கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 18, 2012
பார்வையிட்டோர்: 10,633 
 

நீதியே மக்களின் ரொட்டி…
– ப்ரக்ட்

அவன் கடவுளிடம் சொன்னான்,

மை லார்ட்!

எல்லோரும் நீதி வேண்டிக் காத்திருக்கிறார்கள். கண்ணீருடனும், கையில் ஆவணங்களுடனும், பிச்சுவா கத்திகளுடனும், அரிவாள்களுடனும், தடிகளுடனும், பணப்பெட்டிகளுடனும், துப்பாக்கிகளுடனும், எறிகுண்டுகளுடனும், ஏவுகணைகளுடனும், அணுஆயுதங்களுடனும் நீதி வழங்குமாறு மன்றாடுகிறார்கள். ஆணைகள் பிறப்பிக்கிறார்கள். அவரவர்களுக்கு வேண்டிய நீதிகள். கோடிக்கணக்கான நீதிகள்.

மை லார்ட்!

உங்கள் புராதன கட்டிடத்தில் நீதி ஒரு குழம்பிய நீர் வடிவில் தேங்கி வழிந்துகொண்டிருக்கிறது. ஒரு எருமை மாட்டைப் போல பிரகாசத்துடன் அதிலிருந்து மேலெழுகிறீர்கள் நீங்கள்! உங்களை ரணப்படுத்த வரும் காகங்களுக்கும், திருட்டு சவாரிக்காக வரும் சிறுவர்களுக்கும் மன்னிப்பு வழங்கி ஒரு பங்குத்தந்தை போல ஆசிர்வதிக்கிறீர்கள். ஒரு நைந்த கயிற்றுக்குக் கட்டுப்பட்டு சுற்றிச்சுற்றி வந்து புற்கள் தீர்ந்த பூமியைப் பற்களால் சுரண்டுகிறீர்கள்.

மை லார்ட்!

அழுகிக்கொண்டிருக்கும் உடலிலிருந்து ஒரு புழுவைப் போல வெளிப்படுகிறீர்கள். நித்தியமானவர் நீங்கள்.

மை லார்ட்!

உங்கள் அதிகாரத்தின் எல்லை கண்ணியமானது. ஒரு பூச்சிக்குக்கூடச் சிறை வழங்காத இரக்கமுள்ளவர் நீங்கள். உங்கள் கிரீடத்தின் மேல் எச்சமிட்ட காகத்தை விரட்டக்கூடச் செய்யாமல் நீதி வழங்க விரையும் அற்புதம் நீங்கள்.

மை லார்ட்!

தீர்ப்பைத் தள்ளிப்போட்டுக்கொண்டே போவதன் காரணமாக மனிதனாகவும், அதை வழங்கிவிடுவதன் மூலம் கடவுளாகவும் காட்சி தருகிறீர்கள்.

மை லார்ட்!

உங்கள் மன்றத்தில் நாங்கள் எல்லோரும் அங்கத்தினர்களாக இருக்கிறோம்.அதன் வரையறைகளுக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் அதே சமயத்தில் அதை மீறும் சுதந்திரம் கொண்டவர்களாகவும். எங்களின் பட்டியல் ஒன்று உங்களிடம் இருக்கிறது. குற்றங்களின் வகைமை போலவே முழுமையற்று நீள்கிறது பட்டியல்.

தாசில்தார், வேலைவாய்ப்பு அதிகாரி, சிகரெட் புகைப்பவர், பேங்க் மேனேஜர், பைனான்ஸ் கம்பெனி நடத்துபவர், பிக்பாக்கெட் அடிப்பவர், ஆட்டோ டிரைவர், ஒரு போலீஸ் அதிகாரி, விபச்சாரி, டெலிபோன் ஊழியர், பால்காரர், அச்சக முதலாளி, கவிஞர், கட்சித் தொண்டர், மார்க்சியவாதி, சாமியார், கலெக்டர், போஸ்டர் ஒட்டுபவர், பங்குத்தந்தை, ஜெராக்ஸ் போடுபவர், விளையாட்டு வீரர், மலைவாசி, தொண்டு நிறுவனம் நடத்துபவர், உரக்கடைக்காரர், தறி நெய்பவர், பத்திரம் எழுதுபவர், பதிவாளர், மோட்டார் மெக்கானிக், ஒரு புரட்சிக்காரர், தீவிரவாதி, சாலை ஓரத்தில் மூத்திரம் பெய்பவர், சேட்டிலைட் டிவி ஓனர், செய்தித் தொகுப்பாளர், ஒரு ஓவியன், இசைக் கலைஞன், சினிமா தயாரிப்பாளர், மாமா வேலை செய்பவர், எழுத்தாளன், ஒரு ஆசிரியர், கந்துவட்டிக்காரர், சைக்கிள் கடைக்காரர், சினிமா இயக்குனர், ஜவுளி கடைக்காரர்.

ஒரு ராணுவ அதிகாரி, கசாப்பு கடைக்காரர், வித்தை காட்டுபவர், ஒரு விஞ்ஞானி, டாக்டர், வெட்டியான், ஓட்டல் முதலாளி, பிராந்திக் கடை அதிபர், ஆட்டோ புரோக்கர், வேவுபார்ப்பவர், ஒரு கம்யூனிஸ்ட், கஞ்சா புகைப்பவர், உதவி இயக்குனர், மார்வாடி, மண்டிக்காரர், சிறுபத்திரிக்கை ஆசிரியர், சுயஇன்பக்காரர், ஒரு காதலன் அல்லது காதலி, ஜாதிசங்க நிறுவனர், ஓரினப்புணர்ச்சிக்காரர், ஒரு விவசாயி, டவுன் பஸ் கண்டக்டர், சுரங்கத் தொழிலாளி, கிராம பிரசிடெண்ட், கவுன்சிலர், சாலையில் நடப்பவர், பிரதமர், சர்க்கஸ் முதலாளி, தச்சன், பேருந்தில் சத்தமாகப் பாட்டுவைக்கும் டிரைவர், கருவாடு விற்பவர், ஜனாதிபதி, பைத்தியக்காரன், லாண்டரி கடைக்காரர், வன அதிகாரி, சந்தனக் கட்டை திருடுபவர், கோயில் பூசாரி, போர்னோ விற்பவர், வழக்கறிஞர், ஒரு பாடகன் அல்லது பாடகி, ஒரு தாய் அல்லது தந்தை, ஒரு குழந்தை, சவரத்தொழிலாளி, முதல்வர், கேப்ரே டான்சர், சர்வாதிகாரி…

இவர்களில் யாரை வேண்டுமானாலும் நீங்கள் குற்றவாளியாக்கலாம், தூக்கிலிடலாம், குற்றத்திலிருந்து விடுவிக்கலாம்; அவ்வளவு நீதி குவிந்து கிடக்கிறது உங்களிடம்.அனால் இதுவரையிலான உங்கள் தீர்ப்புகள் எங்களை அவமானப்படுத்துவதாகவே இருந்திருக்கின்றன.

முடிவாக அவன் கடவுளிடம் சொன்னான்:

இன்னும்கூட நம்பிக்கை வற்றவில்லை, மை லார்ட்!

என்றாவது ஒரு நாள் நீங்கள் எல்லோருக்குமான நீதியை வழங்கத்தான் போகிறீர்கள். சாவற்ற உங்கள் வாழ்வு அதைச் சாத்தியமாக்கத்தான் போகிறது. அப்போது மனிதர்கள் யாருமே இல்லையென்றாலும் நடுங்கும் உங்கள் நாவினால் அந்த நீதியை உச்சரிக்கத்தான் போகிறீர்கள். அது அடிவானத்தை நோக்கி மெல்ல நடக்கப்போகிறது – சாப்ளினைப் போலத் தனிமையாகவும் துயரமாகவும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *