பலியாடுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 2, 2022
பார்வையிட்டோர்: 5,711 
 

(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விடிந்தால் சனிக்கிழமை! வைகாசி மாதத்தின் கடைசிச் சனிக் கிழமை. தெளிந்த வானத்தில் போட்டி போட்டுக் கொண்டு மின்னும் நட் சத்திரங்கள். ஒரு முன்னிரவுப் பொழுது! நேரம் எட்டு மணி இருக்கலாம். அந்த நேரத்தில் பொதுவாக அமைதியில் மூழ்கிக் கிடக்கும் அந்த ஊர்த்தெரு இன்று வழமைக்கு மீறிய தொரு புதுமையாய்.. பெரிய அமளிப்பட்டது.

சைக்கிள் மணிகளின் கிணிங்… கிணிங்.. ஒலிகளும் ஓடிச் செல் லும் சிறுவர்களின் கூச்சலும், காலடிச் சத்தங்களும் மெதுவாக நடந்து செல்வோர் கதைக்கும் ஓசையும்…!

“இந்த முறை கந்தசாமின்ரை கிடாய்தான் முதல் கிடாய்.. ஒருத் தரும் அசைக்கேலாது என்ன…?”

“அதின்ர உயரத்தைப் பாத்தியே? அந்த நீட்டுச் செவியும்.. பிடரி யிலை குத்திக் கொண்டு நிக்கிற கறுப்பு மயிரும்.. அது காலை நிலத் திலை குத்தி ஓடியாற பாய்ச்சலும்.. மூவாயிரத்தைந்நூறு போகும் என் னடா மச்சான்….”

“நான் பந்தயம் கட்டுறன்.. நாலாயிரம் போகும்…”

“செல்லத்துரையின்ரை கிடாயும் தோல்வி போகாதெண்டு கதைக் கிறாங்கள்… இனி இரண்டையும் பக்கத்திலை விட்டுப் பாத்தாத்தான் தெரியும்…” –

ஓகோ! இப்போது தானே விஷயம் புரிகிறது! விடிந்தால் வேள்வி, காடேறி வைரவர் கோயில் வேள்வி… கந்தசாமியின் திறம் கடாவை ஒரு புதிதான ஆச்சரியமாய், வேடிக்கை பார்க்கப் போகும் சனக்கூட்டந்தான் தெருவை அமளிப்படுத்துகிறது இப்படி!

அந்த இரவு முழுவதும் கந்தசாமி வீட்டில், ஒரே கொண்டாட்டந் தான். கோயிலுக்கு வரப்போகிற கடாக்களில் எல்லாம் திறமானது இது தான் என்றால்.. அதைவிட உற்சாகமான, அதைவிட மகிழ்ச்சிக் குரிய… அதைவிட வெற்றிகரமான செய்தி வேறு என்னதான் இருக்கிறது உலகத்தில்! இந்தச் சந்தோஷத்தைக் கொண்டாடாமல் வேறு என்ன தான் செய்வது சொல்லுங்கள்… சொல்லுங்களேன்!! நல்ல கதை தான்!

ஆடு கட்டப்பட்டிருந்த அந்தக் கொட்டில் பல்வேறு நிறங்களைக் கொண்ட “புளோரசன்ற்” மின் ஒளி விளக்குகளால் கோலாகலமாக அலங் கரிக்கப்பட்டிருந்தது. அந்தச் சிவப்பு, பச்சை, நீல, மஞ்சள் குளிர் ஒளி யில் அந்த வெள்ளை ஆடு கம்பீரமாய் நின்றது. இந்த யுகத்தில், மனித னுக்குக் கூடக் கிடைக்காத கௌரவங்களை எல்லாம் பெற்றிருக்கும் அதற்குப் பெருமையாக இருக்காதா பின்னே?

அதன் கழுத்தை அலங்கரிக்கும் அந்த மலர்மாலை, கமகம் வென்று மணம் பரப்பும் மல்லிகை மாலை… நிலத்தை முத்தமிடுகிறது. கந்தசாமி மணமகனாக மண மேடையில் நின்ற போதும் கூட ஒருவரும் இத்தனை பெரிய மாலை போட்டதாய் நினைவில்லை.

“பருக்கிறதெல்லாம் பருக்கியாச்சோ?” சுந்தரம் நினைவுபடுத்திய பிறகு தான், குடிசைக்குள் அவசரமாய் ஓடிக் “கறுப்பு” எடுத்து வருகிறான் கந்தசாமி. திமிறித் திரும்பும் கடாவின் கொடுப்பினுள் வல்லிபுரம் கையைச் சொருகி வாயைத் திறந்து பிடித்துக் கொள்ள அதற்குக் *கறுப்புப் பருக்குகிறான் கந்தசாமி.

அரைப் போத்தலாவது பருக்கினால் தான் காலையில் உசாராய் நிற்கும். அல்லது திமிர் கூடி விழுந்து விழுந்து படுக்கும்.

ஆறறிவு பெற்ற மனிதன் பழக்கிவிட்ட கெட்ட பழக்கங்களை இந்த ஐந்தறிவு உயிர் பழகவில்லையே என்பதில் அசூயைப்படுவது போல மிகப் பலவந்தமாகப் பருக்கப்பட்ட சாராயத்தைக் குடித்துவிட்டு நிற்க முடியாமல் மூசுகிறது கடா!

கொட்டிலுக்கு வெளியே மேசைகளை அடுக்கிப் போடப்பட்ட தற்காலிக மேடையிலே அரிச்சந்திரன் கூத்து ஆரம்பமாகிவிட்டது. கடா பார்க்க வந்தவர்களில் பலர் மேடைக்கு முன்னால் அமர்ந்து கூத்துப் பார்க்கின்றனர்.

“இந்த முறையும் திறங்கிடாய் உனக்குத் தான் என்ன?” அப் போது தான் வந்த சிவசம்பர் இப்படிக் கேட்டு விட்டதில் கந்தசாமிக்குப் பெருமைதான். அவன் உடலை வளைத்துத் தலையைத் திருப்பி அசட் டுச் சிரிப்புடன் சொல்கிறான்.

“நான் நேத்திக் கடன் வைக்கேக்கையே… திறங்கிடாய் வெட்டிற தெண்டு தானே வைச்சனான்…”

“ஓ.. நேர்த்தியே? என்னத்துக்கு நேர்த்தி?

“உங்களுக்குத் தெரியாதே? போன வருஷம் நான் சாகக் கிடந்த னான் எல்லோ? உள்ள ஆஸ்பத்திரி எல்லாம் ஏறி இறங்கி… எவ்வளவு காசைக் கொட்டிச் செலவழிச்சு. உந்தக் கண்டறியாத இங்கிலீசு படிச்ச டாக்குத்தர் மாரெல்லாம் கைவிட்டிட்டாங்கள்… கடைசியிலை காடேறி வைரவர் தானே என்னைக் காப்பாத்தினது…”

*அப்ப நேத்தி வைச்சாப்பிறகுதான் வருத்தம் மாறினதோ?”

“பின்னை என்ன? திறங்கிடாய் அடுத்த வரியம் வெட்டுவன் எண்டு நேந்த பிறகு தான் மாறினது…”

வைரவர் தன்னிடம் “லஞ்சம்” வாங்குவதற்கு ஒப்புக் கொண்டு தன் வருத்தத்தை மாற்றிய கதையைக் கதைகதையாய்ச் சொல்லிக் கொண்டிருந்தான் கந்தசாமி. வைரவர் கேட்டதற்காகவே, தான் எங்கெல் லாம் தேடி இந்தச் சிறந்த இனக்குட்டியை வாங்கி அதை ஆசையாய் அன்பாய்.. எவ்வளவு பணத்தைத் தான் செலவழித்து உழுந்தும், கஞ்சியும் முருக்கமிலையும் போட்டு வளர்த்த கதையை அலுக்காமல் சலிக்காமல் வந்தவர்களுக்கெல்லாம் கூறிக் கொண்டிருந்தான்.

அரிச்சந்திரன் கூத்து அதிகாலை இரண்டு மணிவரை நேரத்தை இழுத்தடித்து விட்டது. பலூன்களாலும் கிரேப் பேப்பர் மாலைகளாலும் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த டிராக்டர் ஒன்று கடாவை ஏற்றிச் செல்வதற்கு ஆயத்தமாய் நிற்கிறது. அதிகாலை இரண்டு மணிக் கெல்லாம் ஊர்வலம் புறப்பட்டு விட்டது. தான் தருவதாக வாக்களித்த “லஞ்சத்தைத் தவறாமல் தந்துவிட வேண்டும் என்றும் அப்படித் தந்து விட்டால் வைரவர் தன்னை ஒரு குறையுமின்றி வைத்திருப்பார் என்றும் நம்புகிற கந்தசாமி முன்னே செல்ல நாலு சோடி மேள தாளங்களுடன் ஊர்வலம் அந்தக் கிராம வீதிகளில் மெதுவாக அசைந்து செல்கிறது. சாமக் கோழி கூவுகிற அந்த நேரத்திலும் கூட வீட்டுக்கு வீடு நித்தி

ரையில் இருந்தவர் எல்லாம் எழுந்து வந்து படலையில் நின்று வேடி க்கை பார்க்கிறார்கள்.

ஊர்வலம் கோயிலை அடைந்த போது நேரம் அதிகாலை நாலு மணியாகிவிட்டது. நடந்தே வந்து சேர்ந்த பல கடாக்களும் கோழிகளும் ஏற்கனவே கோயிலை அடைந்து விட்டன. கந்தசாமியின் கடாவோடு போட்டி போடக்கூடிய அளவு வளர்ந்துவிட்ட செல்லத்துரையின் கடா அப் போது தான் கோயிலின் தெற்கு வீதியில் வந்து கொண்டிருந்தது.

நாவலர் சொன்னது, சொன்னபடி தவறாமல் சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன் நித்திரை விட்டெழுந்து, காலைக் கடன்களை முடித்துக் கொண்டு முதல் நாளைய இந்துப் பத்திரிகையைப் படித்துக் கொண்டிருந்த ஆறுமுகசாமி ஐயர் கூடக் கோயில் வீதியில் இருந்த தமது வீட்டுப் படலைக்கு வந்து “கடா ஊர்வலம்” பார்க்கிறார். அந்த இந் துவில் ஆச்சார்ய சுவாமிகள் ஒருவர் கோயில்களில் உயிர்ப்பலி நிறுத் தப்பட வேண்டும்” என்று எழுதியிருந்த உபதேசத்தைத் தான் அவர் சற்று முன்னர் படித்துக் கொண்டிருந்தார்.

அவருக்கு அண்மையில் ஊர்வலத்துடன் வந்த கந்தசாமி “எப்பிடிச் சாமி! என்ரை கிடாயை யாராவது அசைக்க முடியுமோ பாருங்கோ !” என்றான்.

“அசைக்க முடியாதுங்கிறது சரியடாப்பா.. இந்தப் பேப்பர்ல என்னா எழுதியிருக்கான் பாத்தியா.. கோயில்லை இப்பிடில்லாம் செஞ் சுக்கிறது அதர்மமோ இல்லியோ?”

ஐயர் காட்டிய பத்திரிகையை எட்டிப்பார்த்தான் கந்தசாமி. அவனுக்கு வாசிக்கத் தெரியாது. தெரிந்திருந்தாலும் கூட…..

எழுபத்தைந்து ரூபாவுக்கு அவன் குட்டியாக வாங்கிய கடா இன்று மூவாயிரத்துக்கு மேல் விற்கப் போகிறது!

“இந்த முறை முதல் கிடாய் கந்தசாமின்ரையா மெல்லே?” என்று அந்த ஊரில் எல்லோரது நாவிலும் கந்தசாமியின் பெயர் நுழைந்து நுழைந்து வருகிறது. இந்தப் பொருளாதார லாபத்தையும் புகழையும் “கைபறிய” விட்டு விட்டு இந்தச் சாமியாரின் உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருக்க அவனுக்கென்ன விசரா?

அழகுராணிப் போட்டிக்கு வரும் அழகிகள் எல்லாம் மேடையில் லைன் அப் பண்ணுவது போலக் கோயிலுக்கு வந்து சேர்ந்த கடாக்கள் எல்லாம் அதற்கென அமைக்கப்பட்டிருந்த மேடையில் மாலையும் கழுத் துமாக, வரிசை போகும் காட்சி கண்ணுக்கு விருந்தாகத்தான் இருக்கிறது.

கோயில் முதலாளி பொங்கல் பானையை ஏற்றி வைத்தார். கோயிலுக்கு வருடாவருடம் வருகின்ற கடாக்களில் திறமானதைத் தெரிவு செய்து “நாச கொழுந்தாகப் பலியிடுவது முதலாளிக்கு உரித் தான செயல்! ஒருவரும் காணாத நேரத்தில் மெதுவாக ஓர் ஐம்பது ரூபா நோட்டை முதலாளியின் கையினுள் செலுத்தி விட்டான் செல்லத்துரை. அதை வாங்கிக் கொண்ட முதலாளி சரியான நேரத்தில் கந்தசாமியின் காலை வாரி விட்டு விட்டார்.

கந்தசாமியின் கடாதான் பூசைக்கடா என்று எல்லாரும் எதிர் பார்த்திருந்த வேளையில் முதலாளி செல்லத்துரையின் கடாவைப் பிடித்து, முன்னுக்குக் கொண்டு வந்ததைப் பார்த்த கந்தசாமியின் உள்ளம் சூடேறிய எண்ணெய் போல் கொதித்தது.

எம்பி எம்பிக் குதித்தான் அவன்.

“கைக்குள்ளை காசு வாங்கிக் கொண்டு உவங்கள் செய்யிற வேலை.. எங்களுக்கு விளங்காதெண்டு நினைச்சினமாக்கும்….”

கொடுக்குக் கட்டிக் கொண்டு முன்னுக்கு வந்தான் கந்தசாமி. அம்பு மாதிரி வந்து தைத்த அந்தச் சொற் பிரயோகம், முதலாளியின் கண்களை… சிவந்த கண்களை…. மேலும் சிவக்க வைக்கிறது. அவர் வாய் திறக்க முதல் செல்லத்துரை சொன்னான்.

“முதலாளி சொல்லுறது தான் முடிவு… நீ அலம்பிப் பிரயோசன மில்லை. நாச கொழுந்து எனக்குத் தான்…” சொல்லிக் கொண்டே ஏளன மாய்ச் சிரித்த செல்லத்துரையின் பரிகசிப்பைத் தாங்க முடியாமல்…அவன் கன்னத்தில் பளீரென அடித்து விட்டான் கந்தசாமி.

கடாக்களும் கோழிகளும் வெட்டவென அங்கே பூஜையில் வைக் கப்பட்டிருந்த கூரான கத்தியைப் பாய்ந்து தூக்கிக் கொண்ட செல்லத் துரையை யாரும் ஓடி வந்து தடுக்க முதலே, அந்தக் கத்தி கந்த சாமியின் கையைப் பதம் பார்த்து விட்டது. குருதி ஒழுகும் கையுடன் மயங்கிவிட்ட கந்தசாமியை ஏற்றிக் கொண்டு ஒரு கார் பெரியாஸ் பத்திரிக்கு விரைந்து கொண்டிருக்கிறது.

லஞ்சம் வாங்கிய வைரவர் அதை ஏற்றுக் கொள்ள முதலே ஏன் தன்னைக் கைவிட்டார், ஏன் தன்னுயிரைப் பலி எடுக்க யோசிக்கிறார் என்பது பற்றிக் கந்தசாமி ஏதாவது யோசிக்கிறானா அல்லது அந்தப் பலியாடுகள் போலவே தன் எதிர்காலத்தைப் பற்றி ஒன்றும் புரிந்து கொள்ளாத சடமாக இருக்கிறானா?

தெரியவில்லை!

– ஈழநாடு 09-09-1979

– வரிக்குயில்(சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: நவம்பர் 2016, கலை இலக்கியக்களம், தெல்லிப்பழை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *