கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 10, 2020
பார்வையிட்டோர்: 4,721 
 

காலை ஒன்பது மணிக்கே அந்ததெரு அமைதி ஆகிவிட்டது. அநேகமாக வீட்டில் உள்ள ஆண்கள் வேலைக்கு சென்றுவிட்டிருப்பார்கள்.பாதி வீட்டில் பெண்கள் கூட

வேலைக்கு கிளம்பி சென்றிருப்பார்கள். இனி வீட்டில் இருப்பது வயசானவர்களும், சிறு சிறு குழந்தைகள் மட்டுமே.

சுமார் நூறு அடிதூரம் இருக்கும் இந்த தெரு அடுத்து ஒரு வண்டிப்பாதை செல்லும். அடுத்த தெரு அதற்கப்புறம் தொடங்கிவிடும். இந்த நூறு அடிதூரம் இருந்த தெருவில் கம்பீரமாய் தலையை உயர்த்தி படுத்துக் கொண்டிருக்கும் நாய் இந்த தெருவுக்கு காவல் நான்தான் என்ற எண்ணத்தில் இருந்தது. உண்மைதான் தெருவில் உள்ள எல்லோரும் வேலைக்கு சென்றுவிட்டால் அடுத்து வெளியில் காணப்படும் ஜீவன் இந்த நாய் மட்டுமே .மற்றபடி அந்த தெரு அப்படியே நிசப்தமாகிவிடும். வியாபாரிகள் கூட அந்த தெரு வழியாக வருவதற்கு யோசிப்பார்கள். யாராவது வெளியில் வந்தால்தானே வியாபாரம் ஆகும். அப்படி புதிதாக யாராவது வந்தாலும் இந்த நாய் வந்தவர்களை நோட்டமிடும். அதன் கண்களுக்கு சந்தேகம் தோன்றிவிட்டால் அவ்வளவுதான் உயிரேபோவது போல குரைத்து, அவர்களை நடுங்க வைத்து விடும் .உண்மையில் இது பயந்துதான் குரைக்கிறது என்பது பாதிக்கப் பட்டவர்களுக்கு புரியாததால் இதனுடைய இராஜாங்கம் கொடிகட்டி பறக்கிறது.

அந்ததெருவில்உள்ளஒருசிலர்,தானும், தன் மனைவியும் போய்விட்டால் இந்த நாய்தான் காவல் காக்கிறது என்பது தெரிந்து கொண்டு வேலைக்காரர்களிடம் இந்த நாயிற்கும் மிச்சம் மீதியை போட்டு விடும்படி கூறிச் செல்வர். இதனால் அந்த தெருவில் உள்ள் இருபது வீடுகளில் ஏதாவது ஒருவீட்டில் உணவு கிடைத்துவிடுகிறது.

இந்த சுகத்தினால் இரண்டு வருடத்திற்கு முன்னால் குட்டியாய் தப்பி தவறி இந்த தெருவுக்கு வந்த நாய் இப்பொழுது இவர்கள் கொடுத்த உணவினால் ஓரளவு வாட்டசாட்டமாக வளர்ந்து அங்கேயே தன்னுடைய வாசஸ்தலத்தை அமைத்துக் கொண்டது.

இருந்தாலும், மனதுக்குள் ஒரு பயம் எப்பொழுதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. தன்னை போல் வேறு ஏதாவது நாய் இந்த தெருவுக்குள் வந்துவிட்டால், இந்தசுகத்தை கண்டுவிட்டு அதுவும் இருந்து விட்டால் தன்பாடு மிகவும் கஷ்டமாகிவிடும் என்று உஷாராகவே இருந்தது. ஏதாவது ஒருநாய் இந்த பக்கம் தெரிந்து விட்டால் அவ்வளவுதான் கத்தி குரைத்து, ஊளையிட்டு அதனை விரட்டி விட்டுத்தான் அடுத்த வேலை பார்க்கும்.

நடு தெருவில் அப்படியே சுகமாய் கண்களை மூடி படுத்திருந்த நாய் திடீரென்று பேச்சு சத்தம் கேட்க மூடியிருந்த கண்களை திறந்து பார்த்த்து. கணவன் மனைவியாக இருக்க வேண்டும், கையில் ஆளுக்கு ஒரு பையை வைத்திருந்தார்கள். ஒவ்வொரு வீடாய் பார்த்து பார்த்து அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு வந்தார்கள்.

தான் இருப்பதை காட்ட மெல்ல உறுமி அவர்களை பார்த்தது. ஆடவனுடன் வந்த பெண் இதன் உறுமலை கேட்டு சற்று பயந்தவள் போல் பார்த்தாள். நாய் மெல்ல எழுந்து வந்தவர்களை விசாரிப்பது போல் நின்றது.

அடசே சும்மாயிரு, எங்கே போனாலும்இந்தநாய் தொல்லைக வேற, அந்த ஆடவன் சலித்துக் கொண்டே அதனை சட்டை செய்யாமல் தாண்டி சென்றான். அந்த பெண்ணும் இப்பொழுது தைரியம் வந்தவள் போல் அதனை தாண்டினாள்.

நாயிற்கு சட்டென திகைப்பாக இருந்தது, அவர்கள் தன்னை கண்டு பயப்படவில்லை, மற்றொன்று அவன் அதனை ஏதோ சொல்லி திட்டிவிட்டு போகிறான். அடுத்து என்ன செய்ய என்று ஒருகணம் நினைத்தது.

சரி போய் தொலையட்டும் என்று மீண்டும் தனது இடத்திலேயே சுருண்டு படுத்துக் கொண்டது. இருந்தாலும் அவர்கள் நடந்து சென்று கொண்டிருப்பதை கண்களை சுருக்கி பார்த்துக் கொண்டிருந்தது. அவர்கள் எந்த வீட்டையோ தேடிக் கொண்டே தெருவை தாண்டி ,வண்டிப் பாதையையும் தாண்டி அடுத்த தெருவுக்குள் போனபின்தான் கவனத்தை திருப்பியது. இந்த தெருவுக்குள் என்னை தாண்டி வந்து விடுவார்களா? என்ற சிந்தனைகூட அதற்கு வந்திருக்கலாம்.

மாலை அந்த தெருவுக்குள் நடமாட்டம் களை கட்ட ஆரம்பித்துவிட்ட்து. பள்ளியில் இருந்து குழந்தைகள் வரவும், அதன்பின் அலுவலகம் முடிந்து ஆட்கள் அவரவர் வீடுகளுக்கு வரவும் பரபரப்பாய் இருந்தது. இனி இந்ததெரு இரவு ஒன்பது வரை கலகலப்பாய் இருக்கும். அதன்பின் ஒவ்வொரு வீடாய் சாத்தப்பட்டு, அவர்கள் சாபிட்டது போக மிச்சம் மீதி இந்த நாய்க்கு அளிக்கப்படும்.

பத்து மணிக்கு மேல் மீண்டும் இந்த நாய் தனிக்காட்டு ராஜாவாக அந்த தெருவே இதன் மேற்பார்வைக்கு வந்துவிட்டதாக எண்ணிக் கொண்டு அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்கும்.

ஒருநாள் “வள்”வள்” என்றசத்தம் இந்த நாயை திகைப்புற செய்தது.எப்படி? என்னை தாண்டி இதுவரை ஒரு ஜீவன் வந்ததில்லை. இப்பொழுது எப்படி இந்த சத்தம் வருகிறது. விடக்கூடாது, மூக்கை தேய்த்தபடி ஒவ்வொரு வீடாக தேட ஆரம்பித்தது. எங்கிருந்து சத்தம் வருகிறது? கண்டு பிடிக்க முடியவில்லை .ஆனால் சத்தம் மட்டும் விடாமல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த தெரு முழுவதையும் நான்கைந்து முறை போய் வந்து விட்டது.சத்தம் போடும் இதன் இனத்தை மட்டும் காணவில்லை. ஏதோ நினைத்து தலையை தூக்கி பார்க்கையில் அந்த தெருவில் இருந்த ஒரே ஒரு மாடி வீட்டின் ஜன்னலில் ஒரு நாய்க்குட்டி கீழே சுற்றி திரியும் இதனை பார்த்து “வள்”வள் என்று கத்திக் கொண்டிருந்தது.

அவ்வளவுதான் ஆக்ரோசமாய் இதுவும் மேலே பார்த்து குரைக்க ஆரம்பித்தது. இந்த குரைப்பில் ஆத்திரம் தான் அதிகமாக இருந்தது. “போச்சு” இந்த தெருவில் தனிக் காட்டு ராஜாவாக இருந்த நமக்கு புதிதாக ஒரு வில்லன் முளைத்து விட்டான் என்ற கோபமே அதில் தெரிந்தது.

இரண்டு மூன்றுநாட்களாகவேநாயின்நிம்மதிகுறைந்துவிட்டது. காரணம் இல்லாமல் அந்த மாடி வீட்டு ஜன்னலை பார்த்து குரைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வீட்டில் உள்ளவரகள் மிச்சம் மீதி இருந்தால் கூப்பிட்டு அதற்கு போடுவார்கள். இரண்டு மூன்று நாட்களாக இதனை கண்டு கொள்வதில்லை. அந்த வீட்டு பக்கமாக ஏதோ வேலை இருப்பது போல வீட்டு காம்பவுண்டருகே வரும். அதனை கண்டவுடன் மாடி வீட்டு ஜன்னலில் இருந்து “வள்”வள் என்று அந்த நாய் குரைக்க ஆரம்பித்து விடும்.இதுவும் பதிலுக்கு குரைத்து பார்க்கும்,

இருந்தாலும் தலையை உயர்த்தி குரைப்பது மிகவும் கடினமாக இருந்ததால், ஊளையிட்டு தன்னுடைய புலம்பலை காட்டி கொள்ளும்.

இந்த ஊளையிடுதல் சிலருக்கு எரிச்சலாக ,கல்லைக் கொண்டு இதனை விரட்ட ஆரம்பித்து விட்டனர்.நாய்க்கு உள்ளூரபயம் வந்துவிட்டது. இந்த தெரு வாசிகள் தன்னை வெறுக்க ஆரம்பித்து விட்டார்களா?

இந்த கவலையினாலேயே உடல் மெலிய ஆரம்பித்தது.தெருவாசிகள் வழக்கம் போல

இருந்தாலும், நாய்க்கு ஒரே கவலை வந்துவிட்டதால் தன்னுடைய சாம்ராஜ்யம் சரிந்து விட்டதாகவே நடந்து கொண்டது. முன்னெல்லாம் யாராவது வீட்டில் சாப்பாடு வைத்து விட்டு கூப்பிட்டால் கம்பீரமாக மெல்ல நடந்தே அந்த சாப்பாட்டைதொடும். ஆனால் இப்பொழுதெல்லாம் கூப்பிட்டால் போதும், எங்கே அந்த மாடி வீட்டுநாய் வந்து சாப்பிட்டு விடுமோ என்ற கவலையினாலேயே விழுந்தடித்து வந்தது. இது ஓடிவந்து பரக்க பரக்க சாப்பிடுவது சிலருக்கு பிடிக்காமல் அதன் மீது கோப்படவும் செய்தனர்.

இரண்டு மூன்று நாட்களாக “வள்”வள் சத்தம் கேட்கவில்லை. இந்த நாய்க்கு சந்தேகம் வந்து விட்டது. என்ன ஆயிற்று தன்னுடைய நிம்மதியை கெடுத்தவனுக்கு.? ஆவல் ததும்ப தெருவில் அந்த பக்கம் இந்த பக்கம் நடந்து அவ்வப்பொழுது மேலிருந்து ஏதாவது சத்தம் வருகிறதா என்று தலையை துக்கி தூக்கி பார்த்தது ஹூஹூம், சத்தமேஇல்லை.

அதை விட ஆச்சர்யம் இந்த ஒரு வாரமாய் இந்த நாயை கூப்பிட்டு சாதம் போடாமல் இருந்த அந்த மாடி வீட்டுக்கார்ரகள் திடீரென இதை அழைக்கவும், இதற்கு முதலில் நம்பிக்கை இல்லாமல் தான் பார்த்த்து. அவர்கள் கையில் நிறைய பிஸ்கட்டுகளை வைத்துக் கொண்டு தன்னை கூப்பிடுவதை கண்டாலும், நம்பிக்கை இல்லாமல் மெதுவாக அவர்களை நோக்கி சென்றது.

இந்தா என்று கையில் இருந்த பிஸ்கட்டுகளை அதற்குகொடுக்கவும், மெல்ல முகர்ந்து ஒவ்வொன்றாய் சாப்பிட ஆரம்பித்தது.

பக்கத்து வீட்டு அம்மாள் கேட்டாள் என்ன ஏகப்பட்ட பிஸ்கட்டை நாய்க்கு போட்டுகிட்டு இருக்கறீங்க?

நாய்க் குட்டி ஒண்ணு வாங்கிட்டு வந்திருந்தோம், அதுக்குவாங்கினது. வீட்டுக்கு வந்த பொண்ணு நாய்குட்டி எனக்கு வேணுமின்னு எடுத்துட்டு போயிட்டா. அந்தம்மா பெருமையாய் சொன்னார்களோ, வருத்தமாய் சொன்னார்களோ, நாய்க்கு ஒன்று மட்டும் புரிந்தது. இவர்கள் தன்னை கூப்பிட்டு சாப்பாடு போடுவதால் இந்த தெருவுக்கு நாமதான் இன்னும் ராஜாவாக இருக்கிறோம். எனக்கு போட்டி யாருமில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *