பாவ மன்னிப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 27, 2021
பார்வையிட்டோர்: 4,946 
 

வானம் பிளந்து கொண்டதோ என்னமோ …கருக்கொண்ட மேகங்கள் சுமைதங்காது நீர்த்தாரையைத் தெறிக்கவிட்டிருந்தன…..மேகங்களின் கூச்சல் பொறுக்காது மின்னல் சாட்டை கொண்டு வீசிற்று…

கடல் அலைகள் பொங்கி வானத்தைத் தொட்டு விடத்துடித்தன ….காற்று ஆவேசம் வந்தது போலச் சுழன்று அடித்தது…..பிரளய காலம் இவ்வாறுதான் இருக்குமோ…

வெளி ஆரவாரங்கள் எவையும் அவர் மனதைத் தொடவில்லை ஆனாலும் அவர் மனதிலும் புயல் அடித்துக் கொண்டிருந்தது.அப்புயலில் அகப்பட்ட சிறு இலை போல் அவரது மனம் அமைதியின்றி அலைக்கழிந்து கொண்டிருந்தது.அமுதாவின் உயர்ந்த உள்ளத்தின் முன்னே தான் மிகக் கேவலமான சிறு புழுவாக இருப்பதை எண்ணித் துடித்துக்கொண்டிருந்தார்.

சிவராமன் இது தான் அவர் பெயர். அறுபதுகளைத்தொடும் அவர் வாழ்க்கை மனதின் கட்டளைப் படியே இதுவரை சென்றிருந்தது.

வாழ்வின் இன்பங்கள் யாவற்றையும் அனுபவித்திட வேண்டும் என்ற வேட்கை அவன் மனதினை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது.

மகிழ்ச்சியும் அதனால் அடையும் இன்பமும் அக மனதில் இருந்து ஊற்றெடுக்க வேண்டும் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.

அவன் பொருள்கள் வாயிலாகவே அந்த இன்பத்தை அடைய முடியும் என முழுமையாக நம்பினான்.

இதனால் பணம் அவன் தேடு பொருளாக அமைந்ததில் வியப்பொன்றும் இல்லைத்தான். மிகவும் சதாரண குடும்பத்தில் பிறந்ததனால் தந்தைவழி முதுசமாக எப்பொருளும் அவனை வந்தடையவில்லை.

படிப்பும் அவனுக்கு அதிகம் ஏற வில்லை. உத்தியோகத்தால் தன்னால் அதிகம் சம்பாதிக்க முடியாது என்பது அவனுக்கு நன்கு தெரிந்த்தது. அதனால் குறுக்கு வழியில் எப்படியாவது சம்பாதித்து விடவேண்டும் என்று தீர்மானித்தான். அதற்கு அவன் இலகுவான வழியாக அரசியலைத் தேர்ந்தெடுத்தான்.

அரசியலில் ஒரு சிறு பதவியைப் பெறுவதற்கே அவன் பலபேரைத் திருப்தி செய்ய வேண்டியிருந்தது. உண்மைத்தொண்டரை இடரி விழுத்த வேண்டியிருந்தது.பலநூறு பொயகளைச் சொல்ல வேண்டியிருந்தது..தனக்குத்துரோகம் செய்யக்கூடியவர்களை இனங்காணவும் தான் பலருக்கு துரோகம் செய்யவும் வேண்டியிருந்தது.மொத்தத்தில் தனது பாதையில் உள்ள தடைகள் யாவற்றியும் மிகச் சாதுரியமாகக் கடந்து தன்நலத்தைப் பாதுகாக்க வேண்டியிருந்தது.

இந்தப் பயணத்தின் போது அவனால் பாதிப்புக்குள்ளானவர்கள் பலர் என்பதையும் அப் பாதிப்புக்கள் மிகவும் கொடுமையானவை என்பதையும் அவன் நன்கு அறிந்திருந்தான். ஆனால் பணப் போதையும் குடிபாதையும் அவனது குற்ற உணர்வுகளை மறக்கடிக்க வைத்தன.அவனது பேராசை மனச் சாட்சியின் குரல்வளையைத் திருகி எறிந்திருந்தது. பதவிப் படிகளில் விரைவாக ஏறி பணப் புதையலை அடைந்துகொண்டிருந்தான்

மண், பெண் , பொன் தேவைக்கதிகமாகவே அவனுக்கு கிடைத்துவிட்டன.மேலும் மேலும் கிடைத்துக் கொண்டிருந்தன. கொள்கைக்காக இல்லை ……அரசியலில் கிடைக்கும் பெரும் பதவிகள் அதன்வழி கிடைத்த அதிகாரங்கள் இவை தரும் போதையில் அவன் தன்னை முழுமையாக ஆழ்த்திக் கொண்டான் .இதனால் தனக்கென ஒரு குடும்பத்தை அமைப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இன்பத்தில் மட்டுமல்ல அவனது துன்பத்திலும் உண்மையுடன் உடனிருக்கும் உறவுகள் இல்லாமல் போயிற்று.

அவன் நினைத்தவற்றை நிறைவேற்ற ஒரு கூட்டம் அருகில் இருந்தது. அக்கூட்டம் முழுமையான நம்பிக்கைகுரியதாகவோ அவன் மீது அன்பு கொண்டதாகவோ இருக்கவில்லை. கூலை கும்பிடு போடும் கூட்டமாகவே இருந்தது.

எவ்வளவுதான் துரோகிகளை இனங்காணும் திறன் அவனிடம் இருந்தாலும் தனக்கு இக்கட்டான சந்தர்பங்களில் கைகொடுத்த சிலரை அவன் முழுமையாக நம்பினான்..அவர்களையே தனக்கு மிக அந்தரங்க மான உறவுகளாகக் கொண்டாடி வந்தான். அவர்கள் அறியாத இரகசியங்கள் எவையும் அவனிடத்தில் இருக்கவில்லை. அவர்கள் அவனது பலத்தையும் பலவீனத்தையும் நன்கு அறிந்து வைத்திருந்தார்கள்.

இவர்களுள்ளும் நரேந்திரன் அவன் மனைவி கலா இவர்களைத் தனது சொந்தச் சகோதரர்களாகவே கருதினான். ஆனால் அவர்கள்தான் அவனை படுபாதாளத்தில் தள்ளி அவன் சொத்துக்களை அபகரிக்கக் காலம் கனியக் காத்திருக்கும் கழுகுகள் என்பதை அவன் கனவில் கூடக் கருதியிருக்கவில்லை.

அரசியலில் வெற்றியோ தோல்வியோ நிரந்தரமில்லை என்பதை சிவா தனது முப்பது வருட அரசியல் வாழ்வில் நன்கு அறிந்திருந்தான் .வெற்றிபெற்ற காலத்தில் சொத்துக்களைச் சேர்ப்பதும் தோல்விக்காலத்தில் சொத்துக்குவிப்பு வழக்குகளில் சிக்கிய போதும் அவ்வழக்குகளை வெற்றிகொண்டு சேர்த்தசொத்து பறிபோகாமல் பாதுகாப்பதோடு அடுத்த வெற்றிக்கான வழிகளைத்தேடுவதும் சிவாவின் வழமையான செயற்பாடாக இருந்துவந்திருக்கிறது..

ஆனால் இம்முறை நடந்த தெர்தலில் அவன் அடைந்த தோல்வி சற்றும் எதிர்பார்த்திராததாக மட்டுமன்றி அதிலிருந்து மீழ்வதற்கு கடினமானதாகவும் இருந்தது.

மிகவும் மனச் சோர்வுடன் வீடுவந்தான் அவன் .அவனை கலாவும் நரேந்திரனும் வழமைபோல வாஞ்சையுடன் எதிர்கொண்டனர் நரேந்திரன் சிவாவுக்காக மிகவும் வருந்தியபோதும் தனது கவலையை மறைத்து சிவாவுக்கு ஆறுதல் கூறுவதாக சிவாகருதும்படி நடந்துகொண்டான். கலாவோ சொந்த சகோதரனின் தோல்வியை கண்டு துவண்டவளாய் கண்ணீரில் கரைந்தாள்.

சிவாவின் மனதில், மனித வாழ்வில் உறவுகள் மிக முக்கியமானவை என்பதை முதல் முதல் உணர்ந்ததாகத் தொன்றியது.மனம் முதல் முதலில் நெகிழ்ந்து கண்களில் நீர் எட்டிப்பார்த்தது.

சிவாவின் மனதை ஆற்றுவதற்காக் மதுவை தானே கோப்பையில் ஊற்றி வழங்கினான் நரேன். மனம் நெகிழ்ச்சியடைந்ததாலோ என்னவோ அவன் மிக மிக அதிகமாகத் தன்னைக் குடிக்கச் செய்ததை சிவாவால் உணரவோ தடுக்கவோ முடியவில்லை. போதை மிகவும் தலைக்கேறிய நிலையில் சிவாவிடம் பல பத்திரங்களில் கையெழுத்துக்கள் பெறப்பட்டன.

இன்று அரசியல் முதல் போட்டு வருமானம் எடுக்கும் தொழிலாக மாறி வருவதை நரேன் நன்கு கணித்திருந்தான்.அதனால் அடுத்ததேர்தலில் தனது வெற்றிக்காக சிவா தனது சொத்தில் பெரும் பகுதியை முதலிடத் தயங்கமாட்டான் என்பதை நரேனால் ஊகிக்கமுடிந்தது.. அவ்வாறான நிலமை வருவதை நரேன் சிறிதும் விரும்பவில்லை. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள எண்ணினான்.

சிவாவிடம் சிறிதளவு பணத்தை விட்டுவைத்தால் கூட அவன் மீண்டெழுந்திடக் கூடும் என்றும் நரேன் உள்ளூரப் பயந்திருக்க வேண்டும்.குண்டுமணியளவுகூட விடாமல் முழுச்சொத்துக்களையும் அவன் பறித்துக் கொண்டான். இவ்வாறு பணம் பறிப்பதுபற்றி நீண்டகாலம் திட்டமிட்டு காத்திருந்தது வீண்போகவில்லை.

இத்தோடு மட்டும் அவர்கள் திருப்திகொள்ளவில்லை .சலரோகம் காரணமாக சிவா பயன் படுத்தும் ஊசிமருந்தில் அவனது உடற் கலங்கள் செயலிழக்கும் வகையில் சில மருந்துகளைக் கலந்து ஏற்றினார்கள்.

அடுத்தநாள் ஊடகங்களில் சிவராமனது செய்தியே தலைப்புச் செய்தியானது. அரசியல் பிரமுகரான சிவா என அழைக்கப்படும் சிவராமன் அவர்கள் தேர்தல் தோல்வியை தாங்கமாட்டாது உடல்பாதிப்புக்குள்ளாகி அவருக்குச் சொந்தமான மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். தமது பேச்சால் மக்களைக் கவர்ந்து அரசியலில் வெற்றிகள் பலவற்றைக் குவித்த இவர் இன்று பேசமுடியாதவராய் இருப்பது வருந்தத்தக்கது.

சிவராமன் அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்தமையால் இவர் ,செய்திகள், ஊகங்கள் , சந்தேகங்கள் விமர்சனங்கள் என்ற வகையில் ஒருவருடத்துக்கு மேலாக ஊடகங்களில் பேசு பொருளாகினார். அந்தவகையில் ஊடகங்கள் கூட சிவராமனால் நன்மையடைந்தன என்றே கூறவேண்டும் .

அரசியலில் எப்பொழுது எவர் பக்கம் காற்றடிக்கும் என்பதை முன் கூட்டியே கணிப்பது கடினம். ஒரு கொலை செய்தவன், சிறிய களவு செய்தவன் எனக் குற்றம் புரியும் சாதரண குடிமகனைச் சட்டம் மிக இறுக்கமாகத் தண்டிக்கும்.

ஆனால் அரசியல் போர்வைக்குள் நின்று பல கொலைகளைச் செய்தவன் கோடிக்கணக்கில்பெரும் ஊழழ் செய்தவன் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டாலும் பலசமையங்களில் தண்டனை பெறுவதில்லை. …

குற்றம் சாட்டப்பட்டதற்காக அவமான உணர்வில் குன்றுவதுமில்லை.

சிவராமன் பக்கமும் காற்றடித்தது.

ஊடகங்களில் சிவராமனைப்பற்றி எழுதப்பட்ட சில சாதகமான விமர்சனகள், இவரால் பாதிக்கப்பட்டவர்களிடத்தில் கூட சிறிய அனுதாப அலையை ஏற்படுத்திவிட்டன. சிவாவின் இடத்தைப்பிடித்துக் கொண்ட புதியதலைவரது செயற்பாடுகளும் மேன்மையற்றவையாகவே இருந்தன உமி கொடுத்த ராஜாவிலும் தவிடுகொடுத்த ராஜா மேன்மையானவர் என மக்கள் கருதும் நிலை உண்டாயிற்று. சிவா இப்பொழுது தேர்தலில் நின்றால் இவரே வெற்றியடைவார் எனக்கூட ஊடகங்கள் விமர்சித்தன.

சிவராமனின் இந்த நிலைமைக்கு நரேன் குடும்பமே காரணம் என்று சில ஊடகங்கள் துப்புத்துலக்கி விர்சிக்கவும் தவற வில்லை.

ஆனால் இவையெல்லாம் நரேந்திரன் கொம்பனியினரைச் சிறிதும் பாதிக்கவில்லை. அவர்கள் தமக்குச் சொந்தமாக்கிக் கொண்ட வைத்தியசாலையில் சிவராமனை செயலற்ற மனிதராக்கி பராமரிப்பதன் மூலமும் வேறு சில பெரிய அரசியல் முதலைகளின் மறைமுக உதவியுடனும் இந்த விமர்சனங்களைக் கடந்து சென்றனர்.

இந்த ஒருவருட வாழ்க்கை ,சிவராமனுக்குப் பல்வேறு பாடங்களைச் சொல்லித்தந்தது. தன்னை இடைவிடாது சுயபரிசோதனை செய்து கொள்ள அவருக்கு இப்பொழுதுகள் நன்கு பயன்பட்டன- அவரில் இருந்த மிருக உணர்வுகள் மறைந்து மனித உணர்வுகள் மேலெலத் தொடங்கின. பிறருக்குத்தான் செய்த தீங்குகளினால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய இழப்பினையும் அதனால் ஏற்படக்கூடிய வலியினையும் நன்கு உணர்ந்து கொண்டார். தனக்கு இன்று கிடைத்திருக்கும் தண்டனை போதாது என்பதே அவரது கணிப்பாக இருந்தது.குற்ற உணர்வு அவரைக் கொன்று கொண்டிருந்தது.

அந்தப் பொழுதுகளில் தான் டொக்ரர் அமுதா அந்த மருத்துவ மனைக்கு வந்தாள்.அன்பு அமைதி அழகு இவற்றின் மொத்த வடிவமாக அவள் திகழ்ந்தாள். எல்லா நோயாளியிடமும் அவள் கனிவாய் நடந்துகொண்டாள்.

சிவராமனிடம் அவள் காட்டிய அன்பு அவரின் கண்களில் நீரை வரவைத்தது. அவளிடம் தனது மனநிலையைவெளிப்படுத்திவிட அவர் மனம் ஏனோ துடித்தது. வாய் பேச முடியாதிருந்தமைக்காக அப்பொழுது அவர் மிகவும் வருந்தினார். அவள் போன்ற மகள் தமக்கில்லையே என்ற ஏக்கமும் அவர்மனதில் துளிர்விட்டது.

ஆனால் அமுதா அவர்பற்றி நன்றாகவே அறிந்திருந்தாள். அவரது இன்றைய பரிதாபநிலை அவள்மனதில் அவர்மீது அனுதாபத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனால் அவரிடத்தில் சிறிது அதிக கரிசனத்துடன் நடந்துகொண்டாள் .அவர் மனதில் இருந்த குற்ற உணர்வையும் அவளால் புரிந்துகொள்ளமுடிந்தது.

அமுதாவின் தந்தை ராமநாதன் காவல்துறையில் உயர் அதிகாரியாக இருந்தவர். மிகவும் நெர்மையானவர். தமது கடைமையிலிருந்து யாருக்காகவும் எதற்காகவும் விலகாதவர்.இதுவே அவரது மரணத்துக்கும் காரணமாயிற்று.

ஒருகாலத்தில் சிவராமனுக்கும் அவரது சகாக்களுக்கும் ராமநாதனது பணிகள் குடைச்சல்களை கொடுத்தன. எந்த விலைகொடுத்தும் அவரது நேர்மையை அவர்களால் வாங்கமுடியவில்லை. இதனால் விபத்து என்ற பெயரில் அவர் கொலை செய்யப்பட்டார்.

தனது தந்தையின் இறப்புக்கு காரணமானவரிடமே பரிவு காட்டும் அமுதாவின் மனநிலையை சிவராமனால் புரிந்துகொள்ள முடியவில்லை.

பாவ மன்னிப்பை அவள் வழங்கிவிட்டாள் .

ஆனால் குற்றம் புரிந்தவர் வாழ்விலே நிம்மதி……… ……..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *