பகவத் சங்கல்பம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 25, 2020
பார்வையிட்டோர்: 5,839 
 

நவீன் அன்று சென்னையின் பாலவாக்கத்திலிருந்து ஓரகடம் போக வேண்டும். அங்கு பகல் பன்னிரண்டு மணிக்கு ஒரு முக்கியமான மீட்டிங். சொந்தக் கார் இருந்தாலும் அதை சென்னையின் போக்குவரத்து நெரிசலில் ஓட்டிக்கொண்டு போய்வர அவனுக்கு விருப்பமில்லை. சொத சொதவென விட்டுவிட்டு மழை வேறு.

அதனால் காலை ஒன்பது மணிக்கு ஒரு ஊபர் கார் புக் செய்துவிட்டு காத்திருந்தான். ஒன்பதேகால் மணிக்கு அவன் வீட்டின்முன் ஒரு வெள்ளைநிற ஏஸி மாருதி டிசையர் கார் வந்து நின்றது.

நவீன் காரில் ஏறிக்கொண்டான். ஓரகடம் போய்ச்சேர எப்படியும் ஒன்றரை மணிநேரம் ஆகும். டிரைவரிடம் பேச்சுக் கொடுத்து பொழுதைப் போக்கலாம் என்று எண்ணி, “என்னப்பா உன் பேரென்ன?” என்று ஆரம்பித்தான்.

“குணசீலன் சார்…”

“உனக்கு வீடு எங்கே?”

“நங்கநல்லூர் சார்…”

“இது உன்னோட சொந்த வண்டியா?”

“ஆமா சார் லோன் போட்டு வாங்கினேன். இப்ப கடனை அடைக்க தினமும் கடுமையாக உழைக்கிறேன்…”

“இப்படிக் கஷ்டப் படறதுக்கு எங்கேயாவது மாதச் சம்பளத்திற்கு டிரைவரா வேலையில் இருக்கலாமே?”

“அதெல்லாம் பாத்து வெறுத்துப் போய்தான் இப்ப லோல் படறேன் சார்.”

“என்னப்பா இப்படி அலுத்துக்கிற?”

“அப்படித்தான் சார்..என் சொந்தக் கதை ஒரு பெரிய சோகக்கதை.”

நவீனுக்கு சற்று சுவாரசியம் தட்டியது. சரி, ஓரகடம் போய்ச்சேரும் வரை நல்லா பொழுதுபோகும் என்று நினைத்து ஆர்வமானான். பாவம், அப்போது அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை, தான் அன்று ஓரகடம் போகப் போவதில்லை என்று.

“அது என்னப்பா அப்படி ஒரு சோகம்?”

“இந்தக் கார் லோன்ல வாங்கறதுக்கு முன்னாடி சம்பளமாக மாசம் இருபத்தைந்தாயிரம் கிடைக்கிற வேலையில் இருந்தேன் சார். மனசுக்கு பிடிக்காம அந்த வேலையை உதறிட்டேன் சார்.”

“ஏம்பா நல்ல சம்பளம் தரும் வேலையை வேண்டாம்னு உதறிட்டு இப்ப கஷ்டப் படறே?”

“சார் படிச்சது பத்தாப்பு வரைதான். படிப்பு ஏறலை. அதுக்கு அப்புறம் டிரைவிங் கத்துக்கினேன். லைசென்ஸ் கிடைச்சவுடனே பழவந்தாங்கல்ல ஒரு எக்ஸ் எம்.எல்.ஏ வீட்ல பர்சனல் டிரைவரா சேர்ந்து ஒரு ரெண்டு வருஷம் கஷ்டப் பட்டேன்… அந்த ஆளு தினமும் க்ளப்ல குடிச்சிட்டு வந்து என்னை ராத்திரி பத்து மணிக்குதான் வீட்டுக்கு அனுப்புவான்.”

“………………………….”

“ஒருநாள் என் ப்ரண்டு போன் பண்ணி அப்பல்லோ ஹாஸ்பிடல் ஆம்புலன்ஸ் டிரைவர் வேலை ஒண்ணு காலியா இருக்கு. பெர்மனன்ட் வேலை போறியான்னான்.

சரின்னு அடுத்தநாளே க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ இண்டர்வியூ போனேன். எனக்கு டிரைவிங் டெஸ்ட் கொடுத்து உடனே செலக்ட் பண்ணிட்டாங்க. தினமும் ஆம்புலன்ஸ் மட்டும்தான் ஓட்ட வேண்டும். எட்டுமணி நேர வேலைதான். ட்ரான்ஸ்போர்ட் மானேஜர் ரொம்ப நல்லவரு. மூணு வருஷம் அங்கேயே வேலை பாத்தேன்… எனக்கு நல்ல பேரு…”

“பொறவு அந்த வேலையை ஏன் விட்டே?”

“அவங்க கிட்ட மொத்தம் ஆறு மருதிவேன் ஆம்புலன்ஸ், நாலு டெம்போ ட்ராவலர் ஆம்புலன்ஸ் இருக்கு சார். மொத வருஷம் எனக்கு மாருதிவேன் ஆம்புலன்ஸ் குடுத்தாங்க. பேஷன்ட்ஸ் வீட்ல இருந்து போன் வந்தா போய் அவங்களை ஹாஸ்பிடல் கூட்டிட்டு வர வேலை. அது ஸ்மூத்தா போச்சு…

ரெண்டாவது வருஷம் எனக்கு டெம்போ டிராவலர் கொடுத்து ஓட்டச் சொன்னாங்க. சரின்னு அதையும் திறம்பட செய்தேன். ரோட்டில் போகும்போது அலாரத்தை அலறவிட்டுக்கிட்டு ஓட்டுவேன். எல்லாரும் ஒதுங்கிக்கொண்டு எனக்கு வழிவிடும்போது முதல் இரண்டு வருடங்கள் ரொம்ப பெருமையாகூட இருந்திச்சு. சிலசமயம் எம்ப்டியா வண்டியை ஓட்டிட்டு போனாக்கூட அலாரம் போட்டுகிட்டு ஓட்டுவேன். எல்லாரும் பயந்துகிட்டு வழிவிடும்போது எனக்குச் சிரிப்பா வரும். டீஸல் போடும்போது, முப்பது லிட்டர்க்கு என் மானேஜர் கூப்பன் கொடுத்து அனுப்புவாரு. பொதுவா டிரைவருங்க எல்லோரும் இருபது லிட்டர்தான் போடுவோம். மிச்ச பத்து லிட்டர்க்கு உண்டான பணத்தை நானும் பங்க்ல டீஸல் விடுபவனும் அப்புறமா பங்கு போட்டுக்கிடுவோம். மாசம் நாலாயிரம் தேறும். இது இந்தியாவுல எல்லா டிரைவரும் பண்ணுகிற ஒரு விஷயம்தான்.”

“இதெல்லாம் உங்களுக்கு அசிங்கமா தோணல?”

“அசிங்கமாவது கிசிங்கமாவது, நீங்கள்லாம் மட்டும் அரசாங்க உத்தியோகத்ல சம்பளத்தைத் தவிர கிம்பளம் வாங்கல?”

“இருபத்தைந்தாயிரம் சம்பளம், டீஸல் திருட்ல மாசம் நாலாயிரம், எட்டுமணி நேர வேலை, எம்ப்டி வண்டிக்கு வழிவிடும் மக்கள் இப்படி பந்தாவாக இருந்தும் ஏன் வேலையை விட்டே?”

“என்னோட போதாத நேரம் எனக்கு ப்ரமோஷன் குடுத்து ஆக்சிடென்ட் கேஸு, தற்கொலை கேஸுன்னு அடிக்கடி அனுப்ப ஆரம்பிச்சுட்டாங்க… எமர்ஜென்சின்னா அனேகமா அது இறந்துபோன உடல்தான்… ப்ரமோஷன் குடுத்தப்புறம் என்னோட டெசிக்னேஷன் டிரைவர்-கம்-நர்ஸ் என்று பெயர் மாத்திட்டாங்க. அதாவது எமர்ஜென்ஸின்னா என்கூட ஒரு நர்ஸும் வண்டில வருவாங்க. ஸ்பாட்ல நான் நர்ஸுக்கு பாடியை எடுக்கறதுக்கு உதவி பண்ணனும். அதுவாவது பரவாயில்ல. முழுதான செத்த பாடியை தூக்கிவந்து போஸ்ட்மார்ட்டத்திற்கு போட்டுடலாம்.”

“…………………………………”

“ஆனா தலை சிதறி கிடக்கிற பாடியை ஹாண்டில் பண்றது ரொம்பக் கஷ்டம் சார். கூட்டத்ல ஒருத்தனும் உதவிக்கு வரமாட்டானுங்க. ஒதுங்கி நின்னு வேடிக்கை மட்டும் பாப்பானுங்க… நானும் அந்த ட்யூட்டி நர்ஸும் மட்டும்தான் பாடியை தூக்கி எடுத்துகிட்டு ஹாஸ்பிடல் வரணும். மார்ச்சுவரி வரையும் கொண்டுவந்து பாடியை ஒப்படைக்க வேண்டியது என்னோட பொறுப்பு.”

“அதுசரி அதுக்காக ஏன் வேலையை விட்ட?”

“இந்த மாதிரி பாடிகளை தலைசிதறி எடுக்கிற அன்னிக்கி ராத்திரி எனக்கு வீட்ல தூக்கமே வராது சார்… அந்தக் காட்சியே என் கண் முன்னால திரும்பி திரும்பி வந்துகிட்டே இருக்கும். சாப்பாடே இறங்காது.”

“ஓ அப்படியா?”

“போன வருடம் ஒருநாள் + 2 ரிசல்ட் வந்துச்சு சார். அன்னக்கி மதியம் ஒரு பதினாறு வயசுப்புள்ள வடபழனில ஒரு அபார்ட்மெண்ட்டின் எட்டாவது மாடில இருந்து கீழ குதிச்சு தற்கொலை பண்ணிக்கிச்சு சார். உடனே அப்பல்லோ எமர்ஜென்ஸிக்கு போன் வந்திச்சி. நான்தான் அப்ப டியூட்டில இருந்தேன். ஒரு நர்ஸும் நானும் ஸ்பாட்டுக்கு விரைந்தோம். ஐயோ, ஹாரிபிள் ஸார். கார்பார்க்கிங் சிமென்ட் தரையில அந்தப் பெண் தலை சிதறி, உடல் சிதிலமாகிக் கிடந்த கோரம் பார்க்கவே பயங்கரமா இருந்திச்சு சார். எனக்கும் எட்டு வயசுல ஒரு பெண் குழந்தை இருக்கு ஸார். இந்தக் காட்சியைப் பார்த்தவுடனே என்கூட வந்த நர்ஸ் பயத்ல மயங்கி விழுந்துட்டாங்க. பாவம் அதுவும் சின்னப் பொண்ணுதான். அது நர்ஸ் ட்யூட்டில ஜாயின் பண்ணி மூணு மாசம்தான் ஆச்சு.

எல்லா ஜனங்களும் கூடி நின்னு வேடிக்கை பாத்தானுங்க. ஸ்பாட்டுக்கு வந்த போலிஸ் சீக்கிரம் பாடியை ரிமூவ் பண்ணச்சொல்லி என்னைய மட்டும் விரட்டினான். நான் ஓடிப்போய் வண்டியின் பின்பக்க கதவை அவசரமாகத் திறந்து ஸ்டிரச்சரை வெளியே இழுத்து அந்த பாடியை தூக்கி ஸ்டிரச்சரில் கிடத்தினேன். அதன்பிறகு போலீஸ் வந்து ஸ்டிரச்சரை வண்டியில் தூக்கி வைக்கமட்டும் எனக்கு ஹெல்ப் பண்ணான். அந்தப் பெண்ணின் தலை சிதறியதால் உள்ளே ரோஸ் கலரில் மூளைப்பகுதியை நான் பார்க்க நேரிட்டது ஸார்… வெளிப்பகுதியில் ரத்தம்வேறு ஏராளமாக வழிந்தது…. கண்றாவி ஸார்..

அதுக்கப்புறம் எனக்கு தொடர்ந்து மூணு நாளைக்கு செம பீவர் ஸார். சாப்பாடு செல்லல. தூக்கம் வரல. உடம்பு எனக்கு தூக்கி தூக்கி அடிக்குது. இதைப் பார்த்த என் பெண்டாட்டி, பிச்சை எடுத்தேனும் இனி நாம வாழலாம், முதல்ல இந்த வேலையைத் தூக்கி எறிங்கன்னு மூக்கைச் சிந்திகிட்டு என்னிடம் அழுதா ஸார்…”

“அப்புறம்?”

“அன்னியோட சரி… நான் அப்புறம் அந்த ஆம்புலன்ஸ் வேலைக்கே போகலை. கடன் வாங்கி இப்ப சொந்தமா ஊபர் டாக்ஸி ஓட்டிக்கிட்டு இருக்கேன்.”

கார் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது…

திடீரென ஹைவேயில் எதிரே பயங்கர ட்ராபிக் ஜாம். ஏதோ ஆக்சிடென்ட் போலும். குணசீலன் மிக மெதுவாக ஊர்ந்து சென்றான். ஆக்ஸிடென்ட் ஸ்பாட்டில் இருவரும் வெளியே எட்டிப் பார்த்தனர். அங்கு லாரி மோதி பைக்கில் வந்த ஒருவனின் தலை பிளந்து மிகவும் கோரமாக காட்சியளித்தது.

அதைப் பார்த்ததும் குணசீலன் மயங்கி காரில் சரிந்துவிட்டான். கார் அங்கேயே நின்றுவிட்டது. நவீனுக்கு பதற்றமாகி விட்டது. பின்னால் டிராபிக் வேறு தொடர்ந்து ஹார்ன் அடித்தது. போலீஸ் வந்து நவீனைக் காரிலிருந்து மெதுவாக இறக்கிவிட்டு ட்ரைவிங் ஸீட்டில் அமரச் செய்து, கார் கிளம்பியதும் ட்ராபிக்கை க்ளியர் செய்தனர்.

நவீன் காரை தானே ஓட்டிச்சென்று மயங்கிக் கிடந்த டிரைவர் குணசீலனை உடனே அருகில் இருந்த ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தான். குணசீலனைப் பரிசோதித்த பின் மைல்ட் ஹார்ட் அட்டாக் என்றார்கள். உடனே ஊபர்க்கு போன் செய்தான். தன்னுடைய ஓரகடம் மீட்டிங்கை கேன்ஸல் செய்தான். காத்திருந்தான்.

ஊபர் மேனேஜரும், குணசீலன் பெண்டாட்டியும் ஹாஸ்பிடலுக்கு விரைந்து வந்தார்கள். பாவம் அன்றைய பொழுது நவீனுக்கு நன்றாக விடியவில்லை. என்னதான் கவனமாக இருந்தாலும், சில நாட்கள் நமக்கு நன்றாக விடிவதில்லைதான்!

எல்லாம் பகவத் சங்கல்பம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *