பகலில் மறையும் வீடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 7,202 
 

இந்திய நிலவியல் காட்சிகளின் விநோதங்களையும் அதிசய மனிதர்களையும் நேரில்

கண்டு திரட்டு ஒன்றைத் தயாரிக்கும் பொருட்டு நெல்லைச் சீமையில் ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த மூன்று ஆங்கிலேயர்களுக்கு, மதுரை ஜில்லாவிற்குட்பட்ட பாளையம் பகுதியிலுள்ள ஒரு வீடு பகல் பொழுதில் மறைந்து இரவில் மட்டும் காட்சி தருகிறது என்ற செய்தி கிடைத்தது. மூன்று ஆங்கிலேயர்களும் பிரயாணத்திற்குப் போதிய வசதிகளையும் பாதுகாப்பையும் பெற ஆளுநரிடம் அனுமதி பெற்றனர். பிறகு மூன்று குதிரை வீரர்களையும் டேவிஸ்சன் என்ற மேஜர் தங்கியிருந்த பாளையப் பகுதியின் வரைபடத்தையும் பெற்றுப் பயணத்தைத் தொடங்கினர். தொடர்ந்து ஏழு நாட்கள் பயணத்திற்குப் பிறகு மதுரைக்கு வந்து தங்கினார்கள். பிறகு மேஜர் இருந்த பாளையத்தை வந்தடைந்தனர்.

மூன்று ஆங்கிலேயர்களும் டேவிஸ்சன் முகாமிட்டிருந்த இடத்திற்கு வந்துசேர்ந்தபோது அதிகாலையாயிருந்தது. மேஜர் டேவிஸ்சனின் முகாமிலிருந்த அவரது மகன் பிலிப் தூங்கி எழுந்திருந்தான். தனது கூடாரத்தின் முன்பு காவலர்கள் நின்றிருப்பதைப் பார்த்தான். அதிகாலைக்குச் சற்றுபிந்திப் படுக்கையைவிட்டு எழுவது அவனது அன்றாடப் பழக்கம். மேஜர் டேவிஸ்சன் அவனுக்கு முன்பே எழுந்து அருவியில் குளிப்பதற்காகச் சென்று விடுவார். அந்தக் கிராமத்தில் திராட்சைத் தோட்டங்கள் அதிகமாக இருந்தன. விளையும் திராட்சைகளை மதுரைக்கும் நெல்லைக்கும் டேவிஸ்சனின் கீழ் பணிபுரியும் வீரர்களும் கிராமத்தாரும் அனுப்பிக்கொண்டிருந்தனர். நாட்டுத் திராட்சையின் புளிப்பும் இனிப்பும்கூடிய சுவை ஆங்கிலேயப் பெண்மணிகளுக்குப் பிடித்திருந்தது. கோடை காலத் தொடக்கத்தில் விளையத்தொடங்கும் திராட்சைகள். பனிக்காலம் தொடங்குவதற்கு முன்பு நிலத்திலிருந்து படர்ந்து மேலே செல்லும் திராட்சைக் கொடிகள் கருகத்தொடங்கிவிடும். பிறகு காய்ச்சல் ஏதுமிருக்காது. பனிக்காலத்தில், அருவியின் கரையில் மீன்பிடிப்பார்கள்; மலர்ந்திருக்கும் ஏராளமான வெண் பூக்களைப் பறித்து ஆசையோடு தங்கள் குடும்பத்துப் பெண்களின் நினைவுகளோடு வைத்துக்கொள்வார்கள்.

மலைக் கிராமத்திற்கு வந்துசேர்ந்ததும், தனக்குக் கீழே பணி புரிவோரிடம் கிராமத்துப் பெண்களிடம் பேசக் கூடாது என்றும் இந்தப் பகுதியிலுள்ளவர்கள் பில்லி, சூனியம் செய்வதில் திறமையானவர்கள் என்றும் டேவிஸ்சன் பிலிப் எச்சரித்திருந்தார். மகன் பிலிப்பிடம் தனியாகப் பேசிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலும் கிராமத்தினர் கண்கட்டு வித்தையில் கெட்டிக்காரர்கள் என அடிக்கடிச் சொல்லிக்கொண்டிருந்தார். தந்தையுடன் பிலிப் கடற்பிரயாணத்திற்கு வெஸ்ட்டன் சேவ் நகரிலிருந்து கிளம்பும்போது, அவனுடைய தாயும் சகோதரியும் கோதுமை ரொட்டியைத் தின்பதற்குத் தந்துவிட்டு, “தந்தை சொல்படி கேட்டு ஊருக்குத் திரும்பும்போது நிறையப் பொருட்களுடன் வர வேண்டும்” என்றார்கள். அப்போது பிலிப்பின் வயது பதிமூன்று. அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் அவனது சகோதரி கேத்தரீன். அரசாங்கப் பணி முடிந்த பிறகுதான் தனக்குத் திருமணம் நடக்க வேண்டுமெனப் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தாள். கடற்கரையில் அவள் யாருடனும் பேசிக்கொள்ளவே இல்லை. அன்று அவளுடைய சிநேகிதிகள் நிறையப் பேர் வழியனுப்ப நின்றிருந்தனர். கேத்தரீன், தலைகுனிந்தபடியே வீடு திரும்பினாள். வீட்டில் போதிய அளவு கோதுமையும் பணமும் இல்லையென்ற வருத்தத்துடன் அவள் தாய் இருந்தாள். ஆங்கிலேயர்களின் சாதாரணக் காலாட்படை வீரராகச் சேர்ந்த டேவிஸ்சன் ஏழு வருடங்களில் மெஜுரா ஜில்லாவின் எட்டாவது ரெஜிமென்டிற்கு மேஜராகப் பதவி உயர்வு பெற்றிருந்தார். தினமும் பிலிப்பும் டேவிஸ்சனும் உணவருந்தும் வேளைகளில் தங்களது இல்லத்தில் இரண்டு பெண்களும் தனிமையாக இருக்கும் துயரத்தை, நினைத்தபடி உணவு உண்பார்கள்.

பிலிப் தன்முன் நின்றிருந்த இரண்டு சிப்பாய்களைப் பார்த்தான். தன் தந்தை இல்லாத வேளைகளில் மட்டும் ஏதேனும் செய்திகளைத் தன்னிடம் சொல்லும் பழக்கம் வீரர்களுக்கு இருந்தது. பிலிப்பிடம் அவர்கள் தாங்கள் இன்று அதிகாலையில் அதிசயமான வீட்டொன்றைப் பார்த்ததாகவும் அந்த வீடு இரவு முழுக்கக் கண்களுக்குத் தெரிவதாகவும் பகலில் கண்களுக்குத் தெரியாமல் மறைந்துவிடுவதாகவும் கூறினார்கள்.

பிலிப் ஆச்சரியமடைந்தவனாக “இந்தச் செய்தி நேரில் கண்டதா துப்புச் சொல்பவர்களின் தகவலா” என்று கேட்டான். அவர்கள் இருவரும் “நாங்களே நேரில் கண்டோம். பகலில் தெரியாத வீட்டைப் பற்றித் தகவல் அறிந்து நெல்லைச் சீமையிலிருந்து மூன்று நபர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றார்கள். பிலிப் இந்த இடத்திற்கு வந்து, இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. தனக்கு இது பற்றி ஒன்றும் தெரியவில்லையே என எண்ணியதோடு அவ்வீட்டைப் பற்றி அறிய வேண்டுமென்ற ஆர்வமும் கொண்டான். தனது தந்தைக்குத் தகவல் சொல்லி வரவழைக்கலாமா அல்லது சில சிப்பாய்களுடன் நேரில் சென்று விசாரிக்கலாமா என யோசித்தான். பிலிப் திரும்பவும் சிப்பாய்களிடம் வீட்டிலுள்ளவர்கள் காலைப் பொழுதில் எங்கே செல்கிறார்களெனக் கேட்டான். வீரர்கள், “வீட்டில் யார் இருக்கிறார்கள் எனக் கவனிக்க முடியவில்லை. இருந்தபோதிலும், அப்பகுதியில் வசிப்பவர்கள் அனைவரும் நம் திராட்சைத் தோட்டங்களில் பணிபுரிபவர்கள்தான். சூரிய உதயத்தில் கிழக்குப் பக்கம் முகம் பார்த்திருக்கும் அந்த வீடு மறைந்துவிடுகிறது. அதேபோல் சூரிய அஸ்தமனம் முடிந்து இருளத் தொடங்கும்போது வீடு கண்களுக்குத் தெரிகிறது” என்றார்கள்.

பிலிப்பிற்கு ஆர்வமும் பயமும் ஒரு சேர மனத்தில் உண்டாயின. தனது தந்தை சொல்வது போலச் சூனியக்காரர்களின் மாய வேலைதானா இது என்று அவனாகப் பேசியபடி காலைக் குளியலுக்குச் சென்றான். தினமும் காலையில் குளித்தவுடன் அவனுடைய சகோதரி தந்த சிவப்பு வர்ணம் தீட்டிய சிலுவையைப் பார்ப்பான். மிகவும் சிறியதாகவும் உள்ளங்கையளவு அடக்கமாகவும் இருந்த சிலுவையைப் பார்த்துக்கொண்டிருந்தபோது டேவிஸ்சன் அவனிருந்த கூடாரத்திற்குள் நுழைந்தார்.

பிலிப், வீரர்கள் சொல்லிய செய்தியைச் சொன்னதும் நம்பிக்கை இல்லாதவராக நகைத்தார். முகாமில் உட்கார்ந்துகொள்வதற்கெனச் செய்யப்பட்ட மூங்கில் நாற்காலியின் மேல் அமர்ந்துகொண்டார். அமர்ந்ததும் எழுந்த சத்தம், அந்தக் கூடாரத்திற்குள் துல்லியமாகக் கேட்டது. இந்தக் கிராமத்திற்கு வந்த மூன்று வருடங்களில் அனைவருமே உடற்சதை பிடித்து எடை கூடிவருவதாக நினைத்தான் பிலிப். அருவி நீரின் இனிப்புகூடிய சுவையும் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் ஆட்டிறைச்சியும் அவர்களுக்கு மந்தத்தன்மையைச் சேர்த்திருந்தன.

டேவிஸ்சன் யோசித்தவராக, செய்தி கொண்டுவந்த வீரர்கள் இருவரையும் தனது அனுமதியின்றி வேறு எங்கும் செல்லக் கூடாது என்று கட்டளையிட்டார். அவருக்கும் பிலிப்பைப் போல ஆச்சரியமும் கூடவே பயமும் உண்டானது. வீடு பகல் பொழுதில் மறைகிறதெனில் எவ்வளவு பெரிய மாய விளையாட்டு. நேரில் பார்க்கும்பொழுது எப்படி இருக்கும், பகலில் அந்த வீடு எந்த உலகத்தில் இருக்கும்? இரவு நேரத்தில் கண்களுக்குத் தெரிகிறதென்றால் ஆச்சரியம்தான்.

டேவிஸ்சனைப் பார்ப்பதற்காக நெல்லைச் சீமையிலிருந்து வந்த மூன்று ஆங்கிலேயர்கள் கூடாரத்தின் வாசலில் நின்றிருந்தார்கள். அவர்கள் ஏற்கனவே டேவிஸ்சனைப் பற்றி நன்கு அறிந்திருந்தார்கள். டேவிஸ்சன் நெல்லையில் வேறு ரெஜிமென்ட்டில் இருந்தபோது அவர்களோடு பழகியிருந்தார்கள். குடிகாரர்களாகவும் ஊர் சுற்றுவதிலும் செய்திகளைத் திரட்டுவதிலும் தேர்ந்தவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் பகலில் மறையும் வீட்டைப் பார்ப்பதற்காக வந்திருந்ததை அறிந்த டேவிஸ்சனுக்கு வியப்பாக இருந்தது.

மூன்று ஆங்கிலேயர்களுக்கெனத் தனியாகக் கூடாரம் அமைத்துத் தரப்பட்டது. காலையிலேயே திராட்சைப் பழங்களைக் கொண்டுவரச்செய்து சுவைக்கத்தொடங்கினார்கள். பிறகு அவர்கள் தாங்கள் பகலில் ஊருக்குச் செல்ல வேண்டுமெனவும் அதிசய வீட்டைப் பார்த்து விட்டு வர வேண்டுமெனவும் கூறினார்கள். டேவிஸ்சன் தனக்கு அதிலெல்லாம் நம்பிக்கையும் ஆர்வமும் இல்லை என்றும் பாதுகாப்புக்கும் ஆலோசனைக்கும் மூத்த வீரரையும் தன் மகன் பிலிப்பையும் அனுப்புவதாகவும் சொன்னார். “ஆனால் நீங்கள் இந்தப் பகுதிப் பெண்களுடன் மட்டும் பேசக் கூடாது. அவர்கள் பில்லி, சூனியம் செய்வதில் கெட்டிக்காரிகள்” என்றார்.

அவர்கள் மூவரும் டேவிஸ்சன் சொல்லியதைப் பொருட்படுத்தவில்லை. ஊருக்குள் செல்வதிலேயே ஆர்வம் கொண்டனர். டேவிஸ்சன் அவர்களுடன் பேசிய பிறகு தனது கூடாரத்திற்கு வந்து மூங்கில் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டார். மலை அருவிக் கிராமத்தின் வரைபடத்தையும் தனது நாட்குறிப்பையும் எடுத்துக் கொண்டார். வரைபடத்தில் மலை அருவிக்குப் பின்பாகக் காட்டைக் குறிப்பதாகச் சில மரங்களை வரைந்தார். நாட்குறிப்பில் தான் நேற்று சென்றுவந்த பாதையைப் பற்றிய விவரங்களை எழுதினார். பிறகு வரைபடத்தையும் குறிப்பேட்டையும் எடுத்து மேஜைக்குள் வைத்துப் பூட்டினார். கூடாரத்தின் வெளியே வந்து நின்றுகொண்டு தன் முகத்திற்கு நேராகத் தெரியும் அருவியைப் பார்த்தார். அதைப் பார்க்கப் பார்க்க அதன் சத்தம் அருகில் கேட்பதுபோலத் தோன்றியது. அருவியில் நின்று குளித்தது போல அவருக்கு உடல் குளிர்ச்சி யடைந்தது. அருவியிலிருந்து தன் பார்வையை விலக்கிக்கொண்டார். அவர் மனம் அதைப் பார்த்துக்கொண்டிருக்கவே விரும்பியது. அருவியை ஒட்டியுள்ள தோட்டங்களில் கனிந்த திராட்சைப் பழங்களைத் தின்றுகொண்டே புல் தரையில் அமர்ந்தபடி அருவியைப் பார்க்க வேண்டுமென்ற அவரது விருப்பம் இன்னமும் நிறை வேறாமலிருந்தது.

2

உங்களுக்குப் பல தடவை கடிதம் எழுதிவிட்டேன். ஏன் எங்களுக்கு நீங்கள் கடிதம் எழுதுவதில்லை? துறைமுக அதிகாரியிடம் நாங்கள் இருவரும் இந்தியாவிற்குச் செல்ல வேண்டுமென விண்ணப்பித்திருக்கிறோம். உங்களைச் சந்திக்க வேண்டுமென்ற ஆசை எனக்கும் நம் மகளுக்கும் நாள்தோறும் வளர்ந்துகொண்டேயுள்ளது. கேத்தரீன் வியாதி வந்தவள்போல, உங்கள் இருவர் நினைவாக இருக்கிறாள். கல்யாண வயதடைந்த பெண்ணிற்குத் தினமும் ஒரு வேளையாவது நல்ல உணவு உண்ண வசதியைத் தந்தருளவில்லை நம் கடவுள். பிரார்த்தனைக்குச் செல்லும் வேளைகளில் தந்தையுடனும் சகோதரனுடனும் வரும் அவளது தோழிகளைப் பார்க்கும் சமயங்களில், கண்களில் நீர் பெருகப் பிரார்த்திக்கிறாள்.

மிகவும் கடுமையான வயிற்றுவலியால் கடந்த வாரம் அவதிப்பட்டேன். மூன்று தினங்களாக உதிரப் போக்கு. வீட்டின் பின்பாக உள்ள தக்காளிச் செடிகளிலிருந்து பறித்துவந்த, பழங்களைக் கொண்டு ரசம் வைத்துத் தந்தாள் நம் அருமை மகள். சர்க்கரையும் உப்பும் கலந்து செய்திருந்தாள். நீங்கள்தானே கேத்தரீனுக்குச் சொல்லித் தந்தது. உங்கள் ஞாபகம் வரும் வேளையில் தன் நினைவுகளை இழந்தவளாக மாறிவிடுகிறாள். என்னுடைய உடல் பலஹீனமடைந்துகொண்டேயிருக்கிறது. டேவிஸ்சன் எட்டு வருடங்கள் கழிந்துவிட்டன, ஏன் நீங்கள் கடிதம் எழுதுவதில்லை? கம்பெனியின் கிளை அலுவலகத்தில் கேட்டேன். அவர்களின் பொறுப்பற்ற பதிலும் பரிகாசமும் அடிவயிற்றிலிருந்து ஆத்திரம் பொங்கிக்கொண்டு வரச்செய்கின்றன. நீங்கள் உள்ளூரிலேயே காலாட்படையில் சிப்பாயாக இருந்திருக்கலாம். எட்டு வருடங்களில் வந்துபோன குளிர்கால இரவுகளில் என் படுக்கையில் அருகாமையின் வெற்றிடத்தை, என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. வீட்டிற்குப் பின்னால் உள்ள மரங்களில் இலைகள் உதிர்ந்து, திரும்பவும் இலைகள் தளிர்ப்பது போல அல்ல வாழ்க்கை என உணர்ந்துகொண்டேன் டேவிஸ்சன்.

இந்தக் கடிதத்தில் எனது அன்பான முத்தத்தையும் நமது வீட்டின் தோட்டத்திலுள்ள பூக்களின் வாசனையையும் சேர்த்து அனுப்புகிறேன்.

3

மூன்று ஆங்கிலேயர்களுக்கு உதவியாக உள்ளூரிலிருந்து பூதலிங்கம் என்பவனையும் பிலிப் மற்றும் வயதான வீரர் ஒருவரையும் அனுப்பியிருந்தார் டேவிஸ்சன். அவர்கள் பகல் பொழுதில் கிராமத்திற்கு வந்துசேர்ந்தனர். ஊரில் செம்மண் தூசி படிந்திருந்தது. மண்ணிலிருந்த வாசனையையும் வெயிலுக்கே உண்டான எரிக்கும் தன்மையையும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆடுகளின் குரல் வீடுகளில் கேட்டபடி இருந்தது. கூரையின் மேலிருந்த கோழிகள் சூடு தாங்காது மயங்கி விழுந்து மரங்களின் நிழலுக்கு ஓடின. நாய்கள் அந்நியர்களைக் கண்டபோதும், குரைக்காது நிழலைவிட்டு எழாமல் படுத்திருந்தன.

பூதலிங்கம் ஊரிலுள்ளஅனைவரின் பெயர்களையும் அவர்களது அன்றாடப் பணிகளையும் தெரிந்துவைத்திருந்தான். பகலில் தெரியாமல் போகும் வீட்டில் யாரும் வசிக்கவில்லையென்றும் தன்னுடைய தாத்தாவின் காலத்தில் அந்த இடத்தில்தான் கோட்டைச் சுவர் இருந்தது என்றும் வீட்டின் பின்வாசல் வழியாக நுழைந்து வீட்டைவிட்டு வெளியேறும்போது ஊருக்கு வெளியே இருப்போம் என்றும் முன்வாசல் வழியாக நுழைந்தால் ஊரின் மயானத்தை அடையலாம் என்றும் பிலிப்பிடம் சொன்னான். பிலிப் அதைக் கேட்காதவன் போல நடந்து பகலில் தெரியாத வீடிருந்த இடத்திற்குச் சென்றான்.

வீடு இருந்ததற்கான எந்த அடையாளமும் இல்லாமல் இருந்தது நிலம். எவ்வளவு பெரிய மாய விளையாட்டு. இரவில் கண்ணுக்குத் தெரியும் வீடு, பகலில் தெரிவதில்லையே என ஆச்சரியமடைந்தவர்களாக அந்த இடத்தில் நின்றார்கள். ஆங்கிலேயர்களில் ஒருவனான கீல்வென் என்ற இளைஞன் தெருவிலிருந்த பிற வீடுகளை ஒவ்வொன்றாகச் சென்று பார்த்து வந்தான். மறையும் வீட்டைத் தவிர்த்துப் பிற வீடுகளின் முன் வேப்பமரமும் புங்கை மரமும் வளர்ந்துநின்றன. அவன் நின்றிருந்த நிலம் கடுமையான உழைப்பாளிகளால் சமன்செய்து இறுகியிருந்ததற்கான அடையாளம் கொண்டிருந்தது.

பிலிப்புடன் அவர்கள் மூவரும் முகாமிற்குத் திரும்பினார்கள். மதிய உணவுப் பொழுது கடந்திருந்தபோது, பசி மிகுந்திருந்தது. டொப்பி அரிசியின் மணம் அவர்கள் பசியைத் தூண்டியது. மண் பானையில் வடித்திருந்த சோறு சூடு குறையாமலிருந்தது. சிறிய ஓலைப் பெட்டியில் உப்புக் கண்டம் போட்டு வைத்திருந்தனர். ஆட்டுக் கறியைச் சுவைப்பதில் அதிகப் பிரியங்கொண்டிருந்தவர்கள் உப்புக்கண்டத் துண்டுகளைச் சுட்டுச் சுட்டுத் தின்றுகொண்டிருந்தனர். கீல்வென் தன் நண்பர்களிடம், ‘அதிகாரத்தைவிடப் போஜனம்தான் கூடுதல் போதை தருவது என்பதை ஏற்றுக்கொள்கிறாயா?’ என்று கேட்டான்.

அன்று மாலை மூவரும் திராட்சைத் தோட்டங்களைப் பார்வையிடச் சென்றனர். அவர்கள் மூவருக்கும் ஏற்கனவே தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்த அனுபவம் இருந்தது. பறிக்கப்பட்ட தேயிலைகளை மெஜுராவிற்கு ரயிலில் ஏற்றிவிடும் வேலையில் தான் கீல்வென் முதலில் அமர்த்தப் பட்டான். மலைப் பிரதேசங்களிலிருந்து அடிவார நகரத்திற்கு வந்து சேரும் தேயில்களை மரப்பெட்டிகளில் வைத்து ரயிலில் ஏற்றினார்கள். மலைப் பிரதேசத்தில் தோட்டத்தில் வேலை செய்த சின்னப் பொண்ணுவைக் கீல்வென் விரும்பினான். கீல்வென் தான் சந்தித்த பெண்களிலேயே அவள் தான் பேரழகி என இரவு குடிபோதையில் புலம்பியவனாகத் தனது அறையில் இருந்தான். சின்னப் பொண்ணுவைப் பற்றிக் கீல்வென் எழுதிய கவிதைகள் சகதோழர்களிடம் பிரசித்திபெற்றன.

கீல்வென் அவளை மணந்துகொண்டு, தனது கிராமத்துப் பண்ணை வீட்டிற்குச் சென்றுவிட வேண்டுமென விரும்பினான். அவன் பண்ணையில், விவசாயம் செய்வதற்கு நிறையப் பேர் இருந்தார்கள். பிரிட்டிஷ் கம்பெனியில் பணிபுரிந்தபடி, இந்திய நிலக்காட்சிகளைப் பார்க்கவும் இந்திய விவசாயத்தைக் கற்றுக்கொள்ளவும் தனது கிராமத்திலிருந்து வந்திருந்தான் அவன். வேலை முடிந்து திரும்பும்போது, அவள் பின்னாலேயே வீடுவரை செல்வான் கீல்வென். அவள் அவனைப் பொருட்படுத்துவதே இல்லை. சில தினங்களுக்குப் பிறகு மலைக் கிராமங்களில் பரவிய கடும் காய்ச்சல் கீல்வென்னையும் படுக்கையில் கிடத்தியது. தொடர்ந்து ஏழு தினங்கள் அவன் படுக்கையில் கிடந்தான். கோதுமைக் கஞ்சியும் மூலிகைச் சாறும் அவனுக்கு முகாமிலிருந்து தரப்பட்டன.

ஏழு தினங்கள் தன்னைப் பார்க்காமலும் பின் தொடராமலும் இருந்த கீல்வென்னை அவள் புரிந்துகொண்டாள். தன்னைப் பார்க்காதபோதுதான் அவன் மீதான அன்பு தன்னிடமும் இருக்கிறது என்பதை உணர்ந்தவள் யாருக்கும் தெரியாமல் அவனைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தாள். கறுப்புக் கம்பளி போர்த்தி உறங்கிக்கொண்டிருந்தவனைப் பார்த்தவள் வீட்டிற்கு வந்ததும், தன்னிடமிருந்த நாணயங்களை முடிந்து வைத்துக் கடவுளிடம் பிரார்த்தித்தாள். மலர் மொட்ட விழ்ந்து, இதழ் விரித்து, செடியில் இருப்பதுபோலக் கீல்வென்னின் நினைவுகள் முழுமையாக அவளது மனத்தில் மலர்ந்திருந்தன. தேயிலைத் தோட்டங்களில், அவன் வருகைக்காகக் காத்திருந்தாள். கூலி வாங்கிக் கொள்ளச் செல்லும்போது, அவனுடைய கூடாரத்தின் முன் புற்களை மேய்ந்துகொண்டு குதிரை நிற்பதைப் பார்ப்பாள்.

ஏழு தினங்கள் கழிந்து மெலிந்த உடம்போடும் கண்களின் அடியில் கருமை படர்ந்தும் நடக்க முடியாமல் இரண்டு உதவியாளர்களுடன் சாரட் வண்டியில் வந்தான் கீல்வென். அவனைக் கண்டதும் ஆயிரம் காட்டுப் புறாக்கள் சிறகடித்துத் தன்னைத் தூக்கிச் செல்வதுபோலப் பிரமைகொண்டு நின்றாள் சின்னப் பொண்ணு. தன்னால் நிற்க முடியவில்லை என்பதைத் தெரிந்து கொண்டாள். இரண்டுமுறை உடையையும் கூடையையும் சரிபார்ப்பவள் போல, பாவனை செய்தாள். கீல் தன்னுடன் வேலை சம்பந்தமாக ஏதாவது பேசமாட்டானா என்று ஏங்கியவளாக நடந்துகொண்டிருந்தாள்.

கீல்வென் அவளைப் பார்த்தபடி தான் சாரட்டில் அமர்ந்திருந்தான். மேகம் கடந்து போகும்போது, குடையைப் போல நிழல் அவள் மேல் விழுந்து பின் நகர்வதைக் கவிதையாக எழுதக் குறிப்பெடுத்துக்கொண்டான். சின்னப் பொண்ணுவிடம் பேச வேண்டுமென்ற ஆர்வம் ஊறிக் கிடந்தது. இப்பொழுதே அவளை அழைத்துக்கொண்டு, தனது ஊருக்குச் சென்றுவிடக் கூடாதா என நினைப்பான். இரவில் ரொட்டி சாப்பிட மேஜையில் அமர்ந்திருந்தான். மெஜுராவிலிருந்து கொண்டுவரப்பட்ட புதிய மதுபானங்களுடன் அவனுடைய சக தோழர்கள் உற்சாகமாக இருந்தார்கள். மதுவும் மாமிசமும் முப்பது தினங்கள் சேர்த்துக்கொள்ளக் கூடாது என வைத்தியர்கள் அறிவுறுத்தியிருந்தார்கள். மீறும்பட்சத்தில் காய்ச்சல், விஷக் காய்ச்சலாக மாறும் அபாயம் வந்துவிடும் என்றார்கள். அவனது, நண்பர்களில் ஒருவன் இன்று தேயிலைத் தோட்டத்தில், “நீ சாரட்டில் செல்வதை உன் காதலி பார்த்தாள்” என்றான். கீல் “உண்மையா?” என்று கேட்டான். பதிலுக்கு அவன் “நான் ஏன் பொய் சொல்ல வேண்டும். அவள் இன்று கருநீல நிறத்தில் மேலாடை அணிந்திருந்தாள் போதுமா” என்றான். “ஆமாம். அவள் இன்று எனக்குப் பிடித்தமான கருநீல நிறத்தில் மேலாடை அணிந்திருந்தாள்” என்று தனக்குள் பேசிய கீல்வென் உற்சாகம் மிகுதியானவனாக, புதிதாக வந்திருந்த மதுவைக் குவளையில் ஊற்றிக் குடித்தான். துவர்ப்பும் காரமும் கூடிய மதுவை இரண்டு முறை குடித்தான். பிறகு மயங்கிக் கீழே விழுந்து விட்டான். மலைக் கிராமத்தில் மருத்துவர்கள் முன் சிகிச்சைசெய்து, மேல் வைத்தியத்தியத்திற்கு மெஜுரா அல்லது நெல்லைக்கு அனுப்பிவிடலாம் என முடிவு செய்தனர். பிறகு பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பலாம் எனப் பேசி இரண்டு மேல்கூடு கொண்ட சாரட் வண்டியில் உதவியாளர்களுடன் அனுப்பிவைத்தனர்.

பாளையங்கோட்டை மருத்துவமனையில் 40 தினங்கள் படுக்கையில் கிடத்தி வைத்தியம் செய்தார்கள் ஆங்கிலேயே மருத்துவர்கள். நினைவு தப்பியிருந்தவனை மீட்டெடுக்க 20 தினங்களாகப் போராடினார்கள். பிறகு எழுந்து சகஜமாக நடமாடித் திரிய ஒரு வருடம் ஆகிவிட்டது. தான் உடனே சின்னப் பொண்ணுவைப் பார்க்க வேண்டுமென மலைக் கிராமத்திற்குக் கிளம்பினான்.

மலைக் கிராமத்தில் தன் தோழர்களைச் சந்தித்துக் கேட்டான், அவர்கள் சின்னப் பொண்ணு திருமணமாகி நகரத்திற்குப் போய்விட்டாள் என்றார்கள். காட்டில் தன்னை ஓநாய் தின்றிருக்கக் கூடாதா அல்லது பாளையத்தில் மருத்துவர்களால் காப்பாற்ற முடியாமல் இறந்திருக்கக் கூடாதா என்று புலம்பியவனாகத் திரும்பவும் நெல்லைக்கு வந்துசேர்ந்தான். சின்னப் பொண்ணுடைய நினைவுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள நிலக் காட்சிகளின் அபூர்வத் தன்மையையும் விசித்திர மனிதர்களையும் பற்றிக் குறிப்பெடுக்கவென அலைந்து திரிந்தான். அவனுடன் எப்போதும் இரண்டு தோழர்கள் கூடவே இருந்தார்கள். சின்னப் பொண்ணுவின் திருமணச் செய்திக்குப் பிறகு கீல் தொடர்ந்து மதுவருந்தியவனாக இருந்தான். வேறு பெண்களைப் பார்ப்பதைத் தவிர்த்துவந்தான். திராட்சைத் தோட்டத்தில் நின்றுகொண்டிருக்கும் போதுகூடச் சின்னப்பொண்ணுடைய ஞாபகம் வந்தது அவனுக்கு. இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அவள் எங்கிருக்கிறாளோ என்ற வருத்தம் ஒவ்வொரு முறையும் வருவதுண்டு. நெல்லையிலிருந்து, கிளம்பி இந்த மலைக் கிராமத்திற்கு வரும்வரை, வழியில் எத்தனையோ கர்ப்பிணிப் பெண்களையும் குழந்தையுடன் நடந்து செல்லும் பெண்களையும் பார்த்தான். அவர்கள் எல்லோரும் சின்னப் பொண்ணுவின் ஞாபகங்களைக் கொண்டுவந்தார்கள்.

4

திராட்சைத் தோட்டத்திலிருந்து திரும்பிவந்து டேவிஸ்சனின் கூடாரத்தில் மூங்கில் நாற்காலிகளில் அனைவரும் அமர்ந்துகொண்டார்கள். பிலிப்பும் அவன் தந்தையும் விரைவில் தங்களது ஊரான வெஸ்ட்டன் கேவ்விற்குச் சென்றுவிட வேண்டுமென்று விரும்பினார்கள். பிலிப்பைவிட டேவிஸ்சனின் கண்களில் குடும்பத்தின் ஏக்கம் அதிகம் தெரியத்தொடங்கிவிட்டது. வயதில் மூத்த வீரர் அவரது கண்களில் தெரிந்த உறவின் ஏக்கங்களைக் கண்டுகொண்டார். நாட்டை விட்டும் வீட்டைவிட்டும் இந்தியாவுக்கு வரும் ஆங்கிலேயர்கள் தங்களையும் உறவுகளையும் மறக்க வேண்டித் தானே குடிப்பதும் பெண்களிடம் வன்கலவி கொள்வதுமாக அலைகிறார்கள் என மதுவை ஊற்றியபடி நினைத்துக்கொண்டார் அந்த வீரர்.

சூரிய அஸ்தமனம் தொடங்குவதற்கு முன் இரவில் தெரியும் வீட்டிற்குச் செல்ல வேண்டுமெனக் கீல்வென் சொன்னான். டேவிஸ்சன் தானும் அந்த வீட்டைப் பார்க்க ஆர்வமாக இருப்பதாகச் சொன்னார். அனைவரும் கிளம்புவதென முடிவுசெய்தனர். டேவிஸ்சன் நெல்லைக்குத் திரும்பும்போது கீலுடன் பிலிப்பையும் அனுப்பிவிட வேண்டுமென நினைத்தார். பிலிப்பின் இளமையும் வேகமும் துடிப்பும் திராட்சைத் தோட்டங்களில் வெறுமனே கழிந்துகொண்டிருப்பதை அவர் விரும்பவில்லை.

திராட்சைத் தோட்டங்களில் வேலைக்கு வரும் பெண்களைக் கண்டு அவனது கனவுகள் வளர்ந்து கொண்டிருப்பதை அறிந்திருந்தார். தனிமையும் மதுவும் அவனது உடலைச் சிறுகச் சிறுக வலிமை குறையச் செய்திருந்தன. கீல்வென்னின் செல்வாக்கு பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் விஸ்தாரமாகப் பரவி இருந்தது. அவனது பேச்சுக்கும் செயலுக்கும் கவர்னர்கள் சிலர் மறுப்பேதும் சொல்லாது இருந்தார்கள். மேலும் தன் மனைவியையும் மகளையையும் பிரிந்துவந்து எட்டு வருடங்கள் முடிந்துவிட்டன. உணவுக்கும் உடைக்கும் கஷ்டப்படும் வாழ்வு தான் இன்னமும் அவர்களுக்கு. தன் குடும்பத்தின் வறுமையைப் போக்கிவிட வேண்டுமென்ற வேகம் டேவிஸ்சனுக்கு இருந்தது. தன்னிடமுள்ள ஊதியத்தையும் சேமித்துவைத்துள்ள பொருட்களையும் வெஸ்ட்டன் கேவ்விற்கு அனுப்பிவைக்க விரும்பினார். பிலிப்பை ஊருக்கு அனுப்பிவிடக் கடந்த மூன்று மாதங்களாக முயன்று வந்தார். உலகளவில் போர் நடப்பதற்கான சூழ்நிலை அதிகரித்திருந்ததால் யாரையும் சொந்த ஊருக்குத் திரும்பவிடாது வைத்திருந்தனர்.

கீல்வென்னுடன் அனைவரும் கிராமத்திற்குச் சென்றனர். சூரியன் இன்னமும் மறைந்திருக்கவில்லை. மஞ்சள் நிறம் கிராமத்தின் மண் சுவர்களில் அப்பியிருந்தது. கீலுடன் அவனது நண்பர்களும் டேவிஸ்சனும் பிலிப்பும் சில வீரர்களும் சென்றிருந்தனர். அனைவரும் சற்றுப் பிறகு தெரியும் வீட்டைக் காண ஆர்வமாக இருந்தனர். பூதலிங்கம் கீல்வென்னின் அருகாமையில் நின்றிருந்தான். அவனிடம் வீட்டைப் பற்றித் தனக்குத் தெரிந்தைச் சொல்லிவிட வேண்டுமென நினைத்தான். பிலிப்பும் அவன் தந்தையும் தனது சொல்லைக் காது கொடுத்துக் கேட்க மறுக்கின்றனர் என்ற வேதனை அவனுக்கிருந்தது. வீட்டின் முன் அனைவரும் நின்றிருந்தனர்.

கீல்வென்னிடம் ரகசியமாக மாய வீட்டின் வாசல்களுக்குச் சென்று வருவதைப் பற்றிச் சொன்னான் பூதலிங்கம். “வீட்டின் பின் வாசலின் வழியாக நுழைந்தால் வெளியேறும்போது ஊருக்கு வெளியே இருப்போம். முன் வாசல் வழியாகச் சென்றால் ஊரின் மயானக் கரைக்குச் சென்று பாதை முடியும்” என்றான் அவன். தான் ஏற்கனவே ஒருமுறை சென்றதைப் பற்றியும் பகலில் வீடிருந்த இடம் மாலைவரை பாதையாகவே இருந்ததையும் சொன்னான்.

பூதலிங்கம் சொன்னதைக் கேட்டதும், ஆச்சரியமடைந்தவனாக “இதெல்லாம் உண்மையா?” என்று கேட்டான் கீல். அவனுக்கு இப்படியான அதிசயச் செய்திகள் புதிதல்ல. ஏற்கனவே நெல்லைச் சீமையில் இதைவிட அதிசயங்களைக் கேள்விப்பட்டும் நேரில் பார்த்துமிருக்கிறான். பகலில் மறைந்து இரவில் தெரியும் விந்தையை நேரில் பார்த்துவிட்டால் அதேபோலத் தனது பண்ணை வீட்டில் ஒரு வீட்டைக் கட்டி முடித்துவிடலாம் என நம்பினான். மறைந்து பின் தெரிவது மாயமோ சூன்யமோ அல்ல. மாறாக அது கணிதக் கூறுகள் கொண்ட சூத்திரம் என்று நண்பர்களிடம் சொல்லிவந்தான்.

வெளிச்சம் மெதுவாக மேற்கில் சரியத் தொடங்கியபோது கண் சிமிட்டலுக்கும் குறைவான பொழுதில் அவர்கள் அனைவருக்கும் முன்பாக வீடு காட்சி தந்தது. தண்ணீரின் கலக்கத்தினூடே தெரியும் காட்சியைப் போல வீடு மங்கலாகத் தெரிந்து பின் துல்லியம்கொண்டபோது உணர்ச்சி மேலிட ‘ஆ’ என்று வாய் திறந்து கத்திவிட்டார்கள். இரண்டு வீரர்கள் வீட்டிற்குள் நுழைந்து சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பினார்கள். வீட்டில் யாருமே இல்லை. ஒரு பொருள்கூட இல்லை என்று சொன்னார்கள்.

கீல்வென்னும் அவனது நண்பர்களும் வீட்டிற்குள் சென்றார்கள். பின்னாலேயே டேவிஸ்சனும் பிலிப்பும் வீரர்களும் சென்றார்கள். வீட்டின் சுவர்களும் தரையும் சுத்தமாக இருந்தன. கீல்வென் ஆர்வமாக அவற்றை உள்ளங்கையால் தொட்டும் பார்த்தான். குளிர்ச்சியாக இருந்தது. வெயிலில் நின்றிருந்த சூடேயில்லை. யாரும் உபயோகப்படுத்தாததுபோலவே இல்லை. தினமும் பெருக்கிச் சுத்தம் செய்துவைத்ததுபோலிருந்தது. எந்தக் கணிதக் கூறுகள் அவ்வீட்டின் மறைந்து தெரியும் சூத்திரமாக மாறியுள்ளன என அறிய முயன்றான். அப்பொழுது தான் பூதலிங்கம் சொன்ன விஷயம் ஞாபகம் வந்தது. அவன் சொன்னதைச் செய்துபார்க்க விரும்பினான். வீட்டின் நுழைவுவாசல் கிழக்குமுகமாகவும் பின்வாசல் மேற்குமுகமாகவும் கட்டடம் அமைந்திருந்தது. கட்டடத்தின் நீளம், அகலத்தைக் கணக்கெடுக்கத் தொடங்கினார்கள். வீட்டில் வேறு அறைகளே இல்லாததன் ரகசியம் எதுவாகுமெனக் கீல் யோசித்தான். வீட்டின் பரப்பில் நான்கு திசைகளிலும், உயரமாக சுவர் எழுப்பி ஜன்னல்கள் வைத்திராமல் கட்டப் பட்டிருந்ததன் காரணம் என்னவென யோசித்தான்.

இரவு முழுமையாகியிருந்தது. இரவுப் பூச்சிகளின் சப்தம் ஓரிடத்தில் விட்டுவிட்டும், சற்றுத் தொலைவில் இடைவிடாமலும் கேட்டுக்கொண்டிருந்தது. அந்தப் பூச்சிகளின் சப்தத்தை டேவிஸ்சன் அறிந்திருந்தார். அவற்றை அருவிக் கரையோரம் வளர்ந்த செடிகளில் காலைப் பொழுதில் பார்த்திருக்கிறார். அவற்றின் சப்தத்தை மிகவும் அருகாமையில் கேட்டும் அவற்றை நேரில் பார்த்துமிருக்கிறார். காலையில் அவற்றின் சப்தம் கலக்கமற்றுத் தெளிவாக, சந்தோசமாக இருப்பது போன்றும், இரவுப் பொழுதில் கேட்பதற்கு ஏனோ துயரம் கொள்வதாய் இருக்கிறதே எனவும் நினைத்தார். வீட்டின் வாசலில் வந்து நின்று கொண்டார் டேவிஸ்சன். தெருவிலிருந்த வீடுகளில், மண் சிட்டி விளக்குகள் மட்டுமே மினுங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தார். மரத்தில் மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூத்திருப்பதுபோல வீடுகளின் வாசல் தோறும் மண் சிட்டி விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. மண் சுவரில் விளக்குகளின் வெளிச்சம் விழுந்து சுவர்கள் சிகப்பு நிறமாகத் தெரிந்து கொண்டிருந்தன.

பிறகு அவர்கள் அனைவரும் வீட்டினுள்ளே அதிகாலை வரை இருக்க முடிவுசெய்தனர். பிலிப்பும் சில வீரர்களும் ஊரின் எல்லையிலிருந்து மேற்கு நோக்கி நடந்துவர வேண்டும் என்றும் தன்னுடைய நண்பர்கள் இருவரும் சில வீரர்களுடன் ஊரின் மயானக்கரையிலிருந்து கிழக்குத் திசையாக நடந்துவர வேண்டுமென்றும் கீல்வென் சொன்னாள்.

அவர்கள் அனைவரும் சென்ற பின்பு டேவிஸ்சனும் கீல்வென்னும் மட்டுமே இருந்தார்கள். அவ்வீட்டின் வாசலில் அவர்கள் அமர்ந்துகொண்டார்கள். பிலிப்பும் தன் நண்பர்களும் வந்துவிட்டால், கட்டடத்தின் சூத்திர நுட்பம் தனக்கு விளங்கிவிடுமென நம்பினான் கீல்வென். நிலவின் தூய்மையான வெளிச்சம் வேப்பமரத்தின் இலைகளின் ஊடே தெரிந்ததைக் கீல்வென் பார்த்தான். மரத்தின் தளிர்களின் பசுமை அவனுக்குச் சின்னப் பொண்ணுவின் ஞாபகத்தை உண்டாக்கக்கூடியதாக இருந்தது. பசுந்தளிர் நிறம் போன்ற சின்னப் பொண்ணுடைய முகத்தை இன்னமும் மறந்துவிடவில்லை கீல்வென். தன் பண்ணை வீட்டைவிட்டு ஏன் இந்தியாவுக்கு வந்தோம் என ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் படுக்கையைவிட்டு எழும்போது வருத்தம்கொள்வான். தன்னை மட்டுமாவது இந்தமுறை கப்பல் பிரயாணத்திற்குச் சேர்த்துவிடுங்கள் என ஆளுநரிடம் சொன்னான். ஆளுநர், அவனது துயரத்தைப் புரிந்தவராக ஏற்பாடுசெய்வதாகச் சொன்னார். ஊருக்குச் செல்லும் முன் சின்னப்பொண்ணைப் பார்த்துவிடும் சூழல் அமையாதா என ஏங்கினான். அவனது ஞாபகங்களை ஊடறுத்து விழச்செய்வதுபோல, பிலிப்பும் வீரர்களும் மேற்கு வாசல்பக்கம் வந்து நின்றனர். பிலிப்பிற்கு ஆச்சரியமாக இருந்ததோடு மட்டுமல்லாது, வீட்டின் மாயத்தன்மையை நம்பத் தொடங்கினான். கீல் தனது நண்பர்களுக்காகக் காத்திருந்தான்.

தனது குறிப்பேட்டில் வீட்டை வரைபடமாக்கிக் கொண்டிருந்தவன், யோசனையைத் தீவிரப்படுத்தியவனாக, வீரனொருவனை அழைத்து உயரமான மரத்தில் ஏறி வீட்டைச் சுற்றி அமைந்துள்ள அருகாமை வீடுகளின் தோற்றங்களைப் பற்றியும் பிற கட்டடங்களின் தோற்றங்களையும் பார்த்துவரச் சொன்னான். வீரன் மரமேறிக் கண்டு, இறங்கிவந்து சொன்ன தகவல் கீல்வென் குறிப் பேட்டில் வரைந்து முடித்திருந்த கட்டடங்களின் வரைபடத்தை ஒத்திருந்தது. வீரனிடம் படத்தைக் காட்டி “இதைத்தானே நீ மேலிருந்து பார்த்தாய்?” என்று கேட்டான் கீல். வீரன் “ஆமாம்” என்றான்.

மயானத்திலிருந்து வீட்டிற்குப் பிறர் வருவதற்குள், “ஏன் இந்த வீடு பகல்பொழுதில் மறைந்து நம் கண்களுக்குத் தெரியாமல் இருக்கிறது என்பதை, உணர்ந்து கொண்டேன் நான்” என்றான் கீல். டேவிஸ்சனும் பிலிப்பும் புரியாதவர்களாக விளக்கம் கேட்டனர். திராட்சை அதிகம் விளையும் இந்த மலைக் கிராமம் நாம் கைப்பற்றுவதற்கு முன், பாளையத்துக்காரர்களின் வசமிருந்திருக்கலாம். ஊருக்கு வெளியே செல்வதற்கும் ஊருக்குள் நுழைவதற்கும் இந்த வீட்டின் வழியைப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம். உண்மையிலேயே இது வீடல்ல. வீட்டின் தோற்றத்தில் சாதுரியமாகக் கட்டப்பட்ட நான்கு திசைகளுக்கான வாசல்தான் இது. வடக்கு, தெற்கு வாசல்கள் எப்போதும் அடைத்துவைக்கப் பட்டிருக்கின்றன. மேற்கிலும் கிழக்கிலும் மட்டுமே திறந்து மூடும் பழக்கமிருந்திருக்கிறது. இந்தக் கிராமத்தின் நீளம்தான் இந்த வீட்டு மதிலின் நீளம்.

“சரி கீல்வென், கோட்டை மதிற்சுவர்போல என்று சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் பகலில் மறைந்துவிடும் ரகசியம்தான் என்ன?” டேவிஸ்சன் பொறுமையிழந்தவராகக் கேட்டார்.

“இந்த மதிலில் உங்களது உள்ளங்கையை வைத்துப் பாருங்கள்” என்றான் டேவிஸ்சன். தனது இரண்டு உள்ளங்கைகளையும் மதிலின்மேல் வைத்தார். குளிர்ச்சியாக இருந்தது. தனது கையில் ஏதோ ஊர்வதுபோல உணர்ந்தவர் விடுக்கென்று எடுத்துக்கொண்டார். இரண்டு கைகளிலும் மின்மினிப்பூச்சிகள் நிறைய ஒட்டியிருந்தன. உதறி உதறிப் பூச்சிகளைக் கீழே விழச்செய்தார். பிறகு டேவிஸ்சனையும் பிற வீரர்களையும் உள்ளங் கையை வைத்த இடத்தைப் பார்க்கச் சொன்னார். இரண்டு உள்ளங்கை அளவு இடத்தினைத் தவிர்த்து விட்டு சுவர் எழுப்பியதுபோல இருந்தது. அனைவரும் புரியாதவர்களாக நின்றிருந்தனர். கீல்வென், “எதிரிகள் உள்ளே நுழைந்துவிடக் கூடாது என்பதற்காகக் கட்டப்பட்ட அபூர்வமான கோட்டைச் சுவர். திறமையும் நுட்பமும் கூடிய கலைஞன் செய்து முடித்திருக்கிறான். மின்மினிப்பூச்சிகள் இரவில் ஒளிர்வதைத்தானே பார்த்திருக்கிறோம். பகலில் ஒளிராத பூச்சிதான் அது. மின்மினிகள் இரவில் அமர்ந்துகொள்ளும் தன்மை வாய்ந்த மரமொன்று உள்ளது. அதன் பட்டைகளையும் செடிகளையும் வேர்களையும் இலைகளையும் அரைத்துச் சாறுபிழிந்து மண்ணில் கலந்திருக்கின்றனர். அந்த வாசத்திற்கு மின்மினிகள் கோட்டையை நோக்கி வந்தமர்கின்றன. அவற்றின் வெளிச்சத்தால் நமக்குச் சுவர்கள் கண்களுக்குப் புலனாகின்றன. காலையில் நம் கண்களுக்குத் தெரியாதபடி இருப்பதற்குக் காரணம், ஒன்றே ஒன்றுதான். பாதரசத்தையும் கரும்பாறையில் மின்னும் தகடுபோன்ற கல்பிசினையும் கலந்து சுவரெழுப்பிப் பகல்பொழுதில் கண்கள் கூசச்செய்து சுவரை மறைத்திருக்கின்றனர். வெயிலில் பாதரசம் உருகி ஆவியாகிவிடாதபடி ஏதோ மூலிகையைக் கலந்திருக்கின்றனர்” என்றான்.

கீல்வென் இத்தனை நுட்பமாக இவ்வீட்டை ஆராய்ந்திருக்கிறானே என்ற வியப்பு மேலிட்டது டேவிஸ்சனுக்கு, இருந்தபோதிலும் பகலில் மறைந்திருக்கும் ரகசியத்தை நம்ப முடியாதவர்களாகவும், கீல் சொன்ன காரணத்தை ஏற்க முடியாதவர்களாகவும் அங்கிருந்து முகாமிற்குச் சென்றனர்.

கீல்வெனும் அவன் நண்பர்கள் இருவரும் இரவு அருவியில் குளிக்க வேண்டுமெனப் புறப்பட்டுச் சென்றனர். மதுவை அருந்தியபடியே அருவியில் குளிப்பது அவர்கள் மூவருக்குமே பிடித்தமானதாக இருந்தது. கீல்வென் தான் பகலில் மறையும் ரகசிய சூட்சுமத்தை அறிந்து விட்ட சந்தோசத்தில், திராட்சைப் பழங்கள் ஊறிய மதுவைக் குடித்தபடி அருவியில் நின்றான். அவனுடைய நண்பர்கள் கரையிலிருந்த பாறையில் அமர்ந்தபடி மதுவைப் பருகிக்கொண்டிருந்தனர். கீல் குளித்தபடியே அருவியின் வலது பக்கமாகப் பார்த்தான். ஒரு விருட்சம், நட்சத்திரத்தைப் போல மின்னிக்கொண்டிருந்தது. தன் நண்பர்களின் பெயர்களைச் சொல்லி கைநீட்டிப் பார்க்கச் சொன்னான். ஜோதி விருட்சம், அமாவாசைக் காலங்களில் நடு இரவுக்கு மேல் தெரியும் ஜோதி விருட்சம். அதிசயித்து நின்றவர்கள், கீல்வென்னைக் கட்டிக்கொண்டு, “அற்புதம் கீல், அற்புதம் கீல்” என்றார்கள். இதற்காகத்தானே ஐந்து வருடங்களாக நாடோடியாகத் திரிந்துகொண்டிருக்கிறேன் என்றபடி தனது ஆடைகளை முழுக்கக் களைந்துவிட்டு விருட்சம் நோக்கி நடந்தான் நண்பனொருவன்.

அந்த இருட்டில் அதன் பிறகு அவனைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை. மறுநாள் காலையிலும் தொடர்ந்து மூன்று நாட்கள் தேடியும் கீல்வென்னின் நண்பனைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அவனது நினைவாக அன்றைய இரவு அவன் விட்டுச்சென்ற உடைகள் மட்டுமே அவர்களிடமிருந்தன.

5

எனதருமைத் தந்தை அவர்களுக்கு, நீங்களும் என் சகோதரனும் நலமாக இருக்க வேண்டுமென்று கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். நீங்கள் இருவரும் எப்போது வெஸ்ட்டர்ன் கேவ்விற்கு வருவீர்கள். மாற்றிக்கொள்ள வேறு உடுப்புகள் இல்லை. கோதுமை மாவும் சர்க்கரையும் தீர்ந்துவிட்டன. நீங்களும் நானும் வீட்டிற்குப் பின்னால் தக்காளிச்செடி ஒன்றை நட்டுவைத்தோமே, ஞாபகமிருக்கிறதா அல்லது எங்களைப் போல அச்செடிகளையும் மறந்துவிட்டீர்களா? (மன்னியுங்கள், அவ்வளவு கோபம் உங்கள்மீது.) நன்கு வளர்ந்து காய்க்கத்தொடங்கிவிட்டது. காய்கள் செடியிலேயே பழுத்துவிடுகின்றன. காலை உணவாக தக்காளிப் பழங்களில் உப்பிட்டு, உண்கிறோம். உங்களது அன்பைப் போலவும் தம்பியின் அன்பைப் போலவும் தக்காளிச் செடியின் அன்பும் இப்போது எனக்குக் கிடைத்துவிட்டது. பிரார்த்தனைக்கென ஞாயிற்றுக் கிழமை சென்றிருந்தோம். வழியில் முத்து மாலையுடன், படிக உருண்டைகளை வைத்துக்கட்டிய மாலையை விற்றுக்கொண்டிருந்தனர், இந்தியாவில் சொற்பவிலையில் கிடைக்குமாமே. வாங்கித் தாருங்களேன் அப்பா.

கோதுமை மாவு இல்லாதபோது, பசி மறந்த வேளையில் வேதனை மறந்து அலங்காரப் பொருட்களைப் பற்றிப் பேசுகிறேன். நீங்கள் எப்போது வருவீர்கள் தந்தையே. தம்பியைப் பார்த்து எட்டு வருடங்கள் கழிந்துவிட்டன. அவனுடைய நண்பர்கள் சிலர் லண்டனுக்குச் சென்று படிக்கின்றனர். சொன்னால் நம்பமாட்டீர்கள். ஒருவனுக்குத் திருமணம் முடிந்துவிட்டது. அவன் தன் மனைவியுடன் ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்திற்கு வந்திருந்தான். என்னிடம் அம்மா சொல்கிறாள், “தந்தையும் சகோதரனும் ஊருக்கு வந்ததும் உன்னுடைய திருமணம்தான்” என்று. உண்மையா அப்பா? நீங்கள் எப்போது வருவீர்கள்? கடற்கரையில் உங்களுக்காகக் காத்திருப்பேன் அப்பா. கப்பல் ஹார்ன் சப்தத்தில் உங்களை ‘அப்பா, அப்பா’ என்று சப்தமாக அழைப்பேன். கடற்கரையில் தம்பியைக் கட்டிக்கொண்டு அன்பாக முத்தம் தருவேன். நீங்கள் எப்போது வருவீர்கள் அப்பா?

6

கீல்வென்னும் பிலிப்பும் நெல்லைக்குச் சென்ற மூன்று தினங்களுக்குப் பிறகு, மலைக் கிராமத்தில் திராட்சைத் தோட்டங்களில் விஷக்காற்று பரவிச் செடிகள் கருகத் தொடங்கின. தொடர்ந்து சிலருக்கு வாந்தியும் வயிற்றுப் போக்கும் காய்ச்சலும் கண்டது.

டேவிஸ்சன் தன் மகனை நெல்லைக்கு அனுப்பியது நல்ல காரியமெனத் தனக்குள் பேசிக்கொண்டார். கீல்வென் அவரிடம் உறுதிசெய்திருந்தான். தான் எப்படியாவது, அடுத்த கப்பல் பிரயாணத்தில் பிலிப்பை வெஸ்ட்டர்ன் கேப்பிற்கு அனுப்பிவிடுவதாகவும் தான் செல்லவில்லையென்றாலும், பிலிப்பை நிச்சயம் அனுப்புவதாகவும் உறுதி அளித்திருந்தான்.

மலைக் கிராமத்தில், விஷக்காய்ச்சல் பரவிவிட்டது என்று மருத்துவர்கள் சொன்னார்கள். அனைவரும் வீட்டிற்குள் படுத்துக்கிடந்தனர். திராட்சைப் பழங்கள் காற்றிலும் பனியிலும் வாட்டம் கொண்டு அழுகத் தொடங்கின. ஒரு குழந்தை இறந்துபோனதாகத் தகவல் வந்தபோது முகாமில் சிப்பாய் ஒருவனுக்குக் காய்ச்சல் கண்டது. அவனது புலம்பலும் குளிரில் வேதனையுடன் முனகுவதும் அனைவருக்கும் துக்கத்தை வரவழைத்தன. விஷக்காய்ச்சல் மேலும் பரவக் கூடாது என மருத்துவர்கள் தந்த கஷாயத்தைக் குடித்தார்கள்.

பிலிப் வெஸ்ட்டர்ன் கேப்பிற்குப் போய்ச் சேர்ந்துவிட வேண்டுமென்று இரவில் டேவிஸ்சன் கடவுளிடம் வேண்டிக் கொண்டார். அவர் கடவுளின் முன் பிரார்த்தனையில் இருந்ததை, நெடுநாட்களுக்குப் பிறகு அப்போதுதான் வீரர்கள் பார்த்தனர். விஷக்காய்ச்சலுக்குப் பயந்து அருவியைத் தாண்டியுள்ள காட்டில் சென்று சிலர் தங்கியிருக்கத்தொடங்கினார்கள். டேவிஸ்சன் கிராமத்திற்கு வந்த புதிதில், காட்டிற்குச் சென்று திரும்பியிருக்கிறார். கிராமத்தினர் மூலிகைச் செடிகளுக்காகவும் பறவைகளின் மாமிசத்திற்காகவும் செல்வார்கள். டேவிஸ்சன் இரண்டு தினங்கள் தங்கியிருந்துவிட்டு வந்துவிடலாமெனச் சென்றார். இரவில் கூடாரம் அமைத்துத் தங்கிக்கொள்ள வீரர்களும் சென்றனர்.

அவருக்கு அமைத்துத் தந்த கூடாரத்தில் முன்னாலிருந்து பார்த்தபோது அருவியின் பக்கவாட்டுத் தோற்றம் தெரிந்தது. காட்டின் அமைதியில் அருவியின் சப்தத்தைக் கேட்டவாறு அமர்ந்துகொண்டார். இரவு உணவுக்கு வீரர்கள் அழைத்தபோதுதான் அவர் தீப்பந்தங்களின் நடுவே, காட்டு மரங்களின் கீழ் அமர்ந்தபடி சாப்பிட வேண்டுமென விரும்பினார். கொஞ்சம் மதுவும் ரொட்டித் துண்டுகளும் நிறையப் பழங்களும் கொண்டுவருமாறு வீரனிடம் சொன்னார்.

மதுவைக் குடித்துக்கொண்டே எதேச்சையாகத் தனது பின்பிக்கமாகப் பார்த்தார். தன்னையே மறந்தவராக வீரர்களைக் கூவி அழைத்தார். கீல்வென் சொன்ன இடத்திற்குத் தாங்கள் வந்துசேர்ந்திருப்பதைப் பார்த்த மற்ற வீரர்களும் முதன்முறையாக ஜோதி விருட்சத்தைப் பார்த்தார்கள். மூன்று வீரர்களுடன் டேவிஸ்சனும் குடித்துக்கொண்டிருந்த மதுக்கோப்பையுடன் நடந்து சென்றார்.

மூன்று தினங்களுக்கு மேலாக டேவிஸ்சனைக் காணாது, வயதில் முதிய வீரர் முகாமிலிருந்த அனைத்து வீரர்களையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் தேடினார்.

அவர்கள் தொடர்ந்து பல இடங்களில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க இயலவில்லை. நெல்லை ரெஜிமென்டிற்குத் தகவல் தெரிவித்தனர்.

பிலிப் மதராஸிலிருந்து ரயில் மார்க்கமாகத் தலைமையிடத்திற்கும் பின் கப்பலேறவும் கீல்வென் ஏற்பாடுசெய்திருந்தான். பிலிப் மதராஸ் பட்டணத்தைச் சென்றடைந்தபோது, வெஸ்ட்டர்ன் கேப்பிலிருந்து கேத்தரினும் அவளது தாயும் இந்தியப் பிரயாணத்திற்குத் தேர்வுசெய்யப்பட்டு, கப்பல் பயணத்திற்கெனத் தயாராகிக்கொண்டிருந்தனர்.

கேத்தரீன் அப்போது சிவப்பு வர்ணம் தீட்டிய சிறிய சிலுவையை உள்ளங்கையில் வைத்திருந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *