புத்திசாலி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 2, 2023
பார்வையிட்டோர்: 2,259 
 

(1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பார்க்கும் போதே தெரியுதே அவன் புத்திசாலி என்று: இப்படிச் சிலர் சொன்னார்கள்.

அவன் மூஞ்சியைப் பார்த்தாலே சரியான முட்டாள் என்று தெரிகிறதே!- இவ்வாறு சிலர் தெரிவித்தார்கள்.

புத்திசாலி மாதிரிக் காட்சி அளிக்கும் மடையன் என்று வேறு சிலர் சொன்னார்கள்.

வெவ்வேறு நபர்களுக்கு அவரவர் நோக்குக்கு ஏற்றபடி தோற்றம் காட்டிய சுயம்புலிங்கம் மற்றவர்களுடைய அபிப்பிராயங்கள் குறித்துக் கவலை கொண்டானில்லை. அவன் கவலைப்படுவதற்கு வேறு எவ்வளவோ விஷயங்கள் இருந்தன.

மற்றவர்களைப் பற்றி, மனிதர்கள், சமூகம், நாடு, உலகம், வாழ்க்கை முதலிய அனைத்தையும் பற்றி அவன் தனி அபிப்பிராயங்களை வளர்த்து வந்தான்.

இப்படி எண்ணங்களை வளர்த்து வருவோரில் பலருக்கு இருப்பது போலவே அவனுக்கும் திடமான கருத்துக்களும் நோக்கங்களும் லட்சியங்களும் இருந்தன.

இந்த உலகம் இருக்கிறதே, அது எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லை. சமூகமும் நாடும் மிக மோசமான நிலையில் உள்ளன. மனிதர்களின் பேச்சிலே சத்தியம் இல்லை. அவர்களது செயலில் சத்தியம் இல்லை. நாட்டினரின் கொள்கைகளில், போக்குகளில், நடவடிக்கைகளில் சத்தியம் இல்லை. ’சத்தியமேவ ஜெயதே’ என்கிற சுலோகத்தின் எழுத்துக்களில் தவிர வேறு எங்கும் எதிலும் சத்தியம் இல்லவே இல்லை. இதை எடுத்துச் சொல்லும் ஒன்றிரு குரல்கள் பெருங்கூச்சலில் அமுங்கி விடுகின்றன. ஆகவே, பலர் மவுனமாகவே இருந்து விடுகிறார்கள். நாமும்

அப்படி இருந்து விடுவதா?-சுயம்புலிங்கத்தின் மனக்குரல் ஓயாது கீச்சிட்டுக் கொண்டிருந்தது இப்படி.

அப்படி மன அரிப்பைப் பெறுகிறவர்கள் செய்யக் கூடிய காரியங்கள் மூன்று உண்டு என அவன் தேர்ந்தான். மேடை போட்டுக் கூட்டம் கூட்டி முழக்கம் செய்யலாம். நாட்டு மக்களிடையே அறிவொளி கொளுத்தத் தூண்டி, தன் இதய ஒலியை எடுத்துச் சொல்ல, ஒரு பத்திரிகை நடத்தலாம். தனிக்கட்சி ஒன்று ஆரம்பிக்கலாம். தனி மேடை போட முடியாதவர்கள், தனிக்கட்சி காணப் போதிய பலம் (சகல விதமான பலங்களும்) இல்லாதவர்கள், இதர கட்சிகளின் நிழலில் ஒதுங்கி, தங்கள் கர்ஜனை, முழக்கம், உறுமல், சிம்மக்குரல், இடியோசை வகையராவை உதிர்ப்பதும் இயல்பாக இருக்கிறது.

மேடை, கட்சி, பத்திரிகை, மூன்று சக்திகளையும் ஒரு நபரே நிர்வாகிக்கும் ஆற்றல் பெற்றிருப்பதும் தெரிகிறது.

ஆனால், அப்பாவி சுயம்புலிங்கத்தினால் அப்படி எல்லாம் செய்ய இயலாது.

எனவே, அவன் ஒரு பத்திரிகை ஆரம்பித்தான். எப்படியோ கடன்-கிடன் வாங்கி, ‘அண்டாவைத் தூக்கிக் குண்டானிலே போட்டு, குண்டானைத் தூக்கி அண்டாவிலே போட்டு’ உருட்டும் புரட்டும் பண்ணி, பத்திரிகை தடத்தப் போதுமான பணம் சேர்த்துக் கொண்டான்.

அவனுடைய பத்திரிகையின் முதல் இதழைப் பார்த்ததும் பலரும் பல விதமாகப் பேசத்தான் செய்தார்கள்.

‘நாங்கள் அப்போதே சொல்லவில்லையா? அவன் சரியான முட்டாள். அதை விளம்பரப்படுத்துகிறது. இது’ என்று சிலர் சொன்னார்கள்.

‘அவன் புத்திசாலி என்பதை இது காட்டுகிறது’ என்று சிலர் பேசினார்கள்.

அவன் மகா புத்திசாலியா, ‘மாங்கா மடையனா’ என்று தீர்மானிக்க முடியாமல் திணறியவர்களும் இருந்தார்கள். எல்லோரும் அவனுக்கு நல்லுரை கூறி உதவினார்கள்.

இந்த நாட்டிலே அதிகமாக, மலிவாக, உற்பத்தியாவது பிள்ளைகள் மட்டுமல்ல; போதனைகள், உபதேசங்கள், பொன் மொழிகள் கூடத்தான் என்று அவன் குறித்துக்கொள்ள அனைவரும் வாய்ப்புத் தந்தார்கள்.

‘அப்பனே, இது மாதிரிப் பத்திரிகை எடுபடாது. இந்த நாட்டு மக்களுக்குத் தேவையான தகவல், செய்திகள் சுவையான விஷயங்களே வேறே. சினிமா நடிகை எந்தப் பாவில் குளிக்கிறாள், எப்படிக் குளிக்கிருள் அல்லது குளியாமல் இருக்கிறாள். எந்த நட்சத்திரம் என்னென்ன செய்கிறார், என்ன உளறுகிறார் என்பன போன்ற அறிந்துகொள்ளப்பட வேண்டிய அதி அவசரச் சேதிகளைத் தேடிப்பிடித்துச் சுடக் சுடக் கொடுக்கவேண்டும். சிங்காரி, ஒய்யாரி மேனிமினுக்கி வகையறாவின் எடுப்பான போஸ்களைப் படம் பிடித்துப் போட வேண்டும். நகைச்சுவையின் பேரால் வளர்க்கப்படுகிற உளறல்-பேத்தல்-அபத்தம்-கோமாளிக் கூச்சல்களை எல்லாம் தொகுத்துக் கொடுக்கவேண்டும்…’ இப்படி அருளுரைகள் வழங்கினார்கள்.

‘உங்கள் அலுவல்களே நீங்கள் பாருங்கள். என் காரியத்தை நான் கவனிப்பேன்’ என்று அவன் சொன்னான்.

‘மடையன். உலகம் தெரியாத முட்டாள். உருப்படத் தெரியாத மண்டூகம்’ என்று மற்றவர்கள் குறைகூறிவிட்டு, தங்களுக்குள் அவனைப்பற்றி இஷ்டம்போல் பேசினார்கள்.

‘நாங்கள் என்ன சொன்னோம்? அப்பவே சொல்லவில்லையா?’ என்று அவர்கள் கொக்கரிப்பதற்குக் காலம் துணைபுரிந்தது.

நடக்க முயன்ற சுயம்புலிங்கப் பத்திரிகை தள்ளாடி விழுந்து, படுத்து, ஒரே கிடையாய்க் கிடந்து முடிந்தது.

அவன் வேறு முயற்சிகள் செய்து புத்தக வெளியீட்டகம் ஒன்று தொடங்கினான். ‘சிந்தனைத் தீவட்டி‘ என்ற பெயரில் சுடர்ப்பொறிகளையும், சத்திய வாக்குகளையும் நூல்களாக உலுப்பித் தள்ளினான்.

பத்திரிகை தொடங்கும் முன்பு அரைப் பட்டினி ஆசாமி போல் தோன்றிய அவன் பத்திரிகை நின்றபோது ‘கஞ்சிக்கு இல்லாதவன்’ போல் காட்சி அளித்தான். இப்போது பெரும் பஞ்சத்தில் அடிபட்ட நித்திய தரித்திரன்போல் மாறியிருந்தான்.

அவனைப் பார்த்தவர்களுக்கு இப்போது தயக்கம் ஏற்படவேயில்லை. அவன் சரியான முட்டாள் என்று ஒங்கி அடித்துச் சொன்னார்கள்.

ஒருநாள் அவன் புத்தக வெளியீட்டகத்தையும் இழுத்து மூடிவிட்டு எங்கோ போய் மறைந்தான்.

மூன்று வருடங்களுக்குப் பிறகு, சுயம்புலிங்கத்தைப் பற்றி எல்லோரும் பேசலானார்கள். வியப்புத்தான் பல குரல்களின் ஒரே தொனியாக அமைந்தது.

சுயம்புலிங்கம் ‘ஆள் அடையாளமே தெரியாதபடி மாறிப் போனான்’ என்று சொன்னர்கள். பழைய ‘அரிசி அப்பளாம்’ தோற்றம் இல்லை. உளுத்தங்களி உருண்டை மேலே எண்ணெய் தடவி, பெரிதாகத் திரட்டப்பட்டது போல் மினுமினுப்புடன் இருக்கிறான் என்று ஒருவர் சொன்னார். ‘தொந்தி போட்டு, குட்டி முதலாளி கணக்கா… எப்படி இருக்கான்கிறீர்!’ என்றார் ஒருவர்.

‘நாம் அப்பவே சொல்லலியா? அவன் சரியான புத்திசாலிதான்’ என்று பலரும் சொன்னார்கள்.

அவனைச் சந்திப்பதற்காகவே ஒவ்வொருவரும் பக்கத்துக்கு நகரத்துக்குப் போய் வந்தார்கள்.

உண்மைதான். சுயம்புலிங்கம் ரொம்பவும் முன்னேறிவிட்டான். உலகத்தைப் புரிந்துகொண்டு, நாட்டினரின் தேவையைப் பூர்த்தி செய்யும் சாமர்த்தியசாலியாக வளர்ந்தான். வாரிவிடாத கிராப்பும், கண்ணாடி அணிந்த முகமும், தொளதொளத்த ஜிப்பாவுமாக, புத்திசாலிக்களேயோடு அவன் ஜம்.மென்று கொலுவிருந்தான் ‘திருவள்ளுவர் பார்மஸி’யில்,

இந்த நாட்டில் தழைத்தோங்கும் ‘குடிசைத் தொழில்’ ஆகிவிட்ட ‘அரிஷ்டம்’ உற்பத்தியை, பழரசம் தயாரிப்பை, அவனும் உரிய ஒரு வாத்தியார்’ மூலம் கற்றுக்கொண்டான். தீவிர உற்பத்தியில் ஈடுபட்டான். தேவையான லைசென்ஸ் வாங்கிக்கொண்டு, முக்கிய இடம் ஒன்றில் ‘பார்மசி’யைத் திறந்து வைத்தான்.

‘அருமையான பிஸினஸ். தண்டர் ஸேல்ஸ் தான்’ என்று அவனே அகமகிழ்ந்து போனான் முதல் வருஷத்தின் ஆரம்ப மாதங்களிலேயே.

அப்புறம் என்ன? கட்டிடம் சொந்தம் ஆயிற்று. இன்னும் சில இடங்களில் பிராஞ்சுகள். இரண்டு பங்களாக்கள், ‘நம்ம ஒய்ஃப் லட்சுமிக்கு ஒண்ணு: லைய்ப் விஜயாவுக்கு ஒண்ணு!’ என்று பெருமையோடு பேசினான் அவன்.

காரும் வாங்கி விட்டான்.

‘மக்களின் சேவை மகேசனின் சேவை. சும்மாவா சொன்னான் மக்களுக்கு எது தேவையோ அதைக் கொடுப்போம். மக்கள் நம்மை வாழவைப்பார்கள். திருவள்ளுவர் பார்மசிக்கு இன்னும் சில பிராஞ்சுகள் ஒப்பன்பண்ணியாகனும்’ என்று அவன் முழக்கம் செய்வது சகஜமாகி விட்டது.

அவனைக் காணச் செல்லும் நண்பர்களைப் பிரமாதமாக உபசரித்தான். கண்டு பேச வந்தவர்களுக்கு அல்வாவும், மிக்ஸரும், காப்பியும் சப்ளை செய்தான்.

‘நீங்க திருவள்ளுவர் தினத்தன்று வந்திருக்கனும், அண்ணாச்சி, ரொம்ப கிராண்டு போங்க! திருவள்ளுவர் முக்தி அடைஞ்ச நாளைக் கொண்டாடணும்னு சில புலவர்கன் சொன்னங்க. கூடாது; அவர் பிறந்த நாளைத்தான் கொண்டாடணுமின்னு வேறு சில அறிவாளிகள் சொன்னங்க. மாட்டுப் பொங்கல் நாளே திருவள்ளுவர் தினமாக்குங்கன்னு: நாட்டுக்கு அறிவிப்பு விடுத்திருக்குது அரசு. நமக்கெதுக்கு வீண் பொல்லாப்பு! நான் மூன்று நாளையுமே கொண்டாடுறதை வழக்கமாக்கிப் போட்டேன்’ என்று சொல்லி, அட்டகாசமாய்ச் சிரிப்பான் சுயம்பு.

அபிப்பிராய பேதம் என்பது அபிப்பிராயம் என்கிற ஒன்று இருக்கிற வரை இருந்துக்கிட்டே தான் இருக்கும் அண்ணாச்சி! பேதங்களை ஒழிக்கணும்னு சொன்னா, சகல அபிப்பிராயங்களையும் ஆதரிப்பது ஒன்றுதான் வழி. அதையே தான் நான் செய்வது!’ என்று அவன் ஒலிபரப்பத் தவறுவதும் இல்லே.

இப்போது அவனைப் பற்றி அபிப்பிராய பேதங்கள் அழவேயில்லை. ‘சுயம்புலிங்கமா? அவன் தான்யா பிழைக்கத் தெரிந்த புத்திசாலி!’ என்றே எல்லோரும் சொன்னர்கள்.

– ‘தீபம்’, ஏப்ரல் 1970

– அருமையான துணை, முதற் பதிப்பு: நவம்பர் 1991, கிறுஸ்தவ இலக்கியச் சங்கம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *