பூர்வீகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 25, 2022
பார்வையிட்டோர்: 5,308 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பிரான்ஸ் தேசத்தில் ஓர் ஒதுக்குப்புறமான கிராமத்தில் இந்தப் பட்டறையை ஒழுங்கு செய்திருந்தார்கள். அது ஆறு நாள் பட்டறை. நாற்பது நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வந்து கலந்து கொண்டார்கள். வேறென்ன, உலகத்தை புனருத்தாரணம் செய்யும் நோக்கம்தான்.

எங்கள் விடுதி ஓர் ஏரியைப் பார்த்தவாறு இருந்தது. இந்த ஒரு காரணத்திற்காக அங்கே கட்டணம் அதிகம் என்று சொன்னார்கள். பட்டறையில் கலந்து கொள்ள வந்தவர்களில் நாங்கள் நாலுபேர் அங்கே தங்கி இருந்தோம்.

காலை உணவின் போது முதன் முறையாக ‘ஹலோ’ சொல்லிக் கொண்டோம். பொஸ்னியாவில் இருந்து ஓர் இளைஞன் வந்திருந்தான். இவன் வகிக்கும் பொறுப் புக்கு மிகவும் இளமையாகத் தோற்றமளித்தான். முந்தைய சோவியத் யூனியனின் நகரமான கியே (Kiev) விலிருந்து வந்தது ஒரு பெண்மணி. அனா என்று பெயர். அவளுக்கு முப்பது வயதிருக்கும். மிகவும் பெண் மையுடன், கவர்ச்சியாக இருந்தாள்.

மற்றவர் கனடாக்காரர். வயதானவர். பப்புவ நியுகினி யில் ஆதிவாசிகளுக்குக் குடிநீர் வழங்கும் காரியத்தில் ஈடுபட்டிருந்தார்.

பட்டறை வேலையில் இடுப்பு ஒடிந்தது. காலையில் தொடங்கினால் இரவுதான் முடியும். களைத்து வந்து படுக்கையில் விழத்தான் நேரம் சரியாக இருக்கும். பட்டறை என்ற சொல்லுக்கு ஏற்ப இரும்பை நெருப்பில் வாட்டுவதுபோல இவர்களும் எங்களை வாட்டி எடுத்து விட்டார்கள்.

கடைசி நாளும் முடிந்துவிட்டது; ஓர் இரவுதான் மிச்சம். ஏரியைப் பார்த்திருக்கும் உணவகத்தில் நாங்கள் நாலு பேரும் உணவருந்துவது என்று முடிவானது. நாங் கள் கியேவ் பெண்மணி அனாவுக்காகக் காத்திருந்தோம்.

இந்த கியேவ் பெண்மணியைப் பற்றி இவள் வருமுன் கொஞ்சம் அறிமுகம் செய்து வைத்தால் நல்லது. ஏனென்றால், இவள்தான் கதாநாயகி. உங்களுக்கும் ஆசுவாசமாக இருக்கும். எனக்கும் வேலை லேசாகிவிடும்.

முதல் நாளே நான் கவனித்தேன். இவள் அழகு, இதயத்தை நிறுத்தும் அழகில்லை . ஆனால் வசீகரம் மிகுந்தது. மிகவும் பச்சை நிறத்தில் கண்கள். நிறம், பனிப் பிரதேசத்து வெள்ளை என்று கூற முடியாது. ஒரு மேலாக்கப்பட்ட வெள்ளை என்று சொல்லலாம். உயர்ரக சீமாட்டிகள் இவளுடைய கலரை அடைவதற்குக் கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் என்று சொன்னால் புரிந்துகொள் வீர்கள். ஆங்கிலம், ரஸ்யன், பிரெஞ்சு எல்லாம் சரளமாகப் பேசினாள். அவளுடைய பிரெஞ்சு மிக அழகாக இருக்கும். இவளுடைய உதவியை நாங்கள் அடிக்கடி நாடவேண்டி வந்தது இதனால்தான்.

இரண்டாம் நாளே இது எனக்கு நடந்தது. இது கிராமத்து வங்கி. வசதிகள் இல்லாதது. ஆங்கில அறிவு மருந்துக்கும் கிடையாது. அங்கே பயணக் காசோலை மாற்றச் சென்றபோது இவளைச் சந்தித்தேன் . ATM மெசினில் காசு மாற்றிக்கொண்டிருந்தாள்.

இந்த ATM மெசினை நான் நம்புவது கிடையாது. அது அட்டையைச் சாப்பிடும் தன்மை கொண்டது. ஒருமுறை அப்படி செய்தும் விட்டது. ஆனால் இவள் துணிச்சலானவள். காசை மாற்றி கார்டையும் மீட்டுவிட்டாள்.

ஒரு புன்னகையைப் பரிமாறிக்கொண்டோம். புன்னகை பூத்தது என்று ஒரு பிரயோகம் இருப்பது உங்களுக்குத் தெரியும். சிரிக்கும் போது உண்மையிலேயே ஒரு புன்னகை இவள் இதழ்களில் மலர்ந்து வெளியே வருவது போலிருக்கும்.

இந்தப் பட்டறை முடிவதற்கிடையில் இவளுடன் மிகவும் அந்நி யோன்யமான ஒரு சம்பவம் நடக்கப்போவது எனக்கு அப்போது தெரியாது. ஆகவே மிகவும் சாதாரணமாக ஒதுக்குப்புறமான கிராமத் தில் காசு மாற்றும் சிரமத்தைப் பற்றிப் பேசிக்கொண்டோம். பிறகு வங்கி ஊழியரிடம் எனக்குப் பரிந்துரைத்து என் பயண ஓலைகளை மாற்ற உதவி செய்தாள். நன்றியை எதிர்பாராது விறுக்கென்று திரும்பி மறைந்துவிட்டாள்.

பட்டறை நேரங்களில் எப்பவும் ஒரு கும்பல் அவளைச் சுற்றி கலகலவென்று இருக்கும். பொஸ்னிய இளைஞன் அவளிடம் மனதைப் பறிகொடுத்திருந்தான். அவள் பார்வையில் சிக்குவதற்கும், அவளோடு தனிமையில் பேசுவதற்கும் அவன் சமயம் பார்த்திருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது.

நாலாவது நாள் பட்டறையில் ஒரு சம்பவம் நடந்தது. கியேவ் பெண்களின் வாழ்க்கை விபரங்களை அனா வரைபடங்கள் மூலம் விளக்கிக்கொண்டிருந்தாள். லேசர் வழிகாட்டியால் ஒவ்வொரு படத்தையும், புள்ளி விபரத்தையும் லேசர் வழிகாட்டியால் வியாக்கி யானம் செய்தாள். வந்த கேள்விகளுக்கெல்லாம் சமத்காரமாகப் பதில் கூறி சமாளித்தாள். அந்த நேரம் பார்த்து அரங்கத்தில் வெப்பம் மிகுந்ததால் சிலர் தங்கள் மேலங்கிகளைக் கழற்றினார்கள்.

இவளும் கழற்றினாள்.

சபை அதிர்ந்தது. இப்படியும் ஒரு பெண் தன் அழகை அநியாயமாக மூடி மறைப்பாளா என்றுதான் பலருக்கும் பட்டிருக்கவேண்டும். அதற்குப் பிறகு அவளுடைய பேச்சையோ, புள்ளி விபரத்தையோ யாரும் கிரகித்ததாக எனக்குத் தெரியவில்லை.

இரவு எட்டு மணியாகியும் சூரியன் மறைவதற்குத் தயங்கிக் கொண்டிருந்தான். காலில் சக்கரம் வைத்த இரண்டு இளம் பெண்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். நீர் யானைபோல கொழுத்த பத்துப் பன்னிரண்டு மாடுகள் அசைந்தசைந்து நடந்தன. அவற்றின் கழுத்திலே ஒற்றை மணிகள் தொங்கின. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஸ்வரம். மனிதன் கைபட்டு அசுத்தமாகாத அபூர்வமான இசை ஒன்று அப்போது தோன்றியது. மனது சந்தோஷித்தது.

நாங்கள் வைன் ஓடர் பண்ணி சுவைத்துக் கொண்டிருக்கும் போது அனா வந்து சேர்ந்தாள். மாலை வேளைக்கான நீண்ட உடையில் இருந்தாள். வந்த உடனேயே அன்றைய இரவு நிகழ்ச்சிகளுக்கும், பிரஞ்சுப் பாஷை பரிவர்த்தனைகளுக்கும் அவள் பொறுப்பேற்றுக் கொண்டாள்.

இந்த பிரான்ஸ் நாட்டில் எந்த ஒரு மூலை உணவகத்திலும் மூன்று மணித்தியாலத்திற்குக் குறைந்த நேரத்தில் உணவருந்த முடியாது. இது எங்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆகவே, அனா எல்லோருக்குமாகத் தானே நேரகாலத்துக்கு ஓடர் பண்ணினாள். மெல்லிய நீண்ட கிளாஸில் பரிமாறிய வைன் உள்ளே இறங்க இறங்க, எங்கள் இறுக்கம் தளர்ந்து அந்நியோன்யம் கூடியது. அனாவின் சிரிப்பு அலை அடிக்கடி எழும்பி ஏரி அலைகளுக்கு மேல் தவழ்ந்து போனது.

என்னுடைய முழுப்பெயரையும் கேட்டுவிட்டு, ‘ஓ, நீங்கள் தமிழரா?’ என்றாள் ஆச்சரியமான குரலில். ‘மன்னிக்க வேண்டும், இனிமேல் அந்தத் தவறைச் செய்யமாட்டேன்’ என்றேன். அவள் சிரித்துக் கொண்டே ‘தமிழ் மிகவும் கஷ்டமான பாஷையாச்சே! எப்படி சமாளிக்கிறீர்கள்?’ என்றாள்.

‘என்ன செய்வது, கஷ்டம்தான். ஆனால் எங்கள் ஊரில் ஒரு நூதனமான வழக்கம் உண்டு. தாய்மாரே தங்கள் பிள்ளைகளுக்குப் பாலுடன், பாஷையையும் புகட்டி விடுவார்கள். அது மாத்திரமில்லை. பிறந்தவுடன் ஒரு தடித்த அகராதியையும் கையிலே தந்துவிடுவார்கள்’ என்றேன்.

‘என் தாயார் மிகவும் கண்டிப்பானவள். இப்படி முன்பின் தெரியாத ஆண்களுடன் நான் வைன் அருந்துவதைப் பார்த்தால் என் கதி அதோகதிதான்’ என்று கூறிவிட்டுக் கலகலவென்று சிரித்தாள். பல தலைகள் இப்போது எங்கள் பக்கம் திரும்பின.

நடன இசை ஆரம்பமானது. பொஸ்னிய இளைஞன் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ‘நடனம் ஆடலாமா?’ என்றான். இவளும் யோசிக்காமல் சரியென்று உடனே எழுந்துவிட்டாள்.

நடன மேடையில் ஒருவரும் இல்லை. இவர்கள் மட்டுமே ஆடினார்கள். பல நாள் பிரிந்திருந்து கூடின காதலர்கள் போல ஒருத்தரை ஒருத்தர் ஆரத்தழுவி ஆடினார்கள். இவளுடைய மார்பு அவன் மேல் அழுத்தமாகப் பதிந்திருந்தது. இசையில் மெல்லிய சோகம் கலந்திருந்தது. மெய்மறந்து ஆடும் இவர்களை நாங்களும் மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தோம்.

நடன மேடையில் நின்றவாறே அவள் தன் தலைமயிரை விரித்து விட்டாள். அப்படி விரித்த பிறகு அவள் அழகு முற்றிலும் புதிதாக்கப் பட்டது. கண்களில் மயக்கும் தன்மை கூடியது. சிறிய தள்ளாட்டமும் தெரிந்தது. கலகலவென்று சிரிக்கும் குரல் கூட இப்போது கொஞ்சம் மாறிவிட்டது .

முதல் தடவையாகப் பெரியவர் பேசினார். ‘இங்கே நாங்கள் ஒரு விபத்து போலக் கூடியிருக்கிறோம். பொஸ்னியாவில் வேலை செய்பவரும், சோமாலியா அகதிகள் காப்பாளரும், கியேவ் பெண் சேவகியும், பப்புவ நியூகினி குடிநீர் நிபுணரும் ஒன்றாகக் கூடியிருப்பது ஓர் அதிசயம் அல்லவா? எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து இன்று எந்த நாட்டிலேயோ போய் சேவை செய்கிறோம். இந்தப் பொன்னான தருணத்துக்காக வைன் அருந்துவோம்’ என்றார். எங்கள் பூர்வீகத்துக்காக என்று வைன் கிளாஸைத் தூக்கிப் பிடித்தார். நாங்களும் கிளாஸை உயர்த்தி வைனை சுவைத்தோம்.

அப்பொழுது அனா சொன்னாள். அமெரிக்காக்காரன் பிலிப் பைன் நாட்டில் போய் வதிவிடம் கேட்கிறான். ஜெர்மன்காரன் கனடா செல்கிறான். இந்தியன் அவுஸ்திரேலியா போகிறான். பூர்வீகம் தேடுவதை இனி விட்டு விடவேண்டும். இன்னும் நூறு வருடங்களில் எல்லோரும் ஒரே இனம்தான்’ என்றாள். ஒரே இனத்துக்கு’ என்று வைன் கிளாஸைத் தூக்கிப் பிடித்தாள். நாங்கள் அதற்காகவும் ஒரு மிடறு குடித்து வைத்தோம்.

இப்பொழுது எங்கள் உணவின் பிரதான அம்சம் வந்தது. இந்த பிரெஞ்சுக்காரர்கள் உணவுக் கலையை நன்றாக அறிந்து வைத்திருக்கி றார்கள். உணவின் அலங்காரமும், ருசியின் நேர்த்திமையும் உலகை மறக்கச் செய்தன. ஏரிக்கரைக் காற்று வீச, சிவப்பு வைன் மெல்லிய போதை தர, எங்கள் மனது முன்பின் அறியாத ஒருவித சந்தோஷத்தில் மிதந்துகொண்டிருந்தது.

அதற்குப் பிறகு சம்பாஷணை கைதவறி ஓடியது. மாவுத்தர்கள் பற்றி ஓர் ஆராய்ச்சி நடந்தது. பிறகு புயல் மையங்கள் பற்றித் திரும்பியது. கடைசியில் சோப் உறைகள் பற்றிய தீவிரமான விவாதத்தில் இறங்கி நின்றது.

திடீரென்று அனா மறுபடியும் பேசினாள். ‘என்னுடைய அம்மா மிகவும் கண்டிப்பானவள். என் கற்பைக் காப்பதில் தன்னுடைய வாழ்நாளில் அரைவாசியை அவள் செலவழித்தாள். என் நண்பிகள் ஆண் சிநேகிதர்களுடன் வெளியே போய் கேளிக்கைகளில் ஈடுபடும் போது நான் கோப்பைகளைத் துடைத்துக்கொண்டு வீட்டிலேயே இருந்தேன். நேரத்தை எவ்வளவு வீணாக்கிவிட்டேன்.’

பொஸ்னியாக்காரனும் கொஞ்சம் குடி மயக்கத்தில் இருந்தான். அந்தத் துணிவில் அவன், ‘அனா, கவலையை விடு. நான் உதவி செய்கிறேன். You can make up for the lost time’ என்றான். எல்லாரும் சிரித்தார்கள். அனாவின் சிரிப்பு கலகலவென்று மேலோங்கி நின்றது. அது இயற்கையாக இல்லை. ஏதோ சோகத்தை மறைப்பதற்கான முயற்சி என்று பட்டது.

அனா அக்கம் பக்கம் பார்த்துவிட்டு ரகஸ்யக் குரலில் உங்களுக்கு இது தெரியுமா?’ என்று கேட்டபடியே மேசையில் குனிந்தாள்.

நாங்கள் எல்லாம் ஆர்வத்துடன் எங்கள் கழுத்துகளை வளைத்து அவள் பக்கம் நீட்டித் தலைகள் மேசையில் பட காத்திருந்தோம். அவளோ கலகலவென்று சிரிக்கத் தொடங்கினாள். தனக்குத் தேவை யில்லாத விஷயத்தைத் தெரிவதற்கு மனிதன் எவ்வளவு தாழ்ந்து போகவும் தயங்கமாட்டான்’ என்றாள். எங்களுக்கு வெட்கமாகி விட்டது.

உலகத்தில் வேறெங்கும் காணப்படாத, பிரான்ஸ் தேசத்திற்கே உரித்தான, தலைகீழ் புடிங்’ வந்தது. வேகவைத்த அப்பிள்தான் இதில் பிரதான அம்சம். தித்திப்புக்குக் கீழ்ப்பட்ட ஓர் அபூர்வமான சுவை. அனாவின் நிலைமையில் கொஞ்சம் தடுமாற்றம் தெரிந்தது. சிறிது ஆடியபடியே சேவகனைக் கூப்பிட்டு இன்னொரு வைன் கொண்டு வரும்படி ஆணையிட்டாள். அவன் திரும்பியதும் ஓர் ஆங்கில வசை மொழியைப் பின்னால் வீசினாள். கியேவில் இருந்து வந்த அனா என்னும் இந்த அழகிய பெண்மணி, நாகரிகத்தின் எல்லையிலிருந்து மெதுவாக வழுக்கிக்கொண்டிருந்தாள். அவள் உடம்பு மெல்ல நடுங்கியது. வார்த்தைகள் தடுமாறின.

நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். பொஸ்னிய இளைஞன் கிலி பிடித்தது போல உட்கார்ந்திருந்தான். பெரியவர் இப்படி இக்கட்டான நிலமையை முன்பொருபோதும் அனுபவித் திருக்கமாட்டார். அவஸ்தையாகக் காணப்பட்டார்.

இன்னும் வைன் வேண்டும் என்று சிறுபிள்ளைபோல அடம் பிடித்தாள். எங்களுக்கு மிகப்பெரிய பங்கை ஊற்றிக்கொண்டு, அவளுக்கு ஒரு சொட்டு கிளாஸில் வார்த்துக் கொடுத்தோம். அசிங்கமாகத் திட்டியபடியே அவள் எழுந்து நின்றாள். இரண்டு பக்கமும் அவள் உடல் ஆடியது.

இப்பொழுது உணவகத்தில் பல தலைகள் எங்கள் பக்கம் திரும்பியிருந்தன.

‘என்னுடைய அம்மா மிகவும் கண்டிப்பானவள். நான் உங்களுக்குச் சொல்கிறேன். மிகக் கவலையாகச் சொல்கிறேன். என்னுடைய நீண்ட கன்னிமையைக் கலைக்க ஆள் தேவை. உங்களில் ஆர் தயாராக இருக்கிறீர்கள்’ என்று நேராக உரத்த குரலில் கேட்டாள்.

பெரியவர் தரையைப் பார்த்தபடி ஸ்தம்பித்துவிட்டார். நிலமை விபரீதமாகப் போய்க்கொண்டிருந்தது. அவள் ஆடியபடி பையை மாட்டிக்கொண்டு, அறை திறப்பையும் எடுத்தாள்.

நானும், வாலிபனும் ஒரே நேரத்தில் எழும்பி அவளைப் பிடித்தபடி மூன்றாம் மாடிக்கு அழைத்துச் சென்றோம். சில இடங்களில் அவள் இடறி விழ நாங்கள் அவளைக் காவவேண்டி வந்தது. அறையைத் திறந்து அவளைப் படுக்கையில் கிடத்தினோம். மெல்லிய தோலினால் சிறப்பாகச் செய்யப்பட்ட அவளுடைய காலணிகளைக் கழற்றிக் கீழே போட்டோம்.

அன்றைய அதிர்ச்சிகள் எல்லாம் தீர்ந்துவிட்டன என்று நினைத்து மெதுவாகத் திரும்ப எத்தனித்தோம்.

‘நன்றி, கோழைகளே!’ என்றாள். படுக்கையில் சாய்ந்தபடி எங்களைக் கூர்ந்து பார்த்தாள். தன் வலது கையை மார்புக்குள் விட்டு இடது மார்பை எடுத்து எறிந்தாள். பிறகு வலது மார்பைப் பிடுங்கி என் மூஞ்சியில் வீசினாள். பஞ்சுப்பொதி போல ஒன்று பறந்து வந்து என் முகத்தில் லேசாக உரசிக் கீழே விழுந்தது.

அடுத்த நாள் காலை நான் வேண்டுமென்றே மிகவும் பிந்தித்தான் விழித்தேன். அவர்கள் எல்லோரும் தனித்தனியாக தங்கள் விமானங்களைப் பிடிப்பதற்குப் போய்விட்டதாகப் பணிப்பெண் அரைகுறை ஆங்கிலத்தில் கூறினாள். என்னுடைய விமானத்துக்கு இன்னும் நேரம் இருந்தது. அவசரமில்லாமல் என் கணக்கைத் தீர்த்துவிட்டு விமான நிலையம் போவதற்கு ஆயத்தம் செய்தேன்.

இந்தக் கதை இங்கே முடிந்திருக்க வேண்டும். ஆறுமாதம் சென்ற பிறகு நடந்த ஒரு சம்பவத்தால் இன்னொரு பத்தி எழுதவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

எங்கள் நிறுவனத்தின் மாதாந்த புதினப் பத்திரிகையை அசிரத்தையாக ஒரு நாள் தட்டிக்கொண்டிருந்தேன். அதிலே அனாவின் படம் வெளியாகி இருந்தது. அதற்கு கீழே இப்படி போட்டிருந்தார்கள்.

பெண்கள் மறுவாழ்வுக்காக இடையறாது பாடுபட்ட கியேவ் பெண்மணி, பத்து வருட காலமாக கான்ஸருடன் போராடி இறுதியில் காலமானார். அவருடைய பெயர் அன்னலட்சுமி சேரகோவ்.

இறகு தடவியது போல் அவள் மார்பு என் முகத்தில் பட்ட ஸ்பரிசம் நினைவுக்கு வந்தது. வேறொன்றும் அப்போது என் ஞாபகத்துக்கு வரவில்லை.

– 1999-2000

– மஹாராஜாவின் ரயில் வண்டி, முதற் பதிப்பு: டிசம்பர் 2001, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *