புதுப்பட்டிக் கிராமத்திற்கு கடைசி டிக்கட்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 30, 2021
பார்வையிட்டோர்: 2,478 
 

“போய்த்தான் ஆகணும், ஆபிஸ்ல சொல்லிட்டாக … நாளைக்கு காலையிலேயே காம்பராவைப் பூட்டி, சாவிய தலைவர்கிட்டே ஒப்படைச்சிடனும், பெரிய தொரெ கிளாக் கர் ஐயா மூலமா தெரிவிச்சுட்டாரு…”

“போகல்லேனா இவங்க என்ன செஞ்சிப்புடுவாங்களாம். வேணும்னு ‘பை போஸா’ லயக் காம்பராவ எடுத்துக்குவாங்க … எடு.”

சிந்தனை வயப்பட்ட சின்னையா, தோட்ட அலுவலகத் திலிருந்து குறுக்குப் பாதை வழியாக இறங்கிக் கொண்டிருந்தான்.

“அதுக்கு முந்தி இன்னக்கே தோட்டக்கத்தி, மம்பெட்டி சாமான் இருந்தா, ஆயுதக்காரர்கிட்டே குடுத்துடு”

“அப்புறம் எனக்கு என்னத்துக்கு ஐயா அந்த தேஞ்ச கத்தியும் மம்பெட்டியும்; அதான் எங்கள உசுரோட வெட்ட டிக் குழி தோண்டிப் புதைச்சிட்டியே…ம்…”

குறுக்குப் பாதை வழியாக இறங்கிய சின்னையாவுக்கு கால்கள் உளைச்சல் எடுத்தன – மனமும் தான். வயதும் ஐம்பத்தைந்து பிந்தியிட்டது. அரசாங்கத் தொழிலாளியாக இருந்தா பென்சனுக்கு எழுதிப்போட்டுச் செவனேண்டு வீட்டுல கெடப்பானுக.

இறங்கியவன் ‘அகஸ்மாத்தாக’ ஒரு தடவை வந்த வழியை அண்ணாந்து பார்த்தான்.

‘இனி நாம எப்ப இதெல்லாம் பார்க்கப் போறோம்.’

மேகம் சூழ்ந்த அத்தப் பெரிய மலையே அமுங்குவது போல் – உள்ளம் கனத்துப் போயிருந்தது.

வழிநெடுகச் சந்திப்புகள். விசாரிப்புகள் –

“ஆபிஸ்ல ஒனக்கு என்ன சொன்னாங்க”

கேள்வி கேட்டுக்கேட்டு உசுர எடுத்துட்டாங்க. அவனுக்கும் சொல்லிச் சொல்லி அலுத்துப்போய் நடந்தது என்னமோ இதுதான் –

“அந்தச் சின்னையாவ ஆபிசுக்கு வரச்சொல்லுங்க; அவன் விசயத்த முடிச்சுடனும்!”

‘பெரிய கிளாக்கர் ஐயா’ பீல்ட் ஆபிசருக்கு உத்தியோக பூர்வமாக டெலிபோன் பண்ணியிருக்கிறார். அவரும், சம் பிரதாயச் சுவடு மாறாமல் ‘லேபர் டயறியில்’ முதல் ஆளாக அவன் பெயர் காரணம் எல்லாம் எழுதி அனுப்பிவிட்டார். அதன் பிரகாரம் இன்று –

“திங்கட் கிழமை – லேபர்டே.”

தோட்டப் பிரட்டு சின்னையா –

“இப்ப எதையும் பேசிப் பிரயோசனம் இல்ல, ஒன்றும் பலிக்காது.” என்று அவனுக்குத் தெரியும். இருந்தாலும் ‘நப்பாசை’ யாரை விட்டது.

“என்ன தான் சொல்லப்போறாங்கன்னு பாப்பமே!”

மாலை மூன்று மணிக்கே, முதல் ஆளாக தோட்ட அலுவலக முன்றிலில் உள்ள மா மர நிழலில் வந்து நின்றான். அந்த நிழலில் நிற்பதில் அவனுக்கு ஒரு பெருமை. அது எத்தனையோ வருடங்களுக்கு முன் – இளமை வேகத்தில் அவன் கைபட நாட்டிய மரம்தான். அதை வளைத்துச் செல் லும் தார் ரோட்டின் இருமருங்கிலும் வானைத் தொட்டு புதுப்பட்டி கிராமத்திற்கு ஒரு புதுச்செய்தியை சொல்லப் போவது போல், உயரச் செல்லும் சடைசவுக்கு மரத்தடியி லும் ஒவ்வொருவராக வந்து சேரத் தொடங்கினர். ஆட் கள் வந்து சேரச்சேர அங்கு நிலவிய அமைதி சோர்வடைந்தது.

வாரத்தின் முதல் நாள் – திங்கள் மாலை தோட்டத் தொழிலாளர் துரையோடு தத்தம் பிரச்சினைகளை மனம் விட்டுப் பேச ஒரு சிறு சந்தர்ப்பம்.

சின்னையா தோட்டத்திற்கு பழைய ஆள், காலதாமதம் செய்யாமல் அவருடைய விவகாரத்தை ‘சட்புட்’டென்று முடித்துவிட்டு எவ்வளவு சீக்கிரத்தில் அனுப்ப முடியுமோ அவ்வளவு விரைவாக அனுப்பிவிட வேண்டும் என்ற கங்கணமோ!

“ஆமா மரியாதயா புதுப்பட்டிக்குப் போன்னு சொல்லிவிட்டாங்க…இந்தப் புதுப்பட்டிக் கிராமம் இந்தியாவில் எங்கே இருக்கு? அது தான் சொந்த ஊருன்னு கேள்விப் பட்டிருக்கேன்.. ஆனால் இலங்கைக்கு எப்ப வந்தேன்? தலைமுறை வழிவாரம் ஒன்றும் தெரியலியே…”

‘தொரெ வந்ததும் மர நிழலில் சவடாலாய் பம்மிக் கிடந்தவங்க எல்லாம் எழுந்து ராஜ மரியாதை – என்னப் பார்த்து சிரிச்சிக்கிட்டே உள்ளே போனார் தொரெ…’

‘அப்புறம் பெரிய கிளாக்கர் ஐயா பம்பரம் போல ஆடினார். ஜன்னல்கள் திறக்கப்பட்டதும் போய் நின்றோம். எடுத்த எடுப்பிலேயே தோட்டப்பிரட்டி சின்னையா வரலாம்…’

“பெரிய தொரெ டெலிபோனை அணச்சி ஒறயாடிக் கிட்டே இருந்தார்.”

பெரிய கிளாக்கர் ஐயாவின் அடித் தொண்டையிலிருந்து பீரங்கி வெடித்தது.

“அட சின்னையா விசயந்தான் எல்லாருக்கும் தெரியுமே, அவன் தலைவிதியத்தான் சட்டம் நிர்ணயிச்சிருக்கே, அப்புறம் விசயமில்லாம வந்து ஆபீஸ்ல மாநாடு போடாம…சின்னையாகிட்ட ஏதும் பேச இருந்தா லயத்தில போய் பேசிக்கலாம்!”

கூட்டம் சிதறியது – ஆபீஸ் விசயம் சீராக நடந்தன.

கொடுக்கவேண்டிய பற்றுச்சீட்டு இதர தஸ்தாவேஜுகள் கையொப்பங்கள் சகலதுக்கும் பந்து நிமிடங்கள்.

‘தொரெ’ கைக் கடிகாரத்தைப் பார்த்தார்.

றக்கர் விளையாட ‘அவுட்’ ஆகிவிடலாம்.

சின்னையாவுக்கு துரை வாழ்த்தினார்.

“விஸ் யூ ஆல் தி பெஸ்ட்”

சின்னையாவும் கம்பீரமாக நிமிர்ந்து, சிப்பாயைப்போல – சலாமுங்க! – இறுதி ‘சலுட்’ அடித்துவிட்டு குறுக்குப் பாதை வழியாக நடந்து வந்தான்.

எதிரே தான் சார்ந்த யூனியன் பிரதிநிதி ஒருவர் சின்னையாவைச் சந்திப்பதற்காகவே வந்தவர் –

“என்னப்பா நடந்தது. அவ்வளவு சுருக்கமா ஆபீஸ்லருந்து வந்துட்டியாப்பா..என்ன விசயம்?”

“அப்புறம் என்ன சொல்லக் கெடக்குது”

சின்னையா நடந்ததை ஒன்றும் விடாமல் சொல்லி அனுப்பினான்.

“பெரிய கிளாக்கர் ஐயா வீட்டு வேலைக்காரன் செல்வராஜ்” எதிரே வந்து கொண்டிருந்தான்.

“டேய் செல்வராஜ் மாப்பிள, என்னடா அது சாக்குல கொண்டு போரே?”

“பூனை”…பெரிய தொல்லையாயிருக்குண்ணு, பத்துக் கட்டைக்கி அங்கால விட்டாலும் மோப்பம் புடிச்சி வந்து டுதுங்க ஐயா சொன்னாருங்க சாக்குல கட்டிக் கொண்டு போய் நம்ப ஆத்துக்கு அக்கரையில விட்டுட்டுவர சொன்னாருங்க..பூனையைக் கொல்லக் கூடாதாம், பாவம்…”

“ஆ … அப்படியா …”

சின்னையா ஒரு பெரிய சிரிப்பு சிரித்தான். அது நீண்ட நிமிடங்களாயின. அப்பொழுதும் முற்றாக ஓயவில்லை.

“ஹ ஹ ஹ ஹி ஹி ஹி…”

“அப்படியா சங்கதி, அப்படீனா நாளைக்கி காலையில இந்தியாவுக்குப் போறேன் .. வேனும்னா அதுக்கும் சேர்த்து புதுப்பட்டி கிராமத்துக்கு ஒரு டிக்கட் எடுக்கிறேன்…”

செல்வராஜ் சிரித்து மறைந்துவிட்டான்.

‘அவனுக்கு அடுத்த தையில் கல்யாணமாம், அப்புறம் அவனுக்கு ஒரு லயக்காம்பரா வேணும் அதுக்குத்தான் ஐயா நம்ப லயத்துக்கு ‘பிளான்’ பண்ணிட்டாரே பாவம் பொளச்சிட்டு போறான். பய…’

‘அந்தப் பூனைய கொல்லக் கூடாதாம்…பூனைப்பாவம் பெரும்பாவமாம்…அப்ப அதக் கொண்டுபோய் ஆற்றுக்கு

அக்கரையில விட்டுட்டா, அங்க வீடுவாசல் இல்ல, மியா மியான்னு மலைப்பிரதேசத்தில அலைஞ்சி திரியுமே . . . அது பாவமில்லையா…..?

சின்னையாவுக்கு தலை வெடிக்கிற மாதிரி ஒரு யோசனை,

புதுப்பட்டி?

‘சரி சரி லயத்துக்குபோய் –புதுப்பட்டி ஆளுங்க இங்கே இருக்கிறாங்கதானே! பூரா விசாரிச்சா போகுது. இல்லாட்டி கண்ணக்கட்டி காட்டுல வுட்டா நா எங்கே போறது? யார சந்திக்கிறது? என்ன செய்யிறது?’

‘பொறந்த ஊராம் அப்படின்னா கொழந்தயா இருக்கும் போது வந்திருப்பேனோ?, அப்பா, ஆயா தோள்ல ஏறித் தான் வந்திருப்பேனோ? அப்பாவும் ஆயாவும் இங்கயே உசுர உட்டுட்டாங்க. அப்புறம் கட்டிக்கிட்ட பெஞ்சாதி முதல் பிரசவத்திலேயே தாயும் புள்ளயுமா…’

ஐயோ,..எல்லோரும் இந்த மண்ணுக்குத்தானே உரமானாங்க…அப்புறம் தூரத்து உறவுக்காரங்க புதுப் பட்டியில் தானா இருக்காங்க…நா மட்டும் என் கட்சி மூச்ச அங்கதானாம் வுடனும்.’

அக்கரை மலையில் அந்தப் பூனை மியாவ் மியாவ்ணு அழுகிற சத்தம் பரிதாபமாகக் கேட்குதே!’

‘லயம் லயம்னு சாகப்போறாங்க, நா ஒண்டிக்கட்டயா இந்த லயத்தில இருக்கிறது, பெரிய பங்களாவில் இருக்கிற மாதிரியாம்; எல்லார் கண்ணிலயும் இப்ப அதுதான் குத்துது!’

லயத்துக்கு வந்து சேர்ந்தபோது மாலை இருளாக ஆயத்தம்.

“அட, சின்னையா ஆபிசிலிருந்து வந்துட்டாருடா, என்ன ஆச்சோ தெரியாது. வாங்கடா போய்க் கேப்போம்.”

இனி, அக்கம் பக்கத்தவர்கள் காம்பராவுக்குப் படை யெடுக்க ஆரம்பம்.

சின்னையாவுக்கு. ஒரு பக்கம் வெறுப்பும், சலிப்பும் சஞ்சலமும். அதன் மறுபக்கம் அன்புத்தொல்லை.

தோட்டத்தின் அறுநூறு சொச்சம் பேரும் தரிசிக்கத் தான் போகிறார்கள்.

அந்தப் படையெடுப்புக்கு முன் –

அவன் அவசரப்படுகிறான் – வந்ததும் வராததுமாக.

“ஏ பாப்பம்மா… வாளிய அடுப்பில வச்சிட்டு, தண்ணி மொண்டு ஊத்துவியா புள்ள.”

அவன் குரலில் என்றுமில்லாத சோகம் கவிந்திருப்பதை அந்தப் பதின்மூன்று வயதுப் பாப்பாவுக்கு என்ன தெரியப் போகிறது. அவள் வாய்க்கு வார்த்தைகளைக் கொடுக்கிறாள்.

“‘ஊத்துவியான்னா நீ மட்டும் இங்கே ராஜா மாதிரி குந்திக்கிட்டு இருக்கே. தண்ணி சுடவைக்க, தேத்தண்ணி ஊத்த அப்பப்பா எல்லாத்துக்கும் பாப்பம்மாதானே ஒனக்கு வேலக்காரி. கொஞ்ச நேரம் சும்மா இருக்க விடுவியா?”

உடம்பெல்லாம் துளிர்த்த வியர்வையில் ஒட்டிக்கொண்டிருந்த செம்மண் புழுதியைக் கழுவி, இந்த மண்ணுக்கே இறைத்துவிட எண்ணினான்.

“அட கோவிச்சுக்காத புள்ள, இன்னிக்கு மட்டுந்தானே, உன்னோட தங்கக் கையிலை தண்ணி சுடவைச்சி குளிக்கப் போறேன். அப்புறம்…”

நெஞ்சம் விம்மி, கண்களில் நீர் முட்டியது.

அவனால் பேச முடியவில்லை. தொண்டையை அடைத் துக்கொண்டது. சிரமப்பட்டுச் சொன்னான் –

“பாப்பம்மா காலங்காத்தாலே புதுப்பட்டிக்கு பொறப் படப்போறேன்.”

சின்னையாவின் தேம்பிய சொற்கள் அவன்மீது பாப் பம்மாவின் இள மனதில் வளர்ந்திருந்த காரணமில்லாத வெறுப்பைத் தகர்த்துவிட்டன.

“பாப்பம்மா நானும் ஊருக்குப் போகப் போகிறேன்” இந்த நான்கு சொற்கள், அவள் கண்களையும் பொல பொல வென்று பனிக்கச் செய்து விட்டன. அவள் காட்டிக் கொள்ளவில்லை.

“பாப்பு என்ன இன்னும் நின்னுகிட்டு இருக்கே – சட்டுபுட்டுன்னு போய் ரெண்டு கட்டையை எடுத்து வச்சிட்டு, மண்டி எண்ணையே ஊத்தி எரிச்சிவிடு. நல்லா தண்ணி சுடட்டும். நா இன்னும் கொஞ்சம் மாறு பொறுக்கிக்கிட்டு வாறேன்.”

“அடி பாப்பம்மா அங்க என்னடி, தாத்தாவோட வாய் குடுத்துக்கிட்டு இருக்கே?”

அவளின் தாய் தனலெட்சுமி திண்ணையில் இருந்து கொண்டே இரைகிறாள் –

அவளுக்கு இன்னும் விசயம் எட்டவில்லையோ! சின்னையாவின் லயத்துக்கு வலப்பக்கம் மூன்றாவது காம் பராவில் குடியிருக்கும் கார்மேகனின் மகள் தான் பாப்பம்மா.

சின்னையாவுக்கு அங்கேதான் சாப்பாடு, தண்ணி வெண்ணி எல்லாம் காசு, ‘ரேஷன் சாமான்’ எல்லாம் கொடுப்பான்.

சின்னையாவுக்கு அவர்கள் கிட்டத்திலோ தூரத்திலோ உறவுக்காரர்கள் அல்ல. அதைவிட தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்தவர்கள். அந்தப் பலம் வாய்ந்த இணைப்பில், ஒருவருக்கொருவர் பரஸ்பர ஒற்றுமையுடையவர்கள்.

இரவு ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததைப்போல அடுப்பில் ஏற்றிய நீரும் சூடேறிக்கொண்டிருந்தது. புகை சூழ, அவன் அள்ளி அள்ளி ஊற்றிக் கொண்டான்.

குளிப்பு முடிந்துவிட்டது. உடம்பெல்லாம் ஒருவகைக்கூ தல், சுள் சுள் என்று குத்த, கருங் கம்பளியால் போர்த்துக் கொண்டான். அப்படியும் உதடுகள் கிளாக்கர் ஐயா ‘டைப்’ அடிப்பதுபோல் இருந்தது. ஒரு நிமிடத்தில் மூன்று சொற்கள் –

இனிமே – எங்கே..குளிக்கிறது.

திண்ணையில் ஒரு மூலையில், முதுகைச் சுவரில் சாய்த்து சிந்தனையில் மூழ்கிக் கிடந்தான்.

சக தொழிலாளர் வருவதும் போவதும் விசாரிப்பது மாக இருந்தார்கள் –

சின்னையா இந்தியாவுக்குப் போகப்போகிறான் என்னும் தீ தோட்டமெங்கும் பரவி அதன் ஜுவாலை இனிய நெஞ் சங்களைச் சுட்டுக் கொண்டிருந்தது.

இந்த லயம் நாளைக்கோ மறு நாளைக்கோ செல்வராஜ் பயலுக்கு சொந்தமாகப்போகுது. அவனை நினைக்கும்போது கூடவே அந்தப் பூனையின் நெனப்பும் வருகுதே …. பாவம் அது இந்த நேரம் அக்கரைமலைக் காட்டில் என்ன பாடு படுமோ! அல்லது திரும்பவும்…

சென்ற சில வருடங்களுக்கு முன், இனி எஞ்சியுள்ள வாழ்க்கைப் போராட்டம் இலங்கையிலா? இந்தியாவிலா? என்ற பிரச்சினை அவன் வாழ்க்கையிலும் புகுந்து ஊஞ்சலா டிக்கொண்டிருந்தது. நடுவிலே மனிதனைப் பிரிக்கும் ஆழ நீலக்கடல்.

இங்கேயா? அங்கேயா?

அவன் ஒரு முடிவு செய்யாமலே இருந்துவிட்டான்.

ஊஞ்சலும் ஆடி ஆடி அறுந்துவிடும் நிலைக்கு வந்து விட்டது.

கார்மேகன் வீட்டில் இராப் போசன விருந்துக்கு ஏற் பாடாகி இருந்தது. கோழிக்கறியும் சோறும். எப்போதும் போல் மேல் வருத்தத்துக்கு’ என்று அளவோடு எடுக்கும் மருந்து பரிமாறப்பட்டதும் சின்னையாவின் குளிர் பறந்து விட்டது.

தலைவர் நல்லையாவின் தலைமையில் சின்னையாவின் சகாக்கள் கூடியிருந்தார்கள்.

புதுப்பட்டிக் கிராமத்தைப் பற்றி ஒரு மகாநாடு நடந்து முடிந்து விட்டது.

சின்னையாவுக்குச் செந்தமாயிருந்த ஒரேயொரு ‘டிறங் குப் பெட்டி.’ அதைத் தூக்கிக் கொண்டு போக சிரமம். அதை பாப்பம்மாவுக்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டு ஒரு அளவான கைப்பை, அற்புதமாக இருந்தது. ஒரு கன மான காகித உறையில் பிரயாணத்தின்போது தேவைப் படும் முக்கிய தஸ்தாவேஜுகள் – திறந்ததும் எடுக்குமாப் போல…

நான்கு வயதில் இலங்கைக்கு வந்திருந்தாலும் ஐம்பத் தொரு வருடங்களுக்குப் பின் பழக்கமே இல்லாத ஊருக்குப் போகும்போது உழைத்துக் கொண்டுபோகும் சொத்தெல் லாம் ஒரு சிறு கைப்பைக்குள் தானே அடங்கும்.

சொல்லவேண்டியவர்களுக்கு எல்லாம் சொல்லியா யிற்று. கறுப்புக்கோட், சட்டை, வேட்டி உடுத்து பிரயா ணத்துக்கு வாங்கி வைத்திருந்த புதுச் செருப்பையும் மாட்டிக்கொண்டு, கைப்பையையும் தோளில் தொங்கவிட்டுக் கொண்டு, காம்பரா சாவியை தலைவரிடம் ஒப்படைத்தாயிற்று…

அப்புறம் இந்த மண்ணுக்கும் அவனுக்கும் எந்த பந்தமும் இல்லை.

“புதுப்பட்டி கிராமத்தில் தான் போய் சாகணும்னு, மரண தண்டனையா?”

ஆறரை மணிக்கு பயணம் சொல்லியனுப்ப ஒரு கூட் டம். பஸ்ஸில் ஏறியதும் அதில் கால்வாசிப்பேர் ‘ஸ்டேசன் வரைக்கும் வர்றோம்னு’ ஏறினாங்க. அப்புறம் நா வலப் பிட்டி ஸ்டேசனில் அவுகளும் நின்னுட்டாக –

“தலைமன்னாருக்கு போக – கோச்சி ரெண்டு மணிநேரம் சொனங்களாம்…”

“அப்படியா…அதுவும் நல்லதுக்கு தான், அப்ப நீங்கள் ளாம் இங்க நிண்டு ஒங்க வேலைவெட்டிகள் கெடுக்காம எல்லாரும் போங்க. கோச்சி வந்ததும் நா ஏறிக்குவேன். சரிங்களா”

வழியனுப்ப வந்து நின்றுகொண்டிருப்பவர்களுக்கும், அதுதான் சரியாகப் பட்டது.

அவர்கள் அனைவரும் –

“அப்ப போய்ட்டு வாங்க, போய்ட்டு வாங்க” என்று அன்பு கனிந்து, கையசைத்து விடை பெற்று, சென்று மறைந்தனர்.

போறதாவது….வாறதாவது… அப்புறம் போய்ட்டு வரணுமாக்கும் கோச்சே போறதுக்கு சொனங்குதாம். நா மட்டும் சொனங்கினா என்ன? ரெண்டு மணி நேர சொனக்கம் என்ன! எத்தனை வருஷம் சொனங்கினாலும் சொனங்கட்டுமே, கண்காணாத புதுப்பட்டிக் கிராமத்துக்கு கடசி ஆளா இருந்துவிட்டுப் போறனே. என் ஒருத்தனால யாருக்கும் குறைஞ்சிடப் போவுதா ….

காலச் சக்கர ஓட்டத்தில். ஒரு நாள் காலைப்பொழுது, தோட்டமெங்கும் ஒரே பரபரப்பு. ‘லயக் காட்டில’ உள்ள புதிய தலைமுறையினர் புதினம் பார்க்க ஓடோடி வந்தனர்

யாரோ ஒரு புள்ள புடிக்கிற சாமியார் வந்திருக்கா ராம், போய்ப் பார்ப்போம்’.

கற்றை கற்றையாக நீண்ட வெள்ளைத்தாடி, புழுதி படிந்ததால் நிறம் மாறி கசங்கிப்போன கோட், வெண்மை வெளுத்துப்போன வேட்டி சகிதம்…

“சாமியார் நீங்க யாரு?”

என்ன கேட்டாலும் ஓர் ஊமைச் சிரிப்பு. ‘இந்த ஆள் அக்கரை காட்டிலிருந்து வாரத கண்டிருக் கேன்..”

‘சாமியார் பாப்பம்மா லயப்பக்கம் எட்டி எட்டிப் பாக்கிறத பாத்திருக்கேன்…’

‘செல்வராஜ் லயத்தையே உத்துப் பாத்துக்கிட்டு இருப்பாரு.’

‘ஆபிசுக்கு முன்னால மா மர நிழலிலும் குந்திக்கிட்டு இருப்பாரு.’

‘யாரோ எவரோ ஆள் இந்தப் பக்கத்துக்கு புதுசு…புள்ள குட்டிங்க கண்டமாதிரி ஓடித் திரியாதீங்க..அக்கரை மலைக்கு அப்பால பாலம் கட்டுராங்களாம்…அப்புறம் சாமியார் ‘பெலி’ குடுக்க புடிச்சிட்டுப் போயிடுவாரு!

குழந்தைகள் எல்லாம் மிரண்டு ஓடி ஒளிந்து கொள்கின்றனர்.

“அட ராமு, லதா, பாண்டியா! சொல்றது கேக்குதா எல்லாம் உள்ளுக்கு வந்து விளையாடுங்க புள்ளகளா..”

பாப்பம்மா தன் அன்புக் குஞ்சுகளை அரவணைத்துக் கொள்கிறாள்.

அதற்குப் பின்னர் நடந்த சம்பவங்களால் மனம் புண்பட்டுப் போனவனுக்கு மண்ணின் மீதே வெறுப்பேற்பட்டிருக்க வேண்டும்.

கொஞ்ச நாளாக –

‘சாமியார் தலைமன்னார் கோச்சியில் ஏறினார்’ என்று ஒரு புதுச் செய்தி அடிபட்டு ஓய்ந்தது.

– வீரகேசரி – மே:1984 – இரவின் ராகங்கள் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு : ஜூலை 1987, மல்லிகைப்பந்தல், யாழ்ப்பாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *