புலியும் பூனையும்..

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 28, 2021
பார்வையிட்டோர்: 3,562 
 

கணவனும் மனைவியுமாக, பனகல் பார்க்கிலிருந்த அந்தத் துணிக்கடையிலிருந்து வெளிவந்தபோது மாலை மணிநான்கு. மனிதர்களை பதட்டத்துடன், அலையவைத்துக்கொண்டிருக்கிற வெயில். ஆண் பெண்பேதமின்றி வியர்வையில் ஊறியிருந்தனர். பெண்களின் கை இடுக்குகளில் வெண் சாம்பல் பூத்திருந்தது. சிலரது கன்னக் கதுப்புகளில் இடம்பெயர்ந்து, கண்மை. பின்னல்களில் பழுத்துக்கிடந்த மல்லிகைச் சரம். ஒழுங்குபடுத்தப் படாத போக்குவரத்து, ஆதில் நீரில் விழுந்து கரையேற முயற்சிக்கிற நாய்களைப்போல வாகனங்கள். இஞ்சி, புதினா, பச்சைக்கற்பூரம், ஸ்டிக்கர்பொட்டு, வளையல், உள்பாடி, பனியன், ஜட்டி, சாமி சரணம், பணம் அள்ள பத்துவழிகள், மல்லிகைச் சரம் விற்கிற நடைபாதைக்கடைகள், எதிர்கொண்டு அல்லது பின்புறம் தொடர்ந்து உடைந்த தமிழில் மயிலிறகு விசிறி, மணிகோர்த்த அலங்காரப் பைகள் விற்பவர்கள். அய்நூறில் ஆரம்பித்து ஐம்பது ரூபாய்க்குப் போலி கைத்தொலைபேசிகளை விற்கவென்று ஏமாந்த சோணகிரிகளைத் தேடியலையும் ஊதா நிறத் தலையர்கள்.

அவளுக்கு ஏமாற்றம், கண்கள் நீர்கோர்த்திருந்தன. கடைக்குள் நுழைகிறபோது அவளுக்குள் தளிர் விட்டிருந்த சந்தோஷம், அடுத்த இருபது நிமிட இடைவெளியில் காய்ந்து சருகுகளாகி உதிர்ந்துவிட்டன. நடந்தது இதுதான். புடவையின், கலரும் முந்தானையின் டிசைனும் ரொம்பவும் பிடித்திருந்தது, விற்பனையாளர் எடுத்துப் போட்டவுடனேயே, ‘பிடிச்சிறுக்கு பில் போடச் சொல்லுங்க’, என்றாள். வேற டிசைன்லயும் இருக்கிறது, பார்க்கறீங்களா, என்று அவர் கேட்டபோது, பக்கத்திலிருந்த கணவனைத் தேடினாள், பில் செக்ஷனில் இருந்தான். ஒரு சில நொடிகள் காத்திருந்த விற்பனையாளர், புரிந்து கொண்டு, அடுத்து நின்ற பெண்களுக்குப் புடவைகளை எடுத்துப் போடத் தொடங்கினார். பணம் செலுத்துமிடத்தில் வரிசையில் நிற்கவேண்டியிருந்தது. இவன் கையிலிருந்த ரசீதைக் காட்டினான், கூடவே ரசீதுக்குண்டான ஆயிரத்து நானூறு ரூபாய்க்காக மூன்று ஐநூறு ரூபாய் நோட்டுகளை என்ணிவைத்தான். காசாளர் ரசீதை ஒரு முறைப் பார்த்துவிட்டு, மேசையிலிருந்த பணத்தை இடது கைவிரல்களில் தொட்டு, வலது கை விரல்கள் துணையுடன் சுருக்கென்று எண்ணி, உட்புறமாக திறந்திருந்த மேசையில் மேசையில் போட்ட அதே வேகத்தில் நூறு ரூபாய் நோட்டொன்றை எடுத்துவைத்தார். பக்கத்திலிருந்த ஊழியரொருவர் பணம் செலுத்தப்பட்டதென்பதாய் முத்திரைப் பதித்தார். உடமையைப் பெறுவதற்காக வந்தபோது அங்கேயும் கூட்டம். காத்திருந்தார்கள். இவர்கள் முறைவந்தது. ரசீதை வாங்கிப் பார்த்து ஒருவன் ‘கொடுக்கப்பட்டது’ என்கிற முத்திரையை இவர்களது ரசீதில் பதிக்க, சீருடையிலிருந்த மற்றொரு சிறுவன், இவர்களது புடவையை, கடையின் பெயருடனிருந்த துணிப்பையை எடுத்து அதன் உள்ளேவைத்தான். பைகொஞ்சம் அளவிற் சிறிது. புடைவையோடிருந்த காகிதப்பை கிழிந்தது. நழுவிய புடவை தரையில் விழுந்தது. விழுந்த புடவையைக் கையிலெடுத்த பையன் இன்னொரு பையைத் தேர்ந்தெடுத்தான். ‘வெங்கிட்டு’ என்றென்கிற கணவன் வேங்கிடபதிக்குக் கோபம் வந்தது, ‘வேண்டாம்’ என்றான். பையன் திருதிருவென விழித்தான். பக்கத்திலிருந்த இன்னொருவன் உதவிக்கு வந்தான். ‘சார், என்ன சொல்றீங்க?’. ‘புரியலை, தமிழ்லதானே சொல்றேன்’, எங்களுக்கு வேண்டாம். சந்தண பொட்டு ஊழியர் ஒருவர், குறுக்கிட்டார். சார், நானும் பார்த்துக்கொண்டுதானிருந்தேன். கொஞ்சம் கவனக்குறைவு, கீழே விழுந்துவிட்டது. வேறப் பெருசா ஒண்ணுமில்லை. வேண்டுமென்றால் செக்ஷனுக்குப் போயிட்டு வேறப் புடவை

எடுத்துக்குங்களேன். இல்லை, எங்களுக்கு விருப்பமில்லை. எங்கப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கப் பாருங்க. ‘ ஏம்மா.. அவர்கிட்ட கொஞ்சம் சொல்லுங்களேன்’, ஊழியர் இவளிடம் முறையிட்டார். தேவகிக்கு, வெங்கிட்டை புரியும். பொடவை போனால் போகுது, பெரிதாக இவன் பிரச்சினை பண்ணாமல் கடையிலிருந்து இறங்கவேண்டுமே’, என பிரார்த்தனை செய்தாள். புரிந்துகொண்ட ஊழியன், ஓடிச் சென்று ‘டை’ கட்டிய இன்னொரு சந்தணப்பொட்டு ஆசாமியை அழைந்துவந்தான். உங்களுக்குப் பணந்தானே வேண்டும், உள்ளே வாங்க பேசுவோம், என்றான். முறைத்து விட்டு ரசீதை வாங்கிக்கொண்டு போன ஆசாமி, அரைமணி நேரம் இவர்களை காத்திருக்கவைத்து, பணத்தைத் திரும்பக் கொண்டுவந்தவன், வெங்கிட்டை அலட்சியம் செய்துவிட்டுத் தேவகியிடம் கொடுத்தான். சுருக்கென்று கடையைவிட்டு வெங்கிட்டு வெளியேற, இவள் குமுறலுடன் அவன் பின்னே ஓடிவந்தாள். தெரிந்தவர்கள் எதிர்பட்டிருந்தால், உடைந்து அழுதுவிடுவாள்போல.

வழக்கப்படி மனதை அமைதிபடுத்திக்கொண்டவள், ‘ஏங்க, நீங்க பசிதாங்கமாட்டீங்களே ஏதாது சாப்பிட்டுவிட்டுப் போகலாமே’ என்கிறாள். எனக்கெதுவும் வேண்டாம். வேளையாய் ஊர் போய்ச் சேரவேண்டும் – அவன். இப்போதைக்கு அவனிடத்தில் பேச்சைத் தவிர்ப்பது உத்தமம். வாயை மூடிக்கொண்டாள். அவன் கோபத்தில் இருக்கிறான். இனி அடுத்த சில மணி நேரத்திற்கு, அவனுடைய சாம்ராச்சியம்: வானளவு அதிகாரம், கொதித்துக்கொண்டிருக்கும் மூளைக்கு உகந்த நீதி, துரிதகதியில் எதிராளிக்குத் தண்டனை.

சாலையைக்கடந்து ஒருவழியாக உஸ்மான் ரோட்டின் மறுகரைக்கு வந்திருந்தார்கள். துணிக்கடையிலிருந்து கைநீட்டிக்கொண்டு ஈ மொய்க்கும் சவலைப்பிள்ளையுடன் தொடர்ந்த இளம்பெண்ணுக்கு கணவனுக்குத் தெரியாமல் ஒரு ரூபாய் நாணயத்தை கொடுத்துவிட்டு நிமிர்ந்தபோது, இவன் முறைத்தான். ‘உங்களைப்போல ஜென்மங்களாலதான், அவர்கள் இது மாதிரியான தொழில்களுக்கு வருகின்றார்கள்’ என்றான்.

– சார் ஆட்டோவேணுமா?

– ஆமாம் தி.நகர் பஸ் ஸ்டேண்டு போகணும்?

– உட்காருங்க

முந்திக்கொண்டு ஆட்டேவில் அவள் அமர்ந்தது இவனுக்கு எரிச்சல் ஊட்டியது. போதாக்குறைக்கு, வறுகடலை விற்பவன் தள்ளுவண்டியை இடித்துக் கொண்டு நிறுத்தினான்.

– ஏம்பா, இங்கே மனுஷங்க நிக்கிறது தெரியதில்லை, என்று எரிச்சல்பட்டவன், தமது மனைவி திசைக்குத் திரும்பினான், ‘என்ன நீபாட்டுக்கு ஏறி உட்கார்ந்திட்ட, என்ன கேக்கிறான்? எவ்வளவு எவ்வளவு கேட்கிறான், தெரிஞ்சுக்க வேண்டாமா?’

இவர் தன்னை ‘அவன் இவன்’ என்று சுட்டுவதை ஆட்டோ டிரைவரால், தாங்கிக் கொள்ளமுடியவில்லை. எனினும் கிடைத்த சவாரியை நழுவ விடக்கூடாதென்று கவனமெடுத்துக்கொண்டு பேசினான்.

– சார் என்னத்தை பெருசா கேட்டுடப்போறேன், இருபது ரூபாய்க் கொடுங்க.

ஆட்டோ, தி.நகர் பேருந்து நிறுத்தத்தை நெருங்க மாலை ஐந்து மணியாகியிருந்தது. முதலில் அவள் இறங்கிக்கொண்டாள். அவள் கணவன் இரண்டு பத்து ரூபாய் தாள்களை நான்குமுறை எண்ணி கொடுத்தான்.

– சார் அஞ்சு ரூபா மேலப் போட்டுக் கொடுங்கசார், ஏதோ வயசானவன் கேக்கிறன்..

– தாம்பரம் போகிற பஸ் அங்க நிக்கறது பாரு..புறப்பட போறாப்பல. அடுத்த பஸ் எத்தனை மணிக்கோ?

எலுமிச்சை சோற்று பருக்கைகளை இறைத்துக்கொண்டு, நின்றபடி சாப்பிட்ட இரண்டு இளைஞர்களையும்,வாழைப்பழ தாறுடன் எதிர்பட்ட இஸ்லாமியப் பெரியவரையும் ஒதுக்கிக்கொண்டு நடந்தார்கள்

– கண்டக்டர் உட்கார சீட் இருக்குமா?

– இருக்கிற சீட்டெல்லாமே உட்காரருதுக்குத்தான் சார், நிற்கிறதுக்கில்ல. இவளுக்கு கண்டக்டர் பதில் பிடித்திருந்தது. முன்னாலிருந்த ‘வெங்கிட்டு’ இப்பதிலை எப்படி எடுத்துக்கொண்டான், என்பதை தெரிந்துகொள்ள ஆசை.

கணவனும் மனைவியுமாக நான்காவது வரிசையிலிருந்த குறுக்குச் சீட்டில் அமர்ந்தார்கள். எதிர்த்த சீட்டில், கைக்குழந்தையுடன், ஒரு ஜோடி. அருகில் நடுத்தர வயது பெண்களிருவர். ஒருத்தி பத்து ரூபாய்க்கு இருபத்திரண்டு முறுக்கு கொடுப்பியா? என பஸ்சுக்கு வெளியே தலையை நீட்டி பேரம் பேசிக்கொண்டிருந்தாள். பஸ்ஸ¤க்குள்ளே வியர்த்து கொட்டியது. பயணிகளில் பெரும்பாலோர் கிடைத்ததை வைத்துக் விசிறிக்கொண்டிருந்தார்கள். ஓட்டுனர் ஆரனை எழுப்பினார். பெண்ணொருத்தியிடம் சத்தம்போட்டுக்கொண்டிருந்த நடத்துனரிடம் என்னப்பா? ஆச்சா? புறப்படலாமா என்றார். அப்போதுதான் அந்த நபரைக் கவனித்தாள். காக்கிச்சட்டையிலிருந்தான், நடத்துனரிடம் என்னவோ கேட்டான். நடத்துனர் பதிலுக்குப் ‘ஏறுங்க’! என்றார். ஆள் வாட்ட சாட்டமாய் இருந்தான். வெளியில் தள்ளியிருந்த கண்கள், இரப்பைகள் சுருக்கமிட்டு சரிந்திருந்தன, தடித்த உதடுகள், மூக்கிற்கும் மேல் உதடிற்குமான இடைவெளியை அடைத்துக்கொண்டு பெரியமீசை. கன்னக் கதுப்புகளில் சுருக்கங்கள் எட்டிப்பார்த்தன, பெரிய வயிற்றுடன் அசைந்தபடி முன்னேறியவன், எதிரே இருந்த இருக்கை முழுவதையும் ஆக்ரமித்து, இவளுக்கு நேரெதிரே உட்காரவும் பஸ் புறப்பட்டது. குப்பென்று மதுவாடை. கணவனைப்பார்த்தாள், கையிலிருந்த ஆங்கில தினசரியை மடித்து பிடித்தபடி விசிறிக்கொண்டிருந்தவன், புதிய நபரைப் பார்க்கவிரும்பாதவன்போல தினசரியை விரித்து வைத்துக்கொண்டு லெபனான் சண்டையில் மூழ்கினான். பஸ் உறுமிக்கொண்டு புறப்பட்டது. காத்திருந்ததுபோல வெப்பக் காற்று பஸ்ஸை நிறைத்தது. வியர்த்திருந்த இவள் முகத்தினை தொட்டு விளையாடியது. நெற்றியில் விழுந்த மயிற்கற்றையை, முன் விரல்களால் ஒதுக்கியவள் நாசித் துவாரங்களில், மீண்டும் மதுவாடை. கைவசமிருந்த வார இதழில், விட்ட இடத்திலிருந்து தொடர்கதையை வாசிக்க ஆரம்பித்தாள். மனம் கதையில் ஒட்டவில்லை. எதிரே இருந்த நபர் இவளையேப் பார்த்துகொண்டிருந்தான். ‘என்ன இன்ஸ்பெக்டர் சார்’ எங்கே இந்தப்பக்கம், இவளுக்குப் பின்னாலிருந்து ஒரு குரல். அக்குரலுக்கு மறுமொழிபோல, ¨?கோர்ட்ல ஒரு கேஸ¤ வந்துட்டுத்

திரும்பறேன், என்ற நபரின் பார்வை இவள் மார்பில் பட்டுத் திரும்பியது. கணவனைப் பார்த்தாள். ‘தினசரியில் தீவிரமாக மூழ்கியிருந்தான். தொடரில் மூழ்கினாள்:

‘நீங்கள் மின் அஞ்சல்களைத் திறந்து பார்ப்பதில்லையா? நமக்குள் கடிதப்போக்குவரத்து இருந்தபோது மாதத்திற்கொருமுறை தவறாமல் எழுதுவீர்கள். செய்தி பரிமாற்றங்களில் நேர்ந்துள்ள முன்னேற்றம், உண்மையில் மனிதர்களுக்கு இடையிலான வெளியைக் கூட்டித்தான் விட்டது.

மறதிக்குப் பழகிக்கொண்டேன், நான் படித்தது, சிந்தித்தது, விவாதித்தது அனைத்துமே மறதிகள் பட்டியல்களில்தானிருக்கின்றன. நடுவாசலிலிலிருந்த மல்லிகைப் பந்தல் மறந்துவிட்டது, காலையில் மொட்டும், மலருமாய் அது பூத்தது மறந்துவிட்டது. டில்லிக்கு போய்விட்டு சென்னைக்குத் திரும்பிவந்த இரவு, விடிய விடியப் பேசினது நினைவிலிருக்கிறது ஆனால் என்ன பேசினோம் என்று மறந்துவிட்டது..நான் உங்களைபோலவே இருக்கிறேனென அடிக்கடி வீட்டுக்கு வருகின்ற உறவினர்களிடம் அம்மா சொல்லிச் சந்தோஷபட்டதும், கல்லூரியிலிருந்து நான் தாமதமாக வருகிறபோதெல்லாம், முன்வாசலில் காத்திருக்கும் உங்களிருவரின் நிம்மதிப் பெருமூச்சுங்கூட மறந்துவிட்டது…”.

இவள் கால்களில், அந்நியகாலொன்றின் ஸ்பரிசம். வார இதழை மடியில் இருத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தாள். எதிரே உட்கார்ந்திருந்தவனுடைய கால்கள். சன்னலொட்டித் தலையைசாய்த்து குறட்டைவிட்டுக்கொண்டிருந்தான். இரு கால்களையும் இவள் வரை நீட்டியிருந்தான். கணவனின் தோளைத் தட்டினாள். ‘என்ன?’.. என்பது போலத் திரும்பிப் பார்த்தான். அந்த ஆளைக் கொஞ்சம் காலை மடக்கச் சொல்லுங்களேன். ‘சார்..சாரென்று,’ இரண்டுமுறை அழைத்தான்.. அவன் கூப்பிட்டது இவளுக்கேக் கேட்கவில்லை. இவள் தனது கால்களை முடிந்த அளவு, தனது இருக்கைக்குக் கீழே பின்னிருத்திக் கொண்டாள். சங்கடமாக இருந்தது.

இவளுக்குப் பக்கத்திலிருந்த மூதாட்டிக்கு நிலமைப் புரிந்திருக்க வேண்டும். உறங்கிக் கொண்டிருந்த நபரை தொட்டு எழுப்பினாள். குறட்டை நின்றது. தலையைச் சிலுப்பிக்கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தான். கண்களிரண்டும் செவசெவவென்று இருந்தன. குடித்திருந்ததாலா? தனது உறக்கத்தைக் கெடுத்துவிட்டார்களென்கிற கோபமா, தெரியவில்லை.

– ‘காலை மடக்கிட்டு உட்காருதம்பி, அந்தப் பிள்ளை மேலே படுதில்லே..’ கிழவியினுடைய வாயிலிருந்து எச்சில் தெறித்து காக்கிச் சட்டையில் சிவப்பு புள்ளிகளாய் விழுந்தன. சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தவன்.

– ‘என்ன, நீ யாரு? அவங்களுக்கு வாயில்லையா? அவங்க கேட்க மாட்டாங்களா?’

வெங்கிட்டுத் தனக்குச் சம்பந்தமில்லாததுபோல தினசரியில் மூழ்கியிருந்தான்.

– ‘அவங்களை ஒன்றும் சொல்லாதீங்க. செத்தமுன்னே உங்க கால், எங்க சீட்வரைக்கும் நீட்டியிருந்ததால எனக்குக் கொஞ்சம் சங்கடமாக இருந்தது…’

அந்த நபர் இவள் சொல்லி முடிக்கட்டுமெனக் காத்திருக்கவில்லை. சட்டென்று இவள் வாக்கியத்தை வெட்டினான்.

– இங்கே பாரு பஸ்ஸ¤ல இப்படித்தான் வரணும்னு எனக்கு யாரும் புத்தி சொல்லவேணாம். பஸ்னா அப்படி இப்படித்தானிருக்கும். சௌகரியமா குந்திவரணும்னா, இப்படி பஸ்ல வரகூடாது.

இவள் உடலில் தேவையற்று ஒருவித நடுக்கம். தன்னைத் திடப்படுத்திக்கொள்ள முனைந்ததுபோல, கீழுதட்டைச் சுழித்து உள்வாங்கி முன்பற்களைப் அழுந்தப் பதித்தாள். சம்மந்தப்பட்ட மனிதனின் பார்வையத் தவிர்க்கவா அல்லது கணவன் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டுமென்கிற சராசரிப் பெண்ணின் எதிர்பார்ப்பா என்று அவளால் தீர்மானமாக சொல்ல முடியாத நிலையில், சில நொடிகள் வெங்கிட்டுவினைப் பார்த்தாள். அவனுக்கு என்ன நடந்ததென்பது தெளிவாகவேத் தெரிந்தது. தினசரியை நான்காக மடித்து, தனது இருக்கை அடியிலிருந்த கைப்பையில் வைத்தான். சில விநாடிகள் தயங்கியபடியிருந்தான். இப்படியான நேரத்தில் தான் எப்படி செயல்படவேண்டுலென்பதில் அவனுக்குக் குழப்பம் இருந்திருக்கவேண்டும். எதிராளியின் சரீரமும், தோற்றமும், நெஞ்சில் தேவையற்ற திரவங்களை உற்பத்திசெய்தது, வாய் உலர்ந்துபோனது. எச்சில் கூட்டி விழுங்கி நெஞ்சை நனைத்துகொள்கிறான், அவன் உதடுகள் துடித்தது. சுற்றிலுமிருந்த சக பயணிகள், தங்கள் தங்கள் செயல்பாடுகளைத் தொடராமல் இவனைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்: பாதி உறித்த கமலாப்பழம், வாயில் நொறுங்கிய முறுக்கு, வருமான கணக்குக் காட்டாத வழக்குபற்றிய உரையாடல். அவர்களுக்கெல்லாம் சுவாரஸ்யமாக ஏதோ நடக்கப்போகிறதென்கிற எதிர்பார்ப்பு.

சக பயணிகளுக்கு முன்பாக, கையிலிருந்த ஆங்கில தினசரியும், உடுத்தியிருந்த ஆடையும் ஏற்படுத்தியிருந்த கற்பனை பிம்பத்தை, குறைந்தபட்ஷம் பஸ் பயணம்வரைக் கட்டிக்காக்கவேண்டியக் கட்டாயத்தில் அவனிருந்ததை புரிந்துகொண்டவன்போல, மெல்ல நகைத்தபடி அவனிடம் பேசினான்.

– நீங்க பணம் கொடுத்திருக்கீங்க, உங்களுக்கான இருக்கையில் உட்கார, பயண தூரம்வரை அதற்கான உரிமையில்லையென்று யார் சொல்ல முடியும்? ஆனால் அடுத்தவர்களும், அவர்கள் பயண தூரத்திற்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு இங்கே உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளவேண்டும். சொன்னவனுக்கு வேர்த்திருந்தது, கைகுட்டைகொண்டு முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டான்…

எதிரே இருந்த நபர் நிமிர்ந்து உட்கார்ந்தான். தலை முதல் கால்வரை வெங்கிட்டுவை அளவெடுப்பவன்போல அற்பமாகப் பார்த்தான்

-‘ கண்டக்டர் இங்கே வாய்யா.. இந்த ஆளு உரிமைங்கிறான்.. கட்டணங்கிறான்.. என்னண்ணுகேளூ. இங்கே பாருய்யா.. நான் அப்படித்தான் உட்காருவேன். உங்களுக்குச் சங்கடமாயிருந்தா நீங்க வேணா பஸ்லயிருந்து இறங்கிக்குங்க.

‘நடத்துனர்’ நமக்கேன் வம்பு என்பதுபோல உட்கார்ந்திருந்தார். அவள் கணவனைப் பார்த்தாள். பயணிகள், வெங்கிட்டுவின் எதிர்த் தாக்குதல் எப்படியிருக்கும் என யோசித்தவர்களாய், காத்திருந்தார்கள்.

– சார் சத்தம்போடாதீங்க.. நியாயத்தைப் புரிஞ்சிக்கணும், இரத்தின சுருக்கமாக இடையில் இரண்டாக முறிந்து வெளிப்பட வாக்கியத்தில் அசாதரண நிதானம்.

– எதிராளி சட்டென்று எழுந்து நின்றான். தனது காக்கிச்சட்டையின் பொத்தான்களை அவிழ்த்துக்கொண்டு பனியன் தெரிய நின்றான். முண்டாவைத் தட்டினான். மீசையோடு உதடு மேலெழுந்து இறங்கியது, முகவாய் கோணலானது. வெங்கிட்டை அச்சுறுத்த முனைந்தவன்போல,

– இப்ப உனக்கு என்ன வேணும், என்று கர்ஜித்தவன், வெங்கிட்டின் சட்டையைப் பிடித்துக்கொண்டான். இவளது இதயம் வேகமாகத் துடித்தது. கணவனிடம் நெருங்கி உட்கார்ந்தாள். அவனுடலில் ஒருவித அதிர்வினை உணர்ந்தாள். கோபம் வந்தால் அவனுக்கு தலைகால் புரியாது. எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நிலைமையை மேலும் மோசமாக்காமல் தடுத்தாகவேண்டும். கண்டக்டரை உதவிக்கு அழைக்கலாம் அல்லது சக பயணிகளில் ஆண்களை உதவிக்கு அழைக்கலாம் என முதலில் யோசித்தாள். இறுதியில் கணவனில் சட்டையைப் பிடித்திழுத்து உட்காருங்கள் எனச் சொல்லவந்தவள், சட்டென்று தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டாள். மனதை இறுக்கிக்கொண்டு, பயணிகளில் ஒருத்தியாக தன்னைப் இருத்திக்கொண்டு அவனைப் பார்த்தாள். இதழோரம் அரும்பிய சிரிப்பை, சட்டென்று தலையைக்குனிந்து மறைத்தபோதும், வெங்கிட்டு அதனை உணர்ந்திருப்பானாவென பார்வையை மீண்டும் அவன் மீது செலுத்தினாள்.

போட்டிருந்த கண்ணாடியைக் கழற்றி கையிலெடுத்துக் கொண்டான். தேவையில்லாமல், கைகுட்டையினால் ஒரு முறைக்கு இருமுறைக்குத் அதனைத் துடைத்துக்கொண்டிருந்தான். முகம் வெளுத்திருந்தது.

– இல்லை, நான் என்ன சொல்லவந்தேன்னா..,.

– எதையும் சொல்லவேண்டாம். வாயை மூடிக்கொண்டு வரணும். மோதித்தான் பார்க்கணும்னா நான் ரெடி.

வெங்கிட்டு சட்டென்று சுருங்கிக் கொண்டான். பிற பயணிகளின் ஏளனப் பார்வையைத் தவிர்க்க நினைத்தவன்போல ஆங்கில தினசரியை விரித்துவைத்துகொண்டு அமைதியானான். எதிராளி, தனது இருக்கையில் மீண்டும் அமர்ந்தவன், இம்முறை தனது கால்களிரண்டையும் நீட்டவில்லை, மடக்கியிருந்தான்.

பேருந்து சீராக ஓடிக்கொண்டிருந்தது. பயணிகளுக்கிடையே ஒருவித அமைதி. குளிர்ந்த காற்று வீசியதில் சூழ்நிலையின் இறுக்கம் தணிந்திருந்தது. தேவகி கணவனைப்பார்த்தாள். முகம் வியர்த்திருந்தது, சோர்வு தெரிந்தது. ஆங்கில தினசரியை பிடித்திருந்த கைகளில் நடுக்கம். இவளுக்குக் கடந்த பத்துவருட தாம்பத்யத்தில் கண்டிராதத் திருப்தி, வார இதழ் தொடரில் மீண்டும் கவனம் செலுத்தினாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *