பத்திரக்குழாய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 9,265 
 

பள்ளிப் பருவ நண்பர்களுடன் சண்டையிட்ட கணங்களை நினைவுகூறுகிற வழியில். . .

கதை கேட்டு, கதை சொல்லி, கதை படித்து, கதை எழுதி, பிரபலம் வேண்டி தலை கனத்து, தூண்டலும் அது குறித்த விசாரிப்பு முகங்களும் முகாந்திரங்களும் போகிற வருகிற வழியெங்கும் பேசி, மொழியும் கதை எழுதும் பழக்கமும் கெட . . .

சூழல் வயப்பட்டு நொடிக்குள் தெறித்து உணர்வு எழுச்சி வாழ்நாள் முழுவதும் பரவ . . . சுய இரக்கம் மருவிக் கூர்மை அடைந்து, பாவனையும் பாவித்தலும் எங்கும் எதிலும் யாவுமாய் . . . ஓர் மனோலயமே கதையின் ஊற்றுக்கண்ணாக . . .

பத்துக்குழி நிலப்பரப்புக் கொண்ட வீட்டை நான்கு பிரிவுகளாகக் குறிப்பிடலாம். பத்து அடி-பதினான்கு அடி நீள அகல உள் வீடு (வாசல் கதவு உள்ளது). அதன் முன் வலது பக்கம் ஐந்து அடி-நான்கு அடிநீள அகலச் சமையல் கட்டு, இடது பக்கம் ஐந்து அடி- பத்து அடிநீள அகலத் தண்ணீர் புழைக்கடை, மேல்கூரை அற்ற அப்பகுதி வழி வந்து சேரும் அத்தை வீட்டு முருங்கை மர இத்தியாதிகளும் மழை, நீர், பறவைகளின் எச்சம் ஆகியன நமது உடைமையாகும். மீதமுள்ள கல்தரி மாட்டுத் தொழுவம் வீட்டின் இடதுபுறச் சுவருக்கும் அடுத்த சாமியார் வீட்டுச் சுவருக்குமிடையே இரண்டு அடி நடைபாதை வலதுபுறம் அத்தை வீட்டிற்கும் நமது வீட்டிற்கும் இடையே ஆள் உயரப் பொதுச் சுவர், அந்தச் சுவர் ஏறிக் குதித்து அத்தை வீட்டிற்குள் ஓடி ஒளிவது ஓர் சாகசம்.

உள் வீட்டு வலதுபுறச் சுவரை ஒட்டி, ஒன்றரை அடி அகலம், மூன்று அடி உயரம், ஏழு அடி நீளம்கொண்ட மரப்பலகை உண்டு. அதன் மேல் ஒன்றின் மேல் ஒன்றாக இரு தகரப் பெட்டிகளும் பக்கத்தில் ஒரு தகரப் பெட்டியும் மீதமுள்ள பகுதியில் அழுக்குத் துணிகளும் பாய் தலையணைகளும் இருக்கும்.

மேல்பெட்டியில் அன்றாடத் துணிகள் இருக்கும். அடிப்பெட்டியில் வெளியூர்ப் பயணம், திருநாள்களுக்கு உரிய துணிகள் முறையாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும். அத்துணி மடிப்புகளுக்கு இடையே வீட்டுச் செலவுக்கான காசுகளை, அம்மா வைத்து எடுப்பதுண்டு. அம்மாவின் வரவு- செலவுக் கணக்கு தவறும் வேளைகளில் அடிப்பெட்டியிலிருந்து துணிகளோடு ஐந்து அங்குல விட்டம், பதினான்கு அங்குல நீளம்கொண்ட (பத்திரக்குழாய்) ஒரு தகரக் குழாயும் வெளியேறும். எப்போதாவது, அய்யா, அந்தப் பத்திரக் குழாயை மட்டும் எடுத்து அதனுள் சுருட்டிவைக்கப்பட்டிருக்கும் வீட்டுப் பத்திரங்களை விரித்து ஒவ்வொரு காகிதமாகப் பிதுக்கிப் பார்ப்பதுடன், (அய்யாவிற்கு எழுதப் படிக்கத் தெரியாது) அவற்றோடு சில துண்டுச் சிட்டைகளைச் சுருட்டிச் சேர்த்துவைப்பதையும் சில துண்டுக் காகிதங்களை எடுத்துக் கிழித்துப்போடுவதையும் உடன் இருந்து கவனித்திருக்கிறோம்.

அடிப்பெட்டியிலிருந்து காசுகளை எடுத்துவரும்படி, அம்மா நமக்கு வேலையிடும் சமயங்களில், காசுகளை எண்ணி எடுக்கும் நேரத்திற்குள் பத்திரக்குழாயினையும் திறந்து வீட்டுப் பத்திரங்களையும் துண்டுச் சிட்டைகளையும் பார்வையிடுவதுண்டு. சில சமயம், அந்தப் பத்திரக்குழாய்க்குள் கத்தையாக நூறு ரூபாய் நோட்டுகள் சுருட்டிவைக்கப்பட்டிருப்பதையும் கவனித்திருக்கிறோம்.

பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் பத்திரக்குழாயில் உள்ள வீட்டுப் பத்திரங்களிலும் துண்டுச் சிட்டைகளிலும் என்னென்ன விவரம் எழுதியிருக்கிறது என்பதை அறியோம். இதற்கு எழுத்துக்கூட்டி வாசிக்கத் தெரியாத பருவத்தையும் வாசித்து அறிய வேண்டுமென்ற அவா இன்மையையும் குறிப்பிடலாம். விடுமுறை நாள்களில் கல்லூரிக்குள்ளும் வெளியிலும் வீட்டிற்குள்ளும் வெளியிலும் மாணவர்கள், நண்பர்களோடு கலை-இலக்கியம் பேசிக் கழித்த பொழுதே அதிகம். எப்போதாவது மனத்தில் தோன்றியதைச் சித்திரம்-சிற்பம்-எழுத்து எனப் பதிவுசெய்வதுண்டு.

கண்மூடி அயர, கனவு அதற்கே உரிய சாகசத்தில்/ வடமாநிலத்து மலை உச்சிகளில் அமைந்த கோவில், கோட்டைகளை நோக்கி அந்தி வெளிச்சத்தில் அடர்ந்த காடுகளுக்கு மேல் ஜனக் கூட்டத்தோடு பயணித்து . . .

தனித்துக் கழுகுமலை உச்சியில் நிற்க, பார்வை வீதி சூழ்ந்த கார்மேகத் தூவானத்தில் உடல் நனைய, சிப்பி பாறைச் சரிவில் சாரம் இறங்கிய உச்சிவானத்து மஞ்சள் ஒளி, பாறைகளே கோவில் கோட்டைகளாகக் கோலமிட . . . விளையாட்டு ஓட்டமாய் வந்து சப்புச்சவர் பெட்டிமேல் அமர்ந்து காகிதங்களில் கீறிக் கசக்கி எறிய, அவற்றை எடுத்துச் சப்புச்சவர் பெட்டிக்குள் அய்யா பத்திரப்படுத்தும் உணர்வோடு மண் தரையில் கைகள் பரவ மெத்தை விரிப்பு முகம் வந்து அணையும் . . . (சப்புச்சவர்- வீட்டிற்கு உதவாத பொருள்களையும் விளையாட்டுச் சாமான்களையும் இட்டுவைக்கும் மரப்பெட்டி)

கண்ணாடியில் நம் முகம் பார்த்து, அது யார் எனக் கேட்டு, அதுவல்ல அதுவல்ல என அரை நித்திரை கண் இமைப்பில் வந்து சேர்ந்த காட்சிவழி ஓடி, மன வீதியில் ரூப, அரூபங்கள் ஏக சஞ்சாரமாக . . . திசை மாறும் புத்தியைக் கவனி என அதட்டி, கவனித்துப் பிறருடன் பகிர்வதற்கேதுவாகத் தோற்றம், வார்த்தை என வகை பிரித்து . . .

கண்ணால் கண்டது, கனவு அவிழ்த்தது, அசைபோட்டது எனக் கொத்துக் கொத்தாய் வருடங்கள் ஓடிவிட்டன.

சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு எனலாம். கல்லூரிப் பணிக்கு அரசு விடுமுறையுமில்லை, நமது சுய விடுப்புமில்லை, எனினும் நமக்கு இருபத்து ஓர் நாள்கள் விடுப்புக் கிடைத்தது. அந்நாள்களில் மனமும் உடலும் நலமாகவே இருந்தன. எனினும், நாம் வீட்டைவிட்டு வெளியே செல்லவில்லை, யாரும் நம்மை வந்து சந்திக்கவுமில்லை. அந்நாள்களில் பெரியவர்கள் சமையல் செய்துகொண்டிருந்தார்கள்; சிறுபிள்ளைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். நாம் எதிர்வினை அற்றும் பசி அற்றும் இருந்தோம். இதில் சரியாகப் பதினைந்து நாள்களைக் குறிப்பிடலாம். பகலிலும் இரவிலும் தூக்கத்தில் தொடராகக் கனவு நேரும், கண் விழித்த வேளைகளில், அந்தந்தப் பொழுதிற்கான கனவுகளைப் பதிவுசெய்து, தொகுத்து, பத்திரக்குழாய்க்குள் சுருட்டிவைப்பது மட்டுமே நமது பணியாக இருந்தது.

கனவு காணும் நிலையிலும் அதைக் காகிதத்தில் பதிவுசெய்யும் நிலையிலும் எவ்வித உணர்வு ஆதிக்கமும் அவசரமும் அற்று இருந்தோம். கண்ட கனவுகள் எத்தகையவை? அவற்றில் எவையெல்லாம் காகிதத்தில் பதிவுசெய்யப்பட்டன என்பது கவனத்தில் இல்லை. எனினும், அவை மன இறுக்கமும் மேடை அலங்காரமும் சுவாரஸ்யமும் அற்றவை என உறுதிகூற இயலும்.

கண் விழிப்பில், அரை நித்திரையில், கண் அயர்வில் அந்த விடுமுறை நாள்களில் பதிவுசெய்த கனவுக் குறிப்புகளும் அவற்றைச் சுருட்டிவைத்த பத்திரக்குழாயும் கவனம் ஏறும் . . . அவற்றை அனைவர் பார்வைக்கும் வைக்க வேண்டும் என்ற விருப்பம் உண்டாகும். அதேவேளை, அப்படி ஒரு பத்திரக்குழாயும் எழுதி வைக்கப்பட்ட கனவுக் குறிப்புகளும் கனவில் நேர்ந்தவை என்று யதார்த்தத்தில் எழுதிப் பாதுகாக்கப்பட்டவை என்றும் இவை இரண்டிற்கும் இடைப்பட்ட எதிர்பார்ப்பு என்றும் பொழுது கழியும் என்றும் இந்த நொடியிலும் நாம் நிற்கும் பிரதேச வெளியில் எங்கோ, எதன் மறைவிலோ அந்தப் பத்திரக்குழாயும் அதனுள் பாதுகாப்பாய்ச் சுருட்டி வைக்கப்பட்ட கனவுக் குறிப்புகளும் இருக்கின்றன என்பதை உறுதியாகக் கூற முடியும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *