பொதுப் புத்தி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 7,124 
 

பெய்யாமல் படுத்தும் மழை அவ்வப்போது பெய்தும் படுத்துவது சென்னை வாங்கி வந்த வரம். புழுக்கமும் புழுதியும் அப்பியிருக்கும் வீதிகள்,சென்னையின் அடையாளக் குறிப்புகள். அப்படியொரு வீதியின் ஓரம் அமைந்திருந்தது அந்த டீக்கடை. அய்யப்பன் டீக்கடை, ராமராசு டீக்கடை என்று டீ போடுபவரின் பெயரால் அழைக்கப்படும் டீக்கடைகள் எல்லாம் நம் ஊர்ப்பக்கங்களில் மட்டுமே சாத்தியம். அடுத்த வீட்டுக்காரன் பெயரே தெரியாத இந்த ஊரில் டீ போடுபவரின் பெயரைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் தவறு எதிர்பார்த்தவனுடையதே.

ஆனால் சீனுவிற்குத் தெரியும். அங்கு டீ போடுபவரின் மகன் எந்தப் பள்ளியில் படிக்கிறான் என்பதிலிருந்து பக்கத்துப் பெட்டிக் கடைக்காரருக்கு எத்தனை பெண்டாட்டி என்பது வரை எல்லாம் சீனுவிற்குத் தெரியும். சீனு,சோழிங்கநல்லூரில் இருக்கும் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு கடைநிலை ஊழியன். மென்பொருள் கட்டுமிடத்தில் சேரும் குப்பைகளைக் கூட்டுவதும், தூசுகளைக் களைவதுமே இவன் வேலை.ஆனால் அந்த மென்பொருள் கட்டிடத்தின் வன்பக்கங்கள் அனைத்தையும் இவன் அறிவான். பகல், இரவு என்று வாரரா வாரம் ஷிப்ட் மாறும்.

சில்வர் ஸ்க்ரீரன் கனவுடன் பஸ் ஏறியவன் பாவம், சிலிக்கான் குப்பைகளில் சிக்கிக் கொண்டான். ஆனால் குளுகுளு அறைகளில் வேலை என்ற ஒன்றே அவனது ஆற்றாமையை மட்டுப்படுத்தப் போதுமாய் இருந்தது. ஆனாலும் அங்கு அவனுக்குப் பிடிக்காத ஒரு விஷயம் என்னவெனில் யாரிடமும் அவனால் நன்றாகப் பேச முடியாது. குப்பை கூட்டும்போது கூட சத்தம் கேட்கக் கூடாது அங்கு. எப்போதும் சில கண்கள் அவனை நோட்டமிட்டவாறு இருக்கும்.

வேலைக்குச் செல்லும்போது அந்த டீக்கடையில் வந்து ஆற அமர ஒரு அரை மணி நேரமாவது பேசினால்தான் அவனுக்கு அன்றைய வேலையே ஓடும்.அன்றைக்கும் அப்படித்தான் டீ குடித்துக் கொண்டே ‘ரஜினி சுரேஷி’டம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தான். ஆம், டீ போடும் சுரேஷ் ரஜினி பக்தன்.அவனது வலது கையில் வரைந்திருக்கும் பெயரை டீ வாங்கும்போது கொஞ்சம் உற்றுப் பார்த்திருந்தாலே அது தெரிந்திருக்கும்.

” என்னா சுரேசு.. உங்க தலைவர் படம் என்னப்பா ஆச்சு ? எடுப்பாங்களா மாட்டாங்களா ? ”

” ஏண்டா இன்னைக்குத் தலைவர் தலைல கை வைக்கிற. நாங்கெல்லாம் முன் வைச்ச கால பின் வச்சதேயில்ல தெரியுமுல்ல.. ”

” இல்லப்பா.. உடம்பு சரியில்லயே.. சரியாடிடுச்சோ இல்லையோன்னு கேட்டேன். ”

” டேய்.. அவரு சிங்கம்டா.. ”

சட்டென்று அருகில் பெட்டிக்கடை தாண்டி சலசலப்பும், சத்தமும் வர இருவர் கவனமும் அங்கு சென்றது. கொஞ்சம் கொஞ்சமாய் அங்கு கூட்டம் கூடத் தொடங்கியது.

சீனுவும் மீதியிருந்த டீயை ஒரே மடக்காக வாயில் ஊற்றிவிட்டு கூட்டத்தை நோக்கி விரைந்தான்.

அங்கே ஒரு யமகா பைக் கீழே சாய்ந்து கிடந்தது. ஒருவனைப் பிடித்து இருவர் அடித்துக் கொண்டிருந்தார்கள். அடிவாங்குபவனைப் பார்த்தால்,சீனுவின் கம்பெனிக்கு எதிரே உள்ள ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்பவன் என்பதை அவன் அணிந்திருந்த அடையாள அட்டையை வைத்தே கண்டு கொண்டான்.

அவனின் சட்டைக் காலரை அழுத்திப் பிடித்தவாறு, ” இவனுகளுக்கெல்லாம் இதே வேலையாப் போச்சு. டெய்லி எவனாவது இப்படி வந்துடாறானுங்க”என்று சீறிக் கொண்டிருந்தார் ஒரு பொதுநலச்சக்கரவர்த்தி.

அடிவாங்கிக் கொண்டிருந்தவனோ மழையில் நனைந்த கோழி போல வெலவெலத்து நடுங்கிக் கொண்டிருந்தான். முகமும் உடலும் வியர்வையில் நனைந்திருந்தன.

” என்னாவாம் சார் ? ” – பொதுவாய்க் கேட்டான் சீனு.

” வேகமாக வந்து ஒரு பெரியவர இடிச்சுட்டான்பா..இவனுங்களுக்கெல்லாம் கண்ணு முகத்தில இருக்கா, இல்ல பொடதில இருக்கானே தெரியல ” என்று அவனும் பொதுவாய்த் திட்டினான்.

” ஆமாமா.. எப்பப் பார்த்தாலும் காதுல இரண்டு வயரைச் சொருகிட்டே அலைவானுங்க.. முண்டங்க.. மனுசுன் என்ன பேசுறான்.. ரோட்டுல யார் நடக்குறாங்க.. பின்னாடி யாரு ஹாரன் அடிக்கிறாங்கனு ஒரு எழவும் தெரியறதில்ல. ”

” ஆமா சார்.. இன்னும் செவுட்டுல இரண்டு இழுப்பு இழுங்க சார்.. அப்பதான் இவனுகளுகெல்லாம் புத்திவரும்.. குருட்டுக் கபோதிங்க ” -கூட்டத்திலிருந்து ஒரு குரல்.

” இருபது வயசுலேயே கை நிறைய சம்பாதிக்கிறாங்க.. கலர் கலரா சுத்துறாங்க.. பொறுப்பே கிடையாது. மனுஷன் மேல மருவாதியே கிடையாது. “- இது சீனு.

” நல்லா நாலு சாத்து சாத்தினாதான் இவியங்களுக்கெல்லாம் புத்தி வரும்.இவனப் பார்த்தாவது நாலு பேரு திருந்துவாய்ங்க. அன்னைக்குக் கூட இப்படித்தான் ரோட்டுல தான் பாட்டுக்கு சூசான்னு போய்க்கிட்டு இருந்த ஒரு கிழவி மேல ஒருத்தன் வண்டிய விட்டுட்டான். இவனுக்களுக்கெல்லாம் காச வாங்கிட்டு லைசன்சு கொடுக்கிறான் பார் அவன அடிக்கணும் முதல்ல “என்று ஷங்கர் படத்து சைடு ஆக்டர் போல ஒரு குரல் சீனுவின் பின்னாலிருந்து வந்தது.

அங்கு சாலைப் பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீஸ் ஒருவர் வர, அவனை அடித்துக் கொண்டிருந்தவர்கள் பின்வாங்கி வழிவிட்டனர்.கூட்டத்திலிருந்து இரண்டு மூன்று பேர் விலகி நடக்கத் தொடங்கினர்.

” யோவ் என்னய்யா ஆச்சு.. ஏன்யா இவரப் போட்டு அடிக்கிறீங்க? ”

” வண்டில வேகமாக வந்து நடந்து வந்துகிட்டு இருந்த பெரியவர இடிச்சுட்டான் சார் இந்தாளு ” என்றான் சற்று நேரம் முன்புவரை வண்டியில் வந்தவனின் சட்டையை இறுக்கிப்பிடித்திருந்த இருவரில் ஒருவன்.

” இல்ல சார்.. அந்தப் பெரியவர்தான் கொஞ்சம் தடுமாறித் தடுமாறி நடந்தாரு. அதுல பேலன்ஸ் தவறி விழுந்துட்டேன். அவரும் வண்டி மேல விழுந்துட்டாரு. அதுக்குள்ள எல்லாரும் வந்து அடிக்கிறாங்க சார்” என்று கிட்டத்தட்ட அழும் குரலில் கூறினான் அடி வாங்கியவன். விழுந்த அடியில் விரல்கள் அவன் கண்களை இடித்திருக்க வேண்டும். இடது கண் மட்டும் ரத்தச் சிவப்பாய் இருந்தது.

” எங்கய்யா அந்தப் பெரியவர் ? ”

” இங்கதான் சார் நின்னுகிட்டு இருந்தாரு.”

” அதான் எங்க அவரு ? ”

” ஏய் இங்க நின்னுக்கிட்டு இருந்தாரே.. நாலு நாள் தாடியோட வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி.. ”

” யாராவது பார்த்தீங்களாப்பா அவர ? ”

வராத அழைப்புகளுக்கு சிலர் செல்பேசியில் பதில் சொல்லத் தொடங்கினர். கூட்டம் கலையத் தொடங்கியது. சீனு, தனது தற்காலிக அடையாள அட்டையைக் காண்பித்து அன்றைய நாளேட்டில் தனது வருகையைப் பதிவு செய்து கொண்டிருந்தான்.

– அக்டோபர் 12, 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *