பலூன் பைத்தியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 7,966 
 

இன்றைய தினம் குழந்தைகள் பலூன் வாங்கினார்கள். அவர்களுக்கும் அவர்கள் தாயாருக்கும் சண்டை. காசு தரமாட்டேன் என்ற தாயார் கட்சி. குழந்தைகள் அழுகை எதிர்க்கட்சி.

பலூன் வாங்கும் சமயம் ஒவ்வொன்றிலும் இந்தத் தகராறுதான். இதுதான் கடைசி தடவை என்ற எச்சரிக்கையுடன் காசும் கிடைத்துவிடும். குழந்தைகள் கைக்குப் பலூனும் வந்துவிடும். இந்தத் தகராறு விஷயம் பலூனுக்கு எப்படித் தெரியும்! சில நிமிஷங்களுக்குள் பட்டென்று வெடித்துவிடும். ஒரு வேளை தெரிந்துதான் குழந்தைகளைப் போல ரோஸமில்லாமல் இருக்கிறதோ என்னமோ! இந்த மாதிரி எத்தனை கடைசித் தடவையாக பலூன் வாங்கியிருக்கிறார்கள் தெரியுமா? இன்றும் கடைசித் தடவையாகத் தான் பலூன் வாங்கியிருக்கிறார்கள். குழந்தைகள் திரும்பத் திரும்ப பலூன் வாங்க ஆசைப்படுவது எனக்கு பெரிய வியப்பாய் இருக்கிறது. பலூன் இரண்டு நிமிஷத்திற்குள் வெடித்து விடும் என்று குழந்தைகளுக்கு நன்றாய்த் தெரியும். தாயார் மறு பலூன் வாங்க காசு தர மறுப்பாள் என்றும் தெரியும்; பின் ஏன் கடைசி தடவையாகத் தினம் பலூன் வாங்குவதில் அவ்வளவு மோகம் கொள்கிறார்கள்…

பலூனுடைய வர்ணம் ஒரு வேளை அவர்களைக் கவர்வதாய் இருக்குமோ? இருக்க முடியாது. ஏனென்றால் கண்ட இடங்களிலெல்லாம் புஷ்பங்கள் காணாத வண்ணக் கவர்ச்சியா பலூன்களில் காண்கிறது? அவை வேண்டாம். மேகங்களும் அந்தி, சந்தியில் காணும் வானமும் இல்லையா? – வண்ணக் களஞ்சியமாக? ஆனால் மேகத்தையோ அந்த வானத்தையோ அங்கையில் அடக்கிவிட முடியாது. புஷ்பத்தைக் கையில் எடுக்கலாம். எனில் வாடிவிடும். கசங்கிவிடும். வண்ணத்தை திரும்பி ஏற்றிவிட முடியுமோ? முடியாது.

ஆம்! இதில்தான் பலூன் மோகத்தின் மர்மம் இருக்க வேண்டும். வித்தில்லாக் கத்திரிக்காயைப் போல் வாடி வதங்கிய பலூன் சிவப்புச் சந்திரனும் பச்சைச் சூரியனுமாக மாறிவிடுகிறதல்லவா – குழந்தைகள் கையில் ஏறியவுடன்? சிருஷ்டி சக்தி என்று ஒன்றிருக்கிறது. அதுவும் தங்களுக்குள் இருக்கிறது என்ற அறிவை இந்த விந்தை குழந்தைகளுக்குப் புகட்டுகிறது. நமக்கிருக்கும் சக்தியை வெளிப்படுத்துவதில்தான் இன்பம் உண்டாகிறது. இந்த இன்பத்தை நீடிக்கச் செய்ய வேண்டுமென்ற வெறிதான் பலூன் உடைந்துவிடுவதைக்கூட லஷ்யம் செய்வதில்லை! கடைசித் தடவை என்று தாயார் சொல்வதைக் கூட லட்சியம் செய்வதில்லை.

பலூன் உடைந்தால்தான் என்ன? துண்டுகளைக் கொண்டு குழந்தைகள் “மூட்டை” செய்துவிடுவார்கள், சுண்டைக்காய் அளவுக்கு சூரியனையும், சந்திரனையும் போல் செய்து நெற்றியில் சொடுக்கி இன்புறுவார்கள்.

இந்த சிருஷ்டி சக்தியே விசித்திரமானது; உலகப் போக்குக்கே ஒத்து வராதது. உடமை என்ற நினைப்பையும் ஆசாரம் என்ற கோட்பாட்டையும் சண்டைக்கிழுப்பதே இதன் தன்மை! அதன் காரணமாகத்தான் காசு செலவழிகிறதே என்று தாயார் நொந்து கொள்கிறாள். குழந்தைகள் எச்சில் செய்கிறதே என்று அடுத்த வீட்டுக்காரர் ஏசுகிறார்.

இன்னொரு உணர்ச்சி கூட காரணமாக இருக்கலாம். தரையில் நடந்தாலும் பறக்க வேண்டும் என்ற ஆசை இயல்பாக முளைத்து விடுகிறது. நம்மால் முடியாததை நமக்கு அடங்கிய பொருளைக் கொண்டு செய்து விட்டால் அந்தப் பெருமை நம்மைத்தானே சாரவேண்டும். நம்மால் பறக்க முடியாது. ஆனால் நம்மால் எதையாவது பறக்கவிட முடியும் பொழுது எவ்வளவு ஆச்சர்யமாக இருக்கிறது. காற்றாடி, தாத்தாபூச்சி, பலூன் – இவை குழந்தைகளின் சாதனம். பெரியவர்களுக்குப் பறக்கும் சாதனம்-

விண்வெளி விமானமில்லையா?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *