கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 16, 2013
பார்வையிட்டோர்: 11,696 
 

அவர் ஒரு ஆர்டிஸ்ட். அதிலும் மெட்ராஸ் ஆர்டிஸ்ட். அவ்வப்போது அவர் தமது படங்களைக் காட்சிக்கு வைப்பார். சில விலை போகும். பிரபல மேனாட்டு மாடர்ன் ஆர்டிஸ்டுகளின் எச்சங்களை இங்கே மோப்பம் பிடித்து வாங்கிக் கொள்கிற சின்னஞ்சிறு ஆர்ட் மார்க்கெட்க்காரர்கள் வந்து பார்ப்பார்கள்.கோழிச் சண்டையில் இறகுகள் பறக்கிற மாதிரி அவரது படங்களைச் சுற்றி விமர்சனங்களும் பறக்கும்.

மற்றபடி அவருக்கு ஆர்ட்டுடன் சம்பந்தம் இல்லாத அவரது ஆபீஸ் உண்டு.குடும்பம் உண்டு. ரசிகர்கள், அதுவும் பெரிய இடத்து ரசிகர்கள் வீசும் ரசனைகளை அசை போட்டுப் போட்டு அவருக்குத் தலை கவிழ்ந்துவிட்டது. அப்படிப் பாரம் ! அவர் பஸ் ஏறப் பிடிக்கும் குறுக்கு வழிகளின் மனித எச்சமும் நடுவே மானங்காணியாக மலரும் காட்டுச் செடிகளும் அவரது கண்களுக்குப்படுவதில்லை.

ஆபீஸிலிருந்து லேட்டாகத் திரும்பிய ஒரு நாள் மாலை பஸ்ஸில் ஏறிய அவர், தமது பஸ் ஸ்டாப்பிலிரிந்து இரண்டு ஸ்டேஜுகள் கடந்து போய் இறங்கி விட்டார். இதற்குப் புற உலகக் காரணமாக, பஸ்ஸில் ஏறியவன் இறங்க முடியாத நெரிசல். அக உலகக் காரணமும் ஒன்று உண்டு. சமீபத்தில் டிவியில் அவர் பார்த்த ஜே கிருஷ்ணமூர்த்தியின் புத்தகம் ஒன்றைப் பக்கத்துக்கு சீட்காரர் வைத்திருந்ததிலிருந்து பிடித்த சர்ச்சை.

கதை, கவிதை போன்ற எந்த மனித சிருஷ்டியையும் கூட கம்ப்யூட்டர்கள் மனிதனை விடச் சிறப்பாகக் கையாள முடியும் என்ற இடத்தில் சூடு பிடித்த சர்ச்சை அது. “அந்நிலையில் மனிதன் என்கிற நீ என்ன?” என்பது கிருஷ்ணமூர்த்தியின் கேள்வி. நமது ஆர்டிஸ்ட்டோ, என்ன இருந்தாலும் கம்ப்யூட்டரினால் பெயிண்டிங் செய்ய முடியும் என்று சொல்லப்படவில்லை எனச் சுற்றி சுற்றி அழுத்தினார்.

“பெயிண்டிங் சிற்பம், இசை எல்லாமே கம்ப்யூட்டரால் முடியும். ஜப்பானில் கம்ப்யூட்டர் கார்களை மெனுபாக்செர் பண்ணுகிறது” என்று உறுமினார் பக்கத்துக்கு சீட்காரர். முக்குக் கண்ணாடி வட்டத்துக்குள் அவரது கண்கள், போகப் போகப் பெரிதாகிக் கொண்டிருந்தன. அவரது உறுமலுடன் கண்ணாடியில் ஏதோ ஒரு வட்டமான சிறு ஒளி, பஸ் கூட்டத்தின் இடுக்குகளூடே ஊடுருவிப் பிரதிபலித்தது.

“ஆனால் அதோ அந்த நிலவின் அழகை மௌனமாகத் தனக்குள் உணர மனிதனால் முடியும். கம்ப்யூட்டரால் முடியாது” என்றார் திருவாளர் பக்கத்துக்கு சீட்காரர்

“டெர்மினஸ்” என்று சேர்த்துக் கொண்டார்.

பஸ்சிலிருந்து பொலபொலவென்று கூட்டம் உதிர்ந்தது. ஆர்டிஸ்டும் உதிர்ந்தார். பக்கத்துக்கு சீட்காரரைக் காணோம்.

எங்கோ இன்னொரு கிரகத்தில் நிற்கும் உணர்வு தீடீரென நமது ஆர்ட்டிஸ்டுக்குத் தோன்றிற்று. எங்கோ, என்றோ, எவனோ, தான் என்ற ஒரு இடைவெட்டு மனதில் ஒரு மௌனக் கீறாக ஓடிற்று.

கலைந்து கொண்டிருந்த மனிதர்களது முகங்கள் மீது,மின்சார கம்பம் ஒன்றின் ஒளிச்சீற்றம். இருண்டு கருத்த முகங்களில் கண்ணாடிச் சில்லுகள் கட்டமிட்டு மின்னின.

குடில்களாகவும், சீரற்ற சிமிந்திப் பொந்துகளாகவும் தெரு பின் வாங்க, நடக்க ஆரம்பித்தார். திடீரென எதிரே உலகு வெளித்தது.வானின் பிரம்மாண்டமான முகில்கள் தமக்குள் புதையுண்ட பெரிய மர்மம் ஒன்றினை, வெள்ளியும் பாதரசமுமாக உலகுக்குத் தெரிவித்தபடி நகர்ந்து கொண்டிருந்தன. எட்டோணாத தொலை தூரத்தில் ஒரு கிராமீயக் குரல், இயற்கையின் மொழியற்ற மழலை போன்று வெற்றோலியாய்க் கேட்டு மறைந்தது.

திடீரென, அந்தக் குரலுக்குப் பதிலாக, அவருக்குப் பின்புறம் முதுகு சில்லிட, “கூ” என்றது இன்னொரு குரல். அதன் அமானுஷ்யத்தில் ஒரு கணம் அர்த்தமற்ற மரண பயம்.அவர் திடுக்கிட்டுத் திரும்பினார். நிலவு வெளிச்சத்தில் சிரித்தபடி நின்று கொண்டிருந்தான். சுமார் பதினைந்து பதினாறு மதிக்கத்தக்க கிராமத்துப் பையன்.

அவரை அவன் பேசவிடவில்லை. ” இந்நேரம், இந்நேரம் … இன்னும் கொஞ்சம் தூரம்…” என்றான், அவரை முந்தித் தன்னைப் பின் தொடர அழைத்தபடி நடந்த அவன். அவரது மனதில் ஏதேதோ எல்லாம் எழுமுன், ‘தோ” என்று ஒரு இருண்ட பெரிய பள்ளத்தைக் காட்டினான். திட்டுத் திட்டாக மின்னிய நிலவொளியில் இருள் மாறி, பாசி படர்ந்த குளமாயிற்று. குளத்தைக் காட்டிய சிறுவன் சரசரவென்று அதற்குள் இறங்கினான். இறங்கியவன் குளத்தினுள்ளேயே மூழ்கி மறைந்தான்.

நமது ஆர்டிஸ்டுக்கு, அந்த ஒரு கணம், தன் முன் தோன்றி மறைந்தது அமானுஷ்யமான ஏதோ ஒரு உயிர் வடிவம் என்றே சிறுவனின் தோற்றமும் மறைவும் எண்ண வைத்தன.

அதற்குள் பையன் குளத்திலிருந்து ஈரம் சொட்டச் சொட்டக் கிளம்பிக் கரையேறி, கையில் எதையோ கொண்டு வந்தான்.

அது ஒரு நீல வண்ண ஜாலம். அப்போது தான் விரிந்து கொண்டு இருந்தது. அந்த நீலோத்பலம். பத்திரமாக நீட்டிய கையிலிருந்து பெற்று கொண்டார் அதை.

“நீலோத்பலம், அதுவும் ராவானதும், நீருக்கடியில்தான் பூக்கும்.அதன் அழகை யார் கண்டது?” யாரோ, எங்கோ,என்றோ அவரது ஞாபகங்களின் விளிம்பில் நின்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். குளத்தின் எதிர்க்கரையில், பையனை ஆர்டிஸ்ட் மீது ஏவி விட்டு நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்துக்கு சீட்காரரா?

ஆர்டிஸ்டின் கண்கள் பையனின் முகத்துக்குத் திரும்பின. ஈரம் பட்ட சிறுவனின் முகத்தில் உக்ரமாக விழுந்த சந்திர தீபத்தின் வெளிச்சம், அவனது பெரிய கண்களுக்கும், நெற்றியிலிரிந்து பள்ளமற்று ஓடிய நாசிக்கும், ஆயிரமாயிரம் வருஷங்களாக இயற்கையினால் அதி கவனத்துடன் செதுக்கப்பட்ட இன்னொரு முகத்தின் சாயலைத் தந்து கொண்டிருந்தன.

தம்மை மீறிய மரியாதையுடன், ” யார் நீ?” என்றார் ஆர்டிஸ்ட்.

அவன் பதில் சொல்லவில்லை. தூரத்தே மொழியற்று ஒலித்த குரல், ஒலியலைகளாக உருப்பெற்று, ‘கிஸ்ணா”என்று கேட்டது.

பையன் பதிலுக்குக் ‘கூ’ என்றபடி, நிலவின் பரந்த வெளியினடே தன்னை அழைத்த குரலை நோக்கி ஓடினான். கையில் நீலோத்பலம் அதற்குள் ஆகாயமாகத் தனது நீலச்சுடர்களை மலர்த்தி விட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *