கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 2, 2021
பார்வையிட்டோர்: 5,248 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சூரியன் சீறிச் சினந்தபடி சிவப்புப் பந்தென எழுந்துவிட்ட ஒரு காலைப் பொழுதில், நான் அந்தப் பிரபல கல்லுாரியின் அதிபர் அறையினுள் (குளிர்ந்த வாடைபோல் – மன்னிக்கவும் – தவறுதான்) நுழைந்தேன். எனக்கும் கொஞ்சம் மதிப்பு இருக்கத் தான் செய்தது. அதிபர் கதிரையைக் காட்டிச் சிரிக்க நானும் பெருமையுடன் அமர்ந்து கொண்டேன்.

“என்ன விஷயம்?”

“இல்லை… ஒரு சின்ன விஷயந்தான் …. மாவிட்டபுரத்திலை இருந்து இடம் பெயர்ந்த ஒரு பிள்ளை ….. சரியான கஷ்டம். நான் ஒரு கவுன்சிலர் எண்டு என்னை நம்பிச்சொன்ன விஷயங்களை உங்களிட்டைச் சொல்லப்பிடாது … எண்டாலும் சொல்கிறான் …..”

“சொல்லுங்கோ !”

தன்னைச் சுற்றி ஒரு வட்டம் வரைந்து கொண்டு எதிலும் ஒட்டாமல் நடப்பது போல் நடந்து வந்து அவள் எனக்கு முன் அமர்ந்தாள். அவளின் கழுத்து வளைவில் மட்டும் தான் இளமை நெடி அடித்தது.

முகத்தைப் பார்த்தேன். தனிமை, துக்கம், அவமானம், ஏக்கம், சோர்வு, வெறுப்பு, விரக்தி . இவற்றில் ஒன்று அல்லது இவற்றில் பலவற்றின் சேர்வை! அந்த முகத்தின் மொழியற்ற செய்தியை என்னால் சரியாக வாசிக்க முடியவில்லை. மூலகங்களில் அடர்த்தி கூடியது எது? ஒஸ்மியமா? பாதரசமா? இரசாயனவியல் எல்லாம் ஒழுகிப்போய் நீண்ட காலம்! ஓ…. மனித மனத்தின் கூறுகள் மிகப் பயங்கரமான அடர்த்தி கொண்டவை!

“தங்கச்சி சொல்லுங்கோ ” வட்ட விழிகள். வரம்பாய் இரு புருவம், கண்ணுக்குள் அம்பு மாதிரித் துளைக்கும் பார்வை. இவை அவளுடையவை!

“என்ரை பிள்ளை எப்பிடி எண்டாலும் படிக்க வேணும். என்னைப் போலை படிக்காமல் இருந்திட்டுப் பிறகு கஷ்டப்படப்பிடாது.”

அவளிடமே ஒரு குழந்தை மனம் நிறைந்து வழிந்தது. அவளுக்கும் ஒரு குழந்தையா?

அதைச் சொல்லும் போதே அழுகை வெடித்துப் பொங்கிச் சரிந்தது. என்னைப் பார்த்த படி இருந்த முகத்தை எதிர்ப் பக்கம் திரும்பி வழிந்த கண்ணீரைத் துடைத்தாள். முள் நிறைந்த வாழ்வுப் பாதையில் முதல் சுவட்டைக் கண்டிருப்பாள்!

ஸ்ரூலில் இருந்த கைலேஞ்சியை எடுத்துக் கொடுத்து அந்த அழுகைக்கு நேரம் கொடுத்த நான், கொஞ்சம் அருகில் சென்று அவளின் தோளைத் தொட்டு எனது ஒத்துணர்வைக் காட்ட முயன்றேன். பிறரின் தொடல்களுக்கு அருகதை அற்ற பிறவி தான் என்பது போல் நான் தொட்ட தோளைச் சற்று இழுத்து …..

“என்ரை சகோதரங்கள் ஒருத்தரும் எனக்குக் கிட்டவும் வாறதில்லை …..” என்றாள். இதயத்தில் வெகு நாளாய் எரிந்த நெருப்புத் தரைமீது வைக்கப்படுகிறதோ?

சிறிது தயங்கினாள். நான் தன்னுடன் வருகிறேனா என்று ‘செக்’ பண்ணவோ!

“உங்கடை பிள்ளையைப் படிப்பிக்க வேணும். ஒருத்தரும் உதவி செய்யாத படியால் அது உங்களுக்குக் கஷ்டமா இருக்கு.”

நான் அவளின் உணர்வுகளையும் மீள எடுத்துக் கூறி அவளுடன் அருகே நடந்து கொண்டிருப்பதை உறுதி செய்தேன்.

எங்களைச் சுற்றி இருந்த பச்சை வண்ணம் பூசப்பட்ட சுவர்களை வெறித்தபடி சிறிது நேரத்தைச் செலவழித்தாள். சுவரில் தொங்கிய அழகான பூக்கள் கொண்ட கலண்டரைத் தாண்டி அறைக்கு வெளியே நின்ற பட்ட மரம் ஒன்றில் அவள் பார்வை நிலைத்தது.

“அந்த மரம் ஒரு விதவை மாதிரி நிக்குது. அதுக்கு மேலை இருக்கிற வெள்ளைக் குருவி அதுக்கு ஆறுதல் சொல்லுது,” என்று சொல்லும் போது அவளின் கண்ணிமை மயிரில் புல்லின் மேல் பனித்துளி போல் நீர்!

“நீங்கள் படிக்கேல்லை எண்டு சொல்றீங்கள். ஆனால் ஒரு கவிஞனைப் போலை நல்ல வடிவாக் கதைக்கிறீங்கள். ஒரு வேளை நான் அந்த வெள்ளைக் குருவி மாதிரி இருப்பான்”

அவளுடைய குறியீட்டை நான் புரிந்து கொண்டதை உணர்த்தினேன்.

மெதுவாகச் சிரித்தாள். விரக்தி கலந்த புன்னகை தான், என்றாலும் அழகாக இருந்தது. அப்போது தான் அவளது உடையைக்கவனித்தேன். மெல்லிய மஞ்சளும் பச்சையும் சேர்ந்த எளிமையான சட்டை என்றாலும் அந்தத் தெரிவில் ஒரு கலைத்துவம் இருந்தது.

“நான் விதவையோ இல்லையோ எண்டு எனக்குத் தெரியாது. அவரும் நானும் விரும்பித்தான் கலியாணம் செய்தனாங்கள். அதுதான் என்ரை சகோதரங்களுக்குக் கோபம்…. தொண்ணூறாம் ஆண்டு சண்டை தொடங்கேக்கை வவுனியாவுக்குப் போனார்….. திரும்பி வரேல்லை. சிலபேர் சொல்லிச்சினம் வவுனியாவிலை அவரைக் கண்டதெண்டு. நானும் செஞ்சிலுவைச் சங்கம் எண்டும் அதெண்டும் இதெண்டும் அலையாத இடம் இல்லை. காலும் ஓய்ஞ்சு போச்சு. நாலு வரியம் முடிஞ்சுது. இனிக் காவல் இருக்கேலாது … சீலை உடுத்தாத்தானே வெள்ளைச் சீலைக்கு மாற வேணும். எனக்குச் சீலை உடுக்க வழியில்லை”

கத்தியால் கீறிய ரத்தக்கட்டி போல் ஒவ்வொரு சொல்லும் வெளிவந்தது.

நான் இன்னும் சற்று அவளை நோக்கிச் சரிந்து எனது நெருக்கத்தை வெளிப்படுத்த முயன்றேன்.

“உங்கடை அவர் இருக்கிறாரோ இல்லையோ எண்டு தெரியாத நிலைதான் உங்களை ஆகவும் வேதனைப்படுத்துது.”

என்னைத் தொடர்ந்து அவள் அந்த நிச்சயமற்ற உணர்வுக்குள் வந்தாள்.

“ஆமி பிடிச்சு எங்கையும் அடைச்சு வைச்சிருக்கிறானோ அல்லது ஆள் இல்லையோ……. அல்லாட்டில் …”

“அல்லாட்டில்?”

“எங்கையும் வேற கலியாணம் செய்து என்னையும் பிள்ளையையும் மறந்துவிட்டாரோ?”

வானத்தை நோக்கி மிகத் தீனமாய் அவலமாய் ஒரு பெருமூச்சு விட்டாள், தொடர்ந்தாள்.

“திரும்பத் திரும்ப இதை யோசிக்க எப்பிடித் தலையிடி வராமல் இருக்கும்? எனக்கு ஒரே தலையிடி. காலமையும் சமைக்கேல்லை . அரை றாத்தல் பாண் வாங்கி நானும் பிள்ளையும் சாப்பிட்டது. எனக்கு இருபத்தேழு வயதாகுது… நான் சாப்பிடாமல் கிடப்பான். அது ஐஞ்சு வயசுப் பாலன் ….. வயித்தைச் சுருட்டிக் கொண்டு கிடவெண்டால் கிடக்குமோ? நீங்கள் சொல்லுங்கோ அம்மா ?”

“சின்னப்பிள்ளை பசி இருக்க மாட்டுது”

எனது பதிலின் பின் நெரிந்த புருவங்களைச் சற்றுத் தளர விட்டாள்.

“பெரியாஸ்பத்திரி டாக்குத்தர் ஐயாட்டைப் போனனான். அவர் மருந்து தரேல்லை. வருத்தம் ஒன்றும் இல்லையாம். மனக் கவலைதானாம். அவர் தான் சொன்னார். உங்களிட்டைப் போகச் சொல்லி.”

“ஓ…..”

நிச்சயமற்ற தன்மை . இழப்பு, கணவரின் இழப்பை இவள் மனம் இன்னும் முற்றாக ஏற்றுக் கொள்ளவில்லை. இழப்பின் துயரத்தை வெல்லும் படிகளுக்கூடாக இவளை மெதுவாக அழைத்துச் செல்ல வேண்டும் என்று நான் மனதில் எழுதிக் கொண்டேன்.

“இந்தப் பிள்ளைக்கு இரண்டு இடியப்பம் அவிச்சுக் குடுப்பம் எண்டு நேற்று அக்கா வீட்டிலை ஒரு விறகுத் துண்டு எடுத்துப் போட்டன் எண்டு அவ என்னவெல்லாம் பேசினா தெரியுமே? நான் அறுதலியாம்…. மூதேசியாம்… நானும் பிள்ளையும் பட்டினி கிடக்க அவைக்குச் சாப்பிடுற சாப்பாடு என்னெண்டு செமிக்கும்? மாவிட்டபுரத்திலை எங்கடை வீட்டிலை இருந்த காவோலை காணும் சமைக்க. ஆமிக்காரன் வந்தான். அம்மாவையும் விட்டிட்டு உடுத்த துணியோடை ஓடி வந்தம்…..”

வார்த்தைகள் காற்றில் தொற்றிக் காற்றையும் பெருமூச்சாக்கின.

“உங்கடை அம்மா, வீடு , வளவு, காணி எல்லாத்தையும் இழந்து வந்திருக்கிற நேரத்திலை அவரும் இல்லாமல் போனதை உங்களாலை தாங்க ஏலாமல் கிடக்கு….”

ஒருவகை நிர்க்கதியான உணர்ச்சியுடன் மீண்டும் அவள் கண்கள் நீரைச் சுரந்தன. இப்போது சற்று நீண்ட நேரமாய் அழுதபடி இருந்தாள். நான் தடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அழுது முடிந்து மீண்டும் அந்த மரத்தை வெறித்துப் பார்த்தபடி யோசனையில் ஆழ்ந்தாள்.

அந்த நாளை அந்த ஏதோ ஒரு நிகழ்வை ஒரு சித்திரத் தொகுதியைப் புரட்டுவது போல மனத்திரையில் காட்சி காட்சியாய்க் கண்டு கொண்டிருக்கிறாளோ?

“நீங்கள் மனதிலை காணுற அந்தக் காட்சியைப் பற்றி எனக்கும் சொல்லுறியளா…. ?”

இமைகளை ஒரு முறை அழுத்தி மூடித் திறந்தாள்.

“அண்டைக்கு விடிய ஐந்தரை இருக்கும். தூரத்தில் பொம்பர் ஒண்டு பதிஞ்சு குண்டு போட்டுது. ஆறு மணிக்குப் படபடவெண்டு சூடு கேட்டுது. பிள்ளைக்கு அப்ப ஒரு வயது. பிள்ளை படுத்திருந்த இடத்துக்குப் பக்கத்திலை ஒரு சன்னம் வந்து விழுந்திது. கோயிலடிக்குப் போன இவர் ஓடி வந்தார். ஆமிக்காரன் கோயிலடிக்கு வந்திட்டான் எண்டார். ‘பிள்ளையைத் தூக்கு’ எண்டார். அவர் சைக்கிளை எடுக்க நான் பிள்ளையோடை சைக்கிளிலை ஏறினேன். அம்மா மாட்டடியிலை சாணகம் அள்ளிக் கொண்டு நிண்டது. ‘அம்மா ஓடிவாணை ‘ எண்டு கத்திக் கொண்டுதான் சைக்கிளில் ஏறினேன். எங்களுக்கு முன்னாலையும் பின்னாலையும் சன்னங்கள் விழுது. எப்படி வந்தனாங்கள் எதாலை வந்தனாங்கள் எண்டு தெரியாது. அம்மா வரவில்லை. வெத்திலைத் தோட்டத்துக்குள்ளே நிக்கிறா எண்டு பின்னாலை வந்த ஆக்கள் சொன்னவை . கொஞ்ச நேரத்திலை அவ்விடத்தில் பொம்பர் அடிச்சுது…”

“அம்மா …..”

“அம்மா இருந்தா இப்பிடி என்னை அழுதுகொண்டு திரியவிடாது”

“அதை எல்லாம் திரும்ப நினைச்சுப் பாக்கேக்கை……. ?”

“நெஞ்சை ஏதோ இறுக்கிற மாதிரிக் கிடக்கு. தலை எல்லாம் விறுவிறுக்குது. அங்கை இருந்த வெத்திலைத் தோட்டம் காணும் எங்கடை சீவியத்துக்கு . கமுகும், தென்னையும், வெத்திலைத் தோட்டமும் சுத்தி இருக்க எவ்வளவு செல்வமாய் இருந்தது எங்கடை வீடு!”

“பிறகு?”

“பிறகு கொஞ்ச நாள் பிள்ளையார் கோயிலடியில்தான் படுத்தனாங்கள். ஒருநாள் இவர் சொன்னார், இனி இப்பிடி இருந்து என்ன செய்யிறது ? வெங்காயம் கட்டிக் கொண்டு வவுனியாவுக்குப் போட்டு வாறன் எண்டு. நானும் பிள்ளைக்குச் சாப்பாடு குடுக்கத்தானே வேணு மெண்டு ஓமெண்டன் . பிள்ளையைக் கவனமாய் பாத்துக்கொள் வாறன் எண்டு சொல்லிட்டுப் போனார். வரேல்லை.”

இலக்கும் பாதையும் இல்லாமல் சுழலுவதே இந்த மனதுக்கு வழக்கமாகிப் போய்விட்ட ஒன்று!

“அவர் இனிமேல் வரமாட்டார் எண்டு நினைக்க எப்பிடி இருக்கு உங்களுக்கு?”

உடைந்து நொருங்கி உருக்குலைந்து போய் இருந்த அவளின் கைகளைப் பற்றிய படி கேட்டேன்.

“எனக்கு அவரிலை சரியான கோபம் வருது…..” சறுக்கென்று வாழை இலை கிழிப்பது போல் பதில் சொன்னாள்.

“என்ன கோபம்?”

“என்னையும் பிள்ளையையும் தனிய விட்டிட்டு ஏன் போவான் எண்டு”

“அவர் ஒருவேளை இந்த உலகத்திலையே இல்லை எண்டால்…….”

“அப்பவும் கோவம் தான்”

“எப்பிடி?”

“ஏன் என்னை இப்பிடி விட்டிட்டு செத்துப் போனாயெண்டு?”

“ஆ…..’

தன் உணர்வுகளைச் சரியாக அடையாளம் கண்டு கொண்ட அவளின் கண்கள் இப்போது சிவப்பு அடைந்தன.

இந்தக் கோபத்தையும் நான் கையாள வேண்டி இருக்கும் என்று சிந்தித்துக் கொண்டேன்.

“உங்களுக்கு அவரிலை சரியான கோபம். ஆனால் இல்லாத ஒருவரிலை கோபப்பட்டு என்ன செய்வீங்கள்?” அவள் பேசுவது போன்ற பொதுவான நடையில் கேட்டேன்.

“ஓ… அப்பிடி நினைக்கேக்கை ஏதோ குற்றம் செய்யிற மாதிரி இருக்கு!”.

இந்தக் குற்றப்பழி உணர்வையும் பார்க்க வேண்டும். மன டயரியில் குறித்துக் கொண்டேன்.

“எனக்குக் கொஞ்சம் தண்ணி தாறீங்களா குடிக்க?” நளான் கொடுத்த ஒரு கப் தேநீரை ஒரே மூச்சில் குடித்து முடித்தாள்.

இழப்பு, கோபம், குற்றப்பழி உணர்வு, நம்பிக்கை இன்மை….. இன்னும், இன்னும் ! மனம் என்பது பெரிய பள்ளத்தாக்கு !

“உங்களுக்கு அவர், வீடு, காணி எல்லாம் ஒரே காலத்திலை இல்லாமல் போனது தாங்க முடியாததாலை அவர் உங்களை விட்டிட்டுப் போனது கோவம். இல்லாத ஒருவரோடை கோபிக்கிறான் எண்டு ஒரு குற்றப்பழி உணர்வு , பிள்ளையை எப்பிடிப் படிப்பிக்கிறது எண்டு ஒரு நிச்சயமில்லாத நிலை….. இதுகளிலை எது உங்களைக் கூடப் பாதிக்குது?”

“ஒம் அம்மா, எல்லாம் சேர்ந்து ஒரே தலையிடி. இந்தப் பிறவியிலை இந்தத் தலையிடி மாறாது, செத்தால் என்ன எண்டிருக்குச் சிலவேளை.”

கனியாத நாவல் பழம் தின்றதுபோல் தொண்டை அடைத்திருந்தது. ஓகோ… தற்கொலை எண்ணம் வேறு இருக்கிறதா? காற்றின் ஒவ்வொரு அசைவிலும் கூடக் காலன் வந்துகொண்டிருக் கிறானா இவளுக்கு?

“அப்பிடி எண்டால் உங்கடை பிள்ளை?”

“அதை நினைச்சுத்தான் இன்னும் சாகாமல் இருக்கிறான். அந்தப் பிள்ளையை ஐயோ நான் என்னெண்டு வளர்க்கப் போறன்? என்னண்டு படிப்பிக்கப் போறான்… அது எங்கை எண்டாலும் நல்ல பள்ளிக் கூடத்திலை படிக்க வேணும்… ஆனால் என்னட்டை இப்ப மிஞ்சியிருக்கிறது கவலையும், வறுமையுந்தான் …. இதுதான் என்னை அதிகம் பாதிக்குது…”

“நீங்கள் சொல்லுறதெல்லாம் எனக்கு விளங்குது. நாங்கள் அடிக்கடி சந்திப்பம், கதைப்பம். இரண்டு பேருமாச் சேர்ந்து மெல்ல மெல்ல உங்கடை பிரச்சினைகளைத் தீர்க்கப் பாப்பம்.”

“அம்மா, உங்களோடை கதைச்சது எனக்கு நல்ல ஆறுதலாக இருக்கு. என்ரை பிள்ளையை ஒரு நல்ல பள்ளிக் கூடத்திலை சேர்க்க உதவி செய்து விடுங்கோ ……”

நான் தலையசைக்க, சோகப் பாசி பூத்த அந்த முகத்தில் புன்னகை அரும்பு கட்டுகிறது.

செப்டெம்பர், ஒக்டோபர், நவம்பர் மாதங்கள். தேதிகள் அலங்கோலமாயின.

இழப்பின் படிகளுக்கூடாக இவளை அழைத்துச் செல்லல், கோப உணர்வை வெளியேற்றல், குற்றப்பழி உணர்வில் இருந்து விடுவித்தல், தானே குடும்பத் தலைவியாக அமர்ந்து பிள்ளையை வழி நடத்தலாம் என்று உணரச் செய்தல், இறுதியாகப் பிள்ளை ஒரு நல்ல பாடசாலையில் சேர உதவுதல், எனக்குள் பல காட்சிகள் படமாய் விரிந்தன.

வரண்ட காற்று மண் புழுதியையும் சருகுகளையும் வாரி இறைத்த படி சுழன்று வந்து கொண்டிருந்தது.

“உங்கடை பள்ளிக் கூடத்திலை இந்தப் பிள்ளையைச் சேத்தால் உதவியா இருக்கும். அவ எப்பிடியும் கஷ்டப்பட்டுப் படிப்பிச்சிடுவா.”

நான் நிமிர்ந்தேன்.

“ஓ…. அதுக்கென்ன? உங்களுக்குச் செய்யாத உதவியா?” எனக்குக் கொலர்’ இல்லை. இருந்திருந்தால் உயர்த்தியிருப்பேன்.

ஆனால் எனக்கு எவ்வளவு மதிப்பு ! மதிப்பையும் மரியாதையையும் கட்டாயப்படுத்தினால் அவை, அவை அல்ல!

“சேர்க்கலாம். இப்படியான பிள்ளைகளைச் சேர்க்கத்தானே வேணும்”

“ஓ….” எனது முகம் ரோஜாப் போல விரிந்தது…. ” அதுவும் எங்கடை அயல் கிராமம் மாவிட்டபுரம் …. கட்டாயம் செய்ய வேணும்…..”

“ஆ…” எனக்குள் ஐஸ்கட்டிகள் பல இறங்கி …..

“ஆனால் !”

“ஆனால்?”

“ஒரு ஐயாயிரம் ரூபா தந்தியளெண்டால் எங்கடை பாடசாலை அபிவிருத்திச் சபைக்கு உதவியாக இருக்கும். நான் மற்றவை சிலரிட்டைக் கூடவும் வாங்கி இருக்கிறான். நீங்கள் ஒரு ஐஞ்சு தாங்கோவன் …”

‘களாம் புளாம்” எண்டு எனக்குள் ஒரே வெப்பியாரம்.

“சிதறுவான்!”

நெஞ்சுக் கூட்டில் கொதிநீர் கொட்டுகிறது. மனத் தடாகத்தில் பெரும் புயல் வீசுகின்றது, கண்ணீர்ப் பிசின் இதய அறைகளை இறக்குகிறது.

ஒரு ‘கவுன்சிலர்’ செய்யத் தேவையில்லாத வேலைக்குப் போனதற்கு எனக்கு நல்ல தண்டனை!

மனிதர்கள் எவ்வளவு அழகாக மனிதர்களைப் புரிந்து கொள்கிறார்கள் தெரியுமா?

மனதையே கழுவி வெளியே தள்ளி விடுவதிலும் இந்த மனிதர்கள் மகா சமத்தர்கள் தெரியுமா?

ஆனாலும் நாங்கள் முயன்று கொண்டே இருப்………..

– மல்லிகை 249 – தை 95, மல்லிகைச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூன் 2002, மல்லிகை பந்தல் வெளியீடு, கொழும்பு.

– வாழ்வு வலைப்பந்தாட்டம் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: ஜூலை 1997, கலை இலக்கியக்களம், தெல்லிப்பழை

– வரிக்குயில்(சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: நவம்பர் 2016, கலை இலக்கியக்களம், தெல்லிப்பழை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *