நீயே சொல்லு சார்…!

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 26, 2015
பார்வையிட்டோர்: 15,646 
 

நேத்து சாயங்காலம், நான் ரெண்டு பேரைக் கொன்னுட்டேன்னு சொன்னா உனக்கு ஆச்சரியமா இருக்கும் சார்! அதுவும் எனக்குத் தெரிஞ்ச வழியிலே ரொம்பக் கொடூரமாத்தான் கொன்னேன்னு உங்கிட்டே சொல்றதுலே எனக்கொண்னும் சங்கடமில்லே சார். இன்னைக்கு காலையிலே, நீ கூட பேப்பரிலே பாத்திருப்பே. ஆனா, நான் அவங்களைக் கொன்னது சரியா, தப்பா?ன்னு நீதான் ஒரு நியாயத்தைச் சொல்லணும் சார்… கண்டிப்பா சொல்லுவியா சார்…

நீயே சொல்லு சார்

இந்த மருதாச்சலம் பயலுக்கு அடியாளா இருந்த ரெண்டு பேரைத்தான் நான் கொன்னுட்டேன். இப்ப அதுக்கு பதிலா என்னைப் புடிச்சு பழிவாங்குறதுக்காக, ஆளும், படையும் போட்டு என்னைத் தேடீட்டு இருக்கானுங்க சார். அவனுக கையிலே மாட்டுனா என்னைக் கொன்னே போட்டாலும் போட்டுடுவாங்க.. அவனுங்ககிட்டே அதுக்கான வசதியிருக்கு. ஆனா, அதுக்கு முந்தி நியாயம் என்னான்னு நான் தெரிஞ்சுகிட்டா, சாகறதாவே இருந்தாலும் சந்தோஷமா செத்துருவேன் சார்.

நீயே சொல்லு சார்… இதுவரை பொது வழியா இருந்ததை, எங்க பாட்டன், முப்பாட்டன் காலத்திலேயிருந்து நாங்க போய், வந்து பொழங்கிட்டிருந்த வழியை, திடுதிப்புன்னு அடைச்சுப் போட்டான் இந்த மருதாச்சலம் பய… சரி எதுக்குடா அடைச்சேன்னு யாராவது கேட்டா, மக்களுக்கு அமைதியும், மோட்சமும் வழங்கப் போறானாம்.

எனக்கு சிரிப்பு, சிரிப்பா வருது சார். கஞ்சா கடத்துனது, மலைவாசிப் பொண்ணைக் கெடுத்ததுன்னு இவம்மேலே ஏற்கெனவே பல கேசுக இருக்கு. இந்த லட்சணத்துலே, இவங்கிட்ட மோட்சம் வாங்க எவன் வரப்போறான்னு தெரியலை.

அவனோட வலது கையிலே இருக்குற அஞ்சு வெரலையும் விரிச்சு, டாட்டா காட்டுற மாதிரி, ஜடா முடியும் தாடியுமா நின்னபடி, போட்டோ புடிச்சு வெச்சுருக்கறான். பத்தாக்குறைக்கு, ரெண்டு தோள் பக்கத்துலேயும் ரெண்டு வெள்ளக்காரிக வேற ஈன்னு இளிச்சுகிட்டு, கும்பிட்டுகிட்டு நிக்குறாளுக. அவளுகளுக்கு எப்ப, என்னத்தை வழங்கப்போறான்னு தெரியலை.

இவன் என்ன எழவோ வழங்கிட்டுப் போகட்டும் சார். அவம் பொழைக்க எதுவோ தகிடுதத்தம் பண்றான். அதை நம்புற ஆளுக காசு, பணம் கொடுத்துட்டுப் போவாங்க போல. அதுலே எனக்கொன்னும் பிரச்னை இல்லே சார். இப்பவே, அவங்கிட்டே காசு, பணம் நெறய இருக்குன்னு தெரியுது. இல்லேன்னா. ஒரே ராத்திரியிலே, அவ்வளவு பெரிய வேலியைப் போட்டு, செவுரு கட்ட அஸ்திவாரம் எழுப்பி, வழியை அடைக்க முடியாது சார்…

அது போக, வேலிக்கு அந்தப்பக்கமா பத்துப் பதினைஞ்சு பேரு என்னன்னவோ வேலை பாத்துகிட்டு இருந்தாங்க. பெரிய, பெரிய மெஷினெல்லாம் கல்லையும், மண்ணையும் தள்ளிகிட்டு இருந்துச்சு.

இப்ப இவனைத் தேடிட்டு, கலெக்டரு, பெரிய பெரிய அதிகாரிக, மந்திரிங்க கூட வந்துட்டுப் போறாங்க சார். சரி, இவன் அந்த அளவுக்கு செல்வாக்கு சம்பாதிச்சு வெச்சுருக்காங்கிறதுக்காக, நாங்க நடக்குற பொதுவழியை இவன் எப்படி சார் அடைக்கலாம்.

அதுவும் வழக்கம்போல, நான் தூர தேசத்துக்குப் போயிட்டு, மூணு மாசம் கழிச்சு, திரும்பி வந்து பாக்கும்போதுதான் இந்தக் கூத்தெல்லாம் நடந்திருக்குன்னு தெரிஞ்சது. வழக்கமா, நானும் எங்குடும்பமும் புழங்கற இடத்துக்கு போகவும் முடியாம, வந்த வழியே திரும்பவும் முடியாம ஒரே அல்லாட்டமாப் போச்சு சார்.

ஆனா… ஒரு மலையைச் சுத்திப் போனா, எங்க இடத்துக்குப் போக வழியிருக்குன்னு எங்க ஆளுக சொல்றாங்க, அப்படியொரு வழியே இருந்தாலும் நாங்க ஏன் சார் சுத்திப் போகணும்? எவனோ வந்து திடீர்னு வழியை அடைச்சு வெச்சிருவான். நாங்க எங்க உரிமையை வுட்டுக் குடுத்துட்டு, சுத்திப் போகணுமா சார்?. அது சம்பந்தமே இல்லாம ஒருத்தனுக்குப் பயந்துகிட்டு ஓடுற மாதிரி இல்லையா. அது மாதிரி ஒரு வெட்கக் கேடு இருக்கான்னு நீயே சொல்லு சார்…

அந்த வெக்கக்கேட்டையும் சமாளிச்சுகிட்டு, அந்தப் பக்கம் சுத்திப்போனா. இங்க மருதாச்சலம் மாதிரி, அங்கியும் எவனாவது சோணாச்சலம் வேலி கட்டி வெச்சிருந்தா என்ன பண்ண முடியும். இப்படியே… நாங்க சுத்தி சுத்திப் போயிகிட்டேயிருந்தா… இதுக்கு ஒரு முடிவுதான் என்னா? சார்.

சரி சார். இந்த மருதாச்சலம் பய, இங்கியே ஏதாவது ஒரு சந்து அளவுக்காவது வழி உட்டுருக்கானான்னு தேடிட்டு இருக்கும்போதுதான்… கத்தி, கடப்பாறை, வேல்கம்புன்னு தூக்கிட்டு, அடியாளுக பத்துப் பன்ணென்டு பேரு எதுக்க ஓடி வந்து, எங்களை நெருங்கவும் வுடாமே, தப்பிச்சுக்க அவகாசமும் தராம நாய், பேயை அடிச்சு விரட்டுறமாதிரி கண்டபடி அடிச்சு விரட்டுறானுங்க சார். ஆம்பளை, பொம்புளை, குழந்தை குட்டி, கெழடுகன்னு எல்லாமே வயித்துப் பாட்டுக்காக, நடையா நடந்து போய் பொழக்கிற பொழப்பு சார் எங்களுது. அவனுக அடிச்ச அடியிலே இங்க பாருங்க சார், எங் கால் முட்டியை எப்படிப் பேத்துருக்கானுங்கன்னு…

எனக்கு கூட பரவாயில்லே சார்… சின்னக் குழந்தைன்னு கூடப் பாக்காம, அவனுக வீசுன வேல்கம்பு, ஒரு குழந்தையோட முதுகிலே ஏறி, கீழே வுழுந்துச்சு சார். பச்ச மண்ணு. அது எப்புடி துடிச்சு, துடிச்சு அழுகுதுன்னு தெரியுமா சார். அந்த இடத்துலே உங்குழந்தைய நிறுத்தி, ஒரு நிமிஷம் யோசிச்சுப் பாரு சார். எங்க வேதனை எந்த அளவுக்கு இருக்குன்னு புரியும். கொஞ்சம் இரு சார். எனக்கு இப்ப நினைச்சாலும் அழுகை, அழுகையா வருது. கண்ணைத் தொடச்சுக்கிறேன்.

இந்தக் காட்டுலே இருக்குற விலங்குகளோட விலங்கா சுத்துற எங்களாலே, உடனே அதிகாரிகளை சந்திச்சு உங்களை மாதிரி… பிராது கொடுக்க முடியுமா, இல்லே கூட்டம் போட்டு கோஷம் போட முடியுமா? சார். எங்களுக்கு அதுக்கெல்லாம் வக்கும் இல்லே, அறிவுமில்லே.

நீங்க இருக்குற வீட்டுக்கு, நாங்க வந்து தொந்தரவு குடுத்தா உங்களுக்கு எப்படியிருக்கும், இப்ப எங்க வீடு இருக்குற இடத்துக்கு நீங்கல்லாம் வந்துட்டு, தப்பா நெனக்காதீங்க சார். நான் உங்களைச் சொல்லலை. உங்களை மாதிரி நல்லாப் படிச்ச, நாலு நல்லது கெட்டது இவங்களுக்கும் தெரியும்னு நாங்க நம்பிகிட்டு இருக்கற உங்க ஊர்க்காரனுங்களைத்தான் பொதுவாச் சொல்றேன். பாமரங்களா இருக்குற எங்களை நீங்க தொந்தரவு பண்ணலாமா? அதுலே என்னசார் நியாயம் இருக்கு. நீயே சொல்லு சார்…

சும்மா எங்க இடம், எங்க இடமுன்னு நான் சொல்லிகிட்டே இருக்கறது உனக்கு சலிப்பா இருக்கும் சார்… ஆனா நீயும் அதப்பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கணும் சார்… அது ஒண்ணும் சாதாரண இடமில்லே சார். பசேல்னு இருக்குற மலையும், காடும். அதுலே வெள்ளியை உருக்கி ஊத்துன மாதிரி அருவியும், ஆறும். சொர்க்கம்னா அதுதான் சார். சொர்க்கம்.

எங்க கூட்டம் ஆத்துலேயும், அருவியிலேயும் போயி ஆட ஆரம்பிச்சதுகன்னா… மணிக்கணக்கிலே ஆடிகிட்டு இருக்கும். இதுமாதிரி வசதியெல்லாம் ஊருக்குள்ளே கிடைக்குமா சார்…

அப்புறம், ஊருன்னு சொன்னதும்தான் முக்கியமா ஒரு விஷயம் நியாபகத்துக்கு வருது, கிண்டல் பண்றதா நினைச்சுக்காதீங்க. உண்மையத்தான் சொல்றேன், உங்க ஊர்லே, நாட்டுலே, ஒட்டுக் கோமணமாட்டம் இருக்குற இடத்தை, பத்துப் பேருக்கு பங்கு பிரிச்சுக் குடுக்குற பஞ்சாயத்தெல்லாம் இங்க எப்பவுமே கிடையாது சார், எங்க பொழங்குறதுக்கு வசதியா இருக்கோ. அங்க இருந்துக்கலாம் சார். ஆனாலும், வயித்துப் பொழப்புக்காக எங்கியாவது போகணும்னா. அப்பப்பக் கூடிக்குவோம். போவோம், வருவோம்.

எங்களுக்குள்ளே சண்டையே வராது. சண்டை வந்தாலும் அது நீடிக்காது சார். கொஞ்ச நேரத்திலே ராசியாயிடுவோம். இப்படித்தான் சார் எங்க பொழப்பு ஓடிக்கிட்டுருக்கு…

இந்த மாதிரி நெலைமைல, எங்க குடும்பத்துலே இருக்கறவங்கெல்லாம், அவங்க பொழப்புக்கு ஏதாவது வழிசெய்யணுமின்னு கெஞ்சுறாங்க. எங்க கூட்டத்துக்கு நான் மூப்பனா இருந்துகிட்டு ஒண்ணும் பண்ணாம இருந்தா எப்படி சார்… அது பெரிய அவமானம் சார்… ஆனா … இப்ப என்னாலேயும் ஒண்ணும் பண்ண முடியலியே… என்ன செய்யுறது. யோசிச்சு, யோசிச்சு, மண்டைதான் காயுது. கோபம் கோபமா வருது.

இன்னைக்கு கொஞ்சம் வெளிச்சமா இருக்கும் போதே… நம்ம இடத்துக்கு போக ஏதாவதொரு வழியோ, சந்தோ இருக்குமான்னு பாக்குறதுக்கு, அந்தப் பக்கமா நான் மட்டும் போனேன் சார். அப்பப்பாத்து, அந்த மூங்கில் பள்ளத்தோரமா, அடியாளுகள்ள ரெண்டுபேர், நெறய ஒயர்களைத் தோள்லே போட்டுகிட்டு, அவனுக போட்டு வெச்சுருந்த வேலியோட அதுகளை சேத்தி, சேத்தி கட்டிகிட்டு இருந்தானுங்க, அதுலே ஒருத்தன் நல்ல குண்டன். நேத்து இவந்தான் வேல் கம்பை குழந்தை மேல எறிஞ்சவன். எனக்கு நல்லா அடையாளம் தெரிஞ்சது. அவனைப் பாத்ததும் எனக்கு அதுவரை இருந்த கோபமெல்லாம் சேர்ந்து, பத்திகிட்டு வந்துச்சு சார்.

விறுவிறுன்னு அவனுககிட்டேயே போயிட்டேன். நான் பக்கமாப் போற வரைக்கும், அந்த நாயிக என்னைக் கவனிக்காம, என்னவோ பேசிகிட்டே வேலை செஞ்சுட்டு இருந்தானுங்க… இன்னும் பக்கமாப் போகும்போது, ஏதோ சருகை மிதிச்சுட்டேன் போலிருக்கு. சத்தம் கேட்டு திரும்பிப் பாத்தானுங்க. திடுதிப்புன்னு என்னைப் பாத்ததும் அவனுக கண்ணுலே செம பீதி சார். மூங்கில் பள்ளத்து வழியா அவனுக தப்பிச்சு ஓடவே முடியாது. இருந்த ஒரே வழியையும் அடைச்சுகிட்டு இப்ப நான் நிக்குறேன். அவனுக கையிலிருந்த ஒயர்களையும் கம்பிகளையும் சுழட்டிகிட்டு என்னவோ கத்துனானுக சார். ஆனா நான் அதப்பத்தியெல்லாம் கண்டுக்கலே. நான் வெறும் கையிலேயே பத்துபேரை சமாளிப்பேன்னு உனக்கு நல்லாவேத் தெரியுமில்லே சார். இப்ப, சட்டுன்னு எட்டிப் புடிக்குற தூரத்திலேதான் அவனுக இருந்தானுங்க. அந்த குண்டனை முதல்லே புடிச்சு, காலோட சேத்தி அமுத்திகிட்டேன், தப்பிச்சு ஓடப்பாத்த இன்னொருத்தனையும் வளைச்சுப் புடிச்சேன். ஹூம்ம்.

அதுக்கப்புறம், நான் எப்படியெல்லாம் அவனுகளை சித்திரவதை பண்ணிக் கொன்னேன்னு பேப்பரிலே, இல்லாததும், பொல்லாததுமா விலாவாரியா நீதான் படிச்சுருப்பியே சார்.

இப்ப சொல்லு சார்… எம்மேலே எதுவும் தப்பிருக்கா சார். நீ பேசாம இருக்குறதைப் பாத்தா. நான் என்னான்னு நினைக்குறது. சரி… நீ என்னைப் பத்தி என்னவேன்னாலும் நினைச்சுக்க சார், ஆனா நாளைக்கோ… நாளன்னைக்கோ… அட்டகாசம் செய்த ஆண்யானை மர்ம மரணம், வனத்துறை அதிகாரிகள் விசாரணைன்னு ஏதாவது செய்தி வந்தா அது என்னைப்பத்தித்தான் இருக்கும்னு தெரிஞ்சுக்கோ சார்… என்னைப் பத்தி நல்லாத் தெரிஞ்ச நீ, எனக்காக ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டியானா.? எனக்கு அதுபோதும் சார்…

– மே 2014

Print Friendly, PDF & Email

1 thought on “நீயே சொல்லு சார்…!

  1. மரியாதைக்குரிய கார்த்திக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *