிவிட்டது.

“இப்பொழுதாவது வந்ததே!…” என் மனைவி உதிர்த்த சொற்கள் என் போராட்டத்தின் நினைவு முத்திரைகள் அல்லவா?

ஒன்பது ஆண்டுகள்!

எவ்வளவு காலநீட்டம்? இந்த வெறுமையான ஆண்டு கள் என்னுள் ஏற்படுத்திவிட்ட பாதிப்புகள்தான் எத்தனை யெத்தனை!

அல்லல்கள்-அலைக்கழியுகள்-சொல்லம்புப் புண்கள்; சொல்ல முடியாத வேதனைகள்- போதும். வேறு எவருக்கும் இந்நிலை ஏற்படவேண்டாம். வேண்டவே வேண்டாம்.

ஓராயிரம் கற்பனைகளை மனத்திரையில் தேக்கிக் கொண்டுதான் அங்கு நான் பணியாற்றச் சென்றேன். பழுதுபட்ட தொலைக்காட்சியில் ஓடும் படங்களைப் போல், ஒரே மாதத்திற்குள் என் கனவுகள் ஓடி ஓய்ந்தன. அப் பொழுதுதான் செய்து கொண்டிருந்த நல்ல பணியைத் துறந்து, அங்குச் சென்றதன் பிழையை உணர்ந்தேன் நான் வந்திருக்கவே கூடாது.

ஓர் அரசரைப் போன்ற பெருமையுடன் மாணவர் களுக்கு அறிவு புகட்டும் ஆசிரியர் தொழிலிலேயே நான் நீடித்திருக்கக் கூடாதா ! ஊழ் யாரைத் தீண்டிப் பார்க்கா மல் விட்டிருக்கிறது? நானும் அதன் தீநாக்கால் தீண்டப் பட்டேன் என்ற தீர்மான முடிவுக்கு வந்துவிட்டேன்.

இங்கோ நிலைமை தலைகீழாக இருந்தது. அதிகாரத் தில் ஒருவர். அவருக்குக் கீழே சில குட்டி அதிகாரிகள். கடைநிலையில் என்னைப் போன்று புதிதாகப் பணியில் சேர்ந் தவர்கள். எனக்கு வேண்டும்!

தகுதிநிலைக்கேற்ப அதிகாரிக்கும், குட்டி அதிகாரி களுக்கும் பல்லை வெளியில் காட்டி என்னைப்போன்ற பணி யாளர்கள் “கும்பிடு” போட வேண்டும் . எனது நண்பன் அகமதுவின் மொழியில் கூற வேண்டுமானால், “சலாம்” போட வேண்டுமாம். எப்படி இருக்கிறது?

மரியாதையை அளவோடு-அதையும் அவசியமான போது மட்டும் கொடுத்துப் பழகியவன் நான். எனக்குக் கூழைக் கும்பிடு போடவும் தெரியாது; பக்கமேளம் வாசிக்க வும் தெரியாது. விளைவு?…

நான் தனித்துவிடப்பட்டேன். அதைப்பற்றி நான் கவலைப்படவும் இல்லை. நான் என் போக்கில் பயணத்தைத் தொடர்ந்தேன்.

அலுவல்கள் தொடர்பாகப் பேசுவேன்; அவகாசம் இருப்பின் பேசுவேன். இது சரியாக எனக்குத் தோன்றியது . ஆனால் குறையாக அதைப் பிறர் எண்ணிக் கொண்டால் அதற்கு நான் எப்படிப் பொறுப்பேற்க முடியும்?

நான் திமிர் பிடித்தவனாம். நல்ல வேடிக்கை! பிறரைப் பற்றிய குறை மூட்டைகளைச் சுமந்து செல்லும் கழுதையாய் நான் இருந்திருந்தால், நான் நல்லவனாகியிருப்பேன். ஏன் செல்லப்பிள்ளையாகக் கூட ஆகியிருப்பேன் அதை நான் செய்யவில்லை. கடமையைச் செய்தேன் கண்ணியமாக இருந்தேன். என்னால் அலுவலகத்து மேசைக்குக்கூட இடர் ஏற்படக்கூடாது என்பதில் விழிப்பாக இருந்தேன். அதன் விளைவு எனக்குப் பதவி உயர்வு கிடைக்க நான் காத்திருந்த காலம் ஒன்பது ஆண்டுகள்

அரைமணி நேரம் அயர்ந்து உறங்கிவிட்டதை, வாராத என் தலை ஒலிபரப்ப-குற்ற உணர்வுடன் அலுவலகத்தினுள் நுழைந்து இருக்கையில் அமர்ந்தேன். பாழாய்ப் போன உறக்கம் என்னைச் சரியாகக் காலைவாரிவிட்டது நான் உட் காருவதற்கும் தொலைபேசி கதறுவதற்கும் சரியாக இருந்தது. எடுத்தேன்.

“இப்ப மணி என்ன…”

“ஒன்பது …”

“இதுதான் வரவேண்டிய நேரமா?”

“…..”

“என்ன பதிலைக் காணோம்?… ”

“இல்லே…வந்து …என் தப்புதான்…நானே வந்து உங்களைப் பார்க்கலாம் என்று இருந்தேன். அதற்குள் நீங்களே…”

நான் முடிக்கவில்லை. டக்கென்று தொடர்பு அறுந்து விட்டது. நிமிர்ந்து பார்த்தேன். நீண்ட அந்த அலுவல கத்து அறையில் எல்லாரும் என்னையே கேலியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தொலைவில் கண்ணாடி கதவுக்குப் பின்னால், மேல் அதிகாரி தொலைபேசியை வைப்பது தெரிந்தது.

என் இளங்குருதியில் எக்கச்சக்கமாகச் சூடேறியது. நேராகச் சென்று அவர் கதவைத் தள்ளித் திறந்து, “நீங்கள் எப்படி இவ்வாறு நடந்து கொள்வது? நான் செய்தது தவறுதான். அதை விளக்கிச் சொல்ல எனக்கு வாய்ப்பளிக்க வேண்டாமா? என் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்ல எனக்கு உரிமையில்லையா? நீங்கள் சட்டம் படித்தவராயிற்றே! இது தெரியாதா? நீங்கள் எனக்கு அதிகாரிதான். ஆனால் நான் உங்களுக்கு அடிமையில்லை…”

என் இரு கரங்களையும் அவர் மேசையில் ஊன்றியபடியே நான் பேசிய முறை அவருக்கு அச்சமூட்டி இருக்க வேண்டும். அவர் முகமெல்லாம் வியர்வை. கண்ணாடி யைக் கழற்றியபோது கைகள் இரண்டும் வீணையிசைத்தன. அவர் தம் முகத்தைக் கைக்குட்டையால் துடத்துக் கொண்டே, “நீங்கள் போகலாம் …” என்று தடுமாறினார்.

நான் திரும்பினேன், பத்து நிமிடங்களில் எனக்கு ஒரு குறிப்பு வந்தது. மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதற்கு எழுத்து மூலம் மன்னிப்புக் கேட்க வேண்டுமாம். அதைக் கிழித்து எறிந்தேன். அதன் விளைவு?…ஒன்பது ஆண்டுகள்.

என்னை உமாவுக்கு எப்படிப் பிடித்துப் போயிற்று என்பதுதான் வியப்பு. அவள் என்னையே சுற்றிவர, நானும் அவளைச் சுற்றத் தொடங்கினேன். முடிவு? நாங்கன் காதலர்கள் ஆனோம்.

காதலை எவ்வளவு காலத்திற்கு மறைக்க முடியும்? கிசுகிசுப்புகளாகத் தொடங்கிய எங்கள் காதல் கதை, இறுதியில் அலுவலகத்தில் அதுவே “சூடான” செய்தி யாகி விட்டது. அதிகாரி என்னிடம் இதுபற்றிப் பேசினார்

“திரு.கதிரவன், வேலை பார்க்குமிடத்தில் இதெல்லாம் இருக்கக் கூடாது. அந்தப் பெண்ணின் பெற்றோர் இந்த இடத்தைப் பற்றி என்ன நினைப்பார்கள்? இது என்ன வேலை பார்க்குமிடமா? இல்லை பெண் பார்க்குமிடமா?….”

“எங்கள் தொடர்பு ஒன்றும் கள்ள உறவில்லை, நல்ல உறவுதான். விரைவில் திருமணம் முடிக்கவிருக்கிறோம் .”

“அது உண்மையாய் இருந்தால், அது ஒன்றுதான் நீங்கள் இங்கே வந்த பிறகு செய்த உருப்படியான காரியம், தெரியுமா உங்களுக்குஎ…”

அவர் போய்விட்டார். என்ன குத்தலான பேச்சு! எனக்கும் முகத்தில் அடிப்பது போல் பேசத்தெரியும். ஆனால் அவர் வயதை எண்ணி அமைதி காத்தேன்.

காதல் வயப்படுவதும் மணம் புரிந்து கொள்ளுவதும் பாவமான காரியங்களா? உலகத்தில் இங்குதான் நடக்கக் கூடாதது நடந்துவிட்டது போல் அல்லவா துள்ளிக் குதித் தார். காதல் தொடர்புகள் இல்லாத அலுவலகம் எந்த உலகத்தில் இருக்கிறது?

இதை நான் உமாவிடம் கூறினேன் . அவளுக்குக் கோபம் உச்சந் தலைக்கு ஏறியது. மறுநாளே மேலதிகாரியின் மேசை மீது பணி “விலகல்” கடிதத்தை வைத்துவிட்டு நடையக் கட்டிவிட்டாளே பார்க்கலாம். அவருக்கு முகம் தொங்கி விட்டது. இதன் விளைவு….?

அலுவலக உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அது இரவு நேரம். எனக்குப் பின்னால் இருவர் தமிழில் உரையடுவது கேட்டது. நன்றாகக் கவனமாகக் கேட்டபோது, அவர்களிருவரும் என் மேலதி காரியைப் பற்றிக் கன்னாபின்னாவென்று பேசிக் கொண்டிருந் தது கேட்டது. குரலில் இருந்தே அவர்கள் யாவர் என்பது எனக்குப் புரிந்தது என்னால் நம்பவே முடியவில்லை. அவர்கள் என் மேலதிகாரியின் “செல்லப் பிள்ளைகள்!” நயவஞ்சகர்கள்.

சிவனே என்று சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். எழுந்து செல்லும் போது அவர்களிருவரும் என்னைப் பார்த்துவிட்டார்கள். என்ன நினைத்தார்களோ, என்னருகில் வந்தனர்.

“நாங்கள் உங்களைக் கவனிக்கவில்லை, இங்கு நீங்கள் கேட்டதை யாரிடமும் சொல்ல வேண்டாம். எல்லாரிடமும் நல்ல பக்கமும் இருக்கும், கெட்ட பக்கமும் இருக்கும். அவரிடமும் அப்படித்தான். நட்பார்ந்த முறையில் அவற்றைப் பற்றிப் பேசுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன்…” ஒருவன் எதையோ சொல்ல வந்து என்னவோ பேசினான்.

“தவறில்லை என்பது உண்மையானால், என்னிடம் பாதுகாப்புத் தேடுவானேன். பேசாமல் போயிருக்கலாமே? …” நான் கேட்டேன்.

“இது உங்களவில் மட்டும் இருக்கட்டும்….” மற்றவன் கெஞ்சினான். எனக்கு வெறியே வந்துவிட்டது.

“இந்தா பாருங்கள். அந்த விதமான எச்சில் புத்தி எனக்குக் கிடையாது. அதனால்தான் எனக்குப் பின்னால் வந்த நீ இப்போது என்னைவிட உயர்ந்த நிலையில் இருக்கிறாய்; நான் எட்டு வருடங்களாக இருந்த இடத்திலேயே இருக்கிறேன். இந்த மாதிரி எல்லாம் என்னிடம் பேச வேண்டாம். உங்கள் இருவரில் ஒருவர் அவரிடம் இதுபற்றிச் சொல்லாமல் இருந்தால், ரகசியம் காப்பாற்றப்படும்…”

நான் போட்ட சத்தத்தில் அவர்கள் ஏன் நிற்கிறார்கள்? ஒன்றும் பேசாமல் நழுவினர்.

அவர்கள் வீட்டிற்குத் திரும்பியிருப்பார்கள் என்றுதான் எண்ணினேன். ஆனால் அதிகாரியின் வீட்டிற்கு இரவோ டிரவாய்ச் சென்று என்னைப் பற்றி “வத்தி” வைத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்பது எனக்கு ஒரு வாரத்திற்குப் பிறகுதான் தெரியும்.

எவ்வளவு புத்திசாலித்தனமாகத் தம்மைச் சுற்றிப் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தியிருந்தனர் என்பதை அறிந்து, நான் உண்மையிலேயே அதிர்ந்தேன். இவர்கள் “புரூட்டசுக்கும்” பாடம் சொல்லிக் கொடுப்பார்கள்.

அதிகாரி என்னிடம் இதுபற்றிச் சத்தம் போட்ட போது நான் நடந்ததைச் சொன்னேன். “இதை நீங்கள் முன்பே சொல்லியிருக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் சொல்வதுதான் உண்மை என்று எப்படி நம்புவது? தப்பிக்கும் முயற்சியாகவும் இருக்கலாமே!…”

“இருக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால், அவர்கள் தவறுதலாக நடந்து கொண்டதற்குத் தண்டனையாக நானே வெட்கம் வரும்படிச் பேசிவிட்டேன். பிறகு உங்களிடம் வந்து புகார் செய்வது நியாயமில்லையே? ஒரு தவறுக்கு இரு தண்டனைகளா?”

“நீங்கள் முன்பே இதுபற்றிச் சொல்லாததால், நான் இதுவரை அவர்கள் தரப்பில் கேள்விபட்டதைத்தான் உண்மையென்று நம்பிக் கொண்டிருக்கிறேன். என் முடிவு சரியானது என்பதில் எனக்கு ஐயமில்லை…”

“இருதரப்பினரையும் நேரில் விசாரிக்க உங்களுக்கு உரிமையுண்டு. ஒரு தரப்பினர் சொல்வதை மட்டும் உண்மை என்று எப்படி நம்பலாம்?…”

“என் கடமையை நீங்கள் நினைவுபடுத்த வேண்டியதில்லை, இப்போது நீங்கள் போகலாம்!…”

நான் திரும்பிவிட்டேன். அவரைப் பற்றித் தெரிந்தது தானே, கிடக்கிறார். ஆனால் ஒன்றை மட்டும் திண்ணமாக மனத்தில் பதித்துக்கொண்டேன். “என்ன நெருக்குதல் ஏற்பட்டாலும் சரி , இங்கிருந்து நான் ஓடப்போவதில்லை; அசையாத குன்றுபேரல் நிமிர்ந்து நின்று இவர்களை எல்லாம் சமாளிக்காமல் விடப்போவதில்லை. இவர்களுக்கு நான் பாடம் கற்பிக்க முயலப்போவதில்லை. அவர்களே கற்றுக் கொள்வார்கள். காக்கைக் கூட்டத்திற்குப் பயந்து கிளி கூடு கட்டாமல் இருந்திடுமா என்ன?” இவ்வளவு நடந்தேறிய பின்பும் எனக்குப் பதவி உயர்வு கொடுக்க அவருக்கு எப்படி மனம் வந்தது என்பது கடவுளுக் குத்தான் வெளிச்சம்.

உமா இன்னும் தொலைப்பேசியோடு ஒட்டிக்கொண்டு தானிருந்தாள். ஏறக்குறைய யாரையும் பாக்கிவிடாமல் எல்லாருக்கும் என் பதவி உயர்வைச் சொல்லிவிட வேண்டும் என்ற தீர்மானத்தில் அவள் இருந்தாள்.

வெளியே விளையாடச் சென்றிருந்த என் மகள் அன்பு மலர், அப்பொழுதுதான் வந்தாள். நான் அச்சிறுமியை வாரியணைத்துக் கொண்டு அவளைக் குளிப்பாட்டச் சென் றேன்.ஒரு மாதத்திற்குப் பிறகு சிங்கப்பூர்த் தமிழ் எழுத் தாளர் கழகத்தினர் ஓர் இலக்கிய கருத்தரங்கு ஏற்பாடு செய்திருந்தனர். என் அதிகாரி பேசவிருப்பதாய் நாளிதழ் களில் செய்திகள் வந்திருந்தன. அவர் நன்றாகத் தமிழ்ப் பேசக் கூடியவர். எனக்குச் சொற்பொழிவு கேட்பதென்றால் விருப்பம். இந்நாட்டில் அரிதாகத்தானே இது மாதிரி வாய்ப்புக் கிட்டுகிறது. இயந்திரமயமான வாழ்க்கையில் கூட்டமாவது, சொற்பொழிவாவது? நான் கூட்டத்திற்குச் சென்றிருந்தேன் இவர் “உள்ளும் புறமும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

தமிழ் இலக்கியங்களில் மேற்கோள் காட்டிக் கம்பீர மாகப் பேசினார். கேட்கச் சுவையாக இருந்தது. பிற்பகுதி யில் அவர் பேச்சு பெரிதும் நெகிழ்ச்சி ஊட்டியது.

“என் நண்பர் ஒருவர் ஒரு பொறுப்பான அலுவலகத்து அதிகாரி. உண்மையைப் பொய் என்றும், பொய்யை உண்மை என்றும் வெகுகாலமாக நம்பி ஏமாந்தார், அண் மையில் தான் அவர் உண்மையை உணர்ந்து கொண்டார். பனிக்கட்டிபோல் குளிர்ச்சியாகப் பேசிய சிலரை அவர் நம்பினார். இதமாக முதுகைச் சொறிந்து விடுவதில் வல்லவர் கள் அச்சிலர். அவர்கள் பிறரை பற்றிய குறைகளை இவர் விரும்பும் வண்ணம் சொன்ன வண்ணமிருந்தனர். அவர்கள் சொன்னதைத்தான் இவர் கண்டார் இவரிடம் கூறியது. போல், இவரைப் பற்றி இவரிலும் மூத்த அதிகாரியிடம் சொல்லி வந்திருக்கிறார்கள் என்பது, இப்பொழுதுதான் அவருக்குத் தெரிந்ததாம். இதனால் அவருக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பெரிதாக ஒன்றுமில்லை. அவரைச் சுற்றிக் குழுமியிருந்தவர்கள் எல்லாரும் போலிகளா என்றால் இல்லை. அந்த வால்பிடிக்கும் கூட்டத்தினிடையே, நீதி கோல் பிடிக்கும் ஒருவனும் இருந்தான். இப்பொழுது அவரால் அவனை அடையாளங் காண முடிந்தது…”

எனக்குத் திக்கென்றது. இவர் என்ன பேசுகிறார்? தொடர்பான செய்திகள் போல் இருக்கின்றனவே என்று நான் குலுங்கிப் போனேன். அவர் தொடர்ந்தார்.

“சுயநலம், துரோகம், பதவி மோகம், ஏற்றத்தாழ்வு பாராட்டும் மனப்பான்மை இப்படி புரையோடிப் போன உளுத்துப்போன தன்மைகள் உடைய கூட்டத்திலே அவன் தனித்து நின்றான். அன்றுதான் அவர் ஒரு மனிதனைக் கண்டார். “மனிதன் இருக்கிறான்” என்று ஆறுதல் கொண் டார். நான் இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால்…”

அவர் மேலும் ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து வேறு என்னவெல்லாமோ பேசினார். என் மனம் அதில் ஈடுபட வில்லை. எனக்குக் குழப்பாமாக இருந்தது. அப்படியே சிந்தனை யிலாழ்ந்துவிட்டேன்.

“கதிரவன்!….” குரல் கேட்டு நிமிர்ந்தேன். அவர்தான் அருகில் நின்று கொண்டிருந்தார். மண்டபம் காலியாக இருந்தது. நான் ஓர் அசட்டுச் சிரிப்பு சிந்தினேன்

“சரி வாருங்கள்…” என்று அவர் முன்னே சென்றார். நான பின்தொடர்ந்தேன். மண்டபத்தை விட்டு வெளி யேறும் வரை இருவரும் பேசவில்லை. சாலையை அடைந்ததும் அவர்தான் பேசினார்.

“கதிரவன், நான் என் நண்பர் என்று மேடையில் சொன்னேனே, அது வெறும் கற்பனை. உண்மையில் அந்த நபர் நான்தான்.” அவர் எந்த பாதிப்பும் இல்லாமல் வெகு இயல்பாகச் சொன்னார். எனக்கு என்னவோ போலாகி விட்டது.

“நீங்கள் உண்மையில் “ஜென்டில்மேன்”…. நல்லா இருங்க…” என்று கூறி விடைபெற்றார். நான் வணக்கம் கூறினேன்.

இல்லம் திரும்பும் போது என் இதயம் கனத்திருந்தது இன்பத்தால் என் இதயம் நிறைந்திருந்தது. இப்பொழுது, பதவி உயர்வு வந்த விதம் தெளிவாகப் புரிந்தது. “வெற்றி….றி…றி!…” என்று வாய்விட்டுக் கத்த வேண்டும் போல் இருந்தது.

இப்படிப்பட்ட ஒரு வெற்றிக்காக எப்படிப்பட்ட சோதனைகளாக இருந்தாலும் தாங்கிக் கொள்ள நான் தயார்.

-1982, புதிய அலைகள், முதற் பதிப்பு: மார்ச் 1984, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *