மனத்தில் மாசிலா மணியே போற்றி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 17, 2013
பார்வையிட்டோர்: 10,457 
 

ஆளவந்தார் அளவுக்கதிகமான மகிழ்ச்சியில் திளைத்திருந்தார். இருக்காதா? அவரைப் புகழ்ந்து பேசுவதற்கென்று ஒரு பெருங்கூட்டமே அங்கிருந்தது. அய்யா,”அம்மனுக்கு நீங்கள் இந்தமுறை செய்த சிறப்பு முற்காலத்தில் அரசர்கள் கூடச் செய்திருக்கமாட்டார்கள்” என்றார் ஒருவர்.

“பின்னே கண்ணைப்பறிக்கும் ஒட்டியாணம் அம்மனுக்கே புது மெருகல்லவா? வேறு யாருஞ் செய்ய இயலாச் சிறப்பு அய்யா,” என்றார் இன்னொருவர்.

“அம்மன் கோயில் உள்ளவரை அய்யா பேர் இருக்கும்!” என்று ஒருவர்.

கூடியிருந்தவர்கள் புகழப்புகழ உற்சாகத்தில் மிதந்தார் ஆளவந்தார்.

ஆளவந்தார் அந்த சுத்துப்பட்டி கிராமங்கள் அறிந்த ஒரு பெருநிலக்கிழார். மாதம் மும்மாரி பொழியாவிட்டாலும் ஆழ்கிணறுகள் வற்றாது வழங்கும் தன்மை உடைத்ததாய் இருந்ததால் பரந்துவிரிந்த அவரது நஞ்செய், புஞ்செய் நிலங்கள் மகசூலை அள்ளிக்கொட்டுகிறது. குவியும் செல்வம் அவரது நிலப்பரப்பை அதிகரித்துக்கொண்டே போகிறது.

ஊரார் புகழவும், வெளியூர்காரர்கள் மெச்சவும் ஊர் கோவில்கள் திருவிழாவானாலும்
குடமுழுக்கானாலும், எந்த சுபகாரியமானாலும் ஆளவந்தார்தான். ஆளவந்தார் இல்லாமல் எந்தச்

சுபகாரியமும் அரங்கேறாது. இது ஆளவந்தாரின் ஒரு முகம்!

கோவில்களுக்கும், தெய்வங்களுக்கும் பூசை செய்வது ஒரு புறம் இருந்தாலும் எச்சில் கையால்

காக்கையைக்கூட விரட்டமாட்டார் என்பது இவரது இன்னொரு முகம்!

தமது நிலத்தில் வேலை பார்க்கும் தினக்கூலிகளுக்கு உரிய கூலியைக் கொடுப்பதில்லை. தம் பண்ணையில் வேலைபார்க்கும் வேலையாள் குடும்பத்திற்கு ஒரு ஆபத்து சம்பத்து என்றால்கூட உதவ மனம் வராத புண்ணியவாளர். ஒருசமயம், பண்ணையாள் ஓடிவந்து என் மனைவி பிரசவ வேதனையில் துடிக்கிறாங்க சாமி, நகரத்துல இருக்கிற மருத்துவமனைக்கு கொண்டுபோகணும்ன்னு பிரசவம் பாக்குற பொன்னாத்தா சொல்லீட்டாங்க சாமி. நீங்கதான் எப்படியாவது காப்பாத்தணும்ன்னு கேட்டார். அழுதார். புரண்டார். ஆளவந்தார், அசையவே இல்லையே!

“என் மகனை கல்லூரியில படிக்க ஆசைப்படுறாங்க. நீங்க தயவு பண்ணா புண்ணியமா இருக்கும்” ஆளவந்தாரிடம் கணக்கரா இருக்கிற கந்தசாமி கேட்டார்.

“இப்ப உம்மோட மகன் கல்லூரி போய் படிச்சி என்னத்த கிழிக்கப்போறான். பேசாம நம்ம குவாரியில கல்லொடைக்கப்போனா உமக்கு நாலுகாசாவது கெடைக்கும்,” என்றாரே பார்க்கலாம்.

ஆளவந்தார் ஒரு பக்கம் பூசை, கோவில் உற்சவம், அன்னதானம் என்று வெளிப்பகட்டுக்குச் செய்து தம்மை அடையாளப்படுத்திக்கொண்டாலும் எப்போதும் நாலுபேர் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் உற்சாகம் இழந்தவராகவே இருந்தார். அதற்குக் காரணம், அந்த ஊரில் உள்ள மணி என்ற மாசிலாமணி!

மணி அதே ஊரில் நிலம், நீச்சுன்னு வசதியா உள்ளவர். விளம்பரத்துக்காகவோ, பகட்டுக்காகவோ எதையும் செய்யமாட்டார். இல்லை என்று வரும் எவருக்கும் இல்லை என்று சொல்லாமல் கொடுப்பது வழக்கம். வலது கையில் கொடுப்பது இடது கைக்குக்கூடத் தெரியாது என்பதுபோல கொடுப்பவர்.

தன் நிலத்தில் கூலி வேலை செய்பவர்கள் குடும்பத்தை தன் குடும்பம்போல் பாவித்து தேவையான உதவிகளை அவர்கள் தேவை அறிந்து செய்யும் உத்தமர்! இதனால் ஊர் மக்கள் ஆளவந்தாருக்குச் செய்யும் மரியாதையைவிட அதிகப்படியான மரியாதையைக் கொடுத்தனர். கோவில் விசேசம், தேர், திருவிழாக்களுக்கு பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்து படைபரிவாரங்களோடு வரும் தனக்குத் தரும் அதே மரியாதையைத் தனியாளாக வரும் மாசிலாமணிக்கும், செய்வது கொஞ்சமும் பிடிக்கவில்லை. இது ஆளவந்தாருக்கு உள்ளுக்குள் பொறாமையை ஏற்படுத்தியிருந்தது. இதை ஆளவந்தார் வெளிப்படையாகக் காட்டிக்கொள்வதில்லை. மாசிலாமணியின் மரியாதையைக் குறைக்கும் வகையில் ஒரு சந்தர்ப்பம் வராதா என்று ஆளவந்தார் அவ்வப்போது எண்ணுவது உண்டு.

ஆளவந்தாருக்கு அப்படியொரு சந்தர்ப்பம் வந்தது. தொலைதூரக் கிராமத்திலிருந்து கோவில் ஒன்று கட்டுவதற்கு நிதியுதவி கோரி குழுவாக சிலர் வந்திருந்தனர். இவர்களை மாசிலாமணியிடம் அனுப்பி அவர்கள் மூலமாகத் தாம் நினைப்பதைச் சாதித்துக்கொள்ள விரும்பினார். வந்தவர்களை நல்ல முறையில் உபசரித்து பின்னர் சொன்னார்.

“நீங்கள் நண்பர் மாசிலாமணியிடம் சென்று கோவில் கட்ட நிதி கேளுங்கள். அவர் எவ்வளவு தருகிறாரோ வாங்கிவாருங்கள். அவர் தருவ‌தைவிட ஒருமடங்கு நான் அதிகமாகத் தருகிறேன்” என்றார் ஆளவந்தார்.

வந்தவர்களுக்கோ மிக்க மகிழ்ச்சி. ஒரே கல்லில் இரண்டுமாங்கனியை வீழ்த்திவிட்டதுபோல மகிழ்ந்தனர்.

நிதிகேட்டு இவர்கள் மாசிலாமணி வீட்டுக்குப் போன நேரம் அங்கு நடந்த நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு அவரிடம் ஏதும் கேட்காமலே திரும்பிவிட்டனர்.

ஆளவந்தாரிடம் திரும்பி வந்தவர்கள்,” நாங்கள் போன நேரம் சரியில்லை. அவரைப் பார்க்க முடியவில்லை, நீங்கள் கொடுப்பதைக் கொடுங்கள் என்று சொல்லி சமாளித்துக் கேட்டனர்.

“இன்று எங்கள் வீட்டிலேயே தங்குங்கள். நாளை போய் பாருங்கள். அவசியம் தருவார்,” என்றார் ஆளவந்தார்.
மறுநாளும் இவர்கள் போனார்கள். அப்போதும் அங்கு நடந்ததைப் பார்த்துவிட்டு, கேட்டு …… இல்லை என்று சொல்லுவதை விட கேட்காமாலே செல்லுவது மேல் என்று திரும்ப எத்தனித்தபோது இவர்களைக் கவனித்த ஒருவர் என்ன, ஏது என்று விசாரித்தார். இவர்கள் விசயத்தைச் சொன்னார்கள். அவரோ,”நீங்க அய்யாவைப் பார்த்துக் கேளுங்க. கண்டிப்பா செய்வாருங்க” என்றார்.

“இல்லை நேத்து வந்தோம். வரவுசெலவு கணக்குல இருபது ரூபாய் கொறைஞ்சதுக்கு ஒருத்தருக்கு இன்னைக்கு ஒருநாள் சம்பளம் உனக்கில்லைன்னு சொல்லிக்கிட்டிருந்தார். இன்னைக்கு தேங்காய் விற்றுவரவு வைத்ததில் ஒரு ரூபா கூடுதலா கணக்கு எழுதுனதுக்கு ஒருவாரம் சம்பளம் இல்லைன்னு சொல்லிக்கிட்டிருந்தார்…அதான் என்றார் அதில் ஒருவர்.

அடடே, நீங்க அதை வச்சு அய்யாவை கருமின்னோ, கஞ்சரோன்னு நீங்க நினைக்க வேணாம். அய்யா கணக்கு விசயத்துல கண்டிப்பானவர்தாம். அந்த ஒரு நாள், சம்பளம், ஒருவாரச் சம்பளம் எல்லாம் அவங்க வீட்டுக்கு நேரடியாப் போயிடும். அதெல்லாம் ஒங்களுக்குப் புரியாது. நீங்க அய்யாவைப் போய் பாருங்கன்னார்,” அவர்.

மனசில்லாமலே போய் பார்த்தனர். வந்த விசயத்தைச் சொன்னார்கள். அடடே, அப்படியா தூரம் தொலையில இருந்து வந்திருக்கீங்க. மொதல்ல சாப்பிடுங்க அப்புறம் பேசுவோம்ன்னார், மாசிலாமணி.

வந்தவங்க திருப்தியாச் சாப்பிட்டாங்க; கோவில் கட்ட எவ்வளவு பணம் தேவைன்னு கேட்டார்?
“கோவில் கட்ட பத்துலட்ச ரூபாய் ஆகும். உங்களால முடிஞ்சதைக் கொடுங்க. நாங்க இன்னும் சிலரைப் பார்த்து நன்கொடை வாங்கி கோவில் வேலையை முடிச்சிருவோம்,”என்றனர்.

இருங்க வர்றேன்னு உள்ள போனார். ஒரு சின்னப் பெட்டியைக் கொண்டுவந்து கொடுத்தார். இதுல பத்து இலட்சம் ரூபாய் இருக்கு. போய் கோவில் வேலையை ஆரம்பிங்கன்னார். வந்தவர்களோ வாயடைத்துத் திகைத்துப் போய்விட்டனர்.
மாசிலாமணியே பேசினார்.

“நீங்க ஒரு நல்ல காரியம் செய்யுறீங்க. நல்ல காரியத்துக்கு உதவாத‌ பணம் எங்கிட்ட இருந்து என்ன பயன்? நன்கொடை வசூல் அது இதுன்னு எல்லாம் நேரத்தைச் செலவு பண்ணாம போய் ஆகவேண்டிய காரியத்தைச் செய்யுங்க. முக்கியமா, நான் நன்கொடை கொடுத்த விசயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது,” என்று சொல்லி அனுப்பி வைத்தார். நம்ப இயலா மகிழ்வோடு எல்லோரும் கிளம்பினர்.

ஆளவந்தாரிடம் சென்று நாங்க கெளம்புறோம். நன்கொடை எதுவும் வேண்டாங்க என்று புறப்பட முயன்றபோது,”எனக்குத் தெரியும் அவரு வடிகட்டுன கஞ்சர், பைசா பெயராது. இருந்தாலும் கோவில் காரியத்துக்கு எதாவது செய்வாரோன்னு அனுப்பினேன். உங்களை வெறுங்கையா நான் அனுப்ப மாட்டேன். வந்ததுக்கு ஒரு பத்தாயிரமாவது தர்றேன்..”என்றார்.

அய்யா, அதெல்லாம் வேண்டாங்க. நாங்க கெளம்புறோம். கோயில் கும்பாபிசேகத்துக்கு நீங்க அவசியம் வரணும் என்று சொல்லிப் புறப்பட்டனர்.

புதிய கோவில் கும்பாபிசேகத்துக்கு ஆளவந்தார் படைபரிவாரங்களோடு வந்திருந்தார். கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர். அப்போது வேர்க்க விறுவிறுக்க அங்கே மாசிலாமணி வந்தார். நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாய் அவரை வரவேற்கச் சென்றனர். மாலைமரியாதை பரிவட்டம் கட்ட முனைந்த போது, நமக்கு எதுக்குங்க இதெல்லாம் என்று மாசிலாமணி மறுத்து, அய்யா ஆளவந்தாருக்கு இந்தச் சிறப்பை எல்லாம் செய்யுங்க என்று அவரை நோக்கி கை காட்டினார்.

இதைக் கேட்ட ஆளவந்தாருக்கு உள்ளூர எரிச்சல் என்றாலும், நன்கொடையெல்லாம் எதுவும் குடுக்காம எப்படி இந்த மரியாதையை அவரு ஏத்துப்பாரு என்று தம் அருகிலிருந்தவரிடம் வாய்விட்டுச் சொல்லவும் செய்தார்.

அதைக்கேட்ட அந்த ஊர்க்காரர் சொன்னார். “அய்யா, இந்தக் கோயிலையே கட்டிக்கொடுத்த அந்த மகராசரையா எதுவும் குடுக்காதவர்ன்னு சொல்றீங்க..”என்றார்.

விசயம் தெரிந்தபின், இவ்வளவு நாளும் நல்ல மனிதர் ஒருவரை தவறாக எடைபோட்டதோடு, தம்முடைய ஆரவாரமான பகட்டு நடவடிக்கைகளை எண்ணி வெட்கப்பட்டார். மனதில் தூய எண்ணங்களோடு ஆரவாரமின்றி அடக்கமாய் இருக்கும் மாசிலாமணி மீது பொறாமை கொண்டோமே என்று ஆளவந்தார் வெட்கப்பட்டு தம் செயலுக்கு தலை குனிந்து, “நான் இந்த மாலை மரியாதைக்கு கொஞ்சமும் தகுதியற்றவன் என்று வாங்க மறுத்தார்.

தானே முன்னின்று மாசிலாமணிக்கு மாலை மரியாதை பரிவட்டம் கட்டச் செய்தார்.
இதைப்பார்த்த ஆளவந்தாரின் நண்பர்கள்,”இப்பத்தான் அய்யா மாசுமறுவற்றவரையும்

கண்டுகொண்டார்; தாமும் மாசற்றவராயினார்,” என்றனர்.

அதன் பின் ஆளவந்தாரும் மாசிலாமணியும் நட்புக்கு இலக்கணமான‌ நண்பர்களாயினர்.

இக்கதைக்கு ஆதாரமான குறள்:-

“மனத்துக்கண் மாசு இலன் ஆதல்; அனைத்து அறன்;
ஆகுல நீர பிற” (குறள் 34)

A spotless mind is virtue’s sum
All else is empty noise

பொருள்: மனத்தில் மாசிருந்தால் வெளியில் பேசுவன செய்வன எல்லாம் நடிப்பாகிவிடும். அவைதம்மை அறநெறியாளராகக் காட்டிக்கொள்ள என்று செய்யப்படுவன;அதனால் வெளிப்பாடென்ற ஒரே ஆரவாரத்தன்மை ஒன்றே உடையன, அதனினும் மனத்துக்கண் மாசின்றி இருத்தலே அடிப்படை அறமாகும். அனைத்து அறன் என்றது, மாசு நீக்கமே அதனளவில் முழுமையான அறமாகிவிடும் என்றுணர்த்துகிறது. மாசு இருப்பின், பிற யாவும் அறமாகாமையின், அதனை நீக்குதலே’அனைத்து அறனும்’ ஆகும்.

– அக்டோபர் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *