பனங்காணி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 10, 2022
பார்வையிட்டோர்: 1,974 
 

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கடுங்குளிரின் பிடி தளரத் தொடங்கிவிட்டது. மகிழ்ச்சியைப் போர்த்திக் கொண்ட மக்கள் குளிருக்கான போர்வையை உதறி விட்டு வசந்த காலத்தைச் சிரித்து மகிழ்ந்து வரவேற்கின்றனர்.

குளிருக்கான சுவெற்றர், லோஸ் பேர் கோட், கை காலுறை கள் அலமாரிக்குள் ஒதுங்கிக் கொண்டன. மெல்ல புதிய சூரிய ஒளி பரவசத்தை ஏற்படுத்தியது. குளிரில் ஒடுங்கிய மக்கள் கலகலப்பாக வெளியே உலாவத் தொடங்கினர்.

‘ஸ்நோ’ மூடி வெறிச்சோடிக் கிடந்த வீதிகள் புதுப் பொலிவுற்றன. சோடிகள் கைகளைப் பிணைத்தபடி கலகலப்பாக உலாவந்தனர்.

வேலைத்தாபனங்கள் ஜருராக இயங்கின. ‘நியோன்’ ஒளி வெள்ளம் மொழு மொழு வென்று ஒளிவீசிக் களிகொண்டது. ‘ரொறான்ரோ’ நகரின் ‘பார்லிமென்ட்’ வீதி மட்டுமல்ல, எல்லா வீதிகளுமே சுறுசுறுப்பு –

கணேசு பிரமாண்டமான அக்கட்டிடத்துள் நேரத்தோடு நுழைந்து விட்டான். வேலையென்றதும் யந்திரமாகவே மாறி விட்ட கணேஷ் மேசை ‘ட்றேயில்’ கிடந்த கோவையை எடுத்தான். முதலாவது பத்திரத்தில் கண்ணோட்டம் சென்றது.

கனடிய மொழியில் வாழ்த்து தெரிவித்தபடியே கணேசுக்கு முன்னால் இருந்த ஆடம்பரமான சோபாவில், வந்தவர் அமர்ந்தார்.

அவர் கணேஷைப் பார்த்து.

“ஹலோ! ஹை! குட்மோனிங். டொக்டர், எனது மம்மி இந்த ஆஸ்பத்திரியில் கடுமை வருத்தமாக இருக்கிறார். இரண்டு மூன்று நாட்கள் கூட தாக்குப் பிடிக்கமாட்டார் என வார்ட் டொக்டர் கூறுகின்றார், மம்மி சுகமாகி வீடுவருவார் என எதிர்பார்த்தேன். நான் அதிர்ஷ்டமில்லாதவன் என நினைக்கிறேன்” என சலனமின்றிக் கனடிய மொழியில் கூறினான். அவன் நீண்டகாலக் கனடியப் பிரஜை என்பதை அவனது தோற்றம், பேசும் மொழியின் சுளிவு நெளிவுகள் துலாம்பரமாக்கின.

‘பாவம்! என்ன விதத்தில் நான் உங்களுக்கு உதவ முடியும்?’ என்றான் கணேஷ் வெகு பணிவாக.

‘கணேஷின் கனடிய மொழிப் பேச்சு அவனது காதுகளுக்கு இனிமை தரவில்லைப் போலும். கணேஷின் நிறத்தையும் கவனித்தே அவன் தனது பேச்சை ஆங்கில மொழிக்கு மாற்றிக் கொண்டான்.

“சம்மர் பருவ காலத்தைக் கொண்டாட நாம் ‘பிக்னிக்’ செல்ல உள்ளோம். திரும்பி ஊர் வர இரு வாரங்கள் ஆகும். இடையில் மம்மியின் மரணம் ஏற்பட்டால்… அதற்கான செல வுக்கு இதோ ‘செக்’ தந்து விடுகிறேன். அவரின் இறுதி ஒழுங்கு களையும் இங்கே ஆஷ்பத்திரி நிர்வாகமே செய்ய வேண்டும். மலர்வளையம், சவப்பெட்டி, புதிய உடை, பாண்ட் மியூசிக் முதலியவற்றிற்கு தேவையான பணத்துக்கு ‘செக்’ கிலுள்ள தொகை போதும் தானே!” என்றபடி தொகைக்குரிய ‘செக்கைக் கிழித்தான்.

மனம் பரபரத்தது; கைகள் நடுங்கின. எனினும் ‘செக்’கைப் பெற்றுக் கொண்டான் கணேஷ்.

துறவி சங்கரர் கூடத் தன் தாய்க்குக் கொள்ளி போட, உல கைத் துறந்த துறவியான பின்னரும் வந்தவராம். தாய்க்குக் கொள்ளி போட வேண்டியது தனது கடமை யென்றெண்ணி’ எனப் படித்திருக்கிறான் கணேஷ்.

ஆனால் அன்று அவன் மனம் என்ற குறளி இந்த மிஸ்ரர் லொக் தனது தாயாரின் மரணத்தை நன்கு தெரிந்து கொண்டும், இறுதி யாத்திரைக்கான ஒழுங்குகளைத் திட்டமிட்டு விட்டு அதற் கான செலவைச் செலுத்திவிட்டு சுற்றுலா செல்லும் அவர்களின் போக்கை எண்ணி அவன் மனம் திகைத்துவிட்டது.

தனது உதவியாளரான மிஸ் மார்க்கை அழைத்து ‘செக்’ கைப் பதிவு மெஷினில் போட்டு றிசீற்றை மிஸ்டர் லொக்கிடம் கையளிக்குமாறு சொன்னான்.

‘சட்டி சுட்டதடா, கை விட்டதடா’ என்ற ரீதியில் தான் அவனால் செயல்பட முடிந்தது.

பெற்றவளுக்கு வருத்தம் கடுமை; மரணப் படுக்கை. இவ்வுலகை விட்டு அவள் நீங்கும் நாள் இன்றோ நாளையோ இதைத் தெரிந்து கொண்டும். மகன், மனைவி, நண்பர் சகிதம் உல்லாசப் பயணம் புறப்படுகிறானே!

கணேசின் மனம் பதறியது; கைகால் ஓடவில்லை .

பெற்ற தாய் எங்கே? பிள்ளையின் மனம் எங்கே? விசித்திர மானது இந்தக் கனடிய தேசம்? தன்னை உருவாக்கி இவ்வுலகை அறிமுகம் செய்தவள் என்ற பற்றுப் பாசமும் அற்றுவிட்டதா இவர்களுக்கு? அதனால் இந்தப் போக்குகளை உள்வாங்கவே முடியவில்லை .

தேசங்கள் தோறும் பாஷைகள் வேறாகலாம்; பண்பாடு மாறலாம். பெற்ற தாய் பிள்ளையென்ற அடிப்படை ஊற்றும் மாற்றம் பெறலாமோ? – கணேசுக்கு அதிர்ச்சியாக இருந்தது,

அவன் ஊரில் இருந்த போது அப்பாவின் நண்பர், ஒரு வயதான பண்டிதர். தினமும் வீட்டுக்கு வருவார். பழஞ்சேலை கிழிவது போன்று பறபறவென்று கதைத்தபடியே இருப்பார். அர்த்தமற்ற அவர் பேச்சைக் கேட்டுச் சகிக்காத பேரப்பிள்ளைகள் அவரை எங்காவது வெளியே உலாவி வருமாறு அனுப்பி விடு வார்கள். அவர் கணேசு வீட்டுக்கு வந்து வெளி விராந்தையில் இருந்து கொள்வார்.

‘வெற்றிலைத் தட்டைக் கொண்டாடா, தம்பீ! என்பார். அவனுடைய ஆச்சி,

“பண்டிதர் வந்திட்டுவது. தட்டிலை கிடக்கிற வெத்திலை பாக்கையும் முடிச்சிப் போயிடும். இரண்டொரு வெத்திலையை இங்கை எடுத்து வைச்சிட்டுப் போடா தம்பீ!’

‘பாவமெணை பண்டிதர்! தமிழைக் சப்பிச் சப்பி வெத்திலையைத் துப்பட்டுமெணை’ என்று சொல்லிவிட்டு வெத்திலைத் தட்டைத் தலைவாசல் திண்ணையிலை வைத்திடுவான். அங்கும் ஒரே ‘வெந்திலைச் சமா’ நடக்கும். இடையிலை அவனின் அப்பு வந்து,

“வாருங்காணும் பண்டிதர், எங்கட பனங்காணியைப் பாத் திட்டு வருவம்” என இழுத்துக் கொண்டு போகும் வரை இடம் விட்டே எழும்பமாட்டார். வெற்றிலையைச் சப்பிச் சப்பி எத்தனை கதைகள், பழைய தொடர்புகள் மனதில் பதிந்த மண்ணின் கதைகள் கணேசின் நினைவில் அந்தப் பழைய பதிவுகள்….!

பட்டினத்தார் என்றொரு அடிகளாம். அவர் பெண்டுக ளெல்லாம் ‘மாயப்பிசாசெண்டு’ பாடினவர். எங்கட வாழ்க்கையும் இந்த உலகமும் வெறும் நீர்க்குமிழி போல ‘டப்’ பென்று மறைந் திடும், நிச்சயமில்லை என்று பட்டினத்தடிகளின் பாட்டுக்களைப் பண்டிதர் வாய்விட்டு உரத்து ராகம் போட்டுப் பாடுவார்.

பாட்டொன்றும் அவனுக்கு விளங்காது. ஆனால் அவர் சொல்கிற, இந்த உலகம் பொய். பற்று வைக்காதை என்பதெல்லாம் இந்தக் கனடாக்காரர்களுக்கு முதலிலேயே தெரியுமோ? ……..! அல்லது இவர்கள் படித்து எழுதி வைத்த தைத்தான் பட்டினத்தார் பாடலென்று எங்களின் ஆட்கள் மொழிபெயர்த்து வைத்திருக் கினமோ? அவனுக்கொன்றும் விளங்கவேயில்லை. அவன் மனம் குழப்பமாடியது.

நெஞ்சு கனத்தது; ஊரிலே வீட்டில் அவனது ஆச்சி அப்புவின் நினைவைச் சுற்றி எண்ணங்கள் படர்ந்தன.

ஊர் நினைவு வந்தால் அவனுக்கு வேலை எதுவுமே ஓடாது. தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் கலவரங்களும் போரும் அவனது சிந்தனைக் குப்பையில் தீயைப் பற்ற வைத்துவிட்டது.

பாவம்! அப்புவுக்கு என்மீது எத்தனை பற்றும் பாசமும். நான் சிறுவனாயிருக்கும்போது, பனங்காணியைப் பார்க்க வா, எனத் தன்னுடன் கூட்டிப் போவார். அது ஒரே பனைக் காடாகக் கிடக்கும். அந்த மண்ணை அள்ளி நுகர்ந்து பார்ப்பது அவருக்குச் சந்தோஷமான சங்கதி. அடர்ந்த அந்தப் பனைக்கூடல் அருகில் தோட்டத்தோடு ஒட்டியது நமது வீடு.

நாலா பக்கமும் பசிய கம்பளத்தின் மத்தியில் பூவேலைப் பாடுபோல அழகும் செழிப்பும் அதில் மிளிர்ந்தது. மேற்குப் பக்கமும் தோட்டங்களும் துரவுகளும் நிறைந்தவெளி; அதனை யடுத்து இருப்பதுதான் எங்கள் பனங்காணி; அதற்கும் அப்பால் சுடலை.

அந்தச் சுடலையில் ஊர் மக்கள் சவத் தகனம் செய்வர். ஆனால் எமது குடும்பமோ, பரம்பரை பரம்பரையாக ஆறேழு தலைமுறைகளாக அந்தப் பனங்காணிக்குள்தானாம் பிரேதங்களை எரிப்பது வழக்கம்.

கோவிலைத் தரிசிப்பது போல எனது அப்பு அந்தப் பனங் காணியைத் தினமும் போய்ப் பார்த்து வருவார்.

குழந்தையையும் அது உறங்கும் தொட்டிலையும் பார்த்துப் பெருமிதமடையும் தாயின் நிலையில் அப்புவும் தனது தந்தை, பாட்டன், பூட்டன், முப்பாட்டன் முதலியோர் துயில் கொள்ளும் அந்தப் பனங்காணியைப் புண்ணிய பூமியாகவே மதிப்பவர்.

அச்சங்கிலித் தொடர் அறக்கூடாதென்பதில் இறுக்கமான பிடிவாதமும் ஆவலும் அவருக்கு. என்னை அங்கே கூட்டிச் செல்லும்போதெல்லாம் தானும் அந்தப் பனங்காணித் துண்டுக் குள்ளேதான் அடக்கமாக வேண்டுமென எனக்குச் சொல்லாமல் சொல்லி வைப்பார்.

பொற்கோவிலுள் அடியெடுத்து வைக்கும் உணர்வில் அப்பு மிதப்பார்; அக்காணியின் ஸ்பரிசம் பட்டாலும் தெய்வீகப் பொலிவும் பாசமும் ஒட்டுவதாக நெகிழ்ந்து போய் மகிழ்வார். என்னைப் பொறுத்தளவில் அது கரிய பனைகளையும் பசுமை யான ஓலைகளையும் கொண்ட வெறும் பனங்காணிதான். ஆனால் அதன் முக்கியத்துவத்தை சிறப்பை எனக்குச் சொல்லிப் பெருமிதங் கொள்வார் அப்பு.

அந்தப் பனங்காணி நிறையக் கருங்காலி போன்ற வையிர மான பனைகள் வானளாவ உயர்ந்து நின்று அந்த மண்ணின் மகத்துவத்தையும் … அப்பகுதியைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்களின் வயிர நெஞ்சத்தின் உறுதிப்பாட்டை, உயர்ந்த பண்புகளைப் பிரதிபலித்தன.

நான் எனது சிறுவயதில் சிறுபிள்ளைத்தனமாக ஒரு நான் அப்புவிடம்,

“அப்பு! அப்பு! எங்கடை பனங்காணிக்கை கொஞ்சம் பனையளைத் தறிப்பமே?” என்று கேட்டேன்.

“ஏன்?” என்றார் அப்பு அதிர்ச்சியாக.

“கிரிக்கெட், புட்போல் விளையாட வசதியாயிருக்கும். நீங்கள் கால் ஓய உலாவி, எங்களோட வந்து நிண்டு கிரிக்கெட் பாக்க வசதியாயிருக்கும் தானே!” – என்றான்.

அப்புவுக்கு பெரிய கோபம் வந்துவிட்டது,

“பரம்பரை பரம்பரையா அப்பா, அப்பப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா, பேத்திமார் என்று அவையளைத் தகனஞ் செய்த இடத்திலை ‘புட்போல்’ விளையாட்டோ? விசர்ப்பெடியா. மனசால் அப்படி நினைச்சுக்கூடப் பார்க்காதே. எங்கடை அடிவழி மனிதரைப் போற்றி நினைத்து வழிபடும் இடமல்லவா? உன்ரை அப்புவும் நாளைக்கு மூச்சை விட்டா இந்தப் பனங்காணிக்கை தானே கொண்டந்து நீ எரிக்கவேணும்.”

“என்னப்பு சொல்லுறீங்க?” வழுவிக் கீழே நழுவும் காற் சட்டையை இழுத்து முடிந்தபடி நான் கேட்டேன்.

“உறுதியாகச் சொல்லிப்போட்டன் நான் உயிரை விட்டா என்ரை உடம்பை; பரம்பரையான எங்கடை இந்தப் பனங்காணிக்கைதான் கொளுத்திச் சுடவேணும். என்ரை ஆத்மா அப்ப தான் சாந்தி அடையும். செய்வேன் எண்டு சத்தியம் பண்ணடா?”

தலையில் அடித்துச் சத்தியம் வாங்கிக் கொண்டார்.

அவரது ஆசைத் துடிப்பெல்லாம் நரைகண்ட மீசையிலும் கைகால் ரோமங்களிலும் சில்லிட்டு நிமிர்ந்தது.

பாவம் அப்பு! என்னைத் தூக்கித் தழுவுவதிலும் அணைத்துக் கதைப்பதிலும் அவருக்கு எத்தனை மகிழ்ச்சி!!

சத்தியமாயெணை அப்பு என்று சொல்லி…. முடிக்கவும் என்னையறியாமல் கண்கள் கலங்கி “ஓ! என்ரை அப்பூ …..!” எனக் கதறிவிட்டேன்.

அப்பு என்னை இறுக அணைத்து முதுகைத் தடவினார்; அவரின் கண்கள் கலங்கிவிட்டன.

கணேசுவின் மனக்குறளி ஒரு கணத்தில் ஊருக்குப் போய்ப் பழைய நிகழ்ச்சிகளில் லயித்து அவற்றைப் பசுமையாக்கி.

‘ஹை’ மிஸ்டர் கணேஷ்! என்ன? ஏதாவது சுகயீனமா?’ என ஆங்கிலத்தில் விசாரித்தபடி வந்தாள் மிஸ் மார்க்.

“அரை நாள் லீவு போடவேணும் போல” என்றான் கணேஷ்.

‘என்ன? எங்கேயாவது’ பிக்னிக் ‘போகிறீர்களா? என்றாள். “சே! உடம்பு சரியில்லை. ‘சிக்’ என்றான் கணேஷ்.

அவன் தனது ஆஸ்பத்திரி அலுவலகத்தில் இருந்து புறப் பட்டபோது கையசைத்துப் புன்னகைத்தாள் அவள்.

அறையில் சிறிது நேரம் ஆறுதலாக இருக்கலாமென வந்தான். வீட்டு நினைவும் பனங்காணி நிகழ்வுகளும் மனதை ஆக்கிரமித் திருந்தன.

வெளியே வீதிகளிலே ‘சம்மருக்’கான ஆரவாரங்கள்….! பொருட்கள் விற்பனை; வாங்குவோரின் கலகலப்பு…! பரபரப்பு!

சில நாட்களின் முன்புதான் அவனுடைய அப்புவின் கடிதம் வந்திருந்தது; அவனுக்கு வயசாகிறதால், தமக்கும் முதுமை வந்து விட்டதால் அவனது கல்யாணத்தைச் செய்து முடிக்க வேண்டு மெனவும் பெண் தேடுவதில் தாம் ஈடுபட்டிருப்பதாகவும் அப்பு எழுதியிருந்தார்.

மேலும் அந்தப் பனங்காணியிலும் குண்டுகள் போடப் பட்டதாகவும் வயிரப் பனைகள் என்பதால் அவை முறியவில்லை . இலேசாகச் சீவிக்கொண்டுதான் குண்டு போயிருக்கு எனவும் எழுதியிருந்தார்.

அறையில் தனிமை மனதை அரித்தது.

வேலைக்காக அலைந்து கொண்டிருக்கும் அடுத்த தொடர் மாடியில் வசிக்கும் பத்மநாதனிடம் போனான் கணேஷ்.

“வேலையிருக்குதெண்ட சுதியில் நீ உலாத்தித் திரிகிறாய்” – என்றான் பத்மநாதன் ஆத்திரமாகக் கணேசைப் பார்த்து.

அங்கிருந்த மகாலிங்கம், “செய்தி தெரியுமோ?” எனப் பீடிகை போட்டான்.

“ஆமி, றிவறெச” நடவடிக்கையின் போது சனங்களெல்லாம் ஊரைவிட்டே கிளம்பி விட்டினமாம். குழந்தை குஞ்சு குமர் கிழடு பெண் ஆணென்று யாவருமே அகதிகளாகி வடமராட்சி, தென்ம ராட்சி, கிளிநொச்சி என ஓடிப்போய் விட்டினமாம்…

ஓட முடியாமல் களைத்து மூச்சடைத்து வழியிலேயே சிலர் செத்துப் போனார்களாம். உன்ரை அப்புவும் வழியில் களைத்து மயங்கி…

செத்த உடலைப் பக்கத்தில் கிடந்த ஓலைகளையும் சுள்ளித் தடி குப்பைகளையும் போட்டுக் கொளுத்தித் தகனம் செய்திருக் கினமாம். ஆறேழு நாளுக்கு முந்தி நடந்து போச்சாம். வவுனியாவுக்கு வந்துள்ள என்ரை தங்கச்சி ஊர்ப் புதினங்களைச் சொன்ன போது டெலிபோனில் இதையும் சொன்னாள். உனக்கு ஓபீசுக்குக் கோல் எடுத்தேன்…..!!!”

கணேசுவுக்கு மயக்கம் தெளிந்துவிட்ட போதிலும் தந்தை யின் கொடூர மணரம் அவனைக் குலுங்கிக் குலுங்கி அழ வைத்தது. தந்தையின் பனங்காணிப் பற்றும் அங்கே இறுதித்துயில் கொள்ள வேண்டுமென்ற விருப்பம் நிறைவேறாமற் போனதும் அவன் மனதை இடித்து உடைத்துக் கொண்டேயிருந்தன.

– முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள், முதற் பதிப்பு: மாசி 2010, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *