கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 20, 2015
பார்வையிட்டோர்: 10,162 
 

இலண்டனுக்குப் போவதற்கு முன்னால் இரண்டு காரியங்களைச் செய்து முடிக்கணும்னு மெனு மாஸ்டர் துரை முடிவு செய்திருந்தார். முதலில் தனக்கு ஆறாம் வகுப்பு ஆசிரியராக இருந்த வைத்தியநாத வாத்தியாரைப் பார்த்து வாழ்த்துகளைப் பெறுவது, அடுத்து அம்மாவையும் அப்பாவையும் நன்றாகப் பராமரிக்கிற முதியோர் விடுதியில் சேர்ப்பது.

இப்போது வாத்தியார் வைத்தியநாதனைப் பார்க்கத்தான் போய் கொண்டிருக்கிறார். அவரது கார் போகும் வேகத்தினை விட அவரது நினைவு பல மடங்கு வேகத்தில் பின்னோக்கிப் பாய்ந்தது.

பாடம்

ஆறாம் வகுப்பு படிக்கும் போது ஒரு நாள் துரைசாமி வீட்டுப் பாடம் எழுதி வரவில்லை. வைத்தியநாதன் சார், வீட்டுப் பாடம் எழுதி வராதவர்களை நிற்கச் சொல்லி விசாரித்து, கையை நீட்டச் செய்து அடிக்க ஓங்குவார். எழுதி வராமைக்கு பொருத்தமான பதில் இருந்தால் அடிக்க மாட்டார். பொய்யான பதிலாக இருந்தால் உள்ளங்கையிலும் அடிவிழும் புறங்கையிலும் அடிவிழும். அந்த இரண்டு அடிகளும் ஒருமாதத்திற்கு நினைவிருக்கும்.

துரைசாமி முறை வந்தது. கையை நீட்டச் சொல்லி, முகத்தைப் பார்த்து விசாரித்தார். துரைசாமியின் கையைப் பார்த்ததும் ஆசிரியருக்கு அதிர்ச்சி.

“”என்னடா, உள்ளங்கை எல்லாம் தேஞ்சு தோலுரிஞ்சு காய்ச்சு கிடக்கு. என்னடா செஞ்சே?”

“”சார் எங்கம்மாவுக்கு உடம்பு முடியலை சார். அதனால நானே பாத்திரம் தேய்ச்சுக் கழுவி சோறு ஆக்கினேன்”

“”உங்க வீட்டில வேறு யாரும் இல்லையா?”

“”எங்கப்பா லாரி டிரைவர். அவரோட எங்க அண்ணன் கீளினரா போயிடுவான். நான் எங்க தம்பியைத் தூக்கி வச்சுக்குவேன். எங்க அம்மாவுக்கு முடியாட்டி வீட்டு வேலை எல்லாம் செய்வேன் சார்”

“”உங்க அம்மாவுக்கு என்னடா செய்யுது?”

“”எங்க அம்மாவுக்கு ஒன்பது மாசமாம் சார். தங்கச்சிப் பாப்பா பிறக்கப் போகுதாம் சார்”

எல்லா மாணவர்களும் “குபீர்’ என்று சிரித்தார்கள். சாருக்கு கோபம் வந்தது. அடிக்குச்சியால் மேசையைத் தட்டி, “”ஏன்டா சிரிக்கிறீங்க? ஒவ்வொரு வீட்லையும் ஒவ்வொரு விதமா கஷ்டம் இருக்கும். சந்தோசம் இருக்கும். இதுக்கெல்லாம் சிரிக்கக் கூடாது. துரைசாமி தன் வீட்டு வேலைகளை எல்லாம் முடிச்சிட்டு லீவு போடாம பள்ளிக்கூடத்துக்கு வர்றானே அதப் பாருங்கடா. அடுத்தவங்களை ஏளனம் செய்யக் கூடாது. துரைசாமிக்கு சமையல் பண்ணத் தெரியும். உங்களுக்குத் தெரியுமாடா? திங்கத்தான் தெரியும். சரி, துரைசாமி வீட்டு வேலையோட பள்ளிகூடத்து படிப்பையும் கவனி. அப்பத்தான் முன்னேற முடியும். உட்காரு. நாளையில இருந்து கையைக் கரி போகக் கழுவி – தோலூரிந்த காய்ப்புகளில் தேங்காய் எண்ணெய்யைத் தடவிட்டு வரணும். புரியுதா?”

இறுகிப் போன மாணவர்கள், துரைசாமி அடி வாங்காமல் தப்பித்துக் கொண்டது குறித்து பொறாமையுடன் பார்த்தனர். துரைசாமிக்கு வெட்கமாகவும் இருந்தது. துக்கமாகவும் இருந்தது. பெஞ்சில் உட்கார்ந்ததும் தலையைக் குனிந்து கொண்டான்.

இன்னொரு நாள் வகுப்பறையில் ஒரு மாணவன் எழுந்து, “”சார் என்னைத் திட்டிகிட்டே இருக்கான்”

“”யார்ரா எழுந்திருடா, என்னடா திட்டினான்?”

“” கெட்டவார்த்தை சொல்லி திட்டினான் சார்”

திட்டின மோகன் எழுந்து அப்பாவி போல விழித்தான்.

“”என்னடா திட்டினே. இங்கே வா, என் தோப்பனார் பேர் சொல்றேன். என் அத்திம்பேர் பேர் சொல்றேன், எங்க அண்ணா பேர் சொல்றேன். என்பேர் உட்பட எல்லாத்தையும் ஆசை தீர திட்டுடா” என்று அவனது சட்டையைப் பிடித்து இழுத்தார். முதலில் சிரிக்க ஆரம்பித்த பிற மாணவர்கள் ஆசிரியரின் ஆவேசக் கோபத்தைக் கண்டு மூச்சடக்கி உட்கார்ந்தனர்.

இன்னொரு நாள் தேவதாஸ் என்ற மாணவர் துரைசாமியைப் பொண்டுகசட்டி என்று திட்டிவிட்டான். துரைசாமி ஆசிரியரிடம் சொல்ல, “”டேய் இங்க வாடா, படுவா என்னடா பொண்டுகசட்டிங்கிற, அவங்க ஆயிக்கு முடியலைன்னு அவன் உதவி செய்யறான். அவனுக்கு சமைக்கத் தெரியும் உனக்கு ஒழுங்கா சாப்பிடவாவது தெரியுமா? இன்னொரு தரம் இப்படிச் சொல்லிக் கூப்பிட்டேன்னு தெரிஞ்சா ஹெச்எம்கிட்ட சொல்லி டிசியைக் கொடுக்க வச்சிருவேன், ஜாக்கிரதை”

தேவதாஸ் உட்பட அந்தக் கடைசிபெஞ்சு பயல்கள் யாரும் துரைசாமியைப் பற்றி பேசுவதே இல்லை. துரைசாமிக்கு பெருமையாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாகப் படித்து அரைப் பரீட்சையில் எல்லாப் பாடங்களிலும் பாஸ் மார்க் வாங்கி விட்டான். ஐந்து ரேங்குக்குள் வாங்குகிறவனாக மாறிவிட்டான்.

ஒரு நாள் மதிய உணவு இடைவேளையில் வகுப்பறையில் ஓர் ஓரமாய் ஒரு பெஞ்சில் அமர்ந்து வைத்தியநாதன் சார் தயிர் சாதத்தை மாங்கா வடுவைத் தொட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது பழனிச்சாமி மிளகாய்பொடி தூவிய மாங்காய்த் துண்டுகளை ஒரு தாளில் சுருட்டி கொண்டு வந்து, “”சார் இந்த மாங்காய் சாப்பிடுவீங்களா சார்?” என்றான்.

“”ஏன்டா சாப்பிடுவேனே, கொண்டா” என்றார் ஆசிரியர்.

“”இல்ல சார் நாங்களாம் வேற சாதிக்காரங்க, நாங்க குடுக்கிறைதை தின்னாத் தீட்டுன்னு சொல்வீங்கன்னு, பாலசுப்பிரமணி சொன்னான் சார்”

“”அப்படியா சொன்னான். அந்த படுவாவை இழுத்துட்டு வா” பாலசுப்பிரமணியைத் திமிறத் திமிற இழுத்து வந்தார்கள்.

“”சார் நான் ஒன்றும் சொல்லல்லை சார், இவனுங்களாத்தான் சொல்றானுங்க சார்” ஆசிரியர் இடது கையில் பாலசுப்பிரமணியைப் பிடித்துக் கொண்டார்.

“”இங்க பார், இந்த மாங்காய் பத்தையைப்பார். இதில சாதிப்பேரு எழுதியிருக்கா. இதை உங்க தோப்பனார் கிட்ட காண்பிச்சு, இதைத் தின்னா மடியா, தீட்டான்னு கேட்டு எழுதி அவரு கையெழுத்தையும் ஒன்னோட தமிழ் நோட்ல வாங்கிட்டு வராம, கிளாஸ்க்குள்ளே நுழையக் கூடாது பார்த்துக்கோ”

“”சார் என்னை மன்னிச்சிருங்க சார், நான் இனிமே இப்படி எல்லாம் பேசமாட்டேன். எங்க தோப்பனார்கிட்டே சொல்லிடாதீங்கோ சார்” என்று பாலு அழ ஆரம்பித்தான்.

“”சரி திருந்திக்கோ. இயற்கையில எங்கெயும் சாதியில்லை, தெரிஞ்சுக்கோ”

கார் குலுங்கி வலதுபுறம் திரும்பியது. திருமாநிலையர் அக்ரஹாரம், அமராவதி ஆற்றின் தென்கரையில் ஈஸ்வரன் கோவில் சந்நிதி கிழக்கு பார்த்திருக்க, வடக்கு பார்த்த வாசல் 5வது வீடு முன் கார் நிறுத்தப்பட்டது. சுவாமிநாதன் இல்லம். வி. சுவாமிநாதன், எம்.காம். சி.ஏ., என்று பொன்நிறத்தில் பழுப்பு மரப்பலகையில் கண்சிமிட்டியது.

வீட்டு முன் கார் நின்றதும் ஒரு சிறுவனும் சிறுமியும் ஓடி வந்தார்கள். துரைசாமி கையில் சந்தனமாலையையும் புதிய வேஷ்டி, சட்டை துணி பார்சலையும் எடுத்துக் கொண்டு இறங்கினார்.
மூச்சிறைக்க ஓடிவந்த சிறுவனும் சிறுமியும் துரைசாமியின் தோற்றத்தைப் பார்த்து சற்று தயங்கி நின்று, “”கதைத் தாத்தாவைப் பார்க்க வந்தேளா?”

துரைசாமி தலையாட்டினார்.

“”எங்க தாத்தா…” என்று அந்த சிறுமி சொல்ல வந்ததை இடைமறித்து, “”இருடி நாசொல்றேன்.. எங்க வைத்தியநாதன் தாத்தா போன மன்டே ஓல்டேஜ் ஹோம்ல இறந்துட்டார். அவர் போட்டோதான் இருக்கு”

துரைசாமிக்கு நெஞ்சைப் பிசைந்தது. கண்ணீர் பொங்க அந்த பிள்ளைகளின் பின்னால் நடந்தார். வேற்று ஆள் வருவதைக் கண்டு சுவாமிநாதன் மனைவி வந்தாள். “”வாங்கோ” என்பது போல் தலையசைத்தாள்.

கூடத்து சுவரில் வைத்தியநாதன் வாத்தியார் படத்திற்கு மல்லிகைப்பூ மாலை சூடப்பட்டிருந்தது. ஓர் அகல்விளக்கு அசைந்து அசைந்து சுடர்விட்டது. துரைசாமி சந்தனமாலையை வாத்யார் படத்திற்கு சூட்டினார். வேஷ்டி துணிகளை மருமகளிடம் கொடுத்தார். அகல்விளக்கின் சுடர் துரைசாமியை ஆசிர்வதிப்பது போல ஜொலித்தது. பாதரசத் திவலைகளாகக் கண்ணீர் துரைசாமி கன்னத்தில் உருண்டது.

“”வாத்தியார் ஓல்டேஜ் ஹோம்லயா இருந்தார்?” என்று மருமகளிடம் கேட்டார். மருமகள் விக்கித்து தலைகுனிந்தவள், “”அவா பேங்ல ஆடிட்ன்னு போயிருக்கா சாயங்காலம் வந்திருவா. செத்தே நாழி இருங்கோ. காபி கொண்டாறேன்” என்று உள்ளே நழுவினாள். “”உங்க தாத்தா எனக்கு ஸ்கூல் டீச்சர். அவரால நான் இன்னிக்கு உயர்ந்த நிலையில் இருக்கேன். அப்பா வந்தவுடனே சொல்லுங்க” என்று முகவரி அட்டையை தந்து விட்டு வெளியேறினார்.

வைத்தியநாதன் வாத்தியார் படமாக இருக்கிறாரா பாடமாக இருக்கிறாரா என்ற கேள்வி துரைசாமியைத் துளைத்தது.

இலண்டனுக்குப் போகக் கூடாது என மனது சொல்லிற்று.

– மார்ச் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *