மனம் வாக்குக் காயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2022
பார்வையிட்டோர்: 2,414 
 

(205 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாடசாலை வீதியும், பாசிக்குடா வீதியில் உள்ள அந்த பிள்ளையார் கோவிலின் மேற்குப் புற வீதியும் சந்திக்கும் இடத்தில் கிடந்த குப்பை கூடலங்களை பாடசாலை மாணவர்கள் சிரமதானம் மூலம் அகற்ற முற்பட்டபோது அக் குப்பைக் குவியலில் இருந்து ஒரு சிறிய உருவம் தலையை உயர்த்திப் பார்க்க முயற்சித்தது. மிகமௌனமாக இறந்தது கொண்டிருந்த ஒரு நாய்க்குட்டியே அந்த சிறிய உருவம். அதன் வயிறு ஊதி இருந்தது. ஒரிரு ஈக்கள் அதைச் சுற்றி வட்டமிட்டன.

மாணவர்கள் கூட்டத்தில் அதிகமாக பெண்மாணவர்கள் நின்றமையால் அந்தநாய் குட்டியை மெதுவாக அப்புறுப்படுத்தி விட்டு குப்பைகளை அள்ளி எடுத்தனர்.

சற்று வேளைக்கெல்லாம் அந்த நாய்க்குட்டி கோயிலின் மேற்குப்புற மதில் சுவரில் தன்னைச் சாத்திக்கொள்வதும். காலடி எடுத்து வைப்பதும் விழுந்து எழுவதும் என நடைபயில முயன்று தவறும் குழந்தைபோன்று வடக்கு நோக்கி நகர முயற்சித்தது. அதனது வேகம் கணக்கைப் புலப்படுத்துவதாக இல்லை . இதனைப் புதினம் பார்த்துக்கொண்டிருந்த மாணவர்களும் சென்றுவிட்டனர்.

இறக்கும் பெரியவர்கள் மூச்சு இழுத்தபடியே நாட்கணக்காக அவஸ்த்தைப்படுவது வழக்கம். நீராகாரம் கூட உட் செல்லாத நிலையிலும் கண்விழித்த நிலையில் இழுத்தபடி இருப்பது கூட வழக்கம்.

சில வேளைகளில் பால் பருக்கிவிடுவதும் யார் யாரையெல்லாம் கொண்டு வந்து பால் பருக்கிவிட வேண்டுமோ அவர்களை அழைத்து பால் பருக்கவைப்பதும் உண்டு.

இவாறான சந்தர்ப்பங்களில் அவர்களுடைய மரணம் சடுதியாகவும் ஏற்படலாம். வாரக் கணக்கிலும் செல்லலாம். சிலர் தங்களுக்கு வேண்டியவர்களின் தரிசனம் கிடைக்கும் வரையில் பார்த்திருப்பார்கள். இன்னும் சிலருக்கு மண், பொன், நாணயக்குத்தி ஆகியவற்றை உரைத்துப் பருக்கிவிட உயிர்போகும். சிலருக்கு பிரண்டி, விஸ்க்கி. இன்னும் சிலருக்கு கோரோசனை என ஆளுக்கு ஆள் வேறுபட்ட முறைகள் மரணத்திற்கான ஏற்பாடாக உள்ளன. மனிதக் குழந்தைகள் இவ்வாறாக மரணிக்கும் சந்தர்ப்பம் குறைவு.

எப்படியெனினும் மரணம் திடீரென வருவது இலாபம் என்றே சொல்லவேண்டும். எப்படிச் சொன்னாலும், மரணிப்பதற்கு உயிரினங்களுக்கு அவ்வளவு விருப்பம் இல்லை. தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் கூட நாட்டுத் தலைவர்கனின் மன்னிப்புக்காக ஏங்குவது வழக்கம்.

மாணவர்கள் கிளறிய குப்பை மேட்டில் சில கோழிச் சேவல்களும் கிளறிக்கொண்டிருந்தன. பக்கத்தில் இருக்கிற வீதியோரத்தில் பறந்த ஈசல்களைப் பறந்து பறந்து காகங்கள் பிடிக்கும் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. பக்கத்திலே நின்ற பனைகளில் விழுந்து கிடந்த புழுத்துப்போன பனம் பழங்களை சில பசுக்கள் சுவைத்துக்கொண்டிருந்தன. பனைகளுக்கு இடையில் நின்ற மஞ்சவண்ணா மரத்தில் இருந்த அணில்கள் ஒன்றையொன்று துரத்திக்கொண்டு இருந்தன. ஓரிரு குயில்கள்கூட தூரத்தில் விட்டு விட்டுக் கூவும் ஓசை கேட்கின்றது. கோழிச்சேவல்களின் காலடிகளில் மைனாக்கள் சில பேசிக் கொண்டன.

மழைவிட்டிருந்தது, கல்குடா மெயின் வீதியில் பாசிக்குடா செல்லும் வாகனங்கள் விரைந்துகொண்டிருந்தன. ஒரு சுறுசுறுப்பான சூழல் சூரியனின் வருகையால் ஏற்பட்டிருந்தது. இரு – நாள் கோடை மழை ஓய்ந்ததும் காலை பத்து மணியளவில் அந்த இடம் கலகலப்பாகவே காணப்பட்டதென்று சொல்லக்கூடியதாகவே இருந்தது. அத்தனைக்கும் மத்தியில் அந்த நாய்க்குட்டி நிருதி மூலைக்கு வந்தது. குந்தி இருந்து வாகனங்களைப் புதினம் பார்த்துக்கொண்டிருந்தது. அதே நேரம் பாசிக்குடாப் பக்கமிருந்து கோவில் பக்கமாக மேலாடை இல்லாத ஒரு வறியவர் மெதுவாக வந்து கொண்டிருந்தார்.

மதியம், ஒரு மணி இருக்கும். மூன்று அழகிய பஜரோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக கோயிலின் நிருதி மூலையில் பிறேக் அடித்து நின்றன. பனைகளின் கீழ் படுத்துக்கிடந்த பசுக்கள் எழுந்து நின்றன.

அணில்கள் கீச்சிட்டன. சேவல்கள் கழுத்தை நிமிர்த்தி ஒலி எழுப்பின் காகங்கள் மரத்தில் இருந்து எழுந்து இரைந்து விட்டு புதினம் பார்த்தன.

மஞ்சவண்ணா மரத்தின் கீழ் படுத்திருந்த வயோதிபரின் நெஞ்சுக்கூடு அந்த வாகனங்களின் தொடர்ச்சியான பிறேக் ஒலியில் பல முறை பக்கவாட்டில் கூட அசைந்து மீண்டும் வழமைக்குத் திரும்பினாலும் ஊதுவதும் உப்புவதுமாகவும் ஓசை எழுப்புவதாகவும் இருந்தது. மெதுவாக உடலை இழுத்து மஞ்சவண்ணாவில் முதுகைச் சாத்தி அதன் இருபுறங்களிலும் கைகளை நீட்டி நிலத்தில் ஊன்றியபடி கால்களை எதிர்த்திசையில் நீட்டியபடி வாகனங்களைப் பார்க்கமுயன்றார் அந்த வயோதிபர்.

நடுவிலே நின்ற பஜறோவின் கீழே ஒரு மெல்லிய உருவம் நீண்டு கிடந்தது. அது குப்புற கிடக்கிறதா மல்லாந்து கிடக்கிறதா என அந்த வறியவர்க்கு விளங்கவில்லை.

அந்த வாகனத்தின் கீழ் இருந்து இரு கால்கள் – இளம் கதலி வாழைத்தண்டுகள் போல் பளிச்சென்று முதலில் வெளி வந்தன. மறைப்புக்காக மாத்திரம் சிறு சந்தனக் கலர் காற்சட்டைகள் மிக சிறிதொரு பிறவுண்க்கலர் ரீசேட் உடன்கூடிய உயரமான அந்தப் பெண் கைகளில் அந்த நாய்க்குட்டியை ஏந்தியபடி வெளியில் வந்தாள்.

ஏனைய பஜரோக்களில் இருந்தவர்கள் இறங்கி ஓடிவந்தனர். அந்தப் பெண்ணின் தந்தை அவசரமாக நடு பஜரோவின் பின்புற கதவைத்திறந்து ஒரு பெரிய பாத்திரத்தில் இருந்து கொஞ்சம் பிரியாணியை எடுத்தார்.

அடுத்த பஜரோவில் இருந்தவர்களில் ஒருவர் ஓடிக்கோலன் போத்தலைக்கொண்டு வந்து கைகளில் ஊற்றி மிக மெதுவாக அந்த நாய்க்குட்டியில் முதுகில் தடவினர். நாய்க்குட்டியை வைத்திருந்த நங்கை மெல்லியதாக ஒரு முத்தம் கூட அந்த நாய்க்குட்டிக்கு கொடுத்தாள்.

சேவ்வியற்ரில் அப்பா பிரியாணியைப் பிடிக்க அந்தக் குட்டியின் வாயை பிரியாணியை நோக்கி அந்தப் பெண் கொண்டு சென்றாள். பக்கத்தில் நின்ற சிறு பெண் தனது தந்தையைப் பார்த்து “கௌ நைஸ்” என்று முழங்காலில் கைகளை ஊன்றியபடி புதினம் பார்த்தாள்.

நாய்க்குட்டியையும் உணவையும் பாதுகாப்பாக கோயில் மூலையில் வைத்து விட்டு எல்லோரும் சிறிது நேரம் வரை பார்த்துக்கொண்டிருந்தனர்.

எல்லோரையும் பார்த்து அந்த சிறிய பெண் “கௌ நைய்ஸ், நரோ எஸ்கேப். வீ ஆ லக்கி.”

என்று சொல்லியபடியே குனிந்து நாய்கட்குட்டியின் முதுகில் தட்டியபடியே “ரேக் இற் டா” என்றாள். பக்கத்தில் நின்ற அவர்களில் ஒருவர் “கீ நீட்ஸ் மில்க்” என்றார். நாய்க்குட்டி அங்கிருந்த கோழிக்கறியின் மணத்தை மட்டும் ரசித்தது. பஞ்சடைந்த கண்ணோடு அந்தப் பெண்ணைப் பார்த்து நாக்கை மட்டும் நீட்டி கொட்டாவிவிட்டது. “இற்ஸ் சோ பீயூட்டி, அக்செப்றிங் அஸ்” எனக்கூறியபடி டடியின் கைகளைப் பிடித்தபடி பஜரோவில் ஏறியபடி “பை பை” கூறி நாய்க்குட்டிக்கு பிளையிங் கிஸ் கொடுத்தபடி கதவையடைக்க மூன்று வாகனங்களும் பறந்து சென்றன.

மஞ்சவிண்ணா மரத்தடியில் இருந்த அந்த மெலிந்த வறியவர் பிரியாணியின் மணத்தை ஒரு முறை சுவாசிக்க முயற்சி செய்தார். அதே மணம் முன் வீட்டு நாய்க்கும் எட்டி விட்டது. அது ஒரு திடகாத்திரமான சிங்கம்போல வளர்ந்த நாய் அதனுடைய உறுமலிலும் பாய்ச்சலிலும் மீண்டும் அணில்கள் கீச்சிட்டுக் கொள்ள சேவல்கள் ஒலி எழுப்பின.

பாய்ந்து வந்த அந்த நாய் பிரியாணியைச் சாப்பிட நினைத்துக் குனிந்தவேளை குட்டியின் மணம் அதன் மூக்கில் பட்டிருக்கவேண்டும். திடீரென பஜரோ பிறேக் அடித்து போன்று அந்த நாய் நின்றது, ஒரு முறை தலையை நிமிர்த்தி நோட்டம் விட்டது. இந்தக் காட்சியை காகங்களும் சேவல்களும் அணில்களும் உற்றுப்பார்த்தன.

நாய்க்குட்டி பிரியாணியை நக்கிப்பர்த்தும் விடுவதுமாக இருந்தது. அது சாப்பிடுகின்றது என நினைத்து அந்தப் பெரிய நாய் காவலுக்கு நின்றதோ தெரியாது. அமைதியாக நின்ற அந்த நாய் சில நேரத்தின் பின் அப்படியே வீட்டினுள் அமைதியாகச் சென்றது.

காகங்கள், கோழிகள்கூட அந்த நாய்க்குட்டியின் உணவில் பங்குபோட விரும்பவில்லை. நீண்ட நேரத்தின் பின் கிழக்கு மேற்காக இருந்த கோவில் மதிலில் தன்னைச் சாய்த்தபடி மீண்டும் கிழக்கு நோக்கி அந்த நாய்க்குட்டி நகர்ந்தது. சந்தி மூலையில் கழிப்புக்கு வெட்டிய நீற்றுப் பூசனிபோல் அந்த பிரியாணி அப்படியே இருந்தது.

கோடை மழை என நினைக்கவேண்டாம். கிழக்கில் ஏற்பட்டிருக்கும் தாழமுக்கத்தினால் காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. வானொலி கடலுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் எனவும் எச்சரித்திருந்தது. –

மீண்டும் மழை ஆரம்பித்தது, வீதிகள் வெறிச்சோடின மஞ்சவிண்ணா மரத்தடி மனிதனின் ஓசை ஏதும் இப்போது இல்லை இயற்கையான குளிரூட்டியில் விறைத்துக்கிடந்தார்.

அனாமதேய ரெலிபோன் ஒன்று பொதுவான பூத்தில் இருந்து கிராம சேவகருக்கு செய்தியை கொடுத்தது. தேசத்திற்குரிய மரண அடக்கம் இடம்பெற்று கொடுப்பனவு வௌச்சர்களும் நிரப்பப்பட்டன.

கோயில் கழுவப்பட்டு உள்வீதி வெளிவீதிகள் எல்லாம் மந்திரிக்கப்பட்டு சுக்திகரிக்கப்பட்டன. விசேட பூசையின் பின் ஒரு பெரியவர் தான் பார்த்த அந்த நிருதி மூலைக்கதையினை நிருவாக சபையில் உள்ள இளைய தலைமுறையினரிடம் கூறிக்கொண்டிருந்தார். நல்ல காலம், கோழி எலும்பென்று நினைத்து அந்த பெரிய நாய் குட்டி நாயைக் கடிக்கல்ல” என்று கூறிக்கொண்டிருந்தபோது அங்கு நின்ற அந்த நாயின் சொந்தக்காரர் “அந்த நாய்க்கு கனநாளாக கண்பார்வை குறைந்து விட்டது” எனக்கூற எல்லோரும் கொல்லென்று சிரித்தனர்.

கண்களைவிடவும் நாய்களுக்கு மூக்கே பிரதானம் என இங்கு வாழும் மக்கள் அறிந்துகொள்ள இன்னும் எவ்வளவு காலம் எடுக்குமோ? என நினைத்து சற்று அமைதியாக இருந்த அந்தப் பெரியவர் பின்புறமாக ஒட்டியிருந்த மண்ணைத்தட்டிக்கொண்டு மெதுவாக நடந்து செல்கின்றார்.

– மறுபக்கம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஜனவரி 2005, எழுத்தகம் தமிழ் எழுத்தாளர் பேரவை, மட்டக்களப்பு..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *